அத்தியாயம் – 3
3
தன் குளியலை முடித்துவிட்டு, முடியை துவட்டியபடி வந்து அமர்ந்தாள் பாரதி.
“ஏய், இப்ப தான் மழையில் நனைஞ்சன்னு தலையை துவட்டி விட்டேன். திரும்பவும் ஈரத்தலையோட வந்து உட்காந்திருக்க?” பூரணி கடிந்து கொள்ள, “அம்மா, நான் என்ன சின்ன பிள்ளையா? நான் துவட்டிக்குறேன். எனக்கு சூடா மிளகாய் பஜ்ஜி செஞ்சி தாங்களேன். நான் அப்பவே கேட்டேனே” அவள் செல்லம் கொஞ்சினாள்.
“ஏண்டி எப்ப பார்த்தாலும் பஜ்ஜி வேணும்னு கேட்டுட்டு இருப்பியா?” என்று அவர் கடிந்து கொண்டே, தன் மகளுக்கு பிடித்த மிளகாய் பஜ்ஜியை செய்ய தயாரானார்.
“அம்மா எப்படியும் எனக்கு புடிச்ச மிளகாய் பஜ்ஜி தான் பண்ணுவீங்க. அதனால வெறும் மிளகாய் பஜ்ஜியை பண்ணாம… ஸ்டஃபிங்… ஸ்டஃபிங் பண்ணுங்க அம்மா” தன் தந்தையை பார்த்து கண்ணடித்தாள்.
“ஸ்டஃப் பண்ண மிர்ச்சி மிளகாய் பஜ்ஜி பண்ணுங்க. நல்ல காரமா இருக்கட்டும்” அவள் நாக்கை துருத்தி கேட்க, தன் மகளை முறைத்துக் கொண்டே அவர் வேலை செய்ய, “அம்மா, மிளகாயை ஆவியில் வச்சி எடுத்துருங்க. வச்சிட்டு அதுக்கப்புறம் கடலை மாவில் போட்டு எடுங்க” என்று அவள் ஹாலில் அமர்ந்தபடி அதிகாரம் செய்ய,
“ஏய், பாரதி… உனக்கு பஜ்ஜி போட சொல்லி கொடுத்ததே நான். நீ எனக்கு பாடம் எடுக்கறியா? டீச்சர் வேலையை என்கிட்டயே காட்டுறியா?” அவர் அந்த நீளமான பஜ்ஜி மிளகாயை வெட்டி அதை பதமாக ஆவியில் வைத்து எடுத்து, அதற்குள் சிறிது சிறிதாக அரிந்த வெங்காயத்தை போட்டு அதை பாரதி சொன்னபடி ஸ்டஃப் செய்து அதை கடலைமாவில் முக்கி எடுத்து எண்ணெயில் பொரித்து அழகாக வட்ட வட்டமாக பாதியாக வெட்டி அடுக்கினார்.
அதன் மீது இன்னும் கொஞ்சம் உப்பையும் மிளகாய் தூளையும் தூவினார். அதற்கு மேல் கொத்தமல்லியையும் தூவி விட்டு தன் மகளுக்கும் தன் கணவருக்கும் எடுத்துக் கொண்டு அவர்கள் அமர்ந்திருந்த இடத்திற்கு வந்தார் பூரணி.
“பார்க்கவே சூப்பரா இருக்கு அம்மா.” அதை சாப்பிட ஆரம்பித்தாள். தன் தாயை சிலாகித்தாலும் பாரதியின் சிந்தனை எங்கோ இருந்தது. அவள் தாயும் தந்தையும் அவளை கண்டுகொண்டனர். பூரணி தன் மகளை யோசனையாக பார்த்தார்.
சிதம்பரம் எதையும் அத்தனை சட்டென்று கேட்கக் கூடியவர் அல்ல. அவர் இயல்பிற்கு ஏற்ப, மௌனம் காத்து தன் மகளை ஆழம் பார்த்தபடி அமர்ந்தார். ஆனால் பூரணியின் குணம் அவ்வாறு இல்லை. எதுவென்றாலும் தன் மகளிடம் சட்டென்று கேட்டு விடுவார்.
“என்னடி பாரதி யோசனை?” என்று பூரணி கேட்க, “ஒன்னும் இல்லமா…” என்று அவள் மீண்டும் தன் தாயின் கவனத்தை திசை திருப்ப அவர் சமையல் திறனை பாராட்ட ஆரம்பிக்க, தன் மகளின் சாமர்த்தியசாலித்தனத்தைக் கண்டு கொண்ட அவள் தந்தை, “என்ன பிரச்சனைன்னு அம்மா கேட்கிறாள சொல்லு.” இப்பொழுது சற்று கட்டளையாகவே கூறினார் சிதம்பரம்.
“அப்பா, சைந்தவி தெரியும்ல… அவ இன்னைக்கு…” என்று ஆரம்பித்து அரைகுறையாக அவள் நிறுத்த, “எந்த சைந்தவி?” என்று கேட்டார் பூரணி.
“அம்மா… அதுதான் மா நம்ம சிவகுரு சார் பேத்தி… சைந்தவி, வருண் அவங்க ரெண்டு பேரும் அவங்க ஸ்கூல்ல தான படிக்கிறாங்க” அவள் தன் தாயிடம் கூற, “ம்ம், அந்த பிள்ளைகளை நானும் பார்த்திருக்கேன்.” என்று சிதம்பரம் ஆமோதிப்பாக தலையசைத்தார்.
“அந்த பொண்ணுக்கு ஏதோ பிரச்சனைன்னு நினைக்கிறேன்…” என்று பாரதி கூற, பூரணி சட்டென்று அவள் தொடையில் தட்டினார். “இந்த ஊர் பிரச்சனை எல்லாம் நமக்கு தேவையா?” என்று அவர் கேட்க, “அம்மா… இல்லம்மா எனக்கு உண்மையிலேயே என்ன பிரச்சனைன்னு தெரியல. ஆனா எனக்கு ஒரு சந்தேகம். அந்த பையன் வருண் காலையில இறங்குறது ஸ்கூல்ல. ஆனா அவன் ஒழுங்கா ஸ்கூலுக்கு வர்றதில்ல. இது அவங்களுக்கு தெரியுமா, தெரியாதான்னு எனக்கு தெரியல.”
“அவங்க கிளாஸ் டீச்சர் தகவலை சொல்லிவிட்டதா தான் சொல்றாங்க. ஆனா சொன்னாங்களா இல்லையான்னு தெரியல. எனக்கும் அந்த கிளாஸுக்கும் சம்பந்தம் இல்ல. அதனால நான் போய் சொல்லவும் முடியாது.” என்று யோசனை போல் நிறுத்தினாள்.
“வருண் தான் ஒழுங்கா கிளாசுக்கு வர்றதில்லன்னு பார்த்தா… இந்த பொண்ணு சைந்தவி முகம் கொஞ்சம் கூட சரியில்ல. ரொம்ப சோகமாகவே இருக்கா. அவளை விடுங்களேன்… இன்னைக்கு கார் பிக்கப் பண்றதுக்கு வரல.”
“உங்க அம்மா கிட்ட பேசுறியா, உங்க அப்பாவ வர சொல்றியா? அம்மாவ வர சொல்றியான்னு நான் கேட்டேன். ஆனா சைந்தவி, இல்ல வேண்டாம். அம்மா வேலையா இருப்பாங்க. அப்பா வேலையா இருப்பாங்கன்னு சொல்லிட்டா. சரி, உன் பாட்டி, தாத்தா கிட்ட சொல்லி கூப்பிட வர சொல்லட்டுமான்னு கேட்டேன்.”
“இல்ல இல்ல வந்துருவாங்க நீங்க போங்கன்னு சொல்லிட்டா. அவ ஸ்கூல் தானே? அங்க இருக்குற செக்யூரிட்டியும் அவங்க வீட்ல வேலை பாக்குறவங்க தான். அதனால அவ கிளாஸ் டீச்சர் எல்லாரும் கிளம்பிட்டாங்க. மத்த பிள்ளைங்க யாரையும் அப்படி விட்டுட்டு போக மாட்டாங்க… அவங்க ஸ்கூல் தானே! அங்க எல்லாரும் தெரிஞ்சவங்க தான். அதனால, டீச்சர்ஸ் விட்டுட்டு போயிட்டாங்க. எனக்கு அந்த சின்ன பெண்ணை விட்டுட்டு வர மனசு இல்லம்மா. என்னதா இருந்தாலும் பாவம் சின்ன பொண்ணு இல்லையா? அதான் வெயிட் பண்ணி அவங்க கார் வர்ற வரைக்கும் இருந்து அனுப்பிட்டு வந்தேன்.” என்று பாரதி கன அக்கறையோடு கூற, “இதுதான் நீ வர்றதுக்கு லேட் ஆன காரணமா?” என்று பூரணி தன் மகளை கூர்மையாக பார்த்தார்.
“அவங்க கிட்ட அவ்வளவு கார் இருக்கு. அம்மா அப்பா யாருமே புள்ள வரல்லையேன்னு தேட மாட்டாங்களாஅம்மா? நான் டிரைவர் கிட்ட கேட்டேன். பாட்டி தாத்தா கிட்ட நான் தகவல சொல்லிட்டேன் அப்படின்னு சாதாரணமா சொல்றாரு.” பாரதி தன் தந்தையிடமும் தாயிடமும் ஆதங்கத்தோடு கூற, அவர் தலையசைத்துக் கொண்டார்.
“முன்னமெல்லாம் சிவகுரு சார் ஸ்கூலுக்கு வருவாங்க. இந்த பிள்ளைகளை அவங்களே கூட்டிட்டு போய்டுவாங்க. ஆனா இப்போ சிவகுரு சாருக்கு வயசாயிடுச்சு இல்லையா, அதனால வர முடியல” என்று பாரதி இருவரிடமும் கூற,
சிதம்பரம், “ஆமா நானும் ஐயாவுக்கு உடம்பு சரியில்லைன்னு கேள்விப்பட்டேன். ஒருநாள் போய் பாத்துட்டு வரணும்.” தலையசைத்துக் கொண்டே ஏதோ நினைவு வந்தவர் போல, “அப்ப, இப்ப பிரின்சிபால் யார்?” என்று அவர் கேட்க, “இப்ப புதுசா ஒரு பிரின்ஸ்பல் மேடத்தை அப்பாயிண்ட் பண்ணிட்டாங்க. சிவகுரு சார், அவங்க பெரிய பையன தான் வந்து பார்க்க சொன்னாங்க. அவங்க அவரோட மில் பிசினஸ் பாத்துட்டு இருக்கறதுனால வர முடியலன்னு சொல்லிட்டாங்க போல…” பாரதி நிறுத்த,
“ஆமா, பெரியவர் பிசினஸ் பாத்துட்டு இருக்கார். சின்னவர் அமெரிக்கால இருக்கிறதா கேள்வி” சிதம்பரம் கூற, பாரதியின் சிந்தனையோ சைந்தவியை சுற்றி வந்தது. அத்தோடு சேர்ந்து ‘அரவிந்த் சித்தப்பா…’ என்று அவள் புத்தகத்தில் எழுதி இருந்ததும்.
“அம்மா, அந்த பொண்ணுக்கு என்ன பிரச்சனைன்னு கேட்டு சரி பண்ணுவோமா?” என்று பாரதி தன் தாயை பார்த்து கேட்க, “பெரிய வீட்டுல ஆயிரம் பிரச்சனை இருக்கும். இதெல்லாம் உனக்கு தேவையே இல்லாத விஷயம். ஒழுங்கா ஸ்கூலுக்கு போனோமா, வேலைய பாத்துட்டு வந்தோமான்னு இருக்கனும். நாங்க சொல்லப் போற பையனை கல்யாணம் செய்து செட்டில் ஆகுற வழிய பாரு. “ அவள் தாய் கண்டிப்போடு கூறினாலும், அவள் மனதில் ஒரு ஆசிரியராக பல கேள்விகள் எழுந்தது.
‘இந்த குழந்தைக்கு கண்டிப்பா கவுன்சிலிங் கொடுக்கணும். அவ குடும்ப விஷயம் நமக்குத் தேவையில்லை. இருந்தாலும், அவ ஸ்கூல்ல ஏன் அப்படி இருக்கா? என்ன பிரச்சனைன்னு கேட்டு சரி பண்ண வேண்டியது என் கடமை. இது ஊரார் விஷயம் இல்லை. என் மாணவியோட பிரச்சனை. இதெல்லாம் சொன்னா அம்மாவுக்கு புரியாது.’ என்று தன் தாயின் அறிவுரையை ஒதுக்கிவிட்டு, தனக்குள் ஒரு முடிவெடுத்தவளாக தன் அறைக்குள் சென்றாள்.
தன் தாயின் அறிவுரையை ஒதுக்கியதால், அவள் சந்திக்கப் போகும் வினையை அறியாமல்!





பிள்ளைகளை கவனிக்காமல் பெற்றவர்கள் என்ன பண்ணுறாங்க ..?