arrow_back
பரமபதம் அத்தியாயம் 48
பரமபதம் chevron_right பகுதி 48 / 54

அத்தியாயம் 48

visibility 213
star படைப்பை ரேட் செய்யுங்கள்
சராசரி 4.5/5 (4 மதிப்பீடுகள்)
பகிர்

அன்று வருடாந்திர பங்குதாரர்கள்சந்திப்புநடைபெற்றுக் கொண்டிருந்தது… ஆடிட்டர் பரமேஸ்வரன் முதல் வரிசையில் அமர்ந்து நிகழ்வினைபெருமையோடுபார்த்துகொண்டிருந்தார்… ஜி எம் புருஷோத்தமன் அறிமுக நிகழ்வினை செய்து விட்டு சத்யன் அருகில் மேடையில்அமர்ந்திருக்க… கம்பெனிசெக்ரட்டரி வாசுதேவன் நாயர் சத்யப்ரகாஷ் பேச வேண்டியதன் தொகுப்பைக் கையில் வைத்துக் கொண்டு பதட்டமாக நின்றுகொண்டிருந்தார்… மேடையில் சத்யனோடு அமிர்தாவும் மென்புன்னகையோடு இயல்பாக அமர்ந்திருந்தாள்!

சத்யனோடு பிணக்கு என்பது இருவரையும் பொறுத்தவரை தனிப்பட்ட பிரச்சனை… அதற்காக அவனைப் பார்க்கவே மாட்டேன் என்பதோ அலுவல்களைக் கவனிக்க மாட்டேன் என்பதோ அவளிடமிருந்து எதிர்பார்க்க முடியாத விஷயங்கள்… தினசரி அலுவலகத்திற்கு வருபவள் தேவையான வேலைகளை அவனோடு சேர்ந்துதான் செய்வாள்… பின்னர் வீட்டில் செய்ய வேண்டிய வேலைகளையும் முடித்து விடுவாள்,

அவள் திருமணத்தை மறுத்தபின்னர் அவளோடு சிறிதளவு கூட ஒட்டாமல் முதலில் விலகி நின்றது சத்யன்… அவனது விலகலை அமிர்தாவும் தவிர்க்க முயலவில்லை… அவன் எவ்வளவுக்கு எவ்வளவு விலகி நின்றானோ அதே அளவில் அவளது விலகலும் இருந்தது… இருவருக்கிடையே பிசினஸ் டாக்ஸ் மட்டுமே நடைபெற்றது… ஆனால் ஈகோ வாழ்க்கைக்கு உதவாது என்பதை இருவருமே புரிந்துகொள்ளவில்லை,

சத்யன் வருடாந்திர கணக்கு விபரங்களையும் எதிர்காலத் திட்டங்களையும் விவரிக்க ஆரம்பித்தான்,

“My Dear Shareowners, A very warm good morning to each and every one of you… It gives me great pleasure to welcome you to the 21st Annual General Meeting of PV companies private Limited… The Company’s accounts for the year ended March 31, 2015, along with the Directors’ and Auditors’ report, a Letter to the Shareholders, and Management’s Discussions and Analysis, have already been circulated to you…”

கணக்கு விபரங்கள் மற்றும் எதிர்காலத் திட்டங்களை விவரித்து முடித்தவன்… பொதுவாகப் பேச ஆரம்பித்தான்,

“பெரும்பாலானோருக்கு தெரிந்து இருக்கலாம்… இரண்டு வருடங்களுக்கு முன்னர்த் தந்தை இறந்தவுடன் நாங்கள் பொறுப்பெடுத்துக் கொண்ட தருணம் மிகவும் சிக்கலானது என்று… எவ்வளவோ தடைகள்… பிரச்சனைகள்… அவற்றைத் தாண்டி நாம் இன்று இந்த நிலையில் நிற்கிறோம் என்பதை நினைக்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது… இன்றைய நிலையில் நமது மாநிலத்தின் மிக முக்கியமான கட்டுமான நிறுவனமாக நாம் மாறியிருக்கிறோம் என்பது மிகவும் மகிழ்ச்சிக்குரிய செய்தி ஆனால் இதோடு நின்று விடுவதல்ல நமது பயணம்… அடுத்து இந்திய அளவில் முக்கியமான இடத்தைப் பிடிக்க வேண்டும்… அதற்கான பயணம் கடுமையானதுதான் ஆனால் பயணிக்க முடியாத ஒன்றல்ல… அதை நோக்கிய நமது பயணம் ஆரம்பித்து விட்டது என்பதை மிகப் பெருமையோடு நண்பர்களுக்கு அறிவிக்கிறோம்…” சிறிது இடைவெளி விட்டவன்… மீண்டும் தொடர்ந்தான்,

“இந்தத் தருணத்தில் சிலருக்கு நன்றி கூற கடமைபட்டுள்ளோம்… திருப் பரமேஸ்வரன்… திருச் சீதாராமன் அவர்களில் முதன்மையானவர்கள்! அவர்கள் மட்டுமல்லாமல் உந்து சக்தியாக இருக்கும் அனைவருக்கும் நன்றி கூற நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்… நானும் எனது முதன்மை பங்குதாரருமாகிய அமிர்தவர்ஷினி பாலகங்காதரனும்! நன்றி!”

பேசிவிட்டு அருகில் வந்தமர்ந்தவனைப் பெருமையாக நோக்கினாள் அமிர்தா… பிரிந்துநின்றாலும் ஒரு நொடியும் பிரித்தே பார்க்காத அவனது அந்த மனம் எப்போதுமே அவளை வசீகரிக்கும்… இப்போதும் கூட ஒரு வார்த்தை போதும் அவனுக்கு… அதை அவளும் அறிந்திருந்தாள்… ஆனால் அந்த வார்த்தையைக் கூற விடாமல் சுபர்ணாவின் நினைவும் சீதாராமனின் உடல்நிலையும் தடுத்து வந்தது… மனம் ஒரு புறம் அவளைச் சாடியது… யார் யாருக்காகவோ பார்க்கும் நீ… உன்னுடைய சத்யனுக்காகப் பார்க்கமாட்டாயா என்றது… ஆனால் அந்த மனதுக்கே தெரியும்… அவன் முழுமையாக அவளது சத்யனாக வேண்டும் என்று அவள் தவிப்பது… ஆனாலும் சுபர்ணா பற்றி நினைக்கும்போது அதே மனம் வலித்தது! அவள் சத்யனை மிகவும் விரும்பினாள் என்ற நினைவும் சேர்ந்தே வந்து ரணமாக்கியது!

சந்திப்பு முடிந்து இரவு விருந்து நடைபெற… இருவருமாகவே அனைவரிடமும் இன்முகமாகப் பேசி முடித்து விட்டுக் கிளம்பினர்! இது போன்ற விருந்துகளுக்குச் சேர்ந்தே வந்தாலும் தனிப்பட்ட முறையில் இருவரிடையேயும் பேச்சுவார்த்தை இருக்கவில்லை… அளந்து வைத்தார் போல அலுவலக ரீதியாக மட்டுமே சத்யன் பேசுவான் அதற்குத் தகுந்த பதில்களை மட்டுமே அவளிடமிருந்து எதிர்பார்க்கவும் முடியும்… ஆனால் மற்றவர்கள் முன்னர்ச் சிறிது கூடத் தங்களது பிணக்கை வெளிப்படுத்தியது இல்லை,

கையில் மது கிண்ணத்தோடு இரண்டு இன்வஸ்டரிடம் சத்யன் பேசிக் கொண்டிருக்க… அவன் அருகில் புன்னகை மாறாத முகத்தோடு அமிர்தா! எவ்வளவு மது அருந்துகிறான் என்பதை அருகிலிருந்து கண்காணிப்பதே பெரும்பாலும் அவளது வேலையாக இருக்கும் இது போன்ற விருந்துகளில்… ஆனாலும் எதிரில் பேசுபவருக்காக வேண்டி ஒரு சிப்போடு நின்று விடும் என்பதும் அவள் அறிந்ததுதான் என்றாலும் மது கிண்ணத்தோடு அவனைப் பார்க்கும்போது மனம் தடதடப்பதுஅவள் மட்டுமே அறிந்த ஒன்று!

“என்ன… இன்விஜிலேஷன் பண்ணிட்டு இருக்கியா?” யாரும் அறியாமல் அவள் புறம் சாய்ந்து அவன் கேட்க… அமிர்தாவுக்குத் தூக்கி வாரிப் போட்டது!

“எதுக்காக இன்விஜிலேஷன்?”

“லிக்கர் எடுக்கறேனா இல்லையான்னு தானே கண்கொத்தி பாம்பு மாதிரி பார்த்துட்டு இருக்க?” நேரடியாக அவன் இப்படிக் கேட்பது வழமைதான் என்றாலும் ஆஹா கண்டுகொண்டானே என்று இருந்தது அமிர்தாவுக்கு! யாரும் அறியாமல் அவனைப் பழித்து விட்டு முகத்தை அவள் திருப்பிக் கொள்ள… மதுகிண்ணத்தைக் கைகளில் உயர்த்தி வைத்துப் பார்த்தவன்,

“இப்போ ஏன் குடிக்கக் கூடாதுன்னுதான் இருக்கு!” இயல்பான குரலில் கூறினாலும் அந்தக் குரலின் வலிகளையும் ஏக்கங்களையும் உணர்ந்தாள்… அவளுக்கும் சேர்த்துதானே அந்த வலிகளும்! அவனது மனநிலையை மாற்ற வேண்டி,

“ஓகே சத்தி… ட்ரை பண்ணிப்பாரு… அப்படியே எனக்கும் ஒரு பெக் சொல்லு… ரெண்டு பேரும் சேர்ந்தே ட்ரை பண்ணலாம்… எனக்கும் மனசு ரொம்பக் கஷ்டமா இருக்கு…” பழைய குறும்புத்தனம் தலைதூக்க அவள் கூறியதை கேட்ட சத்யனுக்குப் புன்னகை மலர்ந்தது!

“வாவ்… குட் ஐடியா… வா ரெண்டு பேரும் சேர்ந்தே சரக்கடிச்சுட்டு மட்டையாகிடலாம்…” அவள் புறமாகக் குனிந்து கூற,

“பிசாசு… இரு உன்னை உங்கத்தைக் கிட்ட போட்டுத் தரேன்…”

“சரி போட்டுத்தா… ரீசன் என்னன்னு கேப்பாங்க இல்லையா… அப்போ நான் சொல்லிக்கறேன்… உங்கபொண்ணால தான் அத்தைன்னு ஒரே ஒரு வார்த்தை சொன்னா அடுத்தச் செகண்ட் என்ன பண்ணுவாங்கன்னு நான் சொல்லி உனக்குத் தெரிய வேண்டியதில்ல”சிறு புன்னகையோடு அவன் கூற… சங்கடமாக அவள் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்… சத்யனின் முகம் வெறுமையை உள்வாங்கியது!

அனைவரிடமும் விடைபெற்றுக் கொண்டு இருவரும் கிளம்ப… அந்த மௌனமான கார் பயணம் ராமவிலாசத்தில் முடிவுபெற்றது… மௌனமாகவே இறங்கி வீட்டினுள்ளே அமிர்தா செல்ல… அவள் பின்னே தொடர்ந்தான்… முகத்தில் கல்லின் இறுக்கம்!

“வாடாக் கண்ணா…” சத்யனை சாவித்ரி அன்பாக அழைக்க… அவனது உணர்வை வெளி காட்டிக்கொள்ளாமல் உள்ளே சென்றமர்ந்தான்… கையில் ஒரு பெட்டியோடு!

“சத்திம்மா… நானே வரணும்ன்னு நினைச்சேன்… நீ ப்ரீயா இருக்கியா கண்ணா?”

“ஏன்த்தை?” ஒன்றும் புரியாமல் அவன் கேட்க,

“வல்லத்துல இருந்து சிவானந்தர் வந்திருந்தார் சத்தி… அடுத்த வாரத்துல குரு பூஜை நடக்குதாம்… எதுக்குமே வர்றதில்லை… குருபூஜைக்காவது வாங்கன்னு சொல்லிட்டு போனார்…” சாவித்ரி கூறியது மற்ற இருவரிடமும் பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிடவில்லை,

“ஓஹோ…” ஒற்றைச் சொல்லோடு நிறுத்திக் கொண்டான் சத்யன்… அமிர்தாவிடம் அந்தப் பிரதிபலிப்பும் கூட இல்லை,

“ஏன்மா இப்படியொரு ரியாக்ஷன் கொடுக்கற? நம்ம தாத்தா கண்ணு… இவ்வளவு நாள் தான் அப்படியே இருந்துட்டோம்… ஊரே அவரைக் கொண்டாடுது… குரு பூஜைன்னு… நாம போகக் கூட இல்லைன்னா நல்லா இருக்காதே…” அவர் கூறுவதை மெளனமாகக் கேட்டுக் கொண்ட சத்யனை முந்திக் கொண்டு பதில் கூறினாள் அமிர்தா!

“பார்க்கலாம்ம்மா… தாத்தா எங்க மனசுல இருக்கார்… கண்டிப்பா… ஆனா அம்மாச்சி பட்டகஷ்டத்தைப் பார்க்கும்போது தாத்தா பக்கத்துல என்னால போக முடியலம்மா… இருந்தாலும் பார்க்கலாம்…” என்று கூறிவிட்டு மாடிக்குச் செல்லத் திரும்பியவள்… அப்போதுதான் அந்தப் பெட்டியைக் கவனித்தாள்… அது அவர்களது பரம்பரை நகைகளை வைக்கும் பெட்டி… அவளது முகம் யோசனையாகச் சுருங்க… சாவித்ரியோ அதைக் கவனிக்காமல் வழக்கம்போலத் தனது மருமக பிள்ளையைக் குசலம் விசாரித்துக்கொண்டிருந்தார்! பெட்டியையும் அவனையும் மாற்றி மாற்றிப் பார்த்த அமிர்தா,

“இது என்ன?” ஒரே வாக்கியத்தில் கேட்க… சத்யனோ சிறு புன்னகை முகத்தில் தவழ,

“உன்னோடது… உன் கிட்ட குடுக்கனும் இல்லையா…” முகத்தில் புன்னகை ஒட்டவைக்கப்பட்டு இருந்தாலும் குரலில் இருந்த விலகல் தன்மை அவளைச் சுட்டது,

“ஓஹோ…” ஒரே வார்த்தையில் அவள் முடிக்க… அதைப் பார்த்த சாவித்ரிவுக்குச் சத்யனின் செயலில் மனம் நெருடியது!

“ஏன் சத்தி?” சாவித்ரி மனம் கலங்கி போய்க் கேட்க,

“இல்லத்தை… அமிர்தா கிட்ட நகைய வாங்கும் போதே சொல்லியிருந்தேன்… விட்டதைப் பிடிச்சே காட்டுவேன்னு… அதுக்கு எனக்கு ரெண்டு வருஷம் டைம் வேணும்ன்னு கேட்டிருந்தேன்… சொன்ன மாதிரி செஞ்சுட்டேன்… விட்டதையெல்லாம் பிடிச்சுட்டேன் அத்தை… இது உங்களுக்குச் சந்தோஷம் இல்லையா?” அவன் கூறும்போது மிகப் பெருமையாக உணர்ந்தாள் அமிர்தா என்றால் அதற்கும் மேல் சாவித்ரி!

“எனக்கு ரொம்பச் சந்தோஷம் கண்ணா… நீங்க ரெண்டு பேரும் தான் என்னோட உலகம் சத்திம்மா… சரணாலயம் கூட அடுத்தபடிதான்… நீ இன்னும் எல்லா விஷயத்துலயும் சாதிப்ப… ஆனா இது எதுக்கு?” பெருமையாக அவனது கன்னத்தை வழித்து விட்டுப் பெட்டியைக் காட்டி அவர் கேட்க,

“இல்லத்தை எல்லாத்துக்குமே கணக்கு சரியா இருக்கணும்…” அவரை நேராகப் பாராமல் அவன் கூற… அவருக்கு மனதில் சுருக்கென்றது!

“ஏன் சத்தி… நமக்குள்ள என்ன கணக்கு? இதை இங்க கொண்டு வரணுமா என்ன? அப்போ அப்போ நீங்க ரெண்டு பேரும் செய்யறதுஎனக்கு பிடிக்கவும் இல்ல… புரியவும் இல்ல…” மனம் வெதும்பினார்! அவரது சங்கடத்தைப் பார்த்த சத்யன் மூச்சை ஆழமாக உள்ளிழுத்தபடி,

“அத்தை… எந்த உரிமைல நான் இந்த நகைய வெச்சுட்டு இருக்கச் சொல்றீங்க?”

“ஏன் சத்திம்மா… உனக்கு இல்லாத உரிமை வேற யாருக்கு கண்ணா இருக்கு? நகைய திருப்பிட்டா அதை உன் பொறுப்புல வெச்சுரு… எதுக்கு இந்த ராத்திரில கணக்கா ஒப்படைக்கனும்ன்னு கொண்டு வந்திருக்க?” சாவித்ரி கேட்கும் கேள்விகள் நியாயமாக இருந்தாலும்… அவனால் அதை ஒப்புகொள்ள முடியவில்லை!

“இல்ல… அப்போ அமிர்தா கிட்ட வாங்கும்போது உரிமையாத்தான் வாங்கினேன்… அது இவளுக்கும் தெரியும்… ஆனா எனக்கு இப்போ அந்த உரிமை இருக்குன்னு என்னால நினைக்க முடியலத்தை…” சுருக்கென்ற வார்த்தைகளை உணர்வில்லா முகத்தோடு அவன் கூற… வெடுக்கென்று நிமிர்ந்த அமிர்தா,

“அப்போ எந்த உரிமைல நான் எடுத்துக் கொடுத்தேனோ… அதே மாதிரி தான் நான் இன்னமும் இருக்கேன்னு சொல்லுங்கம்மா…” அவனுக்கு நேரடியாகப் பதிலளிக்காமல் அன்னை மூலமாக அவள் பதிலளிக்க,

“அப்படி எதுவும் இருக்கறதுக்கு எந்த ஆதாரமும்இல்லைன்னு சொல்லுங்கத்தை…” அவனும் அதே பாணியில் பதில் கொடுக்க,

“என்ன ஆதாரம் வேணும்ன்னு சொல்லுங்கம்மா… எழுதிக் கொடுக்கணுமான்னு கேளுங்கம்மா…” சாவித்ரியை நடுவில் வைத்துகொண்டு இருவரும் வழக்கடிக்க… இருவருக்கும் இடையில் என்ன சண்டை என்று புரியாமல் அவர் விழித்தார்!

“எழுதிக் கொடுக்கறதுல அர்த்தம் இல்லைங்கத்தை… எப்போவுமே மாறாம நாம நடந்துக்கற முறைல தான் இருக்கு…”

“சரி… நான் என்ன மாறி மாறி நடந்துட்டேன்… அதைச் சொல்லு…” சத்யன் முன் கோபமாக நின்று கொண்டு இப்போது நேரடியாகக் கேட்க,

“என்ன நடக்கல… இந்த நகைய என்கிட்டே கொடுத்தப்போ இருந்த மாதிரி தான் இப்போ இருக்கியா? நீ அதைச் சொல்லு…” அவனும் நேரடியாக அவளிடம் சண்டை போட

“என்னப்பா நடக்குது இங்க…” என்று புரியாமல் இருவரின் வழக்கையும் பார்த்துக்கொண்டிருந்தார் சாவித்ரி! அவன் அந்தக் கேள்வியைக் கேட்டபோது அவளால் சட்டென்று பதில் கூற இயலவில்லை… இயல்பான வீம்புகேன்று பேசும் குணமும் அப்போது தலை தூக்கவில்லை… மௌனமானவளை கோபத்தோடு பார்த்த சத்யன் அந்தப் பெட்டியை அவள் முன் வைத்து விட்டு முறைத்தான்! அவனால் வெளிப்படையாகச் சாவித்ரிவிடம் சொல்லி இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு கண்டுவிட முடியும்தான்… ஆனாலும் அவனது மனம் அதை விரும்பவில்லை… அவளாக எதைப் பற்றியும் வாய் திறக்காதபோது அவனாக எதற்குக் கூற வேண்டும் என்ற நினைவுதான் இத்தனை நாட்களாக இருந்தது… எந்தத் தடையுமே இல்லாத தனது காதலுக்குக் காதலியே தடையாக அமைந்துவிட்டதை அவன் என்னவென்று சொல்ல?

“பேச முடியலல்ல… அடுத்ததா என்ன சொல்றதுன்னு தெரியலல்ல… அதான் சொல்றேன் அமிர்தா… எப்போவுமே உனக்கு நான் முக்கியமில்ல… என்னோட பீலிங்க்ஸ் பத்தி நீ கவலைப்பட்டதே இல்லை… என்னோட வலி என்னன்னும் உனக்குத் தெரியாது… அப்போ இந்த உரிமைன்ற பேச்சு மட்டும் எதுக்கு?”

சாவித்ரியின் முன்னிலையில் அவளை நிறுத்திக் கேள்விமேல் கேள்வியாகக் கேட்க… சாவித்ரிவினால் அவனது குமுறலை தாங்கிக்கொள்ள இயலவில்லை… அவனது அருகில் சென்று அவனை ஆதரவாக முதுகில் தடவி கொடுத்தார்,

பெற்றோர் இருவரும் இறந்த பின்… எப்போதும் அத்தையைத் தேடி வந்து விடுபவனை இப்போது பார்க்கும் போதே அவரது தாய் மனம் பிசைந்தது! இந்தக் குழந்தைக்கு மனதில் என்னதான் இருக்கிறது என்று அவரது மனம் கேள்வி எழுப்பியது! அவனது வார்த்தைகள் அவளைக் கொடுமையாகத் தாக்கியது… கண்களில் கண்ணீரை துளிர்க்க செய்தது,

“சத்யா… ப்ளீஸ்… இப்படியெல்லாம் பேசாத…” கண்களில் கண்ணீரோடு கூறியவள்… சிறிது இடைவெளி விட்டு,

“கஷ்டமா இருக்குடா…”

“எனக்கு அதுக்கும் மேல கஷ்டமா இருக்குடி… உனக்காவது வீட்டில அத்தை காத்துட்டு இருக்காங்க… அங்க எனக்கு யார் இருக்காங்க? அதை நீ புரிஞ்சுக்கலையே…” அதைக் கேட்டு மெளனமாகக் கண்ணீர் விட்டவளை வெறுத்துப் போய்ப் பார்த்தவன்… சாவித்ரிவை நோக்கித் திரும்பினான்!

“சத்திம்மா… ஏன் கண்ணா இப்படி நினைக்கற… நீங்க ரெண்டு பேருமே எனக்கு ஒன்னுதான்ம்மா… உன்னை இங்கயே வந்துடுன்னு தான் சொல்றேன்…” மருமகனாக இல்லாமல் மகனாகவே பார்த்துப் பழக்கப்பட்டவனின் மனக்குமுறல் அவரை உலுக்க… சமாதனப்படுத்த அவனது கையைப் பிடித்தவரை மென்மையாக விலக்கி விட்டு அவர் கூறுவதைத் தடுத்து கேட்டான்,

“அத்தை… தாத்தா எப்போ சன்யாசம் வாங்கினார்?” இன்னதென்று வரையறையில் வராத உணர்வோடு அவன் கேட்க… அந்தக் கேள்வி சாவித்ரியின் நெஞ்சில் கத்தியைப் பாய்ச்சியது… இருவருக்கும் இடையில் ஏதோ பிரச்சனை என்ற அளவுக்குப் புரிந்து கொண்டிருந்தவர் அது இருவருக்குமிடைலான காதல் பிரச்சனை என்று அவர் நினைக்கவே இல்லை… எப்போதுமே இருவரையும் அந்தக் கோணத்தில் பார்த்தே பழக்கப்படாதவர்… இப்போதையஅவனது வெடிப்பு அவரை நடுங்க வைத்தது!

“ஏன் சத்திம்மா?”

“சொல்லுங்கத்தை…”

“அவரோட முப்பத்தி அஞ்சாவது வயசுல…” கேள்வியாக அவனைப் பார்த்துக் கொண்டு அவர் கூற,

“என்னை முப்பது வயசுலையே வாங்க வெச்சுருவா உங்க பொண்ணு…” அவன் நேரடியாகக் கூறாமல் கூறிவிட்டு நகர… ஆணியடித்தார் போல நின்றார் சாவித்ரி… எனது கண்களுக்கு இத்தனை நாட்களாக இது ஏன் தெரியாமல் போனது? அய்யகோ… இந்தப் பரம்பரைக்கு ஒரு சத்யானந்தர் போதுமே… இவன் ஏன் அவரை இழுக்கிறான்… இது போன்ற வார்த்தைகள் குடும்பம் தழைக்க உதவாதே! தவறு யார் பக்கமாக வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டுமே… இருவருமே அவளது இரு கண்கள்… எந்தக் கண் அழுதாலும் வலி அவருக்குத்தானே!

“சத்யா… என்னம்மா நீ சொல்ற?” ஒரு புறம் மகிழ்வாக இருந்தாலும் இருவரின் முகத்திலும் இருந்த ஒட்டாத உணர்வு அவரை ஒரு முடிவை எடுக்க விடவில்லை,

“ஒன்னும் இல்லத்தை… எனக்கு நிம்மதி வேணும்… வேற எதுவுமே இல்ல…” கூறிவிட்டு திரும்பியும் பார்க்காமல் நடந்தான்! விக்கித்து நின்றாள் அமிர்தா… உடன் கண்களில் கோபத்தீயோடு அமிர்தாவை நோக்கினார் சாவித்ரி!

அடுத்த அத்தியாயம்

அத்தியாயம் 49

சுமார் நூறு ஏக்கரில் பரந்து விரிந்திருந்தது அந்த ஆஸ்ரமம்... பரம்பரையாகச் சத்யனின் ஜமீன் வம்சத்தினர் வசம் இருந்த மேட்டாங்காடு அவனுடைய தாத்தாவின் வருகைக்குப் பின்னர்ச் சிறிது சிறிதாக முன்னேறத் துவங்கி இருந்தது என்பதை அறிவான், ஆனால் இப்போதோ மிக அழகான சோலைவனமாகக்…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

உங்கள் கருத்தைப் பகிருங்கள்