அத்தியாயம் 6
“யார் பேருக்கும்மா அர்ச்சனை?”
“ராஜசேகர் பரணி நக்ஷத்திரம்… சத்யப்ரகாஷ் மகம்… சுபர்ணா பூரம்… அமிர்தவர்ஷிணி சதயம்…” வரிசையாகச் சொல்லிக்கொண்டிருந்தார் பத்மினி! பெயர்களை அர்ச்சனைக்காக உச்சரித்தபடியே வாங்கிச் சென்றார் அர்ச்சகர்!
அந்தப் பின்மாலை பொழுதின் ஏகாந்தத்தில் குளுமையாக வீசிய கடற்கரை காற்றில் மனம் லயிக்கப் பெசன்ட் நகர் மகாலக்ஷ்மி கோயிலில் மனம் உருகி நின்றிருந்தார் அவர்!
“கடவுளே! பிசினெஸ் நஷ்டத்தைச் சேகர் எப்படியும் சமாளிச்சுடுவாங்க ஆனா எங்க சத்தி வாழ்க்கை நல்லபடியா நீ தான் அருள்புரியணும். எந்தத் தடங்களும் இல்லாம இந்தக் கல்யாணம் நல்லபடியா நடக்கணும். அமிர்தாவுக்கும் சீக்கிரம் ஒரு நல்ல வாழ்க்கை அமையனும்…” மனம் உருக பிராத்தித்தார்!
“எல்லாம் நல்லபடியா நடக்கும். சுபஸ்ய சீக்கிரம்…” என்றபடியே அர்ச்சகர் அர்ச்சனை தட்டைத் தர, பக்தியுடன் பெற்றுக் கொண்டார் பத்மினி!
நிர்மலமான மனதுடன் பிரகாரத்தைச் சுற்றினார். அவருடைய உலகம் இருவரால் மட்டுமே ஆனது! ராஜசேகர் மற்றும் சத்யன் மட்டுமே அவருடைய இயங்கு சக்திகள்! அதிலும் தன் மகன் எவ்வளவு தான் வளர்ந்து கொண்டே சென்றாலும் தன்னுடைய கையை எப்போதுமே விட்டுவிடக் கூடியவன் அல்ல என்பது அவர் அறிந்த உண்மை.
திருமண விஷயத்தில் கூடப் பெற்றோரின் முழுப் பொறுப்பிற்கு விட்டுவிட்டு அவர்களாகப் பார்த்து வைத்த சுபர்ணாவை சிறு குறை கூடச் சொல்லாமல் சிறு மன கிலேசமும் இல்லாமல் அவளை ஏற்க தயாராகி இருந்து இருந்தான். அப்படிப்பட்ட தன் மகனின் வாழ்க்கை நல்லபடியாக அமைய வேண்டுமே என்று மனம் தவித்தது!
பிரகாரத்தைச் சுற்றி விட்டு இறுதியாகக் கோயில் கோபுரத்தைச் சேவித்தார்! கோபுரத்தைப் பார்த்த அந்த விழிகளில் என்ன இருந்ததோ? அதை அந்தப் பரப்ரம்மம் மட்டுமே அறிய கூடும்! என்னுடைய மகனை உன்ட்ட ஒப்படைச்சுட்டேன். இனிமே அவனோட வாழ்க்கைய நீதான் பார்துக்கனும்மா என்று இறைஞ்சியதோ?
வெளியே இருந்த செருப்பை அணிந்தவர் ஆட்டோ இருக்கிறதா என்று தேடினார்! அவருடைய செல்பேசி அழைக்க, எடுத்துப் பார்த்தார்!
எம்எம்எஸ் சை திறந்தவர்… என்னவென்று பார்க்க…
பார்க்கப் பார்க்க… அவர் முகம் மாறியது! அருவருப்பான ஏதோ ஒரு மெசேஜ் என்று பைலை மூடப் போனவர் அதில் இருந்த பெண்ணின் முகத்தைப் பார்த்து அதிர்ந்தார்! நெஞ்சு படபடவென அடிக்க, முகம் வேர்க்க துவங்கியது. தலை சுற்ற தொடங்க உலகமே தட்டாமாலை சுற்றுவது போலப் பட்டது பத்மினிக்கு! இதயம் வெளியே எம்பி குதிப்பது போல உணர்ந்தார்!
அவரையும் அறியாமல் செல்பேசியைப் பார்த்துக் கொண்டு சாலையின் நடுப்பகுதிக்கு வந்து விட்டிருந்தார். இங்கும் அங்கும் போய் வந்து கொண்டிருக்கும் வாகனங்களோ ஹாரன் சப்தங்களோ அவரைச் சிறிதும் அசைக்க வில்லை! அடிவயிற்றிலிருந்து எழும்பிய கேவலை வாய் மூடி அடக்கியவருக்கு வாந்தி வரும் போல இருந்தது அந்தக் காட்சியைப் பார்த்ததில்! இதயப்பாகத்தில் சிறு வலியை உணர்ந்த பத்மினிக்குக் கண்கள் இருட்ட தொடங்கியது,
“சத்யா…” கதறியபடியே நெஞ்சை பிடித்த பத்மினியை மிக வேகமாக நெருங்கியது மணல் ஏற்றி வந்த அந்த டிப்பர் லாரி!






பத்மினி-க்கு ஒன்னும் ஆக கூடாது.