arrow_back
மலரும் அரும்பே! அத்தியாயம் – 9
மலரும் அரும்பே! chevron_right பகுதி 9 / 30

அத்தியாயம் – 9

visibility 71
star படைப்பை ரேட் செய்யுங்கள்
சராசரி 3.3/5 (3 மதிப்பீடுகள்)
பகிர்

9

மோகன் தன் அறைக்கு சென்றான். விஜயா அவர்கள் அறையில் ஆழ்ந்த நித்திரையில் இருந்தாள். அதன் பின் குழந்தைகளின் அறைக்கு சென்றான். குழந்தைகள் இருவரும் தூங்கிக் கொண்டிருந்தனர். சைந்தவியை உற்று பார்த்தான். அவள் முகத்தில் ஒரு களை வந்திருப்பது போல் தோன்றியது. தன் மகன் வருணை கூர்ந்து பார்த்தான். அவன் முகம் இறுகி பாறை போல இருந்தது. ‘இவன் வழி மாறி செல்கிறானோ?’ என்ற கேள்வி அவனுள்ளும் எழத்தான் செய்தது.

கேள்விகள் பல இன்று அவன் மனதில் எழுந்தாலும், மோகனுக்கு அவன் மனதில் குடி கொண்டிருந்த பாரம் இறங்கியது போல் இருந்தது. யாரிடமும் பகிர்ந்துகொள்ள முடியாமல் இருந்ததை தன் தம்பியிடம் அவனால் பகிர்ந்துகொள்ள முடிந்தது.

அவன் படுத்ததும் உறங்கி விட்டான். ஆனால் அரவிந்தனுக்கு தூக்கம் வரவில்லை. ‘அண்ணா கேட்டதுக்கு ஏதோ ஒரு பதிலை சொல்லி தப்பிச்சிட்டேன். ஆனால்…’ குழப்பம் மேலோங்க அவன் தன் அறைக்குள் குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டிருந்தான்.

‘இந்தியாவுக்கு வெகேஷன் வந்ததே தப்பா ஆயிடுச்சு. எல்லாரும் எப்ப கல்யாணம்னு கேட்டு கேட்டே நம்மள குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கிருவாங்களோ?’ அவன் சற்று அயர்ந்து தான் போனான்.

மற்றவர்கள் மேல் அவனுக்கு கொஞ்சம் கடுப்பும் கோபமும் வந்தது. சில நிமிடங்களில் அவன் அதை ஒதுக்கி வைத்து விட்டு நடைமுறைக்கு வந்தான். ‘நானும் எத்தனை நாள் தான் இந்த கல்யாணத்தை தள்ளி போட முடியும்? எப்படியாவது சீக்கிரம் கல்யாணம் பண்ணி தான் ஆகணும் போல தெரியுது. இல்லைனா, எல்லாரும் நம்மள சும்மா விடமாட்டாங்க போலயே’ என்று யோசனையில் இருந்தான்.

அப்பொழுது மணி பன்னிரெண்டை தொட்டது. ‘இப்போதைக்கு தூங்க போகலாம்.’ அவன் தன் மெத்தையில் ஒய்யாரமாக படுத்தான். தூக்கம் அவனை நெருங்கவில்லை. நித்திராதேவி அவனை விட்டு விலகி ஓடிக் கொண்டிருந்தாள். ஆனால், அவன் மனசாட்சியோ அவனை நோக்கி பல கேள்வி கணைகளை தொடுத்துக் கொண்டிருந்தது.

‘என் மெத்தையில் என் கூட ஒரு பொண்ணு?’ கேள்வியில், “நோ…” அவன் அலறினான். ‘ரொம்ப கஷ்டம்… ரொம்ப ரொம்ப கஷ்டம்… எனக்கு எல்லாமே வச்சபடி வச்ச இடத்துல நீட்டா இருக்கணும். ஆனா ஒருவேளை வரவ அப்படி இல்லன்னா? நான் எப்படி அவ கூட எல்லாத்தையும் ஷேர் பண்ண முடியும்?’ அவன் குழப்பத்தின் உச்சிக்கே சென்றான்.

‘சரி எப்படியாவது தூங்கி ஆக வேண்டும்’ தன் கண்களை இறுக மூடி தூங்க முயற்சித்தான். இப்பொழுது அவனுக்கு மிகப் பெரிய சந்தேகம் வந்தது. ‘என்ன விட பயங்கர ஒழுங்கா ஒரு பொண்ணு வந்துட்டா? என்னை நைநைன்னு பாடா படுதின்னா, ஊதாரியா ஒரு பொண்ணு வந்துட்டா? கஞ்சத்தனமா ஒரு பொண்ணு வந்துட்டா…’ இப்படியாக பெண்கள் பல வகையாக அவன் முன் தோன்றினார்கள்.

அவனுக்கு பல பெண்கள் கனவில் வந்தனர். ஆனால் அதில் ஆச்சரியம் என்னவென்றால், படத்தில் வருவது போலவோ கதைகளில் வருவது போலவோ விதவிதமான பனித்துளிகளில் துள்ளி விளையாடும் அழகான பெண்ணோ, வண்ண வண்ண சேலையுடுத்தி கண்களில் காதலை தேக்கி கொண்ட அழகான பதுமையோ, வரவே இல்லை. ‘இந்த பெண்ணை தான் நான் திருமணம் செய்ய வேண்டும்’ என்ற எண்ணத்தை உருவாக்குவது போல அவன் கனவில் எந்த பெண்ணும் வரவே இல்லை. அது அவன் துரதிஷ்டமா? இல்லை நல்ல நேரமா? என்று அவனுக்கே தெரியவில்லை. அன்று செய்த வேலையின் பயனாக அவன் கண் அயர்ந்துவிட்டான்.

வழக்கம் போல் அவன் விடிகாலை ஐந்து மணிக்கு எழும்பிவிட்டான். “ஜாக்கிங் போலாம்…” தனக்கு தானே கூறிக்கொண்டே, ஷூஸ், டிராக் பாண்ட் அணிந்து கிளம்பினான். அவன் சாலை ஓரமாக ஓட ஆரம்பித்தான். நேற்று பெய்த மழை துளிகள், அங்கங்கே சிறு சிறு குட்டைகளாக தேங்கி இருந்தது. தார் சாலை கருமையான நிறத்தில் பளபளவென காட்சியளித்தது.

மேலே மழைத்துளி பட்ட மரங்களோ பச்சை பசேல் என்று காட்சியளித்தது. அந்த பச்சை இலைகளும் கருப்பு நிறமும் அவனுக்கு தூய்மையான இடத்தை கண்முன் காட்டியது. ஆங்காங்கே பூத்திருந்த பூக்களில் இருந்து சிறு சிறு மழைத்துளி கீழே விழ அது என்னவோ அவனை பார்த்து புன்னகைப்பது போல் தோன்றியது. மார்கழி மாதம் என்பதால், சில பெண்கள் பெரிது பெரிதாக கோலமிட்டுக் கொண்டிருந்தனர். அந்த சில பெண்களை ஆச்சரியமாக பார்த்தான்.

சிலர் வீட்டில் மின் விளக்கு எரியவில்லை, அங்கு அயர்ந்து பெண்கள் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் அவன் உணர்ந்து கொண்டான். ஒவ்வொரு பெண்களும் ஒவ்வொரு ரகம் என்று அவனுக்கு தோன்ற மெல்ல புன்னகைத்தான்.

‘இந்தியா வந்து எல்லாரும் கல்யாணம் கல்யாணமுன்னு பேசி என்னையும் பெண்களை பத்தி யோசிக்க வைக்க ஆரம்பிச்சிட்டாங்க. என் சிந்தனையும் கல்யாணத்தை சுத்தியே தான் இருக்கு.’ அவனே தன்னை கலாய்த்து கொண்டு புன்னகைத்தபடியே ஓடினான்.

அவன் ஓட்டமாக ஓடினாலும், அவன் கண்கள் வண்ணமயமான கோலத்தை ரசித்துக்கு கொண்டே சென்றது. அப்பொழுது தான் அந்த வாசலில் இருந்த கோலம் அவனை ஈர்த்தது. வெள்ளை நிறத்தில் வளைந்து நெளிந்த கோலத்தைப் பார்த்தான். இடையில் கருப்பு நிறத்திலும் எதுவோ இருக்க, அவனுக்கு அந்த கோலம் சரியாக பிடிபடவில்லை. அருகே சென்று பார்க்க வேண்டும் என்று முடிவு எடுத்துக் கொண்டான். கோலத்தை பார்க்கும் பொழுது, ‘மிகவும் கஷ்டமான சிக்கல் கோலம்.’ என்று அனுமானித்து கொண்டான். சிறுவயதில் அவன் அம்மா கோலமிடும் பொழுது தெரிந்துகொண்ட கோலம் பற்றிய ஞானத்தை பயன்படுத்த ஆரம்பித்தான்.

வெள்ளை நிற மாவில் சிக்கல் கோலத்தில் தேர் இருக்க, நடுவே கருப்பு நிறத்தில் சிவலிங்கம் அழகான தாமரைப்பூவில் கம்பீரமாக அமர்ந்திருக்க, அவன் சற்று நேரம் அசந்து அந்த கோலத்தை பார்த்தவன், கோலமிட்டு கொண்டிருக்கும் பெண்ணை பார்க்க மறந்தான்.

இன்னும் கோலத்தின் அருகே வந்த பின்பே அவன் பெண்ணை பார்க்க, ‘பாரதி…’ அவன் மூளை சில வினாடி செயலிழந்து மீண்டும் உயிர் பெற்றது. ‘இது என்ன இவங்களை ஸ்கூல்ல தான் பார்க்கணும்னு பார்த்தா ஜாக்கிங் போனால் கூட பார்க்கணும் போலையே?’ என்று அவன் சிந்தை அபாய மணி அடித்தாலும், அவன் மனம் அவள் கோலத்தை ரசித்து, அவள் திறமையை பாராட்டியது.

“குட்மார்னிங் பாரதி” அப்பொழுதுதான் அவள் தலை நிமிர்த்தி அவனை பார்க்க, “சார் குட் மார்னிங், என்ன காலையில ஜாக்கிங்கா?” அவள் கேட்க,

“என்ன பண்றது? எனக்கு கோலம் போடுற வேலை எல்லாம் இல்லையே! அதனால ஜாக்கிங் கிளம்பி வந்துட்டேன்.” அவன் சிரித்துக் கொண்டே கூறினான்.

“அப்படிலாம் இல்லை சார். நீங்களும் கோலம் போடணுமுன்னு நினைச்சா காலையில் போட்டுற வேண்டியதுதானே? நல்ல எக்சைஸ் சார்” அவள் சிரித்து கொண்டே கூற, ‘கிண்டலு…’ அவன் மனதிற்குள் எண்ணியபடி, நக்கலாக சிரித்தான்.

அவன் சிரிப்பின் அர்த்தம் புரிந்தவள் போல, “நான் என்ன தப்பா சொல்லிட்டேன், இப்படி சிரிக்கறீங்க?” என்ற பாரதி வினவ, “உங்கள கட்டிக்க போறவரு கண்டிப்பா கோலம் போட வேண்டியது இருக்குமுன்னு நினைச்சேன், சிரிச்சேன்.” அவன் கேலி செய்ய, ‘இவர் கிட்ட பேசுறது நல்லதில்லை.’ அவள் மௌனமாகிவிட்டாள்.

‘நம்ம ஸ்கூல்ல வேலை பார்க்கிற ஒரு மிஸ் கிட்ட என்ன தேவை இல்லாத பேச்சு. இது அம்மா அப்பாவுக்கும் பிடிக்காது.’ என்ற எண்ணம் தோன்ற,

“உங்க கோலம் நல்லா இருக்கு பாரதி” கூறிக் கொண்டே அவன் கிளம்ப முற்பட, அக்கம் பக்கத்தினர் அவர்களை பார்ப்பதை பாரதி உணர்ந்து கொள்ள, “என்ன சார் வீட்டுக்குள்ள வராம போறீங்க? வாங்க சார் உள்ள…” அவள் அழைப்பு கொடுக்கையில் பாரதியின் தாய் வெளியே வந்துவிட்டார்.

“சிவகுரு ஐயா வீட்டு சின்னவர் வந்திருக்காங்க.” பாரதி உள்ளே குரல் கொடுக்க, ‘நான் எங்க வந்தேன்? எல்லாரும் என்னை வரவச்சிடுவாங்க போல!’ அவன் அகப்பட்டுக் கொண்டவன் போல விழிக்க, “வாங்க காபி குடிக்கலாம்…” பாரதியின் தாய் அழைக்க, ‘வீட்டுக்கு வந்த மாதிரியே சொல்றாங்களே… சம்பந்தம் இல்லாம ஒரு டீச்சர் வீட்டுக்கு போனா, வீட்டில் வேற நிறைய கேள்வி வருமே’ அரவிந்த் இப்பொழுது திருதிருவென்று விழித்தான்.

“வாங்க… வாங்க… உள்ள வாங்க சார். காபி இல்லைனா டீ சாப்பிட்டுட்டு போகலாம்.” சிதம்பரம் கூற, “அப்பா, அமெரிக்கால இருக்கிறவங்க எதுவுமே சாப்பிடமாட்டாங்க” என்று அனைத்தும் தெரிந்தவள் போல் கூறினாள்.

இப்பொழுது அவன் புரியாமல் பார்க்க, அவன் தாயும் தந்தையும் அவளை குழப்பமாக பார்த்தனர். குடும்பமாக அனைவரும் வாசலில் நிற்க, பக்கத்துக்கு வீட்டு அம்மையார் நிம்மதியாக உள்ளே சென்றுவிட்டார்.

“அம்மா, அமெரிக்கால இருக்கறவங்க எல்லாம் பயங்கரமா டயட்ல இருப்பாங்க. உடம்பை அப்படி பார்த்துப்பாங்க. காலையில ஜாக்கிங்… சாயங்கால வாக்கிங். எந்த சாப்பாடும் தேவை இல்லாம எடுத்துக்க மாட்டாங்க.” என்று கண்களை விரித்து கூற, ‘இவள் என்னை கேலி செய்கிறாளா?’ அவன் இவளை சந்தேகமாக மேலும் கீழும் பார்த்தான்.

“அம்மா ஏன் தெரியுமா?” என்று அவள் ஆரம்பிக்க, அவன் அவளை யோசனையாக பார்த்தான்.

பூரணியோ அங்கலாய்க்கும் தன் மகளை வாய் பிளந்தபடியே பார்க்க, “அதாவது அங்க நோய் வந்துட்டா, நோய் வராது… ஆனால் ஒருவேளை வந்துட்டா உடனடியா டாக்டரை போய் பார்க்க முடியாது. அப்பாயிண்ட்மெண்ட் போடணும். டாக்டர் அப்பாயிண்ட்டெம்ன்ட் கிடைக்குறதுக்குள்ள நோய் சரியாகிடும்.” இப்பொழுது பாரதி நமட்டு சிரிப்பு சிரிக்க, அவன் உள்ளம் அவள் புன்னகையை ரசித்தது.

“அது மட்டுமில்லை அப்பா, அங்க…” அவள் மேலும் இழுக்க, “ஒரு கப் காபி இல்லைனா டீ தானே? நான் குடிச்சிடுறேன்… அதுக்காக எங்க ஊரை இப்படி கழுவி கழுவி ஊத்த வேண்டாம்?” அவன் பாவம் போல கூற, “அது எப்படி உங்க ஊர் ஆகும் சார்?” அவள் கேள்வி கேட்டாள்.

“சும்மா சும்மா சின்னவரை கேள்வி கேட்டுகிட்டு…” என்று பூரணி தன் மகளை தடுத்து, “தம்பி, அமெரிக்கா அப்படி தானா?” என்று வெகுளியாக கேட்க, “அதெல்லாம் இல்லை ஆன்ட்டி. உங்க பொண்ணு இப்படி தான் ஸ்கூல்லையும் தப்பு தப்பா எல்லாருக்கும் பாடம் எடுக்கறாங்க. அவங்களை கண்டிச்சி வைங்க.” அவன் பாரதியின் தாயிடம் நட்பு கரம் நீட்டினான்.

அவன் அவ்வாறு பேசியது பூரணிக்கு பிடித்து போக, “சரி தான் தம்பி.” அவர் அவனை உற்சாகமாக உள்ளே அழைத்து சென்றார்.

பெரியவர்கள் அவனோடு பேசி கொண்டிருக்க, அவள் தேநீருக்கான தூளை எடுத்து, தண்ணீரில் கலந்து அதை கொதிக்க வைத்தாள். அருகே இருந்த ஏலக்காய் டப்பாவை திறக்க, அது மணந்தது. அதன் தலையில் ஒரு தட்டு தட்டி அதை கொதிக்கும் நீரில் போட்டு, இஞ்சியை எடுத்து தோளை சீவி அதையும் நாலு முறை தட்டி நன்கு நசுங்கியதும் கொதிக்கும் நீரில் போட்டாள். அதன் பின் காய்ச்சிய பாலை, அதில் ஊற்றி கொதிக்க வைத்தாள்.

அனைத்தும் கொதித்ததும் சீனியை கலந்து அதை வடிகட்டி ஒரு முறை ஆற்றி கண்ணாடி குவளையில் ஊற்றினாள். அவள் கை ஒரு பக்கம் இந்த வேலை எல்லாம் செய்து கொண்டிருந்தாலும், அவள் செவிகள் அரவிந்தோடு தன் பெற்றோர் பேசிக்கொண்டிருப்பத்தை கவனித்துக் கொண்டே இருந்தது.

அவள் மூளையோ, ‘சைந்தவிக்கு இப்ப உடம்பு பரவாயில்லையா? இவங்க வருணை கவனிக்கிறாங்களா? ஸ்கூல்ல கேட்க முடியலை. இப்ப நட்பா தானே பேசிகிட்டு இருக்காங்க. இதை இன்னைக்கு கேட்டுடுவோமா?’ என்று ஆலோசித்து கொண்டிருந்தது.

அவள் கண்ணாடி குவளையை நீட்ட, தான் கேட்க நினைத்ததெல்லாம் கேட்கமுடியாமல் அவன் அவள் பெற்றோரோடு பேசிவிட்டு கிளம்பிவிட்டான். அவன் தன் வீட்டிற்கு செல்ல, அங்கே வாசலில் கோலம் இல்லாமல் இருக்க, அவனுக்கு பாரதி வீட்டின் முன் இருந்த கோலம் நினைவுக்கு வர, “அம்மா, கோலம் போடலியா?” அவன் தன் தாய் முன்னே நின்றான்.

“ஏன், அமெரிக்காவில் நீ தினமும் கோலம் போடுவியா?” அவர் குதர்க்கமாக கேட்க, “ஏன் அம்மா இவ்வளவு கோபம்?” அவன் தன் தாயிடம் செல்லம் கொஞ்ச, “ஒரு பொண்ணை கல்யாணம் செய்யறீயா?” அவர் தன் மகனிடம் கொஞ்ச, “ஒரு பொண்ணுக்கு மேல கல்யாணம் பண்ணா சட்டப்படி குற்றம் அம்மா.” அவன் தன் தாயை பார்த்து கண்ணடிக்க, “படவா ராஸ்கல்…” அவர் தன் மகனின் காதை பிடித்து திருகினார்.

இவ்வளவு அழகாக ஆரம்பித்த இந்த நாள் அப்படி முடியும் என்று அவனும் நினைக்கவில்லை… அவளும் நினைக்கவில்லை.

அடுத்த அத்தியாயம்

அத்தியாயம் – 10

10தாயும் மகனும் பேசிக்கொண்டே இருக்க, சிவகுரு வீட்டுக்குள் நுழைந்தார். தன் தந்தையைப் பார்த்த அரவிந்தனுக்கு குற்ற உணர்ச்சி மேலோங்கியது. ‘அப்பா முன்னாடி மாதிரி இல்லை, ரொம்ப தளர்ந்து போயிட்டாங்க. அப்படி ஒரு பெரிய நோயும் இல்லை. அப்பாவுக்கு என்ன ஒரு அறுபது…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

forum ஒரு கருத்து உள்ளது

  1. என்ன ஹீரோ சாரே..! உங்க வீட்டுக்கு நீங்க கோலம் போடமாட்டிங்களோ..?

உங்கள் கருத்தைப் பகிருங்கள்