அத்தியாயம் – 11
11
அவன் பேசிய வார்த்தையின் முழு அர்த்தத்தை பேசி முடித்தவுடன் அவன் உணர்ந்து கொண்டான். ஒரு நொடி அவனுள் குற்ற உணர்ச்சி மேலோங்கியது. ‘நான் என்ன வார்த்தை சொல்லிட்டேன்? இந்த மாதிரி பேசியிருக்கக் கூடாது. நான் அதிகார வர்க்கம் அப்படிங்கிற எண்ணம் எனக்குள்ள இருக்கா? பணம் இருக்கிறதனால் இப்படி பேசிட்டேனா?’ என்று ஒரு நொடி அவன் மனம் வருந்தினாலும், பேசிய வார்த்தைகள் பேசியவை தானே, அதை மாற்றவா முடியும்?
பாரதியின் மன கணக்கீட்டில் அவனுடைய பிம்பம் சற்று கீழே இறங்கியது. அவள் எதுவும் பேசாமல் அவனை கூர்மையாகப் பார்த்தாள்.
ஆனால் அவள் குற்றம் கண்டுபிடிப்பது போல் பார்த்தவுடன் அவன் தன் தவறை ஒதுக்கிவிட்டான். ‘நான் என்ன அப்படி பெருசா கேட்டுட்டேன், வேலை செய்கிறவர்கள் கேட்க வேண்டியது தானே? எல்லா நல்லபடியா நடக்கணும்ங்கிற எண்ணத்தில் தானே கேட்டேன்?’ அவன் தான் பேசியவற்றை தனக்குத்தானே நியாயப்படுத்திக் கொண்டான்.
ஆனால், பாரதி அவன் முன் சற்று கோபமாகவே நின்றாள். “சார், நீங்க சம்பளம் கொடுக்கிறதுக்கு மட்டும் அவங்க வேலை பார்த்துட்டுப் போகணுமுன்னு நினைச்சி யாரும் இங்க வேலை பார்க்கறதில்லை. அப்படி இருந்தா யாரும் குழந்தைகளோட நல்லதைப் பற்றி எல்லாம் யோசிக்க மாட்டாங்க. இங்க ஒவ்வொரு டீச்சருக்கும் அவங்க மாணவ மாணவியோட, கனவு, ஆசை, அவங்க நல்லது பத்தின எண்ணம் கண்டிப்பா இருக்கு.
மத்த வேலை எப்படியோ எனக்கு தெரியாது சார். வாங்குற சம்பளத்துக்கு வேலையை முடிச்சிட்டு, ப்ராஜெக்ட்டை முடிச்சிட்டு போவாங்களானு எனக்கு தெரியாது சார். ஆனால் எந்த ஒரு டீச்சரும் வாங்கின சம்பளத்துக்கு கடனேன்னு கிளாஸ் எடுத்துட்டு போக மாட்டாங்க சார். பாடம் புரியுதா இல்லையான்னு கேட்டு கேட்டு நடத்துவோம் சார்” என்று ஆசிரியரைப் பற்றி பக்கம் பக்கமாக பேசி மிகப்பெரிய பாடம் எடுத்து முடித்தாள்.
“ஓகே டீச்சர், நீங்க சொல்றதெல்லாம் சரின்னு வச்சுப்போம். நான் மட்டும் என்ன ஸ்டூடண்ட்ஸ் மேல அக்கறை இல்லாமலா பேசுறேன்? அவங்க நல்லா இருக்கணும், அவங்க எதிர்காலம் நல்லா இருக்கணும் அப்படின்னு தானே பேசுறேன். நான் நல்லது தானே பண்ணறேன்” அவன் விவாதத்தில் இறங்க,
“என்ன சார் நல்லது பண்றீங்க? என்னென்ன நல்லது பண்றீங்க?” அவள் கோபமாக கேட்க, “இந்த இந்தியன் எஜுகேஷன் சிஸ்டமே நல்லா இல்லை.” அவன் அழுத்தம் திருத்தமாகச் சொன்னான்.
“என்ன சார் நல்லா இல்லை, இதே இந்தியன் எஜுகேஷனில் படிச்சிட்டு தானே நீங்க அங்க போய் வேலை பார்க்கறீங்க, இங்கயும் வேலை பார்க்கறீங்க. இந்த சிஸ்டமே சரியில்லைன்னா, நீங்களும் நானும் எப்படி சார் படிச்சிருக்க முடியும்? அப்படின்னா எல்லாமே நல்லா தானே இருக்கு?” அவள் அவனைக் குற்றம் சாட்டும் விதமாகக் கேட்டாள்.
“எல்லாமே நல்லா இருக்கா?” அவன் கண்கள் கூர்மையாக, “எல்லாமே நல்லா இருக்குன்னு நானும் சொல்லல சார். ஆனா எல்லாமே நல்லா இல்லைன்னு நீங்க சொல்றீங்க பாத்தீங்களா… அதைத்தான் நான் தப்புன்னு சொல்றேன்.” அவள் கூற, “நல்லா இல்லாததை தானே நான் மாத்தணும்னு சொல்றேன்” என்று அவன் பிடியில் நின்றான்.
“இல்லை சார், நீங்க சொல்ற மாதிரி எல்லாத்தையும் உடனே மாத்த முடியாது. எல்லாத்துக்கும் கொஞ்சம் கால அவகாசம் வேணும். எப்படி சட்டுபுட்டுன்னு மாத்த முடியும்? நம்ம இந்தியன் எஜுகேஷன் சிஸ்டம் மொத்தத்திலேயும் ஊறி இருக்கு. இதை அடிப்படையாகக் கொண்டுதான் எக்ஸாம் இருக்கு, இதை அடிப்படையா வச்சி தான் கட் ஆஃப் இருக்கு, இதை அடிப்படையா வச்சி தான் காலேஜ் போகணும், அப்படி இருக்கும்போது சடார்னு நீங்க எல்லாத்தையும் மாத்த முடியாது. நம்ம பசங்க பிராக்டிகலா புரிஞ்சு படிக்கணும்னு நீங்க நினைக்கிறது எல்லாம் சரி தான் சார். ஆனால், அதுக்கு முதல்ல நீங்க பிராக்டிகலா எப்படி இருக்கணும்னு தெரிஞ்சுக்கோங்க” அவள் அவனுக்குப் பாடம் எடுக்க, அவனுக்குக் கடுங்கோபம் வந்தது.
“லூசா நீ?” என்று அவளைப் பார்த்துக் கேட்டான். “சார், நான் லூசு இல்லை. ஆனால், உங்ககிட்ட பேசி உங்களுக்கு புரிய வைக்கலாமுன்னு முயற்சி பண்ணிட்டு இருக்கேன் பாருங்க, அது தான் லூசு தனமான்னு எனக்கு தெரியல.” இப்பொழுது அவளும் கோபத்திலே பேசினாள்.
பள்ளிக்கூடத்தின் தலைமை நிர்வாகியிடம் பேசுவது போல் அவள் பேச்சு அந்த நொடி இல்லை. அவன் அதை மனதில் குறித்துக் கொண்டான். “நீதான் புரிஞ்சிக்காம பேசுற…” அவன் இப்பொழுது நிதானிக்க,
“சார், நீங்க தான் புரிஞ்சிக்கலை, வருணுக்கு என்ன பிரச்சனைன்னு புரிஞ்சிக்கலை, சைந்தவிக்கு என்ன பிரச்சனைன்னு புரிஞ்சிக்கலை, அவளுக்கு உங்கமேல எவ்வளவு பாசம்னு புரிஞ்சிக்கலை. நீங்க அவளை அக்கறையா பார்த்துக்கலை. உங்கள் வீட்டுப் பிள்ளையே உங்களால் பார்க்க முடியலை, நீங்க எப்படி சார் இதை சரியா புரிஞ்சிப்பீங்க? சரியா பார்ப்பீங்க?” என்றாள்.
அங்கு அதீத மவுனம் நிலவியது. இப்படிப்பட்ட குற்றச்சாட்டை அவன் எதிர்பார்க்கவில்லை. ஆனால், அவள் கூறிய கூற்றின் உண்மை அவன் நெஞ்சை சுட்டது. குற்ற உணர்ச்சியில் அவன் தவித்தான்.
பேசிய பின் தான் எல்லை மீறியதை அவள் உணர்ந்தாலும் அவளுக்கு ஏனோ அவனிடம் மன்னிப்பு கேட்கத் தோன்றவில்லை. நான் பேசியதில் என்ன தப்பு என்ற இறுமாப்பே அவளிடம் வந்து அமர்ந்தது.
வாசல் வரை சென்றுவிட்டாள், சென்றவள் மீண்டும் திரும்பி அவன் முன் வந்து, “சார், எனக்கு என்னவோ நான் இங்க வேலை பார்ப்பது எனக்கு செட் ஆகும்னு தோணலை சார். மோகன் சாரும் சரி சிவகுரு ஐயாவும் சரி, இப்படி பேசியது இல்லை, இப்படி நடந்து கொண்டதும் இல்லை. நான் இந்த வருஷம் பாதியில போக மாட்டேன். இந்த வருஷத்தை முடிச்சிட்டு நான் இங்கிருந்து கிளம்புறேன் சார்” என்றாள்.
அவள் அந்த நொடியே அவ்வாறு கூறிவிட்டு அறையை விட்டு வேகமாக வெளியே சென்றாள். அவள் மீது அவனுக்கு கோபம் தான். ஆனால், அதைத் தாண்டி அவன் மனதில் அதீத குழப்பம் மேலோங்கியது.
நேரம் மாலை பொழுதை எட்டியது. அதன் பின், அவனும் அவளிடம் பேசவில்லை, அவளும் அவனிடம் பேசவில்லை. மழை வெளுத்து வாங்கியது. மாணவர்கள் செல்வதற்கும் சற்று கடினமாகவே இருந்தது. ஆட்டோ, பள்ளி வாகனம் அனைத்தும் தாமதமாகவே வந்தது. அப்படி இருக்க, எட்டாம் வகுப்பில் ஒரு பெண் குழந்தையின் பெற்றோர் வரவில்லை.
பாரதி அவள் செல்வதற்காகக் காத்திருந்தாள். பள்ளியின் அலுவலக அறையில் அப்பொழுது தொலைப்பேசி ஒலித்தது. அரவிந்தன் தொலைபேசியை எடுக்க, “சார், பாரதி மிஸ்ஸோட மொபைல் எடுக்கல. பாரதி மிஸ் கிட்ட பேசணும்.” இப்படித்தான் அந்த அழைப்பு இருந்தது. அரவிந்த் பாரதியை அழைத்தான்.
“மேம், என் வண்டி மழை சகதியில சிக்கிடுச்சு. நேரத்துக்கு வர முடியல, கொஞ்ச நேரம் இங்கே இருப்பீங்களா? நான் வந்து பொண்ணை கூட்டிட்டு போயிடுறேன்.” அவர் பரிதவிப்போடு கேட்க,
பாரதி, “ஒன்னும் பிரச்சனை இல்லை, நான் வெயிட் பண்றேன். நீங்க வாங்க” என்று கூறிவிட்டு அமர்ந்திருந்தாள். வகுப்பறை அனைத்தையும் மூடிவிட்டார்கள். பள்ளி அலுவலக அறைக்கு முன் பாரதியும், அந்தப் பெண்ணும் அமர்ந்திருந்தனர்.
அரவிந்த் வீட்டிற்கு கிளம்பவில்லை. அவன் அனைவரும் செல்வதற்காக காத்திருந்தபடியே அங்கு அமர்ந்திருந்தான். நேரம் செல்லச் செல்ல இருள் சூழ்ந்தது. அரவிந்தன் பாரதியை அழைத்து, “பாரதி, நீங்க கிளம்புங்க. நான் பார்த்துக்கறேன்” என்று கூற, பாரதி மறுப்பாகத் தலையசைத்தாள். “இல்லை சார், நானும் இருக்கேன்.” அவளின் செய்கை அவனுக்கு இன்னும் கோபத்தைக் கிளறியது. ‘இவளுக்கு என்ன, என்மேல் நம்பிக்கை இல்லையா?’ அவன் விருட்டென்று அறைக்குள் சென்று அமர்ந்து கொண்டான்.
இருள் முழுதாகச் சூழ்ந்தபின் அந்தப் பெற்றோர் வந்து பெண் குழந்தையை அழைத்துச் சென்றனர். பாரதி வண்டியை எடுத்துக்கொண்டு அவனிடம் தலையசைத்தாள். வேறு எதுவும் பேசப் பிடிக்காமல் அவன் தலையசைத்தான்.
அவள் தன் இருசக்கர வாகனத்தில் கிளம்ப, அவன் காரை எடுத்துக்கொண்டு அவளைப் பின்தொடர்ந்தான். கண்ணாடி வழியாக அவன் வருவதைப் அவள் பார்த்துவிட்டாள். ஆனால் அவள் சாலையில் எங்கும் நிற்கவில்லை. பாரதி வீடு வரை சென்றவுடன் அவள் வண்டி உள்ளே சென்றதும், எதுவும் பேசாமல் காரை தன் வீட்டை நோக்கிச் செலுத்தினான் அரவிந்தன்.
உள்ளே சென்ற பாரதிக்கு அவன் காலையில் பேசிய கோபமான வார்த்தைகள் மறந்துவிட்டது. வாசல் வரை அவன் துணை வந்ததே மனதில் நிற்க, அவன் நினைப்போடு குளியலை முடித்துவிட்டு தன் அறையில் அமர்ந்து பள்ளிக்குத் தேவையான வேலைகளைச் செய்ய ஆரம்பித்தாள். அவள் மனதில் ஒரு பெரும் கேள்வி எழுந்தது.
‘எல்லா டீச்சர்க்கும் இப்படித்தான் அரவிந்த் சார் துணைக்குப் போவாரா?’ என்று முதல் கேள்வி எழுந்தது. இரண்டாவதாக, ‘மோகன் சார்கிட்டயும் சிவகுரு ஐயா கிட்டயும் நான் இப்படிப் பேச மாட்டேன், ஏன் அரவிந்த் சார் கிட்ட மட்டும் இப்படிப் பேசுறேன்?’ என்று அடுத்த கேள்வி அவள் மனதைத் துளைத்தது.
அரவிந்த் மழையோடு வீட்டுக்குச் சென்று குளியலை முடித்துவிட்டு, எந்தவிதமான வேலையும் செய்யாமல் சாய்வாக நாற்காலியில் அமர்ந்தான். அவன் மனதிலும் கேள்வி எழுந்தது.
‘எல்லா டீச்சருக்கும் நான் இவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பேனா? நான் இப்படி வீடு வரை விட்டுவிட்டு வருவேனா? இல்லை, எல்லாரும் இருந்தா அவங்களே போய்ப்பாங்க, நான் ஏன் போகணும்?’ நொண்டி சாக்கோடு தன்னை சமாதானம் செய்து கொண்டான். ‘பாரதியைப் பற்றி அப்பாவும் மோகனும் நல்லவிதமா தான் சொல்றாங்க. ஆனால், அந்தப் பாரதி என்னைக் கொஞ்சம் கூட மதிக்க மாட்டேங்குறா! என்கிட்ட பக்குவம் இல்லையா?’ அவன் தன்னை சுய ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்தான்.
இருவரும் பதில் தெரியாமல் கேள்வியில் தேங்கி நின்றனர்!





இருவரும் டாம் அண்ட் ஜெர்ரி போல் தான் இருக்காங்க.