arrow_back
மலரும் அரும்பே! அத்தியாயம் – 12
மலரும் அரும்பே! chevron_right பகுதி 12 / 30

அத்தியாயம் – 12

visibility 64
star படைப்பை ரேட் செய்யுங்கள்
சராசரி 4.0/5 (4 மதிப்பீடுகள்)
பகிர்

12

மழை கொட்டிக் கொண்டிருந்தது. இலைகள் எல்லாம் தளதளவென்று அந்த மழை காற்றில் அசைந்து கொண்டிருந்தது. மாலை நேரத்தில் ஆரம்பித்த மழை இரவு வரை நீடித்தது. தன் இரவு உணவை முடித்துவிட்டு பாரதி தன் அறைக்குள் சென்றாள். அவள் தன் அறையின் ஜன்னலை திறந்து வைக்க, வீட்டு தோட்டத்தில் பூத்திருந்த மல்லிப்பூவின் வாசம் அவள் அறை எங்கும் நிரம்பியது. அந்த மழைநீரிலும் நிலவொளி பிரகாசமாக இருந்தது. அழகான காட்சி சுகமான தென்றல் என மனதை நிறைக்கும் காட்சி.

தூக்கம் அவளை தழுவி இருக்க வேண்டும். ஆனால், அவளுக்குத் தூக்கம் வரவில்லை. ஏனோ அவள் மனம் சங்கடத்தில் ஆழ்ந்தது போல் இருந்தது. தன் மெத்தையில் படுத்தாள். மீண்டும் எழுந்து அமர்ந்தாள். ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தாள். அந்தக் காட்சியும் அவள் மனதில் ஒன்றவில்லை. தன் அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்தபடி இன்று அரவிந்தோடு பேசியதை அசை போட்டாள்.

அவளுக்குச் சற்று வருத்தமாக இருந்தது. “என்னதான் இருந்தாலும் நான் இன்றைக்கு அரவிந்த் சார் கிட்ட அப்படி பேசி இருக்கக் கூடாது.” தனக்குத்தானே பேசிக்கொண்டாள்.

‘அரவிந்த் சார் அப்படி என்ன சொல்லிட்டாங்க? ஏதோ கோவத்துல சம்பளம் வாங்குறவங்க அப்படின்னு சொல்லிட்டாங்க. அதுக்காக நான் இப்படி மரியாதை இல்லாம பேசி இருக்கலாமா? மோகன் சார் இல்லைனா சிவகுரு ஐயாவோ இப்படி பேசி இருந்தா நான் இப்படி பேசி இருப்பேனா? பேசி இருக்க மாட்டேன்.’ என்று தனக்குத்தானே கூறிக் கொண்டாள். அலைபேசியை எடுத்து மணியைப் பார்த்தாள். மணி இரவு ஒன்பதரையை தாண்டி இருந்தது.

‘அரவிந்த் சாரை இப்ப கூப்பிடலாமா?’ அவள் மனம் மெல்லிய குழப்பத்திற்குள் வந்தது. அலைபேசியை வைத்துவிட்டு மீண்டும் அறையில் குறுக்கும் நெடுக்குமாக பல தடவை நடந்தாள். கட்டிலில் படுத்து தன் கண்களை இறுக மூடினாள். ஆனால் அவளுக்குத் தூக்கம் மட்டும் வரவே இல்லை. மீண்டும் நடந்தாள். அலைபேசியை எடுத்து மணியைப் பார்த்தாள். மணி பத்து என்று கூறி அவளை இம்சித்தது.

‘இரவு 10 மணிக்கு அரவிந்த் சாருக்கு கூப்பிடலாமா?’ மீண்டும் குழப்பம் அவளை சூழ்ந்தது. ஆனால், அவளுக்கு நிச்சயமாகத் தூக்கம் வராது என்று அவள் சிந்தை அவளுக்கு படம் போட்டு காட்டியது.

‘அரவிந்த் சாரிடம் பேசாமல் தூக்கம் வராது’ என்று தெரிந்துவிடவே அலைபேசியை எடுத்து அவனுக்கு அழைத்தாள். அதே நேரம் அரவிந்த் தன் அறையில் சாய்வாக அமர்ந்திருந்தான். அவனுக்கும் தூக்கம் வரவில்லை.

‘என்ன இருந்தாலும் அப்படி ஒரு வார்த்தையை நான் சொல்லி இருக்கக் கூடாது. அதுவும் பாரதி முன்னாடி சொல்லி இருக்கவே கூடாது. என்ன நினைத்திருப்பாங்க அவங்க?’ என்று குழப்பத்தில் இருந்தான். ‘சரி, பாரதி என்ன நினைத்தால் எனக்கு என்ன?’ என்று அவன் சிந்தை எடுத்துக் கூறினாலும், அவன் மனம் அதை ஒப்பவில்லை.

தன் நெஞ்சை நீவிக் கொண்டான். அப்பொழுது அலைபேசி மின்ன, ‘இந்த நேரத்துல யாரு? ஒருவேளை அமெரிக்காவில் இருந்து யாரும் கூப்பிடறாங்களோ?’ என்று அவசரமாக அலைபேசியை எடுத்தான்.

பாரதி என்ற பெயரைப் பார்த்ததும் யோசிக்காமல் அவன் அலைபேசியை உயிர்பித்தான். “பாரதி…” என்று அவன் அழைக்க, அங்கு மௌனம். அழைத்துவிட்டு என்ன பேசுவது என்று அவளுக்கு தெரியவில்லை. அதுமட்டுமில்லாமல், இந்த நேரத்தில் அழைத்திருக்கக் கூடாது என்ற குற்ற உணர்ச்சி வேறு அவளுக்கு மேலோங்கியது.

“பாரதி… பாரதி… பாரதி!” அவன் குரல் இப்பொழுது பதட்டமாக ஒலித்தது. “ஹலோ!” என்றாள் அவள் மெதுவாக. “ஒண்ணும் பிரச்சனை இல்லையே? இந்த நேரத்துல கூப்பிட்டிருக்கீங்க?” என்று அவன் குரலில் அக்கறை மிதமிஞ்சி இருந்தது.

அந்த அக்கறை அவளை ஏதோ செய்தது. ‘எல்லாருக்கும் அவன் இப்படி பதறுவானா?’ அவள் சிந்திக்கவில்லை. ‘எல்லாருக்கும் என் உள்ளம் இப்படி துடிக்குமா?’ அவனும் யோசிக்கவில்லை.

“இல்லை, பிரச்சனை இல்லை.” அந்த நொடி தயங்கியவள், சட்டென்று கேட்க நினைத்ததைக் கேட்டுவிட்டாள். “சாரி சார், இன்னைக்கு நான் அப்படி உங்ககிட்ட பேசியிருக்கக் கூடாது.” அவள் குரலில் உண்மையான வருத்தம் இருந்தது. வழக்கமாக அவள் பேசும் கம்பீரம் முழுதாக காணாமல் போகவில்லை என்றாலும் சற்று குறைந்திருக்க, அவன் மனம் சற்று இளகிப் போனது. இருந்தாலும் அவனுக்கு குறும்பு கொப்பளித்தது.

“நீங்க எதுக்கு மேம் சாரி எல்லாம் சொல்றீங்க, நீங்க தான் வேலையை விட்டு போகப் போறீங்களே!” என்றான் தன்னுள் எழுந்த சிரிப்பை அடக்கி கொண்டு.

“என்ன சார், என்னை வேலைய விட்டு அனுப்புறதுல ரொம்ப தீவிரமா இருக்கீங்க போல இருக்கு. நான் சிவகுரு ஐயா கிட்ட சொல்லி கொடுக்கறேன்” இப்பொழுது அவள் குரலிலும் மெல்லிய கேலி வந்து அமர்ந்தது.

“ஆமாங்க, உங்க விருப்பத்தை நிறைவேத்தனும் இல்லையா? அப்பா அப்படி தான் சொல்லி இருக்காங்க” அவன் சிரித்துக் கொண்டே கூற, அவள் இப்பொழுது மென்மையாகப் புன்னகைத்துக் கொண்டாள்.

பேச்சு சம்பந்தமில்லாமல் வளர, அவள் மௌனித்துக் கொள்ள, அவன் சுதாரித்துக் கொண்டான்.

“சாரி சொல்லத்தான் கூப்பிட்டீங்களா?” அவன் நேரடியாக விஷயத்திற்கு வர, “இல்லை சார், டிசம்பர் மாசம் ஸ்கூல்ல கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் இருக்கும், அதுக்கான பிளான் பண்ணுவோம். உங்களுக்கு தெரியுமா இல்லையான்னு எனக்கு தெரியல. அதனால சொல்லலாம்னு நினைச்சேன் சார்.” என்ன பேசுவது என்று அவள் திட்டமிட்டு வைத்திருந்ததால் அதை கூறினாள்.

“ஓகே, நாளைக்கு நேரில் பேசுவோம்” என்றான். மேலே என்ன பேசுவது என்று அவன் தெரியாமல் நிறுத்த, அவள் மீண்டும், “சார்…” என்றாள் தயக்கமாக.

“டீச்சர்ஸ் கிட்டயும் சரி, ஸ்டுடென்ட்ஸ் கிட்டயும் சரி, டக்குனு எல்லாம் மாற்றத்தையும் கொண்டுவர முடியாது சார். ஆனா, நீங்க சொல்றதெல்லாம் நல்லாத்தான் இருக்கு.” அவள் இழுக்க, ‘நல்லாத்தான்…’ என்பதை அவன் மனதில் குறித்துக் கொண்டான். “எதை எல்லாம் செய்ய முடியுமோ அதைச் செய்யலாம் சார்” அவள் சமாதானமாக உரைத்தாள்.

“எனக்கு காலையில் நடந்த விஷயம் கூட பெரிய கோபம் இல்லை. சாயங்காலம் நீங்க நடந்துக்கிட்ட விஷயம் தான் ரொம்ப வருத்தம். உங்களுக்கு என்மேல் நம்பிக்கை இல்லையே?” அரவிந்த் தன் மனதில் இருப்பதை கிஞ்சித்தும் மறைக்காமல் அவளிடம் கூறினான். “என்ன சார்?” இப்பொழுது அவள் உண்மையில் புரியாமல் கேட்டாள்.

“உங்க கிளாஸ் பொண்ணை விட்டுட்டு போங்க, நான் தான் அவங்க பேரண்ட்ஸ் கிட்ட அனுப்புறேன்னு சொன்னேனே. நீங்க விட்டுட்டு போகலையே.” இப்பொழுது அவன் வெளிப்படையாக கேட்க, “சார், அப்படிலாம் இல்லை சார். அவங்க என் பொறுப்பு. பேரண்ட் என்கிட்ட தானே சொன்னாங்க. அதுமட்டும் இல்லாம பெண் குழந்தை சார். லேடி டீச்சர் நான் தான் இருக்கணும் அவள் கூட.” அவள் கறாராக பேச,

“அப்போ உங்களுக்கு என்மேல் நம்பிக்கை இல்லை?” அவனும் இப்பொழுது சற்று நேரடியாகவே கறாரான குரலில் கேட்டான். “சார், அமெரிக்கா வரைக்கும் போயிருக்கீங்க, இதுகூட யோசிக்க மாட்டீங்களா? நம்பிக்கை இல்லைனா நான் அங்க இருந்திருப்பேனா சார்?” அவள் இப்பொழுது கேலி தொனியில் கேட்க, அவன் மனதில் சொல்ல முடியாத உணர்வு பரவியது.

“ஸ்டூடண்ட்ஸ் விஷயம் வேற, நான் வச்சிருக்கிற நம்பிக்கை வேற சார். இது டியூட்டி சார், அதிலிருந்து மாற முடியாது” என்று அவள் விளக்கம் கூற, “இல்லை, நான் சும்மா தான் கேட்டேன்” அவன் இப்பொழுது பின்வாங்கினான். அவள், “ஓகே சார்.” பேச்சை முடித்துக் கொண்டாள். அவளுக்கு இப்பொழுதுதான் நிம்மதியாக இருந்தது. அலைபேசியை அணைத்து வைத்து எந்தவித குழப்பமும் இல்லாமல் தூங்கச் சென்றாள்.

ஆனால், அவன் தூக்கம் முழுதாக தொலைந்து போனது. என்னவென்று சொல்ல முடியாத உணர்வு ஒன்று அவன் மனதில் பரவியது. ‘பாரதிக்கு என்மேல் நம்பிக்கைன்னு சொன்னா எனக்கு ஏன் சந்தோஷம் வரணும்.’ அவன் கேள்விகள் அவனை குழப்பத்தில் மட்டுமே ஆழ்த்தின, தெளிவுபடுத்தவில்லை.

அதே நேரம், பாரதியின் அறைக்கு வந்தார் அவள் அம்மா பூரணி. “யார்கிட்ட பேசிட்டு இருந்த பாரதி?” அவர் கேட்க, “அரவிந்த் சார் அம்மா. இன்னைக்கு ஸ்கூலில் சின்ன பிரச்சனை. அது தான் பேசிட்டு இருந்தேன். இப்ப எல்லாம் சரியாகிடுச்சு.” அவள் விஷயத்தை கூறியும் கூறாமலும் பேச்சை முடித்துக் கொண்டு படுத்துவிட்டாள்.

படுத்து கண்களை மூடிய மகளை யோசனையாக பார்த்தார். இதற்கு மேல் அவள் எதையும் சொல்லமாட்டாள் என்றிருந்தது அவள் செய்கை. மின்விளக்கை அணைத்து விட்டு தன் அறைக்கு சென்றார்.

சிதம்பரம் அருகே வந்து அமர்ந்தார். “என்னங்க, அந்த பையன் அரவிந்தன் எப்படி?” என்று கூர்மையாக கேட்க, பாரதியின் தந்தை முகத்தில் யோசனை பரவியது.

தன் யோசனையை மறைத்துக் கொண்டு, “அதை தெரிஞ்சி நாம என்ன பண்ண போறோம்?” அவர் கேலி போலவே பேச்சை தொடர்ந்தார்.

“கேலி பேசாதீங்க, நம்ம பொண்ணு…” அவர் ஆரம்பிக்க, “நம்ம பொண்ணு ரொம்ப நல்ல பொண்ணு.” என்றார் சிதம்பரம்.

“நான் இல்லைனு சொல்லலையே. ஆனால், நல்ல பொண்ணுக்கு ஆசை வர கூடாதா?” அவர் கேட்க, “பூரணி…” அவர் குரலில் அதிர்ச்சி இருக்க, “நீங்க அதிர்ச்சி ஆகுற அளவுக்கு எதுவும் நடக்கலை. நானும் எதுவும் சொல்லலை. ஆனால், பையன் எப்படின்னு பார்த்துக்கோங்க.” அவர் கூறினார்.

“ரொம்ப பெரிய இடம் பூரணி.” அவர் குரலில் கலக்கம் இருக்க, “எனக்கும் அது தான் பயமா இருக்கு. நம்ம பொண்ணு ஆசையை வளர்த்துக்க கூடாதுனு நான் ஆண்டவனை வேண்டிக்குறேன்.” அவர் கூற, “நீ எதாவது பேசினியா?” அவர் கேட்க, “ஏன், ஒருவேளை பாரதிக்கு அப்படி ஒரு எண்ணமே இல்லைனா, நான் பேசி கிளப்பிவிடவா?” அவர் இப்பொழுது நக்கலாக கேட்க, பெரியவர்கள் இருவரும் யோசனையோடு படுத்தனர்.

‘பாரதியிடம் இந்த செய்கை புதிது.’ பூரணி யோசிக்க, ‘தன் மகளை பற்றிய இப்படியொரு வார்த்தை தன் மனைவியிடம் புதிது.’ என்று சிதம்பரம் யோசிக்க, ‘ஒரு பெண்ணை பற்றிய யோசனை தனக்கு புதிது.’ என்று அரவிந்தன் யோசிக்க, எந்தவிதமான யோசனையும் இல்லாமல் நிம்மதியாக உறங்கினாள் பாரதி.

அடுத்த அத்தியாயம்

அத்தியாயம் – 13

13பாரதி மறுநாள் காலையில் உற்சாகமாக பள்ளிக்குச் சென்றாள். நேற்று நடந்த மனக்கிலேசம் அவளுக்கு கிஞ்சித்தும் இல்லை. மாறாக அவள் கண்கள் அவனைத் தேடின. ‘அரவிந்த் வரவில்லை’ என்றதும், அவள் மனம் சுருங்கியது. ‘எப்பவும் இந்த நேரம் வந்திருவாங்களே, யார்கிட்டயாவது கேட்கலாமா?’ என்று…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

forum ஒரு கருத்து உள்ளது

  1. பெற்றவர்கள் எப்போதும் பெற்றவர்கள் தான், பாரதியின் மனதை ஓரளவுக்கு புரிந்து கொண்டார்கள் அவள் அம்மா .

உங்கள் கருத்தைப் பகிருங்கள்