arrow_back
வற்பனை சேரல் அத்தியாயம் 12
வற்பனை சேரல் chevron_right பகுதி 12 / 28

அத்தியாயம் 12

visibility 549
star படைப்பை ரேட் செய்யுங்கள்
சராசரி 4.6/5 (8 மதிப்பீடுகள்)
பகிர்

மறுபுறம், கோட்டைக்குள் பெருஞ்சேரலின் மௌனம் இடி முழக்கத்தை விடக் கொடியதாக இருந்தது. தன் தோளில் பாய்ந்த அந்தச் சிறு வாள் கீறலை அவன் பொருட்படுத்தவில்லை; ஆனால், தன் உயிரைப் பறிக்கத் துணிந்த அந்த நிழல் உருவங்கள் யாரென அறியும் வேட்கை அவனுள் கனன்றது.

அரண்மனையின் பாதுகாப்பு பன்மடங்கு பலப்படுத்தப்பட்டது. சந்தேக வளையத்திற்குள் அனைவரையும் கொண்டு வந்தான் பெருஞ்சேரல்.

அரண்மனை அந்தப்புரத்தின் இருள் சூழ்ந்த மூலையில், எரியும் தீப்பந்தங்கள் காற்றில் அலைக்கழிக்கப்பட, பெருஞ்சேரலின் நிழல் சுவரில் ஒரு பூதமாகப் படர்ந்திருந்தது. தன் தோளில் இருந்த காயத்தை அவன் பார்க்கவில்லை; மாறாக, அந்தக் காயம் எறிந்த கேள்விகளையே உற்று நோக்கினான்.

பெருஞ்சேரல் ஒரு வேட்டைப்புலியைப் போலத் தன் நகங்களை மறைத்துக்கொண்டு அமர்ந்திருக்க, அவனைச் சுற்றியிருந்த பகை வலை இப்போது அரண்மனைச் சுவர்களுக்கு அப்பால் விரிந்து கிடந்தது.

சிற்றப்பன் உதியஞ்சேரல், இளவரசனின் மீதான தாக்குதல் தோல்வியடைந்த செய்தியை அறிந்தும் பதற்றப்படவில்லை. மாறாக, தனது மந்தண அறையில் அமர்ந்து ஒரு மெல்லிய நச்சுச் சிரிப்பை உதிர்த்தார். “கீறல் விழுந்த புலி இன்னும் வீரியமாகப் பாயும்… ஆனால், அந்தப் புலிக்குக் கூண்டு எங்கே வைக்க வேண்டும் என்பது எனக்குத் தெரியும்…” என்று தனக்குள்ளே முணுமுணுத்துக் கொண்டார். அவர் இப்போது அமைச்சர்களில் பாதியைத் தனது பொற்காசுகளாலும், அதிகார ஆசையாலும் வளைத்துவிட்டிருந்தார்.

அமைச்சர்களின் நிலை இப்போது ஒரு ஊசலாட்டத்தைப் போலிருந்தது. ஒருபுறம், நாட்டை ஆள இளவரசனின் அறம் சார்ந்த போர்வீரன் முகம் வேண்டும் என்பவர்கள்; மறுபுறம், பித்தனாகத் திரியும் இளவரசனை விட, அனுபவம் வாய்ந்த உதியஞ்சேரலே மேல் என்று வெளிப்படையாகவே பேசத் தொடங்கியவர்கள். உதியஞ்சேரலின் நயவஞ்சகப் பேச்சுகள் சபையில் மெல்ல மெல்லப் பெருஞ்சேரலின் தகுதியைக் கேள்விக்குறியாக்கிக் கொண்டிருந்தன.

கோட்டைக்கு வெளியே, தெற்கே பாண்டியரின் படை பலம் பெருகிக் கொண்டிருந்தது. பொற்பனைக் கோட்டையில் சிற்றப்பனுக்கும் சித்திரபுத்திரனுக்கும் (பெருஞ்சேரல்) இடையே நடக்கும் இந்த உள்நாட்டுப் பூசலைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளப் பாண்டிய மன்னன் காத்திருந்தான்.

“சேர நாட்டில் குழப்பம் முதிர்ந்து, அரியணை ஊசலாடும் அந்த நொடியில் எமது மீன் கொடி பொற்பனையில் பறக்க வேண்டும்…” என்பது அவனது கட்டளை.

நாட்டின் எல்லைகளைக் காக்கும் சிறுநில மன்னர்களான வேளிர்கள், இப்போது யாருக்கு விசுவாசமாக இருப்பது என்று அறியாமல் திகைத்து நின்றனர். ஒரு சில வேளிர்கள் உதியஞ்சேரலின் ஆசை வார்த்தைகளுக்கு மயங்கியிருக்க, பெரும்பான்மையான வேளிர்கள் முதுபெரும் வேந்தரின் மீதிருந்த மரியாதையினால் மௌனம் காத்தனர். அந்த மௌனம் பெருஞ்சேரலுக்குப் பாதுகாப்பா அல்லது ஆபத்தா என்பதை காலம் தான் சொல்ல வேண்டும்.

துணைத்தளபதி மாறன் மட்டும் பெருஞ்சேரலின் அருகே ஒரு பாறையைப் போல நின்றிருந்தான். “அரசே, பாண்டியன் எல்லையில் படை திரட்டுகிறான்; உதியஞ்சேரலார் கோட்டைக்குள் சதி வலை பின்னுகிறார். நாம் இப்போது செயல்படாவிட்டால், இந்தப் பொற்பனை அந்நியர் கைக்குச் சென்றுவிடும்…” என்று எச்சரித்தான்.

பெருஞ்சேரல் மெல்லத் தனது குலவாளை உருவினான். அதன் மின்னொளி அவனது விழிகளில் எதிரொலித்தது. “சதி வலைகளையும், எல்லைப் படைகளையும் ஒரே நேரத்தில் அறுக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது மாறரே! இனி நாம் வீழ்த்தப்போவது பகைவரை மட்டுமல்ல, எம் சொந்த குருதியில் ஒளிந்திருக்கும் வஞ்சகத்தையும்தான்…” என்று உறுதியுடன் கூறினான்.

“அரசே! இத்தேசத்தின் உயிர்நாடிக்கு இன்னல் விளைவிக்க ஒருவன் துணிந்திருக்கிறான் எனின், அவன் வெறும் புல்லொற்றனாக இருக்க முடியாது. கோட்டைக்குள் குடியிருக்கும் ஏதோ ஒரு கருங்காலி அவனுக்குத் துணை நின்றிருக்க வேண்டும்!” என்று மாறன் ஆவேசமாகக் கூறினான்.

பெருஞ்சேரல் தன் தோழன் துணைத்தளபதியின் தோளில் கை வைத்தான். “மாறா! அமைச்சர்கள் ஒவ்வொருவரின் மீதும் எனக்கு ஐயமுண்டு. அந்தப்புரத்தையும் விட்டு வைக்காதே. எம்மை ஈன்ற மாதேவியாரைத் (ராஜமாதா) தவிர்த்து, மற்றுமுள்ள அனைவரையும் கடும் வினாவிற்கு உட்படுத்து!” என்று கூறி, பாதுகாப்பை மாற்றியமைப்பது குறித்து விவாதித்தான்.

“அஞ்சற்க வேந்தே! உம்மைத் தீண்ட விழைவோரின் கரங்களை வேரறுப்பதே இம்மாறனின் முதற்கடமை. ஆதிரையின் இல்லத்திற்கும் கூடுதல் காவலை இக்கணமே எவரும் அறியாவண்ணம் ஏற்பாடு செய்கின்றேன்!” என்று உறுதியளித்தான் மாறன்.

அடுத்த அத்தியாயம்

அத்தியாயம் 13

மறுநாள் அங்காடி வீதியில், ஆதிரையின் விரல்கள் தன்னிச்சையாக அகில் துண்டுகளை அடுக்கிக் கொண்டிருந்தாலும், அவளது கண்கள் திகில் கொண்டிருந்தன. அவளது முகத்தைக் கண்டு மங்கை அவளைத் தடுத்தாள்.“ஆதிரை! எதற்கு இங்ஙனம் அஞ்சி ஒடுங்குகிறாய்? யாரிடமும் சொல்ல முடியாத துயரம் யாது?” என்று…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

இந்தக் கதையைப் பற்றி விவாதிக்கவும் 5

  1. Thaniபொதுக் கருத்துThani

    வஞ்சகத்தின் பிடியில் இருந்து எப்படி தப்பிக்கப்போகிறான் நம்மஹீரோ..?

உங்கள் கருத்தைப் பகிருங்கள்