அத்தியாயம் 5
சென்னை
மியுசிக் அகாடமி
எள் விழுந்தால் எண்ணையாகி விடும் போலக் கூட்டம் மொய்த்துக் கொண்டிருந்தது. தத்தமது பெருமையைப் பறைசாற்ற, “நம்மாத்து மாமா எத்த விட்டாலும் விட்டுடுவார்ஆனா இந்த டிசம்பர் கச்சேரிய மட்டும் மிஸ் பண்ண மாட்டா. தெரியுமோ! கச்சேரிய மிஸ் பண்ணிண்டு அட்லாண்டால நமக்கு என்னடி வாழ்றதுன்னு இழுத்துண்டு வந்துடுவார்!”
கணவரின் ரசனையைச் சொல்வதாகக் கூறிக் கொண்டு புதிதாக வாங்கிய சாலிடர் வைர கம்மலை தனது தோழி படையினரிடம் ஆட்டிக் காட்டி கொண்டே தங்களது அட்லாண்டா புராணத்தைக் கூறி அனைவரது காதையும் கிழித்துக் கொண்டிருந்த பட்டுச் சேலை மாமிசும், இன்றைக்குக் கச்சேரிக்கு என்ன ஐட்டம் பாடுகிறார்கள் என்பதைக் காட்டிலும் காண்டீனில் என்ன என்ன ஐட்டம் என்பதைத் தங்களது மூக்கு எனும் ஆயுதத்தால் கண்டறிந்து புலன் விசாரணை நடத்தும் பஞ்சகச்சம் மாமாசுமாகக் களை கட்டி இருந்தது மியுசிக் அகாடமி,
“மஹா கணபதிம்… மனசாஸ்மராமி…”
கம்பீரமாக நாட்டையில் ஆரம்பித்தது கடவுள் வாழ்த்து!
அக்கம் பக்கம் வளவளத்துக் கொண்டிருந்த கூட்டம் கப்சிப்பென்றானது. இருக்காதா பின்னே! பரதத்தில் இன்றைக்கு மிக முக்கியமான நட்சத்திரமாகப் பேசப்பட்டுக் கொண்டிருக்கும் அமிர்தவர்ஷினி பாலகங்காதரனின் நிகழ்ச்சி!
மேடையில் அவளது நளினம், கம்பீரம், ஆளுமையென அனைத்தும் பேசப்படுவனதான். தென்றலாகத் துவங்கி புயலாக வீசிப் பின் மழையாகக் குளிர்வித்து அனைத்துமாகி யாவரையும் ஆட்கொண்டிருந்தவளை வர்ணிக்க வார்த்தைகள் குறைவே! யாராலும் குறை காண முடியாத சங்கதிகளையும் சுண்டி இழுக்கும் முகப் பாவங்களையும் மெய்சிலிர்க்கும் உணர்வு சங்கமங்களையும்… அப்பாப்பா… அரை நிமிடங்களுக்குள்ளாக இத்தனை பாவமா என்று பார்ப்போரை மூச்சை இழுத்துப் பிடிக்கச் செய்துகொண்டிருந்தாள் அமிர்தா!
அவள் எப்போதுமே அப்படித்தான். அபிநயம் பிடிக்க ஆரம்பித்து விட்டால் அவளே ஆண்டாள்… அவளே ராதா… அவளே செல்லக் குறத்தியும்… அடுத்தது அவளைப் பற்றிய வர்ணனை! அதைசெய்வதற்கும் அக்கம் பக்கம் பார்க்க வேண்டி இருக்கிறது. என்ன செய்வது? ஒரு வார்த்தை அந்தப் பெண்ணியவாதியின்காதில் விழுந்து விட்டாலும் அவள் ஆடிக் கொண்டிருக்கும் ஆனந்த தாண்டவம் பிரளய தாண்டவமாக மாறி விடும் வாய்ப்பு இருப்பதால் நாம் எஸ்கேப் ஆவது ஒன்றே ஆகச்சிறந்த வழி என்றாகிறது!
ஒரே வார்த்தையில் சுருக்கமாகச் சொல்வதென்றால் செம்ம்ம பிகர் இன்ஸ்டால்ட் வித் செங்கல் காளவாய் ஆட் ஆன் வித் செம வெயிட் மேல் மாடி. அதாங்க அவிங்க வக்கீலமாங்கோ!
ப்ராக்டீஸ் செய்தது அனந்தபத்பனாபனிடம், ஹை கோர்ட்டை அவ்வப்போது கிழித்துக் காயபோட்டு இஸ்த்திரி போடுவதாக அவரது நினைப்பு. நெனப்புத்தான் பொழப்ப கெடுக்குதாம்ல… என்று அவ்வப்போது கவுன்டர் கொடுப்பது அமிர்தாவின் தினசரி செயல்பாடுகளில் ஒன்று! தற்போது லக்ஷ்மி பைனான்ஸ் லிமிட்டட் மற்றும் சுபர்ணா க்ரூப் ஆப் கம்பனிஸில் லீகல் ஆபீசர் உத்தியோகம்!
பரதம் அவளது பொழுதுபோக்கு!
“நம்ம அமிர்தாவோட அழகு யாருக்கு வரும்? என்ன தேஜஸ்! என்ன பண்பு! எவ்வளவு ரசிகர்கள் அவளை ஆராதித்தாலும் கொஞ்சமானும் தலை கனம் இருக்கா பாரேன் மீனு… போன வாரம் அவா ஆஷ்ரமத்துப் பக்கம் போனேன். எவ்ளோ பதவிசா உபசரிக்கறா தெரியுமா? எல்லா வேலையும் இழுத்து போட்டுண்டு அவளே பாக்கறா. கொடுக்கப் போன டொனேஷன ரெண்டு பங்கா கொடுத்துண்டு வந்தேன்டி…” பக்கத்தில் இருந்த மாமியிடம் இன்னொரு மாமி கூறிக் கொண்டிருந்தார்.
இதுதான் அமிர்தா! வார்தையாட வேண்டிய இடங்களில் மட்டுமே அவளது சொல்வீச்சு இருக்கும். ஆனால் குணம் காட்ட வேண்டிய இடங்களில் அழகாகப் பொருந்தி போய் விடுவாள்!
“ஆமா மாமி! என்னதான் சொல்லுங்கோ, இந்தப் பொண்ணோட அடக்கமே அடக்கம்தான். இவ மட்டும் நம்மவாளா இருந்து இருந்தா எப்படி இருந்து இருக்கும்…”
“எப்படி இருந்து இருக்கும் சொல்லு…” கேள்வியாகப் பார்த்தார்!
“இல்ல மாமி… நம்மாத்துப் பசங்களுக்கு முடிச்சு போட்றலாம்லையோ… அதான்…”
“ஏன் மீனு? லோகமே குளோபல் வில்லேஜ்ன்னு சொல்றா… இப்போ போய் ஜாதி பத்தி பேசறியே! நோக்கு விவரம் பத்தவே இல்லடி!”
“என்ன மாமி சொல்றேள்?”
“பின்ன… இல்லினாயிஸ்ல உன்னோட புத்திர சிகாமணி எதாச்சும் வெள்ளைக்காரிய சேர்த்துண்டா… உன்னால என்ன செய்ய முடியும்? கிருஷ்ணா ராமான்னு சொல்றவன் இயேசுவேன்னு தான் சொல்வேன்னா நீ அப்போ ஜாதி பாத்து என்னடி பிரயோஜனம்? நம்மாத்துக்குக் கிருஷ்ணஜெயந்தி, அவாளுக்குக் கிறிஸ்தமஸ்ன்னு சொன்னான்னா நீ மறுக்க முடியுமா?” அந்த மாமியின் மனதில் கிலியை பரப்பிக்கொண்டிருந்தார் இவர்!
“நம்ம கேசவ் அப்படி எல்லாம் பண்ணிட மாட்டான் மாமி…” குரலில் ஒரு பயம் நிறைந்து இருந்தது.
“என்ன பண்ண மாட்டான்? சப்போஸ் பண்ணிண்டான்னா…”
“ஏன் மாமி பயமுறுத்தரேள்?” விட்டால் அழுது விடுவார் போல!
“நாட்டு நடப்ப சொன்னேண்டியம்மா. அதை விடு. அமிர்தா ஆரம்பிச்சுட்டா பாரு! இதுக்கு வா…” அவரே சமாதானமாகக் கூறி விட்டு மேடையைக் கவனிக்க ஆரம்பித்தார்!
இந்தச் சம்பாஷணைகளைப் பக்கத்தில் அமர்ந்து இருந்தவர் பெருமித புன்னகையோடு கவனித்துவிட்டுப் பின் அமிர்தாவை நோக்கினார். அந்தப் பெண்கள் இருவரும் பேசிக்கொண்டதைகேட்டபோதுதனது மருமகளை நினைத்து மிகவும் பெருமையாக இருந்ததுராஜசேகருக்கு!
நிகழ்ச்சி வெற்றிகரமாக முடிய கூட்டம் கலைய துவங்கியது. கிரீன் ரூமை நோக்கிச் சென்றார் ராஜசேகர்.
அவருக்காகவே காத்துக் கொண்டிருந்த அமிர்தா, “ஹாய் மாம்ஸ்…” முகம் முழுக்கப் புன்னகையோடு வரவேற்றாள்!
“ஹாய்டா! எப்படிக் குட்டிம்மா இருக்க?” அந்தப் புன்னகை அவருக்கும் தொற்றிகொண்டது!
“நான் ஜம்முன்னு இருக்கேன். சரி ப்ரோக்ராம் எப்பிடி?” கண்ணைச் சிமிட்டி கேட்டாள்.
“உன்னை மாதிரியே ஜம்முன்னு இருந்துச்சு குட்டி. என் செல்லம் ஆடி நல்லா இல்லாம போய்டுமா?” அவளைப் போலவே அவரும் கூற,
“ஹஹஹா தேங்க்ஸ் தேங்க்ஸ் தேங்க்ஸ்…” இடை வரை குனிந்து கைகளை விரித்துக் குரலில் குறும்போடு அவள் கூறியதை ரசித்தவர் அவள் தலை அலங்காரத்தைக் கலைப்பதற்கு உதவி செய்யத் துவங்கினார்,
அலங்காரத்தோடுதான் வீடுவரை சென்று ஆலம் சுற்ற வேண்டும் என்பதில் எல்லாம் நம்பிக்கை வைத்தவள் இல்லை. அனைத்தையும் கலைத்து இங்கேயே தன்னுடைய சுடிதாருக்கு மாறி விட்டே செல்வாள். எத்தனை பேர் என்ன சொன்னாலும் சில விஷயங்களில் மாறாதவள். பிடிவாதம் மிக அதிகம். கடவுளை நம்புவதை விட நம்மை நாமே நம்ப வேண்டும் என்று நினைக்கும் அக்மார்க் பகுத்தறிவுவாதி,
“அம்மா ஏன்டா கண்ணா இன்னைக்கு வரல? ஐ வாஸ் எக்ஸ்பெக்டிங் ஹெர்…” குரலில் இருந்த கனம் அவளுக்குப் புரிந்தது! இன்னமும் தனது தங்கை தன்னை ஏற்றுகொள்ளவில்லையே என்ற சோகம் அவரது குரலில் வெளிப்பட,
“ஹோம்ல ராகவி அக்காவுக்கு இன்னைக்கு டெலிவரி டேட் குடுத்து இருக்காங்க மாமா. அக்காவ விட்டுட்டு எப்பிடி வருவாங்க? நானே மேனேஜ் பண்ணிக்கறேன்ம்மான்னு சொல்லிட்டேன். மாமா நானும் ஒன்னு சொல்லட்டா…” தாய்மாமனின் அனுமதி வேண்டி நின்றாள்!
“சொல்லுடா செல்லம்… என்கிட்டே சொல்ல ஏன் தயங்குற?”
“நானும் தான் மாமா சத்திய எக்ஸ்பெக்ட் பண்றேன். ஹோம்ல…” அவள் சாதரணமாகக் கூறினாலும் அதன் நோக்கம் தெரியாதவர் இல்லை ராஜசேகர்!
“தெரியும்டா! நல்லா தெரியுமே குட்டி! ஆனா இப்போ நம்ம நிலைமை அவனைவிட உனக்குத் தானே நல்லா தெரியும். நிலைமை கொஞ்சம் சீராகட்டும் கண்ணா. உன்னை முழுசா ப்ரீ பண்ணி விட்டுடறேன்டா. ப்ளீஸ்!” குரலில் இருந்த கெஞ்சுதல் அமிர்தாவை இளக்கியது!
“மாம்ஸ் என்ன நீங்க இப்படிப் பீல் ஆகறீங்க? இதெல்லாம் ஒரு மேட்டரே இல்ல. அவன் வர்றப்போ வரட்டும்! நம்ம பிரின்சிபல் ஒன்னே ஒன்னு தான். கடமையைச் செய் பலனை எதிர்பாராதே! நான் எப்பவுமே என்னோட கடமைல இருந்து தப்பிக்க மாட்டேன் மாமா…” அவள் அவ்வாறு கூறியது ராஜசேகருக்கு உறுத்தியது.
தான் கடமையிலிருந்து தப்பிக்கத்தான் மருமகளிடம் அவ்வாறு கூறுகிறோமோ என்று! யாருமே நூறு சதவிதம் நல்லவர்களும் இல்லை நூறு சதவிதம் கெட்டவர்களும் இல்லை. சந்தர்ப்பமும் சூழ்நிலையுமே ஒருவருடைய குணத்தை முடிவு செய்கிறது. அது தான் ராஜசேகருக்கும் நேர்ந்தது!
ராஜசேகரின் தந்தை சத்யானந்தர். முன்னாள் ஜமீன்தாரின் ஒரே வாரிசு. ஆனால் ராஜசேகரின் சிறு வயதிலேயே தன் இல்வாழ்க்கையைத் துறந்து தனது ஜமீன் சொத்துக்களையும் துறந்து துறவு பூண்ட பின் இறைவனடியையும் அடைந்து விட்டவர். தேவைகள் அதிகம் இல்லாத மனிதர்! அவர்களது வர்க்க ஆட்களிலிருந்து வேறுபட்டு ஆசை வேண்டாம் என்று உபதேசித்துச் சிறுவயதிலேயே உலக வாழ்க்கையை நீத்து விட்ட மகான்!
அவரது மனையாள் அமிர்தாம்பாள். கணவரின் சொல்மீறாமல் குழந்தைகளைக் காக்க மாளிகையில் தங்கி விட்டாலும், தவ வாழ்கையை மேற்கொண்ட மகா யோகி!
அவருடன் ஜமீன் மாளிகையில் இருந்தவர்களுக்கு மிச்சசொச்சம் உள்ள சொத்துக்களை எப்படிக் கொள்ளை அடிப்பது என்பதை யோசிக்கவே நேரம் போதவில்லை தனியொரு பெண்ணாக இரண்டு பிள்ளைகளையும் சொத்துக்களையும் காக்க எவ்வளவு சிரமம் அடைந்து இருப்பார் என்பதைச் சொல்லத் தேவை இல்லை.
வேலி இல்லாத வெள்ளாமைதானே என்று கறுப்பாடுகள் உள்ளே நுழைய முயல அந்தத் தாய் அரணாக இருந்து காத்து வந்தார். சாவித்திரியும் ராஜசேகரும் வளர்ந்தனர்!
எப்படியும் தன் மகன் வளர்ந்த பின் தன் கைக்கு உதவிக்கு வந்துவிடுவான் என்ற நம்பிக்கையில் இருந்தபோது ராஜசேகருக்கு காதல் வந்தது உடன் பயின்ற பத்மினி தேவியைப் பார்த்து! பல எதிர்ப்புக்களிடையே கோவிலில் வைத்துத் தாலி கட்டினார்.
அதோடு அமிர்தாம்பாள் ராஜசேகரை தலை முழுகுவதாக அறிவித்தார்! மகன் உதவி செய்வான் என்று எண்ணி கொண்டிருக்கும்போது ராஜசேகர் செய்த காரியம் அவரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தொடர்பு முழுதுமாக விட்டுப் போனது. நம்பியிருந்த மகன் இப்படித் தன்னைக் கைவிட்டு விட்டானே என்கிற கோபம்.
தன் கணவர் துறவு பூண்டு தன்னை விட்டுச் சென்றதை எப்படியோ ஜீரணித்து விட்ட அவரால், தான் பார்த்துப் பார்த்துப் பாதுகாத்த ராஜசேகர் திடீரெனக் காதலென்று திருமணமும் முடித்து வந்தது, பலமான அதிர்ச்சியை உண்டு செய்தது,
தன் முகம் பார்க்கத் தயங்கித்தான் ராஜசேகர் அவ்வாறு செய்தார் என்பதை அவரும் உணரவில்லை! தன் தாயின் கோபம் நீர்க்குமிழி போன்றது என்பதை இவரும் உணரவில்லை! வார்த்தைகள் எல்லை மீறியது. பத்மினியை முழுவதுமாக அந்த மாளிகையிலிருந்து விலக்கி வைத்தன, மிகுந்த கோபத்திலும் ஆற்றாமையிலும் அமிர்தாம்பாளிடமிருந்து வெளிவந்த அவ்வார்த்தைகள்!
பத்மினியின் பக்கமும் ஆதரவற்றுப் போயிருந்த நிலையில் சொத்துக்களில் ஒரு சல்லி காசும் தனது மனைவிக்கோ தனக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கோ தேவையே இல்லை என்று சூளுரைத்து விட்டு பத்மினியை அழைத்துக் கொண்டு சென்னை வந்தார் ராஜசேகர்! ஒடிந்து போனார் அமிர்தாம்பாள்.
மகன் பிறந்தபோது தந்தையின் பெயரைக் கொண்டே சத்யப்ரகாஷ் என்று பெயரிட்டாலும் தாயை காண்பதற்கு அவரது ஈகோ தடுத்தது! பொருளில்லாத கோபத்தை இழுத்து பிடித்து வைத்துக் கொண்டிருந்தனர் தாயும் மகனும்!
அதன் பின் சாவித்ரிக்குத் திருமணம் என்று வரும்போது தனது சொந்தத்திலேயே வசதிகளும் ஆதரவும் இல்லாத பாலகங்காதரனை வீட்டோடு மாப்பிள்ளையாக்கி கொண்டார். துணையாக எந்தப் பற்றுகோலும் எதுவும் இல்லாத நிலையில் வாழ்க்கையை எவ்வளவு நாள் தான் எதிர்த்துப் போராடுவது?
தனது பாட்டியின் பெயரைத் தாங்கி அமிர்தவர்ஷினி பிறந்தாள்!
அமிர்தமென்னும் அன்பை மழையாக அனைவருக்கும் பொழிபவள் என்ற அர்த்தத்தில் தனது மாமியாரின் பெயரையும் சேர்த்து வைத்தார் கங்காதரன். அவர் குணத்தில் தங்கம். மாமியாரின் சொத்துக்களுக்குப் பாதுகாவலாக மட்டுமே நாம் இருக்கிறோம் என்று வெளிப்படையாகக் கூறி தாமரை இலை தண்ணீர் போல இருந்தவர்! அதனால் தானோ என்னவோ இறைவன் அவரை வெகுவிரைவில் அழைத்துக் கொண்டான்!
மூன்றாம் முறையாக அமிர்தாம்பாள் ஒடிந்து போனார். அந்தத் துடுப்பற்ற படகு வெகுநாட்கள் மிதக்கவில்லை. தரை தட்டியது! படுத்த படுக்கையாக அவர் விழுந்தபோது அமிர்தவர்ஷினிக்கு வயது பத்து! சத்யனுக்குப் பனிரெண்டு!
“இந்தப் பரம்பரைக்கான சாபம் விடவே விடாதோ? என்று கிடைக்கும் சாப விமோசனம்? என் பரம்பரை நிர்மூலமாக வேண்டியதுதானா?” என்று எண்ணி எண்ணியே மனம் ஒடிந்து போனார் அமிர்தாம்பாள்!
தனது தாயை காண அடித்துப் பிடித்து வந்து கண்ணீர் விட்டுக் கதறினார் ராஜசேகர்! அலைபுற்று இருந்த அந்த ஆன்மா… சொத்துக்களைச் சரிசமமாகச் சத்யா பெயரிலும் வர்ஷினியின் பெயரிலும் சேர்த்து உயில் எழுதி வைத்து விட்டு இறைவனடியை அடைந்து விட்டது!
அமிர்தாம்பாளின் அநாதரவான நிலையைப் பக்கத்தில் இருந்தே பார்த்துப் பழகி இருந்த சாவித்திரி, அண்ணனை மன்னிக்கவோ ஏற்றுக் கொள்ளவோ தயாராக இல்லை என்பது ராஜசேகர் அங்கிருந்து காரியங்களை முடித்தபோது அறிந்து கொண்டார்.
தங்கையின் உணர்வுகளை மதித்தார்.
சாவித்திரி அவரை ஏற்றுக்கொள்ளத்தான் தயாராக இல்லையே தவிரச் சொத்துக்களை அண்ணனிடம் ஒப்புவித்துச் செல்வதற்குத் தயாராகவே இருந்தார். உத்தமமான கங்காதரனின் மனைவி அல்லவா!
ஆனால் ராஜசேகர் அதை ஏற்க தயாராக இல்லை. சொத்துகள் வேண்டாம் என்று சொல்லித் தானே பத்மினியை கைபிடித்தது, அதன் மூலமே தாய் தன்னிடமிருந்து ஒதுங்கியது எல்லாமுமாக அவரை முழுவதுமாக மறுதலிக்க வைத்தது!
சொத்துக்கள் அனைத்தையும் ட்ரஸ்டாக்கி அதற்கு நிர்வாகியாகத் தங்கையையும் அவருக்குப் பின் குழந்தைகள் வளர்ந்த பின் சத்யாவையும் வர்ஷினியையும் அமர வைக்கலாம் என்று முடிவானது. அமிர்தாம்பாளின் கடைசி ஆசைக்கு இணங்க ஆதரவற்றோர் இல்லமும் முதியோர் இல்லமும் அந்த மாளிகையை ஒட்டி ஆரம்பிக்கப்பட்டது. நிர்வாகியாகச் சாவித்திரி செயல்படத் தொடங்கினார்!
அப்போதிலிருந்து விடுமுறையானால் அத்தையிடம் சத்யன் ஓடி வந்தாலும் ப்ரியமாக இருந்தாலும் சாவித்ரி தன் அண்ணனிடம் முன் போல் ஒட்டவே இல்லை. தாய் இறந்த பின் ராஜசேகரிடம் அவர் பேசிய வார்த்தைகளை விரல் விட்டு எண்ணி விடலாம். ஆனால் வர்ஷினியும் சத்யனும் ஒற்றுமையாக இருந்தனர். சிறுபிள்ளைகளுக்கான உரசல்களைத் தவிர.
ஆனால் வயது வந்தபின்பு தன் தந்தை வேண்டாமென்று மறுத்த சொத்துக்களையும் பொறுப்புக்களையும் தானும் ஏற்க மறுத்து விட்டான் சத்யன். வர்ஷினி கேட்கும் போதெல்லாம் மௌனத்தையே பதிலாக்கி கொண்டிருந்தான் அவன். அந்த மௌனத்திற்கு அர்த்தம் புரியும் அவளுக்கு!
பாட்டியிடமிருந்து தன்னை விலக்கி வைத்தது இந்தச் சொத்துக்கள் தான் என்று முழுவதுமாக நம்பினான் சத்யன். தந்தை தனது தன்மானத்தைக் காப்பாற்றிக் கொள்ள, வேண்டாம் என்று மறுத்தது தனக்கு மட்டும் எதற்கு? என்ற எண்ணம். ஆனால் அவன் மறந்த, ராஜசேகர் மறைத்த நிறைய மர்மங்கள் சூழ்ந்தது தனது வாழ்க்கை என்பதை வாழ்கையின் அதன் போக்கிலேயே புரிந்து கொள்ளப் போவதை அவன் உணரும்போது?
“என்ன மாம்ஸ்? ப்ளாஷ்பேக்கா?” தாய்மாமனை பிடித்து உலுக்கி கொண்டிருந்தாள் அமிர்தவர்ஷினி!
தலையை உலுக்கி கொண்டு நிமிர்ந்த ராஜசேகர் கசப்பாகப் புன்னகைத்தார்!
ஒரு பெருமூச்சோடு, “கஷ்டமா இருக்கு குட்டிம்மா! செஞ்ச தப்பு பத்தாதுன்னு இப்போ சத்தியையும் சிக்க வைக்கிறனோன்னு தோணுதுடா…” சுபர்ணா அலுவலகம் பக்கம் வந்ததில்லை என்பதனால் அவளைப் பற்றி அதிகமாக ஒன்றும் தெரியாது என்றாலும், அவளது குணம் ஒன்றும் சிறப்பானது இல்லை என்ற அளவில் கேள்வியுற்று இருந்தாள்.
ஆனால் சத்யா அவளை மாற்றி விடுவான் என்றெண்ணி கொண்டு, அவரைக் கண்டு புன்னகைத்தவள், “அதெல்லாம் சத்தி பார்த்துக்குவான் மாமா. எப்படிப்பட்ட ஆளுங்களையும் பேசியே மடக்கிடுவான். எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு!” அமிர்தவர்ஷினி ஆழ்ந்த நம்பிக்கையோடு!
கார் நெடுஞ்சாலையில் வேகமெடுக்க ஆரம்பித்து இருந்தது. ஸ்டியரிங்கில் தாளமிட்டபடியே காரை மெதுவாகச் செலுத்தி கொண்டிருந்தாள் அமிர்தா. அவள் பயணிப்பது என்றால் அவள் மட்டுமே காரோட்ட வேண்டும். காருக்கு ஓட்டுனர் வைப்பதுஅவளுக்குப் பிடிக்காதது. படிக்கும் போதே சத்யாவுக்கும் அமிர்தாவிற்கும் சண்டை என்றால் காரோட்டுவதிலிருந்து தான் ஆரம்பிக்கும்.
இதில் அமிர்தாவிற்குப் பொறுப்பானஅளவான வேகம் மட்டுமே ஒப்பும் ஆனால் சத்தியனோ கண்மண் தெரியாமல் வண்டியைப் பறக்க விடுவதில் சமர்த்தன். உள்ளே அமர்ந்து இருக்கும்போது அமிர்தா நடுங்கி விடுவாள். அந்தப் பயத்தில் நாயே பேயே என்று ஆரம்பித்து இருவருக்கும் ஆரம்பமாகும் ஈகோ சண்டை உலகப் போர்போல நீண்டு கொண்டே சென்று எப்படியோ ‘போடாப் போடி’ என்று முடியும். அந்தச் சண்டைகளை இப்போது நினைத்துப் பார்க்கும்போது உதட்டோரம் புன்னகை மலர்ந்தது!
மெலிதான கஸல் வழிந்து கொண்டிருந்தது ப்ளேயரில். கண்களை மூடி அமைதியாக இருக்க முயன்றார் ராஜசேகர்.
மூச்சை இழுத்துப் பெரிதாக வெளிவிட்டவரை கேள்வியாகப் பார்த்த அமிர்தா, “மாமா என்ன பண்ணுது உங்களுக்கு? ரொம்ப டிஸ்டர்ப்டா தெரியறீங்க?” என்று ஆதூரமாகக் கேட்க,
“ப்ச்… ஒன்னும் இல்லடா…” சோர்வாக வெளி வந்தன வார்த்தைகள்.
வியாபார நஷ்டத்தோடு சுபர்ணாவை பற்றிக் கேள்வியுற்றது எதுவுமே சரி இல்லாமல் இருந்தததால் வயிற்றில் உருண்ட பயபந்தும் அவரது சோர்வை அதிகபடுத்தச் செய்தன. வாகனத்தின் வேகத்தை இன்னமும் குறைத்தவள் ஓரமாக நிறுத்திவிட்டு தனது தாய்மாமனை தீர்க்கமாகப் பார்த்தாள்.
பின் மெதுவாக அவரது வலது கையை ஆதரவாகப் பற்றி, “மாமா! எனக்கு நினைவு தெரிஞ்ச நாள் முதலா பார்த்துட்டு இருக்க என்னோட மாமா இப்படி உடைஞ்சு போகமாட்டாங்க. என்னோட அப்பா, வழிகாட்டி எல்லாமே என்னோட கம்பீரமான மாமாதான். இப்போவும் அதைதான் உங்ககிட்ட எதிர்பார்க்கிறேன். நம்ம சத்தி இருக்கான் மாமா! எவ்ளோ பிரச்சனை வந்தாலும் நின்னு சமாளிப்பான். எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு. அதோட நான் இல்லையா? அம்மா இல்லையா? எல்லாரும் இருக்கோம் மாமா உங்களுக்கு…”
அவள் குரலில் தெரிந்த அன்பும் அதில் கலந்து இருந்த உறுதியும் தெளிவும் தீர்க்கமும் ராஜசேகருக்கு ஒரு புத்துணர்வை ஏற்படுத்திய அதே நேரத்தில் அமிர்தாவை பார்த்த கண்கள் லேசாகக் கலங்கின. மருமகளின் தெளிவான கண்ணோட்டத்தில் உள்ளே பெருமிதத்தோடு கூடிய ஏக்கமும் முளைவிட்டது.
வலது கையைப் பற்றிய மருமகளின் இன்னொரு கையையும் பற்றிக் கொண்டு, “ஆமாம்டா கண்ணா… நீ இருக்கே… நீ இருக்க… நீ இருக்க…” மாற்றி மாற்றிச் சொன்னவரை வித்தியாசமாகப் பார்த்தாள்!
“மாமா ரொம்பக் கலக்கமா தெரியறீங்க… வேணும்னா நங்கநல்லூர் போலாமா? உங்க பிரெண்ட் ஹனுமாரோட கோயில்ல இன்னைக்குச் செம டேஸ்டான மிளகு பொங்கல்… போய் ஒரு பிடி பிடிச்சுட்டு வரலாமா? ஸ்ஸ்ஸ்ஸ்… அந்தப் பொங்கலை நினைக்கும் போதே எனக்கு வாயூறுது! என்ன சொல்றீங்க?”
அவள் சொன்ன தோரணையில் சட்டென்று சிரித்துவிட்ட ராஜசேகரை பார்த்து முறைத்தாள் அவரது மருமகள்!
“மாமா! எனக்கு இப்போ மிளகு பொங்கல் வேணும்… அதைச் சொன்னா சிரிக்கறீங்க? போலாமா வேணாமா?”
“கழுதை… ஆஞ்சிநேயர் உனக்குத் தெரியலை, ஆனா மிளகு பொங்கல் மட்டும் தெரியுதா? போக்கிரி! சரி போலாம் காரை எடுடா குட்டி!”
“உங்களுக்கு எங்க புரியபோகுது அந்தப் பொங்கலோட டேஸ்ட்? இப்பவே சொல்லிட்டேன்… உங்க ஷேரும் எனக்குத்தான். அங்க வந்து வம்புகட்ட கூடாதாக்கும்…” விரலை நீட்டி எச்சரித்தபடியே காரை எடுத்தாள்.
“அம்மு இங்கேர்ந்து நங்கநல்லூர் போகனுமா? லேட் ஆகிடாதா கண்ணா உனக்கு?”
“அதெல்லாம் ஒன்னும் லேட் ஆகாது மாமா… எனக்கு என் மாமா முகத்துல தெளிவ பார்க்கணும்… டாட்!” எந்திரன் பட பாணியில் விரலை நீட்டி சொல்லி வைத்த விதத்தில் ராஜசேகரால் சிரிப்பை நிறுத்த முடியவில்லை!
“வாலு பொண்ணு! எனக்கு மனசு சரி இல்லைன்னா கோயிலுக்குக் கூட்டிகிட்டு போவ. ஆனா நீ மட்டும் சாமி கும்பிட மாட்ட. ஏன்டா இப்படி?”
“உங்க சாமி எனக்கு வேணாம் மாமா. நான் போகலாம்னு சொன்னது உங்களுக்காக. கமல் சொன்ன மாதிரி கடவுள்ன்னு ஒருத்தர் இருக்காரா இல்லையாங்கறது இல்ல தர்க்கம்! இருந்தா நல்லா இருக்குமேன்னு தான் மாமா பீல் பண்றேன்! நீங்க, அம்மா, அத்தை, எல்லாம் எதிர்கேள்வியே கேக்காம கடவுள்ங்கற அந்தக் கான்செப்ட்ட ஏத்துக்குவீங்க. ஆனா என்னால அப்படி முடில.
நம்ம கடமையை ஒழுங்கா செய்துட்டுப் போனா போதும். நம்மை நாமே நம்பினா மூனாவதா ஒரு வஸ்துவை எதற்கு நம்பனும்? கடவுள் தான் எல்லாம் அப்படின்னு, கடமையைக் கூடத் தூக்கி எறிஞ்சுட்டுச் சந்நியாசம் வாங்கிட்ட தாத்தாவால தான் இந்த மனநிலைக்கு வந்து இருப்பேன்னு நினைக்கிறேன். ப்ச்! இந்த டாப்பிக் எதுக்கு மாமா விடுங்க!”
இமைக்காமல் தனது மருமகளின் சொற்பொழிவைக் கேட்டவரின் முகத்தில் புன்னகை! வாகன நெரிசலில் காரை லாவகமாகச் செலுத்தி கொண்டிருந்தவளை தோளோடு சேர்த்து அணைத்தவாறு,
“உன்னோட இந்தத் தன்னபிக்கை தான்டா பெரிய விஷயம். குட் கீப் இட் அப்!”
“அது ஒரு பக்கம் இருக்கட்டும். அந்த வீணா போன எருமை மாடு எங்க? வீக் என்ட்ன்னா உடனே ஊரைச் சுத்த போய்டுமே!” கேட்டாள் அலட்டிகொள்ளாமல்!
“அடிக்கழுதை! வீணா போன எருமை மாடா? இப்போ பக்கத்துல இருக்கணும் அவன்…” என்று பெருங்குரலில் சிரித்தார்!
“பின்ன போன் பண்ணினா எடுக்கக் கூட முடியாது அந்தக் காட்டேரிக்கு! பிரெண்ட்ஸ் கிட்ட பேசணும்னா அவனுக்கு டைம் இருக்கும். இப்போ சுபி கிட்ட பேச டைம் இருக்கும். ஆனா நான் போன் பண்ணினா மட்டும் எடுக்கக் கூட முடியாது. பேய்! பிசாசு! ப்ரோக்ராம்க்கு வரச் சொல்லி இன்வைட் பண்ண தான் மாமா கூப்பிட்டேன். பக்கி எடுக்கவே இல்ல ஈவினிங்…” முகத்தைக் கடுப்பாக வைத்துக் கொண்டு மாமனிடம் பொரிந்தாள் அமிர்தா!
“மும்பைல இருக்கான்டா. கிளைன்ட் மீட்டிங்ன்னு சொன்னான். அதோட பிரெண்ட்ஸ பார்த்துட்டு சுபியையும் பார்த்துட்டு வரேன்னு தான் போனான். உன்ட்ட அவன் சொல்லலையா?” எரிகிற தீயில் எண்ணையை வார்த்தார் அவர்!
“நல்லா கிழிப்பானே. நம்மளை எல்லாம் சாருக்கு இப்போ கண்ணு தெரியுமா? வரட்டும்! எப்படியும் அத்தை சொத்தைன்னு வீட்டுப் பக்கம் வருவான்ல. அப்போ காப்பில உப்பு மிளகாய் போட்டுத் தரச் சொல்றேன் சேச்சிய!”
மிகவும் சீரியசாகச் சொல்லிக் கொண்டிருந்த மருமகளைப் பார்க்க வேடிக்கையாக இருந்தது,
“அம்மா தாயே மூகாம்பிகே! நீங்க ரெண்டு பேரும் எப்படியோ சண்டை போட்டுக்கங்க. நடுவுல எங்க யாரையும் இழுத்துடாதீங்க தங்கங்களா? ஆள விட்டுடும்மா…” இருவருக்கும் இடையில் சென்று அடிபட்டு மிதிபட்டு வந்த அனுபவத்தில் ஆரம்பத்திலேயே உஷாரானார்!
சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவருடைய செல்பேசி அழைத்தது. அவருக்கு எம்எம்எஸ் வந்திருப்பதை அறிவித்தது!






Heroine entry super