arrow_back
மலரும் அரும்பே! அத்தியாயம் – 24
மலரும் அரும்பே! chevron_right பகுதி 24 / 30

அத்தியாயம் – 24

visibility 600
star படைப்பை ரேட் செய்யுங்கள்
சராசரி 4.8/5 (4 மதிப்பீடுகள்)
பகிர்

24

மறுநாள் காலையில் இருவரும் சஃபாரிக்கு கிளம்பினர். அவள் ஆர்வமாகவே இருந்தாள். அவனோ அவளைச் சற்றுத் தயக்கத்தோடு பார்த்தான். “என்ன அப்படிப் பார்க்குறீங்க?” என்று அவள் கேட்க, அவன் மறுப்பாகத் தலையசைத்தான்.

அவள் ஜீன்ஸ், குர்தி அணிந்திருந்தாள், தலை முடி அங்கும் இங்கும் பறக்காதபடி கொண்டையிட்டிருந்தாள், மிகப்பெரிய தோடு அணிந்திருந்தாள். அவன் அவளை அளவிட்டுக் கொண்டிருந்தான். அவள் கம்மலை உற்றுப் பார்த்து அது தோடு இல்லை, மிகப்பெரிய வளையம் என்று சொல்ல வேண்டும் என்று யோசித்தான்.

“இவ்வளவு பெரிய தோடு போடுற, காது வலிக்காதா?” என்று அவன் கேட்க, “இல்லை இல்லை, இதெல்லாம் லைட் வெயிட், வலிக்காது” என்று கூறியபடியே அவள் அதை கழற்றி அவன் கையில் கொடுத்தாள்.

அவன் அதை சுவாரஸ்யமாகத் தூக்கிப் பார்த்தான். காற்று போல் இருக்க, அதை ஆச்சரியமாக பார்த்தான். ஒரு பெண்ணின் காதணி மேல் தனக்கு இத்தனை காதல் வரும் என்று அவன் அறியவில்லை. அதன்பின் அவளிடம் கொடுக்க, அவள் அதை ஒரு நொடிக்குள் காதில் மாட்டிக்கொள்ள, அவர்கள் கிளம்பினார்கள்.

 அவன் திரும்பவும் ஒரு நொடி நின்று, “இன்னைக்கு நம்ம சஃபாரி போலாமா?” அவன் சந்தேகமாக கேட்க, அவள் அவனை ஆச்சரியமாகப் பார்த்தாள். “நீங்க அங்க போகணும்னு தானே இங்க வரைக்கும் வந்தீங்க?” அவள் தலை சாய்த்து அவனை போலவே புருவம் உயர்த்தினாள். “இல்ல… ஆமா…” அவன் தடுமாறினான்.

“இல்ல, நான் முதல்ல ஆர்வமா தான் வந்தேன். ஆனால் நேத்து புலி வந்ததும் நீ பயந்தியே, எனக்கு அதுதான் யோசனையா இருக்கு. இன்னிக்கு புலி வரலாம்… வராம கூட போகலாம், யானை வரலாம்” அவன் அக்கறையோடு விவரிக்க, “யானையெல்லாம் வருமா?” என்று அவள் ஆர்வமாகக் கேட்க, அவன் ‘ஆம்… வரலாம்…’ என்பது போல் தலையசைத்தான்.

“எனக்கு ரொம்ப பிடிக்கும். கோயில் போனா கூட யானையெல்லாம் ரொம்ப ஆசையா பாப்பேன்” அவள் ஆசையில் கண்களை விரித்தாள். ‘இவள் ஒரு ஆசிரியை தானா? இப்படி குழந்தையின் குதூகலத்தோடு இருக்கிறாளே? கோவில் யானை எல்லாம் கட்டி வச்சிருப்பாங்க. இங்க அப்படியே அலையும்.’ அவன் யோசனையோடு பார்த்தான். அவன் ஒன்றும் சொல்லவில்லை.

நேற்று வரை அவன் அவள் விருப்பத்தை பற்றி அவ்வளவாக யோசிக்கவில்லை. ஆனால், இன்று அவனுக்கு யோசிக்க தோன்றியது. “நீ பயப்பட மாட்ட தானே?” அவன் உறுதி படுத்திக்கொள்ள, அவன் கைகளை பற்றி, அவள், “பயம் இல்லவே இல்லை… பயப்பட மாட்டவே மாட்டேன்” என்று வாக்குறுதி கொடுத்தாள்.

அவள் செய்கையை பார்த்து, “அரசியல்வாதி தோற்று விடுவான் போல இருக்கு” அவன் கேலியாகப் பேசிக்கொண்டே நடக்க, இருவரும் சஃபாரிக்கு கிளம்பினார்கள். “ஓப்பன் ஜீப்…” அவள் குதூகலித்தாள்.

ஜீப் ஓட்டுநர் மற்றும் அதில் நான்கு பேர் இருந்தார்கள். இவள் மட்டுமே ஒரே பெண். அவன் அருகே அமர்ந்து கொண்டாள். அவர்கள் ஹிந்தியில் ஏதோ பேசிக் கொண்டிருந்தார்கள். முதலில் சஃபாரி உள்ளே செல்ல, அங்கு குரங்கு கூட்டம் தாவியது. இவள் அழகாகப் படம் பிடித்துக் கொண்டாள். “இதை வீடியோ பண்ணனும், நம்ம ஸ்கூல்ல போட்டு காட்டலாம், குழந்தைங்க எல்லாம் ரொம்ப சந்தோஷப்படுவாங்க” என்றாள். அவன் பள்ளி பற்றி பேச கூடாது என்று சொன்னதை எல்லாம் ஒரே நாளில் மறந்திருந்தாள்.

அவன் சம்மதமாக தலையசைத்தான். அதன்பின் அங்கு இரண்டு மயில்கள் நின்றன. மயில் தோகை விரித்து ஆட, அவள் உற்சாகத்தில் துள்ளிக் குதித்தாள். அவள் தலையை வெளியே நீட்ட, ஓட்டுநர் அவளை எச்சரித்தார். “இல்ல மேடம், வெளிய தலை நீட்ட கூடாது” என்று ஆங்கிலத்தில் சொன்னார். அவள் தலையாட்டிக் கொண்டு அமர்ந்தாள். அதன் பின்னர் வண்டி மெல்ல மெல்ல அடர்ந்த காட்டுக்குள் சென்றது.

பசுமை நிறைந்த அழகான இடம். அவர்கள் பாதையில் ஒரு யானை வேகமாக வந்தது. ஓட்டுநர் வண்டியை நிறுத்திவிட்டார். முதலில் யானையைப் பார்த்ததும் அவளுள் குதூகலம் வந்தது. அவள் முகத்தில் தெரிந்த சந்தோஷத்தை அவன் படம்பிடிக்க, அவள் அந்த கரிய நிற யானையை படம் பிடித்துக் கொண்டாள்.

அந்த யானை இவர்களை மெல்ல மெல்ல நெருங்க, அவள் அதை படம் பிடித்துக் கொண்டே இருக்க, மெல்ல மெல்ல அவளுள் அச்சம் பரவியது. அவன் கைகளை இறுக பற்றிக் கொண்டாள். அந்த காலை நேரத்தில் குளிர்ந்த காற்று வீசிக் கொண்டிருந்தது. அந்தக் குளிர்ந்த காற்றை தாண்டியும், அவள் உள்ளங்கையில் வியர்வை வழிய, அவள் நடுக்கத்தை அவன் உணர்ந்து கொண்டான்.

அந்த பயத்திலும் அவளுள் ஆர்வம் எழுந்தது. சுவாரஸ்யமாக அந்த யானையைப் பார்த்தாள். ஓட்டுநர் இவர்களை அமைதியாக இருக்க சொன்னார். யானையின் கண்களில் நேற்று புலியின் கண்களில் இருந்த பளபளப்பு இல்லை. ஆனால் அதில் ஒரு கூர்மை இருந்தது. நேற்று புலியின் உயரத்தையும் அளவையும் பார்த்து மிரண்டு போயிருந்த அவள், இன்று யானையின் உயரத்தையும் அளவையும் பார்த்து பிரமித்து போனாள்.

“யானை ரொம்ப அழகா இருக்குல்ல?” அவள் கேட்க, அவன் ஆமோதிப்பாக தலையசைத்தான். “பயமா இல்லையா பாரதி?” அவன் அவள் தலை முடியை ஒதுக்கிவிட்டு காதில் கிசுகிசுக்க, “தெரியலை” என்றாள் அவள்.

“தெரியலைனா?” அவன் கேட்க, “இல்ல, இப்படி மிருகத்துக்கு இடையில உட்கார வச்சிக்கிட்டு பயமா இருக்கா? பயமா இருக்கான்னு கேக்குறீங்களே உங்கள பத்தி தெரியலன்னு சொன்னேன்” அவள் இப்பொழுதும் வக்கணையாக பேச, அவன் சிரித்துக் கொண்டான். “யானை போனா தான் வண்டியை எடுப்பங்களோ?” அவள் கேட்க, அவன், “ம்…” கொட்டினான்.

யானை அசையாமல் அங்கு சில நிமிடங்கள் நின்றது. அவர்களை நெருங்கியது. அதன் துதிக்கை ஜீப்பை தொட, ஜீப் ஒரு குலுங்கு குலுங்கியது. இதை யாரும் எதிர்பார்க்கவில்லை. சற்று மிரண்டு தான் போனார்கள். ஆனால் ஓட்டுநர், “யாரும் அசையாதீங்க, எதுவுமே செய்யாதீங்க, அமைதியா இருங்க. அது அப்படியே போயிடும்.” நிதானமாக கூறினார்.

“இந்த இடத்துல அடுத்ததா புலி வர கூட வாய்ப்பிருக்கு. எதுவும் பேசாதீங்க, அமைதியா இருங்க. வெளியே தலையை நீட்டாதீங்க. திரும்பி பார்க்காதீங்க, பேசாம இருங்க” என்று மாறி மாறி ஓட்டுநர் ஆங்கிலத்தில் பாடம் எடுப்பது போல் கூற, அங்கிருந்த அனைவரும் அசையாமல் அமர்ந்திருந்தனர். யானை வந்த வழியில் திரும்பியது.

யானை ஜீப்பை தொட்டதும் அவள் உடல் நடுங்க ஆரம்பித்தது. இன்னும் நடுங்கி கொண்டே இருக்க, அவன் அவளைப் பற்றிக் கொண்டான். அவன் பிடி இறுகியது. அவள் அவனை மட்டுமே நம்புகிறாள். அவனை நம்பி மட்டுமே அவனுக்காக இங்கு வந்திருக்கிறாள் என்ற எண்ணம் அவனுக்கு தோன்றியது. அவள் ஆழ் மனம் அவன் ஆழ் மனதை தொட்டது. அந்த நொடியில் அவன் மனதில் காதல் பிறந்தது.

‘நொடிக்குள் காதல் பிறக்குமா?’ என்ற கேள்வி அவனிடம் யாராவது நேற்று கேட்டிருந்தால், “இல்லை…” என்றே பதில் சொல்லி இருப்பான். ஆனால், இன்று?

முதன் முதலில் அவளிடம் பேசும் பொழுது அவனுக்கு ஒரு சுவாரஸ்யம் தோன்றியது. திருமணம் வேண்டாம் என்று சொன்ன அவனால், அவளை வேண்டாம் என்று சொல்ல முடியவில்லை. இந்த ஒரு வாரத்தில், அதுவும் இந்த இரண்டு நாளில் அவள் அருகாமை அவனுக்கு பிடித்திருந்தது. ஆனால், அந்த காதல் என்ற ஒற்றை சொல் நேற்று வரை அவனுக்கு தோன்றவில்லை. இந்த நொடியில் அவனுக்குள் காதல் புகுந்து கொண்டது. அவள் மீது ஒரு தீராத அன்பு, தீராத காதல் புகுந்து கொண்டது. அவளுக்கு என்ன மனநிலை என்று அவன் அறியவில்லை. ஆனால் அவன் மனநிலையை அவன் அழகாக புரிந்து கொண்டான்.

அவன் அணைப்பு இறுகியது. ஆனால், அது அவளுக்கு வலித்து விடுமோ என்ற மென்மையாக பற்றி அவளை தன்னோடு சேர்த்துக் கொண்டான். இந்த ஜென்மம் முழுதும் இவளை என்னை விட்டு எங்கும் போகவே விடமட்டேன் என்று ஆணித்தனமாக உறுதி எடுத்துக்கொண்டு, அவளை தன்னோடு சேர்த்துக் கொண்டு அவளை ஆசையாக பார்த்தான்.

அவளோ யானையை பார்த்தபடி அமர்ந்திருந்தாள். ஆனால் அவனுக்கு அத்தனை பெரிய யானை சுத்தமாக புலப்படவில்லை. அவன் மனம் கண்கள் முழுதும் அவளே நிறைந்து இருந்தாள். அவன் காதலில் மூழ்கி இருக்க, அவனுக்கு ஒரு மின்னஞ்சல் வந்தது.

***

அதே நேரம், மோகனும் விஜயாவும் மகாபலிபுரத்திற்கு கிளம்பினர். குழந்தைகளின் முகத்தைப் பார்த்து விஜயா தன் முடிவை மாற்றிக் கொண்டாள். அவர்கள் காரில் கிளம்பினர். சிறிது நேரம் கழித்து அவன் பார்வை அவள் பக்கம் திரும்பியது. விஜயா பின்பக்கமே ஏற முனைந்தாள். குழந்தைகள் இருவரும் பின்பக்கம் தான் அமர்வேன் என்று பிடிவாதம் பிடிக்க, வேறு வழியின்றி முன்பக்கம் ஏறினாள்.

அவள் ஒற்றை வார்த்தை அவனிடம் பேசவில்லை. “சீட் பெல்ட் போடு விஜயா” அவன் கூற, அவள் அவன் சொன்னதை செய்யாமல், எதுவும் பேசாமல் பிடிவாதமாக அமர்ந்திருக்க, அவன் காரை ஓரம் கட்டினான். அவள் பக்கம் சாய்ந்து சீட் பெல்ட் அணிவிக்க, அவனின் இந்த செய்கையை எதிர்பார்க்காத அவள் திடுக்கிட்டு போனாள்.

“என்ன என் மேல அவ்வளவு அக்கறையா?” அவள் நக்கலாக கேட்க, “உன்மேல எல்லாம் ஒரு அக்கறையும் இல்ல. போறது மகாபலிபுரத்துக்கு. லாங் ட்ராவல். வழியில நிறைய போலீஸ் இருப்பாங்க. அதனால இந்த சீட்டு பெல்ட் போடலைன்னா ஃபைன் வாங்குவாங்க.” அவன் கடுப்பாக கூற, அவனை முறைத்துப் பார்த்தாள்.

“நம்ம ஊருக்குள்ள அப்படினா யாரும் பெருசா பார்க்க மாட்டாங்க. அப்படியே பார்த்தாலும் நம்மள தெரிஞ்சவங்க அப்படின்னு எச்சரிக்கையோட விட்டுருவாங்க.” அவன் விளக்கமளிக்க, “ஏன் உங்ககிட்ட ஃபைன் கொடுக்கிறதுக்கு ஐநூறு ரூபா கூட இல்லையா?” அவள் இடக்காக அடுத்த கேள்வியைக் கேட்க, “ஃபைன் கொடுக்கிறதுக்கு ஐநூறு ரூபாய் இருக்கு. ஆனா உனக்காக தர்றதுக்கு அஞ்சு பைசா கூட இல்லை” அவன் நக்கலாக உதட்டை பிதுக்கி பதில் கூற, அவளுக்கு விர்ரென்று கோபம் ஏறியது.

அப்பொழுது பின்னே அமர்ந்திருந்த சைந்தவி, “அப்பா இப்படியே சண்டை போட்டுக்கிட்டே இருந்தா நம்ம ஊருக்கே போக முடியாது. நேரம் ஆயிடும்” என்று கூற, வருண் சிரித்தான். “சண்டை போடலை சைந்தவி பேசிக்கிட்டு தான் இருந்தோம்” மோகன் கூற, “பார்த்தா அப்படி தெரியலை” வருண் முணுமுணுக்க, விஜயா மோகனை பார்த்தாள். அவன் சாலையை பார்த்தபடி வண்டி ஓட்டுவதில் கவனம் செலுத்தினான்.

காலை நேர உணவு உண்ணும் நேரம் நெருங்க, அவன் ஒரு ஹோட்டலில் வண்டியை நிறுத்தினான். “சைந்தவிக்கு என்ன வேண்டும்?” மோகன் கேட்க, “பேப்பர் ரோஸ்ட்” என்றாள் அவள். வருண், “பொங்கல் வேண்டும்” என்றான். “பேப்பர் ரோஸ்ட், பொங்கல், இட்லி” என்று கூறிவிட்டு விஜயாவைப் பார்த்து, “பூரி கிழங்கு” என்று கூறினான்.

அவன் கேட்பான் மறுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவள் அமர்ந்திருக்க, அவன் அவளிடம் கேட்கவே இல்லை. அவள் அவனை ஆழமாகப் பார்த்தாள். எதுவும் பேசவில்லை. குழந்தைகள் இருவரும் கை கழுவ சென்றனர். அப்பொழுது அவள் அவனை கூர்மையாக பார்த்துக் கொண்டிருக்க, “என்ன சாப்பிட மாட்டியா?” அவன் வம்பிழுக்க, அவள் மறுப்பாக தலையசைத்தாள்.

“அப்ப என்ன பாக்குற?” அவன் கேட்க, அவள் எதுவும் பேசவில்லை. “எப்ப பார்த்தாலும் சாலட் தானே சாப்பிடுற? இன்னைக்கும் ஜூஸ் தான் குடிக்கணுமா? உனக்கு தான் பூரி பிடிக்குமே? ஒரு நாள் சாப்பிடு” என்று அவன் அதட்டலாகவே கூறினான்.

‘எனக்கு பூரி பிடிக்கும்னு இவங்களுக்கு இன்னும் ஞாபகம் இருக்கா?” அவள் சற்று யோசனைக்கு உள்ளாகி அவனை பார்க்க, “என்ன பார்க்கிற? நான் சொன்னா அதை கேட்கக் கூடாதுன்னு தானே பார்க்கற?” அவன் இப்பொழுது சண்டைக்கு தயாராவது போலவே பேசினான்.

“உங்களுக்கு நான் என்ன நினைக்கிறேன்னு தெரியுமா?” அவள் கேட்க, “உனக்கு என்ன பிடிக்கும்னு எனக்கு தெரியும்” அவன் அழுத்தமாக கூற, அவள் பார்வை கூர்மை பெற்றது. “நீ என்ன நினைக்கிறன்னு எனக்கு தெரியும்” அவன் கூற, “உண்மையாவே உங்களுக்கு நான் நினைக்கிறது தெரியாது” என்று அவள் எங்கோ பார்த்தபடி கூறினாள்.

‘நிச்சயமாக சாப்பிட மாட்டேன் என்று பிடிவாதம் பிடிப்பாள்.’ என்று அவன் எதிர்பார்க்க, அவள் அதை தவிர்த்து சண்டை வளர்த்துக் கொண்டிருக்க, அவன் புன்னகையோடு மௌனித்துக் கொண்டான். அனைவரும் சாப்பிட, பல நாட்களுக்குப் பிறகு, “என்ன இட்லி மட்டும் தான் சாப்பிடுறீங்க? தோசை ஏதாவது சாப்பிடலையா?” அவள் அக்கறையோடு விசாரிக்க, அவன் தன்னக்குள் எழுந்த சந்தோஷத்தையும் ஆச்சரியத்தையும் மறைத்துக் கொண்டு சாதாரணமாக பேசினான்.

 “இல்லை ரொம்ப தூரம் கார் ஓட்டணும், இட்லி தான் வசதி” அவன் கூற, குழந்தைகள் ஜூஸ் வேண்டும் என்று கேட்க, அவர்களுக்கு ஜூஸ் வாங்கி கொடுத்தான். “ஒரு கப் காபி” மோகன் புருவம் உயர்த்த, விஜயாவின் முகத்தில் மெல்லிய புன்னகை தோன்றியது. பழைய நாள் நினைவுகளோடு அவனைப் பார்த்தாள். காபி பழக்கம் இல்லாதவள் அவனுடன் காபியை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அரை கப் காபி குடித்து பழகிய நாட்களும், அதன் பின்னே அதற்காக ஏங்கும் நாட்களும் ஒன்று சேர நினைவு வர, அவனைப் பார்த்துக் கொண்டே இருந்தாள்.

அவனாகவே காபி கேட்டது, அந்த நறுமணத்தையும் தாண்டி அவன் மனதையும் வெளிக்காட்டியதோ! ஆனால் எதுவும் பேசாமல் தலையை மட்டும் அசைத்துக் கொண்டாள். எந்த பேச்சும் வாக்குவாதத்தில் போய் முடிந்துவிடும் என்ற அச்சம் அவளுக்கு இருந்தது. அவளுள் அவனுடைய பழைய மோகனுக்கான ஏக்கம் இருந்தது. அவன் பழைய மோகனாகவே தான் இருக்கிறான் என்று அவள் அறியவில்லை. அவன் மனதில் அவள் சிம்மாசனமின்றி அமர்ந்திருப்பதையும் அவள் அறியவில்லை.

அரவிந்த் மனதில் தான் சிம்மாசனமிட்டு அமர்ந்ததையும், அதனால் வரப்போகும் பிரச்சனையும் அறியாமல் பாரதி உற்சாகமாக இருக்க, மோகன் மனதில் தான் சிம்மாசனமிட்டு அமர்ந்திருப்பதை அறியாமல் விஜயா பல குழப்பத்தோடு இருந்தாள்.

தெளிவாக தெரியப்படுத்தாதது ஆணின் குற்றமா?

இல்லை புரிந்து கொள்ளாமல் இருப்பது பெண்ணின் குற்றமா?

அடுத்த அத்தியாயம்

அத்தியாயம் – 25

25மூவரும் மகாபலிபுரத்திற்கு சென்றடைந்தனர். அங்கிருந்த பாறைகளை குழந்தைகள் ரசித்து பார்த்தனர். அவன் குழந்தைகளுக்கு விளக்கமாக கதை சொல்லிக்கொண்டே வந்து கொண்டிருந்தான். பேச்சோடு அவளையும் இணைத்துக் கொண்டான். அவளும் இணைந்து கொண்டாள்.“கிருஷ்ணாவின் பட்டர்பால்” என்று அவன் கூற, “வெண்ணெய் இருக்குமா?” என்று சைந்தவி…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

இந்தக் கதையைப் பற்றி விவாதிக்கவும் 1

உங்கள் கருத்தைப் பகிருங்கள்