அத்தியாயம் – 16
16
விஜயாவின் எண்ண ஓட்டம் எதுவுமறியாமல் கீழே அவர்கள் சம்பாஷணை தொடர்ந்தது. “உங்களுக்கு என்ன பிடிக்கும்னு செல்வி அக்கா கிட்ட கேட்க முடியும், ஆனா இவங்களுக்கு என்ன பிடிக்குமுன்னு செல்வி அக்காகிட்ட கேட்டா நல்லா இருக்காதில்லை. அது தான் அவங்ககிட்டயே கேக்கிறேன்.” என்று அவள் அரவிந்தனை பார்த்தாள்.
“அது சரி, டீச்சர் சொன்னா சரிதான்.” என்று மோகன் தன் பேச்சை முடித்துக் கொண்டு மேலே அவன் அறைக்கு சென்றான். அவன் அறைக்குள் நுழைகையில் வழியில் விஜயா நின்று கொண்டிருந்தாள்.
அவன் அவளை ஆழமாக பார்த்தான், அவனின் கண்கள் கீழே பேசிக் கொண்டிருப்பவர்களை வாஞ்சையோடு பார்த்தது. ‘எங்க அம்மா, அப்பா அப்படி என்ன எதிர்பார்த்தாங்க? கலகலன்னு பேசி சிரிக்கணும். அவ்வளவுதானே எதிர்பார்த்தாங்க. குழந்தைகளிடம் அக்கறையா இருக்கனும், குழந்தைகளோட இருக்கணும், குடும்பத்துல எல்லார்கிட்டையும் அன்பா பேசி பழகணும். ஆனா நீ ஒட்டவே மாட்டேங்குறியே?’
அவன் கண்கள் அவளை குற்றம் சாட்டியது. ஆனால் அவன் இதழ்கள் கிஞ்சித்தும் திறக்கவில்லை. அவன் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அவள் விழிகளும் கீழே நடப்பவற்றை பார்த்துக் கொண்டிருந்தது. ஆனால் அவள் மனம் வேறு கோணத்தில் கணக்கிட்டது.
‘இப்ப வந்த மருமகள் மாதிரி தான் நானும் இருக்கணும்னு நினைக்கிறாங்களா? அவளுக்கு என்ன கொஞ்ச நாள் இருப்பா, அப்புறம் அமெரிக்கா போய்டுவா. நான் இங்கே இவங்களுக்கு என் காலம் முழுக்க வடிச்சு கொட்டணுமா? இவங்களை பார்த்துட்டு சும்மா இருக்கணுமா? இதெல்லாம் எத்தனை நாளைக்குன்னு நானும் பார்க்குறேன்.’ விஜயா மனதில் கணக்கிட்டு கொண்டாள்.
கீழே நின்று கொண்டிருந்த பாரதி மேலே பார்த்தாள். அவர்கள் எதுவும் பேசவில்லை. ஆனால் அவர்கள் விழிகள் சம்பாஷித்துக் கொண்டன. குடும்ப விஷயத்தை பாரதியால் முழுதாக கணிக்க முடியவில்லை, ஆனால், ‘எதுவோ சரியில்லை’ என்று அவளால் புரிந்துகொள்ள முடிந்தது.
அப்பொழுதுதான் இந்த வீட்டின் அமைப்பை அவள் உள் வாங்கினாள். மிகப்பெரிய ஹால், அங்கிருந்தே வாசலை பார்க்கும் படியாக இருந்தது. அவள் போட்ட கோலம் அங்கிருந்தே தெளிவாகத் தெரிந்தது. அனைவரின் கண்களும் அந்த கோலத்தை ஒருமுறை சிலாகித்து பார்த்தது. அதையும் அவள் கவனித்தாள். ஹாலில் அவள் நின்று கொண்டிருந்த இடத்திலிருந்தே சமையலறையும் பார்த்துக் கொள்ள முடிந்தது, செல்வநாயகி என்ன செய்கிறார் என்பதும் தெரிந்தது.
கீழே இருந்த படுக்கையறை உள்பக்கமாக இருந்தது, அதில் படுத்து இருப்பவர்களை பார்க்க முடியாது. ‘ஆனால், மாமாவும் அத்தையும் இருக்காங்க.’ ஹாலின் பாதி வரை மேல் பக்கம் கொஞ்சம் வெட்டவெளி போல் இருக்க, மேலிருப்பவர்கள் கீழே நடப்பவற்றை பார்க்க முடியும். கீழே இருப்பவர்கள் அறைக்குள் இல்லாமல் மாடியில் நின்று பேசுவர்களை பார்க்க முடியும். அப்படிதான் பாரதி, விஜயாவையும் மோகனையும் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அரவிந்த் தன் அலைபேசியை பார்த்து கொண்டிருக்க, பாரதி படியேறி மேலே செல்ல, மோகன் எதிர்பக்கம் வந்தான். எதிரே வந்த மோகனிடம் “சைந்தவி, வருண்?” என்று பாரதி கேட்க,
“அவங்க பக்கத்து ரூம்ல தூங்கிட்டு இருக்காங்க.” மோகன் கூற, அவள் அந்த அறைக்கு சென்று இருவரையும் எழுப்பினாள். இருவரும் சட்டென்று எழுந்து அமர்ந்தனர். ஆசிரியர் என்ற பயம் இருவர் கண்களிலும் தெரிய, அதை அவள் ரகசியப் புன்னகையோடு மனதில் குறித்துக் கொண்டாள்.
“நாம அப்படியே வெளியே போலாமா? கிளம்பி வாங்க.” அவர்கள் இருவரிடமும் கூற, இருவரும் சந்தோஷமாக கிளம்ப ஆயத்தமானார்கள். தன்னிடம் முரண்டு பிடிக்கும் குழந்தைகள் அவளிடம் சர்வமயமாக அடங்கி இருப்பதை பார்த்த விஜயாவுக்கு மெல்லிய ஆச்சரியமும் தோன்றியது. அடங்கி இருப்பதை தாண்டி சைந்தவி நேற்று ஒரு நாளில் அவளிடம் காட்டிய நெருக்கமும் அவளுள் மெலிதாக தைத்தது. அதே நேரத்தில் மீண்டும் மெல்லிய பொறாமை உணர்வும் எட்டிப் பார்த்தது.
குழந்தைகள் குளிக்க சென்றதும், பாரதி கீழே வந்து அரவிந்த் அருகே அமர்ந்து அவன் முகத்தை பார்த்தாள். “என்ன?” என்று அவன் புருவம் உயர்த்த, “இன்னைக்கு மறுவீட்டுக்கு எல்லாரும் வருவாங்க தானே?” என்று அவள் கேள்வியாக நிறுத்த, அவன் ஆமோதிப்பாக தலையசைத்தான்.
“நம்ம கொஞ்சம் முன்னாடியே போலாமா?” அவள் கோரிக்கை விடுக்க, “போலாம், ஆனால் ஏன்னு தெரிஞ்சுக்கலாமா?” அவன் இப்பொழுது கேள்வியாகவே நிறுத்தினான்.
“எங்க அம்மா, அப்பாவ ரொம்ப தேடிருச்சு…” அவள் புன்னகையோடு சொல்ல, “அப்ப கண்டிப்பா சீக்கிரம் கூட்டிட்டு போயிடனும்.” என்று அவன் இப்பொழுது கேலி போலவே சொன்னான். “நம்ம போகும் பொழுது குழந்தைகளை கூட்டிட்டு போவோமா?” அவள் ஆர்வமாக கேட்க, “எனக்கு எந்த ஆட்சயப்பனையும் இல்லை. ஆனால் அண்ணி கிட்ட கேட்டுக்கோ” என்று அவன் முடிவு எடுக்கும் இடத்திலிருந்து நழுவிக் கொண்டான். அவள் சம்மதமாக தலையசைத்தாள்.
விஜயா வந்ததும், “நீங்க க்ரீன் டீ குடிப்பீங்கனு செல்வி அக்கா சொன்னாங்க. நான் எடுத்துட்டு வரட்டுமா?” அவள் இன்முகமாக கேட்க, விஜயா தலை அசைத்தாள்.
வழக்கத்தை விட இன்று ருசியாக இருந்தது. ‘க்ரீன் டீயில் என்ன ருசி?’ என்று தன்னை தானே விஜயா கொட்டிக் கொள்ளும் பொழுதே, “லைட்டா லெமன், ஒரு இஞ்சி தட்டி போட்டு, ஒரு இலை துளசி, ஒரு இலை புதினா கசக்கி போட்டு, தேன் கொஞ்சமா விட்டேன். உங்களுக்கு ஓகேவா அக்கா?” அவள் கேட்க, “வழக்கமா சும்மா அப்படியே சுடுதண்ணில போட்டு குடிப்பேன் அவ்வளவு தான். ஆனால், இது நல்லாருக்கு.” என்று விஜயா கூற, பாரதி புன்னகைத்தாள்.
இவர்களை சற்று தொலைவில் அமர்ந்திருந்த அரவிந்தன் பார்த்துக் கொண்டிருந்தான். ‘அண்ணி, எப்பவுமே கலகலன்னு பேச மாட்டாங்க. இப்ப சுத்தமா பேசறதில்லை. பேசினாலும் சிடுசிடு தான். பாரதி எப்படி சமாளிப்பாளோ? அவங்க கிட்ட போய் பேச்சு வளர்க்குறா.’ தன் மனைவிக்காக கவலை கொண்டான்.
“வேலை கம்மியா பார்க்க தான் க்ரீன் டீ. அதுக்காக இவ்வளவு மெனக்கிட முடியுமா?” விஜயா கேட்க, “இதுல என்ன அக்கா இருக்கு, நான் பண்றேன்.” அவள் கூறிக்கொண்டே, காலை சமையல் வேலையை கவனிக்க, “நீ பழக்கப்படுத்திட்டு போய்ட்டா, அப்புறம் எங்களுக்கு தானே கஷ்டம்.” அவள் பொதுவாக கூற, “நான் எங்கையும் போக மாட்டேன் அக்கா, கொஞ்ச நாள் தான் அமேரிக்கா. பெரும்பாலும் நான் இங்க தான் இருப்பேன்.” அவள் கூற, அரவிந்த் முகத்தில் சிந்தனை ரேகைகள் படிந்தது.
‘இவ புரிஞ்சி தான் பேசுறாளா?’ என்ற ஐயம் அவளுக்கு வந்தது. ‘புருஷன் இல்லாம இவ இங்க என்ன பண்ண போறா?’ விஜயா அரவிந்தனை கூர்மையாக பார்த்தாள். அவளுக்கு சில விஷயங்கள் புரிவது போலவும் புரியாதது போலவும் இருந்தது.
‘இவன் அம்மா அப்பாவுக்காக தான் கல்யாணமே பண்ணினானா? அண்ணன் ஒரு ரகம் அப்படின்னா, தம்பி அதுக்கு மேல இருப்பான் போல. என் புருஷன் மோகனே பரவாயில்லை போல!’ அவள் மூளை வேகவேகமாக சிந்தித்தது.
‘இவள் வெகுளியா, இல்லை வெகுளி போல் நடிக்குறாளா?’ விஜயா தன் சிந்தனையை வேறு கோணத்தில் திருப்பி யோசனையோடு அவளை பார்த்தாள்.
“அக்கா, இன்னைக்கு மறுவீட்டுக்கு வாங்க. நான் அரவிந்த் கூட முன்னாடியே கிளம்பறேன். சைந்தவி, வருணை நான் கூட கூட்டிகிட்டு போகட்டுமா?” அவள் கண்களில் ஆசை மின்ன அனுமதி கேட்டு நின்றாள்.
விஜயா அவளை அளவிடும் விதமாக பார்த்தாள். ‘பாரதியை பார்த்தா நடிக்கிற மாதிரி தெரியலை.’ படித்து தொழில் செய்யும் விஜயா பாரதியை சரியாகவே கணிக்க தொடங்கினாள். பாரதியின் முகத்தில் அன்பு மட்டுமே தெரிய, “அவங்க உனக்கும் பசங்க தான். அதனால், நீ என்கிட்ட பர்மிஷன் எல்லாம் கேட்க வேணாம்.” அவள் கூற, பாரதியின் முகம் பளிச்சிட்டது. “தேங்க்ஸ்… எனக்கு பசங்க கூட இருக்கறது தான் ரொம்ப பிடிக்கும்.” அவள் கூற, “சைந்தவிக்கு உன்னை ரொம்ப பிடிக்கும். ஏன்னு இப்ப தான் புரியுது.” அவள் கூற, அங்கு அவர்களுக்கு இடையில் ஒரு மெல்லிய நட்பு மலர்ந்தது.
அரவிந்த் அவளை இப்பொழுது ஆச்சர்யமாக பார்த்தான். ஆனால், விஜயா அவளை பரிதாபமாக பார்த்தாள். ‘இந்த வீட்டுக்கு வீட்டை பார்த்துக்கொள்ள ஒரு பொண்ணு வேணும். இந்த பொண்ண பார்த்தா நல்ல பொண்ணா தெரியுது. ஆனால், இந்த பொண்ணோட வாழ்க்கை? இவ இங்கையும் அரவிந்த் அங்கையும் இருந்தா என்ன ஆகும்? இவ அத்தை மாமாவை நல்லா பார்த்துப்பா. ஆனால், அவ வாழ்க்கை! மோகனுக்கு நான் இப்படி தான் இருக்குமுன்னு ஆசை. ஆனால், நான் என்ன ஏமாளியா?’ விஜயா யோசனையோடு அங்கு அமர்ந்தாள்.
‘அரவிந்திடம் பேசலாமா, இல்லை இந்த பெண்ணிடம்?’ என்று யோசித்தாள். ‘எனக்கு எதற்கு வீண் வம்பு? அவங்கவங்க வாழ்க்கையை அவங்க தான் பார்த்துக்கணும்.’ என்று தோளை குலுக்கி கொண்டு, தன் அறைக்கு சென்றாள்.
ஆனால், அரவிந்த் இப்பொழுது தீவிர சிந்தனையில் இருந்தான். ‘பாரதி பேசுறதை பார்த்தா ஒருவேளை, பாரதி நம்ம கூட யு.எஸ் வரமாட்டாளோ?’ என்ற ஐயம் அவனுக்கு வந்தது. சில நிமிட யோசனைக்கு பின், ‘வரலைன்னா என்ன, நேத்து வரைக்கும் நான் என்ன பாரதி கூடவா இருந்தேன்?’ அவன் அவளை பற்றிய சிந்தனையை ஒதுக்கி தன் வேலையை பார்க்க சென்றான்.
ஆனால், காலப்போக்கில் அவளை அவனால் ஒதுக்க முடியுமா? என்று காலம் அவனிடம் கேள்வியாக நிற்க தயாராகிய அதே வேளையில், அமெரிக்காவில் இந்தியர்களுக்கான வீசாவின் சட்ட திட்டத்தில் மாற்றங்கள் வந்தது.





விஐயா சீக்கிரமா திருந்தி விடுவாங்க போல் திருந்தி பசங்களை கணவனை பாத்துக்கிட்டாளே போதும்.