arrow_back
வற்பனை சேரல் அத்தியாயம் 16
வற்பனை சேரல் chevron_right பகுதி 16 / 28

அத்தியாயம் 16

visibility 540
star படைப்பை ரேட் செய்யுங்கள்
சராசரி 4.6/5 (7 மதிப்பீடுகள்)
பகிர்

அரசியல் சூழ்ச்சிகளும், குருதி பலிகளும் பொற்பனை மாநகரை உலுக்கி இருந்தன. ஒற்றன் மற்றும் சென்னியின் சிரசேதத்தினால் ஏற்பட்ட அதிர்வுகள் அடங்குவதற்குள், ஆதிரையின் உள்ளம் ஒரு பெரும் போராட்டக்களமாக மாறியிருந்தது.

தன் தந்தை இளவேட்டனார் எவ்விதக் களங்கமுமின்றி விடுதலை பெற்று இல்லம் திரும்பியது ஆதிரைக்குப் பெரும் அமைதியைத் தந்தது. எனினும், அவளது உறக்கத்தைக் கலைத்தது, அவர் கூறிய அந்தப் பாதாளச் சிறையின் காட்சிகள் தாம்.

நந்தவனத்தில் அவளைக் காக்க வேங்கையெனப் பாய்ந்த பெருஞ்சேரலும், சிறையில் கொதிக்கும் எண்ணெயை ஊற்றிச் சென்னியை வதைத்த அதே பெருஞ்சேரலும் அவளது மனக்கண்ணில் மாறி மாறி வந்து மறைந்தனர். ஒரு புறம் நன்றியுணர்வு, மறுபுறம் அவனது உக்கிரத்தைக் கண்ட அச்சம், இவ்விரண்டிற்கும் இடையே அவளது இதயம் ஊசலாடியது.

மாளிகையின் ஆடம்பரமும், தந்தையின் அரவணைப்பும் அவளது தவிப்பை ஆற்றவில்லை. இறுதியில், அமைதியைத் தேடி, மீண்டும் அந்தக் கானகத்து ஆதித்தாயான கொற்றவை கோயிலை நோக்கிப் புறப்பட்டாள்.

அடர்ந்த காட்டின் மௌனத்தைக் கிழித்துக்கொண்டு ஆதிரை அந்தக் கோயிலை அடைந்தாள். அங்கே நிலவிய சூழல் அவளை ஒரு கணத்தில் ஸ்தம்பிக்க வைத்தது.

ஆலமரத்தின் விழுதுகளுக்குக் கீழ், எருமைத் தலையின் மீது நின்றிருந்த கொற்றவையின் காலடியில், ஒருவன் சிலையென அமர்ந்திருந்தான். அவன் பெருஞ்சேரல்! இராஜதந்திரங்களையும், போர்க்களக் கூச்சல்களையும் வஞ்சகங்களையும், விரோதங்களையும் சுமக்கும் அந்தத் தோள்கள் இப்போது தளர்ந்திருந்தன. எப்போதுமே அதிகாரத்தின் கனலைக் கக்கும் அவனது கண்கள் மூடியிருந்தன. தீப்பந்தங்களின் ஒளியில் உக்கிரமாகக் காட்சி தரும் அவனது முகம், இப்போது நிலவொளியின் குளிர்ச்சியைப் போல துறவிக்குரிய அமைதியைக் கொண்டிருந்தது.

அவனைக் கண்டதும் ஆதிரையின் இதயம் ஒரு கணம் விக்கித்து நின்றது. அவனது அந்த அமைதியானக் கோலம், அவளது அனைத்துக் கோபங்களையும் ஒரு நொடி கரைக்க முயன்றது. எனினும், அந்தப் பாதாளச் சிறையில் அவனாடிய குருதியாட்டம் அவளது நினைவில் வர, அவள் திகைத்து நின்றாள்.

அவனது ஆழமான தியானத்தைக் கலைக்க விரும்பாமல், மிக மென்மையாகத் தன் வழிபாட்டை முடித்துவிட்டு அத்தலத்தை விட்டு நகரத் துணிந்தாள். ஆனால், ஒரு வேந்தனின் புலன்களுக்குக் காட்டின் சலசலப்பும் ஒரு செய்தியைச் சொல்லுமன்றோ?

ஆதிரை ஒரு அடி எடுத்து வைப்பதற்குள், பெருஞ்சேரல் தன் கண்களைத் திறக்காமலேயே பேசத் தொடங்கினான்,

“வழிபட வந்தவள் வைகறைத் தென்றலெனத் தீண்டியும் தீண்டாமல் மறைவதேனோ?”

அவனது குரலில் அதிகாரத்தின் வன்மை இல்லை, மாறாக, தாகமும், மெல்லியக் ஏக்கமும் கலந்திருந்தது. அந்த அழைப்பு ஆதிரையை அப்படியே கட்டிப்போட்டது. அவளால் நகரவும் முடியவில்லை, அவனை எதிர்கொள்ளும் துணிவும் அவளிடம் இல்லை.

சிறுபிள்ளையை போல அவைக்களத்தில் அவள் நடந்து கொண்ட முறையை இளவேட்டனார் மிகக் கடுமையாக கண்டித்திருந்தார். அந்த இடத்தில் இருந்தவன் பெருஞ்சேரல் தானே என்ற அகம்பாவம் தானே உன்னை அப்படி முறையை தாண்டி நடக்க வைத்தது என்று அவளது மனமும் அவளை இடித்துரைக்கத்தான் செய்தது.

ஆனாலும் அவளது கோபமும் குறைந்தபாடில்லை.

கொற்றவை கோயிலின் அந்தப் பழமையான கருங்கல் தூண்கள், ஆதிரையின் சீற்றத்தையும் பெருஞ்சேரலின் ஆழமான மௌனத்தையும் மௌன சாட்சிகளாகப் பார்த்துக் கொண்டிருந்தன.

ஆதிரை சட்டெனத் திரும்பி அவனை எதிர்கொண்டாள். அவளது விழிகளில் நீர் திரையிட்டிருந்தாலும், அதில் தீப்பிழம்பும் மின்னியது.

 “வேந்தே! எம் தந்தை எவ்விதக் களங்கமுமின்றி இல்லம் திரும்பியதற்கு, இவ்வாதித்தாய்க்கு கைம்மாறு செலுத்தவே யான் இங்கு வந்தேன். உமது தியானத்தின் அமைதியைக் கலைக்கவோ, அன்றி உமது செங்கோல் செலுத்தும் ஆதிக்கத்தைக் கண்டு வியக்கவோ இப்பேதை இங்கு வரவில்லை!” என்று குளிர்ந்த குரலில் மொழிந்தாள், ஆதிரை.

பெருஞ்சேரல் மெல்லத் தனது தியான நிலையிலிருந்து எழுந்தான். அவனது அசைவுகளில் ஒரு அரசனுக்கே உரிய நிதானம் இருந்தது. அவன் அவளை நோக்கி சில அடிகள் முன்னே வந்தான். அவனது கண்கள் அவளது வாடிய முகத்தை ஊடுருவிப் பார்த்தன.

“நன்றி மட்டும்தானா? உமது விழிகளில் பொழியும் இந்தக் கண்ணீருக்குக் காரணம் வெறும் நன்றிக்கடன் தானா? அன்றி, எம்மைப் பார்த்தால் எழும் அந்த ஆழமான வெறுப்பா? உண்மையை உரைப்பாயா தேவீ?” என்றான்.

அவனது தேவீ என்ற அழைப்பு அவளை புரட்டிப் போட்டது. உள்ளுக்குள் துடித்துக் கொண்டிருந்த இதயம் இப்போது கொதிக்க துவங்கியது!

ஆதிரையின் பொறுமை எல்லை மீறியது. அவளது உள்ளத்தில் தேக்கி வைத்திருந்த அத்தனை ஆதங்கங்களும் எரிமலையாக வெடித்தன.

“காரணங்கள் ஆயிரமுண்டு வேந்தே! நீர் காக்கும் இந்தச் செங்கோல், எம் இல்லத்தின் அமைதியைக் குலைத்துவிட்டதே! எம் தந்தை குற்றமற்றவர் என்று நீர் அறிந்திருந்தும், அவரைப் பாதாளச் சிறையில் அடைத்து வதைத்தது தான் உமது நீதியோ?”

“அவையாவும் முறைமைப்படி தானே நடந்தன தேவீ? நின் தந்தை என்பதற்காக வளைந்து கொடுப்பதும், சிற்றப்பன் என்பதற்காக பொன்சென்னி போன்ற கொடும் தவறிழைத்தவருக்கு எம் ஆட்சியில் மன்னிப்பு என்ற ஒன்று இல்லையே!”

“எம் சிற்றப்பன் பொன்சென்னி பிழை செய்திருக்கலாம்; ஆனால், ஒரு மாவீரனாக அவரை விசாரணைக்கு உட்படுத்துவதை விடுத்து, ஒரு கோழையைப் போல அவரைச் சித்திரவதை செய்து, மக்கள் காணும் வண்ணம் சிரசேதம் செய்தது எவ்வகை அறம்?”

“இந்த பெருஞ்சேரலின் முன் அதுதான் அறம் தேவீ… செங்கோன்மையில் வேறுபாடு காட்டக் கூடாது…” கொஞ்சமும் கலங்காமல் கூறினான் அவன்.

 “அது கொடுங்கோன்மை!” என அவள் சீறினாள்.

பெருஞ்சேரல் அவளது சீற்றத்தைக் கண்டு சற்றும் அஞ்சவில்லை. மாறாக, அவனது முகம் ஒரு கல்லினைப் போல இறுகியது.

 “ஆதிரை! திரும்ப திரும்ப சொல்கிறேன். வேந்தன் என்பவன் ஒரு தனிமனிதன் அல்லன். உன் சிற்றப்பன் பொன்சென்னி வெறும் திருடன் அல்ல; அவன் இத்தேசத்தின் பாதுகாப்பை அந்நிய நாட்டு ஒற்றர்களிடம் விற்ற கருங்காலி. ஒரு வஞ்சகனுக்கு சித்திரவதை என்பது வெறும் தண்டனையல்ல, அது அவனைப் போன்ற பிற வஞ்சகர்களுக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை!” என்றான் அதிகாரக் குரலில்.

 “எச்சரிக்கையா? குருதியை கொண்டுதான் எச்சரிக்கை விட வேண்டுமா?”

“நீ சிறு பெண் என்று தினம் தினம் நிருபிக்கிறாய் தேவீ…”

பெருஞ்சேரல் அவளருகே மிக நெருக்கமாக வந்தான். அவனது மூச்சுக்காற்று அவளது முகத்தில் பட்டது. அவனது விழிகளில் இப்போது ஒருவிதத் தவிப்பு தெரிந்தது.

“தேவீ! வேந்தனின் வாள் எப்போதும் கனமானது. யான் செய்த ஒவ்வொன்றும், நாளை ஆயிரக்கணக்கான குடிமக்கள் அமைதியாக உறங்க வேண்டும் என்பதற்காகவே. நும் தந்தை மீதான பாசம் எம் கண்களை மறைக்கவில்லை; அதனால்தான் அவரைச் சங்கிலியால் பிணைத்த அதே கைகளால் அவரது சிறைக் கதவைத் திறந்து விடுவித்தேன். ஆனால், சென்னியின் வஞ்சகம் மண்ணுக்கு இழைக்கப்பட்ட வஞ்சகம். அதை மன்னிக்க எமக்கு உரிமையில்லை!”

 “அறத்தின் பெயரால் நீர் செய்யும் இக்கொடுமைகளை முறைமைப்படுத்தாதீர் வேந்தே!” என்றாள் ஆதிரை.

அவளது சொற்கள் ஒவ்வொன்றும் அவனது இதயத்தை ஒரு வாளை விடக் கூர்மையாகத் துளைத்தன. பெருஞ்சேரல் மௌனமானான்.

 “ஆதிரை… காலம் எல்லாவற்றையும் மாற்றும். இன்று எம் கைகளில் உதிரம் தெரிந்தாலும், நாளை இத்தேசத்தின் அமைதியில் எம் அறம் விளங்கும். உனது வெறுப்பைக் கண்டும் உன் இல்லத்திற்கு யான் காவல் வைத்திருக்கிறேன் எனில், அது உன் மேல் கொண்ட அதிகாரத்தால் அல்ல, நீ இல்லையேல் எம் வாழ்வு சூன்யமாகிவிடும் என்ற விழைவினால் (அன்பினால்)!” என்றான் மிகவும் உருக்கமாக.

ஆதிரை பதில் பேசவில்லை. அவனது விழிகளில் தெரிந்த அந்த உண்மையானத் தவிப்பு அவளை மெல்ல நிலைகுலையச் செய்தது. இருவருக்கும் இடையே இருந்த அந்த மௌனம், அந்த அடர்ந்த காட்டின் அமைதியை விடக் கனமாக இருந்தது.

அவர்கள் விவாதித்துக்கொண்டே கோயிலை விட்டு வெளியேறி, அடர்ந்த மரங்கள் சூழ்ந்த ஒற்றையடிப் பாதையில் நடக்கத் தொடங்கினர்.

“அறம் என்பது குருதி கொண்டு எழுதப்படுவதல்ல வேந்தே!” என்று அவள் சீறியபோது, வானம் சட்டெனத் தன் நிறத்தை மாற்றிக்கொண்டது.

கார்மேகங்கள் ஒன்றோடொன்று மோதி, ஒரு பெரும் போர் முரசின் ஒலியைப் போல இடி முழங்கியது. கானகமே ஒரு கணத்தில் அந்தகாரத்தில் மூழ்கியது. மின்னல் கீற்றுகள் வானைப் பிளக்க, பெரிய மழைத்துளிகள் மண்ணைத் தாக்கத் தொடங்கின.

“ஆதிரை, இங்கே ஒதுங்கு!” பெருஞ்சேரல் அவளது மென்மையானக் கரத்தைப் பற்றி இழுத்தான்.

அவள் திமிறினாள், “எம்மைத் தீண்டற்க வேந்தே! உமது அருகாமையை விட மழையில் நனைவது இனிது…” என்றாள் பிடிவாதமாக.

ஆனால், பெருஞ்சேரல் விடவில்லை. அவளைத் தூக்கிச் செல்வது போல இழுத்துச் சென்று, பாதையோரம் சிதிலமடைந்துக் கிடந்த ஒரு சிறு மண்டபத்தின் மறைவிற்குள் புகுந்தான். அது நான்கு கருங்கல் தூண்கள் கொண்ட ஒரு சிறிய மேடை. மூன்று புறம் மறைக்கப்பட்டு இருந்தது. வழிபோக்கர்கள் அமர்ந்து உண்பதற்காகவும், இரவில் உறங்குவதற்காகவும் இதுபோன்ற மேடைகள் அமைக்கப்படும்.

மழை ஆவேசமாகப் பெய்யத் தொடங்கியது. மண்டபத்தின் கூரை கசிந்தாலும், அது அவர்களைப் பெருமழையிலிருந்து ஓரளவு காத்தது. நனைந்த ஆடைகளுடன் ஆதிரை குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தாள். அந்தச் சிறிய இடத்திற்குள் நிலவிய நெருக்கம், அவளது சீற்றத்தை மெல்ல மெல்லத் தணித்தது, ஒருவிதக் கிறக்கத்தைத் தந்தது.

வெளியே பெருமழையின் ஆவேசத்தில் வானம் கிழிபட, அவ்வப்போது வெட்டி மறைந்த மின்னல் கீற்றுகள் அந்த மண்டபத்திற்கு ஒரு பேய்மை கலந்த அழகைத் தந்தன.

மண்டபத்தைத் தாங்கி நின்ற நான்கு தூண்களின் உச்சியிலும் செதுக்கப்பட்டிருந்த யாளிகள், மின்னல் ஒளியில் உயிர்பெற்று வருவது போலத் தெரிந்தன. மின்னல் வெட்டும் அந்த ஒரு நொடியில், அந்த யாளிகளின் பிதுங்கிய கண்களும், அகன்ற வாய்களும் பெருஞ்சேரலின் ஆவேசமான முகத்தையே பிரதிபலிப்பது போல ஆதிரைக்குத் தோன்றியது. அதன் நிழல்கள் தரையில் ஒரு அரக்கனைப் போல நீண்டு விழுந்து, அடுத்த நொடி இருளில் கரைந்து ஆதிரையின் அச்சத்தைக் கூட்டின.

தூண்களின் ஒருபுறம் செதுக்கப்பட்டிருந்த பாவை விளக்குகள், இப்போது கைகளில் ஒளியின்றி வறண்டு போயிருந்தன.

மண்டபத்தின் உட்புறச் சுவர்களில் வழிந்தோடிய மழைநீர், அந்தப் பழைய கல் சுவர்களுக்கு மின்னும் மெருகைத் தந்திருந்தது. காற்றில் கலந்திருந்த மண்ணின் வாசனையோடு, முன்பு அங்கே எரிந்த அகிற்புகையின் மெல்லிய வாசம் இன்னும் அந்தச் சுவர்களில் ஒட்டியிருப்பதைப் போன்ற ஒரு மயக்கத்தை ஆதிரை உணர்ந்தாள்.

பெருஞ்சேரல் அவளருகே மிகவும் நெருங்கி நின்றான். அவனது உடலின் வெப்பம் ஆதிரையைத் தீண்டியது. அவள் விலகி நிற்க, மீண்டும் அவளை ஒட்டி நின்றான் அந்த கள்வன்!

அவளது முகத்தில் வழிந்த மழைத்துளிகளை அவன் தன் கரங்களால் துடைக்க முயன்றான்.

“விலகி நிற்பீர் வேந்தே…” அவளது குரலில் இப்போது வலிமை இல்லை, ஒருவிதத் தவிப்பு இருந்தது.

“தேவீ! எத்தனையோ போர்க்களங்களைக் கண்டவன் யான். ஆனால், உன் விழிகளில் வழியும் இந்தக் கண்ணீரின் முன்னே நிராயுதபாணியாக நிற்கிறேன்…” அவள் புறம் குனிந்து கிசுகிசுப்பாக அவன் கூற, அவன் வெப்பமான மூச்சுகாற்று அவளது பிடரியை தீண்ட, கூச்சமாக விலகப் பார்த்தாள்.

அவளது கூச்சம் அவனுக்கு சம்மதத்தை தருவது போல இருக்க, அவன் இன்னும் கொஞ்சம் முன்னேறினான். அவனது அண்மை அவளை நடுங்க செய்தது. தவிக்கச் செய்தது.

மெல்ல அவளது மெல்லிடையில் கைவைத்தான். அந்த மென்மை அவனை கருந்துளையாக இழுத்துக் கொள்ள ஆரம்பிக்க, படர காத்திருந்த கொடியை தன்னோடு வளைத்துக் கொண்டான்.

அவளது உடல் வெளிப்படையாகவே நடுங்கவாரம்பித்தது.

“வேந்தே…” அவள் விலக முயன்றாள், முடியவில்லை. அவனது பிடி உடும்பாக இறுகியது!

“ம்ம்ம்…” அவனும் அவனது இயல்பில் இல்லை. பேரின்ப மயக்க சுழலுக்குள் மூழ்கி விட துடித்தான். அவனது ஒவ்வொரு அணுவையும் அவளது அண்மை தட்டி எழுப்பிக் கொண்டிருந்தது.

“ம்ஹூம்…” கிறக்கமாக அவள் மறுத்து அவனை விலக்க முயல, அவனோ இன்னமும் அவளை நெருங்கி இறுக்கி அணைத்தான்!

 அந்தத் அணைப்பில் அதிகாரம் இல்லை, பெருங்காதல் இருந்தது.

அவனது முகத்தை ஏறிட்டு பார்க்க வெட்கப்பட்டு, அவனது மார்பில் சாய்ந்துவிட்டாள். அவளது இதயத்துடிப்பு அவனது இதயத்துடன் ரகசியம் பேசியது. அவன் அவளது முகத்தை ஏந்தி, மெதுவாக அவளது நெற்றியில் இதழ் பதித்தான்.

அவளுக்குள் ஆயிரம் பூகம்பங்கள்!

அவளது முகத்தை கையிலேந்தி மூடியிருந்த அந்த விழிகளை அவன் விழிகளால் விழுங்கினான். அவனது கட்டுப்பாடுகள் தளர்ந்தன!

மென்மையாக அந்த விழிகளில் முத்தமிட்டான்.

வெளியே பெருமழை பெய்துக் கொண்டிருந்தது.

இங்கே காதல் மழை பொழியவாரம்பித்தது!

“தேவீ…” அவனது குரல் மெல்லிய யாழின் இசையாய் இழைந்தது. அதில் எல்லையில்லா காதல் கொட்டிக் கிடக்க, மெல்ல கண்களை திறந்து பார்த்தாள். அவனது கண்களும் உதடுகளும் அவளிடம் ஆயிரம் கதை சொல்ல காத்திருந்தது! அதில் காதலனின் ஏக்கமும், எல்லையில்லாப் பிரியமும் ததும்பிக் கிடந்தன.

ஆதிரை தன் இமைகளை மெல்லத் திறந்து அவனைப் பார்த்தாள். வற்பனைச் சேரலின் கண்கள் அவளது ஆன்மாவையே ஊடுருவி ஏதோவொரு ரகசியத்தைச் சொல்லத் துடித்தன. அவனது இதழ்கள் ஒரு மெல்லிய முறுவலோடு அவளது முகத்திற்கு மிக அருகில் குனிந்தன.

அவளால் அவனது அந்தத் தீட்சண்யமானப் பார்வையைத் தாள இயலவில்லை.  நாணத்தோடு அவள் சட்டெனத் தலை குனிந்தாள். அந்த வெட்கம், அவனது வேட்கையை இன்னும் கனலாகத் தூண்ட, துடித்துக் கொண்டிருந்த அவளது மென்மையானச் செவ்விதழ்களைத் தன் வன்மையான இதழ்களால் சிறைபிடித்தான்.

காதல் பெரு நெருப்பாக அவர்கள் இருவரையும் பற்றிக்கொண்டது. அந்த அணைப்பில் அவள் மெழுகுப் போல உருகத் தொடங்கினாள், அவனோ அந்த நெருப்பின் கதகதப்பில் தன் பல யுகக் குளிரைப் போக்கிக் கொள்ள துவங்கியிருந்தான். மழைச் சாரல் அந்த நெருப்பை ஊதிப் பெருக்கிக் கொண்டிருந்தது தான் விந்தை!

ஆதிரையின் இதழ்களில் தன் காதலின் முதல் அத்தியாயத்தை எழுதத் தொடங்கியவன், மெல்ல அவளது கன்னங்களின் மென்மையைத் தன் இதழ்களால் வருடி, அவளது வெண்சங்கு கழுத்தில் தஞ்சம் புகுந்தான்.

அவனது அந்த நெருக்கமானத் தீண்டலில் ஆதிரையின் கால்கள் தளர்ந்து பின்வாங்கின. தடுமாறிய ஏந்திழையை, ஒரு கொடியைப் போலத் தன் வலிமையானக் கரங்களால் வளைத்துத் தன்னுடனேயே ஏந்திக் கொண்டான் சேரல். அவளது மேனி அவனது மேனியின் குளிர்ச்சியையும், அவனது மார்பின் தகிப்பையும் ஒருசேர உணர்ந்தது.

“தேவீ…” அவளது காது மடல்களுக்கு அருகே அவன் முணுமுணுத்தபோது, அந்த மூச்சுக்காற்று அவளை சிலிர்க்கச் செய்தது.

“ம்ம்ம்…” என்று அவள் ஒரு மெல்லிய முனகலுடன் அவனது தோளில் முகம் புதைத்தாள்.

“மணம் புரிந்து கொள்ளலாமா?” அவனது வேண்டுதல் அவளது செவிகளில் தேனாக இனித்தது.

“இப்போதேவா?” அவளும் அவனைப் போலவே ஒரு கிசுகிசுப்பாகக் கேட்டாள். அவளது குரலில் இருந்த அந்தத் தயக்கம் அவனை இன்னமும் மயக்கியது.

“ம்ம்ம்… இக்கணமே… கொற்றவையின் சாட்சியாக!”

“ம்ஹூம்… அது களவு…” என்று கூச்சத்துடன் மறுத்தாள். ஒரு வணிக மகளாக அவளது வளர்ப்பு அவளைத் தடுத்தாலும், ஒரு காதலியாக அவளது உள்ளம் துடித்தது.

“களவும் கற்புதான் தேவீ!” என்றான் சேரல். அவனது கரங்கள் அவளது இடையைச் சுற்றி இன்னும் இறுக்கமாகப் பிணைத்துக் கொள்ள, மயங்கினாள்.

“ஊரார் முன்னிலையில் நும் கைத்தலம் பற்ற வேண்டும் மன்னவா…” அவன் காதில் அவள் கிசுகிசுத்தது, அவனை கிறக்கியது!

காதல் எனும் பெருநெருப்பில் மூழ்க ஆரம்பித்தவன், நிமிர்ந்து அவள் முகம் பார்த்தான். அந்த முகத்தில் அதே காதல் கொள்ளை கொள்ளையாய் தெரிய, அவனுக்குள் ஏதேதோ கற்பனைகள்!

“இம்மை பயப்பினும், மறுமை உளதாயினும் எம் காதல் மாறாது! யான் நும்மைப் பிரியாதுறைவேன் தேவீ” அவள் காதில் கிசுகிசுத்தான்.

அடுத்த அத்தியாயம்

அத்தியாயம் 17

“இம்மை பயப்பினும், மறுமை உளதாயினும் எம் காதல் மாறாது! யான் நும்மைப் பிரியாதுறைவேன் தேவீ” அவள் காதில் கிசுகிசுத்தான்.“அதற்கு நீர் எம்மை மறவாதிருக்க வேண்டும் வேந்தே...” என்றவள் எந்த நேரத்தில் கூறினாளோ!“மறப்பதா? ஹா... யானோ? எங்ஙனம் இயலும் தேவீ!” புன்னகைத்தான் வேந்தன்.“ஆய்வோம்!…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

இந்தக் கதையைப் பற்றி விவாதிக்கவும் 4

உங்கள் கருத்தைப் பகிருங்கள்