arrow_back
மலரும் அரும்பே! அத்தியாயம் – 20
மலரும் அரும்பே! chevron_right பகுதி 20 / 30

அத்தியாயம் – 20

visibility 604
star படைப்பை ரேட் செய்யுங்கள்
சராசரி 3.0/5 (2 மதிப்பீடுகள்)
பகிர்

20

“என்ன சொல்ற பாரதி?” சிவகுரு முதலில் தன்னை மீட்டுக்கொண்டு கேட்டார்.

“என்ன எல்லாரும் அப்படி பார்க்கறீங்க? நான் ஸ்கூலுக்கு போகணும். இன்னைக்கு எனக்கு கிளாஸ் இருக்கே. அதை தானே சொன்னேன். அரவிந்தும் நானும் போயிட்டு வந்திடறோம்.” அவள் கூற, அனைவரும் அரவிந்தை முறைத்தனர்.

‘அட கேடி, என்னை கோர்த்து விட்டுட்டாளே!’ அவன் அவளை பரிதாபமாக பார்த்தான். “பசங்க ஸ்கூலுக்கு கிளம்பிட்டாங்க. அக்காவும் வேலைக்கும் கிளம்பிட்டாங்க, நாங்களும்…” என்று பாரதி ஆரம்பிக்க, அரவிந்த் அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்றான். “பாரதி இன்னைக்கு நாம ஏன் ஸ்கூலுக்கு போகணும்?” அனைவருக்கும் முன் அவன் முந்திக்கொள்ள, பாரதி அவனை புரியாமல் பார்த்தாள்.

“ஏன் ஸ்கூலுக்கு போகக்கூடாது? அதெல்லாம் போகலாம். முந்தா நாள் கல்யாணம். நேத்து எல்லா வேலையும் முடிஞ்சிடுச்சு. நேத்து சாயங்காலம் கோயிலுக்கு போயிட்டு வந்துட்டோம். இன்னிக்கி சும்மா தானே இருப்போம், நம்ம ஸ்கூலுக்கு போயிடலாம். அங்கு என் கிளாஸ் பசங்களுக்கு பாடம் முடிக்கணும். நமக்கும் ஸ்கூல்ல நிறைய வேலை இருக்கு” அவள் படபடக்க, ‘இவள் உலகமே இந்த ஸ்கூல் தானா?’ அரவிந்த் நொந்துகொள்ள, மோகனுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.

“இன்னைக்கு சொந்தக்காரங்க வீட்டுக்கு போகணும்” என்றான் அரவிந்த். பெரியவர்கள் இருவரும் அவர்களை பேசவிட்டு வேடிக்கை பார்க்க, விஜயாவுக்கு அவர்கள் திருமணமான புதிதில் நடந்த சம்பவங்கள் நினைவில் வந்து போயின. அவளை விட்டு விலகாத மோகனும் கூட. அவள் முகம் இறுக்கத்தை தளர்த்தி, மென்மையானது.

“சொந்தக்காரங்க வீட்டிற்கு எல்லாம் நீ போய் நான் பார்த்ததே இல்லையே” என்று இப்பொழுது விஜயா நமட்டு சிரிப்போடு கேலி பேச, பெரியவர்களுக்கு ஆச்சரியம். விஜயா திருமணமான புதிதில் இப்படி அமர்ந்து கேலி பேசுவது உண்டு. ஆனால் அதன் பின், வேலை குழந்தைகள், கருத்து வேறுபாடு என்று ஒதுங்கி விட்டாள்.

விஜயா பேசுகையில், இப்பொழுது பாரதி குறுக்கிட்டாள். “அப்படி எங்கையும் போகணும்னு அத்தை சொல்லவே இல்லை.” அவள் வெகுளியாக சொல்ல, “எல்லாமே அத்தை சொல்ல மாட்டாங்க. அரவிந்த் சொல்லுவான்.” என்று விஜயா கூற,

‘இவ என் மானத்தை வாங்காம விட மாட்டா போல’ அவன் நொந்து கொள்ள, “நீங்க எங்க போகணும்னு பிளான் பண்ணிருக்கீங்க? அதுக்கு ஏத்தது போல ஷாப்பிங் போங்க” என்று மோகன் அவர்களை காப்பாற்றினான். மோகன் அந்த கேள்வியை கேட்டதும் அரவிந்திற்குள் சற்று நிம்மதி பரவியது.

“எங்க பிளான் பண்ணி இருக்கீங்க?” என்று அவன் தம்பியைப் பார்த்தான்.

“அண்ணா நான் இடத்தை செலக்ட் பண்ணிட்டேன்” என்று அரவிந்த் கூற, பாரதி இப்பொழுது யோசனையோடு பார்த்தாள். ஏதோ பேச வாய் எடுக்க எத்தனித்தவள் நேற்று அரவிந்த் கூறிய அறிவுரையை எண்ணி, சட்டென்று வாயை இறுக மூடிக் கொண்டாள்.

இடத்தை பற்றி மோகன் கேட்க, அவன் தன் கையில் இருந்த அலைபேசியை அவனிடம் நீட்டி ஏதோ மெதுவாக கூறினான். மோகனும் உடனே சம்மதமாக தலையசைத்தான். இதை பார்த்துக் கொண்டிருந்த சைந்தவி, “சித்தி சித்தப்பா ஊருக்கு போறாங்களா, நானும் வருவேன்” என்று கூற, விஜயா இப்பொழுது தர்ம சங்கடமாக நெளிந்தாள்.

குழந்தையின் வாயை அடைக்க, “உங்களுக்கு ஸ்கூல் இருக்கே எப்படி போவீங்க?” என்று விஜயா முட்டுக்கட்டை இட, உடனே பாரதி, “அப்போ குழந்தைகளுக்கு லீவு விட்டதுக்கு அப்புறம் சேர்ந்தே போலாம்” என்ற ஆலோசனை கூறினாள்.

‘முந்திரிக்கொட்டை!’ திட்டிக்கொண்டே அரவிந்த் பாரதியை முறைத்தான். பாரதி இப்பொழுது சலித்துக் கொண்டாள். ‘இப்ப நான் அப்படி என்ன சொல்லிட்டேன்? நான் என்ன சொன்னாலும் உடனே முறைக்க வேண்டியது’ என்று அவனை இப்பொழுது இவள் முறைத்தாள்.

“சூப்பர், எல்லாரும் சேர்ந்து போலாம்” என்று சைந்தவி குதூகலித்தாள். மோகன் அவள் அருகே மண்டியிட்டு, “சைந்தவி, எல்லாரும் சேர்ந்து அப்புறம் போகலாம். இப்போ சித்தி சித்தப்பா போயிட்டு வருவாங்க. அதே வாரம், வெள்ளிக்கிழமை ஒரு நாள் லீவு போட்டுட்டு, சனி, ஞாயிறு நம்ம நாலு பேரும் போகலாம் சரியா?” என்று சைந்தவியிடம் அனுமதி போல் கேட்க, “ஓ, அப்போ அம்மா, அப்பா, அண்ணா நாம நாலு பேரா?” என்று அவள் கேட்க, அவன், ‘ஆம்’ தலையசைத்தான்.

“பாட்டி, தாத்தா வரலையா?” என்று வருண் கேட்க, “பாட்டி, தாத்தா வரும்போது எல்லாரும் சேர்ந்து போலாம் சரியா?” என்று அரவிந்த் கூற, “இப்பவும் பாட்டி தாத்தாவும் வரணும்…” என்று சைந்தவி பிடிவாதம் பிடிக்க ஆரம்பித்தாள்.

“இப்பதானே கல்யாண வேலை முடிஞ்சிருக்கு, பாட்டி தாத்தா இப்போ வர முடியாது. எங்களுக்கு உடம்பு முடியலை. நீங்க நாலு பேர் போயிட்டு வாங்க.” என்று இத்தனை நேரம் இவர்கள் பேச்சை அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த சிவகுரு கூற, அனைவரும் ஆமோதிப்பாக தலையசைத்தனர்.

மோகனின் இந்த மாற்றம் கூட பெற்றவர்களுக்கு ஆச்சரியமாகவே இருந்தது. குழந்தைகள் பள்ளிக்கு வழக்கம் போல கிளம்பிவிட்டனர். அவர்கள் அனைவரும் அறைக்குள் சென்றுவிட, நித்திய கல்யாணி தன் கணவரிடம், “என்ன ஆச்சரியம் மோகன் இப்படி சொல்றானே?” என்று கேட்க,

அவரும், “எனக்கும் அதான் தெரியல. விஜயாவுக்கும் மகனுக்கும் பெரிய சண்டை எல்லாம் இல்ல. ஆனா ஒரு புரிதல் இல்லாம போச்சு. வேலை எல்லாம் விட்டுவிட்டு அவங்க பேசினாலே பாதி பிரச்சனை சரியாகிடும். பேசாம தான் இவங்க சின்ன சின்ன விஷயங்களை பெருசாக்கிட்டு சண்டை போட்டுட்டு இருக்காங்க. ஒருவேளை இவங்க இப்படி போயிட்டு வந்தா அவங்களுக்குள்ள இருக்குற பிரச்சனை சரியாகலாம்” என்று அவர் கூற, நித்தியகல்யாணியும் ஆமோதிப்பாக தலையசைத்தார்.

அதே நேரம் மோகன் அறையில், “நான் எங்கேயும் வரல” என்று விஜயா கோபமாக மறுப்பு தெரிவிக்க, மோகனுக்கு இப்பொழுது கோபம் தலைக்கு ஏறியது. “நானும் உன்னை எங்கேயும் கூப்பிடல” என்று அவன் அசட்டையாக கூற,

“அப்ப எதுக்கு சைந்தவி கிட்ட அப்படி சொன்னீங்க?” விஜயாவுக்கு இப்பொழுது அவன் பதில் ஏமாற்றமாக இருந்தது. “சைந்தவியை அரவிந்த் பாரதி கூட அனுப்ப முடியுமா?” அவன் மறுகேள்வி கேட்க,

“அப்ப சைந்தவி கிட்ட பொய் சொன்னீங்களா?” அவள் அவன் முன் கோபமாக நின்றாள். மிக நெருக்கமாக நின்றாள். பல நாட்களாக இல்லாத நெருக்கம். ‘இப்ப எல்லாம் விஜயா சண்டை கூட போடுறதில்லை. மௌனம்… எப்பொழுதும் மௌனம் மட்டுமே.’ இந்த மாற்றமே அவனுக்கு இதமாக இருந்தது. சுமூகமாக போக அவனுக்கு விருப்பம் தான். ஆனால், இறங்கி போக கிஞ்சித்தும் விருப்பம் இல்லை.

“பொய் சொல்லல, உண்மையிலேயே போலாம்னு நினைச்சு தான் நான் சொன்னேன். குழந்தைகளுக்காக போலாம்னு நினைக்கிறேன்” அவன் குழந்தைகளை முன் வைத்தான். விஜயாவின் மனம் இப்பொழுது வாடியது.

அவன் அருகாமை அவளையும் ஏதோ செய்தது. ‘நான் சண்டை கூட இப்பல்லாம் போடுறதில்லை. விலகிடலாம்னாலும் என்னால முடியலை. குழந்தைங்களை விட முடியாது. மோகனிடம் பேசாமல் என்னால் இருக்க முடியும். ஆனால், மோகன் இல்லாமல் என்னால இருக்க முடியுமா?’ அவள் வீராப்பு சற்று ஆட்டம் கண்டது அவன் அருகாமையில்.

‘நாம போலாம்னு சொன்னா இவ குறைஞ்சா போய்டுவா?’ அவன் அவளிடம் இருந்து சிறிதும் விலகாமல் அவளை பார்த்தான். “நான் என் தம்பிக்கு தப்பான உதாரணமா இருக்க கூடாதுனு நினைக்குறேன்” அவன் இப்பொழுது பொறுப்போடு பேச,

‘தம்பிக்காக சொல்லுவாங்க… புதுசா வந்த பொண்ணுக்காக சொல்லுவாங்க… குழந்தைக்காக சொல்லுவாங்க… ஆனா ஏன் எனக்காக சொல்ல மாட்டாங்களா? சொன்னா இவருக்கு என்ன தலையில இருக்க கிரீடம் இறங்கிடுமா என்ன? நான் கல்யாணம் முடிஞ்சு வந்த புதுசுல இருந்த மோகன் இப்படி கிடையாது’ அவள் எதுவும் பேச விரும்பாமல் விசுக்கென்று கோபத்தில் கதவை படாரென்று அடைத்துக் கொண்டு குளியல் அறைக்குள் நுழைந்தாள்.

மோகனுக்கு வெறுப்பாக இருந்தது. ‘இப்ப நான் என்ன சொல்லிட்டேன்? ஊருக்கு போலாம்னு தானே சொன்னேன்? குழந்தைகளுக்காக தானே சொல்றேன். இவளுக்கு எப்ப பார்த்தாலும் அவ வேலை வேலை… வரேன்னு சொன்னால், இவ கிரீடம் கீழ விழுந்து இவ மஹாராணி பட்டம் போய்டுமா என்ன?’ என்று மோகன் தனக்குத்தானே புலம்பி கொண்டு அவனும் அலுவலகத்திற்கு கிளம்ப தயாரானான்.

அதே நேரம் பாரதி, ‘இன்னைக்கு நாம ஸ்கூலுக்கு போகல. அப்ப இன்னிக்கு நான் என்ன பண்ண போறோன்?’ என்ற யோசனையோடு வேலைகளை கவனிக்க சமையலறைக்குள் நுழைந்தாள். நித்திய கல்யாணியும் அங்கு சமையலறை வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தார். வழக்கமாக நித்திய கல்யாணியும் செல்வியும் தான் இதை செய்வது உண்டு. விஜயா அந்த பக்கம் வருவது இல்லை. இன்று பாரதியும் அங்கு எதையோ செய்து கொண்டிருந்தாள். பாரதியின் இந்த உதவி அவருக்கு நல்லதொரு ஒத்தாசையாக இருந்தது.

பாரதியின் மனதில் ‘நான் இந்த ட்ரிப் கண்டிப்பா போய் ஆகணுமா? எப்படி இருக்கும்? அரவிந்த் கூட தனியா இத்தனை நாளா அய்யய்யோ!’ அவள் சற்று படபடப்பாக உணர்ந்தாள்.

அதே நேரம் விஜயாவுக்கு பல கேள்விகள். ‘இப்படி மோகன், எல்லாரும் போறாங்க, இவங்களுக்காக போறேன்… அவங்களுக்காக போறேன்னு கூப்பிடற இடத்துக்கு நான் போகணுமா? நான் ஏன் போகணும்’ என்ற வீம்பு அவளுள் வளர்ந்தது.

பழக்கமில்லா புதிய இடத்தில் தடுமாற்றத்துடன் ஒருத்தி!

பழகிய இடத்தில் ஏற்பட்ட ஏமாற்றங்களுடன் ஒருத்தி!

பயணம் தொடருமா? பயணம் இனிக்குமா? பல பிரச்சனைகளுக்கு வழி வகுக்குமா?

அடுத்த அத்தியாயம்

அத்தியாயம் – 21

21திருமணமாகி பாரதி அந்த வீட்டிற்கு வந்து ஒரு வாரம் ஆகி இருந்தது. அவள் அந்த வீட்டிற்குப் பழகி இருந்தாளோ என்னவோ, அந்த வீட்டினர் அவளின் வருகையை அழகாக ஏற்றுக் கொண்டனர். குழந்தைகள் சற்று உற்சாகமாகவே காணப்பட்டனர். சைந்தவி முகத்தில் எப்பொழுதும் புன்னகை…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

இந்தக் கதையைப் பற்றி விவாதிக்கவும் 1

  1. Thaniபொதுக் கருத்துThani

    திருமணமாகி இத்தனை வருடமாகியும் மோகன் தம்பதிக்கு வாழ்கை அனுபவம் ஒண்ணுமே புரியலை ,
    புது தம்பதி இவங்களை விட மோசம் என்ன படித்தாங்களோ..?
    டீச்சருக்கு ஒண்ணுமே தெரியல 😂
    என்ன பேசுறாள் என அவளுக்கே தெரியல .

உங்கள் கருத்தைப் பகிருங்கள்