அத்தியாயம் – 4
4
அதே நேரம் சைந்தவி, தன் அறைக்குள் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டே இருந்தாள். அவள் சிந்தனை எங்கெங்கோ சென்றது. சில நொடிகளில், சிந்திக்கவும் திறன் அற்றவளாக, அவள் சிந்தனை இப்பொழுது வருணை சுற்றி வந்தது.
‘வருண் அண்ணா முன்னாடி மாதிரியே இல்லை. அவன் ஒழுங்கா கிளாசுக்கு வரதே இல்ல. ஸ்கூல்ல டீச்சர்ஸ் அம்மா அப்பா கிட்ட சொல்றாங்க. ஆனாலும், யாரும் கண்டுக்கறதில்லை. நான் என்ன கேட்டாலும் வருண் அண்ணா என்னை அடிக்கிறான். கிள்ளி விட்டுடுறான். இவனை என்ன செய்யறது? பாட்டி தாத்தா கிட்ட சொல்லலாமா?” எண்ணியபடி அறையிலிருந்து வர எத்தனித்தவள், ‘சொல்ல வேண்டாம்’ என்று முடிவெடுத்து, அறைக்குள் சென்று மீண்டும் சிந்திக்க ஆரம்பித்தாள்.
‘பாட்டி தாத்தா கிட்ட சொன்னா பிரச்சனை பெருசாகும். பாட்டி உடனே அம்மாவை குறை சொல்லுவாங்க. பாட்டிக்கும் அம்மாக்கும் சண்டை வரும். அப்பா அம்மா கிட்ட சண்டை போடுவாங்க. அப்புறம் டைவர்ஸ் அது இதுன்னு பேசுவாங்க.’ என்று தன்னை தானே சமாதானம் செய்து கொண்டு சைந்தவி மௌனமாக படுத்துக் கொண்டாள். அதன்பின் அவளை தனிமை சூழ்ந்து கொண்டது.
‘முன்னாடி எல்லாம் எனக்கு படிக்க பிடிக்கும். இப்ப படிக்கவும் பிடிக்கல. தனியா இருக்கிற மாதிரி இருக்கு. எப்ப பார்த்தாலும் படிக்க முடியாது. முன்னாடிலாம் வருண் அண்ணா என்கிட்ட நல்லா விளையாடுவான். இப்ப அண்ணா என்கிட்ட விளையாடுறதே இல்ல.’ என்று எண்ணியபடி, பாட்டி தாத்தா அருகே சென்று அமர்ந்தாள்.
அவளை சமாதானம் செய்வது போல் ஏதேதோ பேசினர். ஆனால் அவள் மனம் அவர்கள் பேச்சில் ஈடுபாடு கொள்ளவில்லை. ‘இந்த பாட்டி தாத்தா பேசறது கொஞ்ச நேரம் நல்லா இருக்கு.’ அவள் எண்ணும் பொழுதே, அவள் எண்ணத்தை புரிந்து கொண்டவர் போல, “வாடா நம்ம விளையாடலாமா?” என்று கேட்க, சைந்தவி தலையை அசைத்து, தாத்தாவுடன் கொஞ்ச நேரம் விளையாடினாள். அதன்பின் பாட்டி அவளை யோசனையாக பார்த்து, “சைந்தவி, வருண் எங்கன்னு தெரியுமா? இவ்வளவு நேரமாகியும் வரல” அவர் கேட்க, சைந்தவிக்கு கை கால்கள் நடுங்கியது.
‘அச்சச்சோ! பாட்டி கேட்டா அண்ணா டியூஷன் போயிருக்கேன்னு சொல்ல சொல்லி இருக்கான். ஆனா அவன் டியூஷனும் போகல, இதை நம்ம சொன்னா அண்ணா நம்மளை அடிப்பான். சொல்லலனா பிரச்சனையாகுமே.’ சைந்தவிக்கு பதட்டம் ஏறியது. கிடுகிடுவென்று அவள் கை கால் விரைத்து போனது. ‘இது ஒரு நாள் ரெண்டு நாள் பிரச்சனை இல்ல. இது தொடர்ந்து நடக்குதே ஐயையோ ஐயையோ!’ என்று பதட்டமானாள்.
“ஒன்னும் இல்ல பாட்டி… ஒன்னும் இல்ல பாட்டி…” அவள் பதட்டமடைய, “என்ன ஆச்சு சைந்தவி… நான் ஒண்ணுமே கேட்கலையே” பாட்டி, அவளை சமாதானம் செய்ய, ‘பாட்டிக்கு தெரிஞ்சா அம்மா கிட்ட கேப்பாங்க. பிரச்சனை வந்துடுமே… அப்படின்னா நம்ம வந்து… நம்ம ரூமுக்குள்ள போய் இருந்துக்கலாம். யாரும் நம்ம கிட்ட எந்த கேள்வியும் கேட்க மாட்டாங்க.’ அவள் தன் அறைக்குள் சென்று முடங்கி கொண்டாள்.
‘அம்மா வருவாங்களா? அம்மா எப்ப வருவாங்க? அம்மாகிட்ட சொல்லலாம். ஆனா அம்மா அதுக்கு நம்மளை என்ன சொல்லுவாங்க? அண்ணன் அடிப்பானோ?’ என்று தனக்குள் பயந்தவள், மௌனமாக கண்ணீர் சிந்த ஆரம்பித்தாள்.
ஜன்னல் வழியாக தாயின் வருகைக்காக காத்திருந்தாள். அவள் தாயின் வருகை நேரம் தாமதம் ஆகிக்கொண்டே இருந்தது. அவள் அம்மாவுக்கு அழைக்க, அவள் அழைப்பை ஏற்கவில்லை.
சைந்தவி மீண்டும் அழைக்க, “சைந்தவி, எதுக்கு இப்ப கூப்பிடுற? இப்ப கஸ்டமெர்ஸ் வருவாங்க. அம்மா பிஸியா இருப்பேன்னு தெரியும்ல? நான் அப்புறம் பேசுறேன்…” சட்டென்று அவள் பேச்சை முடித்துக் கொண்டாள்.
யாரிடமும் எதுவும் சொல்ல முடியாமல் அவள் வருணுக்காக காத்திருந்தாள். அவனும் வரவில்லை. நேரம் செல்ல செல்ல இருட்டியது. வெளியே இருந்து அவள் பாட்டி அவளை அழைத்துக்கொண்டே இருந்தார். நித்தியகல்யாணி எத்தனை முறை அழைத்தும் அவள் உண்ண வரவே இல்லை. அவள் உடல் சில்லிட ஆரம்பித்தது. அவள் தூங்கினாளா இல்லை மயங்கினாளா என்று தெரியவில்லை.
பல மணித்துளிகள் கழித்து விஜயா திரும்பினாள். அவர்கள் அறையின் கதவை தட்டி பார்க்க அது திறக்கவில்லை. அதன் பின் சாவியை கொண்டு திறந்தால் அங்கு மயங்கிய நிலையில் இருந்தாள் சைந்தவி.
“பேத்தியை கூட பார்க்காமல் என்ன பண்றீங்க? பிள்ளை இப்படி பசியோட தூங்குது. நீங்க அப்படியே விட்டுட்டீங்க.” விஜயா தன் மகளை எழுப்ப, அவள் எழும்பவில்லை. விஜயா ஆர்ப்பாட்டம் செய்ய ஆரம்பிக்க, அங்கு சைந்தவி, வருணனின் தந்தையான மோகன் வந்தான்.
“வருண் எங்கே?” என்று அவன் கேட்க, அதற்கும் அங்கு பதில் இல்லை. மகன் இன்னும் வரவில்லை. சைந்தவியும் எழும்பவில்லை. விஜயாவுக்கு பதட்டம் அதிகரித்தது. விஜயா கத்திக் கொண்டிருக்க, நித்தியகல்யாணி தன் பேத்தியின் அருகே வந்து எழுப்ப, அவருக்கு சூழ்நிலை புரிந்தது.
சிவகுரு தன் மனைவியின் முகம் பார்த்தார். அவருக்கும் சூழ்நிலை புரிய ஆரம்பித்தது. விஜயாவும் மோகனும் சண்டையிட ஆரம்பித்தனர். அங்கு அவர்கள் சத்தம் மேலே எழும்பியது. “எல்லாரும் அப்புறம் பேசுங்க. புள்ள மயங்கி இருக்கு. ஹாஸ்பிடல் கூட்டிட்டு போகணும்.” சிவகுரு சத்தமிட, அங்கு அமைதி நிலவியது. மோகன் தன் மகளை தோளில் போட்டுக்கொண்டு காரை நோக்கி விரைந்தான்.
***
அதே நேரம் அரவிந்த் காஃபி ஷாப்பில், ‘கோல்ட் காபி நல்லாருக்கு…’ ரசித்துக் குடித்து கொண்டிருந்தான். அவன் எதிரே ரோசாப்பூ நிறத்தில் பொம்மை போல் வடிவாய் ஒரு பெண் வந்து அமர்ந்தாள்.
“ஹாய் ரீட்டா…” அவன் புன்னகைக்க, அவள் அவனிடம் கரம் நீட்ட, அவன் கை குலுக்கினான். பற்றி கொண்ட கைகளை விடாமல், “அரவிந்த், நாம டேட் பண்ணலாமா?” அவள் கேட்க, அவன் அவளை ஆழமாக பார்த்தான்.
“டேட் பண்ணுவோம். ஒத்து போகலைனா பிரிஞ்சிடலாம்.” அவள் எளிதாக கூற, ‘எனக்கு என் கையை பிடித்தால்… என்னைக்கும் என் கூடவே இருக்கனும். பிரியற எண்ணமே இருக்க கூடாது’ அவன் அவளை மெளனமாக பார்க்க, “என்ன சொல்ற அரவிந்த்?” அவன் அவள் பதிலுக்காக காத்து நிற்க, “சாரி ரீட்டா. நாம்ம நல்ல நண்பர்கள். இப்படியே இருப்போம். டேட், லவ் இதெல்லாம் வேண்டாம்.” அவன் அவள் கையில் தட்டி கொடுத்து, தன் கையை தன் பக்கம் எடுத்துக் கொண்டான்.
“யாரையும் லவ் பண்றியா?” ரீட்டா தனக்குள் ஏற்பட்ட ஏமாற்றத்தை மறைத்துக் கொண்டு கேட்க, “இல்லை…” மறுப்பாக தலையசைத்தான்.
“பார்க்க ஹீரோ மாதிரி இருக்க, கண்டிப்பா யாரவது ப்ரொபோஸ் பண்ணிருப்பாங்க.” ரீட்டா கேலி போல் பேச்சை வளர்க்க, அவன் பதில் எதுவும் கூறவில்லை.
“எனக்கு மேரேஜ், லவ் எல்லாம் செட் ஆகுமானே தெரியலை. எனக்கு இப்ப அந்த எண்ணம் எல்லாம் இல்லை. வாழ்க்கையில் நிறைய சம்பாதிக்கணும். சாதிக்கணும்.” அவன் அவளிடம் கூறினாலும், அவன் சிந்தனை வேறு திக்கில் சென்றது.
‘நான் யோசிக்கற மாதிரியே எனக்கு வர போறவளும் யோசிக்கணும். நான் செய்யறதெல்லாம் அவளுக்கு பிடிக்கணும். எனக்கு அவ செய்றதெல்லாம் பிடிக்கணும். எங்க ரெண்டு பேரோட கருத்தும் ஒன்னு போல இருக்கனும்… அப்படிப்பட்ட பொண்ணு கூட தான் நான் வாழுவேன்.’ அவன் சிந்திக்க, “என்ன யோசனை பலமா இருக்கு? என்னை பத்தியா?” ரீட்டா கண்களில் ஆர்வம் மின்ன, “நீ ஆபிஸ் கிளம்பு” அவன் அவளை விரட்டினான்.
ரீட்டா, அங்கிருந்து கிளம்ப, அவனுள் மெல்லிய ஆசை எட்டி பார்த்தது. ‘அம்மாவும் கல்யாணம்… கல்யாணம்னு சொல்றாங்க. பேசாம கல்யாணம் பண்ணிப்போமா? அப்படி பண்ணினா…’ அவன் எண்ணம் அவன் முகத்தில் புன்முறுவலை கொண்டு வந்தது.
‘என் சிந்தையும் அவள் சிந்தையும்
ஒரு சேர பயணிக்க வேண்டும்
என் சொல்லும் அவள் சொல்லும்
ஒரு சேர அவதானிக்க வேண்டும்
நான் அவள் கரம் பிடித்த நாள் முதல்
ஒவ்வொரு நொடியும் காதல்
என் வாழ்வில் இனிக்க வேண்டும்..’
“லைஃப் ஷூட் பீ ரொமான்டிக்” அவன் இதழ்கள் முணுமுணுக்க, ‘கணவன் சொல் கேட்டு அப்படியே நடக்கும் மனைவியை எல்லாம் நான் இன்னும் படைக்கவே இல்லையே?’ அந்த கடவுள் சிரித்துக் கொண்டார்.





மகள் மயங்கி விட்டாள் அதை பற்றிய கவலை இல்லாமல் சண்டை பிடிக்கும் பெற்றோர்கள் .