அத்தியாயம் – 26
26
பாறை போல் அமைப்பில் இருந்த இரண்டு நாற்காலியில் ஒரு பக்கம் மோகன் அமர்ந்திருக்க, அங்கு வந்த விஜயாவை எதிர்ப்பக்கம் இருந்த பாறை போன்ற நாற்காலியில் அமரும்படி கை காட்டினான். அவளும் அவனுக்கு எதிர்ப்பக்கமாக அமர்ந்தாள். கருநீல வானமும், நிலவும் பிரகாசமாக காட்சியளித்தது. நிலவொளி அந்த இடத்தை ரம்மியமாக்கியது. விஜயா இவற்றை எல்லாம் பார்த்தாள். கடந்த கால நினைவுகள் அவள் நெஞ்சில் மோத அவள் அதை ஒதுக்கினாள். அவர்கள் அருகே ஒரு தென்னமரம், அதிலிருந்து தென்னங்கீற்று, அங்கு வீசிய மிதமான காற்றில் அழகாக அசைந்தாடி இவர்களைத் தீண்டியது. அந்த இயற்கையை ரசிக்க ஓராயிரம் கண்கள் வேண்டும். ஆனால் ரசிப்பதற்கான மனம் அங்கு இருந்த இருவரிடமும் இல்லை. ‘அவளிடம் பேச வேண்டும்’ என்று முடிவெடுத்து தான் மோகன் இந்த பயணத்தை கட்டாயமாக்கினான்.
அதன்படி இருவரும் வந்துவிட்டனர். பேசுவதற்கு ஏதுவான கால அவகாசமும் அமைந்துவிட்டது. ஆனால் பேசும் சக்தியின்றி மோகன் தலையைக் குனிந்தபடி அமர்ந்திருந்தான். எதுவாக இருந்தாலும் அவர் வாயிலிருந்து வரட்டும் என்பது போல் விஜயா பொறுமையைக் கடைப்பிடித்தாள்.
சில நொடிகளில் ஆரம்பித்த அந்த மௌனம் சில நிமிடங்களையும் தாண்டி பல நிமிடங்களானது. விஜயா தன் பொறுமையை இழந்தாள். “பேசுங்க மோகன், நீங்க என்ன சொல்லணும்னு நினைக்கிறீங்களோ அதை சொல்லுங்க” என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னாள்.
அவன் அவளைப் பார்த்தான். ‘எப்படி சொல்வது? இனி என் வாழ்வில் நீ வேண்டவே வேண்டாம் என்று எப்படி சொல்வது?’ அவனுக்கு வலித்தது. ‘ஆனால் சொல்லித்தானே ஆகவேண்டும். அவளுக்கு இங்கு இருக்க விருப்பமில்லை, குழந்தைகளைப் பார்த்துக்கொள்ள விருப்பமில்லை. இப்படி விருப்பமில்லாத இடத்தில் இருந்து எதற்காக விஜயா கஷ்டப்பட வேண்டும்?’ என்று தனக்குத்தானே கேட்டுக் கொண்டு அவளை ஆராயும் விதமாகப் பார்த்தான்.
‘என் வாழ்வில் இருந்து நீ விலகிப் போ’ என்று சொல்லும் சக்தி அவனிடம் இல்லை. ‘அவள் போன பின்பு நான் என்ன ஆவேன்?’ என்ற கேள்வியும் அவனைக் குடைந்தது. அவன் முகபாவனையை படித்த விஜயா, “என்ன மோகன் என்னை உங்களை விட்டுட்டு போக சொல்ல போறீங்களா? உங்க வீட்டை விட்டு போக சொல்ல போறீங்களா? உங்க வாழ்க்கையை விட்டு ஒரேடியாக போக சொல்ல போறீங்களா?” என்று அவன் பேச நினைத்ததை பேச, ‘இதெல்லாம் சரியா கண்டுபிடிப்பா’ இப்பொழுது அவளை திட்டியபடியே அவன் திடுக்கிட்டு போனான்.
“அதாவது உங்களுக்கு என்னை சுத்தமா பிடிக்கல, உங்க குழந்தைகளை நீங்களே பாத்துப்பீங்க, நான் உங்க வாழ்க்கையை விட்டு போகணும்” அவள் கோபமாக கேட்க, அவன் எதுவும் பேசவில்லை. பேச வேண்டும் என்று சொன்னவன் மௌனமாக இருக்க, அவள் தான் பேசிக்கொண்டிருந்தாள்.
“இதைத்தான் சொல்லணும்னு முடிவு பண்ணிட்டா அதை தைரியமா சொல்ல வேண்டியது தானே? அதுக்கு எதுக்கு இவ்வளவு தயக்கம்? இவ்வளவு நாடகம்?” அவள் ஆக்ரோஷமாக கேட்க, “ஆமா விஜயா, நீ என் வாழ்க்கையை விட்டு போயிடு. எங்க வீட்டை விட்டு போயிடு” அவன் கோபமாக சொன்னான். அதை சொல்லும்பொழுது அவன் குரலில் வலி இருந்ததா, கோபம் இருந்ததா அது அவளுக்கு தெரியவில்லை. அதை அவள் உணரவில்லை, அவள் கவனிக்கவுமில்லை.
“நான் உங்க வாழ்க்கைய விட்டு போயிடறேன். ஆனா என்னுடைய ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்க. நீங்க வேற யாரையாவது விரும்புறீங்களா?” அவள் கேட்க, அவன் அவளை ‘பளார்’ என்று அறைந்திருந்தான். “என்ன விஜயா கொழுப்பா?” அவன் காட்டமாக கேட்க,
“இதுல நீங்க கோபப்படுறதுக்கு என்ன இருக்கு? என்னால உங்களை திருப்பி அடிக்க முடியும், அது தெரியுமா உங்களுக்கு?” அவள் கோபமாக சிலிர்த்துக் கொண்டு நிற்க, “பின்ன மேடம் நீங்க கேட்ட வார்த்தை தப்பில்லையா? நான் வேற யாரையோ மனசுல நினைக்கிறேனா?” அவன் அவள் கன்னத்தை பிடித்து கேட்டு, அவளை உதறி தள்ளினான்.
“பின்ன உங்களுக்கு என்னை கொஞ்ச நாளாவே புடிக்கல… கொஞ்ச நாளா இல்ல கொஞ்சம் வருஷமா பிடிக்கல. உங்க அம்மாவுக்கும் என்னைய புடிக்கல, என்னைய ஏதாவது குறை சொல்லிட்டே இருக்காங்க. அப்ப என்ன அர்த்தம்? அவங்களும் உங்களுக்கு வேற ஒரு பொண்ண பார்த்து கல்யாணம் பண்ணனும்னு எண்ணமோ?” அவள் கூற, அவன் கண்கள் சுருங்கியது.
“என்ன சொன்ன? திரும்பி சொல்லு… எனக்கு உன்ன புடிக்கலையா? நான் சொன்னேனா அப்படி? நான் சொன்னேனா அப்படி, எனக்கு உன்னை பிடிக்கலைன்னு?” என்று அவன் அவள் கண்களை பார்த்துக் கேட்டான்.
“ஆமா உங்களுக்கு என்னை பிடிக்கலை.” அவள் அழுத்தம் திருத்தமாக கூற, அவனுக்கு வந்த ஆத்திரத்தில் அவள் கழுத்தை பிடிக்க வர, “இந்த கையை நீட்டுற வேலை எல்லாம் என்கிட்ட வேண்டாம். ஒண்ணு நான் பேசினா நீங்க பேசுங்க… பேச தெரியலையா வாயை மூடிக்கிட்டு இருங்க” அவள் கடினமாக கூற,
உடனே அவன் கோபமாக, “உனக்குத்தான் என்னை புடிக்கல… உனக்கு தான் நம்ம குழந்தைகளை புடிக்கல… இன்னைக்கு ஏதோ காணாம போயிட்டாங்கன்னு பதட்டத்துல அழுதியேயொழிய உண்மையிலேயே உனக்கு அவங்க மேல பாசமே இல்ல, உனக்கு குழந்தைகளை பார்த்துக்க பிடிக்கல, எங்க அம்மா அப்பாவை பார்த்துக்க புடிக்கல, என்னையே புடிக்கல” அவன் அடுக்கிக் கொண்டே போக, “அப்படின்னு நான் சொன்னேனா?” அவள் இப்பொழுது எதிர் கேள்வி கேட்க, அவனிடம் அமைதி.
“நான் சொன்னேனா எனக்கு இதெல்லாம் பிடிக்கல்லைன்னு. இவங்களையெல்லாம் பிடிக்கலைன்னு நான் சொன்னேனா?” அவள் இன்னும் காட்டமாக கேட்க, அவர்கள் இருவருக்கும் மூச்சு வாங்கியது.
ஒரு வயதிற்கு மேல் சண்டை போட கூட உடம்பு ஒத்துழைப்பதில்லை. சில நிமிடங்கள் மௌனமாக அமர்ந்தனர். அவள் கண்களிலிருந்து கண்ணீர் எட்டிப் பார்க்க, அவன் அறியாமல் அதை உள்ளிழுத்து மறைத்துக் கொண்டாள். ஆனால் மோகனின் கண்களில் இருந்து கண்ணீர் வடிந்தது. அவன் எதுவும் பேசவில்லை. அவன் கண்ணீரை பார்த்த அவள் பதறிப் போனாள்.
சில வருடங்களுக்கு முன்னே அவர்கள் சண்டை போட்டிருக்க வேண்டும். ஆனால் இருவரும் பெரியவர்களையும் சிறியவர்களையும் எண்ணி சண்டை போடாமல் மௌனம் காத்தனர். அவனும் இன்று பேசி விட்டான், அவளும் இன்று பேசிவிட்டாள்.
அவன் கண்களில் இருந்து வந்த கண்ணீரை பார்த்தவள், அவன் முன் மண்டியிட்டு அமர்ந்தாள். “மோகன், உங்களுக்கு என்னை பிடிக்கல்லைன்னா, நான் உங்க கூட இருக்கிறது இடைஞ்சலா இருக்குன்னா நான் வெளியே போயிடுறேன். நீங்க இவ்ளோ வருத்தப்படாதீங்க” அவள் கூற,
“முட்டாள் அடிமுட்டாளா நீ? எனக்கு உன்னை பிடிக்கலைன்னு நான் சொல்லவே இல்லையே” அவன் முகத்தை திருப்ப, “அப்ப, நான் எதுக்கு போகணும்னு நீங்க சொல்றீங்க? என்னை வேண்டான்னு தானே சொல்றீங்க” அவள் தலையை சிலுப்பிக் கொண்டே கேட்க, “நான் உன்னை வேண்டான்னு சொல்லல விஜயா. உனக்கு தான் என்னை புடிக்கல, நீ வேண்டா வெறுப்பா அந்த வீட்டில இருக்க…” அவன் அதே பல்லவியை பாட ஆரம்பித்தான்.
“இல்ல மோகன், என்னைய வேண்டா வெறுப்பா அந்த வீட்டில் இருக்க வைத்தது நீங்கதானே? நான் என்ன தப்பு பண்ணினேன்? நீங்க சொல்றத அப்படியே கேட்டுட்டு இருந்தபோது உங்களுக்கு சந்தோஷமா இருந்துச்சு. ஆரம்ப காலத்தில் இருந்த என் மோகன் இப்ப இல்லையே. எனக்காக என் மோகன் இல்லையே. எனக்காக எல்லாம் பண்ணின மோகன் இப்ப இல்லையே?” அவள் கைகளை ஒன்று இல்லை என்பது போல் மடக்கி கண்ணீர் வடிக்க, அவன் உருக்குலைந்து போனான்.
“நான் ஒரே ஒரு விஷயம் தான் எனக்கு விருப்பம்னு கேட்டேன். எனக்குன்னு ஒரு பொட்டிக் வைக்கணுமுன்னு கேட்டேன். அதுல உங்களுக்கு விருப்பம் இல்லை. அதுக்காக அதை விடனும்னு சொன்னீங்க. அது எப்படி மோகன் விட முடியும்? எனக்குன்னு ஒரு ஆசை. ஏன் பொண்ணுங்க அவங்களுக்குன்னு ஒரு ஆசை இருக்க கூடாதா? ஆசைப்பட்ட பிசினஸ் பண்ண கூடாதா? அதுல உங்களுக்கு விருப்பம் இல்ல. உங்களை மீறி ஆரம்பிச்சேன். அதுல இருந்து நீங்க என்கிட்ட இருந்து விலகி போய்ட்டிங்க.”
“அப்படி இல்லை…” அவன் இப்பொழுது தடுமாறினான்.
“அதை எனக்காக நீங்க ஏத்துக்க கூடாதா?” அவள் குரலில் இறைஞ்சுதல் இருக்க, அவன் கண்கள் சுருங்கியது.
“நீ பண்றது பிடிக்காமல் எல்லாம் இல்லை. ஆனால், நம்ம வீட்டிலேயே ஆயிரம் பிசினஸ் இருக்கு…” அவன் ஆரம்பிக்க, “ஸ்கூல் இருக்கு, மில் இருக்கு, இன்னும் விவசாயம் ஏதோ பண்றீங்க, ஆனா இதுல எதுவுமே எனக்கு விருப்பம் இல்லையே?” என்றவள், “எனக்கு காஸ்ட்யூம் டிசைன்ல தான் இன்ட்ரெஸ்ட். நான் அது சம்பந்தமா தானே படிச்சிருக்கேன். நான் என் விருப்பத்தை பண்றேன். இதுல என்ன தப்பு இருக்கு? அதுல இருந்து நீங்க என்கிட்ட வெறுப்பை காட்டறீங்க.” அவள் அவனை குற்றம் சாட்டினாள்.
“நான் வெறுப்பை காட்டல விஜயா. நீ அப்படி நடந்துக்குற. என்னைக்கு நீ பொட்டிக் ஆரம்பிச்சியோ, அன்னையிலிருந்து நீ நம்ம குழந்தைகளை பார்த்துக்கறதே இல்லை.” அவன் அவளை குற்றம் சாட்ட, “ஏன் குழந்தைகளை பாத்துக்குற பொறுப்பு உங்களுக்கு இல்லையா? ஏன் நீங்க பாத்துக்க கூடாதா?” அவள் கேட்க, “முதல்ல இருந்து நீ தானே குழந்தைகளை பாத்துக்குற?” அவன் இப்பொழுது கேட்டான்.
“முதல்ல இருந்து நான் தானே பார்க்கிறேன் அப்ப இடையில கொஞ்ச நாள் நீங்க பார்த்தா தப்பா?” அவள் அவனையே குற்றவாளியாக்க, அவன் இப்பொழுதும் பேசவில்லை.
“சரிங்க நீங்க பண்ணது சரியோ தப்போ, அதை விடுங்க. நான் பண்ணினது தப்பு தான். நான் என்ன நினைச்சேன் அப்படின்னா, பாட்டி, தாத்தா இருக்காங்க, நம்ம ஊரு தானே, நம்ம ஸ்கூல் தானே, குழந்தைகளுக்கும் ஒரு பொறுப்பு வரணும், அவங்களே பார்த்துப்பாங்கன்னு நினைச்சேன். தப்பு தான். ஆனால், அது எனக்கு தப்புனு அப்ப தெரியலை. அது எனக்கே பாரதி வந்த பிறகு, அவளோட அருகாமையை குழந்தைகள் விரும்பும்போது தான் தெரிஞ்சிது. குழந்தைங்க நம்ம வேணும்னு நினைக்கிறாங்கன்னு புரிஞ்சிது.”
அவள் சில நொடிகள் மௌனித்தாள். “நான் அதை மிஸ் பண்ணிட்டேன். அது எனக்கு புரியுது. ஆனா அத்தைக்கு தான் என்னை சுத்தமா பிடிக்கலையே. அத்தை எப்ப பாரு என்னை குறை சொல்றாங்க” அவள் சலிப்போடு கூற, “அம்மாவுக்கு நீ குழந்தைங்களை சரியா பார்க்கலைன்னு வருத்தம். நாம ரெண்டு பேரும் சந்தோஷமா பேசி சிரிக்கிறது இல்லைன்னு வருத்தம். நமக்குள்ள ஏதோ பிரச்சனைன்னு வருத்தம்.” அவன் தன் தாய்க்கு விளக்கம் கொடுக்க,
“சரிங்க அவங்கள விடுங்க, உங்களுக்கு?” அவள் இப்பொழுது தன் விரலை அவன் பக்கம் நீட்டினாள்.
“எனக்கும் கோபம் தான் விஜயா. நீ பொட்டிக் ஆரம்பிச்சது கூட உன் தனிப்பட்ட விருப்பம். ஏன் அந்த பொட்டிக்கு ஒரு ஆளை போட்டுட்டு நீ குழந்தைகளுடன் நேரம் செலவழிக்கலாம் இல்ல?” அவன் கேட்க, அவள் இப்பொழுது அவனை பார்த்து நக்கலாக சிரித்தாள். “என்ன விஜயா சிரிக்கிற? நான் உண்மைய சொன்னா உனக்கு பதில் தெரியலையா?”
“உங்களுக்கு தெரியுமா? எனக்கு எவ்வளவு பணம் நெருக்கடின்னு?” அவள் கேட்க, அவன் திடுக்கிட்டு போனான். “என்ன விஜயா சொல்ற? பணம் வேணும்னா என்கிட்ட கேட்டு இருக்க வேண்டியதுதானே?” அவன் அதிர்ச்சியாக கேட்க, “எப்படி, நான் பண்றதை எல்லாம், வேணாம்… உன்னால தான் குடும்பமே மோசமாகுதுன்னு என்கிட்ட மோசமா நடந்துக்குற உங்ககிட்ட, என் தன்மானத்தை விட்டு பணம் கேட்கணுமா?” அவள் குரலிலும் அவள் முகத்திலும் அத்தனை வருத்தம்.
அவன் அவள் தோளை பற்றினான். “என்கிட்ட உனக்கு என்னடி வீராப்பு? பணம் வேணும் எனக்கு பிரச்சனைன்னு நீ கேட்டா, நான் கொடுக்க போறேன்” அவன் குரலில் அத்தனை ஆதங்கம்.
“உண்மையிலே என் பழைய மோகன் கிட்ட நான் கேட்டிருப்பேன். ஆனால், இப்ப இருக்கிற மோகன் கிட்ட என்னால் பணம் கேட்க முடியல. ஏன்னா, உங்களுக்கும் எனக்கும் இடையில் அதிகமான இடைவெளி உருவாகிடுச்சு” அவள் அவனிடமிருந்து விலகி நின்று கூற, அவன் இப்பொழுது நொறுங்கிப் போனான்.
“ஆமாங்க எனக்கு பண கஷ்டம்… எடுத்தவுடனே எந்த பிஸினஸும் லாபம் தராது. நான் இப்ப வரைக்கும் லாபத்தை பார்க்கல. போட்ட பணத்தை தான் எடுத்துட்டு இருக்கேன். அதுல என்னால ஒரு ஆளை வேலைக்கு போட முடியாது. காலையில போனா சாயங்காலம் வரைக்கும் நான் நின்னுட்டு தாங்க இருக்கணும். வேலைக்கு ஆள் போட்டா, அந்த பொண்ணுக்கு சம்பளம் கொடுக்கணும். சம்பளம் போடுற அளவுக்கு லாபத்தை நான் பார்க்கல.
இது உங்ககிட்ட சொல்றதுக்கு உண்மையிலேயே எனக்கு மனசு இல்ல. அப்படியே நான் சொல்லி இருந்தாலும், இந்த பிசினெஸை இழுத்து மூடுன்னு சொல்லிருப்பீங்களே ஒழிய, நிச்சயமா நீங்க காசு கொடுத்து இருக்க மாட்டீங்க.” அவள் ஆணித்தரமாக கூற, அவன் இப்பொழுது அவளை யோசனையாக பார்த்தான். அவனுக்கும் அப்படித்தான் தோன்றியது.
“நீங்க வீட்டுக்கு வந்ததும், நான் உங்ககிட்ட பேசல, முன்னே மாதிரி வீட்ல வேலை பார்க்கல, பழைய மாதிரி இல்லன்னு சொல்றீங்க. ஆமா, காலையில எட்டு மணியிலிருந்து சாயங்காலம் எட்டு மணி வரைக்கும் நான் நின்னுக்கிட்டே தான் இருக்கேன். எனக்கு அங்க நிறைய வேலை. விருப்பப்பட்டு செஞ்சாலும் கஷ்டம் கஷ்டம் தானே? இப்படித்தான் இந்த இடத்தில் வேலை இருக்கு அப்படின்னு எனக்கு பகிர்ந்துக்க கூட ஆள் கிடையாது. எங்க வீட்ல சொன்னாலும், உனக்கு எதுக்கு இந்த வயசுல பிசினஸ்… அப்படின்னு எங்க அம்மா அப்பா சொல்லிட்டாங்க.
சரி, நான் எல்லாத்தையும் உங்ககிட்ட தான் சொல்லுவேன். உங்ககிட்ட சொல்லலாம்னு பார்த்தாலும், நீங்களும் அதை காது கொடுத்து கேட்கிற நிலைமையிலே இல்லையே. எனக்கு எதுக்கு பிசினஸ்? நான் அதை செய்ய வேண்டாம்னு சொல்றதுல நீங்க உறுதியா இருந்தீங்க” அவள் நிறுத்த, அவன் பேசவில்லை.
“ஆனால், இதெல்லாம் நான் பிள்ளைகளை சரியாக பார்க்காததுக்கு சரியான காரணம் கிடையாது. எல்லாம் தப்பா போச்சு.” அவள் முகத்தை மூடி விம்ம, அவள் அழுவதை விரும்பாத அவன், “விஜயா…” அவன் இப்பொழுது அழுத்தமாக அழைக்க, அவள் அவனை திரும்பியும் பார்க்கவில்லை. அவன் அவளை வேகமாக இழுத்து அவளை தன் மேல் சாய்த்து கொண்டான். அவள் அவனை தன் முழு பலம் கொண்டு தள்ளினாள்.
“அது தான்… என்னைய விட்டுட்டு போக சொல்லிட்டீங்க இல்ல? உங்க குழந்தைகளை நீங்களே பார்த்துக்க முடியுமுன்னு சொன்னீங்க இல்ல? நீங்களே பாத்துக்கோங்க. நான் வெளியே போறேன்” அவள் கண்களில் கண்ணீரோடு அவன் பிடியிலிருந்து விலக போராட, “லூசு…”அவன் அவளை செல்லமாக திட்ட, “யாரு லூசு? நீங்க தான் லூசு…” அவள் அவன் மார்பில் குத்தினாள்.
“சாரி விஜயா… தப்பு உன்மேல மட்டும் இல்ல, நானாவது குழந்தைகளை சீக்கிரம் வந்து பார்த்து இருக்கணும். நம்ம ரெண்டு பேரும் சண்டைல குழந்தைகளை பார்க்காம விட்டது தப்புதான்.” அவன் இப்பொழுது இறங்கிப் பேச, அவள், “இல்லை… தப்பு என்மேல தான். இவ்வளவு பிரச்சனைக்கும் காரணம் நான் தான். இப்படியொரு சமுதாய கட்டமைப்பில் என் கனவு, என் ஆசை என்று போனதால தானே எல்லா பிரச்சனையும்? நான் எல்லாத்தையும் விட்டுடுறேன்.” அவன் நெஞ்சில் சாய்ந்து அவள் விம்ம, அவள் முகத்தை நிமிர்த்தி அவள் கண்ணீரை துடைத்தான்.
“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம், நம்ம மில்ல இருந்து ரெண்டு நம்பகமான ஆளை அனுப்பறேன். உனக்கு என்ன வேணுமோ பண்ணு. நீ சொல்றது சரிதான். முதல்ல லாபம் வராது. அதுக்கப்புறம் எல்லாம் சரியாயிடும். நானும் உன் கூட வந்து அப்பப்ப உன் பிசினெஸ்ஸை பார்க்குறேன். நீ உனக்கு பிடிச்சதை பண்ணு.” அவன் கூற, அவள் அவனை ஆச்சரியமாக பார்த்தாள்.
“உண்மையாவா?” அவள் ஆச்சரியமாக கேட்க, “உன் மோகன் பொய் சொல்வானா?” அவன் புருவம் உயர்த்த, அவள் வாகாக அவன் தோளில் சாய்ந்து கொண்டு, “என் பழைய மோகன் பொய் சொல்ல மாட்டாங்க. ஆனா இப்ப இருக்குற மோகன பத்தி எனக்கு தெரியாது” அவள் உதட்டை பிதுக்கினாள்.
“உன் பழைய மோகன் எப்படியாம்?” நெற்றியோராம் இருந்த அவள் முடியை ஒதுக்கி அவன் கேட்க, “என் பழைய மோகன் ரொம்ப நல்லவர், வல்லவர், எனக்காக எல்லாம் செய்யக்கூடியவர். ஆனால் இந்த மோகன் அப்படி கிடையாது.” அவள் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு கூற, “ஏன் விஜயா அப்படி சொல்ற?” அவன் அவளை தன் அருகே அமர்த்திக் கொண்டு கேட்க, “இப்ப எனக்காக நீங்க என்ன பண்றீங்க?” அவள் கேட்க, அவள் பேசட்டும் என்று காத்திருந்தான்.
“உங்களுக்காக நான் எங்க அம்மா, அப்பாவை விட்டுட்டு இந்த வீடே கதின்னு இருக்கேன். அப்படிப்பட்ட உங்க மனைவிக்காக கொஞ்சம் விட்டுக் கொடுத்துப் போனாதான் என்னவாம்?” அவள் இப்பொழுது தலை சாய்த்து அதிகாரமாகவே கேட்டாள்.
“உண்மைதான் உனக்காக தாராளமா விட்டுக் கொடுக்கலாம்” அவன் நமட்டு சிரிப்போடு கூற, “சும்மா நடிக்காதீங்க. விட்டுக் கொடுத்துட்டாலும், என்னையே விட்டுக்கொடுக்க, நினைச்சவர் தானே?” அவள் விலக, அவன் அவளை தன்னோடு நிறுத்திக் கொண்டான்.
“அது கோபம் விஜயா” அவன் இளக, “என்ன பெரிய கோபம்? ஒரு நாள் இருக்கலாம், ஒரு வாரம் இருக்கலாம், இல்லை ஒரு மாசம் இருக்கலாம், கிட்டத்தட்ட இரண்டு மூன்று வருடமா நம்ம வாழ்க்கை இப்படித்தான் போகுது தெரியுமா?” அவள் இப்பொழுது சண்டைக்கு தயாரானாள்.
இங்கு வரும்பொழுது அவனிடம் சண்டையிடாமல் இந்த நாளை முடித்து விட வேண்டும் என்று எண்ணிய விஜயா இப்போது இல்லை. அவனிடம் சரிக்கு சமமாக இல்லை… இல்லை அவனை மிஞ்சும் அளவுக்கு சண்டை போட தயாரான மனநிலையில் அவள் இருக்க, அவன் அதை புரிந்து கொண்டான்.
அவனுக்கு இந்த விஜயா மிகவும் பிடித்திருக்க, புன்னகைத்துக் கொண்டான். ஆழமான குரலில், “எதுனாலும் சண்டை போடுடீ. பேசாம இருக்காத.” அவன் கலங்க, “நான் பேசாம இருந்தேன்னா நீங்க பேசாம இருப்பீங்களா?” அவள் கண்கள் மீண்டும் கண்ணீரை வடித்தது.
அவன் அவளை இழுத்து தன்னோடு சேர்த்துக் கொண்டு அவள் முகமெங்கும் இதழ் பதித்தான். அவனின் இதழ் பதிப்பு அவள் இதழிடமே முடிந்தது, இல்லை தொடங்கியது!
அவர்களுக்குள் இனி அனைத்தையும் பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும். பேசாமல் வளர்த்துக் கொள்ளக்கூடாது என்று தீர்மானமாக முடிவு செய்தனர். எந்த பிரச்சனையாக இருந்தாலும், அது குழந்தைகளை பாதிக்க கூடாது என்று அதிதீவிரமாக முடிவு எடுத்துக் கொண்டனர்.
வீடு திரும்பிய விஜயாவின் முகத்தில் அத்தனை மலர்ச்சி, அதை நித்தியகல்யாணியும் சிவகுருவும் மனதில் குறித்துக்கொள்ள, அதே நேரத்தில் அரவிந்தும் பாரதியும் வீடு திரும்பினர். ஆனால் பாரதியின் முகத்தில் அத்தனை மலர்ச்சி இல்லை. யோசனையே விரவி கிடந்தது. முகம் வாட்டமாக இருந்தது. ஆனால் அரவிந்த் மிக சந்தோஷமாக இருந்தான். இதையும் பெரியவர்கள் மனதில் குறித்துக் கொண்டனர்.
வாழ்வில் அனுபவம் பெற்ற விஜயாவிற்கும்
வாழ்வில் அனுபவம் இல்லாத பாரதிக்கும்
வித்தியாசம் இருக்கத்தானே செய்யும்?





சூப்பர் சூப்பர் ❤️