அத்தியாயம் – 5
5
பாரதி மறுநாள் பள்ளிக்கு சென்றாள். அவள் கண்கள் சைந்தவியை தேடியது. அவளை காணவில்லை. ‘சரி வருணாவது வந்திருக்கிறானா?” என்று அவள் எண்ணம் ஓடியது. அவள் வேகமாக வருணின் வகுப்பறை நோக்கி நடந்து சென்றாள். வருணை அங்கு காணவில்லை. அவள் மனம் படபடத்தது.
வருணின் ஆசிரியரிடம் சென்றாள். “வருண் இன்னைக்கு வந்தானா?” அவள் கேட்க, வருணின் ஆசிரியரோ, “வருண் இன்னைக்கு வரல, இன்னைக்கு மட்டுமா… அவன் என்னைக்கு தான் வந்து இருக்கான்?” அவர் அசட்டையாகவே கூறினார். “அவங்க பேரண்ட்ஸ் கிட்ட பல தடவை சொல்லிட்டேன், அவங்க கண்டுக்கிற மாதிரியே தெரியல.” அவர் கடுப்பாகவே கூறினார்.
“சரி சரி, விடுங்க. நான் பாத்துக்குறேன்.” பாரதி தன் வகுப்பறை நோக்கி செல்ல, வருணின் ஆசிரியரோ, “பாரதி நீங்க எதுக்கு எல்லா வேலையும் உங்க வேலை மாதிரியே இழுத்து போட்டு செய்றீங்க? உங்க கிளாசுக்கு என்ன வேலையோ அதை மட்டும் பண்ணுங்க” அவர் கூற, பாரதி தலையசைத்தபடி செல்ல, அங்கு தலைமையாசிரியர் வந்தார்.
“மத்த டீச்சர்ஸ் சொல்றதெல்லாம் கேட்டு நீங்க குழப்பிக்காதீங்க. நீங்க இப்படியே இருங்க.” அவர் சிரித்த முகமாக கூற, அவள் சிரித்துக் கொண்டாள். “சிவகுரு சார் சொல்லிருக்காங்க, பெரும்பாலான டீச்சர்ஸ் வருவாங்க, அவங்க கிளாஸ் வேலைய பாத்துட்டு போயிடுவாங்க. ஆனால் பாரதி அப்படி கிடையாது. எல்லா குழந்தைங்க மேலையும் அக்கறையா இருப்பாங்க.
உங்களுக்கு என்ன உதவி வேணும்னாலும் பாரதி கிட்ட கேளுங்க அப்படின்னு சிவகுரு சார் சொல்லி இருக்காங்க. அப்படி சொல்றது ஒரு சாதாரண விஷயம் கிடையாது. இங்க வந்து கொஞ்சம் வருஷத்திலேயே நீங்க இப்படி நல்ல பேர் வாங்கி இருக்கீங்க. அப்படின்னா அது உங்களுடைய உழைப்புக்கும் சின்சியாரிட்டிக்கும் கிடைத்த அங்கீகாரம். நீங்க அப்படியே இருங்க.” அவர் பாரதியிடம் கூற, அவரிடம் ஆமோதிப்பாக தலையசைத்து தன் வகுப்பறைக்கு சென்ற பாரதி பாடம் நடத்த ஆரம்பித்தாள்.
சைந்தவி மருத்துவமனையில் இருக்கிறாள் என்ற செய்தி அவளை எட்டியது. “சைந்தவியை பார்க்க ஹாஸ்பிடல் போவோமா?” என்று அவள் வினவ, “வேண்டாம் பாரதி. அங்க போனா, நிறைய கேள்வி வரும்.” மற்ற ஆசிரியர்கள் வர மறுத்து விட, பாரதி தன் வீட்டிற்கு சென்றுவிட்டாள்.
வீட்டிற்கு சென்றவுடன் அவள் மனம் அவளை பாடாய்ப்படுத்தியது. ‘இன்னைக்கு நம்ம சைந்தவியை போய் பார்த்து இருக்கணும். இந்த ஸ்கூல்ல இருக்க ஒவ்வொரு ஸ்டூடண்டும் என் பொறுப்பு. நான் ஒன் ஆஃப் தி கவுன்சிலர். மத்தவங்க எல்லாரும் போகலைனாலும் பரவால்லை. ஆனால், நான் கண்டிப்பா போய் இருக்கணும்.’
அவள் மனசாட்சி அவளை குற்றம் சாட்டியது. அன்று நேரம் இரவை எட்டிடடவே அவள் மருத்துவமனை செல்லவில்லை. மறுநாள் மாலை வீட்டுக்கு போவதற்கு முன், ‘மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்.’ என்று முடிவு எடுத்துக் கொண்டாள்.
வீட்டிற்கு நேராக சென்ற பாரதி, “அப்பா அந்த சைந்தவி பொண்ணு இன்னும் ஹாஸ்பிடல்ல தான் இருக்கா. இன்னும் வீட்டுக்கு போகல. எனக்கு அவளை பார்க்கணும்.” தன் தந்தை முன் நின்றாள்.
உடனே அவள் தாய் பூரணி, “அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். சும்மா அங்கெல்லாம் போக வேண்டாம். நீ எதுக்கு அங்கு போகணும்? ஸ்கூலுக்கு போனோமா, பாடம் நடத்தினோமோ அதோட வீட்டுக்கு வந்தோமானு இருக்கணும்.” அவள் தன் கணவன் முன் பிடிவாதமாக நின்றார்.
தன் மகளின் வேண்டுதலுக்கு செவி சாய்ப்பது போல அவர் பார்க்க, “அதெல்லாம் வேண்டாங்க… ஸ்கூல் விஷயம் ஸ்கூலோட முடியட்டுமே? எதுக்கு வீடு வரைக்கும். இது தேவை இல்லாத வேலை.” பூரணி மறுப்பு தெரிவித்தாள்.
“இல்ல பூரணி, நமக்கு சிவகுரு ஐயாவையும் நல்லா தெரியும். அவர் பையன் மோகனையும் நல்லா தெரியும். அது மட்டும் இல்லாம சின்னவர் ஊருக்கு வந்து இருக்காருன்னு வேற சொல்லிருக்காங்க. ஏற்கனவே நான் சிவகுரு ஐயாவை உடம்பு சரியில்லைன்னு போய் பார்க்கணும் நினைச்சுக்கிட்டு இருந்தேன். அதனால இப்படியே பேத்திய காரணம் காட்டி அவரையும் பார்த்து பேசிட்டு அவங்க பிள்ளைகளையும் பார்த்துட்டு வந்துடலாம்.” அவர் கூற,
“நீங்க போயிட்டு வாங்க. பாரதி எதுக்கு?” அவர் கேட்க, “பாரதியும் போகணுமுன்னு விருப்பப்படுறா. நாம என்ன சண்டைகாரங்களா, போகாம இருக்கிறதுக்கு! பொண்ணு வர்றதில்ல என்ன இருக்கு?” அவர் சட்டம் பேச, “நான் என்ன சண்டைன்னா சொன்னேன். நமக்கு எதுக்கு ஊர் விவகாரம்? அவங்க பெரிய இடம் வேற… வயசு பெண்ணை அங்க எதுக்குன்னு நினைச்சேன். வேலைக்கு போறது பரவால்லை. அவங்க வீட்டுக்கு எதுக்கு?” பூரணி யோசனையாக கூற, “வீட்டுக்கெல்லாம் கூட்டிட்டு போகலை. ஹாஸ்பத்திரிக்கு தானே. நானும் பாரதியும் போய் பாத்துட்டு வந்திடறோம்.” கூறிவிட்டு இருவரும் மருத்துவமனைக்கு சென்றனர்.
சைந்தவி நன்கு தேறி இருந்தாள். அவள் முகத்தில் பெரும் மகிழ்ச்சி இருந்தது. பாரதியை பார்த்து, “மிஸ்…” என்று சந்தோஷமாக சிரித்தாள்.
அவள் அருகே சென்ற பாரதி அவள் கன்னத்தை பிடித்து கொஞ்சினாள். “எப்படி இருக்க சைந்தவி?” அவள் கேட்க, “மிஸ்… நான் நல்லா இருக்கேன்.” அவள் சிரிக்க, “இப்பதான் எங்க சைந்தவி பழைய மாதிரி சிரிக்கிறா” என்று அவள் குழந்தையை கொஞ்ச, சைந்தவி மீண்டும் புன்னகைத்தாள். பாரதிக்கு மன நிறைவாக இருந்தது. அப்பொழுது அவள் தந்தையும் சிவகுருவும் பேசிக்கொண்டிருந்தனர். விஜயாவும் மோகனும் அங்கு இல்லை. வருணும் அங்கு இல்லை.
“வருண் எங்க?” அவள் வினவ, “அண்ணா அம்மா அப்பா கூட இருக்கான்” சைந்தவியின் பதில் பளிச் என்று வர, அவள் தலையசைத்துக் கொண்டாள். “அம்மாவும் அப்பாவும் இவ்வளவு நேரம் என் கூட தான் இருந்தாங்க.” உற்சாகம் பீறிட சைந்தவி அவளாகவே கூற, அவள் குழந்தையின் சந்தோஷத்தை மனதில் குறித்துக் கொண்டாள்.
“எங்க சித்தப்பாவும் வந்திருக்காங்க.” சைந்தவி கூற, அப்பொழுது தான் அவள் அந்த அறையின் ஓரத்தில் இருந்த அவனை பார்த்தாள்.
“அரவிந்த் சித்தப்பா.” சைந்தவி கைநீட்ட, அவன் கண்களோ அவளை கூர்மையாக அளவிட்டு கொண்டிருந்தது.
பள்ளியில் சந்தித்திருந்தால், ‘குட் ஈவினிங் சார்…’ என்று முகமனோடு ஆரம்பித்திருப்பாள். ஆனால், இப்பொழுது அவனை பார்த்து புன்னகைத்து தலையசைக்க, அவனும் அதே புன்னகையை பதிலாக கொடுத்தான்.
இரு புன்னகையும் என்றும் நிலைக்குமா என்று அந்த புன்னகையே புன்னகைத்துக் கொண்டது.
மறுநாள் காலையில், பாரதி பள்ளிக்குள் நுழைந்தாள். “பாரதி உனக்கு ஒரு விஷயம் தெரியுமா இன்னைக்கு சிவகுரு ஐயாவோட சின்ன பையன் வந்திருக்காங்க போல” என்று அவள் பள்ளி ஆசிரியை தோழி பாரதியின் காதில் முணுமுணுத்தாள்.
“அது என்ன சின்ன பையன், ரொம்ப சின்ன பையனோ?” என்று பாரதி இப்பொழுது குலுங்கி சிரித்தாள். “உனக்கு எல்லாமே ஒரே விளையாட்டா இருக்கு. எல்லாரும் சின்ன பையன்… சின்ன பையன்ன்னு சொன்னாங்க அதனால நானும் அதையே சொன்னேன் அதுக்காக அவர் என்ன ரொம்ப குட்டி பையனா?” என்று அவள் தோழி இப்பொழுது சிடுசிடுத்தாள்.
அவள் மீண்டும் தொடர்ந்தாள். “உனக்கு ஒரு விஷயம் தெரியுமா? அவர் அமெரிக்காவில் இருந்து ஒரேடியா இங்க வந்துட்டாராம். அவர்தான் இனிமேல் நமக்கு கரஸ்பாண்டான்ட். அவர் பேரு அரவிந்த் சார். இந்த சார் தான் எல்லாமே பார்த்துப்பாங்களாம். இவர் என்ன என்ன ரூல்ஸ் எல்லாம் போடுவாரா?” என்று அவள் தோழி புலம்பும் பொழுதே, நினைவு வந்தவளாக, “பார்க்க ஹீரோ கணக்கா இருக்காருன்னும் சொன்னாங்க.” அவள் தோழி கூற, ‘அப்படி எந்த ஹீரோ மாதிரியும் எனக்கு தோணலியே?’ நேற்று பார்த்தவனை மனதில் அசை போட்டுக் கொண்டாள் பாரதி.
காலையில் அவனிடமிருந்து அவளுக்கு அழைப்பு வந்தது. “மிஸ்…” அவன் நிறுத்த, “மிஸ் பாரதி” என்றாள் அவள் கம்பீரமாக.
“உட்காருங்க” அவன் நாற்காலியை காட்ட, அவள் அமர்ந்து அவன் முகம் பார்த்தாள். அவன் எந்த சுற்றிவளைப்பும் இல்லாமல் நேரடியாக விஷயத்திற்கு வந்தான். “நான் இன்னும் கொஞ்ச நாள் இந்தியாவில் இருப்பேன். அப்பா, உங்களை பத்தி சொன்னாங்க. ப்ரின்ஸிபல் மேம் புதுசுனு சொன்னாங்க. அவங்க கிட்ட வந்ததும் பேசிட்டேன். மத்த பிசினெஸ் எல்லாம் அண்ணா பார்த்துகிறது உங்களுக்கு தெரியும்னு சொன்னாங்க. அப்பா, தான் ஸ்கூலை பார்த்துக்கிட்டாங்க. இப்ப உடம்பு முடியாதலா அப்பா வர்றதில்லை. கொஞ்ச நாள் நான் ஸ்கூல் பொறுப்பை எடுத்துக்கலாம்னு இருக்கேன்.” அவன் கூற, “நல்ல விஷயம் சார்.” அவள் கூற, அவன் தலையசைத்துக் கொண்டான்.
“எனக்கு இந்த இந்தியன் சிஸ்டமே பிடிக்கல. நிறைய மாத்தணும்.” அவன் கூற, அவள் அவனை யோசனையாக பார்த்தாள்.
“நீங்க என்ன நினைக்கறீங்க?” அவன் கேட்க, அவன் கூற்றே அவளுக்கு பிடிக்கவில்லை. இதை எப்படி அவள் சொல்ல என்று அவள் மௌனமாக இருக்க, “நீங்க என்ன நினைக்கறீங்கன்னு கேட்டேன்?” அவன் அழுத்தமாக கேட்க, “உங்களுக்கு எது பிடிக்கலைன்னு நீங்க சொல்லவே இல்லையே சார். அப்புறம் தானே நான் ஏதாவது நினைக்க முடியும்.” அவள் இன்முகமாக கூற, அவன் அவளை கூர்மையாக பார்த்தான்.
“அதே மாதிரி நீங்க சொல்றதை மட்டுமே வச்சி எல்லாத்தயும் மாத்திட முடியாது சார். அனுபவம் வாய்ந்த டீச்சர்ஸ் இருக்காங்க. எல்லார் கிட்டயும் கேட்டு தான் ஒரு முடிவு பண்ணனும்.” அவள் தன்மையாக கூற, அவள் அமைதியாகவே எதிர்ப்பு தெரிவித்திருந்தாலும் அவள் எதிர்ப்பு தெரிவித்தது அவனுக்கு கோபத்தை உண்டு பண்ணியது.
அவன் மௌனமாக இருக்க, “அது மட்டுமில்லை சார். நீங்க சொல்றது நல்லதாவே இருந்தாலும் குழந்தைங்க ஏத்துப்பாங்களானு பார்த்து மெதுவா தான் பண்ண முடியும் சார். ஆனால், நாம எல்லா டீச்சர்ஸ் கிட்டயும் மீட்டிங் வச்சி பேசலாம் சார்.” அவள் கூற, “உங்களுக்கு குழந்தை மேல அவ்வளவு அக்கறையா? அப்படி காட்டிக்குவீங்க போல?” அவன் இப்பொழுது குத்தலாக கேட்க, அவள் அவனை புரியாமல் பார்த்தாள்.
‘ஏதோ இருக்கிறது. என்னவாக இருக்கும்? அவனே சொல்லட்டும்.’ அவன் பேசிய விதத்தில், பாரதியின் மனதில் அவன் ஒருமைக்கு மாறி இருந்தான்.





இரண்டு பேருக்குமே வாக்குவாதம் ரொம்ப பிடிக்கும் போலவே .