arrow_back
மலரும் அரும்பே! அத்தியாயம் – 13
மலரும் அரும்பே! chevron_right பகுதி 13 / 30

அத்தியாயம் – 13

visibility 72
star படைப்பை ரேட் செய்யுங்கள்
சராசரி 4.5/5 (2 மதிப்பீடுகள்)
பகிர்

13

பாரதி மறுநாள் காலையில் உற்சாகமாக பள்ளிக்குச் சென்றாள். நேற்று நடந்த மனக்கிலேசம் அவளுக்கு கிஞ்சித்தும் இல்லை. மாறாக அவள் கண்கள் அவனைத் தேடின. ‘அரவிந்த் வரவில்லை’ என்றதும், அவள் மனம் சுருங்கியது. ‘எப்பவும் இந்த நேரம் வந்திருவாங்களே, யார்கிட்டயாவது கேட்கலாமா?’ என்று யோசித்தாள். ஆனால், அவனை ஏன் தேடுகிறோம் என்று மட்டும் அவள் யோசிக்கவில்லை. என்ன செய்கிறாள் என்று அவள் சிந்தைக்கு தெரியாமலே அவள் மனம் இயங்கி கொண்டிருந்தது.

சில மணித்துளிகள் தடுமாற்றத்திற்கு பின், நேராக வகுப்பறைக்குச் சென்றாள். மாணவர்களுக்கு பாடங்களை நடத்த ஆரம்பித்தாள். அவள் அரவிந்த் பற்றிய எண்ணத்தை மறந்தே போனாள். குழந்தைகள் முழுதாக அவளை தன்னுள் இழுத்துக் கொண்டனர்.

பள்ளி இடைவேளை முடிந்து, அவளுக்கான நேரத்தில் தோழியோடு தேநீர் அருந்தச் சென்றாள். அவள் அலைபேசிக்கு ஒரு அழைப்பு வந்தது. புதிய எண்ணில் அவள் கண்கள் சுருங்கின. ஹலோ என்றதும், “பாரதி, நான் அரவிந்த் பேசுறேன்” என்றான். “நான் இன்னைக்கு ஸ்கூலுக்கு வரமாட்டேன். வேற ஒரு வேலை இருக்கு. அதுக்காக வெளியே போறேன்” என்றான்.

“நம்பர் புதுசா இருக்கே?” அவள் கேட்க, “இது என் பெர்சனல் நம்பர்.” அவன் அவளுக்கு பதிலளித்தாலும், ‘இதுல இருந்து ஏன் கூப்பிட்டேன்.’ அவன் மனதில் மெல்லிய தடுமாற்றம். “நாளைக்கு எப்படியும் வந்துடுவேன், நாம பார்க்க வேண்டிய வேலை எல்லாம் நாளைக்கு பார்த்துக்கலாம்” என்ற குறிப்புடன் பேச்சை முடித்துவிட்டான்.

அவளுடன் இருந்த தோழி அவளை யோசனையோடு பார்த்தாள். “என்ன அப்படி பார்க்கிற?” என்று பாரதி கேட்க, “இல்லை, அரவிந்த் சார் வரலை அப்படின்னா பிரின்சிபால் கிட்ட சொல்லி இருக்கலாம். ஆனால் ஏன் உன்கிட்ட சொல்லணும்?” என்று அவள் யோசனையாகக் கேட்க, “இல்லை, நானும் அவரும் சேர்ந்து தானே குழந்தைகளுடைய கல்வி முறைக்கான வேலை செய்யறோம். அதுக்கு தான் எனக்கு போன் பண்ணி சொல்றார்” என்று பதில் சொல்லிவிட்டாள். இருந்தாலும் அவள் மனமும் அதே கேள்வியைத் தான் கேட்டது.

அவள் பள்ளி முடிந்து வீட்டிற்குச் செல்ல, பூரணியோ, “இன்னிக்கு ஸ்கூல்ல என்ன நடந்தது?” என்று வழக்கம் போல் கேட்டதும், அனைத்தையும் தாண்டி, “அம்மா, இன்னிக்கு அரவிந்த் சார் ஸ்கூலுக்கு வரலை.” முதல் விஷயமாக அவள் அதைக் கூற, அவர் அவளை மேலும் கீழும் பார்த்தார்.

‘இன்னிக்கு அது தான் முக்கியமான விஷயமா?’ அவரின் பார்வை அவளுக்கு செய்தி அனுப்ப, தாயின் பார்வையை சட்டென்று புரிந்து கொண்டாளோ, இல்லை அவள் எண்ண ஓட்டத்தை அவளே பிடித்துக் கொண்டாளோ, “இல்லம்மா, சார் இன்னைக்கு வரலையா… எல்லா வேலையும் எனக்கு தான். நிறைய வேலை இருந்தது. இன்னைக்கு பயங்கர வேலை…” என்று சமாளிக்கும் விதமாகவே கூறினாள். ‘இனி ஜாக்கிரதையாக பேசணும்.’ தனக்குத்தானே அறிவுறுத்தியும் கொண்டாள். அதை கவனமாக பின்பற்றினாள்.

நாட்கள் அதன் போக்கில் கடந்து செல்ல, விரைவில் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட நாளும் நெருங்கி கொண்டிருந்தது. கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் மூழ்கியிருந்த அவர்கள், பாடத்திட்டத்தை மாற்றுவதற்கான வேலையை ஆரம்பிக்கவில்லை. கிறிஸ்துமஸ் நடனம், பாடல் என்று அதன் மும்முரத்தில் பாரதி சற்றும் ஓய்வில்லாமல் ஓடிக்கொண்டிருந்தாள்.

அவனுக்கும் பல வேலைகள், தந்தையோடும் தமையனோடும் அலுவலக வேலையிலும் ஈடுபட்டுக் கொண்டிருந்தான். அவனால் பள்ளியில் அவ்வளவாக நேரம் செலவழிக்க முடியவில்லை. அவர்கள் எதிர்பார்த்த கிறிஸ்துமஸ் கொண்டாட்ட நாளும் வந்தது. குழந்தைகள் அனைவரும் பெற்றோரோடு வந்திருந்தனர். ஆசிரியர்களும் அவர்கள் குடும்பத்தினரோடு வந்திருந்தனர். பாரதியும் சிதம்பரத்தையும் பூரணியும் அழைத்து வந்திருந்தாள். சிவகுரு ஐயாவும் அவர் மனைவி நித்திய கல்யாணியும் வந்திருந்தனர்.

ஆட்டம் பாட்டம் என குழந்தைகள் தூள் கிளப்பிக் கொண்டிருந்தனர். வருணின் நடன நிகழ்ச்சியும், சைந்தவி பாடலோடு கூடிய நாடகமும் இருந்ததால் மோகனும் அவன் மனைவி விஜயாவும் வந்திருந்தனர். அரவிந்த் முன்னே நின்று அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தான். பாரதியும் துறுதுறு என்று அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருந்தாள்.

சென்ற வருடத்தை விட இந்த வருடம் நிகழ்ச்சி மிக நன்றாக இருப்பது போல் சிவகுருவிற்கு தோன்றியது. தான் தடை சொன்ன பல விஷயங்களை இம்முறை பாரதி அரவிந்தின் ஒத்துழைப்போடு நடத்தி கொண்டதை மனதில் குறித்து சிரித்துக் கொண்டார். அதே நேரம் அரவிந்திடம் மிகவும் இயல்பாக பாரதி பல சந்தேகங்களைக் கேட்டு வேலை பார்த்துக் கொண்டிருந்தாள். அதை பலரும் மனதில் படம் பிடித்துக் கொண்டனர்.

நிகழ்ச்சி மிக சிறப்பாக நிறைவடைந்தது. எல்லோரும் வீட்டிற்கு திரும்பிவிட, அரவிந்த் நிகழ்ச்சி முடிந்த பின் தாமதமாகவே வீட்டிற்குத் திரும்பினான். அவன் சற்று உற்சாகமாகவே இருந்தான்.

எப்படி தன் துறையான கணினித் துறையில் ஒரு ப்ராஜெக்ட் முடிந்தவுடன் ஒரு வகையான சந்தோஷம் அவன் மனதில் வருமோ, அது போலவே இந்த நிகழ்வு முடிந்ததும் அவன் மனதில் ஒரு வகையான நிறைவு வந்தது. அவன் உற்சாகமாக அமர்ந்திருக்க, அவன் அருகே சிவகுரு ஐயாவும் நித்திய கல்யாணியும் அமர்ந்தனர். விஜயா குழந்தைகளைக் குளிப்பாட்டி, படுக்கச் செய்துவிட்டு, தூங்க சென்றுவிட்டாள். மோகன் அலுவலகப் பணி இருப்பதாக கூறி அலுவலகம் சென்றுவிட்டான்.

அரவிந்த் நிகழ்ச்சியைப் பற்றி உற்சாகமாகப் பேசிக்கொண்டிருக்க, நித்திய கல்யாணி எந்த விதமான முன்னறிவிப்பும் இன்றி அரவிந்திடம், “அரவிந்த், கல்யாணம் பண்ணிக்கிறியா?” என்று கேட்டார். சிவகுரு தன் மனைவியின் நாடியைப் பிடித்தது போல் அவரைக் கூர்மையாகப் பார்த்தார். “என்னம்மா, பொண்ணு கையில வச்சுட்டு கேட்கிற மாதிரி கேட்கிறீங்க. கையில பொண்ணு வச்சிருக்கீங்களா?” என்று அரவிந்த் இப்பொழுது கேலியாகவே கேட்டான்.

அமெரிக்காவிலிருந்து வந்தபொழுது, ‘திருமணமே வேண்டாம்’ என்ற எண்ணம் இப்பொழுது அவனிடம் இல்லை. தாய் தந்தையின் மனநிலை, உடல் நிலை, சுற்றத்தார் சூழ்நிலை அவன் எண்ணப்போக்கை சற்று மாற்றி இருந்தது. “ஆமாண்டா, பொண்ணு ரெடியா இருக்கு. உனக்கு ஓகேவா?” என்று அவரும் கேலியாகவே கேள்வி கேட்க,

அவனும் பிடிகொடுக்காமல், “யாருமா பொண்ணு?” என்று கண்களை சுருக்கி கேட்டான். மகனின் பதிலும், மனைவியின் செய்கையும் இப்பொழுது சிவகுரு ஐயாவுக்கு சற்று ஆச்சரியமாகத்தான் இருந்தது. வழக்கமாக தன்னிடம் கலந்தாலோசிக்கும் மனைவி பெண்ணைப் பற்றி மகனிடம் நேரடியாக பேசவும், ‘அப்படி எந்த பொண்ணு?’ என்று சிவகுரு ஓரளவுக்கு தன் மனைவியின் எண்ணப் போக்கைப் பிடித்திருந்தாலும், தன்னிடம் நேரடியாகக் கேட்கவில்லையே என்று அவரை மேலும் கீழும் பார்த்தார்.

தன் கணவனின் எண்ணப்போக்கை புரிந்து கொண்ட நித்திய கல்யாணி, “உங்களுக்கும் பிடிக்கும், உங்களுக்கு சம்மதமா தான் இருக்கும்னு நான் நம்புறேன்” என்ற நித்திய கல்யாணி கூற, அவர் சிரித்துக் கொண்டார். அவர் தன் கேள்விக்கான பதிலை தன் மனைவியின் உறுதியில் தெரிந்து கொண்டார்.

“அம்மா யாருன்னு என்கிட்ட சொல்லுங்க, என்கிட்டே கேட்காம நீங்களே முடிவு பண்ணிடுவீங்க போலையே?” அவனுள் பயம் படர்ந்தது.

“பாரதி” என்று அவர் பட்டென்று கூற, அரவிந்த் அப்பொழுது திடுக்கிட்டு நேராக அமர்ந்தான். அவனிடம் நீண்ட மௌனம்!

“என்னடா என்ன யோசனை?” அவர் கேட்க, “அம்மா எனக்கு ஒரு நாள் அவகாசம் கொடுங்களேன்?” அரவிந்த் இப்பொழுது தயக்கமாகவே கேட்டான். இப்பொழுது சிரித்துக் கொண்டே தலையசைத்தார்.

அவனுடைய உற்சாக மனநிலை முழுதாக மாறி இருந்தது. அவன் சிந்தை யோசனைக்குள்ளாக தன் அறைக்குள் நுழைந்தான். இப்பொழுது நித்திய கல்யாணி கணவனிடம், “நீங்க என்ன நினைக்கிறீங்க?” என்று கேட்டார். “அதை நீ மகன்ட்ட கேட்கறதுக்கு முன்னாடியே என்கிட்ட கேட்டிருக்கணும்ல?” அவர் கோபித்துக் கொள்ள,

“நீங்க வேற சும்மா இருங்க. உங்களுக்கும் இதே எண்ணம்னு எனக்கு தெரியும். எனக்கு அவங்க ரெண்டு பேரும் ஜோடியா வேலை பார்த்தது ரொம்ப நல்லா இருந்தது. உங்க வார்த்தைக்கு இடையில் தானே எனக்கே இந்த யோசனை வந்தது.” தன் கணவனின் தோளில் இடிக்க, “அரவிந்த் என்ன சொல்லுவான்?” அவர் யோசனையோடு கேட்டார்.

“அவன் நிச்சயம் சம்மதம் தான் சொல்லுவான்” என்று அவர் உறுதியாகக் கூற, “அதை எப்படி சொல்ற?” என்று சிவகுரு ஐயா கேட்டார். “வேண்டாம்னா இப்பவே வேண்டாம்னு சொல்லி இருப்பான். அவன் யோசிக்கிறான் அப்படின்னாலே நிச்சயமா நல்ல பதில் தான் வரும்” என்று தன் மகனைப் பற்றி அறிந்தவராக உறுதியாகக் கூறினார்.

அரவிந்த் மனதில் பல கேள்விகள் எழுந்தது. அவனுள் எழுந்த கேள்விகள் அனைத்தும் அவனை அதீத குழப்பத்திலே ஆழ்த்தியது.

அடுத்த அத்தியாயம்

அத்தியாயம் – 14

14அரவிந்த் தன் அறையில் தூக்கம் வராமல் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தான். ‘எனக்கும் பாரதிக்கும் எந்த விதத்திலையும் ஒத்து போனதில்லை. ஒரே கருத்து இருந்ததில்லை. நான் என்னை மாதிரி யோசிக்குற ஒரு பெண்ணை தான் கல்யாணம் பண்ணனும்னு நினச்சேன். அதனால, பாரதி…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

forum ஒரு கருத்து உள்ளது

  1. நல்லா யோசி …என்ன யோசிச்சாலும் ஆமாம் என்று தானே சொல்லப்போகிறாய்,
    அப்புறம் ஏன் இந்த குழப்பம் ஹீரோ சாரே.,!
    சீக்கிரமா நல்ல முடிவா சொல்லிடுங்க சாரே..!

உங்கள் கருத்தைப் பகிருங்கள்