arrow_back
மலரும் அரும்பே! அத்தியாயம் – 19
மலரும் அரும்பே! chevron_right பகுதி 19 / 30

அத்தியாயம் – 19

visibility 62
star படைப்பை ரேட் செய்யுங்கள்
சராசரி 4.5/5 (2 மதிப்பீடுகள்)
பகிர்

19

காலையில் எழுந்த அரவிந்த் அவன் அருகே படுத்திருந்த பாரதியை தேடினான். அவளைக் காணவில்லை. அவன் அறைக்கு வெளியே வந்தான். அங்கு சைந்தவியும் வருணும் படித்துக் கொண்டிருக்க, பாரதி அவர்களுக்கு பாடம் நடத்திக் கொண்டிருந்தாள். ‘அது சரி, டீச்சர் அம்மா இங்கேயும் வேலை ஆரம்பிச்சிட்டாங்க போல’ என்று மனதிற்குள் சிரித்துக் கொண்டான். கல்யாணக் களை அவர்கள் வீட்டில் நிறைந்திருந்தாலும் பாரதி இயல்பாகவே நடமாடிக் கொண்டிருந்தாள். கீழே இருந்த சமையல்கார செல்வி அக்கா அவ்வப்போது பாரதியிடம் ஏதோ கேட்டுக் கொண்டிருந்தார்.

இவள் தான் அனைத்தையும் இத்தனை நாள் கவனித்துக் கொண்டிருந்தவள் போல் அவளிடம் எதையோ கேட்க, அவளும் அதற்கேற்றாற் போல் சொல்ல, வருணையும் சைந்தவியையும் படிக்கச் சொல்லிவிட்டு சமையலறைக்கு சென்று வேலைகளைப் பார்த்தாள். அரவிந்திற்கு சற்று ஆச்சரியமாகவே இருந்தது, ‘எப்படி அதற்குள் இந்த வீட்டில் ஒன்றிப் போனாள்’ என்று ஆர்வமாகேவ அவளைப் பார்த்தான்.

‘இவளிடம் கொஞ்சம் ஜாக்கிரதையாகவும் இருக்க வேண்டும்’ என்ற எண்ணமும் அவனுக்கு வந்தது. ‘சென்ற இடத்தில் எல்லாம் இவள் ஆட்சியை நிலை நிறுத்தி விடுவாள் போல. ஆங்கிலத்தில் சொல்லணும்னா, லீடெர்ஷிப் குவாலிட்டி’ என்று அவளை பற்றி அனுமானித்துக் கொண்டிருந்தான். ‘ஆனால், என் வாழ்க்கையில் அப்படி நடக்க நான் விடவே மாட்டேன்.’ என்று கூக்குரலிட்டு கொண்டான்.

அதே நேரம் மோகன் மேலே நின்று, கீழே அங்கும் இங்கும் சுற்றிக்கொண்டு இருக்கும் பாரதியை யோசனையோடு பார்த்தான். ‘இப்படித்தானே நானும் விஜயாவும் இருக்கணும்னு நினைக்கிறேன். வேலை எல்லாம் செய்ய வேண்டாம். ஆனால், உரிமையோடு அவ வீடு மாதிரி வளைய வரலாமே. ஆரம்பத்தில் அப்படி தானே இருந்தா. ஆனால், இடையில் என்ன நடந்தது? என் விஜயா ஏன் இப்படி இல்லை?’ என்று எண்ணம் தோன்ற, சட்டென்று தன் தலையில் தானே கொட்டிக் கொண்டான். ‘இப்படி எல்லாம் ஒருத்தரை ஒருத்தர் ஒப்பிட்டு பார்க்கக் கூடாது’ என்று தனக்குத்தானே பாடம் எடுத்துக் கொண்டான்.

ஆச்சரியப்படும் விதமாக விஜயா வழக்கம் போல் அறைக்குள் முடங்கி கொள்ளவில்லை. படக்கென்று கதவை சாற்றிக் கொண்டு உள்ளே தான் இருப்பாள். ஆனால், இன்று வெளியே இருக்கும் பொருட்களை எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள். அவள் அதை எடுத்து வைத்துக் கொண்டு இருந்தாலும் அவள் பார்வை அனைத்தும் பாரதியிடமும், தன் பிள்ளைகளிடமும் இருந்தது. மோகன் முகத்தில் சிந்தனை பரவியது.

‘இவ வேலை எதுவும் செய்யற மாதிரி தெரியலையே. யாரு எப்படி கிடந்தாலும் வெளிய வரமாட்டாளே? இவ காலையில் கிளம்பி போயிருவாளே! பிள்ளைகளை திரும்பி கூட பார்க்க மாட்டா. பிள்ளைகள் மேல பாசம் இல்லைனு சொல்ல முடியாது. ஆனால், நான் ஏன் பண்ணனும்னு பெண்ணியம் பேசிட்டு இருப்பா. பிள்ளைகள் அவங்க தானே கிளம்புவாங்க. இன்னைக்கு என்ன ஆச்சரியம் இந்த பிள்ளைகளை பார்த்துட்டு இருக்கா’ என்று மோகன் யோசனையோடு அனைவரையும் கண்காணித்தான்.

சிவகுரு ஐயா வயது குறைந்தாற் போல் உல்லாசமாக சிரித்தபடி அமர்ந்திருந்தார். அவர் அருகே வந்தமர்ந்த நித்திய கல்யாணி, “என்ன ஒரே சந்தோஷமா இருக்கீங்க?” என்று கேட்க, “இல்ல நம்ம வீட்ல நிறைய நடக்குற மாதிரி எனக்கு தோணுது, உனக்கு தோணுதா?” என்று அவர் கேட்டார்.

“தோணுது தோணுது, ஆனா எல்லாம் எத்தனை நாள்ன்னு தான் நான் யோசிக்கிறேன். ஒரு சில நாட்கள்ல வர்ற மாற்றம் எல்லாம் நிலைக்காது.” அவர் சந்தேக குரலில் பேச, சிவகுரு அவரை யோசனையோடு பார்த்தார். தன் மனைவி எப்பொழுதும் இப்படி எதிர்மறையாக பேசும் ஆள் கிடையாது என்பதால், அவர் எண்ணப்போக்கை படிக்க முயன்றார். “எப்படியோ அரவிந்த் இங்க இருக்க மாட்டான்” அவர் குறை பட, இப்பொழுது தன் மனைவியின் மனக்குறை புரிந்து சிரித்துக் கொண்டார்.

“இங்க பாரு கல்யாணி, பாரதி, அரவிந்தன் இங்க தான் இருக்கனும்னு நாம சொல்றது சரி கிடையாது. அது அவங்களுடைய எதிர்காலம், அவங்க முடிவு. நமக்காக நம்ம யாரையும் இருக்க சொல்லக்கூடாது. ஆனால் சின்ன சின்ன மாற்றங்கள் வந்தால் எல்லாம் நல்லா இருக்கும். நான் சொல்ற மாற்றம் நம்ம வாழ்க்கையில் இல்லை, மோகன் வாழ்க்கையில். விஜயா நல்ல மாதிரி தான். ஆனால், அவங்களுக்குள்ள ஏதோ ஒரு பிரச்சனை. அரவிந்த், பாரதியை பார்த்து அவங்க மாறலாம் இல்லை? பாரதியை பார்த்து விஜயா மாறலாம். அரவிந்தை பார்த்து மோகன் மாறலாம்.” அவர் கூற, வேறு வழியில்லாமல் நித்திய கல்யாணியும் தலையசைத்துக் கொண்டார்.

“அவங்களுக்கு குழந்தை பிறக்கும் பொழுது, அதை அரவிந்தும் பாரதியும் வளர்க்குறதை பார்த்து, இவங்க மாறலாம்” என்று சிவகுரு கற்பனையில் அடுக்கி கொண்டே போக, “அதுக்கு அவங்க இங்க இருக்கணுமே.” என்று முட்டுக்கட்டை போட்டார் அவர் மனைவி.

“உலகம் இப்ப குளோபல் வில்லேஜ். அதாவது உலகமே ஒரு சின்ன கிராமம் மாதிரி ஆகிடுச்சு. என்ன நடக்குதுன்னு தெரியாமலா போக போகுது?” என்று அவர் கேட்க, “எல்லாரும் சாப்பிடலாமா?” என்று கேட்டு பாரதி அங்கு வந்து சேர்ந்தாள்.

உணவு நேரம் என்றால் அனைவரும் அவர்கள் விருப்பம் போல் சாப்பிட்டுக் கொண்டு கிளம்புவார்கள். அதனால், பாரதியின் கேள்வியில் பெரியவர்கள் திகைக்க, “இல்லம்மா, அவசரக்காரங்க… வேலைக்கு போறவங்க அவங்க எல்லாரும் சாப்பிடட்டும். நாங்க அப்புறம் சாப்பிடுவோம்.” அவர் கூற, “நீங்க எதுக்கு அத்தை நேரம் கழிச்சு சாப்பிடணும்? மாத்திரை போடணும் தானே? சீக்கிரம் சாப்பிட வாங்க.” அவள் கூற, பெரியவர்கள் உணவருந்த தயாரானார்கள்.

பாரதி விஜயாவிடம், “அக்கா நீங்க எப்ப கிளம்புவீங்க அக்கா?” என்று கேட்க, “கொஞ்சம் நேரத்தில் கிளம்பிடுவேன் பாரதி” அவள் கூற, “அப்ப பசங்க சாப்பிடும்போது நீங்க சாப்பிடுவீங்களா?” அவள் கேள்வியை தொடுக்க, அரவிந்த், மேலிருந்து கீழே வந்தான். ‘இவ டீச்சர் வேலையை எல்லார் கிட்டையும் காட்டுவா போலையே? அவங்க அவங்க தலையெழுத்து’ என்ற எண்ணம் தோன்ற, தன் வாயை இறுக மூடிக்கொண்டான்.

விஜயா திருதிருவென்று முழித்தாள். ‘செல்வி அக்கா தான் சாப்பாடு கொடுப்பாங்க. நான் அப்படியே கிளம்பி போயிடுவேன். இவ என்ன இதெல்லாம் கேட்குறா? அதிகப்பிரசங்கி!’ விஜயா பதில் கூறாமலிருக்க,

சைந்தவி, “அம்மா எங்க கூட சாப்பிட மாட்டாங்க. அம்மா சீக்கிரம் கிளம்பி போயிடுவாங்க. நாங்க அப்புறம் தான் சாப்பிடுவோம். அம்மாக்கு சீக்கிரமே போட்டிக்கை தொறக்கணும்.” என்று குழந்தை தெளிவப்படுத்த, “ஓ சாரி அக்கா. எனக்கு அது தெரியாதே. செல்வி அக்கா உங்களுக்கு எப்பவுமே ஓட்ஸ், முசலி இல்லைனா சாலட்ன்னு சொன்னாங்க. நான் இன்னைக்கு சாலட் பண்ணினேன். அரவிந்தும் சாலட் தான் கேட்டாங்க. உங்களுக்கு சாலட் பேக் பண்ணிடுவா அக்கா?” என்று அவள் விஜயாவிடம் கேட்க,

“இல்லை, நான் இன்னைக்கு இங்கயே சாப்பிடுறேன்” அவள் கூற, இப்பொழுது மோகனுக்கு மட்டுமில்லை அனைவருக்கும் ஆச்சரியம். குழ்நதைகளுக்கு சந்தோசம். வருண் வெளிகாட்டிக் கொள்ளவில்லை. ஆனால், சைந்தவி உற்சாகத்தில் துள்ளி குதித்தாள். “ஹை! அம்மா ஊட்டிவிடுங்க. அவள் கொஞ்ச” விஜயா தன் மகளுக்கு ஊட்டிவிட ஆரம்பித்தாள்.

வருண் அவர்கள் இருவரையும் ஏக்கமாக பார்க்க, “அம்மா, உனக்கும் தரட்டுமா?” என்று விஜயா கேட்க, “ஹ்ம்… நானே சாப்பிட்டுப்பேன். ஆனால், எனக்கு எழுத வேண்டியது இருக்கு. அதனால, நீங்க கொடுங்க.” என்று மெட்டுவிடாமல் அவன் கூற,

“டேய் டேய், ஊட்டி விடணும்னு நேரடியா கேளுடா. ஏன் சீனை போடுற?” என்று அரவிந்த் அவனை கேலி செய்ய, “அது மட்டுமில்லை வருண். உங்க அம்மா வீட்டில் இருக்கறது, இப்படி ஊட்டி விடறது எல்லாம் அதிசயம். வாய்ப்பு கிடைக்கும் பொழுதே பயன்படுத்திக்கோ” மோகன் கிடைத்த சந்தர்ப்பத்தில் தன் மனைவிக்கு கேலி போல் குட்டு வைத்தான்.

“ஏன்டா, என் மருமகளை வம்புக்கு இழுக்கற?” இப்பொழுது நித்திய கல்யாணி மோகனை அதட்ட, விஜயாவின் முகத்தில் யோசனை பரவியது. ‘எங்கே மகன் சொன்னதுக்கு விஜயா கோபப்படுவாளோ?’ என்ற பயத்தில் அவர் முந்திக் கொண்டார்.

விஜயா தன் மாமியாரை பற்றிய சிந்தனையை ஒதுக்கி, “வீட்டில கல்யாண வேலை இருக்கும்னு கடையில் ஆள் போட்டிருக்கேன்.” தன் கணவனை நோக்கி சொல்ல, “அதை எப்பவுமே போடலாமே?” என்றான் மோகன் ஆலோசனை போல.

‘எதுவும் வாக்குவாதம் ஆகிவிடுமோ?’ என்று நித்திய கல்யாணி வாய் திறக்க முயல, அவர் கைகளை பிடித்து அமைதி காக்கும்படி செய்கை காட்டினார் சிவகுரு. ‘பேசட்டும்… பேசினால் தான் பிரச்சனை தீரும்.’ அவர் கண்கள் தன் மனைவிக்கு சமிக்ஞை மொழி பேச, “இன்னைக்கு சமையல் பாரதி. இட்லி, பீர்க்கங்காய் கொத்சு” நித்தியகல்யாணி  இடை புகுந்தார். “ஓ! சூப்பர்” என்றான் மோகன்.

குழந்தைகள் சாப்பிட்டு முடித்து பள்ளிக்கு தயாராக செல்ல, வெளியே சென்ற வருண், “சித்தி, அந்த இட்லி சைட் டிஷ் நைஸ்” என்று திரும்ப வந்து மெதுவாக சொல்லிவிட்டு செல்ல, “தேங்க்ஸ் வருண்.” அவள் புன்னகைத்தாள்.

மோகனும் சாப்பிட்டுவிட்டு அவளை பாராட்ட, ‘என்னைக்காவது என்னை பாராட்டி இருக்காங்களா? எப்ப பாரு ஏதாவது குறை தான்?’ என்று முகத்தை சுளித்து கொண்டாள் விஜயா.

“அரவிந்த், நீங்களும் வாங்க” பாரதி அழைக்க, “நீயும் உட்காரு பாரதி.” அவன் கூற, “இல்லை, நீங்க முதல்ல…” அவள் ஆரம்பிக்க, “சேர்ந்தே சாப்பிடலாம் பாரதி. நீ அம்மா, அப்பா, அண்ணா அண்ணிக்கு வை. நான் உன்கூட சாப்பிடுறேன்.” அவன் கூற, சாப்பிட்டுக் கொண்டிருந்த மோகனிடம் குற்ற உணர்ச்சி. அவன் தர்மசங்கடத்தோடு விஜயாவை பார்த்தான்.

விஜயா அவனை கேலியாக பார்த்தாள். இருந்தாலும், விஜயாவுக்கு இன்று வழமை போல் இல்லாமல் சுவாரஸ்யமாக இருந்தது. ‘இந்த பாரதி எப்பவும் இப்படி தானா இல்லை, அவள் நல்லவள் போல் காட்டிக் கொள்கிறாளா?’ என்று கேள்வி எழும்பியது.

அரவிந்தும் பாரதியும் இயல்பாகவே இருந்தனர். பாரதி இப்படி தான் அவள் வீட்டில் இருப்பாள். அது போலவே இங்கும் இருந்தாள். ‘தன்னை நம்பி வந்தவள். அவளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்’ என்பது மட்டுமே அவன் மனதில் இருந்தது. அதை தாண்டி அவனிடம் எந்த சிந்தனையும் இல்லை.

சிவகுரு, நித்திய கல்யாணி, மோகன் மூவரும் பேசிக்கொண்டே சாப்பிட்டனர். அரவிந்த், பாரதிக்காக சாப்பிடாமல் காத்திருந்து அவர்களோடு அமர்ந்து பேசிக்கொண்டிருந்தான். அவர்கள் வீட்டில் இந்த சூழல் பல வருடங்களுக்கு பின் அரங்கேறியது. விஜயா இப்படி ஒரு சூழலை அமைத்திட முனையவில்லை. அவள் ஒதுங்கியே இருந்தாள். ஆனால், அனைவரும் இன்று ஒன்றாக இருக்கையில், அவள் விலகி போகவில்லை.

அனைவருக்கும் புதிதாக தெரிந்த சூழல் பாரதிக்கு புதிதாக தெரியவில்லை. அவள் இயல்பாகவே வீட்டை இயல்புக்கு திருப்பிக் கொண்டிருந்தாள் அவளறியாமல்.

எல்லாம் நன்றாக தான் சென்றுக் கொண்டிருந்தது, பாரதி அடுத்த வாக்கியத்தை பேசும் வரை! அரவிந்த் அவளை பரிதாபமாக பார்த்தான்.

அடுத்த அத்தியாயம்

அத்தியாயம் – 20

20“என்ன சொல்ற பாரதி?” சிவகுரு முதலில் தன்னை மீட்டுக்கொண்டு கேட்டார்.“என்ன எல்லாரும் அப்படி பார்க்கறீங்க? நான் ஸ்கூலுக்கு போகணும். இன்னைக்கு எனக்கு கிளாஸ் இருக்கே. அதை தானே சொன்னேன். அரவிந்தும் நானும் போயிட்டு வந்திடறோம்.” அவள் கூற, அனைவரும் அரவிந்தை முறைத்தனர்.‘அட…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

forum ஒரு கருத்து உள்ளது

  1. பாரதி அப்படி என்ன பேசினாளாம் ..?
    இதனால் பாதிப்பு அரவிந்த்துகாகோ..?

உங்கள் கருத்தைப் பகிருங்கள்