arrow_back
மலரும் அரும்பே! அத்தியாயம் – 22
மலரும் அரும்பே! chevron_right பகுதி 22 / 30

அத்தியாயம் – 22

visibility 610
star படைப்பை ரேட் செய்யுங்கள்
சராசரி 3.8/5 (4 மதிப்பீடுகள்)
பகிர்

22

ரயிலில் சென்று அவர்கள் இறங்கிய இடம் எதுவென்று ரயில் நிலையத்தை சுற்றிப் பார்த்தாள் பாரதி. ராம்நகர் என்று எழுதப்பட்டிருந்தது. அவள் அதை தன் மனதில் குறித்துக் கொண்டாள். ‘என்றாவது மாணவர்களுக்குப் பாடம் எடுக்கும்பொழுது உபயோகப்படும்’ என்று எண்ணிக் கொண்டு, அதை அரவிந்திடம் சொல்ல எத்தனித்தாள். மீண்டும் பள்ளியைப் பற்றி பேசினால் அவன் கோபப்படுவான் என்ற எண்ணம் தோன்ற, சட்டென்று வாயை மூடிக்கொண்டு நடந்தாள்.

அவர்களுக்காக அங்கு ஒரு ஜீப் காத்திருந்தது. அவள் ஜீப்பில் இதுவரை சென்றதில்லை. டிரைவர் முன்னே அமர, இவர்கள் இருவரும் பின்னே அமர்ந்து கொண்டனர். அவளுக்கு ஜீப்பில் பயணிப்பது ஒரு புதிய அனுபவமாக இருந்தது. அந்தப் பாதை மிகவும் அழகாகவும் ரம்யமாகவும் இருந்தது. அதிக வெயில் என்றும் சொல்ல முடியாது, வெயில் இல்லை என்றும் சொல்ல முடியாது, இதமான சீதோஷண நிலை என்று சொல்லலாம். குளிரும் அதிகமாக இல்லை, ஜில்லென்று மெல்லிய காற்று.

அந்த காற்று வீசிய வேகத்திலும், யாருமில்லாத ஊர் என்ற எண்ணத்திலும், அரவிந்த் மட்டுமே தெரிந்தவன் என்ற எண்ணம் அவள் ஆழ் மனதில் உருவாக, சற்று நகர்ந்து அரவிந்த் அருகே அமர்ந்து கொண்டாள். அவன் எந்தவித எண்ணமும் இல்லாமல் சுற்றுப்புறத்தை ரசித்துக் கொண்டே இருந்தான்.

“ரொம்ப நல்லா இருக்குல்ல?” என்று பேச்சை பாரதி தான் ஆரம்பித்தாள். அரவிந்த் ஆமோதிப்பாக தலையசைத்தான். “இந்த சிட்டி லைஃப் இல்லாம இப்படி அமைதியா ஒரு இடத்துக்கு வரணும்.” அவன் கூற, “சிட்டி லைஃப் வேண்டாம் அப்படின்னா எதுக்கு அமெரிக்கா… அமெரிக்கான்னு சொல்றீங்க? இந்தியாவில் நம்ம ஊரிலேயே இருக்கலாமே? நம்ம ஊரு பச்சை பசேல்னு இருக்குமே!” என்று அவள் கேட்டாள்.

“எப்பவுமே இந்த மாதிரி பசுமையான இடத்துல இருக்க முடியாது பாரதி. அது வேற, இது வேற. இங்க எப்பயாவது தான் இருக்கலாம். அங்க எப்பவுமே இருக்கலாம்.” அவன் அவளுக்கு பதிலளிக்க, அவள் எதுவும் பேசவில்லை, அமைதியாக இருந்து கொண்டாள்.

வழக்கமாக வளவளவென்று பேசுபவள் இல்லை என்றாலும் நறுக்கென்று பதில் கூறும் குணம் கொண்டவள் தான் பாரதி. அவள் பள்ளியிலும் அவனிடம் அவ்வாறு தான் பேசுவாள். ஆனால் திருமணம் என்றான பின் ஏனோ அரவிந்தின் முழு குணாதிசயங்களை தெரிந்து கொள்ளும் வரை தன் வாயை இறுக மூடிக்கொள்ள வேண்டும் என்று எண்ணி இந்த ஒரு வாரமாக சற்று சாதுவாகவே இருந்தாள்.

அவர்கள் பயணம் மிக அழகான பாதையில் சென்றது. அமைதியாக இருவரும் ரசித்து கொண்டே பயணித்தனர். அவர்கள் தங்கும் ரிசார்ட் வந்தது. அவர்களுக்கென்று தனியாக நீச்சல் குளம் கொண்ட சிறிய கட்டிடம் போல் இருந்தது. கனமான மரக்கதவுகள் கொண்டிருந்தது. சின்னதாக மாடியேறி சென்றால் அங்கு படுக்கையறை, திரைச்சீலைகளை விலக்கினால், கண்ணாடி ஜன்னல் வெளியே காட்சிகளை பார்ப்பதற்கு எதுவாக இருந்தது. அதே நேரம், கனமாகவும் பாதுகாப்பாகவும் இருந்தது.

நீச்சல் குளத்தை தாண்டி இரும்பு கம்பி கட்டப்பட்டிருந்தது. அது வேலி போல காட்சியளிக்க, அதை பார்த்த பாரதி, “அது என்ன?” என்று கேட்டாள். “எலக்ட்ரிக் ஃபென்ஸ்” என்றான் அவன்.

“எதுக்கு ஃபென்ஸ் போட்டு இருக்காங்க?” அவளுள் கேள்வி எழ, வெளிப்படையாக கேட்டாள். “அதுவா… நைட் நேரம் மிருகம் எல்லாம் உள்ள வரக்கூடாது இல்ல, அதுக்காக” அவன் அசட்டையாக கூற, இப்பொழுது பாரதிக்கு கொஞ்சம் பயமாக இருந்தது.

அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், “என்ன சொல்றீங்க, மிருகம் இங்க வருமா?” அவள் கேள்வி கணைகளை கொடுக்க, “அந்தப் பக்கம் தான் வரும்” என்று அவன் கூற, “என்னது அங்க வருமா? அந்தப் பக்கத்துக்கும் இந்த பக்கத்துக்கும் கொஞ்சம் தானே வித்தியாசம் இருக்கு?” அவள் கண்களை விரிக்க, அவன் அவள் விழிகளைப் பார்த்தான்.

சட்டென்று தன்னை மீட்டுக் கொண்டவன், “அங்க கரண்ட் வரும். மிருகங்களுக்கு அது தெரியும். அதனால இங்க வராது.” அவன் உறுதியாக கூற, “ஒருவேளை கரண்ட் போயிடுச்சுன்னா?” அவள் சந்தேகமாக கேட்க, “ஏறி குதிச்சு உள்ள வரும்” அவன் தோளை குலுக்கினான். அவள் மிரண்டே போனாள்.

“ஒன்னும் பயப்படாத பாரதி, அதெல்லாம் ஒன்னும் ஆகாது. கரண்ட் எல்லாம் போகாது. அப்படியே போனாலும் இன்வெர்ட்டர், ஜெனெரேட்டர் எல்லாம் இருக்கும். அது எல்லாமே போனாலும், எப்பவுமே கரண்ட் இருக்கிறதனால இங்கு கரண்ட் இருக்கும்ங்கிற எண்ணத்திலே மிருகம் வராது.” அவன் விலங்குகளை பற்றி படித்தவன் போல் விளக்கமளித்தான்.

“என்னது மிருகங்களுக்கு தெரியுமா? மனுஷங்களுக்கு தெரியும்னாலே நம்ப முடியாது. மிருகங்களுக்கு தெரியும்னு எப்படி நம்பறது?” அவள் கேட்க, அவன் சிரித்துக் கொண்டான்.

மதிய உணவு என்ன வேண்டும் என்று பாரதியிடம் கேட்க, “எதுனாலும் எனக்கு ஓகே தான்” அவள் தலையசைக்க, “இங்கே வந்துட்டு சவுத் இந்தியன் கேட்டாலும் ரொம்ப நல்லா இருக்கும்னு சொல்ல முடியாது. அதனால பேசாம நார்த் இந்தியன் டிஷ்ஷே போயிடலாமா?” அவன் அவள் முகம் பார்க்க, அவள் மீண்டும் தலையசைத்தாள்.

“பன்னீர் சொல்லவா, தால் சொல்லவா?” அவன் கேட்க, “தால் சொல்லுங்க. இப்ப தானே டிராவல் பண்ணிட்டு வந்திருக்கோம். எனக்கு லைட்டா இருந்தா நல்லா இருக்கும்.” அவன் அவள் கூறியபடியே செய்தான்.

அங்கு இருந்த நீச்சல் குளத்தில் கால் நனையும்படி அமர்ந்து கொண்டாள். அந்த நீச்சல் குளம் அவளை, ‘வா வா…’ என்று அழைப்பது போல் இருக்க, உள்ளே இருந்த அவனை எட்டிப் பார்த்தாள்.

‘என்ன?’ என்று அவன் புருவம் உயர்த்த, ‘உள்ள குதிக்கலாமா?’ என்று அவள் செய்கை காட்ட, அவனும், ‘சம்மதம்’ என்பது போல் செய்கை காட்டினான். அவள் உற்சாகமாக குதித்து நீச்சலடிக்க ஆரம்பித்தாள். நீச்சல் அவளுக்கு நன்றாக தெரியும். அது மட்டும் இல்லை இதில் எந்த ஆபத்தும் இல்லை என்பதால் அவளுக்கு இந்த இடம் மிகவும் பிடித்திருந்தது. ஜில்லென்ற காற்றில் கொஞ்சம் நேரம் மேலே அமர்ந்து மிதமான வெயிலையும் அனுபவித்து, மீண்டும் மீன் குட்டி போல் துள்ளி குதித்து நீச்சலடித்தாள்.

அவன் உணவை சொல்லிவிட்டு உடைமாற்றிவிட்டு எதேச்சையாக அங்கு வந்தான். அவளின் உற்சாகம் அவனையும் தொற்றிக் கொண்டது. நீர் துளிகள் மெல்ல மெல்ல அவள் முகத்தில் உருண்டோட, வெயிலை அனுபவித்தபடி அமர்ந்திருந்தாள். அவள் அணிந்திருந்த உடை அவள் தேகத்தோடு ஒட்டிக்கொண்டு அவளுடைய அழகை மறைக்க வழி தெரியாமல் விழி விரித்து நின்றது. அவன் பார்வை அவளை அளவிட அவன் தன்னை மீட்டுக் கொண்டு, பார்வையை அவள் விழிகள் நோக்கி செலுத்தி அருகே சென்றான்.

காலையில் இருந்த நெருக்கத்தை குறைத்துக் கொண்டு, சற்று இடைவெளி விட்டே அமர்ந்தான். அந்த இடைவெளி அவளுக்காகவா இல்லை, அவனுக்காகவா என்ற கேள்வி எழும்ப, சற்று குழம்பிப் போனான். அவள் மீண்டும் உள்ளே துள்ளி குதிக்க, அவன் அவளை ஆச்சரியமாக பார்த்தான்.

“என்ன அப்படி பாக்குறீங்க?” அவள் கேட்க, “இல்ல உனக்கு ஸ்கூல தாண்டி ஏதாவது தெரியுமான்னு யோசிப்பேன்.” அவன் கூற, “என்னை பார்த்தால் டீச்சர் மட்டும் மாதிரியா இருக்கு? எனக்கு ஸ்கூல தாண்டி நிறைய விஷயம் தெரியும்” அவள் இப்பொழுது கண் சிமிட்டினாள்.

அவன் சிரித்துக் கொண்டே, “அப்படி என்ன விஷயம் டீச்சரம்மாக்கு தெரியும்?” என்று கேலி போல் அவன் கேட்க, “அதெல்லாம் நிறைய தெரியும்” அவள் சிரித்துக் கொண்டே நீச்சலை தொடர்ந்தாள்.

“உங்களுக்கு நீச்சல் தெரியாதா?” இப்பொழுது அவள் அவனிடம் கேலியாக கேட்க, “அதெல்லாம் தெரியும். ஆனா, இப்ப பசிக்குது. சாப்பாடு வந்திருச்சு. சாப்பிடலாம்.” அவன் கூற, “நான் கொஞ்சம் நீச்சல் அடிச்சிட்டு வரேன்.” அவள் செல்லம் கொஞ்ச, “அதெல்லாம் வேண்டாம். சாப்பிட வா பாரதி. உன்னை என்ன நீச்சல் அடிக்கவா, அங்க இருந்து இங்க வரைக்கும் கூட்டிட்டு வந்திருக்கேன். வா! சாப்பிட வா…” என்று இப்பொழுது அவன் கண்டிப்போடு கூறினான்.

இருவரும் உணவை முடித்து சற்று நேரம் ஓய்வு எடுத்தனர். அதன் பின் வெளியே செல்ல இருவரும் தயாராக, “எங்கே போறோம்?” என்று பாரதி கேட்டாள். “நாம இப்போ கார்பெட் ஃபால்ஸ் போறோம்.” என்று கூறி, “நடக்கிற மாதிரி இருக்கும், அதனால நீ இந்த ஷூ போட்டுக்கோ.” என்று அவன் காட்டிய அக்கறை அவளுக்குப் பிடித்திருந்தது.

இன்னும் சிலர் அவர்களோடு இருந்தார்கள். இருவரும் இணைந்தே நடந்தார்கள். அவர்கள் அறியாமல், அவர்களுக்கு இடையே ஒரு நட்பு மலர்ந்திருந்தது. “அரவிந்த் ஃபால்ஸ்ல நான் குளிக்கலாமா?” ஆர்வமோடு அவள் கேட்க, “ஏன் நீ ஊரில் குளிக்கிறதே இல்லையா?” அவன் குனிந்து அவள் செவியருகே கிசுகிசுத்தான். அவன் அவளை நெருங்க, அவன் சுவாசக் காற்றில் அவள் நெருங்கி நிற்கவும் முடியாமல், விலகவும் முடியாமல் தவித்தாள். அவள் தன் தவிப்பை மறைத்துக் கொண்டும் கோபத்தை வரவழைத்துக் கொண்டும், “ஏன் அப்படி கேட்கிறீங்க?” காட்டமாக கேட்பது போல் பாவனை செய்தாள்.

“வந்த உடனே ஸ்விம்மிங் ஃபூல்ல குளிச்ச, இப்ப திரும்ப பால்ஸ்ல குளிக்கலாமான்னு கேட்குற” அவன் புருவம் உயர்த்தி கேலி செய்ய, “ஏன்னா எனக்கு தண்ணினா ரொம்ப பிடிக்கும்.” அவள் கண்களில் குறும்பு மின்னியது.

“டீச்சரம்மாவுக்கு வேற என்னென்ன எல்லாம் பிடிக்கும்?” அவன் குரலில் இப்பொழுது ஆர்வம் வந்தமர்ந்தது. ‘அவள் மீதான ஆர்வமா?’ என்பது அவனுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.

“ஏன் என்னை டீச்சரம்மான்னு கூப்பிடுறீங்க?” இப்பொழுது அவள் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டாள். “உன்னைய டீச்சரம்மான்னு தான் கூப்பிடலாம்னு இருக்கேன், அதனால நீ டீச்சரம்மா தான்.” அவளுக்கு பிடிக்கவில்லை என்றதும் அந்தப் பெயரை அவன் அழுத்தி கூறினான். அவள் தன் கழுத்தை திருப்பிக் கொண்டு சற்று வேகமாக முன்னே நடந்தாள்.

“பார்த்து தனியா போயிறாதீங்க, புலி நடமாட்டம் இருக்கும்” அவன் கண்களில் குறும்பு மின்ன சொன்னதுதான் தாமதம் அவள் சடார் என்று நின்றாள். “புலியா?” அவள் இடையில் கைவைத்து அவன் பக்கம் திரும்பி அப்பாவியாக கேட்டாள்.

 “புலிதான்.” என்றான் அவன். “என்ன சொல்றீங்க? புலி எல்லாம் வராது” அவள் மென்று விழுங்கி, கண்களை சுழலவிட்டாள். அவர்களை சுற்றி அடர்ந்த காடு போல் இருக்க, அங்கு புலி வரும் வாய்ப்பு இருக்கிறது என்றுதான் அவளுக்கு தோன்றியது. அவள் மெல்ல அவனோடு வந்து இணைந்து கொண்டாள். குழந்தை போன்ற அவள் செய்கையை அவன் ரசித்தான். அவள் தோள் மீது கைபோட, அவள் ஒரு நொடி அவனை திரும்பி பார்த்தாள்.

அவன் வழமையாக புருவம் உயர்த்துவது போல் புருவம் உயர்த்த, ‘அரவிந்த் என்ன தான் நினைக்கறாங்க?’ என்ற கேள்வி அவள் மனதில் எழுந்தது. ட்ரக்கிங் என்ற பெயரில் சற்று நேரம் நடந்தார்கள். அவளுக்கு கொஞ்சம் கால் வலிக்க ஆரம்பித்தது. காலையிலிருந்து அலைச்சல், அதன் பின் நீச்சல், இப்பொழுது நடை, அதுவும் சற்று கரடு முரடான பாதையாகவும் இருந்தது.

“டயர்டா இருக்கா பாரதி?” அவன் கேட்க, ‘ஆமான்னு சொன்னா எரிச்சல் படுவாங்களோ? இப்ப தானே ட்ரிப் ஆரம்பிச்சிருக்கு?’ அவள் அவனை தயக்கத்தோடு பார்க்க, “என்ன யோசிக்கிற நீ? என்கிட்டே உனக்கு எந்த தயக்கமும் வேண்டாம்” அவன் அனுசரணையாக அவள் கைகளை பிடித்துக்கொள்ள, அவளுக்கு ஏதோ புது தெம்பு வந்தது போல் இருந்தது. ஆனால், அந்த பிடிமானத்திற்கும் கொஞ்சம் அழுத்தம் வந்தது போல அவனுக்கு தோன்றியது.

‘இவளை விட்டுட்டு நம்ம எப்படி போறது? நம்ம ஊரை விட்டுட்டு ஸ்கூலை விட்டுட்டு வருவாளா? கண்டிப்பா கூட்டிட்டு போகணும். எனக்காக வருவாளா?’ அவனுக்கு அப்படியொரு ஆசை வந்தது.

நீர்வீழ்ச்சியில் குளிக்க அனுமதி இல்லை. இருவரும் அந்த இடத்தை ரசித்தார்கள். அவன் தன் விலை உயர்ந்த புகைப்படக்கருவியில் இயற்கையை படம் பிடித்தான். அவளை படம் பிடித்தான். அவர்களை படம் பிடித்துக் கொண்டான். அதன் பின் கார்பெட் மியூசியம் சென்றனர்.

அங்கு யாரோ வேகமாக செல்ல, சற்று பயந்து போய் பின்னே நகர, அவன் மேல் இடித்து நின்றாள். அவன் அவளை தாங்கி பிடித்தான். மிக நெருக்கமான அணைப்பு என்று தான் சொல்ல வேண்டும். அவர்களின் நான்கு விழிகளும் சம்பாஷித்து கொண்டன. அவர்கள் உலகம் சில நொடிகள் ஸ்தம்பித்து நின்றது போலவே அவர்களுக்கு தோன்றியது.

இருவரும் அவர்கள் சுற்றி இருந்த உலகத்தை மறந்து நிற்க, அங்கு எழும்பிய பேச்சு குரல் அவர்களை மீட்டெடுத்தது. தன்னை மீட்டுக்கொண்ட அரவிந்த், சகஜ நிலையில் இருப்பவன் போல பேச ஆரம்பித்தான். “ஜிம் கார்பெட் மியூசியம். அவர் பெயர் தான் இந்த இடத்துக்கு. அவர் முதல்ல மனிதர்களை தாக்கும் புலிகளை கொன்று குவிக்கும் ஹண்டரா தான் இருந்தாரு. ஆனா அதுக்கு அப்புறம் அந்த புலிகள் அதாவது விலங்கு… விலங்குகளை காக்கிற மனிதரா மாறிட்டார். அவர் நிறைய புத்தங்கள் எழுதியிருக்காரு. அவர்மேல ஏற்பட்ட மரியாதையால, இந்த இடத்துக்கு ஜிம் கார்பெட்னு பேரு வச்சி, அவருக்கு மியூசியமும் வச்சிட்டாங்க. இந்த இடம் அவர் வாழ்ந்த இடம்.” அவன் மூச்சு விடாமல் பேச, அவள் கலகலவென்று சிரித்தாள்.

“என்ன சிரிக்குற?” முழுதாக மீண்டு கொண்ட அவன் கேட்க, “இல்ல, நான் டீச்சரா, நீங்க டீச்சரான்னு யோசிச்சேன். சிரிப்பு வந்துச்சு.” அவள் மீண்டும் அவனை கேலி செய்து சிரிக்க, “நீ சிரிக்கும் பொழுது ரொம்ப அழகா இருக்க பாரதி” அவன் கூற, அவள் சிரிப்பு சட்டென்று நின்றது.

அவள் என்ன நினைப்பாளோ என்று யோசித்தவன், “பார்த்தியா உன் கேலி சிரிப்பு நின்னுடுச்சு. அதுக்கு தான் சொன்னேன்.” அவன் இப்பொழுது ஜகா வாங்கினான். பாரதி, அவனை ஆழமாக பார்த்தாள். நொடிப்பொழுதில் அவன் கண்களில் வந்து போன மாற்றத்தை அவள் கண்டு கொண்டாள். அவன் கண்ணாம்பூச்சி ஆட்டத்தை அவளும் ரசித்தாள்.

அவர்கள் தங்கியிருந்த இடம் முழு இருட்டாக மாறி இருந்தது. ஆங்காங்கே மின் விளக்குகள் எரிந்தன. அவன் அனைத்து ஜன்னலையும் இழுத்து சாத்தினான். “அரவிந்த், ஏன் இந்த கண்ணாடி ஜன்னலை சாத்துறீங்க காத்தோட்டமா இருக்குமில்ல?” அவள் ஆலோசனை கூற, அவன் சிரித்துக் கொண்டான்.

“ஏன் சிரிக்கிறீங்க?” அவள் அவன் முகம் பார்க்க, “உனக்கு தைரியம் ஜாஸ்தி தான். அதை நினைச்சு தான் சிரிச்சேன்” கூறிக்கொண்டே அவன் அனைத்து கதவுகளையம் பலமாக சாத்தினான்.

“நான் நைட் ஒருதடவை ஜில் தண்ணீர்ல குளிக்கலாம்னு நினைச்சேன்.” அவள் கூற, “அதெல்லாம் கூடாது” என்றான் அவன் கண்டிப்போடு.

இருவரும் பேசிக்கொண்டே இருக்க, டமார் என்று சத்தம் கேட்க, மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அனைத்து இடமும் இருட்டானது. “என்ன ஆச்சு?” பாரதி கேட்க, “கரண்ட் போய்டுச்சுன்னு நினைக்குறேன்” அவன் கூற, “ஜெனரேட்டர், இன்வெர்ட்டர் எல்லாம் இருக்காதா?” அவள் கேட்க, “எப்ப பார்த்தாலும் டீச்சர்ன்னு கேள்வி கேட்டுகிட்டே இருக்க வேண்டியது.” அவன் சிடுசிடுக்க, தொலைபேசி ஒலி எழுப்பியது.

“கரண்ட் போயிடுச்சு, வழக்கமா ஜெனெரேட்டர், இன்வெர்ட்டர் எல்லாம் ஒர்க் ஆகும். இன்னிக்கு ஏதோ பிரச்சனை சார். அதனால இன்னைக்கு ராத்திரி கரண்ட் வராது சார். சாரி சார்” என்று எதிர்முனையில் அவன் அரைகுறை ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் விவரம் தெரிவித்து, மன்னிப்பு கோரினான்.

“இவ்ளோ பெரிய ரிசார்ட்ல இப்படி நடக்குது?” அவள் கோபம் கொள்ள, “எல்லாரும் மனுசங்க தானே? அங்கங்க தப்பு நடக்கும்” அவன் பொறுமையாக கூற, “இந்த மாதிரி உங்களுக்கு நிறைய அனுபவமோ?” அவள் கேட்க, அவன் தலையசைத்தான்.

முன்னேற்பாடாக அவன் கொண்டு வந்த டார்ச் லைட் உபயத்தில் அவர்கள் பேசிக்கொண்டே இருக்க, தூக்கம் வராமல் பாரதி கதவை திறக்க, “கதவை திறக்காத.” அவன் வேகமாக பாய்ந்து, தன் முழு பலம் கொண்டு கதவை படாரென்று சாத்தினான்.

அவன் காட்டிய கோபமும் வேகமும் அவளை மிரள செய்தது. அவள் புரியாமல் அவனை அச்சத்தோடு பார்க்க, அவன் அவளை அமைதியாக இருக்கும்படி செய்கை காட்டி வெளியே கைகாட்டினான். அவன் சுட்டி காட்டிய இடத்தில இரண்டு கண்கள் பளபளத்தன.

அடுத்த அத்தியாயம்

அத்தியாயம் – 23

23அதே நேரம் அவர்கள் வீட்டில், மோகன் விஜயா அறையில், மோகன் அனைத்தையும் எடுத்து வைத்துக் கொண்டிருந்தான். “நான் உங்க கூட வரலை” விஜயா எதிர்ப்பு தெரிவித்து கொண்டிருந்தாள். “நீ வரணும்.” என்றான் அவன் அழுத்தம் திருத்தமாக.“இல்லை, நான் வரலை... நான் வரலை...…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

இந்தக் கதையைப் பற்றி விவாதிக்கவும் 1

உங்கள் கருத்தைப் பகிருங்கள்