அத்தியாயம் 45
சுபர்ணாவை தேடி தேடி சோர்ந்து போய் அமர்ந்திருந்தனர் சத்யனும் அமிர்தாவும்… உடன் இன்னும் சிலரும் சேர்ந்து சென்னையை அலசி எடுத்துக் கொண்டிருந்தனர்… இரண்டு நாட்களாக! ஆனாலும் அவள்கிடைத்தபாடில்லை… அவளுக்கு இங்கு நண்பர்கள் குறைவு… இங்குத் தேடியதோடு மும்பைக்குத் தகவல் கொடுத்து அங்கும் தேட சொல்லி இருந்தார் சீதாராமன்… யார் வீட்டிலாவது இருக்கிறாளா என்று ஒவ்வொருவரையாக அலைபேசியில் அழைத்து விசாரித்துக்கொண்டிருந்தார்… எங்கும் சரியான பதில் கிடைக்காததால் சோர்வு மனதையும் உடலையும் வாட்டியது சீதாராமனுக்கு!
“கவலைப்படாதீங்க அங்கிள்… கண்டிப்பா கண்டுபிடிச்சுடலாம்…” அவருக்குத் தெம்பு கொடுத்துக் கொண்டிருந்தது அமிர்தாதான்,
அப்போதும் சத்யனுக்கு முழு மனதோடு தேட பிடிக்க வில்லை என்றாலும் சிறு குற்ற உணர்ச்சி அவனது மனதை ஆட்டுவித்துக் கொண்டிருந்தது… அவன் கொட்டி சென்ற விஷயத்தால் தானோ என்ற குற்ற உணர்ச்சி… அதைப் பற்றி வெளிப்படையாகக் கூற சீதாராமனும் தயங்கி கொண்டிருந்தார்… தயக்கம் அமிர்தாவுக்காக… அவளுக்காக மட்டுமே!
சுபர்ணா காணாமல் போனதிலிருந்து தன்னை ஒரு தாயாகத் தாங்கிக் கொண்டிருக்கும் அந்தப் பெண்ணின் நல்ல உள்ளம் அவரைச் சத்யனுக்கு எதிராகச் சிறு வார்த்தையும் பேசத் தயங்க வைத்தது… முன்பென்றால் ‘ம்’ எனும் முன் கொதித்துக் கொட்டியிருப்பார்… ஆனால் இந்த நாட்களில் பெரும் மாற்றத்தை அவருள் கொண்டு வந்ததும் அமிர்தா அல்லவா! பகைவராக இருந்தபோதே சுபர்ணாவின் நிலை அறிந்து எந்தக் கேள்வியும் கேட்காமல் உடன் வந்து கேசையும் வாபஸ் பெற்றவள்… இன்று இன்னொரு மகளாகப் பழகியபின் விட்டுவிடுவாளா என்ன?
“ஏதோ ரொம்பப் பெரிய பாவம் செய்திருக்கேன் போல அமிர்தா…” மனம் நொந்து கூறியவரை என்ன சொல்லித் தேற்ற? மெளனமாகச் சத்யனை ஏறிட… அவனது உதடு ஏளனமாக வளைந்தது! அதைக் கண்ட அமிர்தாவுக்கு உள்ளுக்குள் கோபம் கனன்றது… சத்யனை பொறுத்தவரையில் சுபர்ணா எப்படி இருந்தாலும் புத்திர சோகத்தில் இருக்கும் சீதாராமனை இப்படிக் கேலி செய்வது போல இருப்பது அவளால் ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல… அவளுக்குப் பிடிக்காத ஒன்றும் கூட!
தனியாக அவன் சிக்கியபோது பிலுபிலுவென்று பிடித்துக் கொண்டாள்,
“அவ எங்கயாவது ஊரைச் சுத்திட்டு வந்து சேருவா அம்மு… அவளுக்கு எதுவுமே புதுசு இல்லை… இதுக்கு எதுக்கு இவ்வளவு ஹைப் கொடுக்கறன்னு தெரியல… இது ஒரு பெரிய விஷயமும் இல்ல… நான் சொன்னதனாலன்னு என்னையவே குற்றம் சொல்லாத… உண்மைய மட்டும் தான் நான் சொன்னேன்… அந்த உண்மைய பேஸ் பண்ற தைரியம் அவ கிட்ட இல்லைன்னா அதுக்கு நான் ஒண்ணுமே பண்ண முடியாது…”
முகத்தில் அறைந்தார் போலச் சொல்லி விட்டு நகர்ந்தவனை எப்படித்தான் உணர வைப்பது என்று புரியாமல் விழித்தாள்!





