arrow_back
மலரும் அரும்பே! அத்தியாயம் – 10
மலரும் அரும்பே! chevron_right பகுதி 10 / 30

அத்தியாயம் – 10

visibility 71
star படைப்பை ரேட் செய்யுங்கள்
சராசரி 4.3/5 (3 மதிப்பீடுகள்)
பகிர்

10

தாயும் மகனும் பேசிக்கொண்டே இருக்க, சிவகுரு வீட்டுக்குள் நுழைந்தார். தன் தந்தையைப் பார்த்த அரவிந்தனுக்கு குற்ற உணர்ச்சி மேலோங்கியது. ‘அப்பா முன்னாடி மாதிரி இல்லை, ரொம்ப தளர்ந்து போயிட்டாங்க. அப்படி ஒரு பெரிய நோயும் இல்லை. அப்பாவுக்கு என்ன ஒரு அறுபது வயது இருக்கும், அவ்வளவுதான். ஆனால் அப்பா இவ்வளவு தளர வேண்டிய தேவையில்லை. இது எல்லாத்துக்கும் காரணம் நான் தானோ? இவ்வளவு பிரச்சனைக்குக் காரணம் நானும் அண்ணனும் தானோ?

அண்ணன் வாழ்க்கையும் அவ்வளவு ரொம்ப சிறப்பா இல்லை. பசங்களும் சரியில்லை. இதெல்லாம் நினைச்சு நினைச்சு தான் அம்மா அப்பா இப்படி நொந்து போயிட்டாங்களோ? அம்மாவுக்கும் மனசுல வருத்தம் தான். ஆனால் அம்மா புலம்பிடுறாங்க. அதனால உடம்பில் காமிக்கல. ஆனால், அப்பா மனசுள்ளயே வச்சிக்கிட்டு வருத்தப்படுறாங்க.’

பாரதி வீட்டை பார்த்ததும், அவன் அறியாமல் அவன் மனம் பாரதி வீட்டையும் தன் வீட்டையும் ஒப்பிட்டுப் பார்த்தது. ‘பாரதி வீட்டோட அளவு அவ்வளவு பெருசா எல்லாம் இல்லை. ஆனா அவங்க வீடு நிறைவா இருக்கிற மாதிரி இருக்கு. வீட்டில் ஒரு களை இருக்கு. ஆனா நம்ம வீட்டில்? நம்ம வீடு முன்னாடி அப்படித்தான் இருக்கும். அம்மா பெருசா கோலம் போடுவாங்க. விதவிதமா சமையல் பண்ணுவாங்க. அண்ணனும் நானும் சந்தோஷமா சிரிச்சு விளையாடுவோம்.

ஆனா இப்போ இந்த வீட்டில் ஒரு களையே இல்லையே. அம்மாவால் முடியல. அண்ணி பண்ணலாம்… ஆனா அண்ணியைக் கேட்கிற உரிமை எனக்கு கிடையாது. அண்ணி வராங்க, அவங்க வேலையைப் பார்க்கிறாங்க, போயிட்டே இருக்காங்க. எல்லாரும் இந்த வீட்டில் தான் சாப்பிடறாங்க. ஆனா வேலை செய்ற அக்கா தான் பெரும்பாலும் சமைக்கிறாங்க. அந்தச் சாப்பாட்டில் கூட யாரும் கலந்து பேசுவதில்லை. இங்க எல்லாம் இருந்தும் ஏதும் இல்லாத மாதிரி இருக்கு.’ என்று அரவிந்தன் சிந்திக்க ஆரம்பித்தான். ஆனால் எதையும் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.

“என்னப்பா, வாக்கிங் எல்லாம் போயிட்டு வந்தாச்சா?” என்று சிவகுரு கேட்க, “ஆமாம், வாக்கிங் போனேன். போற வழியில் பாரதி வீடு இருந்தது. அவங்க வீட்டில் உள்ளே கூப்பிட்டு காபி எல்லாம் கொடுத்தாங்க. அவங்க வீட்டில் காபி குடிச்சிட்டு தான் வரேன்” என்றான்.

“ஓ அப்படியா? சரி சரி, சிதம்பரம் ரொம்ப நல்லவர். அந்த அம்மா பூரணியும் நல்லா பேசுவாங்க, பழகுவாங்க. பாரதி ரொம்ப கெட்டிக்காரப் பெண். அந்தப் பெண் படித்த படிப்புக்கு வெளியூர் போய் வேறு வேலையெல்லாம் பார்க்கலாம். ஆனால், இங்க தான் இருப்பேன்னு இருக்கா.” என்று அவர் கூற, அவன் அமைதியாகக் கேட்டுக்கொண்டான்.

“அப்பா, நீங்க ஸ்கூல் பக்கம் வரலாமே?” என்று அவன் தன் தந்தையை பழைய நிலைக்கு கொண்டு வர முயற்சி செய்ய, “அரவிந்த், என்னவோ தெரியலை. கொஞ்சம் உடம்பு சரியில்லை. நானும் ஸ்கூலுக்கு வந்துட்டா, உங்க அம்மாவும் தனியாக இருக்கிற மாதிரி நினைக்குறா. பசங்களுக்கும் நான் இருந்தா துணையாச்சு. அது தான் வீட்டில் இருக்கேன். ஸ்கூலுக்கு வந்துட்டா, நேரத்துக்கு கிளம்ப முடியாது. அப்படி இப்படின்னு நேரம் இழுத்துடும்.” அவர் விளக்கம் போல் பதில் கூற, அவன் தன் தந்தையின் கூற்றுக்கு தலையசைத்துப் பள்ளிக்கு கிளம்பினான்.

பள்ளிக்குள்ளே அரவிந்தன் நுழைய, அங்கே பாரதி வாசலில் நின்றபடி அங்கு சென்று கொண்டிருந்த குழந்தைகளிடம் பேசிக் கொண்டிருந்தாள். பல கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருந்தாள். சில சின்ன குழந்தைகளைக் கொஞ்சிக் கொண்டிருந்தாள். மழலையோடு பேசக்கூடிய வயதில் இருக்கும் குழந்தைகளிடம் பேச்சை வளர்த்துக் கொண்டே இருந்தாள். சில சிறுவர்களின் காதை திருகி ஏதோ செல்லமாக மிரட்டிக் கொண்டிருந்தாள். பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களிடம் கேலி பேசிக் கொண்டிருந்தாள்.

அனைத்தையும் உள்ளே செல்வதற்குள் ஒரு பார்வையில் உள்வாங்கிக் கொண்டான் அரவிந்தன். அவனுக்கு அவளின் செய்கை மீது ஒரு வகை ஈர்ப்பு வந்தது. அது பிடித்திருக்கிறதா இல்லையா என்று அவன் மனமும் சிந்தையும் ஆராய்ச்சி செய்யவில்லை. ஆனால் அவனுக்குப் பிடித்திருக்கிறது என்பதை மட்டும் அவனிடம் அறிவிக்காமல் அவனின் செய்கை இயங்கி கொண்டு இருந்தது.

அதன் பின்னர் உள்ளே சென்றவன், “பாரதி!” என்று அழைத்தான். “சொல்லுங்க சார்” அவள் உள்ளே நுழைய, அவன் ஒரு நிமிடம் அவளை ஆழமாக பார்த்தான்.

அதன் பின், “இன்னிக்கு நீங்க போட்டுக் கொடுத்த டீ ரொம்ப நல்லா இருந்தது” என்று கூற, அவள் சிரித்துக் கொண்டே, “சார், இது சொல்லவா கூப்பிட்டீங்க?” அவள் கேட்க, அவன் தலையை மறுப்பாக அங்கும் இங்கும் அசைத்தான். “இல்லை இல்லை, நான் வந்து…” அவனிடம் மெல்லிய தடுமாற்றம்.

அவன் தன்னை சற்று நிதானப்படுத்திக் கொண்டு, “அடுத்து, நம்ம ஸ்கூலில் என்னென்ன மாற்றம் பண்ணனும்னு ஒரு லிஸ்ட் எடுத்திருக்கேன். அதை பிரிண்ட் போட்டு நீங்க எல்லார்கிட்டயும் கொடுத்துடுங்க. கொடுத்துட்டு இன்னைக்கு சாயங்காலம் ஒரு மீட்டிங் வெச்சுக்கலாம்… பேசலாம்” என்று அவன் கூற, அவள் கூறியதை அவள் செய்தாள்.

மாலை ஒரு மணி நேரம் இதைப் பற்றிய விவாதம் இருக்கும் என்பதை அனைவரிடமும் தெரிவித்திருந்ததால் அனைத்து ஆசிரியர்களும் அவன் கொடுத்ததை வாசிக்க ஆரம்பித்தனர்.

அதே நேரம் அரவிந்தன் செல்லமாகத் தன் நெற்றியைத் தட்டிக் கொண்டிருந்தான். ‘இப்ப அவகிட்ட டீ நல்லா இருக்குன்னு சொல்லி ஆகணுமா?’ என்று அவன் மனம் முரண்டு பிடித்தது. ஆனால் அவன் அறிவு, ‘காலையிலேயே குடிச்ச டீ நல்லா இருக்குன்னு நினைச்ச… அதை சொல்றதில் என்ன தப்பு இருக்கு?’ என்று அவனுக்கு வக்காலத்து வாங்கியது.

“அதுவும் சரிதான்” முனங்கி கொண்டே தேநீரைப் பற்றிய சிந்தனையை ஒதுக்கி வைத்து அடுத்த தேநீர் அருந்தச் சென்றான். அப்பொழுது அவன் கண்கள் வருணைத் தேடின. வருண் வகுப்பறையில் அமர்ந்திருந்தான். அவன் கவனம் பாடப்புத்தகத்தில் இல்லை என்பதை அவன் ஜன்னல் வழியாகப் பார்த்துக் கொண்டான்.

அவன் வகுப்பறைக்குள் சென்று அனைவரிடமும் பேசுவது போல், வருண் அருகே சென்றும் ஒரு பார்வை பார்த்துக் கொண்டான். ‘வருணை என் கண்காணிப்பில் வைத்துக்கொள்ள வேண்டும்’ அவன் மனம் தன் அண்ணன் மகனை பற்றி கணக்கிட்டுக் கொண்டது.

மாலையில் அனைத்து ஆசிரியர்களும் ஒன்றுகூடியிருந்தனர். அவனின் முதல் குறிப்பு. பள்ளியின் நேரத்தை மாற்ற வேண்டும். ‘இப்பொழுது போல் ஒன்பது மணி என்று இல்லாமல் காலை ஐந்தரை, ஆறு, ஆறேகால் போன்ற நேரத்திற்கு மாற்ற வேண்டும். அப்படி மாற்றினால் பள்ளியின் நேரத்தை இரண்டரை மணிக்குள் முடித்துவிட்டு, இரண்டரை மணியிலிருந்து சாயங்காலம் ஆறு மணி வரை விளையாட்டு, நடனம், பாடல் போன்றவற்றை ஊக்குவிக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்ததால், அதற்கு அனைத்து ஆசிரியர்களும் மறுப்பு தெரிவித்தனர்.

அவர்களால் அந்த நேரத்தில் வர முடியாது என்று நேரடியாகவே கூறினர். அனைத்து ஆசிரியர்களும் அவ்வாறு கூறவே அரவிந்தனும் மேலும் வாக்குவாதத்தை வளர்க்காமல் அடுத்த குறிப்பிற்கு சென்றான்.

“அனைத்துப் பாடத்திட்டமும் பிராக்டிகல் நாலேஜ் என்று சொல்வதுபோல் செயல்முறைப்படியே படிக்க வேண்டும். ஒரு புத்தகம் என்று அதற்குள் அடங்கி விடவே கூடாது.” அவன் கூற, ஆசிரியர்களோ, “அவ்வாறு செய்ய முடியாது. அவ்வாறு செய்வதற்குப் பள்ளியில் போதுமான வசதி இல்லை” என்று எதிர்ப்பு தெரிவிக்க, அவனுக்குச் சற்று கடுப்பாகவே இருந்தது.

இவ்வாறு அவன் பல விஷயங்கள் கூற, அங்கு எதிர்ப்பு மட்டுமே கிளம்பியது. அரவிந்தன் மீட்டிங் ஆரம்பித்த சில நிமிடங்களில் அனைத்தையும் முடித்துவிட்டுக் கிளம்பினான். அவனுக்கு கோபம் வந்துவிட்டது என்று அறிந்த ஆசிரியர்கள், “இல்லை சார், இப்படித்தான் செய்யணும்னா கண்டிப்பா செஞ்சுடலாம். ஆனா இது ரொம்ப கஷ்டம்” என்று அனைவரும் அவன்முன் பணிவாகவும் மரியாதையாகவும் தான் பேசினர். ஆனால், இவன் சொன்ன எதையுமே செய்ய முடியாது என்று கூறியது அவனுக்குச் சற்று வருத்தத்தையும் கோபத்தையும் கிளப்பியது.

மேலும் பேச்சுவார்த்தை வளர்க்காமல், “பாரதி, எல்லார் கிட்டயும் பேசி முடிவு எடுத்துட்டு என் ரூம்க்கு வாங்க” என்று பாரதியிடம் கட்டளையிட்டு தன் அறைக்குச் சென்றுவிட்டான். பாரதி யாரிடமும் எந்தவித மறுப்பையோ, கருத்தையோ தெரிவிக்காமல் ஆசிரியர்கள் கூறிய அனைத்தையும் குறித்துவிட்டு அவன் அறைக்குள் சென்றாள்.

அவன் முகமே கூறியது அவனின் கோபத்தின் அளவை, அவள் எப்படி ஆரம்பிப்பது என்று தடுமாறி நிற்கையில், அவன் ஆரம்பித்தான். “சம்பளம் வாங்கி வேலை பார்க்குறவங்க நான் சொன்னதை செய்யணும், இப்படி முடியாது, அப்படி முடியாதுன்னு எப்படி சொல்றாங்க?” தன் குணத்திற்கு கிஞ்சித்தும் சம்பந்தம் இல்லாத வார்த்தைகளை அவன் கொட்டிவிட்டான்.

அந்த நொடி கோபம் அவனை அவள் முன் வேறு ஒருவனாக நிறுத்தியது. அவளும் அவனுக்கு சற்றும் சளைத்தவள் இல்லை என்று அவனிடம் எதிர்கேள்வி கேட்டாள். நியாயத்தை மட்டும் அவள் கேட்கவில்லை. அவனை காயப்படுத்தும் விதமாகவும் கேட்டுவிட்டாள்.

மனதில் இருப்பதைப் பேசுவது அத்தனை குற்றமா என்ன?

அடுத்த அத்தியாயம்

அத்தியாயம் – 11

11அவன் பேசிய வார்த்தையின் முழு அர்த்தத்தை பேசி முடித்தவுடன் அவன் உணர்ந்து கொண்டான். ஒரு நொடி அவனுள் குற்ற உணர்ச்சி மேலோங்கியது. ‘நான் என்ன வார்த்தை சொல்லிட்டேன்? இந்த மாதிரி பேசியிருக்கக் கூடாது. நான் அதிகார வர்க்கம் அப்படிங்கிற எண்ணம் எனக்குள்ள…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

forum ஒரு கருத்து உள்ளது

  1. அவன் நிதானமா பேசி இருக்கலாம் ஆனால் கோவம் தான் கண்ணை மறைத்து விட்டதே.

உங்கள் கருத்தைப் பகிருங்கள்