அத்தியாயம் 14
பொற்பனை மாநகரின் பெருவீதியில், விண்முட்டும் கோபுரங்களுடன், சிற்பக் கலைகள் செறிந்த மாடங்களுடன் அரண்மனைக்கு நிகராகக் கம்பீரமாக நின்றது அந்தப் பெருமனை.
அது மாசாத்துவான் என்று போற்றப்படும் இளவேட்டனாரின் இல்லம். அந்த காலத்தில் ஒரு நாட்டின் செல்வச் செழிப்பைத் தீர்மானிக்கும் ஆற்றல் படைத்த வணிகக் குழுக்களின் தலைவராக அவர் திகழ்ந்ததால், அவரது இல்லம் சார்த்துவ மாளிகை என்று அழைக்கப்பட்டது.
அவரது இல்லம் வெறும் கற்களால் ஆனது மட்டுமன்று; அது இளவேட்டனாரின் நேர்மைக்கும், இடைவிடாத உழைப்பிற்கும் சான்றாக நின்றது. பல அடுக்குக் கட்டுகளைக் கொண்ட அந்த இல்லத்தின் முகப்பு வாயிலில், யானைத் தந்தங்களால் செதுக்கப்பட்ட வேலைப்பாடுகள் மின்னின. பல நாடுகளிலிருந்து கொண்டு வரப்பட்ட அகிலும் சந்தனமும் குங்குமப் பூவும் நறுமணத்தை பரப்பியபடியே இருந்தன.
இளவேட்டனார் சாதாரண வணிகர் அல்லர்; சேர நாட்டின் நறுமணப் பொருட்கள், முத்துக்கள் மற்றும் மிளகைத் திரைகடலோடி விற்று, ஈடாகப் பல நூறாயிரம் பொற்காசுகளையும், நவரத்தினங்களையும் தேசத்திற்குக் கொண்டு வந்தவர். அவரது ஒரு கையசைவில் வணிகக் கப்பல்கள் பாய்களை விரிக்கும்; மற்றொரு கையசைவில் சந்தைகள் கூடும். பல கோடிப் பொற்காசுகள் புழங்கும் அந்த வணிகப் பேரரசின் களஞ்சியங்கள் எப்போதும் செல்வத்தால் நிறைந்திருக்கும். அவரது இல்லத்தின் வாயிலில் எப்போதும் வறியவர்களும், புலவர்களும் மொய்த்துக் கொண்டிருப்பார்கள். இத்தனைப் பெருமை வாய்ந்த அந்த இல்லத்தின் கருங்காலி மரக் கதவுகள், அநீதிக்காக ஒருபோதும் திறந்ததில்லை.
ஆனால் அன்று நள்ளிரவில், அந்த மாளிகையின் அமைதியைக் கிழித்துக்கொண்டு வீரர்களின் வருகை நிகழ்ந்தது.
மாறன் தலைமையில், கையில் வேல் ஏந்திய வீரர்கள் அந்தப் பிரம்மாண்டமான மாளிகையைச் சூழ்ந்துகொண்டனர். அந்த வலிமையான வாயிற்கதவுகள், வீரர்களின் காலடிச் சத்தத்திலும், ஆயுதங்களின் மோதலிலும் அதிர்ந்தன. எப்போதும் தர்மம் கேட்டு வருபவர்களுக்காகத் திறக்கப்படும் அந்த இல்லம், அன்று வன்முறையால் திறக்கப்பட்டது.
தன் மாளிகையின் உட்புறத்தில் துயில் கொண்டிருந்த இளவேட்டனார், இரும்புச் சங்கிலிகளின் ஓசை கேட்டு திடுக்கிட்டு எழுந்தார். அவர் நிலவறைக்கு வந்து பார்த்தபோது, தன் இல்லத்தின் தூய்மையைச் சிதைக்கும் வகையில் வீரர்கள் ஆயுதங்களுடன் நிற்பதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்தார்.
“யார் நீங்கள்? பொற்பனை மாநகரின் வணிகத் தலைவனின் இல்லத்திற்குள், கங்குல் நேரத்தில் (நள்ளிரவில்) இங்ஙனம் அத்துமீறக் காரணம் என்ன? நும்முடைய வேந்தன் அளித்த அதிகாரம் இதுதானோ?” என்று இளவேட்டனார் கம்பீரமான குரலில் வினவினார். எனினும், வீரர்கள் சலனமின்றி அவரைச் சூழ்ந்து, அவரது கரங்களில் இரும்புக் கயிற்றால் விலங்கு பூட்ட முயன்றனர்.
“விவரங்களை அறிகிலோம் ஐய… சிறைப்படுத்த சொல்லி உத்தரவு. அதை மட்டுமே யாம் செய்கிறோம்…” அந்த அதிகாரி மென்மையான குரலில் கூற,
“பேச்சை விடுத்து வந்த வேலையைப் பாருங்கள்…” மாறன் சீறினான்!
“துணைத்தளபதியாரே… பிழையென்ன செய்தோமென்பதை சொல்வீரா?” அவனிடமாவது பதில் வருகிறதா என்று பார்த்தார் இளவேட்டனார்.
“கண்டிப்பாக தெரிய வேண்டுமா?” எள்ளலாக கேட்டான் மாறன்.
அப்போது, மின்னலென அங்கே ஓடிவந்தாள் ஆதிரை. அவளது கண்கள் கோபத்தில் சிவந்திருந்தன.
“துணைத்தளபதியாரே என்ன இது?” என்று அவள் கேட்டது பெரும் உறுமலாக தோன்றியது அவனுக்கு!
தேவையென வந்துவிட்டால் பேதையும் புலியாகி விடுவாள் போல!
“தங்களையும் வீட்டுக்காவலில் வைக்க சொல்லி உத்தரவு…” என்று தயக்கமாக பதில் கூறினான்.
“என்ன சொல்கிறீர்கள்? குற்றமென்ன யாம் இழைத்தோம்?”
“பேச எனக்கு அனுமதியில்லை. தயவு செய்து ஒத்துழைப்பு தாருங்கள்…” என்றான் மாறன்.
“நிறுத்துங்கள்! எம் தந்தையைத் தீண்ட நும்முள் எவருக்குத் துணிவுண்டு? பல கோடிப் பொற்காசுகளை அரசு கருவூலத்திற்கு வரியாக அளித்து, அரசின் பொருளாதாரத் தூணாக விளங்கும் இம்மாமனிதரை ஒரு குற்றவாளியைப் போல நடத்துவதா? வணிகர் குலத்தின் தலைவனைக் கைது செய்ய, எந்த அறத்தைக் கொண்டு வந்தீர் மாறா? இக்கணமே இங்கிருந்து ஏகுவீராக!” என அவளது குரல் அந்த மாளிகையின் நெடிய தூண்களில் முட்டி எதிரொலித்தது.
மாறன் தன் வாளைச் சற்றே தாழ்த்தி, “ஆதிரை! இது எம் தனிப்பட்ட ஆணை அல்ல, வேந்தனின் நேரடிக் கட்டளை. உமது சிற்றப்பன் பொன்சென்னி செய்த புல வஞ்சனைச் சதியில், அவரோடு நெருங்கிய தொடர்புடைய இளவேட்டனாருக்கும் பங்குண்டு என்ற ஐயத்தின் பெயரிலேயே இந்த நடவடிக்கை!” என்றான் அழுத்தமான குரலில், இனியும் கூறாமல் இருந்தால் சரியாக இருக்காது என கருதினான் மாறன்.
ஆதிரையின் பார்வை ஒரு மூலையில் முடங்கிக் கிடந்த சிற்றப்பன் பொன்சென்னியின் மீது விழுந்தது. அந்த உயர்ந்த இளவேட்டனார் குடும்பத்தில், நச்சுப் பயிராகத் தப்பிப் பிறந்தவன் சென்னி. அவன் எப்போதும் குறுக்கு வழியில் பொன் தேடுபவன் என்பதும், வஞ்சகப் புத்தி கொண்டவன் என்பதும் ஆதிரை அறிந்ததே. ஆனால், அதற்காகத் தன் தந்தை தண்டிக்கப்படுவதை அவளால் ஏற்க முடியவில்லை.
“பொன்சென்னி செய்த பிழைக்கு எம் தந்தை எங்ஙனம் பொறுப்பாவார்? இந்த கருங்காலி செய்த வஞ்சகத்திற்காக, எம் தந்தையை சிறைப்படுத்துகிறீர்களா? எம் தந்தை எக்காலத்தும் வஞ்சகத்தை நினையாதவர்!” என்று ஆதிரை ஆவேசமாக மொழிந்தாள். ஆனால், வீரர்கள் அவளது எதிர்ப்பைப் பொருட்படுத்தாது, இளவேட்டனாரை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றனர்.
தன்னைக் காப்பாற்றிய அதே பெருஞ்சேரல், இன்று தன் தந்தையைச் சங்கிலியால் பிணைக்க ஆணையிட்டதை எண்ணியபோது, ஆதிரையின் நெஞ்சில் நெருப்புப் பற்றியது. தன் தந்தையை மீட்பதற்காக, எத்தகைய போரையும் சந்திக்க அவள் துணிந்தாள்.
***
மரணத்தின் கருநிழல் படிந்த பாதாளச் சிறைக்குள் இளவேட்டனாரும் பொன்சென்னியும் தள்ளப்பட்டனர். அங்கே நிலவிய இருளும், எங்கோ ஒரு மூலையில் சித்திரவதைக்கு உள்ளாவோரின் மெல்லிய முனகலும் அந்த இடத்தையே நரகமாக மாற்றியிருந்தது.
ஒரு தூணில் பிணைக்கப்பட்டிருந்த சென்னியின் உடல், அங்கிருந்த ஒற்றனின் கோரமான நிலையைக் கண்டு நடுங்கியது. அருகில் இருந்த இரும்பு அறையில் இளவேட்டனார் அடைக்கப்பட்டிருந்தார். பொன்சென்னி மெல்லத் தலைசாய்த்து, தனக்கருகில் தொங்கிக் கொண்டிருந்த அந்த ஒற்றனிடம் ரகசியமாகக் குசுகுசுத்தான்.
“நண்பனே… எப்படியாவது எம்மைக் காத்திடு! பாண்டியர்களிடம் தூதனுப்பு. எம்மிடம் இன்னும் ஏராளமான பொன் மறைத்து வைக்கப்பட்டுள்ளது. இப்பேரிருளிலிருந்து நாம் தப்ப வழியுண்டா?” என்று வினவினான். அந்த ஒற்றன் பதில் கூற முற்படுவதற்குள், சிறைக் கதவு இடிமுழக்கத்துடன் திறந்தது.
கையில் சுடர்விடும் பந்தத்துடனும், குறுவாளுடனும் பெருஞ்சேரல் உள்ளே நுழைந்தான். அவனது காலடிச் சத்தம் அந்தப் பாதாளச் சிறையில் எமதர்மனின் வருகையைப் போல ஒலித்தது.
அவன் கையில் செந்நிறத்தில் பழுக்கக் காய்ச்சிய இரும்புச் சலாகை (கம்பி) இருந்தது. அவன் முன்னேறி வர வர, பொன்சென்னி சிறுநீர் கழித்துத் தரையில் சரிந்தான். பெருஞ்சேரல் அவனது தலைமுடியைப் பற்றித் தூக்கிச் சுவரோடு அமுக்கினான்.
“உடல் வலுவற்ற புல்லுருவியே! நாட்டைக் காட்டிக் கொடுக்க மட்டும் நாவினில் வன்மை (வலிமை) இருந்ததே… இப்போது எம் நிழல் பட்டதுமே உன் உயிர் ஊசலாடுகிறதோ?” என்று கர்ஜித்தவாறு, பழுக்கக் காய்ச்சிய அந்த இரும்பை சென்னியின் கணுக்காலுக்கு அருகே கொண்டு சென்றான்.
சென்னியின் தோலில் இருந்து கருகும் நாற்றம் எழத் தொடங்கியது. அவன் கதறினான். “வேந்தே! வேண்டா… யான் ஒரு வணிகன்! இச்சித்திரவதையைத் தாங்கும் திண்மை எனக்கில்லை!”
பெருஞ்சேரல் கசப்பாகச் சிரித்தான். “அதுதான் எனக்கும் தெரியுமே! ஒரு போர்வீரன் தன் சதையை அறுக்கும் போதும் மௌனம் காப்பான். ஆனால் உன்னைப் போன்ற கருங்காலிகள், மரணத்தின் வாடையை நுகர்ந்தாலே உண்மையை உக்குவார்கள்!” என்று கூறிவிட்டு, திடீரென அந்தப் பழுத்த இரும்பைச் சென்னியின் உள்ளங்கையில் அழுத்தினான்.
“ஆஆஆஆ…!” அந்த அலறல் இளவேட்டனார் அடைக்கப்பட்டிருந்த அறையின் சுவர்களையும் ஊடுருவியது. இளவேட்டனார் கண்களை மூடி, “அருகா… எம் அருகப் பெருமானே!” என முணுமுணுத்தபடி நிலைகுலைந்து அமர்ந்திருந்தார். அந்த நரகச் சூழலிலும், அவர் தன் மன உறுதியை விடவில்லை.
பெருஞ்சேரல் ஒரு கணம் அசையாமல் நின்றான். தீயில் காய்ந்த இரும்பு அவன் கையில் சிவந்தபடியே இருந்தது.
அந்தச் சிறையில், சற்றே நேரம் எவ்வித அலறலும் இல்லை.
அந்த அமைதியே பயங்கரமாக இருந்தது!
பெருஞ்சேரல் இளவேட்டனாரின் அறைக்கு அருகே சென்றான். மெல்லப் புன்னகைத்தான்.
“வணிகரே! இந்தச் சுடலைச் சிறையிலும் உம் முகத்தில் எங்ஙனம் இத்தனைத் திண்மை (உறுதி) நிலவுகிறது?”
இளவேட்டனார் நிதானமாகப் பதில் உரைத்தார். “வேந்தே! செய்த தவறுக்குத் தண்டனை உண்டு என்பது இறைவனின் விதி. யான் இப்புலத்திற்கு (நாட்டிற்கு) ஒரு சிறு வஞ்சகமும் இழைக்கவில்லை. கறைபடியாத கைகளுக்கு விலங்குகள் ஒரு பொருட்டல்ல. மரணம் வந்தாலும் அது அறத்தின் வழியே வரட்டும்!”
இந்த மன உறுதி தவறிழைத்தவருக்கு எக்காலத்தும் வாராது. உண்மையான வீரம் என்பது வாள் ஏந்துவதில் இல்லை, அறத்தின் வழி நிற்பதில் இருக்கிறது!
அடுத்த நொடி அவன் பொன்சென்னியின் பக்கம் திரும்பினான். பெருஞ்சேரலின் நிழல் பட்டதுமே பொன்சென்னி கதறத் தொடங்கினான். “வேந்தே! என்னை விட்டுவிடுங்கள்… நான் ஒன்றுமறியாதவன்! அந்த ஒற்றன் சொன்னதெல்லாம் பொய்!”
சிறைக்கோட்டத்தின் அந்தகாரத்தில், பெருஞ்சேரல் சென்னியின் கருகிய உள்ளங்கையைத் தன் காலால் மிதித்து அழுத்தினான். அந்த வலியின் உச்சத்தில் சென்னியின் கண்கள் பிதுங்கின.
“சென்னி! இத்தேசத்தின் கோடிக்கணக்கான செல்வத்தைக் களஞ்சியப்படுத்தும் ஒரு பெருவணிகக் குடும்பத்தில் பிறந்துவிட்டு, அற்பப் பொன்னுக்கு ஆசைப்பட்டு பாண்டிய ஒற்றர்களிடம் மண்டியிட்டாயே! உனக்கு இந்த வழியைக் காட்டிய கருங்காலி யார்? ஒரு வணிகனால் மட்டுமே அரண்மனையின் மந்தண (ரகசிய) அறைகளுக்குள் ஊடுருவ முடியாது. சொல்! உனக்கு மேலிருந்து ஆட்டுவிக்கும் அந்த அதிகாரம் யாது?” எனப் பெருஞ்சேரல் இடிமுழக்கத்துடன் வினவினான்.
பொன்சென்னி வலியில் துடித்தபடி, “வேந்தே… யான்… யான் ஒன்றும் அறியேன்…” என இழுத்தான்.
பெருஞ்சேரல் ஆக்ரோஷமாகச் சிரித்தான். அவன் அருகில் இருந்த வீரனிடம் சைகை செய்ய, அவன் ஒரு மர வாளியில் இருந்த கொதிக்கும் எண்ணெயைச் சென்னியின் காயங்களின் மேல் மெல்ல ஊற்றினான்.
“ஆஆஆஆ…!” சென்னியின் அலறல் அந்தப் பாதாளச் சிறையின் ஒவ்வொரு கல்லையும் அதிர வைத்தது. “வேண்டாம் வேந்தே! நிறுத்துங்கள்… சொல்லிவிடுகிறேன்! என்னை ஒன்றும் செய்யாதீர்கள்…”
பெருஞ்சேரல் அவன் முடியைப் பற்றித் தூக்கி, முகம் நேரே முகம் வைத்துச் சீறினான். “நீ வாழ வேண்டுமா? அப்படியெனில் அந்த நச்சுப் பாம்பின் பெயரை உக்கு!”
பொன்சென்னி மூச்சிரைக்கத் தொடங்கினான். மரண பயம் அவனது நாவைக் கட்டவிழ்த்தது. “அரசே… பாண்டிய ஒற்றர்களிடம் இருந்து வரும் பொன் மூட்டைகளை என்னிடம் ஒப்படைப்பது… நமது தலைமை அமைச்சர் குலசேகரரின் மகன் நெடுஞ்சேந்தன்! அவன்தான் எமக்குப் பாதுகாப்பு அளித்தான்.”
பெருஞ்சேரலால் அந்த அதிர்ச்சியை தாள முடியவில்லை. இவன் உண்மையை தான் கூறுகிறானா என்ற சந்தேகம் வந்தது.
“மாறா… அந்த கொதிக்கின்ற எண்ணையை எடு… பொய் சொல்கிறான் என்று தெரிந்தால் அப்போதே ஊற்றிவிடு…” என்று கூற,
“ஐயோ வேந்தே… யான் சொல்வது மெய்…” என்றவனின் கண்களில் கண்ணீர் கொட்டியது. அவனால் வலி தாள முடியவில்லை.
“மெய் பேசு…” கடுமையான முகத்துடன் சேரல் கூற,
“எம்மேல் ஆணையாக அவன் தான் வேந்தே! அவனது அடையாள ஆழியைக் காட்டினால், காவலர் எவரும் எம் வணிக நாவாய்களை மறித்து ஆயமாட்டார்கள். அமைச்சரின் மகனே இவ்வஞ்சச் சூழ்ச்சியின் சிலந்தி!”
பெருஞ்சேரல் பொன்சென்னியைத் தூக்கி எறிந்தான். அவனது விழிகளில் ஒரு கோபம் கனன்றது. இது உடனிருந்தே கொல்லும் வஞ்சனையல்லவா!
கையில் கிடைத்த பொருளையெல்லாம் தூக்கி எறிந்தான். அவனால் கோபத்தை அடக்க முடியவில்லை. குலசேகரரை எங்கனம் நம்பியிருப்பேன். அவரா, இப்படிப்பட்ட வஞ்சகத்தை செய்தது? அவனது மனம் இன்னும் இரும்பானது!
இளவேட்டனார் அடைக்கப்பட்டிருந்த அறையின் அருகே சென்று, “இளவேட்டனாரே! வஞ்சகம் புரிந்தோர் எவராயினும் இவ்வேந்தனின் வாள் ஓரவஞ்சனை காட்டாது. நும் உடன்பிறந்தான் இந்நாட்டைக் காட்டிக் கொடுத்தமையை ஒப்புக்கொண்டார். இனி இவருக்குப் பிழைபொறுத்தல் இல்லை!” என்றான்.
பெருஞ்சேரல் துணைத்தளபதி மாறனை நோக்கித் திரும்பினான். “மாறா! பொன்சென்னியையும் அந்த ஒற்றனையும் இக்கணமே சிரசேதம் செய்! அவர்களின் தலைகள் பொற்பனை மாநகரின் நாற்சந்தியில் தொங்கட்டும். வஞ்சகம் செய்வோருக்கு இதுவே பாடம்!”
இந்த சதியில் அமைச்சரும் அவரது மகனும் இருக்கிறார்கள் என்பது தெரிந்து விட்டது. ஆனால் பொன்சென்னியையும் ஒற்றனையும் தூக்கியது போல அவர்களை தூக்க முடியாது என்று அவனுக்குத் தெரியும். அதனால் விட்டுப் பிடிக்கத்தான் வேண்டும்.
“அப்படியென்றால் நெடுஞ்சேந்தனை என்ன செய்வது வேந்தே?”
“காத்திரு மாறா…” என்றவன், பாம்பு தானாக தலையை வெளியே நீட்டும் என்று நினைத்துக் கொண்டான்.


Very nice
thanks ma
அழகு
thanks ma
Nice intresting ud sis ❤️
thanks ma
சூப்பர் ❤️