அத்தியாயம் – 28
28
இருவரும் வரும் வழியில் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. ‘பேசினால் சண்டை வரும்…’ என்று தெரிந்தே இருவரும் மௌனத்தை கடைபிடித்தனர்.
உள்ளே வந்த அவன், படாரென்று கதவை சாத்தினான். மடமடவென்று தண்ணீரை குடித்தான். கோபம் மட்டுபடும் அளவுக்கு தண்ணீரை குடித்தான். தன் தலையை பின்னே சாய்த்து கண்களை இறுக மூடி அமர்ந்தான். தன்னை நம்பி இங்கு வந்தவளை எந்தவிதத்திலும் காயப்படுத்திவிட கூடாது என்பதில் தெளிவாக இருந்தான்.
அவள் எந்த சிரத்தையும் எடுக்கவில்லை. அவள் அவளாகவே இருந்தாள். அமைதியாக இருந்தாள். “ஏன் பாரதி இப்படி பிடிவாதமா என்னை கூட்டிகிட்டு வந்த?” அவன் கேள்வி கூர்மையாக வந்து விழுந்தது. “நான் எப்ப பாரு உன் கூட தான் பேசிக்கிட்டே இருக்கணுமா? நான் என் ஃப்ரெண்ட்ஸ் கூட பேசிட்டு வரேன்னு தானே சொன்னேன்?” அவன் இப்பொழுது பொறுமையை இழுத்து பிடித்துக் கொண்டு கேட்க,
“நான் உங்களை உங்க பிரெண்ட்ஸ் கூட பேசக்கூடாதுன்னு சொல்லவே இல்லையே” அவள் தோளை குலுக்க, “அப்ப, ஏன் இப்படி என்னை அவசரமா கூப்பிட்டுட்டு வந்த?” அவன் சலிப்பாக கேட்க, “அதீத குளிர், உடம்புக்கு ஒத்துக்காது. அது மட்டுமில்லை அவங்க ட்ரிங்க்ஸ் பண்ண தானே போறாங்க. நீங்க எதுக்கு அங்க? அது தான் வர சொன்னேன்.” அவள் முகத்தை அசூயையோடு சுளித்தாள்.
“பாரதி, நாம இங்க இருக்க…கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கணும் டீச்சரம்மா. நமக்குன்னு இங்க யார் இருக்கா சொல்லு? பிரண்ட்ஸ் தானே? இப்படி பொசுக் பொசுக்குன்னு கிளம்பி வர கூடாது” அவன் அவளிடம் பொறுமையாக கூற, “நாம ஏன் இங்க இருக்கணும்? நாம இங்க இருக்க வேண்டாம்” அவள் தெளிவாக கூற, அவனுக்கு இப்பொழுது கோபம் வந்தது.
“நாம வந்து ஒரு வருஷம் ஆக போகுது. நீ இன்னும் இந்த பேச்சை விட போறதில்லையா?” அவன் சலிப்பாக கேட்க, “நான் உங்களுக்காக மட்டும் தான் இங்க இருக்கேன் அரவிந்த்.” அவள் இரவு உடைக்கு மாறி அங்கு வந்து அமர்ந்தாள்.
“அப்படி உனக்கு இங்க என்ன பிடிக்கலை பாரதி? நீ சந்தோஷமா தானே இருக்க?” அவன் கேட்க, “அத்தை மாமாவோட இருக்க முடியல… நம்ம ஸ்கூலுக்கு போக முடியல… அம்மா அப்பாவை பார்க்க முடியலை… இந்த மாதிரி நிறைய இருக்கு.” அவள் கூற, “நாம அடுத்த வருஷம் கண்டிப்பா போகலாம்.” அவன் கூற, அவளுக்கு தன் தாய் தந்தையின் நினைவில் கண்ணீர் வந்தது.
“உனக்காக நான் இருக்கேன். நீ இங்க சந்தோஷமா இல்லையா?” அவன் குரலில் வருத்தம் இருக்க, “யார் சொன்னா நான் சந்தோஷமா இல்லன்னு? நான் இங்க ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கேன் அரவிந்த். இந்த ஒரு வருஷம் நான் ரொம்ப சந்தோஷமா இருந்தேன். உங்க கூட இருக்கும்போது சந்தோஷம் இல்லாம இருக்குமா? நான் சந்தோஷமா தான் இருக்கேன். இருந்தாலும் ஒரு வெறுமை இருக்கத்தானே செய்யுது” அவள் அவன் தோளில் சாய்ந்துகொள்ள, அவன் முகம் வருத்தத்தில் நொடிந்து போனது.
அவள் அவன் முகத்தை கைகளில் ஏந்தி, “யாருக்காவது அமெரிக்கா பிடிக்காமல் இருக்குமா? அழகான நீர்வீழ்ச்சி, நல்ல பளபளன்னு டைம் ஸ்கொயர், நீல நிறத்துக்கு இடையில் ஸ்டாச்சு ஆஃப் லிபெர்ட்டி, வெள்ளை மாளிகை… இன்னும் நாலு தடவை இல்லை. ஆயிரம் மட்டும் பார்த்தாலும் கண்ணு போதாது. அங்கு இருக்கிற கூட்டத்தையும் அங்கு இருக்கிற கடைகளையும் பார்த்தாலே சந்தோஷமா இருக்கும். நான் கேட்டா நீங்க கூட்டிட்டு போகாமலா இருக்க போறீங்க? எனக்கு அமெரிக்கா ரொம்ப ரொம்ப பிடிக்கும்” அவள் புன்னகைத்தாள்.
“அப்புறம் ஏன் பாரதி ஊருக்கு போகணுமுன்னு சொல்ற?” அவன் சலிப்பாக கேட்க, “நீங்க ஒரு காலத்துல கனவுக்காக இங்க வந்தீங்க. ஆனா இப்ப நீங்க இங்க இருக்கிறதை ஸ்டேட்டஸ்ன்னு நினைக்கிறீங்க.” அவள் கூற, ‘நான் இங்க இருப்பதை பெருமைன்னு யோசிக்கிறேனோ?’ அவன் தடுமாற, ‘இல்லை, இவள் என்னை பேசி திசை மாற்றுகிறாள்’ அவன் அவள் பேச்சை ஒதுக்கினான்.
“எல்லா பண்டிகையையும் மிஸ் பண்றேன் அரவிந்த்.” அவன் கூற, “ஒர்க் லைப் பேலன்ஸ்ன்னு சொல்றீங்க. ஆனால், வேலையை தாண்டி இங்க எதுவும் இல்லாத ஃபீல்” அவள் பேச, அவன் முகத்தில் சிந்தனை ரேகைகள்.
“இங்க இருந்தா தான் நல்லா இருக்கும் அப்படிங்கிற மாயவலை. அந்த மாயவலையில் சிக்க எனக்கு விருப்பம் இல்லைங்க.”
“நம்ம நாட்டை விட்டுட்டு வாறதெல்லாம் தேசதுரோகமுன்னு நான் சொல்லலை. அது அவங்க விருப்பம். அவங்களுக்கு பிடிச்சிருக்கு. நான் என்னை பத்தி மட்டும் தான் பேசுறேன். இது பாரதியின் தனி விருப்பம். என்னைப் பொறுத்தவரை நிச்சயம் வேற நாடு போகணும், நிறைய கத்துக்கணும், வேலை பார்க்கணும். ஆனால், நம்ம நாட்டுக்கு திரும்பிடணும். பணத் தேவைக்காக வரது எல்லாம் சரி தான், நம்ம வாழ்க்கை தரத்தை உயர்த்துறது எல்லாம் சரி தான். ஆனால், எப்பேர்ப்பட்ட பணத்தேவையும் மூணு நாலு வருஷத்துல முடிஞ்சிருக்கும் அரவிந்த். அதுக்கு அப்புறம் எல்லாம் அவங்க ஆசை தானே அரவிந்த்?” அவள் கேட்க, “ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி” அந்த கூற்றின் உண்மை அறிந்தவன், அவள் பேச்சை அங்கு நிறுத்தினான்.
“உள்ளூரில் மட்டுமே இருந்து எல்லா விஷேஷத்தையும் கொண்டாடணும்னு சொல்ற அளவுக்கு நான் பத்தாம்பசலியும் இல்லை. அதே நேரத்துல, எனக்கு பணத்தேவையும் இல்லை, பேராசையும் இல்லை. தியாகங்களை சில வருஷங்கள் பண்ணலாம, ஆயுசுக்கும் என்னால பண்ண முடியாதுன்னு தோணுது. ஆனால், உங்க விருப்பம் தான் என் விருப்பம்” அவள் அவன் மடியில் படுத்து உறங்கினாள். அவன் அவள் தலை கோதினான். ‘நான் இவளை கஷ்டப்படுத்துகிறேனோ?’ அவன் மனசாட்சி அவனை இடித்துரைத்தது.
அவன் சிந்தனையை கலைக்கும் விதமாக அவன் அலைபேசிக்கு அழைப்பு வந்தது. “அரவிந்த், பாரதியோட அப்பாவுக்கு உடம்பு சரியில்லை. ஹார்ட் அட்டாக். உடனே ஆப்பரேஷன் பண்ணனும்னு சொல்லிட்டாங்க.” மோகன் அழைத்திருக்க, அவன் செய்வதறியாது திகைத்தான்.
“நான் இப்ப வர முடியாது அண்ணா. பாரதியை அனுப்பறேன்.” அவன் கூற, “பாரதி வர வரைக்கும் காத்திருக்க வேண்டாம்னு நினைக்குறோம் அரவிந்த். மாமா சீரியஸா இருக்காங்க.” அவன் கூற, “ஓ!” அவன் பேச்சை முடித்துக் கொண்டான்.
அவன் பாரதியை எழுப்பி விஷயத்தை கூற, அவள் திக்பிரமை பிடித்தவள் போல் அமர்ந்திருந்தாள். அவள் பேசவில்லை. “பாரதி…” அவன் அழைக்க, “நான் ஊருக்கு போகணும். உடனடியா போகணும்” அவள் கூற, “அண்ணா பார்த்துப்பான். நாம போகலாம். கொஞ்சம் பொறுமையா இரு.” அவன் கூற, “நான் ஊருக்கு போகணும்.” அவள் பிடிவாதமாக நின்றாள்.
அவன் அவளை தடுக்கவில்லை. அவன் விமான பயணசீட்டை மும்முரமாக ஏற்பாடு செய்ய முயற்சித்தான், கிடைக்கவில்லை. “பாரதி இங்க ஹெவி ஸ்நொவ். எல்லா பிளைட்டும் கான்செல்.” அவன் மென்று விழுங்க, “உன்னை எப்படி இந்த சூழ்நிலையில் அங்க தனியா அனுப்பறது?” அவர்கள் போராட்டத்தில், இரண்டு நாட்கள் ஓடியது.
“பாரதி ஆப்பரேஷன் நல்லபடியா முடிஞ்சிருச்சு. நீ தனியா எல்லாம் வர வேண்டாம், மாப்பிளை கூட வா. இங்க விஜயா, மாப்பிள்ளையோட அண்ணன் எல்லாரும் இருக்காங்க.” பூரணி மகளின் பாதுகாப்பை எண்ணி பேசினார்.
தன் தாயிடம் தலையை ஆட்டிவிட்டு, “நான் போகணும், எங்க அப்பாவை பார்க்கணும்.” அவள் அரவிந்திடம் பிடிவாதம் பிடிக்க, “உன்னை தனியா அனுப்ப முடியாது பாரதி. சாதாரண நாளில் போகலாம். எல்லா இடத்திலும் ஸ்நொவ். அங்கங்க பிளைட் கான்சல் ஆகுது. நீ தனியா தவிச்சு போய்டுவ.” அவன் அக்கறையோடு மறுப்பு தெரிவித்தான். “அப்ப, நீங்க வாங்க.” அவள் அவனை அழைக்க, “நம்ம விசா ப்ராசஸிங்ல இருக்கு. என்னால, இப்ப அங்க வர முடியாது. அங்க வந்து லாக் ஆகிட்டேன்னா என்னால் இப்ப திரும்ப வர முடியாது.” அவன் கூற, “உங்களுக்கு என்னை விட… உங்க குடும்பத்தை விட இந்த அமெரிக்க வாழ்க்கை தானே முக்கியம்?” அவள் இப்பொழுது வெடித்தாள்.
“அது தான் எல்லாம் சரியாகிடுச்சில்ல, மாமா நல்லயிட்டாங்க. ரெண்டு மூணு மாசத்தில எல்லாம் சரியாகிடும். அப்புறம் நாம்ம சேர்ந்து போய் பார்த்திட்டு வரலாம்.” அவன் கூற, “நீங்க வர வேண்டாம். நான் மட்டும் போயிட்டு வரேன்” அவள் கூற, “நீ போனாலும் அதே நிலை தான் பாரதி. விசா இல்லாமல் அங்க மாட்டிப்ப. பிரச்சனைனா போகலாம். அது தான் சரியாகிடுச்சில்ல?” அவன் கேட்க, “அப்ப, அங்க உயிர் போனா தான் நான் போகணும். நீங்களும் அப்ப தான் வருவீங்க? அப்படி தானே?” அவள் கேட்க, அவன் எதுவும் பேசாமல் நின்றான்.
“எல்லா முடிஞ்ச அப்புறம் போனா என்ன, போகலைனா என்ன?” அவள் கேட்க, “நீ தப்பா பேசுற பாரதி.” அவன் அவளை அதட்டினான்.
“இல்லைங்க, நீங்க வர வேண்டாம், நான் போறேன். இந்த ஸ்நொவ் பிரச்சனை முடிஞ்ச பிறகு நான் கிளம்புறேன்.” அவள் கூற, “நீ இப்ப திரும்ப வர முடியாது பாரதி.” அவன் கூற, “நான் வர்ற எண்ணத்தில் இல்லைங்க. நான் அங்கையும் நீங்க இங்கையும் இருக்கிறது தான் சரி. உங்களால எப்ப முடியுதோ அப்ப வாங்க. உங்க வீட்ல ரெண்டு பசங்க. நீங்க இல்லைனா, மோகன் அத்தான் பார்த்துப்பாங்க. எங்க வீட்டில் நான் ஒரே பொண்ணு. இப்படி வயிற்றில் நெருப்பை கட்டிக்கிட்டு என்னால இங்க இருக்க முடியாது. ப்ளீஸ்… என்னை விட்டுடுங்க. நான் எங்க அப்பாவை பார்க்கணும். நான் எங்க அம்மா அப்பா கூட இருக்கனும்.” அவள் கை எடுத்து கும்பிட்டு அழுதாள்.
அவன் நிலைமை சீரானதும் செல்வது போல் விமான பயணசீட்டு எடுத்து, சில நொடிகளில் அவள் அலைபேசிக்கு குறுஞ்செய்தியை அனுப்பினான்.
பத்து நாட்களில் சிதம்பரத்தின் உடல் நன்றாக தேறி இருந்தது. அவர் மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு வந்துவிட்டார். அவள் தினமும் பெற்றோரிடம் பேசிக்கொண்டிருந்தாள். அவர்கள் ஒரு பிரச்சனையையும் இல்லை என்றும், அவளை வர வேண்டாம் என்றும் கூறினார்.
அரவிந்துக்கும் அதே எண்ணம் தான். அதை பலவிதமாக பாரதியிடம் சொல்லிப் பார்த்தான். ஏற்கனவே குழப்பத்தில் இருந்த பாரதி, இந்த சம்பவத்திற்கு பின் தெளிவாக முடிவு எடுத்துவிட்டாள்.
விடியற்காலை நேரம், விமான நிலையம். பெற்றோரின் மேல் உள்ள பாசத்தில் முடிவை எடுத்துவிட்டாள். இப்பொழுது அவன் மேல் அவள் வைத்த பாசம் அவளை வதைத்தது. அவள் அவன் முகத்தையே கண்களில் நீரோடு பார்த்துக் கொண்டிருந்தாள். ‘ஒற்றை வார்த்தை… இங்க இருக்கேனு சொல்லமாட்டாளா? இப்ப அவ எதுக்கு அங்க போகணும்? நான் தான் சேர்ந்து போய் பார்த்துட்டு வரலாமுன்னு சொல்றேனே. அதுவும் ஆளுக்கு ஒரு பக்கம் இருக்கனும்னு சொல்றா. இவளை இங்க எப்படி திருப்பி கூட்டிகிட்டு வர்றது?’ அவன் தவியாய் தவித்தான்.
‘ஒற்றை வார்த்தை… நான் வரேன்னு சொல்ல மாட்டாங்களா… எல்லாத்தையும் தூக்கி போட்டுட்டு வர வேண்டியது தானே? இவங்களுக்கு அங்க என்ன குறை?’ அவள் அவனை ஏக்கமாக பார்த்தாள்.
நேரம் நெருங்க நெருங்க, அவன் சிலையாய் சமைந்து நின்றான். ‘அவள் பேசினால், டிக்கெட் போடணுமா? ஒரு ரெண்டு மாசம் அவளை இங்க இருக்கவச்சிட்டா எங்க விசா வந்திரும். ரெண்டு பெரும் சேர்ந்து போயிட்டு வந்திடலாம்.’ தன்னை தானே நொந்து கொண்டான்.
இருவரும் சில நாட்களாக சுமூகமாக பேசிக்கொள்ளவே இல்லை. அவள் அவனை நெருங்கினாள். அவன் சுவாசக் காற்றில் அவள், “ஓ” என்று கதற, “பாரதி…” அவன் அவளை இறுக அணைத்துக் கொண்டான். ‘போகலைனு ஒத்த வாரத்தை சொல்லுடி. சேர்ந்து போகலாமுன்னு சொல்லு’ அவன் உள்ளம் கெஞ்சியது.
“எப்ப டிக்கெட் எடுத்து கொடுப்பான், போலாம்னு காத்திருந்தியாடீ?” அவன் அவள் முகம் நிமிர்த்தி கேட்க, “எனக்கு எல்லார் கூடவும் இருங்கனும் அரவிந்த். நீங்களும் அங்க வந்துடுங்க” அவள் கண்ணீரோடு கூற, “சரி, அழாத… அழுதா, நீ ரொம்ப கேவலமா இருக்க. நீ கிளம்பும் பொழுது இந்த முகத்தை பார்த்தால் எப்படி?” அவன் அவள் முகத்தை துடைத்து விட்டான். ஆனால், அவள் வேண்டுதலுக்கு ஒப்பவில்லை. அவள் எம்பி அவன் கன்னத்தில் இதழ் பதித்து, அவனை திரும்பியும் பார்க்காமல் மடமடவென்று உள்ளே சென்றாள். இனி தன் வாழ்வு எப்படி இருக்கும் என்று அவளுக்கு தெரியவில்லை. அவன் அந்த மாபெரும் நாட்டில் தனிமையாக நின்றான்.
அவள் செய்தது சரியா?
அவளுக்கு தெரியவில்லை!
அவன் செய்கிறது சரியா?
அவனுக்கு தெரியவில்லை!
காலம் இவர்களை ஒன்று சேர்க்குமா?
பாவம் அதற்கும் தெரியவில்லை!





சூப்பர் சூப்பர் ❤️