அத்தியாயம் 11
பொற்பனையின் இரவு, அமைதி கொண்டிருப்பதாகத் தோன்றினாலும், ஆதிரையின் நெஞ்சில் அது ஒரு போர்க்களமாகவே விரிந்திருந்தது. அங்காடி வீதியில் கண்ட அந்தச் சிரமறுப்புக் காட்சி, அவளது நயனங்களுக்குள் தீயென எரிந்துகொண்டிருந்தது. உறக்கமெனும் மருந்து இப்பேதைக்குக் கிட்டவில்லை.
தோழி மங்கை எத்தனையோ வினாக்கள் தொடுத்துப் பார்த்தாள்; அங்கே நின்றிருந்தது யாரென்று! ஆதிரை என்ன உரைப்பாள்? நாட்டின் இறைமகன் என்றா? அவளால் சொல்லவும் முடியவில்லை, மென்று விழுங்கவும் முடியவில்லை!
அவளது அறிவு, மாலை தன் தந்தை கூறியதையும், நினைத்துப் பார்த்தது.
***
அங்காடி வீதியிலிருந்து திரும்பிய ஆதிரையின் மூச்சுக்காற்று அனலாகத் தகித்தது. அவளது நெடு மணித் தேரின் மணிகள் எழுப்பிய கிண்கிணி ஓசை அடங்குவதற்கு முன்பே, தன் தந்தை இளவேட்டனார் அமர்ந்திருந்த கூடத்திற்குள் புயலென நுழைந்தாள்.
“தந்தையே!” என்று அவள் அழைத்த குரலில் ஆத்திரமும் ஆதங்கமும் சரிசமமாகக் கலந்திருந்தன.
அந்தப் பெரிய மாளிகையின் கூடத்தில், அகில் புகையின் நறுமணத்திற்கு இடையே அமைதியாக அமர்ந்து ஓலைச்சுவடிகளைத் தரம் பிரித்துக் கொண்டிருந்தார் மாசாத்துவான் இளவேட்டனார். ஆதிரையின் சீற்றத்தைக் கண்டும் அவர் நிதானம் இழக்கவில்லை.
“என்னம்மா… ஏன் இத்தனை வேகம்?” என்றார் மென்மையாக.
“வேகமா? தந்தையே, நாம் வணங்கும் அந்தப் பழையோள் பாதத்தில் மலர் தூவி அறம் பயின்றவர்கள் அல்லவா? ஆனால் இன்று அந்த அங்காடி வீதியில் நடந்ததென்ன? அறத்தின் பெயரால் அந்த வேந்தன்… இருவரின் தலைகளைச் சதுக்கத்தில் உருட்டியதைக் கண்டும் நீங்கள் மௌனமாக இருந்தீர்களே! உங்களது வணிகச் சாத்துக்களுக்கு (குழுக்களுக்கு) அவர் பாதுகாப்புத் தருகிறார் என்பதற்காக இந்த அநீதியை மௌனமாய் ஏற்கப் போகிறீர்களா?” என்று மூச்சுவாங்கக் கேட்டாள்.
அவளது கண்கள் நீதியைக் கோரித் துடித்தன. அங்காடி வீதியில் சிந்தப்பட்ட அந்த குருதி மணம் இன்னும் அவளது நாசியை விட்டு நீங்கவில்லை.
இளவேட்டனார் கையில் இருந்த ஓலைச்சுவடியைக் கீழே வைத்தார். மெல்ல எழுந்து ஆதிரையின் அருகில் வந்தவர், அவளது நடுங்கும் தோள்களை மென்மையாகப் பற்றிக் கொண்டார்.
“ஆதிரை! நீ காண்பது வெறும் குருதி; நான் காண்பது இத்தேசத்தின் வேர்…” என்றார் அழுத்தம் திருத்தமாக.
அவள் புரியாமல் ஏறிட, அவர் தொடர்ந்தார், “களைகளை நீக்காத உழவன் பயிரை ஒருபோதும் அறுக்க முடியாது ஆதிரை. சில நேரங்களில் சில தலைகள் உருளத்தான் செய்யும். வேந்தனின் வாள் சதுக்கத்தில் கூர்மையாக இருந்தால் தான், நடுக்கடலில் நமது வணிகக் கப்பல்கள் கடற்கொள்ளையர்களின் அச்சமின்றிப் பாதுகாப்பாக இருக்கும். பெரிய அமைதிக்காகச் சில நேரங்களில் சிறிய அநீதிகளை நாம் கடந்துதான் செல்ல வேண்டும்.”
தந்தையின் வார்த்தைகள் ஆதிரையின் ஆத்திரத்தை அடக்கவில்லை; மாறாக, அவளுக்குள் ஒரு புதிய கேள்வியை முளைக்கச் செய்தன. அந்தப் பெரிய அமைதி என்பது இத்தனை குருதி வெறி பிடித்ததாகவா இருக்க வேண்டும்?
அதை நினைத்தபடியே படுக்கையில் புரண்டவள், தாங்கொணாத மனப் பாரத்துடன் எழுந்து, தன் இல்லத்தின் பின்புறமிருந்த நந்தவனத்திற்கு வந்தாள்.
அங்கே, செண்பகமும், பாரிஜாதமும் பூத்துக் குலுங்கின. குளிர்ந்த காற்று வீசிய போதிலும், அவள் நாசியில் அந்தச் செங்குருதி நாற்றம் இன்னும் நீங்கவில்லை என்றே தோன்றியது. தூணோரம் சாய்ந்து கண்களை மூடியவள், முந்தைய தினம் கானகத்தில் கண்ட அந்த மென்மையான மரவுரி தரித்த மறவனை எண்ணி ஏங்கினாள்.
“அறத்தின் பெயரால் மன்னுயிரைக் குடிக்கும் ஒருவனையா யான்…” அவள் சொற்கள் முழுமையடையவில்லை.
திடீரென, காய்ந்த இலைகள் நசுங்கும் ஓசை கேட்க, திடுக்கிட்டு விழித்தாள். நிலவொளியில் ஒரு நீண்ட நிழல் அவளது நந்தவனத்துத் தரையில் படர்ந்தது. யாரெனப் பார்க்கத் துணிந்து திரும்பியவள், அங்கே சிலையென நின்றிருந்த உருவத்தைக் கண்டு மூச்சடைத்துப் போனாள்.
அங்கே, எளிய வேட்டுவ உடை தரித்து, தன் அடையாளங்களை மறைத்து நின்றிருந்தான் பெருஞ்சேரல்.
ஆதிரை சட்டென எழுந்தாள். “மீண்டும் எதற்கு வந்தீர்கள் வேந்தே? பகலில் உதிரம் கண்ட கண்கள், நள்ளிரவில் அமைதியைத் தேடி அலைகின்றனவோ?” என்று கடுமையாகச் சீறினாள்.
பெருஞ்சேரல் அவளது சீற்றத்தைக் கண்டு அஞ்சவில்லை. அவன் முகத்தில் ஒருவிதமான களைப்பும், சொல்லொணா பாரமும் தெரிந்தன. “ஆதிரை, நான் இங்கு உன் சினம் தணிக்க வரவில்லை. நீதியை நிலைநாட்டிய அரசன், தன் குடிமகளிடம் மன்னிப்புக் கோருவது அறமாகாது. ஆனால், உனது விழிகளில் நான் கண்ட அந்த அருவருப்பு… அது ஒரு முனைகூர்ந்த வாளை விட என் மார்பைத் துளைக்கின்றது…” என்றான் அவன், நிதானமான குரலில்.
“நீதி! யாரைக் கொல்வது நீதியாகும்? உமது ஆணை கேட்டு உருண்ட அந்தத் தலைகள், நாளை உமது உறக்கத்தை உலுக்காதா?” என ஆதிரை ஏளனமாக வினவினாள்.
“அஃது எங்ஙனம் உலுக்கும் ஆதிரை?” என அவன் முன்னேறினான். “ஆதிரை! இறைமகன் என்பவன் ஒரு தனிமனிதன் அல்லன்; அவன் இத்தேசத்தின் உயிர்நாடி! ஒரு வேந்தனின் வாள் எப்போதும் கனமானது ஆதிரை! அதன் சுமை எம் கரங்களை வருத்துவதை விட, எம் உள்ளத்தையே அதிகம் வதைக்கின்றது!”
ஆதிரை அவனது ஏதுக்களை (நியாயங்களை) ஏற்க மறுத்தாள். “வேந்தே! நுந்தம் ஏதுக்கள் இப்பேதைக்கு விளங்கவில்லை. செங்குருதி படிந்த கரங்களை நீரால் கழுவுவதனால் மட்டும் நீர் மாசற்றவர் ஆகிவிட முடியாது. நீர் பாராளும் மன்னனாக இருக்கலாம், ஆனால் ஒரு மனிதனாக ஏற்க முடியவில்லை…”
அவள் பேசி முடிக்கும் முன்னரே, கார்மேகம் நிலவை விழுங்கியது.
அந்தக் கணம், நந்தவனத்தின் காற்றே உறைந்து போனது.
செண்பக மரத்தின் இலைகள் அசையாமல் நின்றன. நிலவு கூட தன் ஒளியை ஒருவினாடி மறந்தது போலத் தோன்றியது.
பெருஞ்சேரலின் இதயம் ஒரு துடிப்பைத் தவறவிட்டது.
அந்தத் தவறிய துடிப்புக்குள், ஆதிரையின் கழுத்துப் பின்புறம் மெல்ல நிமிர்ந்த ரோமங்களில் எச்சரிக்கை ஓர் மின்னலென பாய்ந்தது.
அந்த நொடி நேர இருளில், புதர்களுக்குப் பின்னாலிருந்து மரணத்தின் சீறலென ஒரு நஞ்சு தோய்ந்த கத்தி வான்வெளியைக் கிழித்துக்கொண்டு வந்தது. அதன் முனை, நிலவொளியில் நீலநிற நஞ்சென மின்னியது.
“ஆதிரை, வீழ்!”
பெருஞ்சேரலின் கர்ஜனை நந்தவனத்து அமைதியைக் குலைத்தது. ஒரு வேங்கை புலியின் பாய்ச்சலோடு அவன் ஆதிரையை இடைப்பற்றித் தள்ளி, அவளுக்கு அரணாகத் தன் உடலைத் திருப்பினான். அதே நொடி, அவன் இடையில் இருந்த குறுவாள் சிங் என்ற ஒலியுடன் உறையை விட்டு வெளியேறியது. கண்களால் கூடக் காண முடியாத வேகத்தில், அவன் தன் குறுவாளைச் சுழற்றினான். சீறி வந்த விஷக்கத்தி, பெருஞ்சேரலின் வாள் முனை பட்டுத் தீப்பொறி பறக்கத் தெறித்து விழுந்தது.
ஆனால், ஆபத்து அத்துடன் நீங்கவில்லை. இருளிலிருந்து ஒரு கருப்புருவம் கையில் நீண்ட வாளுடன் பாய்ந்து வந்தது. பெருஞ்சேரல் ஒரு வீரனாக அல்ல, தன் உயிருக்கு மேலான ஒன்றைக் காக்கத் துடிக்கும் வேட்டையனாக மாறினான். அவன் எதிர் வந்தவனின் வாள் வீச்சைத் தன் இடக்கையால் தடுத்து, வலக்கையிலிருந்த குறுவாளை மின்னலெனச் சுழற்றி அந்த ஒற்றனின் தோள்பட்டையில் பாய்ச்சினான். குருதி பீறிட, அந்த வஞ்சகன் நிலத்தில் வீழ்ந்தான்.
“பிடியுங்கள் அவனை! உயிரோடு வேண்டும்!” என அவன் ஆணையிட, அடுத்த நொடி மறைந்திருந்த வீரர்கள் பந்தங்களின் ஒளியோடு நந்தவனத்தைச் சூழ்ந்தனர்.
“அரசே… நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்களா?” மாறன் பதறியபடி முன்னே வந்தான்.
“என்னைப்பற்றிக் கவலையுறாதீர்கள். இவனை முழுவதுமாக விசாரித்தல் வேண்டும். பாதாளச் சிறைக்கு இழுத்துச் செல்லுங்கள். நானே விசாரணைக்கு வருகிறேன்…” என்றவனின் வார்த்தைகளில் துணைத்தளபதி சற்று அயர்ந்து போனான்.
பெருஞ்சேரல் மூச்சிரைக்கத் திரும்பினான். அவன் முகத்தில் வழிந்த வியர்வையும், கையில் இருந்த குறுவாளில் சொட்டிய குருதியும் ஆதிரைக்குப் புதியதொரு அச்சத்தை அளித்தன. அவன் அவளைத் தொட முயன்றபோது, அவள் ஒரு காயம் பட்ட மானைப் போலப் பின்வாங்கினாள். தான் நேசிப்பதாக எண்ணிய அதே மனிதன், மீண்டும் ஒருவரைக் கொடூரமாக வெட்டிச் சாய்த்ததைக் கண்டு அவளது உள்ளம் நிலைகுலைந்தது.
“ஆதிரை, உனக்கு ஏதும் ஆகவில்லையே?” என்று பதற்றத்துடன் அவளது தோள்களைப் பற்ற வந்தான்.
ஆதிரை, “தீண்டற்க எம்மை! நீர் ஏகும் இடமெல்லாம் சாக்காடும் குருதியுமே உம்மைத் தொடர்கின்றன! இன்று நீர் எம்முயிரைக் காத்தீர் என்பதற்காக யான் உமக்குக் கடமைப்பட்டவள் என்று எண்ணுகிறீரோ? இல்லவே இல்லை! நும்முடைய இவ்வாழ்வே ஒரு பெரும் போர்க்களம். அதில் ஏதுமறியா இப்பேதையை எதற்காக இழுக்கின்றீர்?” சீறினாள்.
“ஆதிரை! இது யான் தேடிக்கொண்ட தனிப்பகை அன்று. இத்தேசத்தின் மீது தொடுக்கப்பட்ட பெரும் பகை!” என அவன் விளக்க முயன்றான்.
“அமையட்டும்! நுந்தம் நாடு, நும்முடைய போர், நும்முடைய அறம்… இவையேதும் எமக்குத் தேவையில்லை! உமது அருகாமை இப்பேதைக்கு அச்சத்தையே விளைவிக்கின்றது. கழறுகின்றேன் (வேண்டுகிறேன்)… இக்கணமே இங்கிருந்து ஏகுவீராக!” என்று கதறினாள்.
அவன் ஒரு வார்த்தை பேசவில்லை. தன் குருதிக் கறை படிந்த குறுவாளை உறையில் இட்டான். வீரர்கள் அந்த ஒற்றனை இழுத்துச் செல்ல, பெருஞ்சேரல் ஆதிரையை ஒருமுறை ஏக்கத்துடன் பார்த்தான். ஆனால் அவளோ, முகம் திருப்பித் தன் இல்லத்திற்குள் ஓடினாள்.


One step back ah irrundha aathirai ippo 10 step back ah❤️raja ippo yedhuku nandhavam vanthar....adhiraiya meet pannava...veerargalaiyum kootikonda🤔 nice intresting ud sis ❤️
thanks ma. avar nandhavanam vanthathu avalai meet panrathukkaaga. சேரலின் பாதுகாப்பு படையினர் மா அவங்க :)
அழகு
thanks ma
எப்போ அரசனை ஆதிரை புரிந்து கொள்வாள்..?