arrow_back
மலரும் அரும்பே! அத்தியாயம் – 7
மலரும் அரும்பே! chevron_right பகுதி 7 / 30

அத்தியாயம் – 7

visibility 82
star படைப்பை ரேட் செய்யுங்கள்
சராசரி 4.7/5 (3 மதிப்பீடுகள்)
பகிர்

7

பள்ளிக்கூடத்தை பற்றி வினவிவிட்டு, சிவகுரு அவனை ஆழமாக பார்க்க, “நல்லாருக்கு அப்பா.” அவன் சில நிமிடங்கள் மேலும் பேச எடுத்துக் கொண்டான். அவனின் தொனியில் அது அவருக்காக கூறப்பட்ட வார்த்தை என அறிந்து கொண்டார்.

“கொஞ்சம் மாறனும் அப்பா.” அவன் குரலில் இப்பொழுது அழுத்தம் இருந்தது.

“உண்மை தான் அரவிந்த், அதை நீ பண்ணு.” தன் தாய் நேரடியாக சொன்னதை தன் தந்தை மறைமுகமாக சொல்வதை அவன் அறிந்து கொண்டான்.

அவன் அவர்கள் பேச்சை ஒதுக்கிவிட்டு, “படிக்கிற விதம் சரியில்லை அப்பா. அப்புறம் இவ்வளவு எதுக்கு எழுதணும். புரிஞ்சா மட்டும் போதாதா? அமெரிக்கால என் கூட வேலை பார்க்குறவங்களோட பசங்க எல்லாம் எப்படி படிக்குறாங்க தெரியுமா?” அவன் சிலாகிக்க,

“நம்ம பள்ளிக்கூடத்துல நமக்கு இல்லாத உரிமையா, நீ இருந்து எல்லாத்தையும் மாத்து.” என்று நித்தியகல்யாணி கூற, “நல்லவிதமா மாத்தி கொடுத்துட்டு போகணுமுன்னு தான் நான் நினைக்குறேன் அம்மா. ஆனால், முடியுமான்னு தான் தெரியலை.” அவனும் தன் பிடியில் விடாப்பிடியாக நின்றபடியே நிலைமையை கூறினான்.

“ஏன்டா?” அவன் அம்மா ஆதங்கத்தோடு கேட்க, சிவகுரு சிரிக்க, “அப்பா…” அவர் புரிந்து கொண்டதை அவனும் புரிந்து கொண்டான்.

“பாரதி எதிர்ப்பு தெரிவிச்சாளா?” அவர் கேட்க, “எதிர்ப்புன்னு சொல்ல முடியாது. ஆனால், எதிர்ப்பு வருமுன்னு எனக்கு தோணுது.” அவன் கூற, “நீ சொல்றது சரி தான். ஆனால், பாரதிக்கு நடைமுறை சிக்கல் தெரியும். எடுத்தோம் கவுத்தோமுனு எல்லாத்தையும் மாத்த முடியாது. ஆனால், நிச்சயமா அது நல்ல விஷயம்னா பாரதியோட ஒத்துழைப்பு முழுசா இருக்கும்.” அவர் கூற, “நம்மளை விட அவங்களுக்கு உரிமை ஜாஸ்தின்னு சொல்லுவீங்களா அப்பா?” அவன் கேள்வியாக நிறுத்த,

“உரிமை நமக்கு தான். ஆனால் முக்கியத்துவம் டீச்சர்ஸ்க்கு தான்.” அவர் அழுத்தமாக கூறினார். “அவங்க இல்லைனா நாம இல்லை அரவிந்த். நீ நினைக்குறதை எல்லாம் பண்ணலாம். ஆனால், கட்டாயப்படுத்தி இல்லை, அவங்களுக்கு புரியவச்சி. அதுல தான் உன் சாமர்த்தியசாலித்தனம் இருக்கு.” அவர் இப்பொழுது சவால் விடும் விதமாக கூற,

‘நிச்சயமாக அதை செய்வேன்.’ தன் தந்தையின் சவாலை அவன் மனம் ஏற்றுக்கொண்டாலும், ‘இது என்னை இங்க தங்க வைக்க மறைமுக முயற்சியோ?’ அவன் மௌனமாக சிந்தித்தான்.

உணவருந்திவிட்டு, “அப்பா, நான் ஸ்கூலுக்கு போயிட்டு வரேன். சில கட்டிட மாற்றங்களுக்கு சொல்லிருந்தேன்.” அவன் கூற, “சரி அரவிந்த். பணம் வேணுமுன்னா…” அவர் ஆரம்பிக்க, “இல்லை அப்பா, நான் வச்சிருக்கேன். எனக்கு வேணுமுன்னா உங்க கிட்ட கேட்குறேன்.” அவன் கூறிவிட்டு வெளியே செல்ல,

“அரவிந்தனுக்கு இந்த ஸ்கூல் மேல தனி பிரியம். ஆனால், இந்த அமெரிக்காவுக்கு போன பிறகு, அவனுக்கு அந்த பாசம் கூட விட்டு போச்சு.” நித்தியகல்யாணி கழுத்தை நொடிக்க, “எதுவும் விட்டு போகலை. எல்லாம் மாறிடுவான்.” சிவகுரு சமாதானமாக கூறினார்.

***

பள்ளியில் தன் வகுப்பை முடித்துவிட்டு, வெளியே வந்தாள் பாரதி. அவளுக்கு தலை விண்விண்னென்று வலித்தது. ‘இது என் ஸ்கூல் இல்லை. எனக்கு இந்த வேலை பிடிச்சிருக்கு. நான் பார்க்குறேன் அவ்வளவு தான். சிவகுரு ஐயா இருக்கும் பொழுது பிரச்சனை இல்லை. இப்ப சின்னவருக்கு வேற கொள்கை. அதன்படி ஸ்கூல் இருக்கனுமுனு நினைக்குறாங்க. அதுல தப்பில்லையே. நான் சரி சரின்னுட்டு போய்ட வேண்டியது தான். அதை விட்டுட்டு, நான் ஏன் கருத்து தெரிவிக்கணும்.’ அவள் நிதானமாக யோசித்தாள்.

‘ஆனால்… இந்த பசங்களை பார்த்தா என் பசங்க மாதிரி தெரியுதே…’ அவள் குறைப்படும் பொழுது, தன் மனதை நேர் வழிபடுத்தினாள். ‘நான் போகிறேன், சூடா ஒரு காபி கொண்டு வந்து இந்த மரத்தடியில் குடிக்கிறேன்.’ விரைவாக நடையை கட்டினாள்.

பள்ளியையும் வகுப்பறையையும் மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்தான் அரவிந்த். ‘எல்லாம் ஒழுங்கா இருக்கு. ஆனால், பழைய மாதிரி இருக்கு.’ அவன் மனம் குறைபட்டு கொண்டது. அப்பொழுது அவன் ஒவ்வொரு வகுப்பாக பார்வையிடும் பொழுது, அவன் கால்கள் பாரதியின் வகுப்பை கடக்கும் பொழுது அவன் கண்கள் கூர்மை பெற்றன.

“அவள் எட்டாம் வகுப்பின் ஆசிரியை” அவன் மனம் மீண்டும் குறித்துக் கொண்டது. அனைத்து வகுப்புகளுக்கும் கணினி ஆசிரியையும் இவளே. இதைத் தாண்டி, ‘கவுன்சிலர்…’ என்று தன்னை பறைசாற்றிக் கொண்டிருக்கிறாள் அவன் மனம் இடித்துரைத்தது.

‘எல்லா டீச்சர்ஸ் கிட்டயும் பேசிட்டேன். எல்லாரும் மரியாதையா தான் இருக்காங்க. ஆனால், எல்லாருக்கும் பாரதி மேலயும் மரியாதை இருக்கு. எனக்கு எல்லாமே மாறனும். இப்படி எப்பப்பாரு எக்ஸாம் இருக்க கூடாது. பசங்க இப்படி புத்தகம் வச்சே படிக்க கூடாது. எல்லாமே நடைமுறைல படிக்கணும். இதெல்லாத்தையும் டீச்சர்ஸ் மீட்டிங் போட்டு சொல்லணும்.’ அவன் சிந்தனை வேகவேகமாக வெகு தூரம் செல்ல, ‘காபி குடிச்சா நல்லாருக்கும்.’ அவன் மனம் இடைவேளைக்கு விரும்பியது.

அவன் வேகமாக சிற்றுண்டி இருக்கும் அறைக்கு சென்று கதவை தள்ள முற்பட, அந்த கதவை வேகமாக திறந்து கொண்டு வெளியே வந்தாள் பாரதி.

எதிர்பாராத விதமாக எதிரே ஒருவர் வந்ததும் அந்த காபி குவளையை தன் மீது சரித்துவிட்டாள். சூடான காபி அவள் உடையை தாண்டி அவள் ஸ்பரிசத்தை தீண்டியது. அவள் இதழோ, “சாரி… சாரி…” எதிரே இருப்பவனை பார்க்க மறந்து முணுமுணுக்க, அவள் கைகளோ சேலையை உதறியது. அதில் இருந்த காபியின் துளிகள் அவன் வெள்ளை சட்டையில் பட, அவன் அவளையே பார்த்தபடி நின்று கொண்டிருந்தான்.

“பாரதி…” அவன் அழைக்க, அவள் அப்பொழுது தான் அவனை பார்த்தாள்.

“நீங்க ஓகேவா?” அவன் கரிசனத்தோடு விசாரிக்க, “ஹ்ம்ம்… சாரி, நான் நீங்க வந்ததை கவனிக்கலை. இப்ப தான் லன்ச் முடிஞ்சிதா, பெரும்பாலும் யாரும் இப்ப இங்க வரமாட்டாங்க. நான் தான் கொஞ்சம் தலைவலின்னு இங்க வந்தேன்.” அவள் தன்னிலை விளக்கம் கொடுக்க, “அந்த தலைவலிக்கு காரணமான நானே திரும்ப வந்துட்டேனா?” அவன் மென்னகையோடு கேட்க, “இல்லை… இல்லை…” அவன் உண்மையை கண்டுபிடித்ததும் அவள் பதறினாள்.

“சும்மா தான் கேட்டேன்.” அவன் கூற, அவளுள் நிம்மதி பரவியது. “இப்படி சூடான காபியை உங்க மேல படக்குன்னு சரிச்சிக்கிட்டிங்களே, எதிரே ஆள் வந்திருந்தாலும் அந்த பக்கம் தள்ளி இருக்கலாமே?” அவன் இருவருக்கும் இடையில் இருக்கும் இடத்தை காட்டி அக்கறையாக கேட்க, “நீங்கன்னு நான் கவனிக்கலை. ஒருவேளை குழந்தைங்க என்னை தேடி இங்க வந்துட்டாங்களோன்னு பயந்து யோசிக்காம பண்ணிட்டேன்.” அவள் சேலையை சரி செய்தபடியே கூற, “அப்ப நான்னு தெரிஞ்சிருந்தா நிச்சயம் எதிர்பக்கம் சரிச்சிருப்பீங்க?” அவன் கண்களில் கேலி மின்ன கேட்க,

அவன் கேலியை கண்டுகொண்டவள், “இதுவரைக்கும் இப்படி ஒரு ஐடியா இல்லை சார். அடுத்த தடவை கண்டிப்பா பண்ணிடுறேன் சார்.” அவள் பவ்யம் காட்டி பேச, அவன் பெருங்குரலில் சிரித்தான்.

‘யாரவது பார்த்துவிட்டால், என்ன ஆகும்?’ என்று இப்பொழுது அவள் கண்களில் அச்சம் பரவியது. ‘இவ்வளவு சத்தமாவா சிரிப்பாங்க? கிளாஸ் நேரத்துல என்ன சிரிப்புன்னு நினைக்க மாட்டாங்க?’ அவள் சிந்தை ஒரு பக்கம் வேகமாக ஓட, ‘சின்னவர் பார்க்க செம்மையா இருக்காரு.’ அவள் தோழி காலையில் கிசுகிசுத்ததை அவன் சிரிப்பு உறுதி செய்து கொண்டிருந்தது.

‘பாரதி விளங்கிடும்.’ தனக்கு தானே குட்டு வைத்துக் கொண்டு, “உங்க வெள்ளை சட்டை பாழாப்போச்சே…” அவள் வருந்த, “உங்களுக்கு பட்ட காயத்தை விட இது ஒன்னும் பெருசில்லை.” அவன் தன் சட்டையை பார்த்தபடி கூற, “அதெல்லாம் ஒண்ணுமில்லை சார்.” அவள் மீண்டும் காபியை எடுத்தபடி அவனிடம் பேசினாள். இருவரும் காபியோடு மரத்தடிக்கு வந்தனர்.

அவளது சிறு செய்கை அவளுக்கு அவன் மீதான மதிப்பீட்டை உயர்த்தியிருந்தது. ‘குழந்தைகள் மீது இவளுக்கு தனி பாசம் தான்.’ அவன் மௌனமாக காபியை அருந்த, “சார், உங்க பிளான் என்னனு நீங்க கொடுங்க சார். நான் எல்லா டீச்சர்ஸ் கிட்டையும் கொடுத்து படிக்க சொல்றேன். அப்புறம் ஒரு மீட்டிங் வச்சிப்போம். எல்லாரும் அவங்க கருத்தை சொல்லட்டும். அப்புறம் நீங்க முடிவு எடுங்க சார்.” அவள் நிறுத்த, ‘எல்லாம் சரி தான். ஆனால், நான் என்ன செய்யணும்னு இவளே சொல்லுவாளா?’ அவன் அவளை கூர்மையாக பார்க்க,

“சாரி சார், நான் எதுவும் தப்பா சொல்லிட்டேனா?” அவள் மன்னிப்பு கோரும் குரலில் கேட்க, “அதெல்லாம் இல்லை” அவன் மறுப்பாக தலையசைத்தான்.

“நான் என்ன செய்யனுமுனு நீங்களே சொல்றீங்களே, அது தான் பார்த்தேன்” அவன் புன்னகையோடு கூற, “அய்யயோ சார், நான் அப்படி எல்லாம் சொல்லலை. இப்படி பண்ணலாமான்னு கேட்டேன். அவ்வளவு தான்.” அவள் பதற, “நீங்க சொன்ன மாதிரியே பண்ணிடலாம்.” அவன் தலையசைக்க, அவள் மென்னகையோடு விலகி நடந்தாள்.

‘இந்த சின்னவர் மோகன் சார் மாதிரியும் இல்லை, சிவகுரு ஐயா மாதிரியும் இல்லை. நான் கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கனும்.’ தன் செயலுக்கு கடிவாளம் போட வேண்டும் என்று தெரிந்த அவளுக்கு மனதிற்கு கடிவாளம் போட வேண்டும் என்று தெரியவில்லை. அவள் மனம் அவனிடம் பேசுவதை அவள் அறியாமலே ரசித்தது.

அவள் அவன் நின்ற இடத்திலிருந்து விலகி சென்று கொண்டிருந்தாள். ஆனால் அவன் மனதில்? அவன் எண்ணம் அவளையே சுற்றி வந்தது. ‘நான் ஏன் இவளை பத்தியே நினைக்குறேன்?’ அவனே கேள்வி கேட்டுக் கொண்டு பதிலும் தேடினான்.

‘இங்க எல்லாரும் வயசானவங்க, பார்க்க கண்ணுக்கு அழகா அம்சமா ஒரு பொண்ணு. கொஞ்சம் அதீத துறுதுறுன்னு ஒரு பொண்ணு. பாரதி கிட்ட பேசவும் சுவரசியாவும் இருக்கு’ தன் எண்ணப்போக்கில் அவன் ஒரு நொடி திடுக்கிட்டு நின்றான்.

‘இது எனக்கு தேவை இல்லாத சிந்தனை. பாரதி கிட்ட நட்பா பேச முடியுது. என் கனவை நடைமுறை படுத்தனும். பாரதி நல்லா பண்ணினா, அவங்க கிட்டயே பொறுப்பை கொடுத்திடலாம். இளைய தலைமுறை பதவியில் இருப்பது நல்லது.’ அவன் தன் சிந்தனையை பணியின் பக்கம் மட்டுமே செலுத்தினான்.

சிந்திக்க தூண்டுபவனும்

அந்த சிந்தனையை

திசை திருப்புபவனும்

அவனல்லவா?

அடுத்த அத்தியாயம்

அத்தியாயம் – 8

8அரவிந்தன், தன் பள்ளி வேலை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்திருந்தான். மழை லேசாக தூரிக் கொண்டிருந்தது. மாலை நேரம் என்பதால் வானம் செம்மஞ்சள் நிறத்தில் மிக அழகாக இருந்தது. பள்ளி முடித்துவிட்டு வந்த குழந்தைகள் சாலையில் மிகவும் சந்தோசமாக விளையாடிக் கொண்டிருந்தார்கள். அவன்…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

forum ஒரு கருத்து உள்ளது

உங்கள் கருத்தைப் பகிருங்கள்