arrow_back
பரமபதம் அத்தியாயம் 8
பரமபதம் chevron_right பகுதி 8 / 54

அத்தியாயம் 8

visibility 280
star படைப்பை ரேட் செய்யுங்கள்
சராசரி 4.6/5 (9 மதிப்பீடுகள்)
பகிர்

“எல்லாரும் தள்ளுங்க. தள்ளுங்க… இடத்தைக் காலி பண்ணுய்யா…” சுற்றிலும் நின்றிருந்தவர்களை விரட்டிக் கொண்டிருந்தனர் போலீசார். மிக வேகத்துடன் வந்து நின்ற காரைப் பார்த்தவுடன் புரிந்தது அந்தச் சப் இன்ஸ்பெக்டருக்கு!

“ஒரு நிமிஷம் மாமா. அத்தை எங்க இருக்காங்கன்னு விசாரிச்சுட்டு வந்துர்றேன். நீங்க இங்கயே இருங்க…” ராஜசேகரிடம் அவசரமாக மொழிந்து விட்டுப் போலீசாரை நோக்கிக் கிட்டத்தட்ட ஓடினாள் அமிர்தா. அந்த எதிர்பட்ட சாலையில் வாகன போக்குவரத்துத் தடை செய்யப்பட்டு மாற்றி விடப்பட்டுக் கொண்டிருப்பதை அப்போதான் கவனித்தாள்!

“சார்… என்னாச்சு?” சப் இன்ஸ்பெக்டரிடம் கேட்க,

“ஹிட் அன்ட் ரன் கேஸ் மேடம்… ஆனா தப்பு அம்மா பேர்ல தான்…”

“வாட்?”

“ஆமா மேடம். செல்போனைபார்த்துட்டே வந்து இருக்காங்க. நெஞ்சை பிடிச்சுட்டு கீழே விழுந்துட்டாங்களாம். அப்போ வந்த லாரில மாட்டிட்டாங்க. அவன் ஓடிட்டான்.”

அந்த மணல் லாரியைக் காட்டி அவர் கூற, இந்த எமனிடம் மாட்டினால் எந்த அளவு உடல் மிஞ்சும் என்று உள்ளே பதறினாள்!

“சார்… பாடியை நான் பார்க்கணும். மாமாவ கூப்பிட்டா சரி வராது.”

“பார்க்கற அளவு இல்ல மேடம்…” அவர் தயங்க,

“என்ன சார் சொல்றீங்க?” அவளுடைய இதயம் உச்சபட்ச அதிர்ச்சியில் துடிக்கக் குரல் வெளிவர மறுத்தது!

அவளை அழைத்துச் சென்று அந்த இடத்தைக் காட்டி அடையாளம் கூற சொன்னார். அவர் சொன்ன இடத்தில் பார்த்தவளுக்குத் தென்பட்டது உருக்குலைந்து போன உடலும் மிச்சமிருந்த கால்களும் மட்டுமே! கால் விரல்களில் அவள் எப்போதும் பார்த்து ரசிக்கும் முத்து பதித்த மெட்டியுடன் போன திருமண நாளிற்காக ராஜசேகர் பரிசளித்து இருந்த கொலுசு. அவை மட்டும் உருக்குலையாமல்!

உடல் நடுங்க வயிற்றிலிருந்து எழுந்த கேவலை அடக்க வாயை கை கொண்டு பொத்தினாள் அந்தப் பேதை! ஆனாலும் இந்த நிலையினைப் பார்க்கும் கல் நெஞ்சமானாலும் தாங்கவியலாதே!

“ஐயோ அத்தை…” கதறிக் கொண்டு கீழே விழுந்தாள்!

“என்னால முடியலையே! இந்த நிலைமைலையா உங்களைப் பார்க்கணும்த்த. அத்தை வேணாம். வந்துடுங்க… வாங்கத்தை…” முகத்தில் அறைந்து கொண்டு அவள் கதற,

ஆற்றவும் முடியாமல் தேற்றவும் முடியாமல் அந்தச் சப் இன்ஸ்பெக்டர் விழித்தார்!

“மேடம்! நீங்க அடையாளம் பார்த்துச் சொல்லீட்டீங்கன்னா… ப்ரோசீஜர முடிச்சு ஜி எச் எடுத்துட்டுப் போய்டலாம் மேடம்…” அவள் பக்கத்தில் அமர்ந்து அவர் கூற,

“ஐயோ! இது என் அத்தை தான். என் அத்தை தான். நான் என்ன செய்வேன்? ஐயோ!” மீண்டும் மீண்டும் முகத்தில் அறைந்து கொண்டு கதறியவளை எங்கனம் சமாதானப்படுத்துவது?

“அப்படீன்னா அட்டாப்சிக்கு அனுப்பிடறேன் மேடம்…”

“சார்… அத்தை என்ன மிச்சம் இருக்காங்கன்னு அட்டாப்சி பண்ண போறீங்க? எங்க அத்தையைப் பார்த்து இருக்கீங்களா சார்? மஞ்சளும் குங்குமமுமா அவ்ளோ அழகா இருப்பாங்க… அவங்க எங்க சார்? அவங்க எங்க? வெறும் காலைக் காட்டி அட்டாப்சி பண்ணறேன்னு சொல்றீங்களே… எப்படிச் சார்? எங்க மாமாவுக்கு நான் எப்படி இதுதான் அத்தைன்னு காட்டுவேன்…” கதறிக் கொண்டு இருந்தவளுக்குச் சட்டென்று ராஜசேகரின் நினைவு வந்தது!

“ஐயோ மாமா…” அவசரம் அவசரமாக முகத்தைத் துடைத்துக் கொண்டு காரை நோக்கி ஓடினாள்!

ராஜசேகர் அமர்ந்து இருந்த இருக்கை காலியாக இருக்க,

“சார் இங்க இருந்தவரை பார்த்தீங்களா…”

“கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தானே இந்தப் பக்கமா நடந்து போனாரு. முகம் கூடப் பேயறஞ்ச மாதிரி இருந்துச்சும்மா…” வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர் அலட்டாமல் கூறினார்! அவர் காட்டிய பாதை கடலை நோக்கிப் போனது,

“ஐயோ மாமா! எப்படி உங்க முகத்த பார்த்துப் பேசப் போறேன்?” அவரைக் காணாமல் தவித்தாள்! வேடிக்கை பார்க்க வந்தவர்கள் வேடிக்கை மட்டுமே பார்ப்பேன் என்று பிடிவாதமாக இருக்க என்ன மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம் நாம் என்று கசப்பாக இருந்தது. மிருகங்களுக்கு இருக்கும் உதவி மனப்பான்மை கூட ஆறறிவு இருப்பதாககூறிகொள்ளும் மனிதர்களிடையே இல்லையே! ஆனாலும் கோபத்தையோ வெறுப்பையோ காட்டும் சமயம் இதுவல்ல. மாமாவை முதலில் கண்டுபிடிக்க வேண்டும். ஒரு வேளை அத்தையின் உடலைப் பார்த்து இருப்பாரோ?

மனதில் ஏதேதோ ஓடத் திரும்பவும் போலீசாரிடம் ஓடினாள். அத்தையை ஆம்புலன்சில் அனுப்பி வைக்க வேண்டுமே! அவரது உடல் கண்ணில் மீண்டும் பட,

“அத்தை…” மீண்டும் கதறினாள்!

“மேடம்! இதுல சைன் பண்ணுங்க…” ஒரு பார்மை அவர் வந்து அவளிடம் நீட்டினார்! பொங்கி வந்த அழுகையை அடக்கியபடி மேலோட்டமாகப் பார்த்துக் கையப்பமிட்டாள்! அத்தையின் மிச்சங்கள் ஆம்புலன்சில் ஏற்றப்பட்டுப் பொது மருத்துவமனையை நோக்கித் தனது இறுதி பயணத்தைத் துவங்கியது!

அடக்க முடியாத அழுகை வெடிக்க அதை வெகுவாக அடக்கி,

“சார்! கார்ல உட்கார்ந்து இருந்த மாமாவைக் காணோம். ப்ளீஸ் கொஞ்சம் ஹெல் பண்ணுங்க. ப்ளீஸ்…”

“அட கடவுளே! எங்கம்மா போனார் அவரு?”

“அங்க இருந்தவங்க கிட்ட கேட்டேன். பீச்சை நோக்கிப் போனதா சொல்றாங்க. எனக்கு இங்க பார்க்கறதா இல்ல அங்க பார்க்கறதான்னு தெரியலை. கொஞ்சம் மாமாவ தேட சொல்லுங்க சார்! அவரை நினைச்சா இன்னும் பயமா இருக்கு.” பேசிக் கொண்டிருக்கும் போதே அழுகை மீண்டும் வெடிக்க முகத்தை மூடிக் கொண்டு கேவினாள்!

இரண்டு காவலர்கள் அவரைத் தேட அமிர்தாவும் சப்இன்ஸ்பெக்டரும் இன்னொரு பக்கம் ராஜசேகரை தேடி கிளம்பினார்கள்!

“ஏம்மா! இவங்களுக்குப் பையன் பொண்ணெல்லாம் இல்லையா?” என்று அவர் கேட்டபோதுதான் மீதும் சத்யனின் நினைவு வந்தது!

“இருக்காங்க சார். ஒரே ஒரு பையன்! மும்பைக்குப் போயிருக்கார். அவரைக் காண்டாக்ட் பண்ண முடியலை.” தன்னுடைய செல்பேசியை எங்கே வைத்தோம் என்று யோசித்தாள்! அவனை மீண்டும் அழைக்க வேண்டுமே! எப்படியாவது!

கார் டேஷ்போர்ட்…

“ஒரு நிமிஷம் சார்… இதோ வந்துடறேன்…” காரை நோக்கி ஓடினாள் அமிர்தா!

அவசரமாகக் காரைத் திறந்தவளை ராஜசேகர் அமர்ந்து இருந்த இருக்கையில் இருந்த அவளது செல்பேசி வரவேற்றது,

எடுத்துப் பார்த்தாள்.

இரண்டு நிமிட வாய்ஸ் ரெகார்டிங் முடிந்து இருப்பதைக் காட்டியது செல்பேசி! துரிதமாக எடுத்துக் கொண்டு கதவை மூடியவள் சப் இன்ஸ்பெக்டரை நோக்கி ஓடினாள்!

அவருடைய முகத்தை ஒரு முறையாவது பார்த்து விட மாட்டோமா என்று தவிப்பாக உணர்ந்தாள். தன் தாய்க்கு இன்னமும் சொல்லாமல் இருப்பது அப்போதுதான் நினைவுக்கு வந்தது! சாவித்திரி உடன் இருந்தாலாவது தேவலாம் என்று போலத் தோன்ற,

தனது தாயை அழைத்து,

“அம்மா… என்ன பண்ணிட்டு இருக்க?”

“ஏன்டா அம்மு? இப்போ தான் டெலிவரி முடிஞ்சுது. ராகவிக்குப் பெண் குழந்தை. வீட்டுக்கு வந்துட்டேன்டா”

ஒரு ஜனனம்… ஒரு மரணம்… இயற்கையின் வினோத விளையாட்டை நினைத்து மனம் கசங்கினாள் அமிர்தா. கூட்டுக்குள் இருக்கும் வரை மட்டுமே இந்த உடலுக்குப் பலவிதமான பெயர்கள். கூட்டை விட்டு உயிர் பறந்து விட்டால் ஒரே பெயர் மட்டுமே!

பிணம்!

ஒரு உயிரின் வரவுக்காகச் சந்தோஷப்படுவதா இல்லை இறந்து விட்ட அத்தையை நினைத்து அழுவதா அல்லது காணமல் போன மாமனை தேடுவதா? சத்யனுக்கும் அழைக்க முடியவில்லை. அமிர்தாவிற்குப் பைத்தியம் பிடிக்கும் போல இருந்தது. யாருடைய தோளிலாவது சாய்ந்து கதற மாட்டோமா என்று இருந்தது. தனது உணர்வுகளைக் கட்டுபடுத்திக் கொண்டு சாவித்ரியிடம் பேசினாள்!

“அம்மா… கொஞ்சம் பெசன்ட் நகர் அஷ்டலக்ஷ்மி கோயில் வர்றீங்களா? கூட வாட்ச்மேனையும் மேனேஜர் சங்கரலிங்கம் சாரையும் கூட்டிட்டு வாங்க…” துணை அவசியம் என்பதை உணர்த்து கூறினாள்!

“ஏன் கண்ணா? என்ன விஷயம்?”

“இல்லம்மா பத்மினி அத்தை…”

“அத்தைக்கு என்னாச்சு?” அவசரமாகக் கேட்டார் சாவித்திரி!

“பத்மினி அத்தை இஸ் நோ மோர் மா. ஆக்சிடென்ட்…” முடிந்தவரையில் சமன்படுத்திக் கொண்டு சொன்னாலும் அழுகை வெடித்தது.

“ஐயோ கடவுளே…” அதிர்ச்சியில் அவர் உறைந்தது தெரிந்தது!

“அஷ்டலக்ஷ்மி கோயில் முன்னாடி வாம்மா. கண்டிப்பா ரெண்டு பேரைக் கூட்டிகிட்டு வா…” அத்தை இறந்ததை மட்டுமே கூறியவள் ராஜசேகரை பற்றிக் கூறவில்லை. ஒரே நேரத்தில் பல அதிர்சிகளைத் தாங்கவியலாதே!

“உடனே புறப்படறேன் அம்மு. நீமாமா கூடத்தானே இருக்க…” ஐயோ இந்தக் கேள்வி வந்துவிட்டதே என்று தவித்தவள்,

“ஆமாம்மா… கூடத்தான் இருக்கேன். கூடவேத்தான் இருக்கேன்…” அழுகையைக் கட்டுபடுத்த முடியாமல் போகும் போல இருக்கத் தன்னை இறுக்கி பிடித்துச் சமாதானம் செய்தாள்!

“மாமாவ பார்த்துக்கடா… நான் வந்துடறேன்…”

அழைப்பைத் துண்டித்து விட்டவளின் பார்வையில் பட்டது அந்த ரெக்கார்டிங். சப் இன்ஸ்பெக்டர் அருகே வந்துகொண்டிருந்தார்!

ரெக்கார்டிங்கை ப்ளே செய்தாள்.

ராஜசேகர் தான் பேசி இருந்தார்!

“சத்திம்மா, வர்ஷினி குட்டி… நான் போறேன். என்னதான் சமாதானம் சொன்னாலும் அவ இல்லாத உலகத்துல எனக்கு வேலை இல்ல. எதைப் பத்தியும் நினைக்க என்னால முடியல. அவ சந்தோஷமா சிரிச்சுட்டு இருந்த முகத்தையே கடைசியா பார்த்ததா நினைச்சுக்கறேன். அவளை என்னால அப்படிப் பார்க்க முடியாது. சத்யாவ பார்த்துக்கோ குட்டி. நீ இருக்கடா… நீ இருக்க… நீ இருக்க…”

ஒருநிமிடம் ஒன்றுமே புரியாமல் பார்த்தவள் கடற்கரை மணலில் மடிந்து அமர்ந்து கதற ஆரம்பித்தாள்!

“ஐயோ மாமா…” முகத்தில் அறைந்து கொண்டு அவள் கதற கீழே விழுந்த செல்பேசியை எடுத்து அவரும் ப்ளே செய்து கேட்டார்!

ஆக முடிந்துவிட்டது!

“சார்… பாடிய கண்டுபிடிச்சாச்சு சார். பசங்க நாலு பேர் ஹெல் பண்ணாங்க. கரைக்குத் தூக்கிட்டு வந்தாச்சு…”

அந்தக் காவலர் சப் இன்ஸ்பெக்டரிடம் கூறினார். அவளது கதறல் இன்னும் அதிகமானது!

“மேடம்! ப்ளீஸ் கண்ட்ரோல் யுவர்செல்ப். ப்ளீஸ்”

“சார் எப்படிச் சார்? என்னால முடியல. எப்படிச் சார் கண்ட்ரோல் பண்ணுவேன்? எங்க சத்திக்கு என்ன பதில் சொல்லுவேன்? அம்மாவை எப்படிப் பார்ப்பேன்? அம்மா இப்போ கூடச் சொன்னாங்களே. மாமா கூடவே இருன்னு. ஏமாந்துட்டேனே! ஏமாந்துட்டேனே!” தலையில் அடித்துக் கொண்டு அவள் கதறிக் கொண்டிருக்க,

அவள் கொஞ்சம் சமாதானம் ஆகட்டும் என்று பார்த்தவர், “மேடம்! பார்த்துக் கொஞ்சம் அடையாளம் சொல்லிட்டீங்கன்னா… ப்ரோசீஜரை முடிச்சு ஜிஎச் அனுப்பிடுவேன்!”

அவருடன் சென்று உடலைப் பார்த்தவளுக்கு மயக்கம் வரும் போல இருந்தது. மாலை முதல் தன்னுடனே சிரித்துப் பேசிக் கொண்டிருந்த மாமாவா இவர்?

“அடிக்கழுதை… வாலுகுட்டி… குட்டிம்மா… ஜம்முன்னு இருக்கே செல்லம்…” அவர் செல்லமாகக் கூறியதெல்லாம் செவிப்பறையில் அறைந்தது!

“மாமா ஆஆஆ…” பக்கத்தில் சரிந்து அழுகையில் வெடித்தாள்!

அதன் பின்னர் ஒன்றன் பின் ஒன்றாக நடந்தேற கதறலும் சமன்படுதலுமாக மாமனை இறுதி பயணத்திற்கு வழியனுப்பி வைத்தாள்! சத்யனை அழைத்தால் இன்னமும் நாட் ரீச்சபிள் மெசேஜ் தான் கிடைத்தது!

சட்டென்று அவன் மும்பையில் சுபியையும் நண்பர்களையும் பார்க்கச் சென்றதாக ராஜசேகர் கூறியது காதில் ஒலித்தது! சுபியை அழைத்தாள்.

ரிங் போய்க் கடைசி நேரத்தில் எடுத்தாள்!

“ஹலோ… ஹலோ…” அமிர்தா பதட்டமாக அழைக்க,

“ம்ம்ம்ம்… ஷோல்லு… இயாஹ்… ஹூ… ல்இஸ்… திஸ்ஸ்ஸ்ஸ்…” குளறலாக வெளிவந்தது வார்த்தைகள்.

“சுபி… சத்யா எங்க?”

“ல் ஹூ ஆர் யூ? ஹூ இஸ் சத்யாஆஆ?” மது போதையில் இருக்கிறாள் என்று அமிர்தாவிற்குத் தெளிவானது! இவள் என்ன பெண் என்று தலையில் அடித்துக் கொள்ளலாம் போல இருக்க… சட்டென்று அழைப்பைத் துண்டித்து விட்டு சத்யாவின் நண்பன் நிகிலுக்கு அழைத்தாள். இரண்டு ரிங்கில் எடுத்தவன்,

“சொல்லுடா வர்ஷ்…”

“நிக்கி… அவன் உன் பக்கத்துல இருக்கானா?”

“சத்யாவா வர்ஷ்?” நிகில் தடுமாறினான்! ஆரம்பத்தில் அவன் காட்டிய உணர்ச்சி வெளிப்பாடு இறுகி அப்போது அதீத கோபத்தில் உறுமிக்கொண்டிருந்தான்.

“அவன் கிட்ட கொடு நிக்கி…”

“காலைல பேசேன் வர்ஷ்… ப்ளீஸ்…” அவள் பேசினால் இன்னும் கோபத்தில் என்னவெல்லாம் பேசுவானோ என்று நிகில் தயங்க,

“நிக்கி…” குரல் வரவழைக்கப்பட்ட அமைதியோடு உச்சபட்ச கோபத்தில் இருப்பது புரிந்தது அவனுக்கு. மேலும் பேசாமல் சத்யனிடம் செல்பேசியை அளித்தான். செல்பேசியை முகத்தைச் சுளித்துக் கொண்டு வாங்கியவன்,

“ம்ம்ம்… சொல்லு”

“இப்போ ரெண்டு அம்பத்தியஞ்சுக்குப் பிளைட். உடனே புறப்பட்டு வா சத்தி…”

“உன் இஷ்டத்துக்கு எல்லாம் வர முடியாது. மூடிட்டுப் போனை வை…” யார் கிடைத்தாலும் கிழித்துத் தொங்கவிடும் கோபத்தில் இருந்தான்,

“சத்திம்மா…” அவளது குரல் உள்ளே சென்று தழுதழுத்தது! ஒரே நொடியில் குளிர்ந்து போனான். அவனது கோபத்தை அவள் ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை என்பது சத்யனுக்குப் புரிந்தது. அத்தனை கோபமும் வடிய… எவளோ ஒருத்திக்காக ஏன் இப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று தோன்ற… மனதில் மென்மை வந்து சேர்ந்தது. மூச்சை இழுத்து வெளியேற்றியவன்,

“சொல்லுடா அம்மு…” என்றான் இயல்பான பாசத்தோடு!

“கொஞ்சம் சீக்கிரம் கிளம்பி வாம்மா… ப்ளீஸ்…”

“என்ன விஷயம் அம்மு?” அப்போதுதான் தனது செல்பேசியைக் கீழே எறிந்து உடைத்தது நினைவுக்கு வந்தது!

“அத்தம்மாவுக்கு…” தடுமாறினாள். தனது தாய் வேறு இன்னும் வந்து சேரவில்லையே… உடன் இருந்து இருந்தாலாவது அவரை வைத்துக் கூற செய்திருக்கலாம். தனது பரிதாபமான நிலையினை எண்ணி மனம் சோர்ந்தது!

“அம்மாவுக்கு… அம்மாவுக்கு என்னாச்சு?” கோபம் போய்ப் பதற்றம் தொற்றியது!

“ஒன்னும் இல்ல… கொஞ்சம் உடம்பு சரி இல்ல. ஹாஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணி இருக்கோம். கொஞ்சம் சீக்கிரம் வா சத்தி…” வெகுகவனமாக எச்சரிக்கையாக வார்த்தைகளை எண்ணி எண்ணி பேசினாள்!

“ஏய்… என்னாச்சு? உண்மைய சொல்லு அம்மு… எனிதிங் சீரியஸ்?”

“ம்ம்ம்… கொஞ்சம்… நான் பார்த்துக்கறேன். நீ புறப்பட்டு வா…” இயல்பான குரலில் கூற வெகுவாகப் பிரயத்தனபட்டு போனாள்!

“பார்த்துக்க அம்மு ப்ளீஸ். நான் உடனே புறப்பட்டு வந்துடறேன்…” என்று கூறி தொடர்பைத் துண்டித்தவனது மனம் பாறாங்கல்லாய் அழுத்தியது!

என்னவாயிற்றோ என்ற கலக்கம் மிகுந்தது!

அடுத்த அத்தியாயம்

அத்தியாயம் 9

பத்ம விலாசம். காலை மணி பத்து! இருவரது உடலும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டதால் வெள்ளை துணி முழுவதுமாகச் சுற்றப்பட்டுக் குளிர்சாதன பேழையில் வைக்கப்பட்டு இருந்தது. பேழை மேல் பூமாலைக்குவியலும் மலர் வளையங்களுமாக... தலைமாட்டில் விளக்கும் ஊதுபத்தியும். சாவித்ரியும் சொந்தபந்தங்களுமாகச் சுற்றி அமர்ந்து…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

forum 2 கருத்துகள் உள்ளன

  1. பத்மினி க்கு ஏன் இப்படி ஒரு முடிவு,she was so cute and innocent 💔. பாவம் அமிர்தா.

  2. Unexpected! Sathyan is going to face a completely different reality in life, quite the opposite of how he was introduced in Chapter 1.. Interesting to see where the story goes from here.. whether it moves towards a love story involving Subarna or Amirtha, or takes the thriller route with the curse of their lineage

உங்கள் கருத்தைப் பகிருங்கள்