arrow_back
மலரும் அரும்பே! அத்தியாயம் – 15
மலரும் அரும்பே! chevron_right பகுதி 15 / 30

அத்தியாயம் – 15

visibility 605
star படைப்பை ரேட் செய்யுங்கள்
சராசரி 3.5/5 (4 மதிப்பீடுகள்)
பகிர்

15

திருமணம் முடிந்த அன்றிரவு, அவர்கள் இருவருக்கும் தனிமையில் பேசும் சந்தர்ப்பம் கிடைத்தது. அவள் மெல்லிய பட்டு சரிகை கொண்ட பச்சை நிற சேலையில் இருந்தாள். அவள் காதில் ஜிமிக்கி அசைந்து ஆடியது.

‘அழகா தான் இருக்கிறாளோ?’ என்ற கேள்வி அவனுள் எழ, ‘இந்த யோசனை இப்ப தேவையா?’ அவன் அதை ஒதுக்கிவிட்டு, “நம்ம கல்யாணம் உறுதியானதும் எனக்கு உங்க… உன்கிட்ட பேச சந்தர்ப்பம் கிடைக்கலை” திருமணத்தில் பொதுவாக பேசி கொண்ட வார்த்தைகளுக்கும் அறிமுகத்திற்கும் பின்னே இப்பொழுது தான் அவளிடம் பேசுகிறான் அரவிந்த்.

“பேச சந்தர்ப்பம் கிடைக்கலையா, இல்லை நீங்க அமைச்சிக்கலையா?” அவள் கண்களில் குறும்பு மின்ன கேட்க, “எப்பவும் டீச்சரம்மாவா மட்டுமே இருக்க கூடாது, எனக்கு மனைவியா அப்பப்ப இருக்கனும்.” அவன் கண்சிமிட்ட, அவள் உள்ளம் அவன் முகபாவனையை ரசித்தது.

அவன் ஜன்னல் மீது சாய்ந்திருந்தான். அவள் மெத்தையில் சம்மணமிட்டு அமர்ந்திருந்தாள். “நான் உன்கிட்ட பேசணும். உனக்கு இந்த டிரஸ் வசதின்னா இப்படியே இரு. இல்லைனா, நைட் டிரஸ் மாத்திக்கோ.” அவன் கூற, அவள் அவனை சங்கடமாக பார்க்க, “இங்க ரெண்டு ரூம் இருக்கு பாரதி, நீ அந்த ரூம் எடுத்துக்கோ. யாரும் இங்க வரமாட்டாங்க. நீ இங்க படுக்கறதுனாலும் உன் இஷ்டம், உள்ள படுக்கறதுனாலும் உன் இஷ்டம்.” அவன் கூற, அவள் அவனை ஆழமாக பார்த்தாள்.

“நான்… நான் இப்ப கல்யாணம் பண்ணிக்கனும்னே நினைக்கலை பாரதி. எல்லாரும் நான் கல்யாணம் பண்ணிக்கனும்னு ஆசைப்பட்டாங்க. எல்லாருக்கும் உன்னை ரொம்ப பிடிச்சிருந்தது. யாரோ ஒருத்தரை கல்யாணம் பண்றதுக்கு பதிலா…” அவன் தயங்க, “தெரியாத தேவதையை விட, தெரிந்த பிசாசே மேலுன்னு கல்யாணம் பண்ணிக்கிட்டிங்க?” அவள் தலைசாய்த்துக் கேட்டாள்.

‘ஆம்…’ என்று இயல்பாக தலையசைத்தவன், “ஏய், இல்லை… என்ன நீ உன் ஸ்டுடென்ட்டை மிரட்டுற மாதிரி என்கிட்ட போட்டு வாங்குறியா?” அவன் சண்டைக்கு தயாராக,

“நீங்க எப்படியோ, நான் உங்களை அப்படி தான் கல்யாணம் கட்டிக்கிட்டேன்.” அவள் நட்பு கரம் நீட்ட, அவன் அவள் கரங்களை பிடித்தான். அவனுள் ஏதோவொரு நிம்மதி பரவியது. “என்னை பிசாசுன்னு நாசூக்கா சொல்லிட்ட தானே?” அவன் புருவம் உயர்த்த, “அப்படி எல்லாம் இல்லை சார்” அவள் கூற, “இன்னமும் சார்ன்னு கூப்பிட்டா எப்படி?” அவன் ஒற்றை புருவம் உயர்த்தினான்.

“எப்படி கூப்பிட? பிராண நாதா, மன்னா, அரசே… இல்லை இன்னும் கொஞ்சம் காலத்துக்கு அப்புறம் வந்து மாமா, அத்தான், இல்லை என்னங்க, மச்சான்… எப்படி?” அவள் தீவிர யோசனையோடு, “இல்லைன்னா இப்ப எல்லாம் சீரியல்ல வர்ற மாதிரி சார், பெரிய ஐயா, சின்ன ஐயா…” அவள் பட்டியலிட்டாள்.

“என்னை அர்விந்த், அப்படியே கூப்பிடு.” அவன் உதட்டை பெரிதாக்கி தலையசைக்க, “அது மரியாதையா இருக்குமா?” அவள் கேட்க, “நீங்க இதுவரைக்கும் கொடுக்கிற மரியாதையே போதும் டீச்சரம்மா…” அவன் அவள் அருகே மெத்தையில் அமர்ந்து கொண்டான்.

“நான் டிரஸ் மாத்திட்டு இங்க வந்து படுத்துக்கிறேன். நான் அங்க தனியா படுத்து, யாருக்காவது விஷயம் தெரிஞ்சா தேவையில்லாத கேள்வி வரும். எதுக்கு பிரச்சனை?” என்று கூறி, தனக்கென்று ஒதுக்கப்பட்ட அறையில் உடை மாற்றிக் கொண்டு வந்தாள். தளர்வான ஒரு பேண்ட்டும் ஒரு சட்டையும் அணிந்து வந்து அவன் அருகே அமர்ந்தாள். இயல்பாக நடந்து கொண்ட அவளின் செய்கை, அவனுக்கு எந்தவித தொந்தரவும் இல்லாமல், நிம்மதியாய் இருந்தது.

“அப்புறம், நாளைக்கு காலையில நம்ம வீட்டுக்கு போகணும்.” கூறிய அவளை யோசனையாகப் பார்த்தான். குழப்பமாக இருந்த அவன் முகத்தை தெளிவுபடுத்தும் விதமாக, “நாளைக்கு மறுவீடு இருக்கு இல்ல? அங்க போகணும்” என, அவன் சம்மதமாக தலையசைத்தான். ‘நம்ம வீடு’ என்று இயல்பாக அவனை அவள் குடும்பத்தோடு இணைத்துக் கொண்டது, அவனுக்கு பிடித்திருந்தது.

அவன் மெதுவாக பேச்சை எடுத்தான். “நாம் கொஞ்ச நாள்ல யூ.எஸ். போற மாதிரி இருக்கும். உனக்கும் விசா அப்ளை பண்ணனும்.” என்று அவன் கூற, அவள் சம்மதமாக தலையசைத்தாள்.

“உனக்கு பாஸ்போர்ட் எல்லாம் ஏற்கனவே இருக்கு. டிபென்டெண்ட் விசா தான். தேவையான பாதி வேலையை நான் ஏற்கனவே பண்ணிட்டேன். அதனால வேலை கடகடன்னு நடந்துரும்” அவன் கூற, அவள் மறுப்பேதும் தெரிவிக்கவில்லை, அவனை மேலும் கேள்வியிட்டு துளைக்கவில்லை. ‘எது நடக்கணுமோ அது அப்படியே நடக்கட்டும்’ என்று அவள் மௌனமாக அமர்ந்து கொண்டாள்.

“அதுவரைக்கும் நம்ம ரெண்டு பேரும் ஸ்கூலுக்கு எப்பயுமே போவோம் தானே?” என்று அவள் கேட்க, அவன் அமைதியாக தலையசைத்தான்.

அவளுக்குள் பல கேள்வி இருந்தது. ‘கூட வருவேன், ஆனா அதுக்கப்புறம் நான் அங்கேயே தான் இருக்கணுமா? கொஞ்ச நாளில் திரும்ப இந்தியா வந்துடலாமா? நான் இங்க இருக்கேன், நீங்க போயிட்டு போயிட்டு வாங்க…’ இப்படி அவளுக்கு பல விஷயங்கள் பேசுவதற்கும், கேட்பதற்கும் இருந்தது.

ஆனால், அனாவசியமான பிரச்சனையை முதல் நாளே வளர்த்து விட வேண்டாம், கருத்து வேறுபாடு வந்து விட வேண்டாம் என்ற எண்ணத்தில், அவள் தன் வாயை மூடிக் கொண்டாள்.

பொதுவாக பேச வேண்டும் என்று நினைத்துதான் இருவரும் படுத்தனர். ஆனால் அன்று கல்யாணம் ஏற்பட்ட களைப்பில் இருவரும் ஆழ்ந்த நித்திரைக்கு சென்றனர்.

மறுநாள் காலையில், முந்தைய நாள் களைப்பில் அரவிந்தன் ஆழந்த நித்திரையில் இருந்தான். என்னதான் களைப்பு இருந்தாலும் பாரதியால் புது இடத்தில நிம்மதியாக தூங்க முடியவில்லை. சூரியன் அதன் வேலையை செய்யும் முன்பே விழித்துவிட்டாள். அவர்கள் அறையில் குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டிருந்தாள். மணி ஐந்தை எட்டியதும் தன் வேலைகளை தொடங்கினாள்.

அவர்கள் அறையில் இருந்த பால்கனியில் யோகா செய்யலாம் என்று எண்ணி தன் கண்களை அறை முழுக்க சுழல விட்டாள். ‘யோகா மேட் இருக்கே’ குதூகலத்தில், அவன் குணத்தையும் ஒழுக்கத்தையும் மனதில் மெச்சிக்கொண்டாள். அதில், யோகா செய்து முடித்துவிட்டு குளித்து உடை மாற்றினாள். தூங்கும் அவனை எந்த தொந்தரவும் செய்யாமல் வாசல் பக்கம் சென்று இரட்டை கம்பியில் கம்பி தாமரை கோலம் வரைந்தாள்.

‘முதல் நாள் கோலம் போடறோம், விளக்கு போடலாம்’ என்ற எண்ணம் தோன்ற, ஒவ்வொரு இதழிலும் விளக்கு தீபம் எரிவது போல் கம்பியை நீட்டினாள். கோலம் எளிமையாக நேர்த்தியாக அழகாக இருந்தது. அவளுக்கு திருப்தி ஏற்பட்டதும் சமையலறையை நோக்கி நடந்தாள், உள்ளே செல்லும் முன் அவளுள் மெலிதான தடுமாற்றம் வந்தது.

‘உள்ளே போகலாமா?’ என்ற கேள்வி எழும்பத்தான் செய்தது. ‘உள்ளே போய்தான் ஆகணும். யார் வீடோன்னு எத்தனை நாள் விலகியே இருக்க முடியும்?’ என்ற தடுமாற்றத்தோடு பாரதி நிற்க, “அம்மா! அதுக்குள்ள எழுந்துட்டீங்களா? இங்க எல்லாரும் மெதுவா தான் வருவாங்க” கூறியபடி சமையல்காரம்மா வந்தார்.

பாரதிக்கு அவரை முன்பே தெரியும், அவர் அவ்வப்பொழுது பள்ளிக்கு வருவதுண்டு. “செல்வி அக்கா, காலைக்கு என்ன செய்வீங்க?” அவள் பொத்தாம் பொதுவாக கேள்வி கேட்க ஆரம்பித்தாள். வீட்டு நடப்பை தெரிந்து கொண்டு, “இன்னைக்கு நான் காலை டிபன் செய்றேன்.” என்று அவள் கூறவும்,

“டீச்சர் அம்மா எப்பவுமே வேகம் தான்” தன் புது முதலாளி அம்மாவை மெச்சிக்கொண்டே, அவள் கூற்றுக்கு அடிபணிந்து, அவள் சொல்வதை செய்ய ஆரம்பித்தார்.

அனைவரும் தூக்கம் கலைந்து வர ஆரம்பிக்க, “மாமா” என்று பெரியவருக்கு காபியை அவள் நீட்ட, “இதெல்லாம் எதுக்கும்மா? நானே டைனிங் ரூமுக்கு வருவேனே! அப்புறம் தான் செல்வி கொடுப்பா” காபி அவரை தேடி வந்ததில் அவருக்கு சந்தோசம் இருந்தாலும், கரிசனத்தோடு கேட்டார்.

“ஏன் மாமா, நான் வந்து கொடுத்தா ஆகாதா?” அவள் விடாப்பிடியாக கேட்க, அவர் பெருங்குரலில் சிரித்தார்.

“என்ன, மருமகள் வந்ததும் ஒரே சிரிப்பா இருக்கு?” நித்திய கல்யாணி கேட்க, “அதுவா?” இப்பொழுது சிவகுருவின் முகத்தில் குறும்பு கூத்தாடியது. ‘என்ன?’ என்பது போல் நித்திய கல்யாணி பார்த்தார்.

“எங்க அம்மா கையால காபி குடிச்சதுக்கு அப்புறம், பல வருஷத்துக்கு அப்புறம், இப்போ இன்னைக்கு தான் நான் நல்ல காபி குடிக்கிறேன்.” அவர் அழுத்தமாக கூறிச் சிரிக்க, “ஓ! புது மருமகள் கொடுத்த ஒரு காப்பிக்கே இத்தனை பேச்சா?” அவர் கழுத்தை நொடிக்க,

“மாமா, நீங்க அத்தை கிட்ட வம்பு பண்ணனும் நினைக்கிறீங்கனா, அது அத்தை கிட்ட மட்டுமே பண்ணுங்க, என்னை ஏன் மாமா கோர்த்து விடறீங்க?” அவள் அப்பாவியாக கண்களைச் சுருக்கினாள். “அத்தை, நீங்க காபி குடிங்க.” அவள் கொடுக்க, அவளிடம் காபியை வாங்கிக்கொண்ட அவர் கண்கலங்கினார்.

“ஏன் அத்தை கண் கலங்கறீங்க? காபி அவ்வளவு மோசமாவா இருக்கு?” அவள் கேலி போலவே வினவ,

“உங்க மாமா சொன்னது சரிதான்.” அவரும் கேலியாகவே பதில் உரைத்தார். “மாமா என்ன சொன்னாங்க?” அவள் இப்போது சிவகுருவின் பக்கம் பார்வையை திருப்ப,

“அப்பா வேற என்ன சொல்லிருப்பாங்க? பாரதிக்கு வாய் துடுக்கு அதிகம், ரொம்ப பேசுவான்னு சொல்லிருப்பாங்க.” இப்போது நமட்டு சிரிப்போடு அங்கு வந்து அமர்ந்தான் அரவிந்தன்.

“வாய் துடுக்கு நல்லதுக்கா இருந்தா தப்பே இல்ல.” இப்பொழுது நாக்கை துருத்தினாள் பாரதி. இவை அனைத்தையும் மாடியில் இருந்து மௌனமாக பார்த்துக் கொண்டிருந்தாள் விஜயா.

“உங்களுக்கு காபியா டீயா?” என்று தெரிந்து கொண்டே அரவிந்திடம் அவள் கேட்க, “எதுனாலும் ஓகே.” என்றான் அரவிந்தன்.

“என்னடா, மனைவி வந்ததும் எதுனாலும் சரின்னு சொல்ற அளவுக்கு ஒரே நாள்ல மாறிட்ட?” என்று தன் தம்பியை கேலி செய்தபடி அங்கு வந்தான் மோகன்.

“அத்தான், உங்களுக்கு காபி தானே?” என்று கேட்டுக்கொண்டே அவனுக்கு காபியை கொடுத்தாள்.

“அது எப்படி பாரதி, எங்க எல்லாருக்கும் என்ன வேணும்னு உனக்கு தெரிஞ்சிருக்கு. என் தம்பிக்கு என்ன வேணும்னு மட்டும் உனக்கு தெரியாதா?” மோகன் கிண்டல் செய்ய,

‘இந்த மனுஷனுக்கு இவங்க கிட்ட எல்லாம் சிரிச்சு பேச முடியும், என்கிட்ட மட்டும் பேச முடியாது.’ என்ற எண்ணத்தோடு தன் கணவனை மாடியில் இருந்து நோட்டமிட்டு கொண்டிருந்தாள் விஜயா. அவளுள் மெல்லிய பொறாமை எட்டிப் பார்த்தது.

அடுத்த அத்தியாயம்

அத்தியாயம் – 16

16விஜயாவின் எண்ண ஓட்டம் எதுவுமறியாமல் கீழே அவர்கள் சம்பாஷணை தொடர்ந்தது. “உங்களுக்கு என்ன பிடிக்கும்னு செல்வி அக்கா கிட்ட கேட்க முடியும், ஆனா இவங்களுக்கு என்ன பிடிக்குமுன்னு செல்வி அக்காகிட்ட கேட்டா நல்லா இருக்காதில்லை. அது தான் அவங்ககிட்டயே கேக்கிறேன்.” என்று…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

இந்தக் கதையைப் பற்றி விவாதிக்கவும் 1

  1. Thaniபொதுக் கருத்துThani

    சில நேரங்களில் பொறாமை கூட நல்லது செய்யும் இப்போ விஐயாக்கு வந்தது போல்😀 அப்புறமா இது எனக்கும் உரிமை பட்ட வீடு என்று எல்லாத்தையும் இழுத்து வைத்து செயவாங்க என்று நினைக்கிறேன் .😀

உங்கள் கருத்தைப் பகிருங்கள்