arrow_back
மலரும் அரும்பே! அத்தியாயம் – 8
மலரும் அரும்பே! chevron_right பகுதி 8 / 30

அத்தியாயம் – 8

visibility 617
star படைப்பை ரேட் செய்யுங்கள்
சராசரி 4.3/5 (3 மதிப்பீடுகள்)
பகிர்

8

அரவிந்தன், தன் பள்ளி வேலை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்திருந்தான். மழை லேசாக தூரிக் கொண்டிருந்தது. மாலை நேரம் என்பதால் வானம் செம்மஞ்சள் நிறத்தில் மிக அழகாக இருந்தது. பள்ளி முடித்துவிட்டு வந்த குழந்தைகள் சாலையில் மிகவும் சந்தோசமாக விளையாடிக் கொண்டிருந்தார்கள். அவன் அவர்களை பார்த்தான். ‘பரவாயில்லை, மொபைல் ஃபோன் இல்லாம விளையாடறாங்க’ என்று நினைத்துக்கொண்டு வீட்டுக்குள் நுழைந்தான்.

அலுவலகத்திலும் சில வேலைகளை செய்யச் சொல்லித்தான் அவன் தந்தை சிவகுரு கூறியிருந்தார். ‘வேலைகளை நாளைக்கு செய்யலாம். எத்தனை நாளைக்கு இங்க இருக்கப் போறேன்னு தெரியல. அமெரிக்கா போறதுக்குள்ள வேலையும் முடிக்கணும். கொஞ்ச நேரமாவது வீட்ல இருந்து அம்மா அப்பாவோட பேசணும்’ என்ற முடிவோடு அவன் அந்த மாலைப் பொழுதை வீட்டிலேயே செலவழிக்க முடிவு செய்தான்.

தந்தை மட்டும் அலுவலகத்துக்கு செல்ல சொல்லவில்லை, அவன் தமையனும் அவனை அலுவலகத்திற்கு அழைத்திருந்தான். அவர்கள் சொல்லை ஒதுக்கிவிட்டு, சோஃபாவில் சாய்ந்தபடி சாலையில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளை பார்த்தான். அவர்கள் வேகமாக ஓடி விளையாடிக் கொண்டிருந்தனர். அவன் மனம் சட்டென்று சைந்தவியை தேடியது.

சைந்தவி ஓர் ஓரத்தில் சோகமாக அமர்ந்திருந்தாள். அவள் முன் ஒரு பக்கம் புத்தகங்கள் பரப்பி கிடந்தன, மறுபக்கம் பொம்மைகளும் கிடந்தன. ஆனால் அவை எதையும் எடுக்கவில்லை. தாத்தாவின் கையில் இருந்த அலைபேசியை அவ்வப்போது எடுத்து பார்த்துவிட்டு மீண்டும் தனியாக சென்று அமர்ந்துவிட்டாள்.

அவன் சைந்தவியின் அருகே சென்று அமர்ந்தான். “சைந்தவி, என்ன பண்றீங்க?” என்று கேட்டான். “ஒண்ணும் பண்ணல, சும்மாதான் இருக்கேன் சித்தப்பா” என்றாள். “அண்ணா, எப்ப வருவான்?” என்று அரவிந்தன் கேட்க, அவள் கண்களில் பயம் தெரிந்தது. அரவிந்த் அதை கவனித்தான். “சரி அண்ணா, எப்ப வேணுமின்னா வரட்டும், நாம இப்ப விளையாடலாமா?” என்று அவன் கேட்டான்.

சைந்தவியின் கண்களில் சந்தோஷம் தோன்றியது. அது விளையாடுவதற்கான மகிழ்ச்சியா, இல்லையெனில் வருண் பற்றிய பேச்சை தவிர்த்ததற்கானதா? என்பது அரவிந்துக்கு புரியவில்லை. ஆனால், அவன் சைந்தவியை அழைத்து, “நம்ம சைக்கிள் ஓட்டுவோம்” என்று சொல்லி, அவள் மிதிவண்டியை எடுத்துக்கொண்டு சாலைக்கு சென்றார்கள். அவள் ஓட்டாமல் இருந்த மிதிவண்டியை தூசி தட்டி கொடுத்ததில் சைந்தவிக்கு பெரும் மகிழ்ச்சி.

அவன் சொல்வதற்கெல்லாம், “ஓகே சித்தப்பா!” என்று அவள் மகிழ்ச்சியுடன் கூறிக்கொண்டு அவனுடன் சென்றாள். சாலையில் அவளுக்கு மிதிவண்டி ஓட்ட உதவி செய்து, பின்னர் அவளுடன் பேசி, அவள் விளையாட, அருகிலிருந்த பூங்காவிற்கு அழைத்துச் சென்றான்.

அங்கு பூங்காவில் அவளுக்குப் ஊஞ்சல் ஆட்டிவிட்டு, அவளுடன் பேசியபடியே வீட்டிற்கு திரும்பினான். சைந்தவியின் முகத்தில் ஒரு புது களை வந்திருந்தது.

அதன் பின், “என்ன பாடம் படிக்க போற?” என்று அவன் கேட்க, அவள் பாடங்களை ஆர்வமாகக் கூறத் தொடங்க, அவனும் அவளுடன் அமர்ந்து பாடங்களைப் பார்க்க ஆரம்பித்தான்.

சைந்தவி ஆர்வமாக படிப்பு பற்றி பேசிக் கொண்டே இருந்தாள். அவள் பாட புத்தகத்தை பார்த்தான், ஏழாம் வகுப்புக்கான அனைத்து பாடங்களையும் அவள் ஆர்வமாக விளக்கினாள். “ரேகா மிஸ் அதைப் பண்ணாங்க… சுசிலா மிஸ் இதை சொன்னாங்க…” என்று ஆரம்பித்து, ஏதேதோ அடுக்கிக் கொண்டே போனாள். அவனும் தலை அசைத்தபடி கேட்கத் தொடங்கினான்.

கணினி புத்தகத்தை காட்டி, “பாரதி மிஸ் என்ன சொன்னாங்க தெரியுமா?” என்று மீண்டும் கதையை ஆரம்பித்தாள். அவனும் அனைத்தையும் சுவாரஸ்யமாகக் கேட்டுக் கொண்டிருந்தான். சில சமயம் சுவாரஸ்யம் இல்லாதது போல் தோன்றினாலும், அது அவளுக்குத் தெரியாமல், கவனமாக சுவாரஸ்யமாய் கேட்பது போல நடந்து கொண்டான்.

“உனக்கு எந்த மிஸ் ரொம்ப பிடிக்கும்?” என்று பேச்சை வளர்த்தான் அரவிந்தன்.

“பாரதி மிஸ் தான் ரொம்ப பிடிக்கும். திட்ட மாட்டாங்க, அப்புறம் ரேகா மிஸ் பிடிக்கும். பாரதி மிஸ் தான் ரொம்ப பிடிக்கும். அவங்க கிளாஸ் ரொம்ப ஜாலியா இருக்கும்.” அவள் ஆர்வமாக கூற, அவன் அவள் பேச்சை உள்வாங்கி கொண்டான். அவளுக்கு ஆசிரியர்களிடம் மட்டுமல்ல, மாணவர்களிடமும் மரியாதை அதிகமாய் இருப்பதை அவன் மனதில் குறித்துக் கொண்டான். குழந்தை தன்னை மனதளவில் தேடி இருக்கிறாள் என்பதையும் யூகித்துக் கொண்டான். சைந்தவியின் சிறு வயதில் அவன் சில வருடங்கள் அவளோடு இருந்திருக்கிறான். அந்த காலமும் அவன் மனதில் படம் போல் ஓடியது.

வருண் சற்று தாமதமாகவே வந்தான். “வருண், எங்க போயிட்டு வர?” என்று அவன் தோளில் கை போட்டு கண்டிப்பு கலந்த நட்புடனான குரலில் கேட்டான்.

“அது வந்து… சித்தப்பா, அது… சித்தப்பா…” என்று வருண் தடுமாறினான்.

அந்த ‘சித்தப்பா’ என்ற வார்த்தை ஒவ்வொன்றும் அரவிந்தனுக்கு, ‘தாய் மாமாவுக்கு மட்டும் இல்ல, சித்தப்பாவுக்கும் ஒரு கடமை இருக்கு.’ என்று பாரதி கூறியது நினைவுக்கு வந்தது.

அதிகம் கேள்விகள் கேட்காமல், மேலோட்டமாகவே அவன் வருணின் தோள்களைத் தட்ட, “டியூஷன்…” அவன் சற்று தடுமாற்றத்தோடு கூற,

“ஓ, அப்படியா… சரி” என்று மேலும் தோண்டி துருவாமல் அனுப்பிவிட்டான். அதன் பின் தன் தந்தையிடம் அமர்ந்து, “வருண் எந்த டியூஷனுக்கு போறான்பா?” என்று அரவிந்தன் கேட்டான். சிவகுரு, அவன் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லும்போது, அரவிந்தனின் நெற்றி சுருங்கியது. அப்பொழுதுதான் அங்கு நித்தியகல்யாணி வந்தார்.

“நான் என்ன பெருசா கேட்டுட்டேன்? இந்த விஜயா கிட்டையும் மோகன் கிட்டையும் வேலை வேலைன்னு இருக்காம வீட்டுக்கு வாங்க. சாயங்காலமாவது கொஞ்ச நேரம் இந்த பசங்களோட பேசுங்க. அவங்க எங்க போறாங்க, வராங்க, என்ன படிக்கிறாங்கன்னு பாருங்க அப்படின்னு தானே சொல்றேன்!” என்றார்.

அதைத் தொடர்ந்து, “இந்த விஜயாவுக்கு வீட்டு வேலை செய்ய முடியல. நம்ம குடும்பத்துக்கே எத்தனை பிசினஸ் இருக்கு, எத்தனை வருமானம் இருக்கு, அதெல்லாம் பார்க்காம இவ புதுசா தொழில் தொடங்குறா. அந்த கடையிலயே டிரஸ், அங்க  வர்றவங்களுக்கு புது புதுசா டிரஸ் டிசைன் … இப்படியே போயிட்டு இருந்தா, பிள்ளைகள் படிப்பை யார் பார்ப்பா? புள்ளைகள் என்ன பண்ணுதுன்னு யார் பார்க்கப்போறா? வயசான காலத்தில் எங்களால எவ்வளவு முடியும்?” என்று ஆதங்கத்தோடு கேட்டார்.

நித்தியகல்யாணி கழுத்தை நொடிக்க, அரவிந்தன் தாயின் கைகளை சமாதானமாகப் பிடித்து, “அம்மா விடுங்கம்மா… விடுங்க. பாத்துக்கலாம்.” என்று சொன்னான்.

“ஆமாம், என்னத்த பாத்துக்கலாம்? நீ சும்மா, ‘பாத்துக்கலாம்’னு சொல்ற. சொன்னா செய்யணும்… நீ பார்க்கறத்துக்கு முன்னாடியே அமெரிக்கா போயிருவ. அப்புறம் இந்த பசங்க தான் தனியா தவிக்கணும். இரண்டு பேருக்கும் குடும்பம் நடத்துற அறிவே இல்ல.” நித்தியகல்யாணி பெருமூச்சு ஒன்றை வெளியிட்டார்.

அரவிந்தன் யோசனையோடு அமர்ந்திருந்தான். வருண் அவன் அறைக்குள் சென்றிருந்தான். ‘சரி, இப்போ என்ன பண்ணுறது?’ அவன் யோசனை வெறி கொண்டு ஓடியது.

‘இதை அண்ணிகிட்ட சொல்லலாமா? ஆனா… அண்ணி எப்படி எடுத்துக்குவாங்கன்னு தெரியலையே…’ பலத்த யோசனைக்குப் பின், “அண்ணா கிட்ட பேசணும்” என்று முடிவெடுத்தான்.

அன்றிரவு மழை கொஞ்சம் அதிகமாகவே பெய்தது. மோகன் வந்து சேர மணி பதினொன்றாகி இருந்தது. அனைவரும் ஒன்பது மணிக்கே உணவை முடித்துவிட்டு படுத்துவிட்டார்கள்.

வழக்கமாக அவன் வரும் பொழுது யாரும் விழித்திருப்பதில்லை. இன்று மின்விளக்கு எரிந்தது அவனுக்கு சற்று ஆச்சரியமாகவே இருந்தது. “அரவிந்த், நீ இன்னும் தூங்கலை?” அவன் கேட்க, “இல்லை அண்ணா, உன்கிட்ட பேசனுமுனு காத்துக்கிட்டு இருக்கேன்.” எந்த முகமனும் இல்லமால் நேரடியாக விஷயத்திற்கு வந்தான்.

“ஓ, கொஞ்சம் டைம் கொடு. குளிச்சிட்டு டிரஸ் மாத்திட்டு வரேன்.” கூறி சென்றவன் சில நிமிடங்களிலேயே இரவு உடையில் வந்தான்.

“சாப்பிடலையா?” அரவிந்தன் அக்கறையோடு கேட்க, “இல்லடா, எல்லாரும் சாப்பிட்டு முடிச்சிருப்பாங்க. நம்மளால மத்தவங்களுக்கு எதுக்கு தொந்தரவு? நைட் டின்னர் ஆபீஸ்ல முடிச்சுட்டேன்.” என்று பதிலளித்தான் மோகன்.

“அண்ணி தூங்கிட்டாங்களா?” அவன் தயக்கத்தோடு கேட்க, “ம், அவளுக்கு வேலை அதிகம் சீக்கிரமே தூங்கிடுவா” மோகன் எந்த தயக்கமும் இல்லாமல் வெளிப்படையாக கூறினான்.

“சரி, நம்ம பசங்க கிட்ட என்ன பேசுவ? என்ன கேட்ப? என்ன படிக்கிறாங்கன்னு தெரியுமா?” என்று அரவிந்தன் வினவ,

“எங்கடா, பசங்க கிட்ட பேசணும், கூட இருக்கணும்னு ஆசைதான். ஆனா வேலை அப்படியே போயிருது” என்று மோகன் சலிப்பாகச் சொன்னான்.

“அண்ணியும் பார்க்க மாட்டாங்களா?” என்று அவன் கேள்வி எழுப்பினான்.

“எங்க, அவளை பாருன்னு சொன்னா உடனே அவ, அப்போ உங்களுக்கு ஆசைப்பட்ட தொழிலை நீங்க பண்ணலாம். நாங்க பண்ணக் கூடாதா? அப்படின்னு என்னவோ அவங்க வேலையை கனவை நம்ம தட்டி பறிக்கிற மாதிரி பேசுவா. அவ கேட்கறதும் நியாயம்னு தோணும். நியாயம் தானே?” சில நிமிடங்கள் மெளனமாக இருந்தான்.

“நான் என் வேலையை விட முடியல. அவளுக்கு அவளுடைய கனவு, இலட்சியம். அதை எல்லாத்தையும் விட்டுடுடனும்னு நான் சொன்னா அப்போ அது ஆணாதிக்கம் தானே? விஜயா அப்படி தான் சொல்றா. அப்படின்னு தான் எனக்கும் தோணுது.

அவ சொல்றது தப்புன்னு சொல்ல எனக்கு தெரியல. ஆனா நாங்க செய்றது சரியில்லைனு தோணும். குழந்தைகள் தனியா இருந்தா ரொம்ப கஷ்டம். பாட்டி, தாத்தா இருக்கிறாங்க இல்லையா, அதனால நானும் பெருசா கண்டுக்கிறதில்ல.” அவன் நிறுத்த, அரவிந்தன் யோசனையோடு தன் அண்ணனை பார்த்தான்.

“எவ்வளவு தான் பார்த்தாலும், பாட்டி தாத்தாவுக்கு இந்த ஜெனரேஷனுக்கு ஈடு கொடுக்க முடியாதில்லையா?” என்று கேட்டான்.

“அம்மா இதெல்லாம் உன்கிட்ட… உன்னை என்கிட்ட பேசச் சொன்னாங்களா?” என்று மோகனின் கண்கள் கூர்மையானது.

“ஐயோ இல்லை அண்ணா!” அவன் பதறினான்.

“ஸ்கூலுக்கு போறேன் இல்லையா? யாருமே குழந்தைகளைப் பாக்குறது இல்லன்னு எனக்கு தோணுச்சு. நானே தான் அண்ணா கேட்டேன். ரொம்ப நாளா இந்தியா வரணும்னு நினைச்சுட்டே இருந்தேன். சைந்தவிக்கு உடம்பு சரியில்லைன்னு சொன்ன உடனே மனசு கேட்கல, கிளம்பி வந்துட்டேன். இன்னைக்கு சாயங்காலம் வீட்டுக்கு சீக்கிரமாவே வந்துட்டேன். பசங்களோட பேசும்போது, பசங்க ஒரு தனிமையை உணர்றாங்களோன்னு தோணுச்சு” என்று மெதுவாக சொன்னான் அரவிந்தன்.

மோகன் முகத்திலும் வருத்தமும் கவலையும் தெரிந்தது. “அண்ணி கிட்ட நீ பேசி பார்க்கலாமே அண்ணா? பிரச்சனை… நிச்சயம் பிரச்சனை வருமா?” அவன் கவலை தொனிக்கும் குரலில் கேட்க,

மோகனும் மௌனமாக தலை அசைத்தான். சில வினாடிகள் எடுத்துக் கொண்டான்.

“உன்கிட்ட சொல்றதுக்கு என்ன, விஜயாவின் எண்ணங்கள்! விஜயா நல்லவள்தான். எந்த பிரச்சனையிலும் ரொம்ப எல்லாம் எதிர்த்து பேசமாட்டா, ரொம்ப எல்லாம் சண்டை போட மாட்டா. ஆனா, அவ விஷயத்தில் எந்த பாதிப்பும் வந்துவிடக் கூடாது. அவளுடைய விஷயத்தில் பாதிப்பு வந்தா… நிச்சயம் சண்டை போடுவா.

சில சமயங்களில், இது என்ன வாழ்க்கைன்னு எனக்கே தோணும். பிரிஞ்சிடலாமுன்னு கூட தோணும். ஆனா, அதுக்கப்புறம் இந்த பசங்க எல்லாம் மனசுல வச்சுட்டு, அது எப்படி முடியும்? எனக்கு எந்த தொந்தரவும் இல்ல. நான் நல்லா இருக்கேன். குழந்தைகளுக்கும் அம்மா அப்பா ரெண்டு பேரும் இருக்கோம். கேட்டதெல்லாம் வாங்கி கொடுப்போம். அவங்க சந்தோசம் தான் முக்கியமுன்னு போயிட்டே இருக்கேன். நாங்க பிரிஞ்சா மட்டும் தான் குழந்தைகளுக்கு பாதிப்பு வரும்னு நினைச்சேன். ஆனா நாங்க பிரியாம ஒரே வீட்டில இருந்தாலும் கூட, குழந்தைகளுக்கு பாதிப்பு இருக்கத்தான் செய்யுது இல்ல?” என்றான் மோகன் வருத்தத்தோடு.

எத்தனை தொழிலை சாதாரணாமாக கையாளும் அண்ணனை இப்படி பார்க்க, அரவிந்தனுக்கு பிடிக்கவில்லை. அவன் அதற்கும் மேல் எதுவும் கேட்கவில்லை. தன் அண்ணனை காயப்படுத்த அவன் விரும்பவில்லை. மௌனமாகவே இருந்தான்.

“ஏன் அண்ணன் கிட்ட பேசினோமுன்னு தோணுதா?” என்று மோகன் மென்மையாக சிரிக்க, “அப்படிலாம் இல்ல” அவனும் சிரிக்கத்துக் கொண்டே பதிலளித்தான்.

அரவிந்தின் முகத்தில் சிந்தனை ரேகைகள். “என்ன யோசிக்குற?” அவன் கேட்க, “இல்லைனா, எதுவும் யோசிக்கல. சும்மாதான்” என்றான்.

“ஆனா இதுக்கெல்லாம் ஒரு தீர்வு உண்டு” மோகன் ஆழமான குரலில் கூறினான். “நான் என்ன நெனச்சேன் தெரியுமா? ஒருவேளை, நீ இங்க இருந்து, உனக்கு கல்யாணம் ஆகி, உன் மனைவி வேற மாதிரி இருந்தா, அதை பார்த்து விஜயா மாறலாம் இல்லையா?

அது மட்டுமில்லை, இந்த வீட்ல நீ இருந்தா, குழந்தைகளுக்கு ஒரு தனிமை இல்லாம இருக்கும்னு எனக்கு தோணுச்சு. இது நிச்சயமா ஒரு சிறந்த அப்பாவோட யோசனையா இருக்க முடியாது. அதுவும் என் குழந்தையை நான் சரிசெய்யாம இருந்துகிட்டு, என் குடும்பத்தை தம்பி சரி செய்யணும்னு நினைக்குறதெல்லாம் சுயநலம், தப்பு தான்.

ஆனா கூட, இந்த குடும்ப அமைப்பு இருக்கும்போது எல்லாம் மாறும்னு எனக்கு ஓர் ஆசை. நான் கேக்கறது தப்புதான், சுயநலம்தான், எனக்கே தெரியும். இருந்தாலும், எனக்கு அப்படி ஒரு ஆசை உண்டு. தம்பி, தம்பி மனைவி அப்படின்னு இருந்தா, என் பசங்களுக்கு சித்தி சித்தப்பா எல்லாரும் இருந்தால் பேசி பழகி மாறுவாங்களோன்னு ஒரு ஆசை. விஜயா கூட மாறலாம்” என்றான் மோகன்.

அரவிந்தன் அமைதியாக அவனை பார்த்தான். மோகன் தன் சகோதரனின் கையைப் பிடித்தபடி, “ஏண்டா, நீ கல்யாணம் பண்ணிக்கிட்டு, கொஞ்ச நாளாவது எங்க கூட இரேன்” என்று கோரிக்கை வைத்தான். அது ஆசையாகவா? அக்கறையோடவா? இல்லை, உதவியாகவா? என்று அவனுக்கே தெரியவில்லை. ஆனாலும் மோகன் கேட்டுவிட்டான்.

அதை உணர்ந்த அரவிந்தன், ‘இது என்ன? கிணறு வெட்ட, பூதம் கிளம்பிய கதையா ஆகிவிட்டதே!’ என்று மனதில் எண்ணியபடி திருதிரு என்று முழித்தான்.

அடுத்த அத்தியாயம்

அத்தியாயம் – 9

9மோகன் தன் அறைக்கு சென்றான். விஜயா அவர்கள் அறையில் ஆழ்ந்த நித்திரையில் இருந்தாள். அதன் பின் குழந்தைகளின் அறைக்கு சென்றான். குழந்தைகள் இருவரும் தூங்கிக் கொண்டிருந்தனர். சைந்தவியை உற்று பார்த்தான். அவள் முகத்தில் ஒரு களை வந்திருப்பது போல் தோன்றியது. தன்…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

இந்தக் கதையைப் பற்றி விவாதிக்கவும் 1

  1. Thaniபொதுக் கருத்துThani

    அரவிந்த் திருமணத்திற்கு சம்மதிப்பானா..?

உங்கள் கருத்தைப் பகிருங்கள்