அத்தியாயம் – 18
18
இருவரும் உள்ளே நுழைந்திட, அரவிந்த் சைந்தவியை தூக்கி கொண்டு வந்தான். தூங்கும் அவளை மோகன் வாங்கிக்கொள்ள, “சித்தி…” அவள் முனங்க, விஜயாவின் முகம் சுருங்கியது. ‘என்கிட்ட இல்லாத எது பாரதி கிட்ட இருக்கு?’ அவள் முகத்தில் சிந்தனை பரவியது.
சைந்தவியை படுக்க வைத்துவிட்டு வந்த மோகன், “இந்தாங்க…” அவன் சில காகிதங்களை நீட்டினான். “என்னது?” அரவிந்த் புரியாமல் பார்க்க, “ஹனிமூன் டிக்கெட்ஸ்.” விஜயா கூற, சிறியவர்களுக்கு அதிர்ச்சி என்றால், பெரியவர்களுக்கு ஆச்சரியம். சிவகுருவின் முகத்திலும் நித்தியகல்யாணியின் முகத்திலும் அத்தனை ஆனந்தம், சந்தோசம் பெருக்கெடுத்து ஓடியது.
நித்தியகல்யாணி தன் கணவரை பார்த்து புருவம் உயர்த்தி, ‘என்ன ஆச்சரியம்?’ என்பது போல் மறைமுகமாக மௌனமாக சைகை காட்டினார். அவருக்கும் அதே கேள்விதான், ‘நம்ம மருமகள் இப்படி எல்லாம் குடும்பத்துல ஒரு ஆளா கலந்துக்க மாட்டாளே? என்ன ஆச்சரியம்!’ என்று அவர் சந்தோஷத்தில் திகைத்து நின்றார்.
ஆனால், அதே நேரம் சிறியவர்கள் இருவருக்கும் அப்படி எங்கேயும் செல்வதற்கும் எண்ணமே இல்லாததால் அதிர்ச்சியில் உறைந்து நின்றனர். பாரதி தான் முதலில், “ஹனிமூனா? அது எதுக்கு இப்போ?” என்று பட்டென்று கேட்டுவிட, அரவிந்த் அவளை முறைத்து பார்த்தான்.
அவன் முறைப்பை கண்டுகொள்வேனா என்பது போல, “நாங்க தான் இன்னும் கொஞ்சம் மாசத்துல யூஎஸ் போயிடுவோமே. இப்ப எதுக்கு?” பாரதி அடுத்த கேள்வியை கேட்டாள். அரவிந்த் மீண்டும் அவளை முறைத்தான். அவள் மனத்தில், ‘இவங்க எதுக்கு இப்படி எப்ப பார்த்தாலும் முறைச்சிக்கிட்டே இருக்காங்க? நான் என்ன தப்பா கேட்டுட்டேன்?’ என்று கேள்வி எழ முகம் சுளித்தாள்.
மோகன் தன் தம்பியிடம், “அரவிந்த், இது ஒரு டூர் பேக்கேஜ் வௌச்சர். உனக்கு எந்த இடம் புடிச்சிருக்கோ அதை செலக்ட் பண்ணு. நான் பேசிடறேன். நீங்க அங்க போயிட்டு வாங்க. நாங்க உனக்கு கல்யாணத்துக்கு எந்த கிஃப்டும் கொடுக்கல. என்ன கிஃப்ட் பண்ணலாம்னு யோசிச்சப்போ, உங்க அண்ணி தான் இன்னைக்கு காலையில இந்த ஐடியாவை சொன்னா. அதான் எனக்கும் சரியா பட்டது. உடனே புக் பண்ணியாச்சு.” என்று மோகன் கூற, “சூப்பர் விஜயா” என்று நித்திய கல்யாணி பாராட்ட, பல வருடங்களுக்கு பின் தன் மாமியாரின் முதல் பாராட்டை ஆச்சரியமாக பார்த்தாள் விஜயா.
“உங்களுக்கு எத்தனை நாள் வசதிப்படுமோ அத்தனை நாள் ரிஸார்ட் எடுத்துக்கலாம். கேம்பிங் பண்ணிக்கலாம். எல்லாமே இருக்கு. நீங்க உங்களுக்கு பிடிச்ச இடத்தை செலக்ட் பண்ணிக்கோங்க.” மோகன் தன் தம்பியின் முதுகை தட்ட, அரவிந்த் சம்மதமாக தலையசைத்தான். மோகனும் விஜயாவும் அவர்கள் வேலை முடிந்தது என்பது போல சென்றிட, எந்த பேச்சும் வளர்க்காமல் அரவிந்த் தன் அறைக்குள் சென்றான். பெரியவர்கள், “இருவரும் சற்று ஓய்வு எடுங்கள்” என்று கூறிடவே, பாரதியும் அவன் பின்னோடு சென்றாள். இருவரும் அறைக்குள் முடங்கினர்.
பாரதி சலிப்பாக, “இப்ப எதுக்கு அங்க எல்லாம் போகணும்?” என்று கேட்டாள். ஆனால், அவள் மனத்திலோ அத்தனை நாள் லீவு போட்டா, பள்ளியில் குழந்தைகளுக்கு யார் பாடம் எடுப்பார்கள் என்ற எண்ணமே மேலே எழுந்தது. இதை சொன்னால் மீண்டும் அரவிந்த் சீறுவான் என்ற எண்ணம் தோன்ற, அவள் அதை தன்னோடு விழுங்கி கொண்டாள்.
அரவிந்த் இப்பொழுது கடுப்பானான். “இல்ல பாரதி, நீ என்னதான் நினைச்சிட்டு இருக்க? ஏதோ நீங்க எல்லாம் கல்யாணம் பண்ணி வச்சிட்டீங்க, அதனால நாங்க கல்யாணம் பண்ணிக்கிட்டோம், அப்படின்னு ஒவ்வொருத்தரா தம்பட்டம் அடிக்கணும்னு நினைக்கிறியா? இல்ல, உனக்கு ஸ்கூல் தான் பிடிக்கும், இந்த ஸ்கூலோட தான் இருப்பேன், நீ உங்க வீட்டிலிருந்து போகாம இங்க இருந்து போறது மட்டும் தான் வித்தியாசம் அப்படின்னு எல்லார்கிட்டயும் சொல்லணும்னு நினைக்கிறியா?” அவன் கோபம் கொண்டு குரலை உயர்த்த, பாரதி அவனை மேலும் கீழும் பார்த்தாள். ‘இவங்க என்ன இப்படி பேசுறாங்க?’ என்று மௌனமாக அமர்ந்தாள்.
அவளிடமிருந்து பதில் வராமல் போக, அரவிந்த், ‘இப்ப என்ன செய்றது? என்று சிந்திக்க ஆரம்பித்தான். பாரதி அவனைப் பார்த்துக்கொண்டே இருந்தாள். ‘என்ன?’ அவன் புருவம் உயர்த்த, “கல்யாணத்துக்கு முன்னாடி நீங்க ஒரு வார்த்தை கூட என்கிட்ட பேசலையே?” அவள் இப்பொழுது சம்மந்தமே இல்லாமல் பேச்சை தொடங்கினாள். அவன் அவளை யோசனையோடு பார்த்தான்.
“நீங்க அப்பவே பேசியிருந்தா நான் சொல்லி இருப்பேன்” அவள் தடுமாற, “என்ன சொல்லியிருப்ப? இப்ப சொல்லு” அவன் அவளுக்கு பேச அவகாசம் கொடுத்தான். அவள் மௌனமாக இருந்தாள்.
“என்ன சொல்லணும் பாரதி? நீ இப்ப சொல்லு” அவன் கேட்க, அவளின் மௌனம் நீடிக்க, “உங்க கூட அமெரிக்கா வர விருப்பம் இல்லைன்னு சொல்லி இருப்பியா?” அவன் கேட்க, அவள் தலையசைத்து, “இல்ல… இல்ல…” அவள் மறுப்பாக தலையசைத்தாள்.
“சரி, அப்படின்னா வேற என்ன சொல்லி இருப்ப? எனக்கு கண்டிஷன் போட்டிருப்பியா?” அவள் தலையசைத்து, “ஆம்…” என்றாள்.
“நான் மறுத்திருந்தா, இந்த கல்யாணத்தை நிறுத்தி இருப்பியா?” அவன் கூர்மையாக கேட்க, ‘ஆம், நிறுத்தி இருப்பேன்.’ என்று சொல்ல அவளுக்கு தோன்றவில்லை. ‘நிறுத்தி இருப்பேன்’ என்று சொல்லும் தைரியம் அவளிடம் இல்லை. ‘மாட்டேன்’ என்பதாக தலையசைத்தாள்.
“அப்புறம் என்ன? அப்ப பேசினா என்ன, இப்ப பேசினா என்ன?” அவள் தலையசைப்பில் அவனுள் சுவாரஸ்யம் கலந்த ஒரு கேள்வி மேலோங்கியது. “ஏன் நிறுத்தி இருக்க மாட்டே?” அவன் கேட்க, அவளும் அதைத்தான் அலசி ஆராய்ந்து கொண்டிருந்தாள். ‘நான் நினைத்திருந்தால் நிறுத்தி இருக்கலாமே.’ ஏதோ ஒரு ஓரத்தில் அவன் மேல் அவளுக்கு தோன்றிய உணர்வை அவள் அறியவில்லை.
“கேட்குற கேள்விக்கு பதில் சொல்ல மாட்டியா பாரதி?” அவன் கேட்க, “நான் டீச்சர், நான் தான் கேள்வி கேட்பேன். ஸ்கூலுக்கு வாங்க நான் உங்களை பார்த்துக்கிறேன். நீங்க என்னை உங்க வீட்டுக்கு கொண்டு வந்து வச்சிக்கிட்டு மிரட்டறீங்க.” அவள் முகத்தை திருப்ப, அவன் அவள் முகத்தை அவன் பக்கம் திருப்பினான்.
முதல் தீண்டல். உரிமையான தீண்டல். “டீச்சரம்மா சமாளிக்க கூடாது.” அவர்கள் நெருக்கத்தில் அவன் குரல் குழைந்திருந்தது.
“அம்மா அப்பாக்கு புடிச்சிருந்தது…” அவள் கூற, “அம்மா அப்பாவுக்கு என்ன புடிச்சிருந்தது?” அவன் ஆர்வத்துடன் கேட்டான்.
“எங்க அம்மா அப்பாவுக்கு… உங்க அம்மா அப்பாவை புடிச்சிருந்தது…” அவள் தடுமாறினாள்.
அவன் பெருங்குரலில் சிரித்தான். “இது செமையா இருக்கு! பேசாம உங்க அம்மா அப்பாவை இங்க கூட்டிட்டு வந்து வச்சுருவோமா? அவங்களுக்கு தானே புடிச்சிருக்கு?” அவன் கேலி பேச, பாரதி ஆச்சரியமாக அவனைப் பார்த்தாள்.
‘என்ன?’ அவன் புருவம் மட்டும் உயர, “நானும் இதே தான் முதல்ல எங்க அம்மா அப்பா கிட்ட சொன்னேன்!” அவன் கேலி போல தலையில் அடித்துக் கொண்டான்.
“நான் நினைக்கிறதோ, நீ நினைக்கிறதோ, இங்க முக்கியம் இல்லை பாரதி. பெரியவங்களுக்கு பிடிச்சிருந்தது கல்யாணம் பண்ணிக்கிட்டோம். எல்லாரும் காதலிச்சு கல்யாணம் பண்றதில்லை. காலம் பாட்டுக்கு போகட்டும். ஆனால் அது இதுன்னு நமக்குள்ள நடக்கிறதை எல்லாம் வெளியே சொல்லக் கூடாது.” அவன் அவளுக்கு பாடம் எடுத்தான்.
“ஆமா, நான் எல்லாரையுமே கூப்பிட்டு, நாங்க இப்படித்தான்னு தம்பட்டம் அடிச்சி சொல்லிக்கிட்டே இருக்கேனா?” அவள் கோபமாக கேட்க, அவன் யோசித்து, அவளை தன் பக்கம் திருப்பி, “அப்படித்தான் சொல்லிட்டு இருக்க. தெரிஞ்சு சொல்றியா இல்லை தெரியாம சொல்றியா தெரியல. ஆனா அப்படித்தான் சொல்லிட்டு இருக்க” அவன் கவலை தோய்ந்த குரலில் கூற, பாரதி சற்று யோசனையோடு அவனைப் பார்த்தாள்.
என்ன நினைத்தாளோ ஏது நினைத்தாளோ, “சரி, நான் இனி ஜாக்கிரதையா இருக்கேன்” என்று கூறி பால்கனியில் இருந்த நாற்காலியில் சென்று அமர்ந்தாள்.
அன்று மாலை அவர்கள் கோயிலுக்கு சென்றார்கள். அப்படி இப்படி என்று அந்த நாளும் ஓடியது. மறுநாள் காலையில் பள்ளிக்கு தயாராக வேண்டும் என்ற முடிவுக்கு வந்ததால், பாரதி விடியற்காலையில் எழுந்து வேலையை செய்து கொண்டிருந்தாள்.
சில மணித்துளிகளுக்கு பின், விஜயா எழுந்தாள். குழந்தைகளை காண அவர்கள் அறைக்கு செல்ல, அவர்கள் இருவரையும் அங்கு காணவில்லை.
‘எங்க போனாங்க?’ யோசனையோடு வெளியே வந்தவள், ஆனந்த அதிர்ச்சிக்குள்ளானாள். வருண் புத்தகத்தை வைத்து படித்துக் கொண்டிருந்தான்.
“என்னடா எழுதிட்டு இருக்க?” அவள் கேட்க, “மேத்ஸ் ம்மா. சைந்தவி நேத்தே சித்தி கூட கோலம் போடணும்னு சொன்னா. அதனால சித்தி அவளை காலையில எழுப்புறேன்னு சொன்னாங்க. எழுப்ப வந்தாங்க. நானும் எழும்பிட்டேன்.” அவன் கூற, விஜயாவுக்கு ஆச்சரியம்.
“சித்தி காலையில என்கூட உட்கார்ந்து எல்லாம் சொல்லி கொடுத்தாங்க. கேள்வி கேட்டாங்க. என்னை இதெல்லாம் படிச்சு முடிக்க சொன்னாங்க. கொஞ்ச நேரத்தில் கேள்வி கேட்கிறேன்னு சொன்னாங்க” அவன் கூற, அவளுள் யோசனை பரவியது.
“நான் சொன்னா படிக்க மாட்டியே” அவள் தன் மகனிடம் நேரடியாகவே கேட்டுவிட, “இல்லம்மா, நீங்க படின்னு சொல்லுவீங்க, அப்புறம் கேட்க மாட்டீங்க. ஆனா சித்தி அப்படி இல்ல. படிக்க சொன்னா கண்டிப்பா கேள்வி கேட்பாங்க. இவ்வளவு நேரம் என் கூட தான் உட்கார்ந்து எல்லாத்தையும் சொல்லி கொடுத்துட்டு இருந்தாங்க.” வருண் அழுத்தமாக கூற, விஜயாவின் முகத்தில் புரிதல் ஏறியது.
‘சைந்தவி என்ன செய்கிறாள்?’ விஜயா கீழே இறங்கி செல்ல, வாசலில் பாரதியோடு ஏதையோ கிறுக்கிக் கொண்டிருந்த சைந்தவி பெருமையாக எழுந்து வந்தாள். “அம்மா, உங்களுக்கு தெரியுமா? சித்தி கோலத்தை விட என் கோலம் தான் சூப்பர்!” அவள் கூற, “அப்படி யார் சொன்னா?” என்று விஜயா அவள் கோலத்தை பார்த்தபடி கேட்க,
“சித்தி தான் சொன்னாங்க. சித்தி கோலம் பாருங்க, சிக்கு சிக்கா இருக்கு. ஆனா என் கோலம் பாருங்க, ஸ்டார் பளிச்சுனு இருக்கு! அப்ப என் கோலம் தானே சூப்பரா இருக்கு?” என்று அவள் தன் அன்னையிடம் கேட்க, அவளும் ஆமோதிப்பாக தலையசைத்தாள்.
பாரதி குழந்தையிடம் ஹைஃபை செய்ய, “அம்மா நீங்க சொல்லுங்க என் கோலம் எப்படி இருக்கு?” சைந்தவி பெருமிதத்தோடு கேட்க, விஜயா பாரதியின் கோலத்தை பார்த்தாள். பெரிய சிக்கல் கோலம் மிக நேர்த்தியாக இருந்தது. அதன் பக்கத்தில் பாரதியின் உதவியோடு சைந்தவி வரைந்த கோலமும் மிக அழகாக இருந்தது. சைந்தவியின் முகத்தில் அத்தனை பெருமிதம்.
விஜயா, பாரதியின் அருகே ஒய்யாரமாக நின்று கொண்டிருந்த தன் மகள் அருகே மண்டியிட்டு, “உன் கோலம் தான் ரொம்ப சூப்பர்” என்று கூற, “பார்த்தியா நான் சரியா சொல்லிருக்கேன்.” என்று பாரதி, சைந்தவியை கொஞ்சினாள்.
“எஸ் சித்தி” அவர்கள் இருவரும் வருண் அருகே சென்றனர். வந்து இரண்டே நாட்கள் ஆனாலும் பாரதியின் கவனம் முழுக்க, குழந்தைகளை சுற்றியே இருக்க, குழந்தைகளும் அவளை சுற்றியே இருக்க, முதல் முறையாக விஜயாவின் மனதில் குற்ற உணர்ச்சி மேலெழுந்தது. ‘இப்படித்தான் நானும் இவங்க கூடவே இருக்கணும்னு நினைக்குறாங்களோ? இப்படி நான் அவங்க கூட நேரம் செலவழிக்கிறதே இல்லையோ?’ அவளுள் கேள்விகள் பல எழுந்தன.





விஜயா ஒழுங்கா யோசிக்க ஆரம்பித்து இருக்காள் சூப்பர் ,
குழந்தைகளுக்கு சீக்கிரமா அவங்க அம்மா திரும்ப கிடைத்து விடுவாங்க .