arrow_back
மலரும் அரும்பே! அத்தியாயம் – 6
மலரும் அரும்பே! chevron_right பகுதி 6 / 30

அத்தியாயம் – 6

visibility 624
star படைப்பை ரேட் செய்யுங்கள்
சராசரி 3.0/5 (2 மதிப்பீடுகள்)
பகிர்

6

அவள் அவன் கூற்றின் பொருள் புரிய காத்திருந்தாள். ஆனால், அவன் வேறு பேச்சுக்கு தாவினான்.

“ஓகே… லேட்’ஸ் ஹவ் எ மீட்டிங்.” அவன் கூற, “நான் எல்லா டீச்சர்ஸ் கிட்டயும் பேசிட்டு டைம் கேட்டுட்டு வரேன் சார். உங்க வசதிப்படி மீட்டிங் வச்சிக்கலாம் சார்.” அவள் தலையசைத்து விடை பெற முனைய, ‘அழுத்தம், குறை சொன்னால் கூட, அசராம இருக்காங்களே’ அவன் புருவம் ஏறி இறங்கியது.

“தேங்க்ஸ் சார்…” அவள் வெளிய செல்ல முற்பட, “குழந்தைங்க கிட்ட அக்கறை இருக்கிற மாதிரி காட்டிக்கிறீங்களேன்னு கேட்டேன்.” அவன் விடாப்பிடியாக பேச்சை தொடர, “தெரியலை சார். நீங்க அப்படி நினைக்கறீங்க போல.” அவள் பொறுமையாகவே பதில் கூற, “நினைக்கலை. அது தான் உண்மை. சைந்தவி விஷயத்தை நீங்க முன்னாடியே கவனிச்சிருக்கலாம். நீங்க தானே இங்க கவுன்சிலர்? உங்க டீச்சிங் வேலையை தாண்டி அதையும் பண்றீங்க தானே?” அவன் இப்பொழுது கோபமாக கேட்டான்.

“அதுவும் எங்க வீட்டு பெண்ணுக்கே இப்படி நடந்திருக்குனா, மத்த பசங்களை நீங்க எப்படி பார்த்துப்பீங்க?” அவன் கேட்க, “நீங்க சொல்றது சரி தான் சார். சைந்தவி விஷயத்துல தப்பு நடந்திருச்சு.” அவள் வெளிப்படையாக கூற, இப்பொழுது அவன் தடுமாறினான்.

“ஆனால், அதுக்கும் நான் குழந்தைங்க கிட்ட அக்கறை இருக்கிற மாதிரி காட்டிக்கிறன்னு நீங்க சொன்னதுக்கும் சம்பந்தம் இருக்கிற மாதிரி எனக்கு தோணலை சார்.” வெளியே செல்ல எத்தனித்த அவள் அவன் முன் நின்றாள்.

அவன் இப்பொழுது பேசவில்லை. அவள் பேசட்டும் என்று காத்திருந்தான்.

“நீங்க சொல்றது சரி சார். சைந்தவி டிப்ரெஸன்ல தான் இருந்திருக்கா. அஸ் எ கவுன்சிலர் நான் இதை முன்னாடியே கவனிச்சிருக்கணும். ஆனால், நான் தப்பு பண்ணிட்டேன்.” அவளின் மனவருத்தம் அவள் குரலில் மேலிட்டது.

“உங்க வீட்டு குழந்தைனு நீங்க பிரிச்சி பேசறது எனக்கு சரின்னு தோணலை சார். இங்க எல்லாரும் ஒன்னு தான். சில சமயங்கள்ல, உங்க வீடுங்கிறது பிரச்சனையா கூட இருக்கும். வருண் ஒழுங்கா ஸ்கூலுக்கு வறதில்லை. அவங்க கிளாஸ் டீச்சர் நிறைய கம்பளைண்ட் பண்ணிட்டாங்க. பட் நோ யூஸ். மத்த குழந்தைங்கன்னா இங்க நடவடிக்கை வேற மாதிரி இருந்திருக்கும். வருண் விஷயம் தான் சைந்தவிக்கு முதல் பிரச்சனை. அதை தாண்டி, உங்க வீட்டில் பசங்களுக்கு என்ன கவனிப்புன்னு எனக்கு தெரியாது சார். ஒரு அளவுக்கு மேல, என்னால ஒருத்தர் பெர்சனல் ஸ்பேஸ்குள்ள போக முடியாது சார்.” அவள் நிறுத்தினாள்.

அவள் பார்வை அவள் பேச்சை முடிக்கவில்லை என்று கூறியது. அவன் காத்திருந்தான்.

“ஸ்டுடென்ட்ஸ் எல்லாரையும் ஒண்ணா நடத்துற மாதிரி பேரண்ட்ஸை நடத்த முடியறதில்லை சார்.” நாசுக்காக அவனுக்கு குட்டு வைத்தாள். அவன் சற்று ஆடித்தான் போனான்.

“தப்பு என் மேலதான் சார். எனக்கு சில சந்தேகம் வந்தது. நான் உடனே சைந்தவி கிட்ட பேசி, அவங்க தாத்தா பாட்டி கிட்டயாவது பேசிருக்கணும். நான் பண்ணலை. கொஞ்சம் பொறுமையா பேசலாமுன்னு இருந்தேன். இப்படி ஆகும்னு நினைக்கலை.” அவள் கூற, “இனி ஒழுங்கா நடந்துக்கோங்க.” அவன் எச்சரிக்கும் தொனியில் கூற, அவள் அவனை விருட்டென்று பார்த்தாள்.

“என்ன இருந்தாலும், உங்க நினைப்பு தப்பு சார். நான் எதையும் எப்படியும் காட்டிக்குறது இல்லை.” அவள் தெளிவாக கூறிவிட்டு கதவு வரை சென்றாள். அவன் முகத்தில் சிந்தனை ரேகைகள்.

மீண்டும் அவன் முன் வந்தவள், “அம்மா அப்பாக்கு மட்டுமில்லை தாய் மாமாவுக்கும் எல்லா பொறுப்பும் உண்டு.” அவள் கூற, அவன் புரியாமல் பார்க்க, “தாய்மாமா பதவிக்கும் சித்தப்பா பதவிக்கும் பெரிய வித்தியாசம் இல்லை சார்.” அவள் கூற, சில நொடிகள் அவள் கூறுவது புரியாவிட்டாலும், தன்னை அவள் குற்றம் சாட்டுகிறாள் என்று சட்டென்று புரிந்து கொண்டான்.

அவள் கூற்றில் கோபம் வந்தாலும், அவள் கூறிய விதத்தில் அவன் முகத்தில் மென்னகை பரவியது.

“நீங்க இப்படி குழப்பமா கிளாஸ் எடுத்தா உங்க ஸ்டுடென்ட்ஸ்க்கு புரியுமா?” அவன் புருவம் உயர்த்தி சந்தேகமா கேட்க, “யார்க்கு எப்படி கிளாஸ் எடுக்கணுமோ, அப்படி கிளாஸ் எடுத்திடுவேன் சார். தேங்க்ஸ் சார். எனக்கு கிளாஸ் இருக்கு சார்” அவன் மேலே பேச இடம் கொடுக்காமல் அங்கிருந்து சிட்டாக பறந்துவிட்டாள்.

பாரதி அவள் பேசியவற்றை அசை போட்டபடியே தன் வகுப்பறைக்கு சென்றாள். ‘சிவகுரு ஐயா கிட்ட இப்படி பேசுவேனா? மோகன் சார் கிட்ட கூட இப்படி பேசினது இல்லையே. இந்த அரவிந்த் சாரை பார்த்தா பயம் வரலையே. தைரியமா தான் பேச வருது.’ அவள் சிந்தித்து கொண்டிருக்க, ‘ம்… க்கும்… இல்லைனா மட்டும் நீ அப்படியே அமைதி. அவள் மனசாட்சி அவளை இடித்துரைத்தது.’ மனசாட்சியை ஓரங்கட்டிவிட்டு, ‘நான் அமைதி தான்.’ தனக்கு தானே உறுதி செய்து கொண்டு வகுப்பறைக்குள் நுழைந்தாள்.

அதே நேரம் அரவிந்த் தன் சூழல் நாற்காலியில் சாய்ந்து அமர்ந்தான். ‘என் மேல தப்பு இருக்கிற மாதிரி மிஸ் பாரதி சொல்லிட்டு போய்ட்டாங்க.’ அவன் ஒரு நொடிக்கும் குறைவாக சிந்தித்தான்.

‘இந்த டீச்சரம்மா சொல்றதை எல்லாம் மனசுல எடுத்துக்கு கூடாது. டீச்சர்னாலே இப்படி தான் கிளாஸ் எடுப்பாங்க. திரும்ப வரும் பொழுது பேசிக்கலாம்.’ அவன் அவளை பற்றிய சிந்தனையை ஓரங்கட்டிவிட்டு, தன் பிரச்சனையை சிந்திக்கலானான்.

‘வீட்டில் எதுவும் சரி இல்லை. அண்ணா, பிசினெஸ் நல்லா தான் பார்த்துக்குறான். அங்க எல்லாம் சரியா தான் இருக்கு. அண்ணி பார்க்குற பொட்டிக் பிசினெஸ் நல்லா தான் போகுது. ஸ்கூல் மட்டும் இப்ப அப்பாவோட நேரடி கண்காணிப்பில் இல்லை. எல்லாம் நல்லாருக்குற மாதிரி தெரிஞ்சாலும், இங்க நிறைய மாற்றங்கள் கொண்டு வரணும்’ அவன் எண்ணவோட்டத்தை தடுத்தது அந்த பள்ளியில் ஒலித்த பள்ளி மணியின் ஓசை.

‘இதை முதலில் மாத்தணும்.’ அவன் முகம் சுளித்தான். ‘இதை எல்லாம் நான் யோசிச்சா, நான் எப்ப அமெரிக்கா திரும்ப போறது? என் வேலை. என் கனவு…’ அவனுக்கு தலை விண்விண்ணென்று வலித்தது.

***

சிவகுரு மனதில் கவலையோடு சோகமாக அமர்ந்திருக்க, நித்தியகல்யாணி சிவகுருவிடம் பேச ஆரம்பித்தார்.

“என்னங்க நான் ஒன்னு சொல்லட்டுமா?” அவர் கேட்க, “என்ன?” என்று அவர் பக்கம் திரும்பினார் சிவகுரு.

“அரவிந்துக்கு கல்யாணம் பண்ணி வச்சிடுவோமா?” அவர் கேட்க, தன் மனைவியை யோசனையோடு பார்த்தார்.

“நித்யா, நீ புரிஞ்சி தான் பேசறியா?” அவர் கேட்க, “நான் என்ன தப்பா கேட்டுட்டேன்?” அவர் படபடக்க, “தப்பா கேட்கலை, அவசரமா கேட்கற. அவனே இந்தியா பக்கம் வராம இப்ப தான் வந்திருக்கான். அதுவும் சைந்தவிக்கு உடம்பு சரி இல்லைனு பதட்டத்துல கிளம்பி வந்திருக்கான். அது மட்டுமில்லை. என் உடல் நிலை பார்த்துட்டு ஸ்கூல் பொறுப்பை எடுத்துக்குறேன்னு சொல்லிருக்கான்.” அவர் நிதானமாக பேச, “எப்படியும் கொஞ்ச நாள் இங்க இருப்பான். நீ அவசரப்பட்டு பேசி காரியத்தை கெடுத்திராத.” அவர் கூற, தன் கணவனை அவர் யோசனையாக பார்க்க, “என்ன?” அவர் புருவம் உயர்த்தினார்.

“பரவாயில்லை நீங்களும் அப்பப்ப சரியா தான் பேசறீங்க.” அவர் கழுத்தை நொடிக்க, “உனக்கு வயசாக வயசாக கொழுப்பு கூடி போச்சு.” அவர் கூற, “யாருக்கு வயசாச்சு, உங்களுக்கு தான் வயசாகுது.” அவர் சிரித்துக் கொண்டே கூறினார்.

அப்பொழுது உள்ளே நுழைந்த மோகன், “என்னம்மா, நான் இங்க இருக்கேன் உங்க முகத்தில் சிரிப்பே இருக்காது. சின்ன மகன் வந்ததும் முகம் எல்லா சிரிப்பா இருக்கு!” அவன் ஆச்சரியம் போல கேட்டுக் கொண்டே உள்ளே நுழைய, “நீ தான் வீட்டிலேயே இருக்க மாட்டியே.” அவர் சோக கீதம் பாட, “அரவிந்தும் வீட்லயே இருக்கறதிலேயே.” மோகன் பேசி கொண்டிருக்கும் பொழுதே அரவிந்த் உள்ளே நுழைந்தான்.

“அண்ணா, நான் இல்லாத நேரம் என்னை போட்டு கொடுக்கறியா?” அவன் தன் தமையனின் தோளில் தட்ட, “நீ இருந்தா நல்லாருக்கு அரவிந்த். நான் வேலை வேலைன்னு ஓடுறேன். நீ வந்திட்டா நாம பாதி பாதி பார்த்துக்கலாம். எனக்கும் பேச்சு துணை இருக்கும்.” மோகன் கூற, அரவிந்த் எதுவும் பேசவில்லை.

“சரி சரி, இங்க இருக்கிற நாள் சந்தோஷமா இரு. நான் உன்னை கட்டாயப்படுத்த மாட்டேன். சொல்லனுமுனு தோணுச்சு. சொல்லிட்டேன். எனக்கு வேலை இருக்கு. ஒரு பைலை எடுக்க வந்தேன்.” அவன் தன் அறைக்குள் நுழைய, அரவிந்த் தன் தந்தையின் அருகே அமர்ந்தான்.

“என்னப்பா ஸ்கூல் நேரத்தில் வந்திருக்க, உடம்பு முடியலையா?” அவர் அக்கறையோடு கேட்க, “ஜெட் லேக் இன்னும் போகலை அப்பா. வந்ததும் ஹாஸ்பிடல் அப்படின்னு ஒரே அலைச்சல். தலை வலிச்சுது. சரி கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கலாமுன்னு வந்தேன்.” அவன் கூற,

“எதாவது சாப்பிடறியா அரவிந்த்?” அவர் கேட்க, “அம்மா, கைமணம் வேண்டாமுன்னு சொல்வேனா?” அவன் கூற, “எதுக்கு இதெல்லாம் விட்டுட்டு…” அவர் புலம்பலை ஆரம்பிக்க, “நித்யா…” அவர் கண்டிப்போடு அவர் பேச்சை நிறுத்தினார்.

“விடுங்க அப்பா, அது அம்மா மனசின் ஆதங்கம். நான் அமெரிக்காவில் செட்டில் ஆகணும்னு சொல்றது என் கனவு. ரெண்டும் தப்பில்லையே.” அவன் கூற,

“ஸ்கூல் எப்படி இருக்கு?” அவர் கேட்க, பள்ளியை பற்றிய அவன் கணக்கீட்டில் அவளும் வந்து நின்றாள். தவிர்க்க நினைத்தாலும் வாழ்வில் சில விஷயங்களை தவிர்க்க முடியாது என்பதை அவன் எண்ண ஓட்டம் அவனுக்கு அறிவுறுத்தியது.

கொடுப்பதும் அவனே!

எடுப்பதும் அவனே!

அடுத்த அத்தியாயம்

அத்தியாயம் – 7

7பள்ளிக்கூடத்தை பற்றி வினவிவிட்டு, சிவகுரு அவனை ஆழமாக பார்க்க, “நல்லாருக்கு அப்பா.” அவன் சில நிமிடங்கள் மேலும் பேச எடுத்துக் கொண்டான். அவனின் தொனியில் அது அவருக்காக கூறப்பட்ட வார்த்தை என அறிந்து கொண்டார்.“கொஞ்சம் மாறனும் அப்பா.” அவன் குரலில் இப்பொழுது…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

இந்தக் கதையைப் பற்றி விவாதிக்கவும் 1

  1. Thaniபொதுக் கருத்துThani

    உங்க வீடடுல என்ன பிரச்சனை என்று கண்டுபிடிங்க ஹீரோ சாரை அப்புறமா அப்புறமா டீச்சரை பாத்துக்கலாம்.

உங்கள் கருத்தைப் பகிருங்கள்