அத்தியாயம் 13
மறுநாள் அங்காடி வீதியில், ஆதிரையின் விரல்கள் தன்னிச்சையாக அகில் துண்டுகளை அடுக்கிக் கொண்டிருந்தாலும், அவளது கண்கள் திகில் கொண்டிருந்தன. அவளது முகத்தைக் கண்டு மங்கை அவளைத் தடுத்தாள்.
“ஆதிரை! எதற்கு இங்ஙனம் அஞ்சி ஒடுங்குகிறாய்? யாரிடமும் சொல்ல முடியாத துயரம் யாது?” என்று வினவினாள் மங்கை. ஆதிரை சுற்றும் முற்றும் நோக்கி, யாருமில்லை என்பதை உறுதி செய்து கொண்டு, நடந்தவற்றைக் கொட்டினாள்.
“அவர் என்னைக் காக்கத்தான் அப்படிச் செய்தார் மங்கை. ஆனால், அவர் முகத்தில் இருந்த அந்த உக்கிரம்… நான் நேசித்தவரா இவர் என்று என்னைப் பதறச் செய்தது. அவர் கைகளிலிருந்த உதிரத்தைக் கண்டதும் எனக்குப் பைத்தியம் பிடிப்பது போலிருந்தது. போய்விடுங்கள், எம்மைத் தீண்டற்க என்று நான் அவரைச் சீறித் துரத்திவிட்டேன்!”
மங்கை அவளது கரங்களைப் பற்றினாள். “ஆதிரை, அஞ்சற்க! வேந்தனின் வாழ்வு குருதியாலானது, ஆனால் அக்குருதிதான் எம்மைப் போன்ற எளிய மாந்தரை அமைதியாக உறங்க வைக்கிறது. அவர் உனக்காகத் தன் அதிகாரத்தைத் துறந்து ஒரு எளியவனாக வந்திருக்கிறார் என்றால், அவர் உன்னிடம் எதை விழைந்து வந்தார் என்று உனக்குப் புரியவில்லையா?”
மங்கையின் சொற்கள் ஆதிரையின் நெஞ்சில் ஒரு சிறிய மாற்றத்தை ஏற்படுத்தின. ஆதிரை இங்கே குழம்பிக் கொண்டிருக்க, அங்கே பாதாளச் சிறையில் மாறனுக்குப் பதிலாகத் தானே விசாரணையில் இறங்கியிருந்தான் பெருஞ்சேரல்!
***
பொற்பனை மாநகரின் நிலப்பரப்பிற்கு அடியில், மரணத்தின் வாடை நிரந்தரமாகக் குடிகொண்டிருக்கும் அந்தப் பாதாளச் சிறை, நரகத்தின் நுழைவாயில் போலவே காட்சியளித்தது. ஈரமான சுவர்களில் ஒட்டியிருந்த பாசிகளும், சங்கிலிகளின் உராய்வுச் சத்தமும் அங்கே சித்திரவதை செய்யப்படுவோரின் அலறலோடு கலந்து ஒரு பயங்கரமான ஒலியை உருவாக்கின. நந்தவனத்தில் பிடிபட்ட அந்த ஒற்றன், தூணில் பிணைக்கப்பட்டு, குருதி வழிந்த நிலையில் தொங்கிக் கொண்டிருந்தான்.
சிறைக் கதவு கணத்த சத்தத்துடன் திறக்க, கையில் ஒரு செந்நிறக் கசையோடு (சவுக்கோடு) உள்ளே நுழைந்தான் பெருஞ்சேரல். அவனது விழிகளில் நிலவிய வெப்பம், அங்கே எரிந்து கொண்டிருந்த பந்தங்களை விடக் கொடியதாக இருந்தது. அவனது விழிகளில் இப்போது ஆதிரையிடம் காட்டிய அந்த மென்மை துளியும் இல்லை; அங்கே தெரிந்தது காலனின் உக்கிரம் மட்டுமே!
மாறன் ஓரத்தில் மௌனமாக நின்று கவனித்துக் கொண்டிருந்தான்.
“சொல்! நந்தவனத்தின் வேலி தாண்டி உள்ளே நுழைய உனக்குத் துணிவு தந்தவன் யார்?” பெருஞ்சேரலின் குரல் சிறைச் சுவர்களில் மோதி எதிரொலித்தது.
அந்த ஒற்றன் பதிலளிக்கவில்லை. அவனது உதடுகள் வலியால் துடித்தாலும், உண்மையைச் சொன்னால் தன் குடும்பத்தைப் வேரறுத்து விடுவார்கள் என்ற அச்சம் அவனை மௌனமாக இருக்கச் செய்தது. அத்தனை சித்திரவதைகளைத் தாங்கியும் அவன் வாய் திறக்காதது, பெருஞ்சேரலின் சினத்தைக் கிளறியது.
“மன்னிக்கத் தெரியாதவனுக்குத் தண்டிக்கவும் தகுதியில்லை என்பார்கள். ஆனால், வஞ்சகம் செய்தோரைத் தண்டிப்பதில்தான் எம் அறமே அடங்கியிருக்கிறது!” என்று கர்ஜித்தவாறு, பழுக்கக் காய்ச்சிய இரும்புச் சலாகைகளை (கம்பிகள்) எடுத்து அவன் உடலில் அழுத்தினான் வேந்தன்.
கருகும் சதையின் நாற்றம் அந்தச் சிற்றறையை நிறைத்தது. “ஆஆஆஆ…!” அவனது அலறல் அடங்குவதற்குள், அடுத்தடுத்துப் பல கொடுமைகள் அரங்கேறின. எனினும், அந்த ஒற்றன் ஒரு வீரனைப் போல மௌனம் காத்தான்.
பெருஞ்சேரல் சற்றும் சலனமின்றி, அவனது தாடையைப் பற்றித் தூக்கினான். “உயிர் என்பது ஒரு நூல் இழை போன்றது. அதை எப்போது அறுக்க வேண்டும் என்பது எமக்குத் தெரியும். சொல்! பாண்டியன் உனக்கு இட்ட கட்டளை யாது? கோட்டைக்குள் உனக்கு வழிகாட்டிய அந்த நச்சுப் பாம்பு யார்?”
அந்த ஒற்றன் பதில் சொல்ல மறுக்க, பெருஞ்சேரல் அடுத்த கட்டத்திற்குச் சென்றான். அருகில் இருந்த உப்புச் சாடியைத் திறந்து, அவனது பச்சையான காயங்களின் மேல் அள்ளித் தெளித்தான். வலியால் துடித்த அந்த ஒற்றனின் கண்கள் பிதுங்கின. அவன் உடல் வில்லாக வளைந்தது.
“இன்னும் உன் நாவிலிருந்து உண்மை பிறக்கவில்லையா? உன் நகங்களை ஒவ்வொன்றாகப் பிடுங்கி, உன் கண்களில் காரத்தைப் பூசவா? உன் குடும்பத்தையே அழித்துவிடவா?” எனப் பெருஞ்சேரல் இரக்கமின்றி வினவினான். அவனது குரலில் இருந்த அந்த வன்மை, துணைத்தளபதி மாறனையே ஒரு கணம் நடுங்க வைத்தது.
ஆனாலும் மௌனம் காத்தான் அவன்ன், குற்றுயிராய்!
பெருஞ்சேரல் கசப்பான புன்னகை புரிந்தான். “உன் வீரத்தின் மீது உனக்கு இத்தனை பெருமிதமா? இல்லை, உன் குடும்பம் காக்கப்படும் என்ற நம்பிக்கையா? பிணத்தின் மீது படிந்திருக்கும் ஈக்களைப் போல, உன் மீதிருக்கும் ஒவ்வொரு அங்குலத் தோலையும் நான் உரிக்கப் போகிறேன். அதன் பின் உப்பை உன் உடலில் பூசும்போது, மரணம் என்பது எவ்வளவு பெரிய வரம் என்பதை நீ உணர்வாய்!”
அவன் ஒரு வீரனை நோக்கிச் சைகை செய்தான். அடுத்த நொடி, ஒரு பெரிய ஆட்டுத்தோலும், மர வாளியில் ஈரமான உப்பும் அங்கே கொண்டு வரப்பட்டன. கூர்மையான ஒரு சிறு கத்தி அந்த ஒற்றனின் கழுத்துப் பகுதியில் பதிக்கப்பட்டது. தோலை மெல்ல உரிக்கத் தொடங்கும் அந்த உக்கிரமான வலியையும், அருகில் இருக்கும் உப்பையும் கண்டதும் அந்த ஒற்றனின் உறுதி சீட்டுக்கட்டுகளைப் போலச் சரிந்தது.
“வேண்டாம் வேந்தே! நிறுத்துங்கள்… சொல்லிவிடுகிறேன்! எம் குலத்தை மட்டும் அழித்துவிடாதீர்கள்!” என்று கதறினான்.
பெருஞ்சேரல் கத்தியைச் சற்றே விலக்கி, “சொல்!” என ஆணையிட்டான்.
“பாண்டியர்களின் பொன்னிற்கு ஆசைப்பட்டு உமது நகர ரகசியங்களை விற்றவன்… அங்காடி வீதி வணிகர் இளவேட்டனாரின் தம்பி பொன்சென்னி! அவர் பல தேசங்களுக்கு வாணிபம் நிமித்தம் செல்வதால், பாண்டிய ஒற்றர் படை அவரைத் தன் வலைக்குள் இழுத்துக் கொண்டது. அவருடன் பாண்டிய நாடு கொண்டுள்ள ரகசிய வணிக ஒப்பந்தப்படி தான் அனைத்தும் நடக்கிறது. நேற்று நந்தவனத்தில் நீர் இருப்பதை உறுதி செய்ததே அவர்தான்! மற்றபடி அரண்மனைக்கும் எனக்கும் இயைபில்லை!” (சம்பந்தமில்லை)
பெருஞ்சேரல் விழிகளில் ஒரு மின்னல் வெட்டியது.
“பொன்சென்னியா? இளவேட்டனாருக்கு உடன் பிறந்தவனா? அவன் எங்ஙனம் பாண்டியருக்கு துணை நின்றான்?”
“அவர் பல நாடுகளுக்கு வணிகம் நிமித்தம் செல்வார்… பாண்டிய மன்னரின் ஒற்றர் படை அவருக்குப் பெரும் பொன் அளிப்பதாகக் கூறி, உம்மைப் பற்றிய ரகசியங்களைச் சேகரிக்கப் பயன்படுத்திக் கொண்டது. நேற்று நீவீர் நந்தவனத்தில் இருக்கும் செய்தியை தந்ததே அவர்தான்!” என்று கூறிவிட்டு அந்த ஒற்றன் மயக்கமுற்றுச் சரிந்தான்.
பெருஞ்சேரல் விறைப்பாகத் திரும்பினான். ஆதிரையின் குடும்பமே இந்தச் சதியில் சிக்கியிருப்பது அவனது இதயத்தை மீண்டும் ரணப்படுத்தியது. ஆனால், அவன் ஒரு மன்னன்!
அவன் துணைத்தளபதி மாறனைத் திரும்பிப் பார்த்தான். அவனது குரலில் இப்போது ஒரு கல் நெஞ்சக் காரனின் உறுதி இருந்தது.
“மாறா! இக்கணமே ஆதிரையின் இல்லத்தைச் சுற்றி வளைக்க வேண்டும். அந்தப் பாவி பொன்சென்னியை இழுத்து வா! வஞ்சகத்திற்குத் துணை நின்ற அவனது தமையன் இளவேட்டனாரையும் கைது செய்! ஆனால்…” அவன் சற்றுத் தயங்கினான். ஆதிரையின் முகம் அவன் நினைவில் வந்து போனது.
“ஆதிரையை ஒன்றும் செய்ய வேண்டாம். அவள் இல்லத்திலேயே இருக்கட்டும். அவளது தந்தையையும் சிற்றப்பனையும் இப்போதே சங்கிலியால் பிணைத்து இழுத்து வாருங்கள். வஞ்சகம் செய்தோர்க்கு இவ்வுலகில் இடமில்லை!”
மன்னனின் ஆணை கேட்டு மாறன் விரைந்தான். பெருஞ்சேரல் அந்தப் பாதாளச் சிறையின் இருளில் தனியாக நின்றான். அவன் நேசிக்கும் பெண்ணின் குடும்பமே அவனது கழுத்தை அறுக்கத் துணிந்திருப்பது, அவனை ஒரு கொடூரமான முடிவை நோக்கித் தள்ளியது.


Nice
நன்றிம்மா
Interesting
நன்றி ம்மா
Nice
thanks ma
Adhirai chithappa thaana thuppu koduthadhu...adhirai appavaiyum kaidhu pannanuma😥mangai pesinadhula adhirai manasu 4 step cheral kitta vanthadhu nu partha ini adhirai 20 steps back ah😥
அப்போதெல்லாம் விசாரணையும் தண்டனையும் அப்படித்தான் ம்மா. ஒருவர் தவறு செய்கிறார் என்றால், அவர்களது மொத்த குடும்பத்தையும் சிரச்சேதம் செய்வதும், கழுவேற்றுவதும் சாதாரணம். இரண்டாம் நான்காம் உறவுமுறை கூட தப்பாது. எடுத்துகாட்டாக, ஆதித்த கரிகாலனின் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்களின் சொந்தங்களின் சொத்துக்களை கூட பறித்து ஏலம் விட்டார்களாம். இது கல்வெட்டு ஆதாரம்.
அழகு
thanks
ஆதிரை குடும்பமா இதை செய்ய சொன்னது ...இருக்காது என நினைக்க தோணுதே.