அத்தியாயம் 15
பனிமூட்டம் மாநகரை மூடியிருந்தது. ஆனால், ஆதிரையின் நெஞ்சில் எரிந்து கொண்டிருந்த சினத் தீயை அந்தப் பனி குளிரச் செய்யவில்லை. அவள் நேராக அரண்மனை வாயிலை அடைந்தாள். மணித் தேரிலிருந்து இறங்கி உள்ளே போக முயன்றவளை, அங்கிருந்த காவற்படையினர் அவளைத் தடுத்தனர். அரசனை சந்திக்க அனுமதி வாங்கியிருக்க வேண்டும் தான். ஆனால் அந்த நேரத்தில் எதை பற்றியும் யோசிக்க அவளால் முடியவில்லை.
“நில்லுங்கள்! இது வேந்தரின் அவைக்களம். முறைப்படியான அனுமதியின்றி எவரும் உள்ளேக முடியாது!” என்று ஒரு காவலன் தன் ஈட்டியை வைத்து மறித்தான்.
மணித் தேரின் வனப்பு, அவளது செல்வநிலையை பறைசாற்ற, காவலர்கள் சற்று தணிந்தே கூறினர்.
ஆதிரை அவன் ஈட்டியைத் தன் கரங்களால் விலக்கிவிட்டுச் சீறினாள். “விலகுங்கள்! நாட்டின் மாசாத்துவானின் மகளைத் தடுக்க நும்முள் எவருக்குத் துணிவுண்டு? வழியை விடுங்கள்!”
அவளது ஆவேசத்தைக் கண்டு காவலர்கள் தயங்கினர். வாயிற்காவலர்களின் ஈட்டிகளை விலக்கிவிட்டு, ஒரு சீறும் பெண் புலியெனப் பெருஞ்சேரலின் அவைக்களத்தினுள் நுழைந்தாள் ஆதிரை.
மண்டபத்தின் நெடிய நடையெங்கும் வரிசையாக நின்றிருந்த பாவை விளக்குகள், அந்தப் பாவை விளக்குகளின் கைகளில் எரிந்த நெய் விளக்குகளின் சுடர், அரண்மனையின் அந்தகாரத்தை அகற்றி ஒரு பொன்னிற ஒளியைப் பரப்பிக்கொண்டிருந்தது.
விண்ணைத் தொடும் உயரத்தில் நின்றிருந்த கருங்கல் தூண்கள், வெறும் கல் தூண்கள் அல்ல; அவை சிற்பிகளின் கைவண்ணத்தில் உருவான காவியங்கள்.
அந்த மண்டபம் முழுக்கத் தூய அகில் புகையும், மலர்களின் நறுமணமும் கவிழ்ந்திருக்க, அந்தப் புகை மண்டலத்திற்கு நடுவே அரியாசனத்தில் அமர்ந்திருந்த பெருஞ்சேரல் மேகங்களுக்குள் மறைந்திருக்கும் கதிரவனைப் போலத் தெரிந்தான். அரண்மனையின் உட்புறங்களில் தொங்கவிடப்பட்டிருந்த உயர்தரப் பட்டுத் திரைகள் (எழினி), காற்றின் அசைவிற்கு ஏற்ப மெல்ல அசைந்தாடிக் கொண்டிருந்தன!
அந்த அழகிய சிற்பங்களுக்கு நடுவே, உயிர் பெற்ற ஒரு ருத்ர சிற்பமாக அவள் பெருஞ்சேரலின் முன்னே போய் நின்றாள்.
அரியாசனத்தில் அமர்ந்திருந்த பெருஞ்சேரல், அமைச்சர்களுடன் எல்லைப் பாதுகாப்பு குறித்து விவாதித்துக் கொண்டிருந்தான். அவனது முகம் இரும்பைப் போலக் கடினமாக இருந்தது. சற்று நேரத்துக்கு முன்பு தான் பொன்சென்னியை விசாரணை செய்து முடித்திருந்தான். இரவெல்லாம் உறங்காத களைப்பு வேறு அவனை அழுத்தியது.
வாயிற்காவலர்களை மீறி ஆதிரை உள்ளே நுழைந்ததைக் கண்டு அவை ஸ்தம்பித்தது.
பெருஞ்சேரல் அவளைக் கண்டதும் ஆசனத்திலிருந்து மெல்ல எழுந்து வந்தான். அவனது விழிகளில் ஒரு மெல்லிய வலி தோன்றி மறைந்தது. ஆதிரை அவன் முன்னே வந்து நின்றாள்.
“இதுதான் நீவீர் உரைத்த அறமா வேந்தே?” கோபம் கொந்தளித்துக் கொண்டிருந்தது அவளது குரலில்.
“இது அவைக்களம் ஆதிரை. நாம் பிறகு பேசலாம். நீ இல்லமேகு…”
“பிறகு பேச என்ன இருக்கறது வேந்தே?” அவளது கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது.
“சரி, உள்கோட்டமேகு. யான் இந்தச் சூழ்ச்சியை (ஆலோசனையை) முடித்துவிட்டு வருகிறேன்; எதுவாயினும் நினக்குத் தனியே விரித்துரைப்பேன்!” அவளது கண்ணீரை காண அவனால் பொறுக்க முடியவில்லை.
“வேந்தே! இதுதான் நும்முடைய அறமோ? நள்ளிரவில் நந்தவனத்தில் உயிரைக் காப்பீர்; விடிவதற்குள் அதே உயிரின் வேரை அறுப்பீரோ?”
அவனது மேலாடையை பற்றியவள், உலுக்கினாள்.
அவளது கைவளைகள் கோபத்தில் குலுங்க, அந்தப் பாவை விளக்குகளின் ஒளியில் அவளது கண்கள் இரண்டு தீப்பந்தங்களைப் போல எரிந்தன. ஒரு பேரரசனின் மேலாடையைத் தொடுவது என்பது அந்தச் சபையில் எவராலும் கற்பனை செய்ய முடியாத ஒன்று. ஆனால், ஆதிரை அதை இப்போது செய்து கொண்டிருந்தாள்.
“எம் தந்தை எக்காலத்தும் இந்நாட்டுக்கு வஞ்சனம் புரியாதவர். பல கோடிப் பொற்காசுகளைத் தேசத்திற்கு வரியாகத் தந்தவரைப் பாதாளச் சிறையில் அடைக்க உமக்கு எப்படி மனம் வந்தது?”
பெருஞ்சேரல் அவளது கரங்களை மெல்ல விலக்கிவிட்டு, அங்கிருந்த அமைச்சர்களை நோக்கி ஒரு தீட்சண்யமான பார்வை பார்த்தான். ‘இதில் யாரும் தலையிடக் கூடாது’ என்ற உத்தரவு அந்த பார்வையில் இருந்தது. கூடவே அதிகாரத்தின் கனமும், சொல்ல முடியாத ஒரு ரகசியத்தின் பாரமும் கலந்திருந்தது.
அப்போது, அரசவையின் அமைதியைக் கிழித்துக் கொண்டு தலைமை அமைச்சர் குலசேகரரின் குரல் அதிகாரத் தோரணையில் ஒலித்தது.
குலசேகரர் தனது ஆசனத்திலிருந்து ஆவேசமாக எழுந்தார். அவரது நரைத்த தாடியும், அதிகாரக் குரலும் அந்த மண்டபத்தின் கருங்கல் தூண்களில் மோதி எதிரொலித்தன. “நிறுத்து பெண்ணே! இஃது எத்தகு அதர்மம்? பாராளும் வேந்தனின் மேலாடையைப் பற்றி இழுக்க உனக்கு எவர் அதிகாரம் தந்தது? இது அரச நிந்தனை அன்றோ!” என்று சீறினார்.
“அமைச்சரே…” அருகிலிருந்தவர்கள் அவரை நிறுத்த முயல, ஆனால் அவர் அவர் அதையெல்லாம் கவனிக்க முயலவில்லை.
அவரது கண்கள் கோபத்தில் சிவக்க, ஆதிரையை நோக்கித் தன் விரலை நீட்டினார். “மாசாத்துவானின் மகளாகப் பிறந்த ஒரு பேதை, இத்தகு அரசவை விதிகளையும், ஒரு மங்கைக்குரிய அடக்கத்தையும் அறியாதவளாக இருப்பது வருந்தத்தக்கது. வேந்தனின் அதிகாரத்தை எள்ளி நகையாடும் உனது இந்தச் செய்கைக்குக் கடும் தண்டனை உண்டு!” என எச்சரித்தார்.
சேரலின் விழிகள் ஆதிரையைப் பார்த்துக் கொண்டிருந்தாலும், அவனது ஆழ்மனம் குலசேகரரின் மகன் நெடுஞ்சேந்தன் செய்த வஞ்சகத்தை எண்ணி எரிமலையெனக் கொதித்துக் கொண்டிருந்தது. தன் முன்னே அழுது கொண்டிருக்கும் ஆதிரையைச் சமாதானப்படுத்துவதா? அல்லது அவளது குடும்பத்தையும் அவமானப்படுத்திக் கொண்டிருக்கும் குலசேகரரின் வஞ்சக முகத்தை இப்போதே கிழிப்பதா?
சூழல் மெல்ல இறுகியது. சுற்றியிருந்த பாவை விளக்குகளின் சுடர் காற்றில் அலைக்கழிக்கப்பட, அந்தத் தூண்களில் செதுக்கப்பட்ட யாளிகளின் நிழல்கள் பெருஞ்சேரலின் அதிகாரத்தை ஒரு பூதமாகச் சுவரில் வரைந்து கொண்டிருந்தன.
பெருஞ்சேரல் மெல்லத் தனது கரங்களால் ஆதிரையின் விரல்களை அவனது மேலாடையிலிருந்து விடுவித்தான். அந்த அசைவில் ஒரு பேரரசனின் அதிகாரம் தென்படவில்லை; மாறாக, காயப்பட்ட தன் உயிருக்குத் தரும் மென்மையான ஆறுதலே குடிபுகுந்திருந்தது. பின்னர், ஆவேசமாக நின்றிருந்த தலைமை அமைச்சர் குலசேகரரை நோக்கித் திரும்பினான்.
அவனது விழிகளில் இப்போது ஒரு புதிய உக்கிரம் படர்ந்திருந்தது.
“அமைச்சரே! நிதானம் கொள்வீர்! இது எம்பாலுள்ள தனிப்பொருள்…” என்றான் பெருஞ்சேரல். அவனது குரல் அந்தப் பெரும் மண்டபத்தின் கருங்கல் தூண்களில் மோதி ஒரு இடிமுழக்கத்தைப் போல எதிரொலித்தது.
பெருஞ்சேரலின் பார்வை குலசேகரரைச் சுட்டெரித்தது.
“ஆதிரையின் சீற்றத்தில் பொதிந்துள்ள அறத்தை யான் உணர்வேன். அவளது தந்தை இத்தேசத்தின் மாசாத்துவான். ஒரு மகளின் தவிப்பை அரச நிந்தனை என்று வகைப்படுத்துவது உமது முதிர்ச்சிக்கு அழகல்ல…” என்று கூறி குலசேகரரின் வாயை ஒரு கணத்தில் அடைத்தான். அரசவையில் நிலவிய நிசப்தம் இன்னும் கனத்தது.
பின்னர், ஆதிரையின் பக்கம் சாய்ந்து, அவளது கலங்கிய கண்களைத் தன் பார்வையால் நிலைநிறுத்தினான். அங்கிருந்த பாவை விளக்குகளின் சுடர் அவனது முகத்தில் ஒரு கனிவான ஒளியைத் தந்திருந்தது.
“ஆதிரை, கலங்காதே! நும் தந்தையின் நேர்மையை இச்சமூகமும், இந்த அரியாசனமும் நன்கு அறியும். ஆனால், முறைமை சிலசமயம் இவ்வாறாகத்தான் இருக்கும். வினவுதல் என்பது தண்டனையல்ல; அது உண்மையை உரசிப் பார்க்கும் ஒரு கல் மட்டுமே…” என்று மென்மையாக அவன் கூற, ஆதிரையின் முகம் சமாதானத்தை சுமக்கவில்லை.
பெருஞ்சேரல் இவ்வளவு மென்மையாக பேசி அவர்கள் பார்த்ததே இல்லை. அதுவும் பெண்களை, ஏறெடுத்தும் பார்க்காதவன் இந்த பெருஞ்சேரல் என்பது அவர்கள் அனைவருமே அறிந்த உண்மை!
சுற்றியிருந்த அமைச்சர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். அரசன் ஒரு வணிக மகளுக்காகத் தலைமை அமைச்சரையே கடிந்துகொண்டது, முணுமுணுப்பைத் தோற்றுவித்தது. அவள் வணிக மகள் மட்டுமில்லையோ என்ற கேள்வி எழுந்தது!
“வினவுதலா? ஒரு முதியவரைச் சங்கிலியால் பிணைத்து இழுத்து வருவதுதான் வினவுதலா?” என்று குரல் நலுங்கிக் அழுதாள்.
பெருஞ்சேரல் அவளது விழிகளை உற்று நோக்கினான்.
“ஆதிரை! வேந்தன் என்பவன் உணர்ச்சிகளுக்கு அடிமையாகக் கூடாது. நும் தந்தை குற்றமற்றவர் எனின், அவர் ஒரு மயிர் இழை கூடச் சேதமின்றி விடுவிக்கப்படுவார். ஆனால், ஆய்வு முடியும் வரை அவர் எம் காவலில் இருப்பார். இதுவே முறைமை!”
“முறைமையா? நீர் கல்லால் ஆன மனிதர்!” என்று கூறியவள், முகத்தை மூடிக் கொண்டாள்.
என்ன இருந்தாலும் இவள் இன்னும் சிறு பெண் என்பதை தினம் தினம் நிருபிக்கிறாளே என்றெண்ணியவன், பெருமூச்செறிந்தான்!
பெருஞ்சேரல் அவளருகே குனிந்து, தாழ்ந்த குரலில் சொன்னான். “அஞ்சற்க தேவீ! இளவேட்டனார் ஒரு மயிரிழை கூடச் சேதமின்றி மீட்கப்படுவார் என யானுனக்கு பிணைப்படுகிறேன். நீ இக்கணமே இல்லமேகு. நின் தந்தையின் மாண்பு எம் மாண்புக்கு நிகரானது…”
அவனது வார்த்தைகளை மனம் நம்ப சொன்னாலும் அறிவு ஏற்க மறுத்தது.


Nice
thanks ma
Nice
thanks ma
அழகு
thanks ma
Nice intresting ud sis ❤️
thanks ma
சூப்பர்❤️