அத்தியாயம் – 21
21
திருமணமாகி பாரதி அந்த வீட்டிற்கு வந்து ஒரு வாரம் ஆகி இருந்தது. அவள் அந்த வீட்டிற்குப் பழகி இருந்தாளோ என்னவோ, அந்த வீட்டினர் அவளின் வருகையை அழகாக ஏற்றுக் கொண்டனர். குழந்தைகள் சற்று உற்சாகமாகவே காணப்பட்டனர். சைந்தவி முகத்தில் எப்பொழுதும் புன்னகை இருந்தது. வருணுக்கு சில கஷ்டங்கள் இருக்கத்தான் செய்தது.
முன்பெல்லாம் ஏதாவது பொய் சொல்லிக்கொண்டு சுற்றுவான். இப்பொழுது எங்கும் செல்ல முடியவில்லை. ட்யூஷன் அனைத்தையும் இப்பொழுது நிறுத்தி விட்டார்கள். பாரதி அவன் படிப்பை நேரடியாக பார்க்க ஆரம்பித்து விட்டதால், முன்பு போல அது இது என்ற கதை சொல்ல முடியவில்லை. ஆனால் பாரதியின் அரவணைப்பு, பள்ளியில் படிப்பில் அவன் காணும் உடனடி முன்னேற்றம் என்று வருண் இப்பொழுது சந்தோஷமாக இருந்தான்.
விஜயா வழமை போல் வேலைக்கு சென்று கொண்டிருந்தாள். பெரிதாக சமையலில் ஈடுபாடு காட்டுவதில்லை, வீட்டு வேலையிலும் ஈடுபாடு காட்டுவதில்லை. ஆனால் குழந்தைகளிடம் முன்பு போல் ஒதுங்கி இருப்பதில்லை. அவளுக்கு குழந்தைகள் மேல் பாசம் இருந்தாலும் அவர்கள் வேலையை அவர்களே பார்க்க வேண்டும் என்று கருத்தை தனக்கு தானே போதித்துக் கொண்டு, இன்றைய நவீன தாயாக அவர்களிடம் சற்று விலகியே நடந்து கொள்வாள்.
ஆனால் இப்பொழுது அவளால் அப்படி விலகி நடக்க முடியவில்லை. பாரதியிடம் குழந்தைகள் ஒட்டிக் கொள்வதில் அவளுக்கு கொஞ்சம் அசூயை தான். அவள் வெளியே நேரடியாக காண்பிக்காவிட்டாலும் அவள் மனதில் ஏதோ ஒரு ஓரத்தில் பொறாமை எட்டிப் பார்த்தது. வீட்டில் சிவகுரு, நித்தியகல்யாணி என பெரியவர்களிடம் பாரதி முக்கியத்துவம் பெற்றதெல்லாம் அவளுக்கு ஒரு பெரிய பொருட்டாக தெரியவே இல்லை. ஆனால் அவள் குழந்தைகள் பாரதியிடம் மிக மிக நெருக்கமாக இருப்பது அவளுள் சற்று பொறாமை உணர்ச்சியை தூண்டியது.
அவளும் வீட்டில் இருக்கும் நேரத்தை கொஞ்சம் அதிகரித்திருந்தாள். அவ்வப்போது குழந்தைகளோடு நேரம் செலவழிக்க ஆரம்பித்தாள். பெரியவர்கள் இதை கண்டும் காணாதது போல் இருந்தனர்.
மோகன் வழக்கம் போல் வேலை பார்த்துக் கொண்டிருந்தான். அவனுக்கு அன்று விஜயா பேசியது மட்டுமே அவன் நினைவில் இருந்தது. இருந்தாலும் அவன் ஒன்றில் உறுதியாக இருந்தான். நிச்சயம் இந்த முறை வெளியூர் செல்ல வேண்டும், விஜயாவிடம் பேச வேண்டும். ஒன்று இப்படி இருக்கும் வாழ்க்கை பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும், இல்லை இந்த வாழ்க்கைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்து குழந்தைகள் எதிர்காலத்தை எவ்வாறு கையாள வேண்டும் என்பதையாவது பேச வேண்டும் என்பதில் மோகன் தீவிரமாக இருந்தான்.
அரவிந்தும் பாரதியும் அங்கிருந்த சொந்தக்காரர்கள் வீட்டிற்கு சென்றனர். இரு வழியிலும் விருந்து என்று அவர்கள் நேரம் நகர்ந்தது. அதன் பின் ஹனிமூன் ட்ரிப் என தேவையான பொருட்கள், உடைகளை வாங்கினர். எங்கே எப்படி போகிறோம் என்ற எண்ணமோ, கேள்வியோ அவளிடமிருந்து வரவே இல்லை. அவள் தினமும் பெற்றோர் வீட்டுக்கு சென்று அவர்களைப் பார்த்து விட்டு வந்தாள். அரவிந்தும் அவர்கள் வீட்டில் கலகலப்பாக பேசிப் பழகினான். இதனால் பாரதியின் வீட்டிலும் மிக திருப்தி. பூரணிக்கு தன் மகளைப் பற்றி இருந்த குழப்பம் நீங்கி இருந்தது.
நித்தியகல்யாணி ஒன்றை புரிந்து கொண்டார். விஜயாவிற்கும் பாரதிக்கும் வேலை விஷயத்தில் ஒரே எண்ணப்போக்கு தான். விஜயாவுக்கும் வேலை முக்கியம். அதேபோல் பாரதிக்கும் வேலை முக்கியம். ஆனால் என்ன வித்தியாசம் என்றால் விஜயா குடும்பத்திற்கு முன் வேலையை வைத்து அதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறாள். பாரதி அனைத்திற்கும் சமமான முக்கியத்துவத்தை கொடுக்கிறாள். இதை அவ்வப்போது தன் கணவரிடமும் கூறினார். சிவகுரு சிரித்துக் கொண்டார்.
“இந்த காலத்து பொண்ணுங்க அந்த காலம் மாதிரி வீடே கதின்னு இருக்க மாட்டாங்க. அப்படி எதிர்பார்க்கிறதும் தப்பு. வேலைக்கு போறது அதுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது எல்லாமே சரிதானே?” என்று அவர் தன் மனைவிக்கு கூற, இப்பொழுது நித்தியகல்யாணி தன் கணவரையும் வேற்று கிரக மனிதர் போலவே பார்த்தார். ஆனால், தான் சொல்வதற்கோ, செய்வதற்கோ ஒன்றும் இல்லை. மோகனுக்கும் அரவிந்துக்கும் எந்த பிரச்சனையும் இல்லாத பொழுது என்ன சொல்வது என்று மௌனம் காத்துக் கொண்டார் நித்தியகல்யாணி.
அரவிந்த் சற்று வழக்கத்திற்கு அதிகமாக சந்தோஷமாகவே இருந்தான். விடுமுறை நாட்களில் ஊருக்கு செல்லும் குழந்தை போல உற்சாகமாக இருந்தான். அந்த ஆரவாரம் அவன் முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது.
அவனை பார்த்த மோகன், “என்னடா வெக்கேஷன் மாதிரி ஜாலியா சுத்துற” என்று கேலி செய்தான். அரவிந்தும், தன் தமையனிடம் “நான் செலக்ட் பண்ணி இருக்கிற இடம் கொஞ்சம் த்ரில்லா ரொம்ப நல்லா இருக்கு. வந்ததிலிருந்து வேலை வேலை வேலை… அப்புறம் கல்யாணம் இப்படியே போயிருச்சு. அதனால கொஞ்சம் ஃப்ரீயா ஜாலியா போயிட்டு வரலாமுன்னு இருக்கேன் . இந்த இடம் நல்லா இருக்கும்” என்று அவன் உல்லாசமாக கூற, மோகன் சற்று மிரண்டு போனான்.
“டேய், பாரதி இங்கயே வளர்ந்த பொண்ணு. உன் த்ரில் எல்லாம் தாங்குவாளா? பயந்திட போறா.” அவன் அக்கறையோடு அறிவுரை கூற, “பழக்கிக்க வேண்டியது தானே அண்ணா? நான் இருக்கேனில்லை பார்த்துக்கிறேன்.” அரவிந்த் கண்சிமிட்ட அவன் தோளில் தட்டி சிரித்தான் மோகன்.
“நல்லா இருந்தா அதே இடத்துக்கு நம்ம எல்லாரும் திரும்ப போறோம்” என்று அவன் கூற, மோகன் சம்மதமாக தலையசைத்தான்.
அப்பொழுது ஏதோ வேலை பார்த்துக் கொண்டிருந்த பாரதி முகத்தில் ஒரு பதட்டம் இருந்தது. அவளுக்கு இரண்டு விதமான பதட்டம். அப்பொழுது அவளைப் பார்த்து அரவிந்த், “ஏன் ஒரு மாதிரி இருக்க?” என்று புருவம் உயர்த்த, “ஸ்கூல்ல நம்ம ரெண்டு பேரும் நிறைய மாற்றங்கள் பண்ணனும்னு பேசினோம். அந்த வேலையை ஆரம்பிச்சோம். அது பாதியில இருக்கு. நான் சிலபஸ் முடிக்கணும்” அவள் மீண்டும் ஒரே பல்லவியை பாட, அவன் மேலும் கீழும் அவளை பார்த்துவிட்டு அவள் தலையில் தட்டிச் சென்றான்.
எதுவும் பேசாமல் சென்ற அரவிந்தை அவள் யோசனையாக பார்த்தாள். அவனிடம் கேட்க பல கேள்விகள் இருந்தாலும் எதை கேட்பது… இல்லை இல்லை எது கேள்வி என்று அவளுக்கே புரியாத மனோபாவம் அவளிடம் இருந்தது.
அவர்கள் கிளம்பும் நாளும் வந்தது. சைந்தவி தான் சற்று முகத்தை தூக்கிக் கொண்டு இருந்தாள். “நிச்சயமா நான் உன்னை டூர் கூட்டி செல்வேன், நம்ம நாலு பேரும் போவோம்” என்று சைந்தவியை மோகன் சமாதானம் செய்து, அனைவரும் அவர்கள் இருவரையும் விமான நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர்.
இருவரும் விமானத்தில் ஏறினர். விமானத்தில் ஏறிய பாரதி அவனை கூர்மையாக பார்த்தாள். உடனே அரவிந்த், “இதுதான் உனக்கு ஃபர்ஸ்ட் பிளைட் ட்ராவலா?” என்று கேட்டான். “இல்லை இல்லை இதுக்கு முன்னாடி நான் போயிருக்கேன். அப்பா ஒன்னு ரெண்டு தடவ கூட்டிட்டு போயிருக்காங்க” என்று சொல்லவும், “சரி சரி, அப்போ ஒன்னும் பிரச்சனை இல்ல” என்று ஆசுவாசத்தோடு சாய்ந்து அமர்ந்தான்.
அவனின் செய்கையை பார்த்தவளுக்கு, ‘அரவிந்துக்கு என்னை பிடிக்குமா?’ என்ற கேள்வி தோன்ற, பாரதி சற்று திடுக்கிட்டு தான் போனாள். ‘ஏன் எனக்கு இப்படி எல்லாம் தோணுது?’ என்று யோசித்தவள் அந்த கேள்வியை ஒதுக்கிவிட்டு, இதுவரை அவர்களுக்குள் நடந்த சம்பாஷணையை அசை போட ஆரம்பித்தாள். பள்ளியில் இருக்கும் வரை அவளால் அவனிடம் இயல்பாக பேச முடிந்தது. பள்ளி சம்பந்தமான விஷயம் அவனிடம் பேசும் பொழுது அவளுக்கு தயக்கமோ, தடுமாற்றமோ வந்ததில்லை. அதன்பின் வீட்டிற்கு வந்த பிறகு பெரும்பாலும் இருவரும் மிகவும் அதிகமாக பேசிக் கொண்டார்கள் என்று சொல்ல முடியாது, பேசவில்லை என்றும் சொல்ல முடியாது.
பொதுவாக ஒரு பேச்சு அவ்வளவு தான். இரு நண்பர்களுக்கிடையே இருக்கும் பேச்சு என்று கூட சொல்ல முடியாது. அத்தனை ஒட்டுதல் இல்லாத பேச்சு. இதை செய்ய வேண்டும், அதை செய்ய வேண்டும், இங்கு போக வேண்டும், அதை வாங்க வேண்டும் என்பது மட்டுமே பொதுவாக இருக்கும். அவ்வப்பொழுது அரவிந்த் ஏதாவது இப்படி நடந்துகொள்ள கூடாது என்று சொல்வான். இதுவரை அவன் இவளிடம் கோபப்பட்டதும் இல்லை.
இந்த எண்ணம் தோன்றவும், ‘உரிமை இருக்கும் இடத்தில் தானே கோபம் கொள்ள முடியும்?’ என்று நாக்கை கடித்துக் கொண்டாள். அதன் பின் இந்த ஒரு வாரத்தில் இருவருக்கும் இடையே ஒரு சண்டை கூட வந்தது இல்லை என்று அவள் யோசிக்கும் பொழுது, ‘நெருக்கம் இருக்கும் இடத்தில் தானே சண்டை வர முடியும்?’ இவ்வாறு எண்ணி தனக்குத்தானே சிரித்துக் கொண்டாள்.
‘இப்படித்தான் இருக்குமா இந்த வாழ்க்கை?’ என்ற கேள்வி தோன்ற, ‘வேறு என்ன எதிர்பார்க்கிற பாரதி?’ என்று அவள் மனசாட்சி அவளிடம் கேட்க, அவள் தன் தோளை குலுக்கிக் கொண்டாள். இப்படி பல முகபாவனையோடும், தோளை குலுக்கிக் கொண்டும் இருக்கும் பாரதியை கூர்மையாக பார்த்தான் அரவிந்த். அவளை பார்த்து புருவம் ஏற்றினான்.
“என்ன யோசனை பாரதி?” அவன் இப்பொழுது அக்கறையாக கேட்க, அவளுக்கு சற்று ஆச்சரியமாகவே இருந்தது. ‘நான் யோசித்தால் இவங்களுக்கு தெரியுமா?’ என்ற எண்ணம் தோன்ற, ஒன்றுமில்லை என்று தலையசைக்க, அவன் பதில் எதுவும் பேசவில்லை. இருவரும் டெல்லி விமான நிலையத்தில் இறங்கினர்.
இருவரும் விமான நிலையத்திலிருந்து ரயில் நிலையத்திற்குச் சென்றனர். அவன் செல்ல திட்டமிட்ட இடம் உத்தரகாண்டில் ஜிம் கொர்பெட் தேசியப் பூங்கா. அங்கு செல்வதற்கு அவர்கள் ரயிலில் தான் செல்ல வேண்டும். ராணிகேத் எஸ்பிரஸில் ஏறினார்கள். காரில் சென்றிருக்கலாம். ஆனால், ரயிலில் செல்ல வேண்டும் என்று அவன் முடிவு செய்திருந்தான். இது அரவிந்தின் மற்றோரு பரிமாணம். அவனை பற்றி அறியாமல் அவனோடு பயணித்து கொண்டிருந்தாள் பாரதி. ரயிலில் அவ்வளவாகக் கூட்டமில்லை. அவள் ஜன்னல் அருகே அமர, அவன் அவள் அருகே அமர்ந்தான்.
கூட்டமில்லாமல் இருந்துவிட எவ்வளவு நேரம் தான் பேசாமல் இருக்க முடியும்? “நமக்கு ஸ்கூல்ல நிறைய வேலை இருக்கு. அங்க என்ன பண்ணனும்னா…” என்று அவள் ஆரம்பிக்க, அவன் ஒருமுறை சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு, அவன் ஆள்காட்டி விரலை அவள் இதழ்கள் மீது வைத்து அமைதியாக இருக்கும்படி செய்கை காட்டினான்.
அந்த செய்கை, உரிமையா, இல்லை அதட்டலா? என்ற கேள்வி எழ, அவனைப் புரியாமல் பார்த்தாள் பாரதி. அதுமட்டுமில்லை, அது அதட்டலாக இருந்தால் நிச்சயமாக சண்டைக்குச் செல்லத் தயாராக இருக்க, அவன் கண்களில் குறும்பு மின்னியது.
“இந்த ஒரு வாரம் ஸ்கூலை பத்தி பேசவே கூடாது, சரியா?” என்று கேட்க, அவள் கண்களை விரித்து அவனைப் பார்த்தாள். “ஆமா, இப்போ நீ என்னை எப்படி நினைத்தாலும் சரி, நான் கரஸ்பாண்டன்ட், நீ டீச்சர்னு நினைச்சா நான் சொல்றதை நீ கேட்டே ஆகணும். இல்லையா, நான் கணவன், நீ மனைவி அப்படின்னு நினைச்சா அப்படியும் நான் சொல்றதை நீ கேட்டே ஆகணும். நம்ம ரெண்டு பேரும் வெக்கேஷன் வந்திருக்கோம். அதனால இந்த வேலையைப் பத்தி பேசுறது மட்டும் கூடவே கூடாது, சரியா?” என்று அவன் அவள் கன்னம் தட்ட, அவளுக்கும் என்ன சொல்வதென்று தெரியவில்லை.
அவனிடம் வாக்குவாதம் செய்ய, அவளிடம் பல காரணங்கள் இருந்தாலும், அவன் செய்கையில் அவள் சற்று குழம்பி போனாள். அவன் இயல்பாகத் தான் கன்னத்தை தட்டினான். ஆனால் அவன் விரல் தீண்டிய அவள் கன்னம் சற்று செம்மையுற்றது. அவளுள் மெல்லிய குறுகுறுப்பு எழுந்தது. அவள் தன் முகத்தை மறைத்துக் கொண்டு ஜன்னல் வழியாக வெளியே பார்த்தாள்.
இந்த ஒரு நொடி அவள் முகத்தில் ஏற்பட்ட மாற்றத்தை அவன் கண்டுகொண்டான். தன்னுடைய தீண்டல் அவளிடம் செய்த மாயத்தை அவன் உணர, அவளை ஆராயும் விதமாகப் பார்த்தான். அவனுள் ஏதோ சொல்ல முடியாத ஓர் உணர்வு தோன்றியது. ஆனால் அதை என்னவென்று அவன் ஆராய முற்படவில்லை. காலம் அதன் போக்கில் நிதானமாக போகட்டும் என்று தான் அவன் எண்ணினான்.
ஆனால், அவன் நிதானத்தை கலைக்கும் விதமாக, அவர்கள் செல்லும் இடத்தில சில விருந்தினர்கள் காத்திருந்தார்கள்.





சூப்பர் சூப்பர் ❤️