அத்தியாயம் – 23
23
அதே நேரம் அவர்கள் வீட்டில், மோகன் விஜயா அறையில், மோகன் அனைத்தையும் எடுத்து வைத்துக் கொண்டிருந்தான். “நான் உங்க கூட வரலை” விஜயா எதிர்ப்பு தெரிவித்து கொண்டிருந்தாள். “நீ வரணும்.” என்றான் அவன் அழுத்தம் திருத்தமாக.
“இல்லை, நான் வரலை… நான் வரலை… நான் வரலை… எந்த விஷயத்திலுமே நான் முடிவு பண்ணக்கூடாதா? நீங்க முடிவு பண்றதை தான் நான் கேட்கணுமா? நீங்க சொல்றதை நான் ஏன் கேட்கணும்?” அவள் கேட்க, அவன் சில நிமிடங்கள் எதுவும் பேசவில்லை.
பொறுமையை இழுத்து பிடித்துக் கொண்டு, “நான் உனக்காகவோ எனக்காகவோ இப்ப மகாபலிபுரம் போகணும்னு சொல்லல, குழந்தைகளுக்காக தானே சொல்றேன். இந்த ரெண்டு நாள் மூணு நாள் போய்ட்டு வரலாமே? இது குழந்தைகளுக்காக தானே” என்று அவன் அமைதியான குரலில் அழுத்தமாக கேட்க, அவளிடம் எந்த பதிலும் இல்லை. மௌனமாக அமர்ந்திருந்தாள். ஒரு அறையில் இருந்தாலும் அவர்களுக்கு இடையே அத்தனை பேச்சு இல்லை. பல நாட்களுக்குப் பிறகு இத்தனை வாக்கியங்கள் பேசிக் கொள்கிறார்கள்.
“என் குழந்தைங்களுக்காக நீ பண்ண மாட்டியா?” அவன் அவள் முன் நிற்க, “ஆமா பண்ண மாட்டேன்” அவள் பிடிவாதம் பிடித்தாள். “நேத்து இந்த வீட்டுக்கு வந்த பாரதி கூட நம்ம குழந்தைகளுக்காக பார்த்து பார்த்து பண்றா” அவன் கூற, “அப்ப, உங்களுக்கு என்னை பிடிக்கலை. அவளை மாதிரி உங்களுக்கு ஒரு மனைவி வேணுமா?” அவள் இப்பொழுது விதண்டாவாதம் பேச, “விஜயா ஸ்டாப் இட்” அவன் கோபமாக கத்தினான். அவளும் அதற்கு மேல் பேசவில்லை.
“என்னால் உங்க கூட வர முடியாது. எனக்காக நீங்க எதுவுமே பண்ணல. உங்க தம்பியும் தம்பி பொண்டாட்டியும் போனாங்க. அதுக்காக நீங்க இங்க போகணும்னு சொல்றீங்க. உங்க குழந்தைகளுக்காக சொல்றீங்க. ஆனால், எனக்காக இல்ல” என்று அவள் சொல்ல, “உங்கள் குழந்தைகளா? நம்ம குழந்தைகளா விஜயா?” அவன் இப்பொழுது வலியோடு கேட்டான்.
“கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி என் குழந்தைங்கன்னு சொன்னது யாரு?” அவள் காட்டமாக கேட்க, “ஏதோ வாய் தவறி…” என்று அவன் தடுமாற, “நம்ம குழந்தைங்க… உங்க குழந்தைங்க… என் குழந்தைங்கன்னு உரிமை கொண்டாட என்ன இருக்கு? எனக்கு பிரச்சனையே நீங்க தான், நீங்க நினைச்சா… அது தான் நடக்கணும், நான் நினைச்சது எதுவுமே நடக்க கூடாதுன்னு தானே நீங்க நினைக்கிறீங்க? நீங்க நினைக்கிறது நடக்காது.” அவள் கூறினாள்.
“அப்ப நீ வரமாட்ட?” அவன் கேட்க, “ஆமா நான் வரமாட்டேன்… நான் வரமாட்டேன்… நான் வரமாட்டேன்” அவள் அழுத்தம் திருத்தமாக கூறினாள்.
“நீ வரலைன்னா எனக்கு ஒரு பிரச்சனையும் இல்ல. ஆனா நான் குழந்தைங்களுக்காக கிளம்புறேன். சைந்தவிக்கு வாக்கு கொடுத்துட்டேன். அவ ஊருக்கு போகணும்னு ஆசையா இருக்கா. நீ வரலைன்னா நான் மட்டும் தனியா குழந்தைகளை கூட்டிட்டு போறேன்” அவன் உறுதியாக சொல்ல,
“ஓ! நான் இல்லாமலே என் குழந்தைகளை நீங்க பாத்துப்பீங்களா?” அவள் கேட்க, “ஆமா, காலம் முழுக்க பாத்துக்கலாம்னு முடிவு பண்ணி இருக்கேன். அதை பத்தி பேசி முடிவு எடுப்போம்” அவன் கூற, அவள் திடுக்கிட்டு அவனைப் பார்த்தாள்.
“ஆமா விஜயா, உனக்கு பசங்கள பாத்துக்க பிடிக்கல. அதைவிட உனக்கு வேலை தான் முக்கியம்” அவன் கூற, “அப்படி நான் சொன்னேனா?” அவள் இப்பொழுது பரிதாபமாக கேட்க, “உன் செய்கை சொல்லுது” அவன் மன வருத்ததோடு கூறினான்.
“ஓ!” அவள் ஒற்றை வார்த்தையாக சொல்ல, “என்ன ஓ?” அவன் கேட்க, “இல்ல நீங்க என்னை பத்தி எப்படி நினைச்சு வச்சிருக்கீங்கன்னு தெரியும்போது என் மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு” அவள் தன் கண்களில் திரண்ட கண்ணீரை உள்ளிழுத்துக் கொண்டாள்.
அதற்குள் சைந்தவியும், வருணும் அவர்கள் அறைக்கு வந்தனர். “அப்பா நாளைக்கு போறோம் தானே?” சைந்தவி கேட்க, மோகன் பதில் சொல்லவில்லை.
“நாங்க ரெண்டு பெரும் எல்லாம் எடுத்து வச்சிட்டோம்.” வருண் ஆர்வமாக கூற, “அம்மா, நீங்க?” சைந்தவி தன் தாயின் முகத்தை ஆர்வத்தோடு பார்த்தாள்.
வருண் தன் பெற்றோர் இருவரின் முகத்தையும் ஆராயும் விதமாக பார்த்தான். அவனுள் சந்தேகம் எழுந்தது.
***
அதே நேரம் ஜிம் கார்பெட் ரிசார்ட்டில், அவன் கை காட்டிய திசையில் இரண்டு கண்கள் பளபளத்தது. “பு…பு…புலி!” என்று அவள் படபடப்பாக பதட்டத்தோடு கேட்க, அவன் அவளை மெதுவாக பேச சொன்னான். “இங்க… இருந்து வெளிய கேட்காது தானே?” அவள் சந்தேகமாக கேட்க, “பொதுவா கேட்காது. ஆனால்…” அவன் கூறுகையில் புலியின் உறுமல் சத்தம் அவர்களுக்கு கேட்க, “நம்ம பேசுறது வெளிய கேட்கும் பாரதி.” அவன் முகத்தில் தீவிரத்தோடு கூற, அவள் சுவரோரமாக அமர்ந்து கொண்டாள்.
அவன் அவள் பயத்தை போக்கும் விதமாக அவள் அருகே அமர்ந்து கொண்டான். “இது ஏன் நம்ம இருக்கிற இடத்துக்கு வந்திருக்கு?” அவள் கேட்க, “நாம தான் அது இடத்துக்கு வந்திருக்கோம்.” அவன் சட்டம் பேச, “இப்ப உள்ள வந்திருமா?” அவள் அவன் மேல் முழுதாக சாய்ந்து கொண்டு, அவன் முகம் பார்த்துக் கேட்டாள்.
“பொதுவா ஃபென்ஸ் தாண்டி உள்ள வராது. ஆனா இன்னைக்கு கரண்ட் இல்ல, ஜெனரேட்டர் இல்லை” இதை சொல்லவும் பாரதி நடுங்கித்தான் போனாள். அவள் நடுக்கத்தை உணர்ந்தவன், “பயப்படாத பாரதி, அந்த இடத்துல கரண்ட் இருக்கும் அப்படின்னு அதுக்கு தெரியும். அதனால அது ஏற்கனவே பழக்கப்பட்டதால நிச்சயமா தாண்டி வராது.” அவன் தைரியம் கொடுக்க, அந்த பயத்திலும் அவன் முகத்தை ஆர்வமாக பார்த்தாள்.
‘என்ன?’ என்று அவன் புருவம் உயர்த்த, “டார்ச் அடிச்சி புலி எவ்வளவு பெருசா இருக்குனு பார்ப்போமா?” அவள் கேட்க, “உனக்கு உண்மையிலே தைரியம் ஜாஸ்தி தான்.” அவன் அவள் தலை மோதி சிரித்தான்.
“ஆனால், வேண்டாம் டீச்சரம்மா… எங்கேயுமே வெளிச்சம் இல்லை இருட்டு. அதனால நம்ம திடீர்னு வெளிச்சம் அடித்தால், நம்மள மனித உருவம் அப்படினு தாக்க வந்திடலாம். அதனால வெளிச்சம் வேண்டாம்” என்றான்.
அவன் கூறியதும் அவள் அந்த இடத்தை அளவிட ஆரம்பித்தாள். கும்மிருட்டாக இருந்தது. இப்பொழுது பாரதிக்கு அந்த இடம் சற்று பயமாக இருந்தது. பகல் நேரத்தில் அவள் அழகாக ரசித்த நீச்சல் குளம் கூட ஏதோ மாய வலை போல் தெரிந்தது. அந்த இருட்டு அவள் கண்களுக்கு பழகியது. மிகப் பெரிய உருவம் கொண்ட புலியின் கண்கள் பளபளக்க, அவள் அவனை நெருங்கி அமர்ந்தாள்.
“இப்ப அந்த புலி என்ன பண்ணும்?” அவள் ஆர்வமாக கேட்க, “நாலு நாள் புலி கூட தான் பழகிட்டு வந்து இருக்கேன், அதனால எனக்கு அது என்ன பண்ணனும்னு தெரியும் பாரு” அவன் அவள் தலையில் குட்ட, அவள் அவன் கையில் உரிமையாக அடித்தாள்.
சந்தேகம் வந்தவள், “கரண்ட் இல்ல ஒருவேளை உள்ள பாய்ஞ்சு வந்துருச்சுன்னா? உள்ள வந்து என்ன செய்யும்?” அவளே கேள்வி கேட்டு, “புலி தண்ணிக்குள்ள விழுந்திடுமோ?” அடுத்த கேள்வியையும் கேட்டாள்.
“விழுந்தாலும் புலிக்கு நீச்சல் தெரியும்” அவன் கூற, அவனை முறைத்துப் பார்த்தாள்.
“என்னை முறைக்காத, அங்க பாரு.” அவன் புலியின் பக்கம் கை காட்டினான். அது திரும்பியதும் அவளுக்கு கொஞ்சம் ஆசுவாசமாக இருந்தது. “போயிடுச்சு இல்ல?” அவள் கேட்க, அங்கு இருட்டு மட்டுமே இருந்தது, எந்த பளபளப்பும் இல்லை. இருவரும் ஆசுவாசமாக சாய்ந்து அமர, அப்பொழுது, ‘துமீர்’ என்று சத்தம் கேட்டது வெளியே.
இருவரின் நெஞ்சும் எம்பி குதித்தது. அவர்கள் கீழே அமராமல் மேலே அறைக்குள் நுழைந்து கண்ணாடி ஜன்னல் பக்கம் உள்ள திரைச்சீலைக்கு பின்னே அமர்ந்து கொண்டு வெளியே பார்த்தனர். மின்சாரம் இல்லாத இடத்தை தாண்டி புலி இவள் காலையில் குளித்த நீச்சல் குளத்தில் குதித்திருந்தது. அது குதித்த வேகத்தில் மொத்த நீரும் வெளியே தெறித்தது.
இவர்கள் எந்த கண்ணாடி வழியாக புலியை பார்த்துக் கொண்டிருந்தார்களோ, அந்த கண்ணாடி முழுதும் நீர் துளிகளாக இருந்தது. அவள் தேகம் சிலிர்த்தது. “பயமா இருக்கா?” அவன் கேட்க, “இல்லை” அவள் மறுப்பாக தலையசைத்தாள். “ஏன் புலியை பார்த்தா பயமா இல்லையா?” அவன் ஆச்சரியமாக கேட்க, புலிக்கும் அவர்களுக்கும் இடையே கண்ணாடி கதவு மட்டுமே. புலியின் உறுமல் சத்தம் அவர்களுக்கு தெளிவாக கேட்டது.
இவர்கள் திரைச்சீலைக்கு பின் மறைந்தபடி கண்ணாடி வழியாக அதை பார்த்துக் கொண்டிருந்தார்கள். “உனக்கு பயமா இல்லையா?” அவன் அவளை தன் நெஞ்சின் மீது வசதியாக சாய்த்துக் கொண்டு அவள் முகம் பார்த்து கேட்க, “இல்லை, அது தான் நீங்க இருக்கீங்களே?” அவள் கூறினாள்.
அவன் சிரித்துக் கொண்டே, “உனக்கு ஒரு விஷயம் தெரியுமா பாரதி, எனக்கு புலியோட எல்லாம் சண்டை போட தெரியாது” அவன் அப்பாவியாக கூற, “அது எனக்கு நல்லா தெரியும். ஏன்னா உங்களுக்கு என் கூடவே ஒழுங்கா சண்டை போட தெரியலையே” அவள் அவனை கேலி செய்ய, “ரொம்ப பேசினா உன்னை புலி கிட்ட கொடுத்திடுவேன்.”அவன் அவளை மிரட்டினான்.
“நான் உங்ககிட்ட ஒன்னு கேட்கட்டுமா?” அவன் தோளில் சாய்ந்து கொண்டு அண்ணாந்து அவன் முகம் பார்த்து, “நீங்க என்னை எப்படியாவது கொலை பண்ணிடலாம்னு தானே இங்க கூட்டிட்டு வந்தீங்க?” அவள் கேட்க, அவன் அவளை திடுக்கிட்டு பார்த்தான். “ஏன் அப்படி கேட்குற பாரதி?” அவன் குரலில் கொஞ்சம் கலவரத்தோடு கேட்க, “பின்ன ரொமாண்டிக்கா ஒரு இடத்துக்கு கூட்டிட்டு வராம, திகில் படம் மாதிரி ஒரு இடத்துக்கு கூட்டிட்டு வந்தா… நீங்க என்னை கொலை பண்ண தானே கூட்டிட்டு வந்திருக்கணும்?” அவள் கேட்க, அவன் இப்பொழுது பெருங்குரலில் சிரித்தான்.
அவள் தன் கரங்களால் அவன் வாயை மூடி, “உங்க சிரிப்புக்கு அந்த புலி பயந்து உள்ள வந்திரும்” அவன் நெஞ்சில் குத்தினாள். அவர்களுக்கு இடையில் அத்தனை நெருக்கம் எப்படி வந்ததோ அவர்களுக்கு தெரியவில்லை.
அவள் கைகளை அழுத்தமாக பிடித்தபடி, “ரொமாண்டிக்கா ஒரு இடத்துக்கு கூட்டிட்டு போனா, உனக்கு ஓகேவா பாரதி?” அவன் கேள்வியில் அவள் சற்று தடுமாற, அவள் சுவாசம் வேகம் எடுத்தது. அவள் சுவாசத்தின் வேகத்தை உணர்ந்தவன், “என்ன பாரதி, உன் இதயம் வேகமா துடிக்குது? புலியை பார்த்துக் கூட வராத பயம் என்னை பார்த்தா வருதா?” அவன் கேட்க, அப்பொழுது தான் அவர்கள் இருந்த நெருக்கத்தை அவள் உணர்ந்தாள்.
அவள் சட்டென்று விலக, “ஐயோ புலி!” அவன் அலற, அவள் அவன் அருகே வந்து அமர்ந்து கொண்டாள். அவன் அவளை தன்னோடு சேர்த்துக் கொண்டான்.
அவள் இயல்புநிலைக்கு திரும்பியவள் போல, “நாளை காலையில வரை இது இங்கயே இருந்தா நம்ம என்ன பண்றது? எப்படி வெளியே போறது?” என்று கேட்க, அவனும், “வெளியே போக முடியாது. இந்த ரூம்ல இருக்க வேண்டியது தான்” என்றான் சாதாரணமாக. “நீங்க அமெரிக்கா போக வேண்டாமா?” அவள் கேலியாக கேட்க, “நான் அமெரிக்கா போனாலும் நீ என்கூட தான் இருப்ப பாரதி. “ என்றான் அவன் அழுத்தமாக. அவள் எதுவும் பேசவில்லை.
புலி ஒரு ஓரமாக அமர்ந்திருந்தது. “கொஞ்ச நேரத்தில் அதுவே போய்டும்” அவன் கூற, அவன் அருகே அவள் படுத்துக் கொண்டாள். அவள் அவன் அருகாமையை இயல்பாக ஏற்றுக் கொண்டாள். அவள் மனதில் வேறு எதுவும் இல்லை. புலி மட்டுமே தோன்றியது. ஆனால் அவனிடம், புலியின் எண்ணம் கிஞ்சித்தும் இல்லை. அவளை பற்றிய எண்ணமே இருந்தது. அவள் அருகாமை அவனுக்கு பிடித்திருந்தது.
புலியின் உறுமல் சத்தத்தில் அவள் அங்கு எட்டிப் பார்க்க எத்தனிக்க, “போதும் பாரதி…” அவன் அவளை இழுக்க, அவனின் இந்த செய்கையை அவள் எதிர்பார்க்கவில்லை. அவன் மார்பின் மீது விழுந்தாள். அவள் எதுவும் பேசாமல் அவன் முகம் பார்க்க, “உனக்கு தெரியுமா பாரதி, கல்யாணம் பேசினப்போ என் ரூம்ல ஒரு பொண்ணு வந்து இருந்தா, எனக்கு எவ்வளவு தொந்தரவா இருக்கும்னு நான் யோசிச்சேன் தெரியுமா?” அவன் சொல்ல, “நிச்சயமா யோசிச்சிருப்பீங்கன்னு எனக்கு தெரியும்” என்று அவள் கூற, “எப்படி?” அவன் ஆச்சரியமாக கேட்டான்.
“அதான் உங்க குணத்தை பார்த்தாலே தெரியுது” அவள் குறும்பு மின்ன கூற, அவன் அவளை மேலும் கீழும் பார்த்தான். பேசிக் கொண்டிருந்தாலும் இருவரின் கண்களும் புலியை பார்த்தபடி இருந்தன. அதன்பின் அந்த புலி ஏறி வெளியே குதித்ததை இருவரும் பார்த்து விட்டனர். அது வெளியே சென்றதும், மின்சாரம் வந்தது.
“புலி வெளிய போக தான் கரண்ட் ஆஃப் பண்ணி வச்சிருந்தாங்களோ?” என்று பாரதி கேட்க, “அப்படித்தான் நானும் நினைக்கிறேன். உள்ள வந்ததை பார்த்திருப்பாங்க.” அவன் கூற, அதன்பின் எந்த பயமும் இல்லை என்ற நம்பிக்கை வர, அவள் முகத்தில் நிம்மதி பரவியது.
“நாளைக்கு காலையில சீக்கிரம் சஃபாரி கிளம்பனும்” அவன் கூற, அவளுள் ஆர்வம் அதிகமாக எழுந்தது. அவள் அவன் கை வளைவுக்குள் படுத்து உறங்கிவிட்டாள். ஆனால் அரவிந்த் தூக்கம் வராமல் தவித்தான். அவனுள் ஏதோ ஒரு குழப்பம் ஏற்பட்டது. ‘இவ்வளவு சாதாரணமாக பாரதி பேசினாலும், நிச்சயமா இவ அமெரிக்கா வாழ்க்கைக்கு ஒத்துவர மாட்டா, இங்க வரணும்னு சொல்லுவா’ என்று அவன் ஆழ்மனம் கூறியது.
‘பேசி சமாளிச்சு பாரதிய கூட்டிட்டு போயிடலாம்னு தான் நான் நினைச்சேன். ஆனா இவகிட்ட இருக்கிற சில குணங்களை பார்த்தா எதுவும் நடக்காது’ அவன் மனம் வேகவேகமாக சிந்திக்க ஆரம்பித்தது. ‘அதுமட்டுமில்லாமல், ஆளுக்கு ஒரு பக்கமா இருக்க அவளும் ஒத்துக்க மாட்டாளோ?’ என்ற எண்ணம், அவள் அவன் நெருக்கத்தை இயல்பாக எடுத்துக் கொண்டதில் அவனுக்கு தோன்றியது. ‘அவள் மட்டும் தான் ஒத்துக்கொள்ள மாட்டாளா? அவன் ஒத்துக் கொள்வானா?’ என்ற கேள்வியும் அவனுள் எழுந்தது. அவன் தூக்கம் இல்லாமல் தவித்தான்.
வேண்டாம் என்று ஒதுக்கும் பொழுது வராத தவிப்பு
வேண்டும் என்று எண்ணுகையில் வந்திடுமோ!





சூப்பர் சூப்பர் ❤️