அத்தியாயம் 51
சுபர்ணாவின் முன் சென்று அமர்ந்தவனுக்கு என்ன சொல்லி அவளை அழைப்பது என்று முதலில் புரியவில்லை… ஏனென்றால் அவன் அவளைப் பெயர் சொல்லி அழைத்ததெல்லாம் அவன் மறக்க நினைத்த நினைவுகள்… ஆரம்பத்தில் திருமணம் பேசிய நிலையில் அவளை ஆசையாக அழைத்ததை அதன் பின் உண்மை அவனுக்குத் தெரிய வந்தபின் மறந்து வெறுத்து ஒதுக்கியவை ஆகின… அதன் பின் அவளை அழைத்த கணமெல்லாம் கசப்பான அனுபவங்கள் ஆகியதால் அவைகளை நினைத்துக் கூடப் பார்த்ததில்லை… இப்போது அவள் முன் அமர்ந்திருந்த அந்தக் கணத்தில் இந்தப் பெரும் குழப்பம் சூழ்ந்தது!
அவளை அழைக்க வாயெடுக்க… மெதுவாகக் கண்களைத் திறந்தவளின் முன் அமர்ந்திருந்தான் சத்யன்! அவனைப் பார்த்து மென்மையாகப் புன்னகைத்தாள்!
“வாங்க சத்யா…” இயல்பாக அவள் அழைக்க… அவளை இயல்பாகப் பார்க்க முடியாமல் நிலம் பார்த்தான் சத்யன்!
“சத்யமேவ ஜெயதே… ரைட்டா?” இதற்கு உண்டான இரண்டாவது பொருளில் அதாவது சத்யன் வெற்றியடைந்து விட்டான் என்ற பொருளில் ஒரே வார்த்தையில் அவனது நிலையை அவள் கூறிவிடச் சிலிர்த்து நிமிர்ந்தான்… என்ன பதில் கூறுவதென்றோ… எப்படி அழைப்பது என்றோ அப்போதும் புரியாமல் குழம்பினான்! வாய்த் திறவாமல் வெறுமனே தலையாட்டி ஆமோதித்தான்!
“என்ன சத்யா… பேச்சு வரலையா?” மென்மையான புன்னகையின் நடுவில் இயல்பாக அவள் கேட்க… அவனுக்கா பேச்சு வராது? அவனது பேச்சு தானே உன்னை இங்குக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது என்று விதி அவளைப் பார்த்துக் கேட்டது… அதற்கும் அவள் புன்னகைத்து கொண்டாள்,
“சுபர்ணா… கிளம்புங்க வீட்டுக்குப் போகலாம்?” ஒருவாறாக அவன் கூறி முடிக்க… மென்மையாக மறுத்தாள் சுபர்ணா,
“எந்த வீட்டுக்கு?”
“உங்க வீட்டுக்குத் தான்… நீங்கக் காணாம போனதுல இருந்து உங்க அப்பாக்கு உடம்பு சரியில்லைங்க சுபர்ணா…” காரணத்தை அவன் கூற,
“ரெண்டு வருஷமா என்னோட வீடு சரணாலயம் தான் சத்யா…”
“இல்லைங்க சுபர்ணா… உங்க அப்பாவ நினைச்சு பாருங்க… ப்ளீஸ் வாங்க…”
“இல்லை சத்யா… நான் தனிப்பட்ட யாருக்காகவும் நினைச்சு பார்க்கப் போறதில்லை…”
“அவர் பாவங்க சுபர்ணா…”
“அவரைப் பொறுத்தவரை… நடந்தது எல்லாமே கர்ம வினை தான் சத்யா… ஆனா நீங்க எனக்கு நல்ல வழிய காட்டியிருக்கீங்க… அந்தக் கர்ம வினைல இருந்து நான் தப்பிக்க எனக்கொரு மார்கத்தைக் காட்டியிருக்கீங்க… அதுக்கு உங்களுக்கு நான் நன்றி தான் சொல்லணும்…” அவள் மென்மையாகக் கூறியபோது அவனது நெஞ்சில் ஒரு வலி,
“உங்க அப்பாவோட நிம்மதி… சந்தோஷம்… எதிர்காலம் எல்லாமே நீங்கத் தான் சுபர்ணா… புரிஞ்சுக்கோங்க…” அவன் அவளை எப்படியாவது சம்மதிக்க வைத்துக் கூட்டி சென்று விடலாம் என்று பிரம்மப்ரயத்தனபட… அவளோ சிறிது கூட முகம் மாறாமல் மறுத்தாள்,
“சத்யா… நான் வெளிப்படையா சொல்லட்டா…” அவனிடம் அவள் கேட்க அவன் ஆமோதித்துத் தலையசைத்தான்!
“என் சந்தோஷத்தை எங்கங்கயோ தேடினேன்… லிக்கர்… ஸ்டஃப்… எக்ஸ்டசி… அன்ட் தென் செக்ஸ்… பைத்தியம் மாதிரி… ஆனா அதுலல்லாம் கிடைக்காத சந்தோஷம்… நிம்மதி… எனக்குச் சர்விஸ்ல கிடைக்குது… சர்விஸ் டூ மேன்கைன்ட் இஸ் சர்விஸ் டூ காட் இல்லையா… என்னோட எதிர்காலம் இனி இங்கதான் சத்யா…” அவளது மென்மையான ஆனால் உறுதியான முடிவு அவனை ஏதோ செய்தது,
“சுபர்ணா… எனக்குத் தான் நீங்கச் சங்கடத்தைக் கொடுக்கறீங்க… ப்ளீஸ் என்னோட வாங்க…” என்றவனை ஆதூரமாகப் பார்த்தாள் சுபர்ணா!
“சத்யா… நாலு தலைமுறைக்கு முன்னாடி வாழ்ந்தவங்க யாரையாச்சும் உங்களுக்குத் தெரியுமா?” சம்பந்தமே இல்லாமல் அவள் கேட்க,
“எதுக்கு இந்தக் கேள்வி?”
“சொல்லுங்க… ப்ளீஸ்…”
“எங்க கொள்ளு தாத்தா அவருக்கு முன்னாடி வாழ்ந்தவங்க பத்தி குறிப்பேடு இருக்கு… அதை வெச்சு தெரிஞ்சுக்கலாம்…”
“உங்களுக்குச் சரி… மத்தவங்களுக்கு? தெரியுமா?” என்று கேட்க… மறுப்பாகத் தலையசைத்தான்!
“எல்லார் மாதிரியும் பிறந்து… வளர்ந்து… வாழ்ந்து… கடைசியா சாகறவங்க சாதிக்கறது என்ன சத்யா? நாங்களும் இந்த உலகத்துல வாழ்தோங்கறதை தவிர? விட்டுட்டுப் போறது என்ன சுவடு? இதே காந்திய இன்னும் நாலு தலைமுறைக்கு அப்புறமும் மக்கள் அடையாளம் கண்டுக்குவாங்க… கட்டபொம்மன் இன்னும் பத்து தலைமுறைக்கு அப்புறமும் மக்களோட மனசுல இருப்பார்… காரணம் என்ன? தன்னலமே இல்லாத மக்கள் தொண்டு… அவங்களோட வாழ்க்கைய தியாகம் பண்ணிகிட்டாங்க… ஒரு குடும்பத்துக்காக ஒருத்தர் தியாகம் பண்ணலாம்… ஒரு ஊர் நல்லா இருக்க வேண்டி ஒரு குடும்பம் தியாகம் பண்ணலாம்… ஒரு நாடு நல்லா இருக்க வேண்டி ஒரு ஊரையே தியாகம் பண்ணலாம்… ஆப்டர் ஆல் நான் ஒருத்திதானே… அதுவும் என்னோட மனசாட்சிக்காக வேண்டி அந்த வாழ்க்கை வேண்டாம்ன்னு வந்தேன்… ஆனா இதையெல்லாம் தாண்டின ஒரு விஷயம் இருக்கு… அதான் கர்மா! கர்ம வினை இப்படி இருக்கும்போது நம்மளால ஒன்னும் பண்ண முடியாது சத்யா… அதுக்குத் தூண்டுகோளா நீங்க இருக்கணுங்கறதும் அதே கர்மவினை தான்…”
அவள் பேசி, தான் கேட்பதையே விரும்பாதவன்… இன்று அவள் முன் அமர்ந்து வாய்ப் பேசாமல் அவளது உபதேசத்தைக் கேட்டுக்கொண்டிருந்தான்! அவளிடம் இத்துணைத் தெளிவையும் அறிவையும் எதிர்பார்க்கவே இல்லை… வியப்பாக அவளைப் பார்க்க… அதற்கும் இளம் புன்னகை மலர்ந்தது… அவளது இதழ் கடையோரத்தில்!
“நான் இந்தப் பாதைய தேர்ந்தெடுத்ததும் என்னோட சுயநலமா கூட இருக்கலாம்… எனக்குச் சந்தோஷம் இதுல கிடைக்குதுங்கற சுயநலம்… என்னோட குறிக்கோள் எல்லாம் ஒன்னு தான்… அது மக்களுக்கு ஞானத்தைத் தேடி தர்றது கிடையாது… அறிவை தேட சொல்லித் தர்றதுதான்… ஒரு சீன பழமொழி இருக்கு சத்யா… ஒருவனுடைய பசிக்கு மீனைக் கொடுப்பதைக் காட்டிலும் மீன் பிடிக்கக் கத்துத் தர்றது தான் உசிதம்ன்னு… அதைத் தான் நான் நினைக்கறேன்… கல்வி… அதுதான் என்னோட குறிக்கோள்… அதுவும் முறையான கல்வி… சரியான கல்விய குழந்தைகளுக்குக் கத்து கொடுத்தா நம்ம சமூகத்துல மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வர முடியும்… அடுத்தத் தலைமுறை ரொம்ப முக்கியம் இல்லையா… பானிபட் போர் எப்போ நடந்துதுன்னு அவங்க தெரிஞ்சுக்கறதை விட முக்கியம் பசிச்சவனுக்கு உணவைக் கொடுக்கணும்ங்கறது… ஒழுக்கம்ன்னா என்னன்னு தெரிஞ்சுக்கறது… ஒரு புலி கிட்ட ஒரு மனுஷன் மாட்டினா அதை வீடியோ எடுக்கத் தயார இருக்க மக்களுக்கு அவனைக் காப்பத்த எந்த முயற்சியும் செய்யச் சொல்லித்தராத கல்விமுறை எதுக்கு? அந்த வால்யுவ சொல்லித் தராத கல்வி என் குழந்தைகளுக்கு வேணாம்… அந்த வால்யுவ எனக்கு யாராச்சும் சொல்லித் தந்திருந்தா நான் பாதை மாறியிருக்க மாட்டேன் இல்லையா சத்யா…” நீளமாகக் கூறிவிட்டுக் கடைசியாக அவனது மனதில் பட்டாசை கொளுத்தி போட்டாள் சுபர்ணா!
“இல்ல சுபர்ணா… ஒவ்வொருத்தர்க்கும் தனிப்பட்ட சுதந்திரம் இருக்கு… பர்சனல் ஸ்பேஸ் இருக்கு… அந்த ஸ்பேஸ்ல தேவை இல்லாம மூக்கை நுழைச்சது நான் தான்… அம்மா அப்பா இறந்தது அவங்க விதி… தேவை இல்லாம அதுக்கான கோபத்தை உங்க மேல ஏத்தி வெச்சு அதை வளர்த்துட்டு இருந்திருக்கக் கூடாது… அதுவும் இல்லாம நான் பேசின வார்த்தைகளும் அதிகம் தான்… அதை நினைச்சு இப்பொ ரொம்ப வருத்தப்படறேன்… அமிர்தா இதையேத்தான் கேட்பா… அந்தப் பொண்ணோட மனசை கொன்னுட்டு அந்தச் சமாதி மேல நீ உட்கார்ந்துட்டு இருக்கன்னு… அதை இப்போ உண்மையா உணர்றேன்ங்க சுபர்ணா…” மனம் உணர்ந்து அவன் கூற… அவளது புன்னகையின் அர்த்தத்தை அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை,
“அமிர்தா மாதிரியான பெண்கள் ரொம்ப ரேர் சத்யா…” மனதால் அங்கீகரித்து அவள் சிலாகிக்க… அதற்கு மெளனமாகத் தலையசைத்தான்!
“நீங்க வந்தா தான்… உங்களைப் பார்த்தா தான் கல்யாணம்ன்னு அமிர்தா சொல்லிட்டா சுபர்ணா…” தலையை ஒரு கையால் பிடித்தபடி அவன் கூற… பதில் கூறாமல் அவனையே கூர்மையாகப் பார்த்தாள் சுபர்ணா!
“ப்ளீஸ்… அந்த மாதிரி பார்க்காதீங்க… என்னோட சுயநலத்துக்காக உங்களைக் கூப்பிடறேன்னு நினைக்காதீங்க… உங்க அப்பாவும் பாவம்”துயரம் மேலோங்க அவன் கூற… அமைதியான குரலில் கூறினாள்,
“உங்க கல்யாணம் நடக்கும் சத்யா… கவலைப்படாதீங்க…”
“தேங்க்ஸ் சுபர்ணா…” என்று கூறி அவனையும் அறியாமல் வணங்கினான்… தலையைக் குனிந்து கைகளைக் குவித்து வணங்க… அவளது கரம் உயர்த்து அவனது சிரத்தில் பதிந்தது!
அதை மட்டுமே அவன் அறிந்தான்… அவளது கரம் சிரத்தில் பதிய… அவனது உலகம் சுழல துவங்கியது… கண்கள் இருளை சுவாசிக்கத் துவங்கின… ஏதுமற்ற சூனியத்தை நோக்கி எதுவோ அவனை இழுக்கத் துவங்கியது… அவனால் அந்த அனுபவத்தை ஏற்க முடியாமல் தத்தளித்தான்… தவித்தான்… தாயும் தந்தையும் அருகினில் வந்தனர்… அமிர்தா அவனைத் தாங்கினாள்… ஆனால் அவளது முகம் அவனால் தொட முடியாத தூரத்திற்குபோனது… ஏன் என்று யோசித்துக் கொண்டிருக்கும்போது சிவானந்தர் வந்தார்… நதிமூலம் ரிஷிமூலம் பார்க்காதே என்றார்… அவரது உருவத்தைத் தொடர்ந்து சுபர்ணா தெரிந்தாள் அவளது உருவம் மாறி சத்யானந்தரின் முகம் தென்பட்டது… இந்தக் குழப்பங்களிலிருந்து விடுபட அவன் விரும்பாமல் அவன் ஓட நினைக்க… எதுவோ இழுக்க… கண்களை விழித்தபோது சுபர்ணா முன் அமர்ந்திருந்த அவனுக்குச் சுபர்ணா வேறாகத் தெரிந்தாள்! அருகில் சிவானந்தர்!
அவனையும் அறியாமல் கண்களில் கண்ணீர் வழிந்தது!






😮🙏