arrow_back
மலரும் அரும்பே! அத்தியாயம் – 14
மலரும் அரும்பே! chevron_right பகுதி 14 / 30

அத்தியாயம் – 14

visibility 68
star படைப்பை ரேட் செய்யுங்கள்
சராசரி 4.3/5 (3 மதிப்பீடுகள்)
பகிர்

14

அரவிந்த் தன் அறையில் தூக்கம் வராமல் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தான். ‘எனக்கும் பாரதிக்கும் எந்த விதத்திலையும் ஒத்து போனதில்லை. ஒரே கருத்து இருந்ததில்லை. நான் என்னை மாதிரி யோசிக்குற ஒரு பெண்ணை தான் கல்யாணம் பண்ணனும்னு நினச்சேன். அதனால, பாரதி வேண்டாம்.’ அவன் சிந்தை நேர்கோட்டில் சென்று கொண்டிருக்க, அவன் மனது இடையில் குறுக்கிட்டது.

‘யாரோ ஒரு பெண்ணை நான் கல்யாணம் செய்து தான் ஆகணும். தெரியாத தேவதையை விட தெரிந்த பிசாசே மேல்.’ எங்கோ கேலி போல் படித்தது அவனுக்கு நினைவு வர, சிரித்துக் கொண்டான். ‘பாரதிக்கு இப்படியாகப்பட்ட சிந்தனை தெரியவந்தால்?’ அவன் புன்னகை விரிந்தது. புன்னகையோடு அவன் மனம் அவளை பற்றி பட்டியலிட்டது. அவள் செயல் என்று யோசித்தால், அனைத்திலும் கெட்டிகாரி தான். அவள் குணம் என்று யோசித்தால், ‘நல்ல குணம் தான். ஆனால்…’ அவன் புன்னகை நமட்டு சிரிப்பாக மாறியது. “கொஞ்சம் சுவாரஸ்யமான ஆளு தான்” முணுமுணுத்துக் கொண்டே, படுக்க சென்றான்.

அவன் உள்ளத்துப் போக்கை அவன் சிந்தை புரிந்து கொண்டதோ என்னவோ, பதில் சொல்ல வேண்டிய அதரங்கள் தெளிவாக தெரிந்து கொண்டன. நித்திராதேவி அவனை ஆரத்தழுவிக் கொள்ள, அவன் மனம் அவனை அடுத்தக்கட்ட வாழ்க்கைக்கு தயார்படுத்த ஆரம்பித்திருந்தது.

மறுநாள் காலையில், மகனின் பதிலில் நித்திய கல்யாணியும் சிவகுருவும் அதீத மகிழ்ச்சியில் இருந்தனர். அரவிந்தும் உற்சாகமாக பள்ளிக்கு சென்றான். “குட் மார்னிங் சார்.” பாரதி அவன் முன்னே வந்து நின்றாள்.

“நேத்து…” என ஆரம்பித்து, நிறைவு பெற்ற பள்ளி விழாவை பற்றி பேசினான், பாடத்திட்டத்தை பற்றி பேசினான். ஆனால், திருமண பேச்சை எடுக்க முனைந்து வேண்டாம் என்று நிறுத்திக் கொண்டான்.

‘அம்மா, அப்பா இன்னைக்கு தான் பேச போறாங்க. நான் எதாவது சொல்ல, அப்புறம் டீச்சரம்மா அதை காதல்ன்னு புரிஞ்சிகிட்டு எனக்கு பாடம் எடுக்க ஆரம்பிச்சிட்டா வம்பா போய்டும்.’ தன் வாயை இறுக மூடிக்கொண்டான். ‘இப்படி தான் வாழ்க்கை முழுதும் வாயை மூடிக்கொண்டு இருக்க வேண்டுமோ?’ என்ற ஐயம் அவனுள் எழ, பாரதியை யோசனையாக பார்த்தான்.

“என்ன சார், எதுவும் சொல்லனுமா?” அவள் கேட்க, அவன் மறுப்பாக தலையசைத்தான். அவனுக்கு அவளிடம் பேச வேண்டும். கொஞ்சமில்லை நஞ்சமில்லை… பல விடயங்கள் பேசவேண்டும். ஆனால், இன்றில்லை என்று மௌனித்துக் கொண்டான்.

மாலை, பாரதி வீடு திரும்ப, அவள் பெற்றோர் அதீத உற்சாகத்தில் இருந்தனர். விஷயமறிந்த பாரதி பல நிமிடங்கள் மௌனமாக அமர்ந்து விட்டாள். “அம்மா, இதெல்லாம் வேண்டாம்.” அவள் கூற, இதை அவள் பெற்றோர் எதிர்பார்க்கவில்லை.

“என்ன வேண்டாம்?” இப்பொழுது பூரணியின் குரல் சற்று உக்கிரமாக இருந்தது. “அம்மா, இதெல்லாம் செட் ஆகாது. அரவிந்த் சார் இந்தியால இருக்க மாட்டாங்க. அவங்க யூ.எஸ் போய்டுவாங்க.” அவள் கூற, “அதனால என்ன, நீ இங்கயே இருக்கணும்னு என்ன அவசியம்?” அவர் கேட்க, “அம்மா, எனக்கு இந்த ஊர் தான் பிடிச்சிருக்கு. நான் உங்க கூட தான் இருப்பேன்.” அவள் பிடிவாதமாக கூறினாள்.

“நாங்களே நீ இங்க இருக்க வேண்டாமுன்னு சொல்றோம்.” அவரும் பிடிவாதமாக கூற, “பூரணி…” இப்பொழுது சிதம்பரத்தின் குரல் ஓங்கி ஒலித்தது. பூரணி கோபமாக சமையலறைக்குள் சென்றுவிட்டார்.

சிதம்பரம், “பாரதி…” அன்பாக அழைத்து, “யூ.எஸ் விஷயத்தை விடு. அதை அப்புறம் பேசுவோம்.” அவர் மிக மென்மையாக குழந்தையிடம் பேசுவது போல பேச, பாரதி எதுவும் பேசாமல் அமர்ந்திருந்தாள்.

“உனக்கு அரவிந்தை பிடிச்சிருக்கா?” அவர் தன் மகளை கூர்மையாக பார்த்தார். “தெரியலை அப்பா” அவள் நேரடியாக கூற, அவர் மௌனமாக தன் மகளை ஆராயும் பார்வை பார்க்க, “அப்பா, உண்மையிலே தெரியலை அப்பா. நான் அரவிந்த் சார் கிட்ட அந்த எண்ணத்தில பேசினதுமில்லை, பழகினதுமில்லை.” அவள் வெள்ளந்தியாக கூறினாள்.

“கல்யாணம் விஷயம் விடு. சாதாரணமா சொல்லு. அரவிந்த் சார் எப்படி?” அவர் கேட்க, “நல்ல மனுஷன் அப்பா. கொஞ்சம் முன் கோபி. ஆனால், உடனே மறந்திடுவாங்க. கூட சேர்ந்து வேலை பார்க்க ரொம்ப நல்லா இருக்கும் அப்பா.” அவள் நிறுத்த, “அப்படி ஒரு மனுஷனோட வாழ்க்கை முழுக்க பயணம் பண்ணா எப்படி இருக்கும்னு நீ நினைக்குற பாரதி?” அவர் கேட்க, அவள் தன் தந்தையை யோசனையோடு பார்த்தாள்.

“அம்மா சொன்ன அதே விஷயத்தை தானே அப்பா நீங்களும் சொல்றீங்க?” அவள் கேட்க, அவர் சிரித்துக் கொண்டே, “எங்களுக்கும் வயசாகுது இல்லையா? எங்களுக்கு மட்டுமில்லை, உனக்கும் வயசாகுது.” அவர் கூற, “எனக்கு இதே ஊரில் இருக்கணும் அப்பா.” அவள் இப்பொழுதும் பிடிவாதமாக கூறினாள்.

“மாப்பிள்ளை வீட்டிலும் நீங்க இருக்கணும்னு தான் ஆசை படுறாங்க. கொஞ்ச நாள் மாப்பிள்ளை கூட அமெரிக்கா போயிட்டு வா. அப்புறம் இங்க வந்துடுங்க.” அவர் கூற, அவள் முகத்தில் யோசனை பரவியது.

“திரை கடல் ஓடியும் திரவியம் தேடு” அவர் நிறுத்த, “இதெல்லாம் ஔவையார் சொல்லியாச்சு நீங்க சொல்ல வேண்டாம்.” இப்பொழுது பாரதி முகத்தை செல்லமாக சுருக்கி கொண்டாள்.

அவர் பெருங்குரலில் சிரிக்க, அங்கு பூரணி வர, “நம்ம பொண்ணு பூரணி, சொல்லறவிதமா சொன்னா புரிஞ்சிக்க போறா.” அவர் கூற, “அப்பா, நான் இன்னும் சம்மதமே சொல்லலை.” அவள் இப்பொழுது செல்லமாக கோபித்துக் கொள்ள, “சரி, இப்ப சொல்லிடு, சம்மதம் தானே?” அவர் கேட்க, அவள் புன்னகையோடு தலையசைத்தாள்.

‘இதை தான் அரவிந்த் சார் இன்னைக்கு என்கிட்டே பேச வந்தாங்களோ? இது சார் விருப்பப்படி நடக்குதா, இல்லை அவங்க வீட்டு விருப்பமா?’ என்ற கேள்வி அவள் மனதில் குடியேறியது.

இருவீட்டாரின் சம்மதத்தோடு திருமணம் உறுதியானது. பாரதிக்குள் பல கேள்விகளும் குழப்பங்களும் இருந்தாலும், பெற்றோர் சொல்வதை கேட்டு அப்படியே சென்று விடுவோம் என்ற முடிவிற்கு வந்திருந்தாள். அவனை போலவே அவள் சிந்தையும் சென்றது. ‘தெரியாத ஒருவரை மணந்து கொள்வதை விட தெரிந்த ஒருவரே மேல்! எப்படியும் யாரையாவது திருமணம் செய்து தானே ஆக வேண்டும்.’

அவள் குழப்பத்தோடு உறங்கினாள். மறுநாள் அவள் பள்ளிக்கு செல்லும் பொழுது, அவள் கண்கள் அரவிந்தை தேடவில்லை. மாறாக என்ன பேசுவது? என்ற கேள்வியே அவளை குடைந்தது.

அவளுக்கு எந்தவித சங்கடமும் கொடுக்காமல் அங்கு சிவகுரு ஐயா அமர்ந்திருந்தார். ஓரிரவில் அவர் வயது குறைந்தது போல் இருந்தது. “வாம்மா பாரதி!” அவர் உற்சாகமாக வரவேற்றார். இந்த திருமணத்தினால் அவருக்கு உண்டாகும் மகிழ்ச்சியை அவர் முகம் அப்பட்டமாக காட்டியது.

“சார்… ஐயா…” அவள் தடுமாற, “இனி மாமான்னு தான் கூப்பிடனும்.” அவர் சத்தமாக சிரிக்க, அவள் சங்கடத்தோடு சிரித்தாள்.

“என்ன அரவிந்த் வராம இந்த வயசானவர் வந்து உட்காந்திருக்கார்னு பார்க்கறியா பாரதி?” அவர் கேலி போல் கேட்க, அவள் பதில் சொல்ல தெரியாமல் தடுமாறினாள்.

“இனி உங்க கல்யாணம் வரை நான் தான் வருவேன். அப்புறம் நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து ஸ்கூலை பார்த்துக்கோங்க. கல்யாணம் வரைக்கும் எந்த தேவை இல்லாத பேச்சும் வந்திட கூடாதுனு உங்க அம்மாவும் அரவிந்த் அம்மாவும் நினைக்குறாங்க.” அவர் கூற, ‘ஒரே நாளில் எப்படி இவங்க எல்லாரும் கூட்டு சேர்ந்தாங்க?’ பாரதி அசந்து நின்றாள்.

சிவகுரு உற்சாகமாக பல விஷயங்கள் பேசிக் கொண்டிருந்தார். ஆனால், பாரதியின் எண்ணமோ பள்ளியையே சுற்றி வந்தது. ‘நான் இங்கயே இருக்கலாம், இந்த குழந்தைகளோடவே இருக்கலாம்.’ இந்த எண்ணம் அவள் சிந்தையை மட்டுமில்லை, அவளின் ஒவ்வொரு அணுவையும் முழுமையாக ஆக்கிரமித்தது.

அரவிந்த் அவளை அழைக்கலாம் என்று சில தடவை எண்ணினான். ஆனால், அழைத்து என்ன பேசுவது என்று அவனுக்கு தெரியவில்லை. சரி, பாரதியே அழைக்கட்டுமே என்று எண்ணினான். அவளுக்கு அழைக்கும் எண்ணம் எல்லாம் இல்லை.

‘அரவிந்த் யு.எஸ்க்கு போறது அவங்க வீட்டுக்கும் பிடிக்கலை. எனக்கும் அங்க போறதில்ல உடன்பாடில்லை. அரவிந்த் போறதுன்னா, அப்பப்ப போயிட்டு வரட்டும். அதை தடுக்க நான் யார்? நான் இங்க தான் இருக்க போறேன். என்னையும் யாரும் கட்டாயப்படுத்த முடியாது’ அவள் தன் வாழ்க்கையை பற்றி முடிவெடுத்துக் கொண்டாள்.

‘சீக்கிரம் கல்யாணத்தை பண்ணனும், பாரதிக்கு விசா அப்ளை பண்ணி சீக்கிரம் அவளை அங்க கூட்டிகிட்டு போகணும். அங்க என் வேலை அப்படியே இருக்குது.’ அவன் தன் வாழ்க்கையை பற்றி முடிவு எடுத்துக் கொண்டான்.

அனைவரும் எதிர்பார்த்த திருமண நாளும் வந்தது. காதல் என்ற எண்ணம் கிஞ்சித்தும் இல்லாமல் இருவருக்கும் சிறப்பாக திருமணம் நடைபெற்றது.

இருவரும் மிக நல்லவர்கள். இருவரும் பக்குவமான மனிதர்கள். தங்கள் வாழக்கையை பற்றி எண்ணத்தில் தெளிவான சிந்தனை கொண்டவர்கள்.

திருமணம் என்ற சொல்லை கேட்டதும் கதைகளிலும் திரைப்படங்களிலும் வருவது போல் அவர்களை காதல் சூழவில்லை, பட்டாம்பூச்சிகள் பறக்கவில்லை, ஆங்காங்கே மணி அடித்து விளக்குகள் எரியவில்லை. ஆனால்!

இந்த காதல், அன்பு, ஏக்கம், ஆசை இவை அனைத்தும் இவர்கள் தம்பதியராக மாறிய பின்னும் அமைதியாக இருக்குமா? அவரவர் வாழ்க்கையை அவர்களே தன்னிச்சையாக முடிவெடுத்துக் கொள்ள முடியுமா?

இவர்கள் வாழ்வில் நடனமாட, அதீத குறும்போடும், அதற்கு சிறிதும் குறையாத வில்லத்தனோடும் பல விஷயங்கள் காத்திருப்பது தெரியாமல், இருவரும் அவர்கள் திருமண வரவேற்பில் அனைவரிடம் இன்முகத்தோடு ஆசிகளை பெற்று கொண்டிருந்தனர்.

அடுத்த அத்தியாயம்

அத்தியாயம் – 15

15திருமணம் முடிந்த அன்றிரவு, அவர்கள் இருவருக்கும் தனிமையில் பேசும் சந்தர்ப்பம் கிடைத்தது. அவள் மெல்லிய பட்டு சரிகை கொண்ட பச்சை நிற சேலையில் இருந்தாள். அவள் காதில் ஜிமிக்கி அசைந்து ஆடியது.‘அழகா தான் இருக்கிறாளோ?’ என்ற கேள்வி அவனுள் எழ, ‘இந்த…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

forum ஒரு கருத்து உள்ளது

  1. அவளிடம் கலந்து பேசி இருக்கணும் தானே அதைவிட்டுவிட்டு தானே எல்லா முடிவும் எடுக்கிறான் அவளுக்கு தான் அமெரிக்கா போக விருப்பம் இல்லையே ,
    இதனால் இருவருக்கும் பிரச்சனை வரப்போகுது .

உங்கள் கருத்தைப் பகிருங்கள்