அத்தியாயம் – 17
17
“அப்பா…” அழைத்துக் கொண்டே வீட்டிற்குள் சென்றாள் பாரதி. அவளை பார்த்ததும் அவள் தந்தை முகம் மலர்ந்தார். “அம்மா…” கட்டியணைத்து அவர் கன்னத்தில் இதழ் பதித்தாள். அவள் செய்கையை அவன் மட்டுமில்லை, அவனோடு வந்த வருண் மற்றும் சைந்தவியும் விசித்திரமாக பார்த்தனர்.
“மாப்பிள்ளை வாங்க…” அவர்கள் வரவேற்க, அவன் அருகே வந்து நின்றாள் பாரதி. “எல்லாரையும் பார்த்து ஒரு வருஷம் இருக்குமா?” அவள் செவிகளில் அவன் கேலியாக கிசுகிசுக்க, “பன்னிரண்டு மணி நேரத்துக்கு மேல ஆச்சு” அவள் சோகமாக கண்விரித்தாள்.
அவள் வந்ததும், வீட்டின் அக்கம் பக்கத்தில் இருந்த அனைத்து குழந்தைகளும் அங்கு வந்தனர். வருண், சைந்தவி இருவரையும் அவர்கள் அனைவருக்கும் அறிமுகப்படுத்தினாள். வருணும் சைந்தவியும் அவர்களோடு இணைந்து கொள்ள, எல்லோரும் விளையாட ஆரம்பித்தனர்.
அரவிந்த், அவள் தந்தை சிதம்பரத்தோடு பேசிக்கொண்டிருந்தான். அவன் பேசினாலும், கண்கள் அவளையே வட்டம் அடித்துக் கொண்டிருந்தன. ‘காலையில் சுவாரஸ்யம் இல்லாமல் நகரும் அவன் வீட்டை, நொடி பொழுதில் சுவாரஸ்யமாக மாற்றிய பொறுப்பான பெண் தான் இவளா? இல்லை, எல்லா மாணவர்களையும் மிரட்டும் ஆசிரியை இவளா? இல்லை இது தான் இவளா?’ என்று அவன் மனம் கேள்வி எழுப்பும் வகையில், அவள் குழந்தைகளோடு குழந்தையாக மாறி விளையாடிக் கொண்டிருந்தாள்.
அவர்கள் நன்கு விளையாட ஆரம்பித்ததும், பாரதி சமையலறைக்குள் சென்றாள். உறவினர்கள் பலரும் அங்கு சூழ்ந்திருந்தனர். காலை பொழுதில் அவர்கள் வீட்டில் நடந்ததை, பேசியதை அவள் அம்மாவுக்கு மட்டும் கேட்கும்படியாக பேசிக்கொண்டே சமையலில் உதவ ஆரம்பித்தாள். பூரணியின் மனதில் பாரதியின் முகத்தில் தெரிந்த சந்தோஷத்தில் சற்று நிம்மதி பரவியது. ஆனால் அந்த நிம்மதி, அவள் பேச ஆரம்பித்ததும் குறைய ஆரம்பித்தது.
காலையில் நடந்த பேச்சில் அமெரிக்காவை பற்றி பாரதி பேசியதில் பூரணிக்கு திருப்தி இல்லை. ‘இன்னும் என்ன பிடிவாதம்?’ என்ற கேள்வி எழுந்தாலும், மௌனமாக கேட்டுக் கொண்டிருந்தார். தன் மகள் அனைத்தையும் கூறியபின், அவரது முகத்தில் சிந்தனை ரேகை பரவியது. ‘எப்படி சொல்வது? சொன்னால் பாரதி எப்படி புரிந்து கொள்வாள்? பாரதி புரிந்து கொள்வது போல் எப்படி சொல்வது? எல்லாரும் இருக்காங்களே’ இந்த கேள்விகள் அவர் மனதை குடைந்தன.
வீட்டில் கூடியிருந்த சொந்தக்காரர்களையும் பார்த்தார், ‘இந்த விஷயம் வெளியே தெரிந்து விடக்கூடாது. பணக்கார சம்பந்தம், அதனால் தான் இத்தனை குளறுபடி என்ற பேச்சு எழும்பக் கூடும்.’ என்று தோன்ற, அமைதியாக இருந்துவிட்டார்.
அரவிந்த் வீட்டில் அனைவரும் வந்ததும், சில சம்பிரதாயங்கள் நடந்தபின் விருந்து முடிய, அவர்கள் வீட்டிற்கு கிளம்பினர். அரவிந்தும் பாரதியும் சற்று தாமதமாக கிளம்புவதாக இருந்தது. அப்பொழுது, “சித்தி” என்று அவள் கைகளை பிடித்து கொண்டு, சைந்தவி அவர்களோடு இருப்பதாக பிடிவாதம் பிடிக்க, பாரதியும் அவளை கூட்டிவருவதாக கூறி தங்களுடன் இருத்திக் கொண்டாள். சைந்தவி இவர்களோடு தங்கிவிட குழந்தைகள் மீண்டும் அங்கு விளையாட ஆரம்பித்தனர்.
உணவு முடிந்ததும் அனைத்து சொந்தக்காரர்களும் வீட்டிற்கு கிளம்பிவிட்டனர். அனைவரின் வீடும் அருகே இருப்பதால் அவ்வப்போது அவர்கள் வந்து போய்கொண்டிருந்தனர்.
அனைவரும் சென்றபின், பூரணி பாரதியை தனியே அழைத்து, “பாரதி, மாப்பிள்ளை எங்க இருக்காங்களோ அங்கதான் நீயும் இருக்கணும். இங்க தான் இருப்பேன்னு சொல்லக்கூடாது. மாப்பிள்ளை நம்ம ஊர் தானே. அதனால, அடிக்கடி வருவாங்க. அப்ப மட்டும் நீ நம்ம ஊருக்கு வந்தா போதும். நீ இனி மேல் அங்க போக மாட்டேன், இங்கு போக மாட்டேன்னு சொல்லக்கூடாது.” என்று அறிவுரை கூற,
“அம்மா, என்ன பேச்சு இது? என்னால் அங்க ரொம்ப நாள் இருக்க முடியாது. உங்க எல்லாரையும் விட்டுட்டு, ஸ்கூல்ல விட்டுட்டு… நான் என்ன போகவே மாட்டேன்னா சொன்னேன். நான் அங்கையும் இங்கயுமா இருக்கேன். அவங்க அவங்க வசதிப்படி வரட்டும் போகட்டும்.” என்று பாரதி செல்லம் கொஞ்சினாள்.
“இந்த பேச்சுக்கே இடம் கிடையாது பாரதி. மாப்பிள்ளை எங்க இருக்காங்களோ அங்கதான் நீ இருக்கணும். மாப்பிள்ளை ஒரு பக்கம், நீ ஒரு பக்கம்னு இருப்பீங்களா?” என்று பூரணி சிடுசிடுக்க,
“அம்மா, இதை நான் பார்த்துக்கிறேன். நான் அப்பாகிட்ட பேசுறேன்” அவள் நழுவ முயல, “இதுல அப்பா சொல்றதுக்கு ஒன்னும் இல்லை. நான் சொல்றது தான் அப்பாவும் சொல்லுவாங்க.” என்று அவர் கூற, “இல்லம்மா.” என்று மீண்டும் பாரதி மறுப்பு தெரிவித்தாள்.
“அத்தை, மாமா ஒன்னுமே சொல்லல, அவங்களுக்கும் இது சம்மதம் தான். அவங்க எல்லாம் ஒன்னும் நினைக்க மாட்டாங்க.” என்று சிறு குழந்தை போல் பாரதி பிடிவாதம் பிடிக்க, பூரணி நொந்தே போனார்.
‘அவங்களுக்கு என்ன வசதியா தான் இருக்கும்.’ அவர் மனம் கோபம் கொள்ள ஆரம்பித்தது. “இதுக்குத்தான் பணக்கார சம்பந்தமே வேண்டாம்னு நான் சொன்னேன்.” என்று பூரணி இப்பொழுது மாற்றிப் பேச, “அம்மா… மாத்தி பேசாதீங்க, நான் தான் யோசிச்சேன். இந்த இடம் வந்ததும், ‘நல்ல பையன், நல்ல குடும்பம்’ அப்படின்னு நீங்கதான் சொன்னீங்க.” என்று இவள் இப்பொழுது கோபம் கொள்ள, அதே நேரம் குழந்தைகள் விளையாடிய பந்து இவர்கள் பக்கம் வந்தது. அதை எடுக்க குழந்தைகள் வரும்முன் அங்கு வந்திருந்த அரவிந்த் அவர்கள் இருவரின் பேச்சையும் முழுமையாக கேட்டிருந்தான்.
‘இன்னைக்கு காலையில் அண்ணி கிட்டயும் இப்படி தான் சொன்னா, நான் இங்க இருப்பேன், அங்க இருப்பேன்னு, இவ எங்க இருந்தா என்ன? இப்படித்தான் எல்லார் கிட்டயும் டமாரம் போட்டு சொல்லனுமா? அண்ணி காலையில் என்னை ஒரு மாதிரி பார்த்தாங்க? பாரதி அம்மா மாதிரி தான் அண்ணியும் யோசிச்சிருப்பாங்களோ?’ அவன் தன் நெஞ்சை நீவிக்கொண்டே, குழந்தைகள் இருக்கும் இடத்திற்கு சென்றான்.
அவன் மனதில் குழப்பம் ஏற்பட்டது. ‘அது மட்டும் இல்லாம, அவ ஒரு பக்கம், நான் ஒரு பக்கம் இருக்கேன்னு சொன்னா, அம்மா அப்பா மட்டும் ஒத்துப்பாங்களா என்ன? நிச்சயம் மாட்டாங்க. எது எப்படி இருந்தாலும் இவ என்கூட வந்துதானே ஆகணும்.’
காலையில் இருந்த சிந்தனையின் போக்கு இப்பொழுது இவனிடம் மாறி இருந்தது. ‘அது மட்டுமில்லாம இவளை இங்க தனியா விட்டா எல்லாத்தயும் எல்லார் கிட்டயும் சொல்லிடுவா போல. கேட்டா, நான் எந்த தப்பும் பண்ணலை வெளிப்படையா இருப்பேன்னு சொல்லுவா.’ அவளை பற்றி அவன் யோசனை தீவிரமடைந்தது.
‘பாரதியோட அம்மா நினைக்கிறதும் சரிதான். ஆளுக்கு ஒரு பக்கம் இருக்க கல்யாணம் பண்ணனும்னு யாரும் நினைக்க மாட்டாங்க. எங்க இருந்தாலும் பாரதி என் பொறுப்பு தானே? அப்படின்னா, அவ என்கூட இருக்கிறது தான் சரி’ முதன்முறையாக, பாரதியை தன் மனைவியாகச் சிந்தித்து, அவளுக்காக யோசித்தான்.
அதன் பின் சிறிது நேரத்தில் இருவரும் கிளம்பினர். சைந்தவி உறங்கிவிடவே, அவளை கார் பின் சீட்டில் படுக்க வைத்தனர். கீழே விழுந்துவிடாமல் இருக்க அரவிந்த் மெதுவாக கார் ஓட்டிக் கொண்டிருந்தான். ஆனால் அவன் காரின் வேகம் மிக மெதுவாக இருந்தது மட்டுமல்ல, நின்றது போலவே இருந்தது. சில நிமிடங்களுக்கு பின், அவர்கள் வீட்டையும் தாண்டிச் சென்றான்.
“எங்க போறீங்க?” என்று பாரதி கேட்டாள்.
“இல்லை… உன்கிட்ட கொஞ்சம் பேசணும்.” என்று அவன் தீவிரமாக கூற, “ஓ…” என்றாள் அவள் சாதாரணமாக.
“பாரதி… நாம எப்போ அமெரிக்கா போனாலும், ரெண்டு பேரும் சேர்ந்துதான் போகணும்” என்றான் அவன்.
“நான் வரலைன்னு சொல்லவே இல்லையே, அங்கையே இருக்க மாட்டேன்னு தான் சொன்னேன்” அவள் இருபக்கமும் தலையசைத்து அவன் பக்கம் திரும்ப,
“முதல்ல உடனடியா நாம அமெரிக்கா போகலை. நம்ம கொஞ்ச நாள் ஸ்கூல்ல இருப்போம். நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து இங்க எல்லா வேலையும் பாப்போம். ஆனால் கொஞ்ச நாள் கழிச்சு போகும் போது, சேர்ந்து தான் போகணும். அதே மாதிரி அங்கு ஒரு வருஷமோ, ரெண்டு வருஷமோ, மூணு வருஷமோ இருக்க வேண்டிய தேவை இருக்கலாம்” அவன் கூற,
“அவ்வளவு நாள் நான் ஏன் அங்க இருக்கணும்? நான் இங்க வந்திடுவேன்” என்று பாரதி சாதாரணமாக சொன்னாள்.
“அப்படி எல்லாம் ஆளுக்கு ஒரு பக்கம் இருக்க முடியாது. என் வேலைக்கு ஏத்த மாதிரி தான்…” என்று அவன் அமைதியாக கூறி முடிப்பதற்குள் அவளுக்கு கோபம் கிளம்பியது.
“நேத்து வரைக்கும் நீங்க இப்படி பேசலையே?” என்று காட்டமாக அவள் கேட்க, “நேத்து வரைக்கும் நான் இதை பற்றி பேசவே இல்லையே.” என்றான் அவன் தன்மையாக.
“சரி, இன்னைக்கு தான் நீங்களும் பேசுறீங்க, நானும் சொல்றேன்” அவள் பிடிவாதம் பிடிக்க, “இல்ல பாரதி, நீ சொல்றது சரியா வராது. நீ ஒரு பக்கம், நான் ஒரு பக்கம் இருந்தா… அது எல்லாருக்கும் சங்கடம் தான்.” என்று அரவிந்தன் அவளுக்கு புரியவைக்க முயன்றான்.
“நீங்க நானும் அம்மாவும் பேசினதை கேட்டீங்களா?” என்று அவள் அவனை மடக்க, அகப்பட்டுக் கொண்டவன் போல, எதுவும் தெரியாத முகத்துடன், “நீயும் அம்மாவும் என்ன பேசினீங்க?” அவளை கிடுக்கு பிடியில் நிறுத்தினான்.
அதை கேட்டதும் பாரதி நாக்கைக் கடித்துக் கொண்டாள். ‘அச்சோ! நானே எதையாவது உளறிடுவேன் போல!’ என்று தன் வாயை மூடிக்கொண்டாள்.
“நான் எதுவுமே கேக்கல. ஆனா, காலையில் நீ, ‘நான் இங்கதான் இருப்பேன்’ அப்படின்னு அண்ணி கிட்ட சொன்ன. அப்ப, அண்ணி பார்த்த பார்வை சரியில்ல. நம்ம ஏதோ தப்பு பண்ணற மாதிரி அவங்க பார்வை சொல்லுச்சு. யோசிச்சி பார்த்தா உனக்கு புரியும்.” அவன் விளக்கிட, “அப்ப, அவங்களுக்காக நான் நீங்க சொல்றதை கேட்கணுமா?” என்று பாரதி சற்று குதர்க்கமாக கேட்க,
“அதெல்லாம் கிடையாது. கல்யாணம் ஆயிடுச்சு. என்கூட நீ வந்துரு. அவ்வளவுதான்.” என்று அரவிந்தன் கட்டளை போல் கூறினான். அதை கேட்ட பாரதிக்கு இப்போது கோபம் வந்தது. ஆனால் அவள் அம்மா சொன்ன வார்த்தையும் இவன் சொல்வதும் ஒன்று போல இருக்க, தன் வாயை சற்றே இறுக்கமாக மூடிக்கொண்டாள்.
சில நிமிட மௌனம் நீடிக்க, “அப்ப, இதுல பேசுறதுக்கு ஒன்னும் இல்ல. அப்படி தானே சார்?” அவள் இறுக்கமான குரலில் கேட்க,
“இப்ப எதுக்கு, ‘சார்’ன்னு சொல்ற?” அவன் அவள் காதை விளையாட்டாக திருக, அவள் அவனை வெறித்துப் பார்த்தாள்.
“என்ன சார் அடிக்கறீங்க?” அவள் அவன் கைகளை தள்ளிவிட்டு கூற, “நீ சார்ன்னு சொன்னா ஸ்கூல் ஞாபகம் வருது. அது தான் காதை திருகுறேன். அடிக்கிறேன்.” அவன் குறும்போடு கூறினான்.
“அம்மாவும் இதுதான் விருப்பப்படுவாங்க. நீங்களும் அப்படி தான் நினைக்கிறீங்க. உங்க வீட்டிலயும் அதான் சரின்னு சொல்வாங்கன்னு நினைக்கிறீங்க. அவ்வளவு தானே?” அவள் சலிப்போடு கேட்க, அவன் மேலும் பேச்சை வளர்க்காமல் மௌனமாக காரை செலுத்திக் கொண்டிருந்தான்.
சில நிமிடங்களுக்கு பின், சிறிது வருத்தம் கலந்து, “இப்போ உடனே போகணுமா… அமெரிக்காவுக்கு?” என்று பாரதி சன்னமான குரலில் கேட்க, “இல்ல, கொஞ்ச நாள் இங்க தான் இருப்போம்.” அவன் பதிலளிக்க,
“என்னால் இந்த வருஷம் இந்த பிள்ளைகளை பாதியில விட்டுட்டு வர முடியாது. இந்த ஏப்ரல் மாசம் வரைக்கும் நான் இங்க இருக்கணும். ஏன்னா, என் பசங்களுக்கு பாடம் முடிக்கணும். நான் பாதியில போனா கஷ்டப்பட்டுடுவாங்க. ஸ்கூல் விட்டுட்டு சட்டுனு வர முடியாது.” என்று அவள் வழமையான பல்லவியை பாட, அவன் முகம் சற்று கடுகடுத்தது.
“இப்ப என்ன… உனக்கு ஸ்கூல் தான் முக்கியம், ஸ்கூலுக்காக தான் என்ன கல்யாணம் பண்ணிக்கிட்டியா?” அவள் மீண்டும் மீண்டும் பேசியதில் அவன் கடுப்பாகி கேட்டான்.
அந்த கேள்வி அவளை தைத்தது. அவன் எந்த உணர்வில் கேட்டான் என்று புரியும் மனநிலை அவளுக்கு இல்லை. ஆனால், அவன் கேட்ட கேள்வி அவளுக்கு சரியாகப்படவில்லை. “இப்ப நீங்க என்ன சொல்லவரீங்க?” அவள் திரும்பவும் கேட்க, அவன் சுதாரித்திருக்கலாம். ஆனால், அவனோ மீண்டும், “ஸ்கூலுக்காக தான் என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டீயானு கேட்டேன்?” அழுத்தம் திருத்தமாக கூற, “இதுக்கு என்ன அர்த்தம்?” என்று அவனை கூர்மையாகப் பார்த்தாள்.
“என்ன அர்த்தம்னா… என்ன அர்த்தம்? நான் கேட்ட கேள்விக்கு தமிழில் ஒரே அர்த்தம் தான்” சற்றுக் கோபத்துடன் கூற,
“அப்ப, நான் உங்க பணத்துக்காக உங்களை கல்யாணம் பண்ணிக்கிட்டேனு சொல்றீங்களா?” அவள் அவனை குற்றம் சாட்டும் விதமாக பார்க்க, “என்ன உளறுற?” அவன் இப்பொழுது அவளை புரியாமல் பார்த்தான்.
“இல்ல, ஏற்கனவே ஒரு தடவை சொன்னவர் தானே நீங்க, சம்பளம் வாங்கிட்டு போறவங்க, சம்பளம் கொடுக்கற நாங்க சொல்வதை கேட்கணும்னு. நீங்க பணக்காரர் அப்படிங்கிற எண்ணம் அன்னைக்கு மட்டும் இல்ல, இப்ப வரைக்கும் அப்படியே தான் இருக்கு.” அவள் குறை கூற,
‘இது என்ன விந்தை? நான் ஒன்னு சொன்னா, இவ லூசு மாதிரி எதுவோ பேசுறா’ அவன் அதற்கு மேலே எதுவும் பேசவில்லை. காரை வேகமாக செலுத்தினான். ‘பிரச்சனை எதுவும் வந்திட கூடாது. அம்மா அப்பா தாங்க மாட்டாங்க. சுமூகமா பேசணும்.’ அவன் சிந்தை, ‘பொறுமை பொறுமை’ என்று அவனுக்கு அறிவுறுத்தியது. கார் புயல் வேகத்தில் வீட்டையடைய, அங்கு அனைவரும் இவர்களுக்காக காத்திருந்தனர்.
நட்பு கரம் நீட்டிட அவன் நினைத்தாலும் சூழ்நிலை அவனுக்கு சாதகமாக அமைந்திடுமா?





இரண்டு பேரும் பொறுமையா பேசி பிரச்சனையை தீர்காமல் மேலும் மேலும் வளர்க்கிறாங்க இது எங்கே போய் முடியுமோ..?
சைந்து வேற இருக்கா ..?