அத்தியாயம் 50
“அம்மா… வீட்டுக்கு இன்னும் வரலைம்மா… நான் என்கிட்டே இருக்கச் சாவிய வெச்சுத்தான் வீட்டைதிறந்தேன்…” அதிகாலைலேயே பத்மவிலாசத்திற்கு வந்துவிட்ட அமிர்தா அவளது தாயிடம் செல்பேசியில் பதட்டமாகக் கூறினாள்!
“என்னமா சொல்ற? ஐயோ… என் தங்கம் நிம்மதி வேணும்ன்னு சொல்லிட்டு போச்சே… எங்க அம்மு போயிருப்பான்…” அமிர்தா கூறியதை கேட்டவர் தவிக்க ஆரம்பித்தார்… இரவு அவன் கூறிய வார்த்தைகள் அவரது நெஞ்சத்தைத் தைத்தன… இவை அனைத்திற்கும் காரணமாக அமிர்தாவை சாடி கொண்டிருந்தவளின் வார்த்தைகளுக்குப் பயந்தே அதிகாலையில் அவனைத் தேடி வந்துவிட்டாலும் அவளுக்கே அவன் கூறியது மனதில் புயலை கிளப்பி விட்டிருந்தது… அந்த அளவிற்கா அவனது நிம்மதியை பறித்திருக்கிறேன் என்று மனதிற்குள் குமைந்தாள் அமிர்தா! அவனிடம் மன்னிப்பை கேட்காவிட்டால் அடுத்த வேலையைத் தம்மால் செய்ய முடியாது என்று தோன்ற… அவசரமாகக் கிளம்பி வந்தவளை பூட்டியிருந்த வீடு தான் வரவேற்றது… தோட்டகாரரிடமும் வாட்ச்மேனிடமும் இருந்து எந்தத் தகவலும் கிடைக்காததால் மனம் உடைந்து சிட் அவுட்டிலேயே தரையில் மடங்கி அமர்ந்தாள்!
“ஏன் இரவு முழுக்க வீட்டிற்கு வரவில்லை… எவ்வளவு வேலையிருந்தாலும் எவ்வளவு நேரமாகி விட்டாலும் வீட்டிற்கு வந்து அவனது அறையில் படுத்தால் தான் தன் அன்னையை உணர முடிகிறது என்று எப்போதும் கூறுபவன் ஆயிற்றே… அவன் இரவு முழுக்க வீட்டிற்க்கே வரவில்லை என்றால் அது சாதாரணம் கிடையாதே… அவனை அழைக்கலாம் என்றால் அவனுடைய செல்பேசியும் அவளிடம் அல்லவா இருக்கிறது… எங்கே தேடுவது? ஒரு வேளை மும்பை சென்றிருப்பானோ? உடனடியாக நிகிலை அழைத்தாள்!
“ஹாய் வர்ஷ்… என்னடா இந்நேரத்திற்குப் போன்?” அதிகாலை தூக்கம் அவனது குரலில் இன்னும் மிச்சமிருக்க… கொட்டாவி விட்டுக் கொண்டே கேட்டவனிடம்,
“நிக்கி… சத்தி வந்தாங்களா?”
“ஏன்டா இப்படிக் கேட்கற… உனக்குத் தெரியாமத்தான் வந்துடுவானா? இங்க இல்லப்பா…” இருவரது காதலை அறிந்த நிகில் அந்த நேரத்தில் கலாய்க்க… அவளுக்குக் கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போலத் தோன்றியது,
“நிக்கி… நீ மத்த ப்ரெண்ட்ஸ் எல்லாருக்கும் கொஞ்சம் போன் பண்ணி கேக்கறியா?”
“ஏன் வர்ஷ்… வாட் இஸ் த ப்ராப்ளம்?”
“நத்திங் நிக்கி… சத்திய இங்க காணோம்… செல்ல வேற மிஸ் பண்ணிட்டாங்க… அதான்… வேற ஒரு ப்ராப்ளமும் இல்லை…” செல்பேசியைத் துண்டித்தவளின் வாய்இதை கூறிகொண்டிருந்தாலும்… அவளது மனம் சத்யன் எங்கிருப்பானோ என்று குமைந்து கொண்டிருந்தது!
அவனுடைய நண்பர்கள் அனைவருக்கும் மாற்றி மாற்றி அழைத்தாலும் அனைவரிடமும் இருந்து வந்த பதில் ஒன்றே ஒன்று தான்… சத்யன் வரவில்லை என்பது!
எங்குச் சென்றிருப்பான் என்பது அறியாமல் ஏன் சென்றான் என்பதை மட்டும் புரிந்து கொண்ட அமிர்தாவிற்கு மனம் முழுக்க வலி… வலி… வலியைத் தவிர வேறொன்றுமில்லை!
“ஐயோ சத்யா… என் முன்னே வந்துவிடு… எனக்கு நீ வேண்டும்… எனக்காக நீ வேண்டும்… எனக்கு மட்டுமே நீ வேண்டும்… எனக்கு நீ மட்டுமே வேண்டும்”அவனைப் பார்க்க முடியவில்லை என்ற ஏக்கம் அவளைக் கொன்று தின்றது! வேறெதுவும் அவளது நினைவில் இல்லை… சத்யன்… சத்யன்… சத்யன் மட்டுமே!
“இனி நான் பிடிவாதம் பிடிக்க மாட்டேன்டா… என்னை விட்டு எங்கும் போய்விடாதே…” அவளது மனம் வெதும்பியது!
ஆனாலும் எந்தச் செய்தியும் வரவில்லை சத்யனிடமிருந்து!





