arrow_back
பரமபதம் அத்தியாயம் 52
பரமபதம் chevron_right பகுதி 52 / 54

அத்தியாயம் 52

visibility 254
star படைப்பை ரேட் செய்யுங்கள்
சராசரி 3.8/5 (4 மதிப்பீடுகள்)
பகிர்

சமாதி முன் அமைதியாக அமர்ந்திருந்தவனைக் கண்களால் நிரப்பிகொண்டிருந்தாள் அமிர்தா… பார்த்து மூன்று நாட்கள் மட்டுமே ஆன போதிலும் மூன்று ஜென்மங்களைக் கடந்த உணர்வு… யாரிடமும் எதுவுமே சொல்லாமல் வல்லம் வந்து விட்டவனை அமிர்தாவும் அவர்களது நண்பர்களுமாகச் சென்னை மும்பை எங்கும் தேடி சலித்துப் போயிருந்தனர்… அமிர்தாவோ சத்யனை பார்க்காமல் உணவைக் கூட வெறுத்து ஒதுக்கி அழுகையில் கரைந்து கொண்டிருந்தாள்… யாருடைய சமாதானமும் எடுபடவில்லை… சாவித்ரிவிற்கு அமிர்தாவின் நிலை கவலையைத் தந்தது என்றால் சத்யனின் நிலையோ அவரை உலுக்கியிருந்தது,

அமிர்தாவோடு நிகில், விஷ்வா, அக்ஷிதா, தேவ் ஆகியோர் அமர்ந்திருக்கச் சென்னையில் சத்யனை தேடி அலைந்த ராகவனும் பரமேஸ்வரனும் சோர்ந்து போய் வந்தமர்ந்தனர்!

“அங்கிள் எதாச்சும் தகவல் தெரிஞ்சுதா?” பரமேஸ்வரனிடம் அக்ஷிதா சோகமாகக் கேட்க… அவர் இல்லையென்று உதட்டைப் பிதுக்கினார்… ராகவனைப் பார்த்தபடியே! அவன் ஏதாவது தகவலைக் கூறுவானா என்று அவர் பார்க்க… அவனது தலையும் இடம் வலமாக அசைந்தது,

“வேற எங்க தான் போயிருப்பான்?” ஆதங்கமாகக் கேட்ட தேவ்வை ஒரு நொடி நிமிர்ந்து பார்த்துவிட்டு முகத்தைக் குனிந்து கொண்டாள் அமிர்தா! அவளது மூளை வேலை நிறுத்தம் செய்திருந்தது,

அவளது முகத்தை ஆர்வமாகப் பார்க்கும் சத்யன்… அவளது மடியில் தலைசாய்த்துக் கொள்ளும் சத்யன்… உணவை உண்பதற்காகப் பிடிவாதம் பிடிக்கும் சத்யன்… தலைவலி அம்மு கொஞ்சம் பிடிச்சு விடேன் என்று அவளைத் தொல்லை செய்யும் சத்யன்… இடை வளைத்து முத்தம் கொடுக்க வந்து ஒரு முறை கூட முடிக்காமல் விட்ட சத்யன் என்று இரண்டு வருடங்களுக்கு முன்னர்த் தன்னிடம் அனைத்துமாக இருந்தவனை நினைத்து மனம் ஏங்கியது… இந்த இரண்டு வருடங்களில் இவை அத்தனையும் இல்லையென்றாலும் அவனது முகத்தைப் பார்த்துக் குரலைக் கேட்பது ஒன்றே போதும் என்ற நினைவில் அவள் இருந்தது மிகப்பெரிய தவறோ என்று மனதில் குமுற துவங்கி இருந்தாள்,

அவள் மட்டுமல்லாமல் அவளது அன்னையும் சேர்ந்து புலம்பத் துவங்கி இருந்தார்… அவரைப் பொறுத்தவரை அவன் ஆண்பிள்ளையாக இருந்தாலும் அன்புக்கு ஏங்குபவன் அவன் தான் என்பதும் அன்பு ஒன்றே அவனைக் கட்டி போடும் என்றும் அவருக்குத் தெரியாதது அல்ல… ஆனால் அமிர்தா அப்படி இல்லை… சிறிய வயது முதலே தந்தை இல்லாமல் தாயின் துணையும் தேவைப்படாமல் வளர்ந்த சுயம்பு… எந்த இடத்திலும் தனித்துத் தெரியவும் அவளுக்குத் தெரியும்… தனியே முடிவெடுக்கவும் முடியும்… அதனால் அவளைவிடச் சத்யனை பற்றி மட்டுமே சாவித்ரியின் கவலை இருந்தது எப்போதும்… அப்படிப்பட்டவனைத் தன் மகள் இரண்டு வருடமாக இப்படி அலைகழித்து இருக்கிறாள் என்று தெரிந்தபோது அவரது கோபம் அமிர்தாவை தீவிரமாகத் தாக்கியது… ஆனாலும் அவரை விடவும் மோசமான நிலையில் அவள் அழுது கரைவாள் என்று அவரே எண்ணவில்லை… காதல் ஒருவரின் இயல்பைக் கூட மாற்றி விடுகிறதே என்று மனதின் ஓரத்தில் நினைத்துக் கொண்டார்!

தேடி ஓடிச் சலித்தபோது சிவானந்தர் கூறிச் சென்றது சாவித்ரியின் காதில் ஒலித்தது,

“திருப்பதி மட்டுமில்ல சாவித்ரிம்மா… வல்லம் வந்தா கூட வாழ்க்கைல கண்டிப்பா திருப்பம் வரும்… நீங்க ஒரு தடவை குழந்தைகளை அழைச்சுட்டு வந்துதான் பாருங்களேன்”

அதற்க்கு தகுந்தார் போலச் சிவானந்தரும் அன்று அழைத்தார்… மனதில் பூச்சொரிய வைத்தார்!

“என்னம்மா சத்யாவ மட்டும் அனுப்பிட்டு நீங்கல்லாம் வர மாட்டேன்னு உட்கார்ந்துட்டு இருக்கீங்களா?” அவர் இப்படிக் கேட்டபோது சாவித்ரிவிற்கு மனம் தடதடத்தது!

“என்ன சுவாமிஜி சொல்றீங்க?”

“ஆமாம்மா… சத்யா தம்பி மட்டும் தானே இங்க வந்திருக்கு… உங்களையும் இங்க எதிர்பார்க்கறேன் சாவித்ரிம்மா…”

சப்தமே இல்லாமல் இடியை இறக்கியவிடம் என்ன சொல்லி நன்றியுரைப்பது என்று அவருக்குப் புரியவில்லை… அமிர்தாவிடம் சட்டென்று உரைக்க வாய் வரவில்லை… திக்கி திணறி ஒருவாறாகக் கூறி முடித்தபோது கேட்க அவள் அங்கு இல்லை… அவசரமாகத் தன்னைச் சரி செய்து கொண்டு வந்தவள்… அவளே காரை எடுக்க விரைந்தாள்… அவளது அன்னையை வரக் கூறிவிட்டு… முகம் என்றுமில்லாத தெளிவை பெற்றிருந்தது! இத்தனை அன்பையும் மனதில் வைத்துக் கொண்டு அலைகழித்து விட்டாயே என்று அவருக்கு அவளை இடிக்கத் தோன்றியது!

அமிர்தாவை சமாதானப்படுத்தி நிகிலையும் விஷ்வாவையும் உடனழைத்துக் கொண்டு அவசரமாகக் கிளம்பியபோது இரவு மணி எட்டாகியிருக்க இரவு வேளையில் தாங்களே ஓட்டுகிறோம் என்று நிகில் சாவியைப் பிடுங்கி கொண்டான்… அவளிருந்த பதட்டமும் அவளைக் கேள்வியின்றிச் சாவியை நிகிலிடம் கொடுக்க வைத்தது!

சரணாலயம் வந்து சேர்ந்தபோது விடிந்திருக்க… ஒரு பொட்டு தூக்கமில்லை இருவரின் கண்களிலும்! சிவானந்தரிடம் சத்யன் எங்கிருக்கிறான் என்பதை விசாரித்த நிகிலும் விஷ்வாவும் அமிர்தாவை சாவித்ரிவையும் தியான மண்டபம் அழைத்துச் செல்ல,

அங்குச் சத்யன் சலனமே இல்லாமல் தியானத்தில் இருந்தான்!

கண்களால் நிரப்பிக் கொண்டு… யாருடைய இடையூறும் இல்லாமல் இருவர் மட்டுமான உலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்தாள் அமிர்தா! சாவித்ரி அவனைக் கண்டுவிட்ட மகிழ்ச்சியில் அழைக்கப் போக… கையை நீட்டித் தடுத்தாள்… நிகிலையும் விஷ்வாவையும் கூட! அனைவரையும் தடுத்துவிட்டு அவனருகில் சென்றவள்… கால்கள் மடங்கித் தொய்ந்து அவன் முன்னரே சரிந்து அமர்ந்தாள்… கண்களில் கண்ணீர் வெள்ளம்… அதைத் துடைக்கவோ தடுக்கவோ யாரும் முனைய விரும்பாத தருணம்!

“ச… சத்யா…” அழுகையில் குரலும்கரைந்து வெளிப்பட… ஆழ்ந்த தியானத்திலிருந்து வெளிவந்தான்!

“அ… அம்மு…” திடீரென அவளைக் கண்ட அதிர்ச்சியில் வார்த்தைகள் திக்கின!

“சாரி சத்யா… சாரி… சாரி… சாரி…” அழுகையோடு அவள் அந்த ஒரு வார்த்தையைத் தவிர வேறொன்றையும் உச்சரிக்க விரும்பவில்லை… அவனோ ஒன்றும் புரியாமல் பார்த்தான்,

“என்னடி… இங்க என்ன பண்ணிட்டு இருக்க?” ஒன்றும் புரியாமல் அவன் கேட்க

கண்களில் நீரோடு சட்டென்று நிமிர்ந்து அவனைப் பார்த்தவள்,

“ம்ம்ம்… சுரக்காய்க்கு உப்பில்லையாம்… அதான் வாங்க வந்திருக்கேன்…” கோபம் கலந்து பழைய அமிர்தாவாய் கடுப்பாக,

“அதுக்குன்னு சென்னைல இருந்து வல்லத்துக்கா? இது டூ மச்சா இல்ல…” என்று அவன் சிரிக்க அவள் அழுகையை மறந்து அவனைக் கோபமாக நோக்கி

“யூ… யூ… யூ ஸ்டுபிட்… இடியட்… அறிவு இல்லையாடா உனக்கு… இப்படித்தான் சொல்லாம கொள்ளாம வருவியா? அங்க உன்னைக் காணாம நாங்கல்லாம் எப்படி இருப்போம்ன்னு கொஞ்சமாவது நினைச்சு பார்த்தியா?” கையை நீட்டித் திட்ட ஆரம்பிக்க… அவளது வெடிப்பை மெளனமாகச் சிரித்துக் கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர் மற்ற மூவரும்!

“ஏன்… அதுக்கு என்ன? வெளியூர் வர்றது என்ன புதுசா? இதுல என்ன இருக்கு?” அவனோ காரணம் புரியாமல் கேட்க

“அதுக்குன்னு வீட்ல சண்டை போட்டுட்டு… இப்படி நீ… காணோம்ன்னு… நாங்க பட்டபாடு கொஞ்ச நஞ்சமில்ல சத்தி…” சற்றுச் சப்தமாக அவனைத் திட்ட ஆரம்பித்து… குரல் சிறிது சிறிதாகத் தேய்ந்து கரைந்து… அழுகையில் அடைக்க… சத்யன் நிமிர்த்து அவளைக் கூர்மையாகப் பார்த்தான்… அவனது பார்வையின் பொருளை உணர்ந்தவள்,

“செத்துட்டேன்டா…” முகத்தை மூடிக் கொண்டு கதறி அழ… அவனோ உணர்ச்சியற்ற பார்வையோடு பேசாமல் அவளையே பார்த்திருந்தான்… அவள் கதறுவதை மெளனமாகப் பார்த்துக் கொண்டிருப்பவனைப் பார்க்கும்போது நிகிலுக்கும் விஷ்வாவுக்கும் பற்றிக் கொண்டு வந்தது… முன்னே வந்த விஷ்வா…

“என்ன சத்யா… இப்படிச் செய்யற? உன்னைக் காணோம்ன்னு வர்ஷ் எவ்வளவு கஷ்டபட்டா தெரியுமா? பட் யூ ஆர் சோ க்ருயல் சத்யா…” கோபமாகத் தன்னை நோக்கிக் கேள்வி எழுப்பியவனை மெளனமாகவே தொடர்ந்தான்… எதுவுமே பேசாமல் இருப்பதைக் கண்ட நிகில்,

“டோன்ட் ஆக்ட் டூ ஸ்மார்ட் சத்யா… திஸ் இஸ் டாம் நான்சென்ஸ் மேன்… இப் யூ ஆர் ஆங்ரி ஷோ இட் டு ஹெர்… பட் அப்ஸ்கொண்டிங்… டூ பேட்…” நிகிலும் அவனிடம் பொரிய… சாவித்ரி அவர்களை மெளனமாகப் பார்த்துக்கொண்டிருந்தார்… கண்களில் கண்ணீரோடு!

“அப்ஸ்கொண்டடட்… ஹூம் நிக்கி?” பின்னிய புருவத்தோடு புரியாமல் கேட்க,

“நீதான் சத்யா… நீ செய்ததுக்குப் பேர் என்ன?” அடக்கப்பட்ட கோபத்தோடு அவன் கேட்டான்,

“நான் யாரையும் விட்டுட்டு ஓடி வரலை… எனக்கு அதற்கான அவசியம் இல்ல… எனக்கு இங்க வரணும்ன்னு தோனுச்சு வந்தேன்… இதுக்கு எதுக்கு இவ்வளவு சீன்?” அவன் கேட்பதும் நியாயமாகவே இருக்க… என்ன சொல்வது என்று புரியாமல் அமிர்தாவை பார்த்தான் நிகில்!

“சொல்லிட்டு வந்திருக்கலாமே சத்யா… வர்ஷ் கிட்ட இன்பார்ம் பண்ணியிருந்தா அவ இந்த அளவு பயந்திருக்க மாட்டாளே…” விஷ்வா கேட்க

“எதுக்குச் சொல்லணும் விஷ்வா… மூச்சு முட்டிப் போய்… நிம்மதிய தேடி தான் வந்திருக்கேன்…” அவன் மனதில் இருப்பதைக் கொட்ட… அமிர்தா திடுக்கிட்டு நிமிர்ந்தாள்! விஷ்வா எதையோ கூற வாய்திறக்க அவனைக் கையமர்த்தினாள் அமிர்தா!

“உன்னோட நிம்மதி பறிபோக நான் தான் காரணமா சத்தி?” அவனுக்கு மிகவும் அருகில் வந்து கண்களில் வலியோடு அவனுக்கு மட்டுமே கேட்குமாறு அவள் கேட்ட பாங்கு அவனது நெஞ்சில் முள்ளைக் குத்தியது… அவனால் முழுவதும் அவளைக் காயப்படுத்த முடியவில்லை… முயலவில்லை! பதில் கூறாமல் மெளனமாக இருக்க… அவளே தொடர்ந்தாள்,

“என்னால குற்ற உணர்ச்சிய தாங்க முடியல சத்தி… சுபர்ணா வீட்டை விட்டுப் போனதுக்குக் காரணம் நீதானோங்கற குற்ற உணர்ச்சி… எப்படி இருந்தாலும் நீதானேடா நான்… அது உனக்குப் புரியலையா… ஆனா இப்போ சொல்றேன்… எனக்கு நீ மட்டும் போதும்… வேறெதுவும் வேணாம்…” கண்களில் கண்ணீர் வழிய அவனை நோக்கி உதடு துடிக்கக் கேட்க… அவனுக்கு அவளது மனநிலை புரிந்தது… அவனுக்குமாகச் சேர்ந்து அவள் குற்ற உணர்ச்சியை அனுபவித்து வந்திருக்கிறாள்… அவளை உணர்ந்த அந்தக் கணத்தில் மனம் லேசாகியது! அதுவும் அவளது வாய் வார்த்தைகளால் கேட்டபோது அவனது மனம் பஞ்சாகப் பறந்தது!

“ஹே பப்ளிமாஸ்…” இன்னும் பக்கத்தில் வந்தவன் பொது இடத்தைக் கருதி அதுவும் தியான மண்டபம் என்பதைக் கருத்தில் கொண்டு… அவளைத் தோளோடு இறுக்கமாகச் சேர்த்து பிடித்தவன்,

“சரி… உனக்கொரு சர்ப்ரைஸ் காட்டட்டா?” அடக்கப்பட்ட புன்னகையோடு அவன் கேட்க

“சர்ப்ரைஸா… என்னது?” புரியாமல் அவள் கேட்க… அதுவரை அவனை மட்டுமே கவனித்துக் கொண்டிருந்தவளை அழைத்துக் கொண்டு அந்தத் தியான மண்டபத்தின் இன்னொரு மூலையில் அமர்ந்திருந்த அவளைக் காட்டினான்,

ஒரு நொடி இதயம் லயம் தப்பித்துடிக்க… கண்கள் இமைக்க மறந்தன அமிர்தாவிற்கு! அமைதியான முகத்தோடு வாத்சல்யமான புன்னகையோடு சுபர்ணா… சற்றுத் தொலைவில் அவர்களையே பார்த்தவாறு!

“சுபி…!”

அவளுக்குப் பேச்சே வரவில்லை… இப்படித் திடீரென அதுவும் ஆஸ்ரமத்தில் இந்தத் தோற்றத்தில் பார்ப்போம் எனச் சற்றும் எண்ணவில்லை அவள்! சத்யனை திரும்பிப் பார்க்க அவனும் அதே புன்னகையுடன் அமிர்தாவை பார்த்துப் புருவத்தை ஏற்ற அந்தச் செய்கையையும் அவளால் நம்ப முடியவில்லை… சுபர்ணா அமிர்தாவை பார்த்துக் கண்களால் வாவென அழைக்க… கால்கள் பின்ன அவளருகே சென்றாள்!

“என்ன அம்மு எப்படிடா இருக்க?” வயதில் மூத்தவளாக வாஞ்சையுடன் சுபர்ணா கேட்ட கேள்வி அமிர்தாவின் காதுகளில் விழுந்தால் தானே!

“ஏன் சுபி இப்படிச் செய்த?” அவள் முன்பு மண்டியிட்டு அமர்ந்து அமிர்தா கேட்க

“தேடல் அம்மு…”

“அதுக்காக இங்க என்ன சுபி பண்ற?” சுற்றி பார்த்துக் கொண்டே அவள் கேட்க… சுபர்ணாவோ சிறு புன்னகையோடு,

“எதுல சந்தோஷம்ன்னு தேடிகிட்டே இருந்தேன்… என் வாழ்க்கைல அந்தத் தேடல் இங்க வந்து முடிஞ்சுது! சித்தார்த்தனுக்குச் சுகத்தை மட்டுமே வாழ்க்கை காட்டியிருந்தா நமக்கு ஒரு புத்தர் கிடைச்சுருக்க மாட்டார் இல்லையா… வாழ்க்கையோட கஷ்டங்களைப் பார்த்தப்போ நான் ஏறிகிட்டே போன ஏணி எனக்கு உதவலை… வாழ்க்கைங்கறது ஒரு பரமபதம் தானே அமிர்தா? ஏணியும் பாம்புமா… எனக்கான விடுதலை சேவைன்னு நான் உணர்ந்தப்போ எனக்காக நான் வாழற ஆசை எனக்குப் போய்டுச்சுப்பா…”

“ஆனா அப்பாவ நினைச்சு பாரு சுபர்ணா… அவர் ரொம்பவே நொந்து போயிருக்கார்ப்பா… பாவம் இல்லையா அவர்… அவருக்கு இருக்க ஒரே ஊன்றுகோல் நீ தானே சுபி?”

“கடல்ல நதி கலந்து போய்ட்டதுக்கு அப்புறம் அதோட பயணத்தை மறு ஆய்வுக்கு உட்படுத்த முடியாது அமிர்தா… அவரோட எதிர்காலமும் சேவையா இருந்தா எல்லாருக்கும் சந்தோஷம் தானே…”

சுபர்ணாவிடம் வாதம் புரிவது இனி ஆகாது என்று புரிந்தது அமிர்தாவுக்கு… அப்போது கண்ட தெளிவில்லாத வாழ்கையின் வரைமுறை புரியாத பெண்ணில்லை என்பதை மட்டும் உணர்ந்து கொண்டாள்!

“ஆனா சுபி…” என்று அமிர்தா ஆரம்பிக்க அவளைக் கையமர்த்தி

“என்னைப் பத்தி கவலைப்படுறதை இன்னைக்கோட விட்டுடு அம்மு… சத்யாவ நினைச்சு பாரு… உங்க ரெண்டு பேருக்கும் மிக அழகான வாழ்க்கை இருக்கு… அதை இன்னும் அழகாக்க என்ன செய்யலாம்ன்னு யோசி… வாழ்க்கைய முழுக்க வாழ்ந்து கடமையெல்லாம் முடிச்சுட்டு எப்படியும் நீங்க ரெண்டு பேருமே இங்க தான் வருவீங்க… அப்போ மீதி கேள்விக்கெல்லாம் பதில் சொல்றேன்… ஓகே வா…”

“ஓகே…” அமிர்தா கூறும்போதே அவளுக்குக் கண்ணீர் கோர்த்தது… துக்கத்தில் அல்ல… ஆனந்தத்தில்… மனதை அழுத்திக் கொண்டிருந்த எவ்வளவோ சுமைகள் நொடியில் விடுபட்ட ஆனந்தம்! சுபர்ணாவிடம் கை கொடுக்க… அதை எடுத்துக் கொண்ட சுபர்ணா வாத்சல்யத்தோடு அணைத்து கொண்டாள்!

“தேங்க்ஸ் சுபி… உனக்குத் தெரியாது… இன்னைக்கு எனக்கு எவ்வளவு பெரிய விடுதலைய குடுத்து இருக்கன்னு…” கண்ணீரோடு கூறிய அமிர்தாவின் முதுகை தடவி கொடுத்தாள்!

அடுத்த அத்தியாயம்

அத்தியாயம் 53

“ஏய் எங்க தப்பிச்சு போற... அத்தைக்கிட்ட நீயே சொல்லு...” தப்பித்துப் போக முயன்றவளை கைபிடித்துக் கொண்டு குறும்பாகச் சத்யன் கேட்க “என்ன சொல்றது...” வேறு புறம் திரும்பிக் கொண்டு அவனைப் பாராமல் கேட்க... அவளது முகத்தைத் தன் புறம் திருப்பியவன்... ஒரு…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

உங்கள் கருத்தைப் பகிருங்கள்