arrow_back
மலரும் அரும்பே! அத்தியாயம் – 25
மலரும் அரும்பே! chevron_right பகுதி 25 / 30

அத்தியாயம் – 25

visibility 65
star படைப்பை ரேட் செய்யுங்கள்
சராசரி 3.3/5 (3 மதிப்பீடுகள்)
பகிர்

25

மூவரும் மகாபலிபுரத்திற்கு சென்றடைந்தனர். அங்கிருந்த பாறைகளை குழந்தைகள் ரசித்து பார்த்தனர். அவன் குழந்தைகளுக்கு விளக்கமாக கதை சொல்லிக்கொண்டே வந்து கொண்டிருந்தான். பேச்சோடு அவளையும் இணைத்துக் கொண்டான். அவளும் இணைந்து கொண்டாள்.

“கிருஷ்ணாவின் பட்டர்பால்” என்று அவன் கூற, “வெண்ணெய் இருக்குமா?” என்று சைந்தவி கேட்க, வருண் அவளை கேலி செய்து சிரித்தான். “வேலை வேலைன்னு இருந்துட்டேன். இப்படி எல்லாம் குழந்தைகளை வெளிய கூட்டிகிட்டு வந்திருக்கணும்.” மோகன் வெளிப்படையாக புலம்பினான்.

“மகிஷாசுரமர்த்தினி மண்டபம்” என்று கூறி, அதற்கு கதை சொல்ல, அவனோடு சேர்ந்து விஜயாவும் கதை சொன்னாள். இருவரும் தடுமாறி தடுமாறி கதை சொல்ல, “அம்மா, உங்களுக்கு தெரியுமா? பாரதி சித்தி நிறைய கதை சொல்லிருக்காங்க. அதுவும் மஹாபலிபுரம் போறோம்னு சொன்னதும் நரசிம்ம பல்லவ ராஜா கதை எல்லாம் சொன்னாங்க?” என்று அவள் கண்களை விரித்து கூறினாள்.

“ஓ!” விஜயா பாரதியின் செய்கையை உள்வாங்க, “நமக்கு அதுக்கெல்லாம் எங்க நேரம்? ஊருக்கு வரணுமா வேண்டாமான்னு சண்டை போட தானே நேரம் இருக்கு?” அவன் அவளை மறைமுகமாக குட்ட, அவள் அவனை முறைத்துக் கொண்டு குழந்தைகளோடு முன்னே நடந்தாள்.

குழந்தைகள் அங்கு சின்ன சின்ன சாமான்களை கேட்டனர். அவை அனைத்தையுமே மோகன் வாங்கி கொடுத்தான். அவள் எதுவும் கேட்கவில்லை. அவனுடன் எந்தவித சண்டையும் இல்லாது, இந்த நாளை முடித்துக்கொள்ள வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தாள்.

மௌனமாக நடந்தாள். அவனின் செயல் அவளுக்கும், அவளின் செயல் அவனுக்கும் விசித்திரமாக இருந்தது. இருவரும் ஒருவரை ஒருவர் சில காலமாக ஆழ்ந்து கவனிக்க தவறிவிட்டதை அவர்கள் இருவருமே உணரவில்லை.

***

அதே நேரம் , ஜிம் கார்பெட்டில் அரவிந்தன் முகத்தில் பதட்டம் தொற்றிக் கொண்டது. “என்ன ஆச்சு?” அவள் கேட்க, “கொஞ்சம் அவசரமாக யு.எஸ் கிளம்பனும் போல இருக்கு. அங்க ஆட்சி மாறி இருக்கு. அதனால விசா இஸ்யூஸ் இருக்கு” என்றான்.

“ஓ!” அவள் வாயை குவித்து கேட்க, “நாம இந்த ட்ரிப்பை முடிச்சுக்கலாமா? சஃபாரி… இது போக டெல்லியில் கொஞ்சம் சுத்தி பார்க்கணும்னு நினைச்சேன்” அவன் குற்ற உணர்ச்சியோடு வருத்தப்பட, “இதுல என்ன இருக்கு? வேலை தானே முக்கியம் போகலாம்” அவள் அனுசரணையாக கூறினாள். அவள் புரிதலில் அவனுக்கு நிம்மதி பரவியது.

அதன்பின் இருவரும் டெல்லி வந்தடைந்தனர். அன்று இரவு தான் விமானம் என்பதால் சில மணித்துளிகள் கடைகளில் சுற்றினர். அவள் அனைவருக்கும் ஏதேதோ பரிசு பொருட்கள் வாங்கினாள். அவளுக்காக அவன் பலவித உடைகள் வாங்கினான். அவள் காலையில் அணிந்திருந்த காதணியை பார்த்தவன், அவளுக்கு பல காதணிகள் வாங்கி கொடுத்தான். அவள் வண்ண வண்ணமாக வளையல் வாங்கினாள். அவளின் செய்கையை ரசித்தபடி அந்த நாளையும் ரசித்தான்.

அதன்பின் விமான நிலையத்தில் இருவரும் காத்திருக்க, அவள் அவனிடம் அப்படி ஒரு கேள்வியை கேட்க வேண்டும் என்று நினைக்கவில்லை. ஆனால் அவள் முகம் அவள் எதையோ யோசித்துக் கொண்டிருக்கிறாள் என்பதை அப்பட்டமாக காட்டியது. “என்ன பாரதி எதுனாலும் தயங்காம கேளு” என்றான் அவன்.

“நான் ஒன்னு கேட்டா தப்பா நினைக்க மாட்டீங்க தானே?” அவள் கண்களை சுருக்கி கேட்க, “சொல்லு பாரதி” என்றான். “என்னை விட்டுட்டு போயிடுவீங்களா?” அவள் கேட்க, அவன் அவளை கூர்மையாக பார்த்தான்.

“என்ன கேட்கிற பாரதி?” அவனின் குரலில் கொஞ்சம் கோபம் குடி கொண்டது.

“என்னைய விட்டுட்டு போயிடுவீங்களா?” அவள் மீண்டும் நேரடியாக கேட்க, “எதுக்கு விட்டுட்டு போகணும் அதான் விசா எல்லாம் ரெடியா இருக்கே! நீயும் என்கூட வர வேண்டியதுதானே. நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து தான் போறோம்” என்றான்.

“எனக்கு ஒருவேளை வர பிடிக்கலைன்னா?” அவள் கேள்வியாக நிறுத்த, “உனக்கு என்கூட வர பிடிக்கலையா?” அவன் அவள் முகபாவனையை அளந்தபடி கேட்க, அவள் பதறிப் போனாள்.

“உங்க கூட வரதெல்லாம் ஓகே தான். ஆனால், நீங்க இருக்கிற இடத்துக்கு நம்ம ஊரை விட்டுட்டு…” அவள் இழுக்க, “ஓ! புலி, யானை எல்லாம் இருந்தா தான் வருவியா? அதெல்லாம் அங்க இருக்கு. நரி, பாண்டா, முதலை அதுவெல்லாம் கூட இருக்கும்” அவன் கேலி போல கூற, “என்னை கிண்டல் பண்ண வேண்டாம்.” அவள் கோபித்துக் கொண்டாள்.

“அப்ப உனக்கு என்னை விட நம்ம ஊரு தான் முக்கியமா?” அவன் நிறுத்த, அவளிடம் பதில் இல்லை. அவள் கண்கள் கலங்கியது. “என்ன பாரதி?” அவன் கேட்க, அவன் அறியாமல் இருக்க அவள் தன் கண்ணீரை உள்ளிழுத்து கொண்டாள்.

அவள் முகத்தில் தீவிர யோசனை பரவியது. “என்ன யோசிக்கிற?” அவன் கேட்க, “எனக்கு நீங்க வேணும்னா நான் எனக்கு புடிச்சது எல்லாம் விட்டுட்டு வரணும் அப்படித்தானே?” அவள் அவனிடம் நேரடியாக கேட்டாள். “எதுக்கு விட்டுட்டு வரணும் நம்ம அப்பப்ப இங்க வருவோம் தானே?” அவன் அவளை சமாதானம் செய்தான்.

ஏனோ திருமணமான பின்பு, ஒரு வாரத்திற்கு முன் தான், ‘அவங்க அங்க இருப்பாங்க. நான் இங்க இருப்பேன்.’ என்று கூறிய பாரதி இப்பொழுது இல்லை. அது அவளுக்கு புரிந்ததோ இல்லையோ அவனுக்கு புரிந்தது. புரிந்தது மட்டுமில்லாமல் அதை எண்ணி அவன் மனதில் ஒரு பெருமையும் உண்டானது.

இப்பொழுது அவன் அவள் பக்கம் குனிந்து, “என்ன பாரதி, நான் அங்கையும் நீ இங்கயும்னு இருப்போமா? நீ அப்படி தானே சொல்லிட்டு இருந்த” அவன் நக்கலாக கேட்டான். அவளுக்கு கோபம் வந்தது.

“உங்களுக்கு ஓகேன்னா எனக்கு ஓகே. நீங்க தானே அப்படி சொல்லக் கூடாதுன்னு சொன்னீங்க?” அவள் விலகல் தன்மையோடு பேச, அவன் மிரண்டு போனான். “ஏய், என்ன வேற மாதிரி பேசுறே?” அவன் கேலியை குறைத்துக் கொள்ள, “நான் சாதாரணமா தான் பேசினேன்” அவள் முரண்டு பிடித்தாள்.

“என்கூட வந்துரு பாரதி ப்ளீஸ்… நான் கூப்பிடறேனில்லை?” அவன் குரல் கெஞ்சியது, இல்லை, கொஞ்சியது.

“ஒருவேளை எனக்கு அங்க எதுவுமே பிடிக்கலைன்னா?” அவள் சோகமாக முகத்தை வைத்துக் கொண்டு கேட்க, “ஒரு வருஷம் என் கூட அங்க இருந்து பாரு. உனக்கு புடிக்கலைன்னா உனக்காக நான் உன்கூட இங்க வந்துடுறேன்” அவன் கூற, அவள் உற்சாகமாக தலையசைத்தாள்.

“அப்போ ஒரு வருஷத்துல என்கூட வந்துருவீங்களா?” அவள் கேட்க, “ஏன் உனக்கு அங்க புடிச்சு போகலாம் இல்ல?” அவன் புருவம் உயர்த்த, “பிடிக்கலைன்னா வந்துருவீங்க இல்ல?” அவள் பிடிவாதமாக கேட்க, “ஆனா நீ புடிக்கலைன்னு பொய் சொல்ல கூடாது” அவன் சட்டம் போட, “நான் பொய் சொல்ல மாட்டேன்” அவனுக்கு அவள் வாக்களித்தாள்.

காலம் பதில் சொல்லும் என்று அவனும் காத்திருக்க முடிவு செய்தான். அவள் இப்பொழுது அவனோடு வர ஒத்துக் கொண்டதே அவனுக்கு பெரும் திருப்தியாக இருந்தது.

***

மகாபலிபுரத்தில் மாலை நேரம், மோகனும் விஜயாவும் மணலில் அமர்ந்திருந்தார்கள். குழந்தைகள் கொஞ்ச நேரம் நீரில் விளையாடிவிட்டு, மணலில் பந்து போட்டு விளையாடிக் கொண்டிருந்தனர். அப்பொழுது சைந்தவி சாப்பிடுவதற்காக சுண்டல் கேட்க, அதை வாங்குவதற்காக சற்று தொலைவாக சென்றான் மோகன். இவர்கள் இருவரும் விளையாடுவதை விஜயா பார்த்துக் கொண்டிருந்தாள்.

அப்பொழுது அவள் அருகே வந்த சைந்தவி, “அம்மா எனக்கு வேற டிரஸ் வேணும்” என்று கேட்டாள். சரி என்று அவள் கொஞ்சம் தள்ளி வைத்திருந்த பையை எடுத்துக்கொண்டு உடை எடுப்பதற்குள் அங்கு விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளை காணவில்லை. அவள் பதறிவிட்டாள். அவள் ஸ்தம்பித்து நிற்க, அங்கு மோகன் வந்தான். இருவரும் குழந்தைகளை தேட ஆரம்பித்தனர். அனைத்தும் சில நொடிகளில் நடந்தேறின.

அதற்குள், “என்னம்மா குழந்தைகளை தனியா இங்கே விட்டுட்டு எங்க போனீங்க?” என்று யாரோ கேட்க, அவளுக்கு குற்ற உணர்ச்சி அதிகமாகிவிட்டது. “மோகன், நான் எங்கையும் போகலை. இவ்வளவு நேரம் இங்க தான் இருந்தாங்க. நான் இங்கு தான் பார்த்துட்டு இருந்தேன். டிரஸ் எடுக்கத்தான் திரும்பினேன்” அவள் பிதற்ற ஆரம்பித்தாள்.

 “டென்ஷன் ஆகாதே, இங்க தான் இருப்பாங்க. வருண் பெரிய பையன் அவன் பார்த்துப்பான். அந்த பாறைக்கு பின்னாடி போயிருப்பாங்க” என்று அவன் பதட்டம் இல்லாமல் தேடினான். அதே போல் அவர்கள் பாறையின் மறுபக்கம் விழுந்திருந்த பந்தை இருவரும் எடுத்துக் கொண்டு வர, “அம்மா கிட்ட சொல்லிட்டு வரமாடீங்களா?” மோகன் இப்பொழுது குழந்தைகளிடம் கோபமாக கேட்டான்.

“எங்கேயுமே போகலை அப்பா, இதோ இந்த பாறைக்கு பின்னாடி தான் போனோம். அம்மா இங்கே தானே இருந்தாங்க” வருண் விளக்கம் கொடுக்க, ‘அவள் திரும்பிய நேரம் குழ்நதைகள் பாறைக்கு பின் சென்றிருக்க வேண்டும்.’ அவன் கணித்து கொண்டான்.

அவள் கண்களில் தாரைதாரையாக கண்ணீர் வடிந்தது. அவள் முகத்தில் இப்பொழுது தான் நிம்மதி பரவியது. குழந்தைகள் வரும் வரை அவளுக்கு மோகனை பற்றிய எந்த எண்ணமும் இல்லை. ஆனால் இப்பொழுது அவனை எண்ணி நொந்து கொண்டாள். ‘எப்படா சண்டை போடலாம்னு இருப்பாங்க. இப்ப சாக்கு சரியா போச்சு.’ அவள் எண்ணுகையில், அவள் அருகே வந்த மோகன், “தண்ணீ குடி விஜயா” என்று அவளிடம் தண்ணீரை நீட்டினான்.

“மோகன் நான் அவங்களை பார்த்துட்டு தான் இருந்தேன். கொஞ்ச நேரத்துக்குள்ள அங்க போயிட்டாங்க” அவள் புலம்ப, “எங்க போயிட போறாங்க? எதுக்கு இப்ப இவ்வளவு பதட்டமாகுற?” அவன் கேட்க, “நம்ம ஊருன்னா வேற. நான் கவலையே படமாட்டேன். உங்களுக்கு எல்லாரையும் தெரியும்.” அவள் பதட்டமாக கூற, “ரிலாக்ஸ் விஜயா” அவன் ஆறுதலாக கூற, அவளுக்கு ஆச்சரியமாகவே இருந்தது.

குழந்தைகள் மீண்டும் விளையாட சென்றுவிட்டனர். அவன் ஒரு கையை மணலில் ஊன்றி பின்னே சாய்ந்தவாறு மறுகையை முழங்கால் மேல் வைத்து அமர்ந்திருந்தான். விஜயாவின் உடல் நடுங்கியது. அவளுக்கு ஆறுதல் சொல்ல அவனுக்கு தோன்றினாலும் சூழ்நிலையை அவனுக்கு சாதகமாக்கிக் கொள்ள அவன் தயாராக இல்லை. ஆனால், இதை எல்லாம் யோசிக்கும் நிலையில் விஜயா இல்லை. அவன் அருகே அமர்ந்து அவன் தோள் சாய்ந்து விம்மினாள். தன் மீது சாய்ந்த கொண்ட அவளை தோளோடு சேர்த்து ஆறுதலாக அவள் தோள் தட்டினான்.

சில நொடிகளே நீடித்த அந்த தீண்டலில், பல நினைவுகள் அவள் மீது மோத, சட்டென்று விலகிக் கொண்டாள். அவன் மௌனமாகவே அமர்ந்திருந்தான். இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை.

அவர்கள் அறைக்கு திரும்பினார்கள். இரவு உணவை அறைக்கு கொண்டு வர சொல்லி அனைவரும் சாப்பிட்டனர். ஒரு குளியலை போட்டுக் கொண்டு குழந்தைகள் உறங்கிவிட்டனர்.

இரவு நேர நிலவு ஒளி, தென்னை மரம், அதில் அசைந்தாடிய தென்னங்கீற்று, அதை பார்த்தபடி நின்று கொண்டிருந்தான் மோகன். அங்கு இரண்டு பேர் எதிர்பக்கமாக அமர்ந்து பேசுவதற்கு ஏதுவாக பாறை இருந்தது. அதில் ஒரு பக்கம் மோகன் அமர்ந்திருந்தான். அங்கே விஜயா வர, அவளை எதிர்ப்பக்கம் அமரும்படி கை காட்டினான். அவள் முகத்தை ஆழமாக பார்த்தான். அவனுள் பல நினைவுகள், பசுமையாக! கோபமாக! இனிமையாக! வருத்தமாக!

இன்றைய சம்பவம் எதையும் மாற்றவில்லை. அவன் தெளிவாக இருந்தான். தான் அவளிடம் பேச வேண்டியது அனைத்தையும் பேசிவிட வேண்டும் என்று தீர்மானமாக இருந்தான். ஆரம்பிக்கும் விதம் தெரியாமல் அவன் தடுமாறி மௌனமாக இருக்க, அவள் அவனை யோசனையாக பார்த்தாள்.

மனதில் இருப்பவளுக்கு அழைப்பு விடுப்பது எளிது!

எளிதாக செய்துவிட்டான் இளையவன்.

மனதில் இருப்பவளை விலக சொல்வது கடினமல்லவா?

கடினப்படுகிறான் மூத்தவன்.

அடுத்த அத்தியாயம்

அத்தியாயம் – 26

26பாறை போல் அமைப்பில் இருந்த இரண்டு நாற்காலியில் ஒரு பக்கம் மோகன் அமர்ந்திருக்க, அங்கு வந்த விஜயாவை எதிர்ப்பக்கம் இருந்த பாறை போன்ற நாற்காலியில் அமரும்படி கை காட்டினான். அவளும் அவனுக்கு எதிர்ப்பக்கமாக அமர்ந்தாள். கருநீல வானமும், நிலவும் பிரகாசமாக காட்சியளித்தது.…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

forum ஒரு கருத்து உள்ளது

உங்கள் கருத்தைப் பகிருங்கள்