அத்தியாயம் – 27
27
பயண களைப்பு போக, அனைவரும் நன்றாக உறங்கி எழுந்து, பாரதி கொடுத்த காபி, தேநீரோடு அமர்ந்திருந்தனர். விஜயாவுக்கும் மோகனுக்கும் இடையே இருந்த மனக்கிலேசம் நீங்கியது அப்பட்டமாக தெரிந்தது. அவள் ஓர் ஆயிரம் தடவை, ‘மோகன்… மோகன்’ என்று அழைத்துக் கொண்டு அவன் அருகே அமர, அவன் ஓராயிரம் தடவை, ‘விஜயா… விஜயா’ என்று உருகிக் கொண்டிருந்தான்.
பெரியவர்கள் எதுவும் அவர்களிடம் கேட்கவில்லை. அவர்களுக்கிடையே குறிப்பு காட்டி சம்பாஷித்து கொண்டனர்.
“அம்மா, நானும் பாரதியும் ரெண்டு வாரத்தில் யு.எஸ் கிளம்பறோம்.” என்று அவன் கூற, “என்ன பாரதி, அவங்க அங்க… நீ இங்கன்னு சொன்னியே?” விஜயா இப்பொழுது கேலியாக கேட்க, அரவிந்த் நழுவுவது போல எழுந்து செல்ல, “அரவிந்த் எங்க போற? இங்க உட்காரு” என்று மோகன் அண்ணனாக உரிமையோடு அவனை மிரட்ட, அரவிந்த் வேறு வழியின்றி அமர்ந்தான்.
“அவங்க தான் கண்டிப்பா வரணும்னு சொல்லிட்டாங்க” பாரதி அவனை கோர்த்துவிட, “ஆமாம் அவனும் இருக்க மாட்டான். உன்னையும் கூட்டிட்டு போய்டுவான்.” என்று நக்கல் போல் ஆதங்கத்தை நித்திய கல்யாணி தெரிவித்தார்.
“அவங்க போயிட்டு வரட்டும், போயிட்டு வாங்க” என்று சிவகுரு கூறினார். சிவகுருவிற்கு பாரதியின் முடிவை பற்றிய அச்சம் இருக்கத்தான் செய்தது. ஆனால் அவர்கள் இருவரும் பேசி ஒரு முடிவுக்கு வருவார்கள் என்ற நம்பிக்கை அவருக்கு இருந்தது. அவர் நம்பிக்கை பொய்க்கவில்லை.
விஜயாவை தேடி சென்ற பாரதி, தயக்கத்தோடு அவளை அணுகினாள். “அக்கா…” அவள் தயங்க, “சொல்லு பாரதி…” அவள் செவி சாய்க்க, “வருண் இடையில கொஞ்சம் தடம் மாறினான். பிரண்ட்ஸ் சரி இல்லை. கொஞ்சம் பொய் சொல்லிட்டு டியூஷன் போகாம சைக்கிளில் சுத்தினான். இப்ப அப்படி இல்லை அக்கா. நாம கூட இருக்கணும்னு குழந்தைங்க நினைக்கறாங்க. நான் உங்களை விட வயசில் சின்னவ… நான் சொல்றேன்னு… நீங்க தப்பா…” அவள் தடுமாற, “வயசு கம்மியா இருந்தா என்ன பாரதி? டீச்சர் சொன்னா கேட்டுக்கலாமே” விஜயா கூற, பாரதி புன்னகைத்துக் கொண்டாள்.
“நீ சொல்லி புரிய வேண்டியதில்லை பாரதி. உன் செய்கையே எனக்கு நிறைய புரிய வச்சிடுச்சு.” அவள் கூற, “தேங்க்ஸ் அக்கா” என்று பாரதி கூற, “அதை நான் சொல்லணும்.” அவள் கூற, இருவரும் சிரித்துக் கொண்டனர்.
அதன்பின் அரவிந்தும் பாரதியும் அமெரிக்கா கிளம்ப ஆயத்தம் ஆகினர். பாரதியின் அம்மா பூரணிக்கு மிக்க மகிழ்ச்சி. எங்கே பாரதி அமெரிக்க செல்ல மறுப்பு தெரிவித்து பிரச்சனை கிளப்புவாளோ என்ற ஐயம் அவருக்கு இருந்தது. ஆனால் அந்த ஐயத்தை அழகாக அழித்துவிட்டு பாரதி அரவிந்தோடு அமெரிக்கா கிளம்பிவிட்டாள். அவனுக்கும் பேரானந்தம்! பாரதியும் சந்தோஷமாகவே இருந்தாள். புதிய இடத்தை பார்க்க போகும் சந்தோஷம் அவள் முகத்தில் இருந்தது.
அவள் ஒரு முடிவு எடுத்திருந்தாள். தனக்கு பிடிக்கவில்லை என்றாலும் எதையும் சொல்லி அரவிந்தை கஷ்டப்படுத்தக் கூடாது என்பதில் தீர்க்கமாக இருந்தாள். அரவிந்த் சொன்ன ஒரு வருடம் அமெரிக்க வாழ்வை முழுதாக வாழ்ந்து பார்க்க வேண்டும் என்ற முடிவோடு அங்கு சென்றாள். அவனும் அவளை மகாராணியை போல் தாங்க வேண்டும் என்ற முடிவோடு அழைத்து சென்றான்.
அரவிந்தின் வீடு டியூப்லெக்ஸ் அமைப்பு கொண்டது. அதுபோலவே அங்கும் ஒரு வீடு வாங்கி இருந்தான். அது இந்தியர்கள் வாழும் பகுதி. பெரும்பாலான தமிழர்கள் அங்கு இருந்தார்கள். அதைத் தாண்டி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று மற்ற மொழி பேசும் சிலரும் அங்கு இருந்தனர். அவனுக்கு பல மொழி பேசும் தோழமைகளும் இருந்தனர். அவன் முன்பே தெரிவித்து இருந்ததால் வீட்டு சாவி அவர்களிடமே இருக்க, இவர்கள் இருவரும் செல்வதற்கு முன் அவர்கள் வீட்டை சுத்தம் செய்து வைத்திருந்தனர். இவர்களை வரவேற்கும் விதமாக வீட்டை அலங்காரமும் செய்து இருந்தனர்.
அரவிந்த் அவளை அழைத்துச் சென்ற பகுதி நியூயார்க் அருகில் இருந்தது. அவள் சந்தோஷமாக அவன் வீட்டிற்குள் காலடி எடுத்து வைத்தாள். பால்கனியை திறந்தாள். அங்கு மரங்களாக இருந்தது. அவள் ஊர் அவளுக்கு பசுமையாக தோன்றும். ஆனால் அதைவிட அங்கு பசுமையாக இருந்தது. அவளுக்கு அந்த இடம் மிகவும் பிடித்திருந்தது. வீடும் சுத்தமாக இருந்தது. அனைவரும் நன்றாக பேசினார்கள். முதல் நாள் அவளுக்கு தேவையான உணவை செய்து கொடுத்தார்கள். அவளுக்கு உண்மையில் ஆச்சரியமாக இருந்தது. ‘நண்பர்கள் இத்தனை உதவி செய்வார்களா?’ என்ற கேள்வி அவளை மலைப்புக்குள்ளாக்கியது. அரவிந்த் அவளின் சந்தோஷமான முகத்தை பார்த்து மனதில் குறித்துக் கொண்டான்.
அவள் பால்கனி வழியாகவே வெளியே பார்த்துக் கொண்டிருக்க, பின்னோடு வந்து அவளை அணைத்துக் கொண்டு அவள் தோளில் முகம் பதித்தான். “என்ன பாரதி அமெரிக்கா புடிச்சிருக்கா?” அவன் கேட்க, அவள் சந்தோஷமாக தலையசைத்தாள். அதன் பின் அவள் எதுவும் சொல்லவில்லை.
“என்ன பாரதி எதுவுமே சொல்லாம அமைதியா இருக்க?” அவன் கேட்க, “இங்க நாலு சீசன் இருக்காமே! ஸ்ப்ரிங், சம்மர், ஃபால், வின்டர் இது எல்லாத்தையும் பாத்துட்டு தான் நான் பேசுவேன்.” அவள் அவன் பக்கம் திரும்பி கைகளை மாலையாக அவன் தோளில் கோர்த்துக் கொண்டு கூற, அங்கு சுகமான காற்று வீசிக்கொண்டிருந்தது.
“பாரதி முதல்ல உனக்கு ஒர்க் பெர்மிட் இருக்காது. கொஞ்ச நாளைக்கு நீ வேலை பார்க்க வேண்டாம். அதுக்கப்புறம் உனக்கு ஒர்க் பெர்மிட் கிடைச்சிடும். நீயும் வேலைக்கு போகலாம்” அவன் கூற, அவள் சம்மதமாக தலையசைத்தாள்.
“பாரதி எனக்கு கொஞ்சம் வேலைகள் இருக்கு. நான் அந்த வேலையை முடித்ததும் உன்னை ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு இடத்துக்கு கூட்டிட்டு போறேன்” அவன் சொல்ல, அவள் கண்களில் ஆர்வம் மின்னியது.
அதன்பின் வேலை அவனை விழுங்கிக் கொண்டது. அவன் வாரத்தில் மூன்று நாட்கள் வீட்டில் இருந்து தான் வேலை செய்தான். இரண்டு நாட்கள் அலுவலகம் சென்றான். அவளை தனிமை சூழவில்லை. ஓரிரு நாட்கள் அவள் வெளியே செல்வது, கடைக்கு செல்வது என்று நேரத்தை கடத்தினாள்.
அவளுக்கு கார் ஓட்ட கற்றுக் கொடுத்தான். அவள் காரை எடுத்துக் கொண்டு கடைகளுக்கு சென்று வந்தாள். அங்கு ஓவன் மிக வசதியாக இருக்க, விதவிதமான கேக், குக்கீஸ் அனைத்தும் செய்ய ஆரம்பித்தாள்.
அங்கு அவளுக்கு புதிய நட்பு ஏற்பட்டது. அவன் அவளை நியூயார்க் டைம்ஸ் ஸஃவர் முழுவதும் சுற்றி காண்பித்தான். டைம்ஸ் ஸ்கொயர் நடுவில் நின்று கொண்டு கன்னத்தோடு கன்னம் இழைந்து ஒரு செல்பி எடுத்துக் கொண்டார்கள். அந்த செல்ஃபியை வீட்டில் அனைவருக்கும் அனுப்பி வைத்தாள். விஜயா அவ்வப்பொழுது இவர்களுடன் பேசுவதும் கேலி செய்வதும் உண்டு. அவர்களுக்குள் ஒரு அழகான நட்பு இருந்தது.
அவன் அவளை மற்றோரு வாரத்தில் நயாகரா நீர்வீழ்ச்சிக்கு அழைத்துச் சென்றான். அந்த கப்பலின் மீது ஓரமாக நின்று கொண்டு டைட்டானிக் போஸ் என்று புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள். அவன் கைவளைவில் அவள். அவள் சந்தோஷத்தை அவன் உள்வாங்கிக் கொண்டான். அவளின் மகிழ்ச்சியை அவன் மனதில் குறித்துக் கொண்டான்.
நீர்வீழ்ச்சி அருகே செல்கையில் நீர் முத்துக்கள் அவள் முகத்தில் வடிய, அவன் அவளை ரசித்தான். அவள் கன்னத்தில் இதழ் பதித்து, “ரொம்ப அழகா இருக்க பாரதி” என்றான்.
“எல்லாரும் பார்க்க போறாங்க” அவள் முகம் செம்மை கொண்டது. அவள் நாணத்தோடு விலக, “இங்க யாரும் பார்க்க மாட்டாங்க” அவளை தன்னோடு சேர்த்துக் கொண்டான்.
ஒவ்வொரு வாரமும் வெயில் காலத்தில் அருகே இருக்கும் நீர்வீழ்ச்சி, சின்ன சின்ன ஓடை, ஆறு , படகு சவாரி, பேரா கிளைடிங், பேரா சைலிங் என்று பல இடங்களுக்கு அழைத்துச் சென்றான். அவர்கள் நடுக்காட்டில் கேம்பிங் சென்றார்கள். ‘புலி வருமா?’ என்ற அவளும் கேலி செய்து கொண்டே அவன் எங்கும் அழைத்தாலும் சென்றாள்.
அதன் பின்னர் இருவரும் ஃப்ளாரிடா சென்றார்கள். புதுமண தம்பதி என்பதை எடுத்து உரைக்கும் விதமாக இருவரும் கைகோர்த்துக்கு கொண்டே சுற்றினார்கள். அனைத்து சவாரியிலும் ஏறினார்கள்.
“லாஸ் வேகாஸ் போகலாம்” என்று அவன் கூறும் பொழுது, “உண்மையிலேயே இந்த வருஷம் ரொம்ப சுத்திட்டோம். இது போதும். அடுத்த வருஷம் போலாமா?” என்று அவள் கூற, அவனும் சம்மதமாக தலையசைத்தான்.
“டிராவல் பண்ணி… டிராவல் பண்ணி எனக்கே டயர்ட் ஆகுது கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கலாமே” அவள் அவர்கள் சுற்றுலாவுக்கு கொஞ்சம் இடைவெளி கொடுத்தாள். அப்பொழுது அவர்களுக்கு, ஸ்பிரிங், சம்மர், ஃபால் என அனைத்தும் தாண்டி விண்டர் வந்தது. டிசம்பர் மாதம் குளிர் கொடூரமாக இருந்தது. அப்பொழுது அவனுக்கு கொஞ்சம் உடல் உபாதைகள் ஏற்பட்டன. இவள் நீராவி, சுக்கு காபி என்று செய்து கொண்டிருந்தாள். அவளுக்கும் அது தேவையாகத்தான் இருந்தது.
அதன் பின் ஸ்நொவ் ஃபால் . பனிக்கட்டி மிகவும் அழகாக இருந்தது. வாசலில் இருந்த பனிக்கட்டிக்கு இடையே அவர்கள் இருவரும் விதவிதமாக புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர். பாரதி நீளமான கவுன், ஜீன்ஸ் டிஷர்ட், வெள்ளை நிற பனிக்கிடையில் சிவப்பு நிற சேலை உடுத்தி அவள் தலைமுடி ஆங்காங்கே சிலும்ப பல புகைப்படங்கள் எடுத்துக் கொண்டாள். அவள் எடுத்த புகைப்படம் அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. அவளுக்கே பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும் போல இருந்தது. அரவிந்த் அவர்கள் இருவரும் எடுத்துக் கொண்ட படத்தை பெரிதாக்கினான்.
அவர்களுக்கு இடையே அழகாக நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தன. ஆனால் பாரதியின் முகத்தில் சிந்தனை ரேகைகள் நிறைந்திருந்தன. அரவிந்த அலுவலகத்திற்கு சென்று வரும் பொழுது அவள் அக்கம் பக்கத்துடன் பேசி பழகினாள். பல நண்பர்கள் இருந்தார்கள். ஒரு சில நாள் லேடீஸ், “கெட் டு கெதர்” என்று அவளும் வெளியே சென்று வந்தாள். அவள் அந்த இடத்திற்கு தன்னை தானே அனுசரித்துக் கொண்டது அவனுக்கு பிடித்தமான ஒன்றாக இருந்தது. அப்பொழுது அனைவரும் ஒரு மாலை நேரத்தில் குடும்பத்தோடு இணைந்து, “பாட் லக்” என்று கூறி, ஒன்றாக உணவு சாப்பிட சென்றார்கள்.
மாலை நேரம் என்பதால் அவர்கள் அனைவரும் உணவை முடித்துவிட்டு திரும்ப, அரவிந்தின் நண்பர்கள் அவனை அங்கே இருக்குமாறு செய்கை காட்டினர். அவர்கள் பேசியதை வைத்து அங்கு என்ன நடக்கப் போகிறது என்பதை அறிந்து கொண்ட பாரதிக்கு கோபம் ஏறியது.
அவள் அருகில் வந்த அரவிந்த், “பாரதி நீ வீட்டுக்கு போ. நான் அப்புறம் வரேன்.” என்றான். வழக்கத்துக்கு மாறாக அவள் பிடிவாதமாக, “இல்லை நான் போகமாட்டேன். நீங்க என் கூட வாங்க” அவள் கடும் கோபத்தில் பிடிவாதம் பிடித்தாள். அவள் செய்கை அவனுக்கு வினோதமாக இருந்தது.
வழக்கமாக அவன் சொன்னால் அவள் கேட்பாள். ஆனால், அன்று அவள் கேட்கவில்லை. “என்ன பாரதி?” அவன் கெஞ்சினான். “நீங்க வரலைன்னா, நான் இங்க இருந்து போக மாட்டேன்.” அவள் மீண்டும் பிடிவாதம் பிடிக்க, அவனுக்கு இப்பொழுது கோபம் வந்தது.
“நீ போ… நான் ரெண்டு நிமிஷத்துல, அவங்க கிட்ட சொல்லிட்டு வரேன்” அவன் சிடுசிடுக்க, “நான் இங்க நிக்கறேன். நீங்க சொல்லிட்டு வாங்க.” அவளும் சிடுசிடுக்க, “என்னனு சொல்றது?” அவன் பற்களை நறநறக்க, “அது உங்க பிரச்சனை” அவள் அங்கே அசையாமல் நிற்க, அவன் திரும்பி வந்ததும், இருவரும் வீட்டிற்கு சென்றனர்.
இருவரும் கோபத்தில் இருக்க, அவன் கூறிய சொல்லுக்கு அவள் பதில் கூற, முதல் சண்டை வந்தது.





சூப்பர் சூப்பர் ❤️