arrow_back
பரமபதம் அத்தியாயம் 49
பரமபதம் chevron_right பகுதி 49 / 54

அத்தியாயம் 49

visibility 226
star படைப்பை ரேட் செய்யுங்கள்
சராசரி 4.7/5 (3 மதிப்பீடுகள்)
பகிர்

சுமார் நூறு ஏக்கரில் பரந்து விரிந்திருந்தது அந்த ஆஸ்ரமம்… பரம்பரையாகச் சத்யனின் ஜமீன் வம்சத்தினர் வசம் இருந்த மேட்டாங்காடு அவனுடைய தாத்தாவின் வருகைக்குப் பின்னர்ச் சிறிது சிறிதாக முன்னேறத் துவங்கி இருந்தது என்பதை அறிவான்,

ஆனால் இப்போதோ மிக அழகான சோலைவனமாகக் காட்சியளித்த சரணாலயத்தைப் பார்க்கும்போது மனதில் அமைதி சொல்லாமல் கொள்ளாமல் வந்து அமர்ந்து கொண்டது… ஆம் சரணாலயம் தான்! அவனுக்கே ஆச்சரியமாகத் தான் இருந்தது,

சென்னையில் அவர்களது சரணாலயமும் அவனது பாட்டி பெயரிட்டதுதானே… இதைப் பார்த்துத் தான் அங்கும் இந்தப் பெயரே இருக்கட்டும் என்று நினைத்தார்களா என்று எண்ணி கொண்டான்… வாழ்க்கை அவருக்கு என்ன தந்திருந்தாலும் அவர் வாழ்க்கைக்குத் திருப்பித் தந்தது விலை மதிக்க முடியாத ஒன்று… அது அவரது கணவரின் பாதையைக் கடைசி வரை பின் தொடர்ந்த உண்மைத்தன்மைதான்… இது போன்ற புரிதல் அமைந்து கணவரின் துறவறத்தை கூட ஏற்றுக் கொண்ட பெண்ணாக அமிர்தாம்பாள் அவனது எண்ணத்தில் உயர்ந்து நின்றார்!

இருபுறமும் மரங்கள் சூழ ஆங்காங்கே இருந்த சிறிய குளங்களும் அதைச் சுற்றி இருந்த மரங்களுமாக மனதை குளிர்வித்தன… ஒரு புறம் பள்ளி கட்டுமானம் நடந்து கொண்டிருக்க… அது எந்த விதத்திலும் அந்த அமைதியை பாதிக்கவில்லை… காலாற நடந்து சென்றவனுக்கு ஆஸ்ரமத்தின் அலுவலகக் குடில் தென்பட்டது… குடிலின் முகப்பாகத் தென்பட்டது வாசகங்கள்!

“சத்யமேவ ஜெயதே!”

சிலிர்த்தான் சத்யன்! உண்மையே வெல்லும் என்று அர்த்தம் தொனிக்க அமைந்திருந்த அந்த வாசகங்கள் அவனது மனதின் ஏதோ ஒரு பகுதியை சென்று தாக்க… பேச்சற்று சிறிது நேரம் அவ்வார்தைகளையே பார்த்துக்கொண்டிருந்தான்,

யாருடனோ பேசியபடி வெளியே வந்தார் ஒரு முதிய துறவி… வயது எப்படியும் எழுபது இருக்கக்கூடும்… தும்பைப்பூ தேகம் அதற்கேற்றார் போலத் தலைமுடி… காவி அவருக்கு அற்புதமாகப் பொருந்தியிருக்கச் சத்யனையும் அறியாமல் கைகள் மேலே உயர்ந்தன… அவனது வணக்கத்தை மென்மையாக அங்கீகரித்தவரின் கண்களின் அதீத தீட்சண்யம் அவனது மனதிற்குள் சென்று அவனது எண்ண ஏடுகளைப் படித்துப் பார்ப்பது போலத் தோன்றியது அவனுக்கு!

“வா சத்யா… பயணம் சுகமா இருந்துதா?”

இயல்பான அவரது அழைப்பு அவனைச் சிறு அதிர்ச்சிக்குள்ளாகியது… தன்னை மிகவும் அறிந்தவர் போன்ற அவரது பேச்சு அவனைக் குழப்பியது,

“என்னை உங்களுக்கு?” தடுமாறினான் சத்யன்! சாத்வீகமாகச் சிரித்துக் கொண்டார் அவர்,

“நான் தான் சிவானந்தர்… சாவித்ரிம்மா சொல்லியிருப்பாங்களே…”

“ஓ… ரொம்பச் சந்தோஷம் உங்களைப் பார்ததுதுல…” அதற்கும் அதே அமைதியான புன்னகையே தவழ்ந்தது,

“நீ இங்க வந்தது தான் எங்களுக்குச் சந்தோஷம் சத்யா… உனக்காகத் தான் நாங்க காத்துட்டு இருந்தோம்…” அவர் பூடகமாகக் கூற… அவனுக்கு எதுவும் புரியவில்லை,

பேசிக்கொண்டே சிறிது தூரம் நடந்து வந்துவிட… எதிரில் தியானமண்டபம் அமைதியாக வீற்றிருந்தது… முன்பகுதியில் தாமரைகுளமும் அதை ஒட்டிய வாசனை மலர்கள் சூழ்ந்த தோட்டமும்… கிளிகளும் குருவிகளும் மற்றைய பெயர் தெரியாத பறவைகளும் ஆனந்தமாக விளையாடிக் கொண்டிருந்த அந்தச் சூழ்நிலையைப் பார்த்தாலே போதுமென்றிருந்தது… தனியாகத் தியான மண்டபம் வேறு வேண்டுமா?

“ஆசம்…” தனக்குள்ளாக முனுமுனுத்துக்கொண்டான்… அவனுடைய அத்தனை பிரச்சனைகளும் தூர ஓடிப் போனது போல இருந்தது அவனுக்கு! ஏகாந்தமான அந்தக் காலைப் பொழுதில் சிலிர்க்க வைத்த காற்றை ஆழ சுவாசித்தபடி தியானமண்டபத்தில் காலடி எடுத்து வைத்தவன்… அதைப் பின்னுக்கு எடுத்துகொண்டான்… அவனது தயக்கத்தைப் பார்த்த சிவானந்தர்,

“ஏன் சத்யா?”

“ஒன்னுமில்லைங்க சுவாமிஜி… ட்ராவல் பண்ணி வந்ததுல இன்னும் நான் குளிக்கவே இல்ல… அதான் எப்படி உள்ள போறதுன்னு தயக்கமா இருந்துச்சு…” மனதை மறையாமல் அவரிடம் சத்யன் கூற… அதற்கும் புன்னகைத்துக் கொண்டார் அவர்!

“சத்யா… வழிபாட்டுக்கு உடல் சுத்தம் முக்கியம் தான்… ஆனா அதைவிட முக்கியம் அக சுத்தம்… ஆரம்ப நிலைல இருக்கற பக்தனுக்குத் தான் இந்தப் புற சுத்தமெல்லாம் கண்ணுக்குத் தெரியும்… அதுவே முதிர்ச்சி அடைஞ்சுட்டா எது உண்மையான சுத்தம்ன்னு தெரிஞ்சு போய்டும்… அதனால நீ உள்ள போறதுல எந்தத் தவறும் இல்லை…” சிவானந்தர் தெளிவாகக் கூற… மறுப்பேதும் தெரிவிக்காமல் படிகளில் ஏறத் துவங்கினான்!

அந்தக் காலை நேரத்திலும் கையில் பிரசாதத்தை ஏந்தி கொண்டு சிலர் தியான மண்டபத்திலிருந்து போய்க் கொண்டிருக்க… சத்யன் அந்தச் சூழ்நிலையை அனுபவித்து நடந்து கொண்டிருந்தான்… சிவானந்தரிடம் பேசியபடி!

“சுவாமிஜி டிவோட்டீஸ் காலைலேயே வந்துடுவாங்களா…” சத்யன் சிவானந்தரை பார்த்துக் கேட்க,

“ஆமா சத்யா… காலைல தியான வகுப்புக்கு வந்துடுவாங்க…” விளக்கம் கொடுக்க… தலையசைத்துக் கொண்டு நடந்தான் சத்யன்,

“அதுவும் இல்லாம சத்யானந்தர் சமாதிய சுத்தித்தான் தியானமண்டபம் அமைக்கபட்டிருக்கு… தியானத்தைச் சாதகம் செய்ய நினைக்கறவங்களுக்கு இந்தக் காலை வேளை குரு தரிசனம் விசேஷமான ஒன்னு சத்யா…”

அந்தப் பிரம்மாண்டமான தியான மண்டபத்தினுள் நுழையும் போதே மனம் ஏனோ நடுங்கியது… உடல் சிலிர்க்க உள்ளே அடியெடுத்து வைத்தான்… ஓங்கி வளர்ந்த நாகலிங்க மரத்தின் கீழே சத்யானந்தரின் சமாதி அமைந்திருக்க… அருகில் அணையாவிளக்கு எற்றபட்டிருந்தது! சுற்றிலும் பூக்களால் சூழப்பட்டிருந்தது அந்தச் சமாதி… நாகலிங்க பூக்களின் வாசத்தோடு சாம்பிராணி வாசமும் சந்தன வாசமும் சேர்ந்து வருடிச் செல்ல… அவனையும் அறியாமல் சமாதியை நோக்கிச் சென்றான்,

சத்யானந்தர் அவனை வாவென அழைத்து அணைத்துக் கொண்டது போலத் தோன்றியது அவனுக்கு… கண்களில் அவனையும் அறியாமல் கண்ணீர்… எதையோ உணர்ந்த அந்தச் சிலிர்ப்பான கணங்களை முழுமையாகக் கண்களை மூடி அனுபவித்தான்! நொடிகளா நிமிடங்களா என்று பிரித்தறிய முடியாத நேர அளவை… அவனது தாயும் தந்தையும் சேர்ந்து அவனை அவர்களது மடியில் படுக்க வைத்துக் கொண்டது போன்ற உணர்வு… எங்கெங்கோ சுற்றி எதைஎதையோ தேடி தாய் மடியில் தஞ்சம் அடைந்த பறவையின் நிலைஅவனுக்கு… கால்கள் மடங்கிச் சமாதி முன் மண்டியிட்டவனை அமைதியாகப் பார்த்தார் சிவானந்தர்!

“இவன் கண்… இவனால்… இவனைக் கொண்டு… இவனாலே ஆகுமென்றால்…” அமைதியாக அவர் கூறிகொண்டிருக்க… அருகில் நின்று கொண்டு இருந்த அவரது நண்பருக்கு அது புரியவில்லை,

“சாமி… நீங்க என்ன சொல்றீங்க? ஒன்னும் புரியலையே…” அந்த மனிதர் புரியாமல் கேட்க அவரைப் பார்த்துப் புன்னகைத்தார்!

மெளனமாகக் கண்களை மூடி மண்டியிட்டிருந்தவனின் கண்களில் கண்ணீர் வழிந்தது… மனதை அழுத்திக் கொண்டிருந்த அரூப சொரூபங்கள் அவனை விட்டு எழுந்து தனியே அமர்ந்து கொண்டது போன்ற பிரம்மை… முகத்தை அழுந்தத் துடைத்தபடி நிமிர்ந்தான்… எழுந்தான்,

ஆயிரம் வாட்ஸ் மின்சாரம் தாக்கியது போன்ற உணர்வு!

எதிரினில் சமாதியின் மறுபுறத்தில் சுபர்ணா!

ஆழ்ந்த தியானத்தில்… காவியுடையில்… நிர்மலமாகச் சாத்வீகமாக… பத்மாசனத்தில் அமர்ந்து இருந்தாள்!

“சுபர்ணா…” அதிர்ச்சியோடு முணுமுணுத்தான்… பின்னால் திரும்பிச் சிவானந்தரை பார்க்க… அவனது அதிர்ச்சியை உணர்ந்தவர் போல மென்மையாகப் புன்னகைத்துக் கொண்டார்… அவளைக் கண்டதே அதிர்ச்சி என்றால் அந்த நிலையில் அந்த இடத்தில் கண்டபோது அவனால் ஜீரணிப்பது இயலாத காரியமாகிவிட்டது… இது எப்படி நடந்தது என்றும் புரியவில்லை… சுபர்ணா போய் இந்த நிலையிலா?

அவளை நினைக்கும் போதே குமட்டுகிறது என்று அவனே பல தடவை கூறியிருக்க… அவள் இந்தக் காவியுடையிலா? அதுவும் பாதி உடலாக இளைத்து நிறம் மங்கி இருந்தாலும் முகத்தில் ஒளி கூடியிருந்தது! தலை சுற்றியது அவனுக்கு… உடனடியாக அமிர்தாவுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்று தோன்ற செல்பேசியைத் தேடினான்… காணவில்லை! நேற்று இரவு அவளிடம் சண்டை போட்டுவிட்டு அங்கேயே வைத்து விட்ட நினைவு வந்தது… சீதாராமன் இவளை நினைத்து அரை உயிராய் அங்கே படுத்திருக்க… இங்கே இவள் இப்படியா? சுபர்ணாவை பார்க்கும் போதே கோபம் பற்றிக் கொண்டு வந்தாலும் அவளிடம் தென்பட்ட ஏதோ ஒரு வஸ்து அவனைத் தடுத்தது!

பார்த்துக் கொண்டிருக்கும் போதே சிவானந்தரை வணங்கிய இருவர்… சமாதியை விழுந்து வணங்கி விட்டு அடுத்து அவர்கள் செய்த காரியம் சத்யனை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது!

சாஷ்டாங்கமாக அவள் முன் விழுந்து வணங்கிய அந்த இருவரும் அவள் முன் அமர்ந்து அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தனர்… எதையோ அவள் கூற எதிர்பார்த்து இருப்பது போல அமர்ந்திருந்த அந்த இருவரின் நிலையைப் பார்த்த சத்யனுக்குக் குழப்பம் பல நூறு மடங்காகியது!

“சத்யா… ஏன் சுபாம்மாவ வணங்கறாங்கன்னு யோசிச்சிட்டு இருக்கியா?” அதே புன்னகையோடு முகம் மாறாமல் அவர் கேட்க,

“ஆமா சுவாமிஜி…” கூற நினைத்தாலும் பாதி வார்த்தைகள் தான் வெளியில் வந்து விழுந்தன,

“நீயும் போய் வணங்கிட்டு முன்னாடி உட்கார் சத்யா… என்னன்னு உனக்கும் புரியும்…”

“வாட்… நானா… அவளையா? என்ன சொல்றீங்க நீங்க?” உச்சபட்ச அதிர்ச்சியில் சிவானந்தரிடம் கொதித்தவனை அமைதியாகப் பார்த்தார் சிவானந்தர்!

“ரிஷிமூலம் நதிமூலம் பார்க்காதே சத்யா…” ஒற்றை வரியில் முடித்தவரை கேள்வியாகப் பார்த்துக் கொண்டே இருந்தான்… ஒன்றும் கூறாமல்! பின் அவரே தொடர்ந்தார்!

“ஏன்னா ரெண்டுமே அசிங்கமாத்தான் இருக்கும்… நதியோட மூலம் கிட்டத்தட்ட குப்பையும் கூளமுமா இருக்க ஒரு குட்டையா இருக்கும்… அதே மாதிரி ரிஷியோட மூலம் அதாவது பிறப்பு இல்லைன்னா வளர்ப்பு சமுதாயத்துக்கு ஏற்புடையதா இருக்காது… ஆனா ரெண்டையும் வேணாம்ன்னு சொல்லிட முடியுமா?”

“சுபர்ணாவ ரிஷின்னு சொல்ற அளவெல்லாம் அவ கிரேட் கிடையாது சுவாமிஜி… சாரி எனக்குரொம்ப எரிச்சலா இருக்கு…” அவன் தனது எரிச்சலை மறையாது அவன் கூற… அவர் சிறிது கூட முகம் மாறாமல் அவனைப் பார்த்துப் புன்னகை புரிந்தவாறே கேட்டார்,

“அருணகிரிநாதர உனக்குத் தெரியுமா சத்யா?”

“தெரியும் சுவாமிஜி… திருப்புகழை எழுதினவர்… கிரேட் டிவோட்டீ ஆப் லார்ட் முருகா…” அவனுக்குத் தெரிந்ததைக் கூற,

“அவரோட வாழ்க்கை எப்படிப்பட்டதுன்னு உனக்குத் தெரியுமா?”

சிறிது யோசித்தவன்… தெரியாது என்று தலையசைக்க,

“பல விலைமாதர்கள் கிட்ட போய்க் குஷ்டத்தை வாங்கிகிட்டவர்… அவரையே தன்னுடைய பக்தனா எத்துகிட்டார் முருகன்… இதுவரைக்கும் திருப்புகழை மாதிரி ஒரு டங்ட்விஸ்டர் இன்னொன்னு கிடையாது… முருகனுக்கு உகந்த பாடலா திருப்புகழ் இன்னைக்கும் இருக்கு… அவர் அப்படிபட்டவர்ன்னு இன்னைக்குக் கோவில்கள்ல திருப்புகழ் பாடாம இருக்காங்களா சத்யா?”

“ராமாயணத்தை எழுதின வால்மீகர் யாரு சத்யா? சாதாரணத் திருடனா இருந்தவர் தானே… அவர் எழுதின ராமாயணத்தை வேணாம்ன்னு யாராச்சும் சொல்லிடுவாங்களா?”

அவனால் அவரது கேள்விக்குப் பதில் கூற இயலவில்லை என்றாலும் அவனால் சுபர்ணாவை அப்படியெல்லாம் ஏற்றுகொள்ள முடியவில்லை… ரேவ் பார்ட்டியில் அனைத்தையும் துறந்து ஆடிய சுபர்ணா, தன்னை வேண்டித் தனக்காக எதையும் செய்யத் துணிந்த சுபர்ணா என்று அவனது பிம்பத்தில் இருந்த சுபர்ணாவை அவனால் மறக்க முடியவில்லை… அவளின் இந்த நிலை அவனால் சிறிதும் நம்ப முடியாமல் இருந்தது!

“ஆனாலும் என்னால கொஞ்சம் கூட நம்ப முடியல…”

“அணில் கடிச்ச பழத்தை மனுஷன் வேணும்னா வேண்டாம்ன்னு சொல்லலாம்… ஆனா அந்த இயற்கை சொல்லாது சத்யா… இயற்கைக்கு மூலமா இருக்க அந்தப் பரமாத்மா சொல்லமாட்டாங்க சத்யா…” அவர் இதைக் கூறியபோது சரேலென நிமிர்ந்த சத்யன் அவரைக் கூர்மையாகப் பார்த்தான்… அன்று ஒரு நாள் ஒரு பிச்சைகாரன் தோற்றத்தில் இருந்தவன் கூறிய வார்த்தைகள் அவனுடைய நினைவில் வந்தன!

“ஆண்களுக்கு ஒரு நியதி பெண்களுக்கு ஒரு நியதி கிடையாது சத்யா… தூய்மையான பக்குவபட்ட மனம்… இதுதான் அந்த நிலைக்குத் தேவையான ஒன்னு… அது சுபாம்மா கிட்ட இருந்தது…” என்று கூறியவர் அவரே தொடர்ந்தார்!

“சுபாம்மா இங்க வந்து சேர்ந்தபோது இருந்த நிலையே வேற… வாழ்க்கையே வெறுத்து போன நிலைல ஆஸ்ரமத்துக்கு முன்னாடி மயக்கமாகி கிடந்தாங்க… மறைமுகமா எந்தச் சக்தி இங்க இழுத்துட்டு வந்துச்சோ? ஆனா அதுக்குப் பின்னால இந்த ஆஸ்ரமத்துக்கு எங்க குருஜியே வந்த மாதிரி ஆகிடுச்சு… இப்போ ஸ்கூல் கட்டற ஐடியா கூட அவங்களுதுதான் சத்யா…”

“இப்போ குருபூஜைக்காக ஒரு மண்டலம் விரதம் இருந்துட்டு இருக்காங்க… சும்மா இல்லை சத்யா… வெறும் காத்து தான் உணவு… அப்படிப் பட்ட விரதம் இருக்க உடம்பும் மனசும் எவ்வளவு பக்குவப்படனும்ன்னு தெரியுமா?” அவர் கூறியபோது அதிர்ந்தான்,

“வாட்… என்ன சொல்றீங்க சுவாமிஜி…”

“ஒன்றை பார்த்து ஒன்றை பார்ன்னு குருஜி சொல்லுவார்… உன்னைப் பார்த்ததனால சுபா இன்னைக்கு எத்தனையோ பேரோட வாழ்க்கைல மாற்றத்தைக் கொண்டு வந்துட்டு இருக்காங்க… அதற்குக் காரணம் நீ தாங்கறது மறுக்க முடியாத உண்மை…”

அவர் உண்மைகளை வாரி இறைத்துக் கொண்டு போகத் தான் காரணமாகிய விதம் அவனுக்கு முதன் முறையாக வலித்தது… வாழ வேண்டிய வாழ்கையை அவள் துறந்து விட நான் காரணமா என்கிற வலி!

“சுவாமிஜி… அமிர்தாதான் இன்னமும் நான் காரணம்ன்னு சொல்லிட்டு என்னைக் கொன்னுட்டு இருக்கா… நீங்களும் அதையே சொல்லி என்னை இன்னும் கொஞ்சம் கொல்லாதீங்க… இவளோட அப்பா இவளைக் காணோம்ன்னு படுத்த படுக்கையா இருக்கார்… முதல்ல சுபர்ணாவை நான் அழைச்சுட்டு போகணும்…” கொதித்தான் அவன்!

“சரி சத்யா… அவங்க கிட்ட போய் நீயே சொல்லிக் கூப்பிட்டுட்டு போ…” அவர் அனுமதியளிக்கச் சுபர்ணாவை நோக்கிச் சென்றான் சத்யன்!

அடுத்த அத்தியாயம்

அத்தியாயம் 50

“அம்மா... வீட்டுக்கு இன்னும் வரலைம்மா... நான் என்கிட்டே இருக்கச் சாவிய வெச்சுத்தான் வீட்டைதிறந்தேன்...” அதிகாலைலேயே பத்மவிலாசத்திற்கு வந்துவிட்ட அமிர்தா அவளது தாயிடம் செல்பேசியில் பதட்டமாகக் கூறினாள்! “என்னமா சொல்ற? ஐயோ... என் தங்கம் நிம்மதி வேணும்ன்னு சொல்லிட்டு போச்சே... எங்க அம்மு…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

உங்கள் கருத்தைப் பகிருங்கள்