arrow_back
வற்பனை சேரல் அத்தியாயம் 17
வற்பனை சேரல் chevron_right பகுதி 17 / 28

அத்தியாயம் 17

visibility 22
star படைப்பை ரேட் செய்யுங்கள்
சராசரி 4.7/5 (7 மதிப்பீடுகள்)
பகிர்

“இம்மை பயப்பினும், மறுமை உளதாயினும் எம் காதல் மாறாது! யான் நும்மைப் பிரியாதுறைவேன் தேவீ” அவள் காதில் கிசுகிசுத்தான்.

“அதற்கு நீர் எம்மை மறவாதிருக்க வேண்டும் வேந்தே…” என்றவள் எந்த நேரத்தில் கூறினாளோ!

“மறப்பதா? ஹா… யானோ? எங்ஙனம் இயலும் தேவீ!” புன்னகைத்தான் வேந்தன்.

“ஆய்வோம்! நும் அந்தப்புரத்து அணங்கார் மேலானவரா அன்றி இப்பேதை மேலானவளா என்பதை நாளை நுந்தம் நாவினால் உரைக்க காண்போம்…” சிலிர்த்தாள் அவனது மகாராணி! (பார்க்கலாம்… நாளை அந்தப்புர பெண்டிர் முக்கியமா நான் முக்கியமா என்று கேட்கிறேன்…)

“வாலாயமாக (வழக்கமாக) இருக்கும் அந்தப்புரம் எமக்கும் உண்டென எண்ணினாயோ?” அவளை ஏந்திக் கொண்டே கேட்டவன், “இதுகாறும் எமதுள்ளத்தில் நின்னையன்றி வேறொரு அணங்கிற்கு இடமில்லை தேவீ…” அவளது கன்னக்கதுப்பை கடித்தபடி கேட்க,

“ஸ்ஸ்ஸ்… காதலிலும், வன்மையைக் கையாளும் விந்தை நும்மிடம் மட்டுமே உண்டு, எம் வற்பனைச் சேரலே!” (காதலில் கூட வன்மையை கையாளும் ஒரே ஆள் தாங்களாகத்தான் இருப்பீர், இங்கு வற்பு: உறுதி, திண்மை, முரட்டுத்தனம்)

“என்ன? வற்பனை சேரலா?” என்று சிரித்தவன், “எம் இயற்பெயரை மாற்றி விட்டாயோ?” அதே சிரிப்போடு கேட்டான்.

“ஆம்…” என்று சிணுங்கியவள், “இனி இப் பேதைக்கு நீவீர் வற்பனைச் சேரல் தான்…” என்று சிரித்தாள் அவனது காதலி, அவனது வன்மையை ரசித்தபடி!

“பிழையேதுமில்லை… எம்மை அழைப்பாயோ அன்றி நும் காதலால் எம்மை மாய்ப்பாயோ… அனைத்தும் நும் விருப்பம், எம் வற்பனை தேவி!” கிசுகிசுப்பாக அவன் கூறியவற்றை கேட்டவளுக்குள் கோடி மின்னல்கள்!

“கள்வன்…”

“களவாடத் துணியுமுன்னே கள்வனெனக் கண்டிக்கின்றாயே!”

“ச்சீய்ய்… நீவீர் வன்மையாளர்…”

“கண்ணுற்று ஆராயாது கறையார் பழி சுமத்துதல் அறமாகாது தேவீ!” இன்னும் பேசிப் பேசி அவளை சிவக்க வைத்தான். (பார்க்காமலேயே குற்றம் சாட்டுவது தவறு)

சிவந்தவளை தன்னிலை மறக்க வைத்தான்.

காதல் தீயில் இருவரும் மெய்மறந்து நின்றிருந்த அந்த மண்டபத்திற்குள், “சர்…” என்ற சத்தத்துடன் அம்பு ஆதிரையை நோக்கி பாய்ந்து வந்தது. அது பெருஞ்சேரலுக்கு குறிவைக்கப்பட்ட அம்பா, ஆதிரைக்கு குறிவைக்கப்பட்ட அம்பா என தெரியவில்லை. ஆனால் அம்பு காற்றில் கிழிபட்ட அந்தச் சீறல் சத்தத்தை கணப்பொழுதில் உணர்ந்தவன், அத்தனை உணர்ச்சிகளும் நொடியில் வடிய, சட்டென ஆதிரையைத் தள்ளிவிட்டு நிலத்தில் உருண்டான்.

அம்பு அவர்கள் நின்றிருந்த இடத்திற்குச் சற்று அருகே இருந்த கருங்கல் தூணில் பாய்ந்து அதிர்ந்தது.

அம்பின் நுனியில் தடவப்பட்டிருந்த நீல நிற நஞ்சு, தீப்பந்த ஒளியில் கொடிய பாம்பின் கண்களைப் போல மின்னியது.

“ஆதிரை! தூணில் ஒதுங்கு!” என்று கர்ஜித்தான் பெருஞ்சேரல். ஒரு நொடிக்கு முன்பு காதலில் கனிந்திருந்த அவனது விழிகள், இப்போது வேட்டையாடத் துடிக்கும் ஒரு பெரும் புலியின் கண்களைப் போலக் கனலின. தன் ஆருயிரணங்கைக் குறிவைத்த அந்த அம்பு, அவனை கோபத்தில் கொதிக்க வைத்தது.

தன் இடையில் இருந்த குறுவாளை உருவிக்கொண்டு, மழையையும் இருளையும் பொருட்படுத்தாமல் அந்த அம்பு வந்த திசையை நோக்கிப் விர்ரென்று பாய்ந்தான்.

இருள் கவியத் தொடங்கிய அந்த அந்திப் பொழுதில், சேறும் சகதியுமான நிலத்தில் பெருஞ்சேரலின் வேகம் ஒரு காட்டாற்றைப் போல இருந்தது.

“எம் முன்னே அவளைத் தீண்டத் துணிந்தாயா?” என்ற அவனது சீற்றம் கானகத்தையே உலுக்கியது.

ஆதிரை நிலத்தில் விழுந்து சிதறிய பூக்களைப் போலத் திகைத்து நின்றாள். ஒரு கணம் முத்தத்தின் ஈரம்… அடுத்த கணம் மரணத்தின் காரம்!

“ஏகற்க வேந்தே! அது சதி!” என்று அவள் அலறியும், பெருஞ்சேரலின் காதுகளுக்கு அது எட்டவில்லை. அவனது வீர உணர்வு இப்போது காதலை விட மேலோங்கி நின்றது. அவளுக்கு ஏதேனும் ஆகிவிடுமோ என்ற பேரச்சத்தில், அவன் அந்த அம்பைக் காட்டிலும் வேகமாக ஓடினான், அம்பெய்தவனை துரத்தியபடி!

அவனுக்கு எதாவது ஆகிவிடுமோ என்ற அச்சத்தில் ஆதிரையும் சேற்றிலும் மழையிலும் நனைந்தபடி அவன் பின்னாலேயே ஓடினாள்.

சுற்றிலும் சேறு சூழ்ந்த சதுப்பு நிலம்! இருள் கவிழ துவங்கியிருந்த மாலை பொழுது! அடர்ந்த வனம்!

எங்கனம் அவனை கண்டுபிடிப்பது என்று ஒரு நொடி புரியாவிட்டாலும், சுற்றிலும் பார்த்தான். அவனது பார்வைக்கு எதுவும் தப்பியதில்லை.

அடர்ந்த புதருக்குள் மறைந்திருந்த அந்த நிழலை பெருஞ்சேரல் மடக்கிப் பிடித்தான். அந்த ஒற்றன் தப்பிச் செல்ல முயன்றபோது, பெருஞ்சேரலின் குறுவாள் அவனது கழுத்தில் பதிந்தது.

“யார் நீ? உன்னை ஏவியது யார்? சொல்!” பெருஞ்சேரலின் குரல் இடிமுழக்கமாய்க் கேட்டது.

அங்கே வந்து சேர்ந்த ஆதிரை, பெருஞ்சேரலின் முகத்தைக் கண்டு உறைந்து போனாள். அவன் ஒரு மனிதனைப் போலத் தெரியவில்லை; ருத்ரனைப் போலத் தெரிந்தான். அவனது கைகள் அந்த ஒற்றனின் கழுத்தை நெரித்துக் கொன்றுவிட துடித்தன.

அந்த ஒற்றன் பதிலேதும் பேசாமல் அமைதியாய் நின்றிருந்தான், இரண்டு கைகளையும் தூக்கியபடி! அவனது முகத்தில் கலவரம் தெரிந்தாலும், அவனது நிதானம் பெருஞ்சேரலை சற்று யோசிக்க வைத்தது! அவனது கழுத்திலிருந்த மாலையை பார்த்து அதிர்ந்தான்!

ஒரு வேளை இவன் தற்கொலைப் படையோ? பெருஞ்சேரல் யோசித்து முடிப்பதற்குள்,

“பெண்ணே…” என்றான் ஆதிரையை பார்த்து! அவன் ஏன் தன்னை அழைக்கிறான் என்று அவள் யோசிக்க, சட்டென திரும்பிப் பார்த்தான் பெருஞ்சேரல்.

பெருஞ்சேரலின் அந்த ஒற்றை நொடி கவனச்சிதறலை பயன்படுத்திக் கொண்டான் ஒற்றன். அதற்காகத்தான் அவளை அழைத்தான்.

கழுத்திலிருந்த சிறிய மாலையில் மறைத்து வைத்திருந்த நஞ்சுப் பொடியைச் (விஷத்தை) சட்டென வாயில் போட்டு மென்றான். அடுத்த நொடி, அவனது உடல் வில்லாக வளைந்தது. கணப்பொழுதில் பெருஞ்சேரல் சுதாரிப்பதற்குள் வாயில் நுரை தள்ள, கண்கள் பிதுங்க அவன் பெருஞ்சேரலின் காலடியில் துடித்துப் பின் அடங்கினான்.

ஆதிரை அப்படியே பின்வாங்கினாள். அவள் கண்முன் தான் எத்தனை மரணங்கள்! ஒவ்வொன்றும் ஒன்றையொன்றை விஞ்சி!

சிறுவயது முதற்கொண்டே சமணப் பள்ளியில் தான் கற்ற கொல்லாமையும் சிறு துரும்புக்கும் ஊறு செய்யக் கூடாது என்ற பாடங்கள் எல்லாம் கண் முன்னே ஆவியானது போன்ற பிரமை!

எத்தனை பாவங்களை சுமப்பது என்ற ஆற்றாமை!

கணவன் செய்யும் பாவங்கள் மனைவியையும் சேராதா என்ன?

பெருஞ்சேரலுக்கு இத்தகைய ஊழ் தேவையா என்று எண்ணிய போது அவளை மீறி அவளது கண்களில் கண்ணீர் வழிந்தது!

“நுமக்கு இம்மணிமுடி வேண்டா வேந்தே!…” நடுங்கிய குரலில் கூறினாள் பேதை!

“இவ்விடம் விடுத்து ஏகுவோம் ஆதிரை! படைவீரர்கள் எஞ்சியவற்றை ஆராய்வர்!” அவளை சமாதானப்படுத்தக் கூறினான் பெருஞ்சேரல். (இவ்விடத்தை விட்டு அகன்று விடலாம் ஆதிரை. வீரர்களை வந்து பார்க்க சொல்கிறேன்)

“மணிமுடி வேண்டா வேந்தே! நுமதிருப்பு ஒன்றே இப்பேதைக்குத் தேவை. ஒவ்வொரு நொடியும் நும் வாழ்வை அச்சுறுத்தும் இச்செங்கோல் நுமக்கு வேண்டா!” அவளது வார்த்தைகளில் நடுக்கம் கூடிக் கொண்டே இருந்தது. கண்கள் இறந்துபோன ஒற்றனையே பார்த்தபடி இருந்தன! (வேண்டாம் வேந்தே… நீங்கள் எனக்கு உயிரோடு இருந்தால் போதும். நித்தம் நித்தம் உமது உயிருக்கு உலை வைக்கும் இந்த அரச பொறுப்பு வேண்டாம்)

“தேவீ! நும் உள்ளம் இப்போது அதிர்ச்சியில் உறைந்திருப்பதை யான் உணர்கிறேன்!” அவளை சமாதானப்படுத்த, ஆதிரையை அணைத்துக் கொண்டு அவளது தலையை தடவிக் கொடுத்தான். (தேவீ, இப்போது நீ அதிர்ச்சியில் இருக்கிறாய் என்று புரிகிறது)

அவனது நெஞ்சில் சாய்ந்தபடி கதறினாள் பெண். காதலில் நனைந்த அவளது இதயம் இப்போது அச்சத்தால் நடுங்கியது.

“பிழையேதுமில்லை வேந்தே! யான் திகைப்பினால் பிதற்றவில்லை; தெளிந்த உள்ளத்தோடே உரைக்கின்றேன்! எமக்கு அமைதி ஒன்றே போதும்; இத்தேசமும் வேண்டா, இக்குடிமக்களும் வேண்டா, வேந்தன் எனும் பாரமும் வேண்டா! நான் வெறும் பூக்கொய்யும் பேதையல்ல. ஒரு நாட்டின் பொருளாதாரம் சிதைந்தால் என்னவாகும் என்பதையும், இத்தேசத்தின் செங்கோல் சாய்ந்தால் அராஜகம் விளையும் என்பதையும் யான் அறியாதவள் அல்ல. ஆனால் செல்வமும் அதிகாரமும் இம்மாளிகையும் எமக்குத் துச்சமே! நாமிருவரும் மணம் புரிந்து கொண்டு, எவர் கண்ணிலும் படாத ஓரிடத்தில் அமைதியாக வாழ்வோம் வேந்தே!”

நடுக்கம் தீராமல் கூறினாலும், அவளது வார்த்தைகள் தீர்க்கமாக இருந்தன!

“இது எமது நாடே தேவீ! இக்குடிமக்கள் யாவரும் எம் சுற்றத்தினர்! அஃது வெறும் அரண்மனையன்று, யான் பிறந்து தவழ்ந்த எம் இல்லம்! இவற்றுள் எதனை விடுக்கச் சொல்கிறாய்?” அவனுக்கு புரியவில்லை. அவனது பார்வையில் அது சரிதானே! (இது என்னுடைய நாடு தேவீ. இவர்கள் எம் மக்கள். அது அரண்மனையல்ல, என்னுடைய வீடு. நான் பிறந்து வளர்ந்த வீடு. இவற்றில் எதை விட சொல்கிறாய்?)

ஆனால் ஆதிரையின் பார்வையில், இவன் அரசன் என்பதால் தானே இத்தனை ஆபத்துகள் வருகின்றன என்ற அச்சம், அவளை ஆட்டுவித்தது!

“நும் செங்கோல் காக்கும் கடமைக்கு முன்னே, எம் காதல் சிறுத்துப் போனதோ?” சிறுபிள்ளையாய் அவன் முன் அவள் வைத்த கேள்வியை கண்டு புன்னகைக்கத்தான் முடிந்தது இளவலால்!

“எதனோடு எதை கோர்க்கிறாய் தேவி?” என்றவன், அவளை இறுக்கமாக அணைத்துக் கொண்டான்.

“எம் இறைவா! மாசாத்துவான் மகளாக, கடல் கடந்து வரும் செய்திகள் ஒவ்வொன்றும் எனக்கு உணர்த்துவது ஒன்றே… எந்த நாட்டில் மணிமுடியின் கனம் அதிகமாக இருக்கிறதோ, அந்த நாட்டு மக்கள் அச்சத்திலேயே வாழ்கிறார்கள். உமது செங்கோல் இல்லையெனில் பகைவர் வருவர் என்பது உமது அச்சம்; ஆனால் அந்தச் செங்கோலே புதிய பகைவரை உருவாக்குகிறது என்பது எம் துணிபு! உமது கைகளில் படிந்திருக்கும் இந்தக் குருதி, நாளை உமது உயிரை கொன்றுவிடும் என்று அஞ்சுகிறேன். நும் இருப்பு ஒன்றே இப்பேதைக்குத் தேவை. எந்நேரம் நுமக்குத் தீங்கு விளையுமோ என்ற நடுக்கமே எம் வாழ்நாளைக் குறைத்துக் கொண்டிருக்கின்றது!” அவளது கதறல் நின்றபாடில்லை!

“அஞ்சற்க தேவி. எம் மீது நினக்கு நம்பிக்கையில்லையா? எம்மை மாய்க்கும் காலன் இன்னும் கருவிலே கூட உருவாகவில்லை…” என்றவன், அவளை சமாதானப்படுத்த முயல, அவனை தள்ளிவிட்டாள் ஆதிரை!

“அங்கணமே நில்லீர்! கணப்பொழுது போதுமே, யாவும் தலைகீழாக மாற! உண்மையை உரைப்பீராக… நுமக்கு இக்கோல் (அரசுப் பொறுப்பு) பெரிதோ? அன்றி இப்பேதை பெரிதோ?” பிடிவாதமாக அவள் கேட்ட கேள்வி அவனை கோபமுற செய்தது.

“யாது பேசுகின்றாய் என்பதை உணர்ந்துதான் மொழிகின்றாயா தேவீ? இந்தச் செங்கோல் என்பது வெறும் அதிகாரம் அல்ல. இத்தேசத்தின் உயிர் மூச்சு. ஒரு வேந்தனை அவனது கடமையிலிருந்து விலகச் சொல்வது, ஒரு வீரனை அவனது வாளை முறிக்கச் சொல்வதற்குச் சமம் என்பதை நீ அறியாயோ?” முதன்முறையாக அவளிடம் கோபப்பட்டான் மன்னவன்.

“உணர்ந்துதான் உரைக்கின்றேன் வேந்தே! யான் விழைவது நும் விடை மட்டுமே…”

“சூழல் நினக்கு விளங்கவில்லை தேவீ! ஒருபுறம் பாண்டியப்படை, மறுபுறம் வேளிர் குலத்தினர்; எக்கணமும் போர்முரசு கொட்டப்படலாம்! இவ்வரண்மனைப் புதருக்குள் எவர் நயவர் (நல்லவர்), எவர் தீயவர் என்பதே அறியொணாத நிலை. அமைதியுடன் ஒரு கவளம் உணவைக்கூட உட்கொள்ள இயலவில்லை! அமைச்சர்கள் எந்நேரம் எமக்குக் குழிபறிப்பர் என்பதையும் யான் அறியேன். எனினும், இவை அத்தனையும் வென்றுவிடுவேன்; எம் அணங்கே, நீ எமக்குத் துணையாக இருந்தால் அதுவே போதும்…” அவளை இழுத்து அணைத்தபடி கோபமாக ஆரம்பித்தவன், கெஞ்சுதலாக முடிக்க, அவனை உணர்வற்ற பார்வை பார்த்தாள்.

“நுமக்கே தெள்ளிதின் (தெளிவாக) தெரிகிறதே வேந்தே! எத்தனை இடர்களுக்கு நடுவே நீர் சூழப்பட்டுள்ளீர் என்று!”

“இருக்கட்டும் ஆதிரை! இதுவே எமது ஊழ்வினை, இதுவே எமது வாழ்வு…”

“அப்படியாயின், இவற்றினின்று உம்மால் மீளவொல்லா?” ஏக்கமாய் கேட்டாள்.

“ஒல்லாது (முடியாது)… இது எம்மால் ஒருக்காலுமொல்லாது! எம் பிடியை தளர்த்தினால், பதுங்கியிருக்கும் இப்பகை வேங்கை எம் உயீரைக் குடித்துவிடும்!”

“விடாவிடினும் நும் வாழ்வற்றுப்போகுமே வேந்தே!”

“யான் எதற்கும் அஞ்சா மறவன்! நாணமற்ற புல்லனைப் போல (கோழையைப் போல) மறைந்து வாழச் சொல்கின்றாயா?”

“வேண்டா. நீர் புறங்காட்டி ஓடி ஒளிய வேண்டா…”

அதுவரை அவனது அணைப்பில் நின்று கொண்டிருந்தவள், அவனை வலுகட்டாயமாக தள்ளிவிட்டாள். அவளை மீண்டும் அணைத்து சமாதானப்படுத்த வந்தவனை,

“தீண்டற்க எம்மை!” என தீர்க்கமாகக் கூறியவள், அவனை பார்த்தபடியே பின்னால் நகர்ந்தாள்.

“யான் நினது வற்பனை சேரலடி!” அவளைப் போக விடாமல் கைப்பற்றி தடுத்தான் பெருஞ்சேரல்!

“ஆம்… நீவீர் வற்பனை சேரல் தான். ஆனால் என்னுடைய சேரல் அல்ல… உமது இந்த வற்பனை (பிடிவாதம்) எம் காதலைக் காட்டிலும் உமது மணிமுடியையே பெரிதாக எண்ணுகிறது. இனி நமக்கிடையே பேச்சிற்கு இடமில்லை!” (வற்பனை: உறுதியான, பிடிவாதமான)

வானம் கறுத்துத் திரண்டிருந்தது. காற்றில் சிதைந்த காதலின் துயரம் கமழ்ந்தது. ஆதிரை தன் மணிக்கட்டை அவனது இரும்புப் பிடியிலிருந்து விடுவித்துக் கொண்டாள்.

அவன் பிடி தளர்ந்த அதே நொடி, அவர்களுக்குள் இருந்த கடைசி பாலமும் முறிந்தது.

அவளது விழிகளில் தெறித்த கண்ணீர், வானம் சிந்திய மழையோடு கலந்து அவளது கன்னங்களை நனைத்தது.

பெருஞ்சேரல் அவளைப் பார்த்த அந்தப் பார்வையில் ஓராயிரம் ஏக்கங்கள் தேங்கிக் கிடந்தன. “எம்மை விட்டகலாதே” என்று சொல்லத் துடித்த அவனது இதழ்கள், மௌனத்தில் உறைந்தன!

ஆதிரை அந்த ஏக்கமானப் பார்வையைப் புறக்கணித்தாள். அவனது அதிகாரமும், அந்த குருதிக் கறையும் அவளுக்கு அந்நியமாகத் தெரிந்தன. பின்வாங்கத் தொடங்கியவள், சட்டென்று திரும்பிப் பெருமழையில் ஓடத் தொடங்கினாள். அவளது உருவம் அந்த அடர் கானகத்து மழையில் மெல்ல மெல்ல மங்கி, இறுதியில் முழுவதுமாகக் கரைந்து மறைந்தது. ஒரு காவியக் காதல், கணப்பொழுதில் வெறும் நினைவாக மாறியது.

பெருஞ்சேரல் அந்தப் பிணத்தினருகே மழையில் நனைந்தபடி நின்றான். அவனது காலடியில் கிடந்த அந்த ஒற்றனின் சடலம், அவனது சிம்மாசனத்தைச் சூழ்ந்திருக்கும் சதிவலையின் சாட்சி. ஒரு பக்கம், தன் உயிருக்கு நிகரான ஆதிரையின் பிரிவு அவனது நெஞ்சைப் பிளந்தது. மறுபக்கம், பாண்டியனும் வேளிரும் இணைந்து பின்னியுள்ள இந்த மர்மமான சூழ்ச்சி அவனது புத்தியைக் குடைந்தது. காதலியைக் காப்பதா? தேசத்தைக் காப்பதா? ஒரு வேந்தனாக அவன் தனித்து விடப்பட்டான்.

அவன் கைகளை இறுக மூடி வானத்தைப் பார்த்தான். அவனது உள்ளத்தின் குமுறலைப் பிரதிபலிப்பதைப் போல, வானம் மீண்டும் ஒருமுறை பெரும் இடியுடன் வெடித்து அழுதது!

மழைத்துளிகள் அவன் கைகளில் தேங்கிய குருதியை மெதுவாகக் கழுவிக் கொண்டிருந்தன.

மழையின் வேகம் கூடியது; அது ஆதிரையின் காலடித்தடங்களை மட்டுமன்றி, பெருஞ்சேரலின் விழிகளிலிருந்து கசிந்த அந்த ஒற்றைத் துளிக் கண்ணீரையும் துடைத்துச் சென்றது.

அடுத்த அத்தியாயம்

அத்தியாயம் 18

பன்னிரெண்டாவது கிரிட் போடப்பட்டிருந்த அந்த ஆழமான குழியைச் சுற்றி, ராட்சத ஃபோகஸ் விளக்குகள் எரியத் தொடங்கின.இடைவிடாது பெய்த கனமழை, குழியின் ஓரங்களில் இருந்த மண்ணைச் சரித்து, மீட்புப் பணிகளுக்குப் பெரும் சவாலாக மாறியிருந்தது. மழையின் சீற்றம் ஒருபுறம், சரிந்து விழும் செம்மண்…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

forum 12 கருத்துகள் உள்ளன

உங்கள் கருத்தைப் பகிருங்கள்