அத்தியாயம் 18
பன்னிரெண்டாவது கிரிட் போடப்பட்டிருந்த அந்த ஆழமான குழியைச் சுற்றி, ராட்சத ஃபோகஸ் விளக்குகள் எரியத் தொடங்கின.
இடைவிடாது பெய்த கனமழை, குழியின் ஓரங்களில் இருந்த மண்ணைச் சரித்து, மீட்புப் பணிகளுக்குப் பெரும் சவாலாக மாறியிருந்தது. மழையின் சீற்றம் ஒருபுறம், சரிந்து விழும் செம்மண் ஒருபுறம்.
முதலில் வந்த தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினர், நிலைமையின் தீவிரத்தை உணர்ந்தனர். அவர்களின் சாதாரண ஜாக்கிகளால் அந்த நான்கு டன் கருங்கல் மேடையை அசைக்க முடியவில்லை. மாவட்ட ஆட்சியர் செல்வம் உடனடியாக அரக்கோணத்தில் இருக்கும் என்டிஆர்எப் நான்காவது பட்டாலியனுக்கு அவசரத் தகவல் கொடுத்தார்.
நள்ளிரவு 1:45 மணி. பொற்பனைகோட்டை கிராமத்தின் வான்பரப்பில் ஒரு கனத்த இரைச்சல் கேட்டது. அரக்கோணத்திலிருந்து புறப்பட்ட என்டிஆர்எப் எம்ஐ17 ரக ஹெலிகாப்டர், அகழாய்வுத் தளத்திற்கு அருகே இருந்த தரிசு நிலத்தில், தற்காலிகமாக அமைக்கப்பட்ட விளக்குகள் மற்றும் தீயணைப்புத் துறையின் வழிகாட்டுதலோடு தரையிறங்கியது.
ஹெலிகாப்டரிலிருந்து அதிநவீன ஹெவிடியூட்டி கருவிகள் அடங்கிய பெட்டிகள் முதலில் இறக்கப்பட்டன. தீயணைப்பு வீரர்கள் திகைத்துப் போய் நின்றிருக்க, என்டிஆர்எப் ன் கமாண்டோக்கள் மின்னல் வேகத்தில் பன்னிரெண்டாவது கிரிட் குழியைச் சுற்றிக் கூடினர்.
“டீம் அட்டென்ஷன்! செங்குத்தான குழி (Vertical Trench) என்பதால் மண் சரிவு ஏற்பட வாய்ப்பு அதிகம். முதல்ல தற்காலிகக் கூரையை (Tarpaulin cover) போடுங்க, மழை நீர் உள்ள இறங்கக் கூடாது!” என்று கமாண்டோ ஒருவர் உத்தரவிட்டார். அவர் தான் டீம் லீடர் போல!
“சார், கூரை தயார்! ஆனா பக்கவாட்டுச் சுவர்கள் பலவீனமா இருக்கு!” என்று அங்கிருந்த பொறியாளர் பதில் கூற,
“அப்படியே நில்லுங்க! ஹைட்ராலிக் ஷோரிங் (Hydraulic Shoring) ராட்களை இறக்குங்க. மண்ணோட அழுத்தத்துக்கு ஏத்த மாதிரி பிரஷரை லாக் பண்ணுங்க. இரும்புத் தூண்கள் லெவலா இருக்கட்டும்.” என்று டீம் லீடர் கூறினார்!
அருகிலேயே கதிரும் மதியும் அச்சத்துடன் நின்று கொண்டிருந்தனர். நேரம் போக போக அவர்களது அச்சம் அதிகமாகியது. உள்ளுக்குள் எவ்வளவு நேரத்துக்கு ஆக்சிஜன் இருக்கும் என்ற கேள்வி வேறு. அதை தான் மாவட்ட ஆட்சியரும், திட்ட இயக்குனரும் கூட பேசிக் கொண்டிருந்தனர்.
இரும்புத் தூண்கள் பொருத்தப்பட்டதும், அந்த இடம் நிசப்தமானது.
“சார், விசுவலைசேஷன் கிடைக்கல. கல் மேடை ரொம்ப தடிமனா இருக்கு. உள்ள உயிரோட இருப்பாங்களா?” இன்னொரு கமாண்டோ அனைவரின் வயிற்றிலும் புலியை கரைத்தனர்.
“செக் பண்ணிடலாம். முதல்ல அகௌஸ்டிக் சென்சார்களை ஆக்டிவேட் பண்ணுங்க. கல் மேடையோட நாலு விளிம்புலயும் வைங்க. சத்தம் வராத அளவுக்கு எல்லாரும் பத்து செகண்ட் மௌனமா இருங்க!” தலைமை கமாண்டோ கூற, சென்சார்கள் பொருத்தப்பட்டன. திரையில் அலைவரிசைகள் ஓடின.
திடீரென டிப்… டிப்… என்ற சீரான துடிப்பு தெரிந்தது.
“சார்! சென்சார்ல low frequency vibration consistent with human cardiac pulse கிடைக்குது. அவங்க உயிரோடதான் இருக்காங்க!” இரண்டாவது கமாண்டோ கூற, மதி எதிர்பார்ப்புடன் இருவரையும் பார்த்தாள்.
“குட்! டைம் இல்ல. அந்த 4 டன் கல்லைத் தூக்கியே ஆகணும். ஹைபிரஷர் ஹைட்ராலிக் ஜாக்கிகளை கொண்டு வாங்க. நாலு மூலைலயும் சரிசமமா பிளேஸ் பண்ணுங்க. கல் கொஞ்சம் சரிஞ்சாலும் உள்ள இருப்பவங்களுக்கு ஆபத்து!” டீம் லீடர் உத்தரவிட,
“சார், மண்ணோட கிரிப் ரொம்ப அதிகமா இருக்கு. ஜாக்கி மட்டும் போதாது!” என்று பொறியாளர் ஆட்சேபம் தெரிவித்தார்.
“அப்படீன்னா ஹைட்ராலிக் ஸ்ப்ரெடர் பயன்படுத்துங்க. கல்லைச் சுத்தி இருக்குற மண்ணை முதல்ல விலக்குங்க. அப்போதான் ஜாக்கிக்கு ஃப்ரீ ஸ்பேஸ் கிடைக்கும்.” என்று டீம் லீடர் உத்தரவிட, அதே போல செய்தனர்.
அனைவரும் டீம் லீடரின் முகத்தை எதிர்பார்ப்புடன் பார்த்தனர்.
“ரெடி… பிரஷரை 400 Barக்கு நிலை நிறுத்துங்க! எல்லா ஜாக்கிகளையும் சின்க் பண்ணுங்க! ஒரே நேரத்துல லிப்ட் ஆகணும்… நவ்!” என்று அவர் கூறி முடிக்க,
சுர்ர்ர்… என்ற அழுத்தமான சத்தத்துடன் கருங்கல் மேடை ஒரு அங்குலம் மேலெழும்பியது. உள்ளே சிறைப்பட்டிருந்த ஆயிரம் ஆண்டு காலத்துப் பழங்காற்று சீறிக்கொண்டு வெளியேறியது.
“ஏன்சியன்ட் பாக்கெட் ஏர் வெளியேறுது! மல்டி கேஸ் டிடெக்டர் கொண்டு வாங்க!” என்று அவசரமாக கூற, மல்டி கேஸ் டிடெக்டரை கொண்டு காற்றை பரிசோதித்தனர்.
“ஆக்சிஜன் பன்னிரண்டு சதவிதம் தான் இருக்கு. எஸ்சிபிஏ (சுவாசக் கருவி) அணிஞ்ச வீரர்கள் ரெடியா இருங்க. கல்லை முழுசா நகர்த்தினதும் உள்ள குதிங்க!” என்ற அவரது உத்தரவில், எஸ்சிபிஏ அணிந்து வீரர்கள் தயாராகினர்.
ஒரு மாபெரும் ராட்சதனின் கைகள் அமுக்குவதைப் போன்ற சத்தத்துடன், அந்தக் கருங்கல் மேடை மேலெழும்பியது. இரண்டாயிரத்து முன்னூறு ஆண்டுகாலச் சிறைக்காற்று “சுர்…” என்ற ஒலியுடன் சீறியது.
மாவட்ட ஆட்சியர் செல்வம், தன் கைபேசி அதிர்வதைக் கண்டு உடனடியாகச் செவியோரம் வைத்தார். மறுமுனையில் மாநில முதலமைச்சர் நேரடியாக அழைத்திருந்தார்.
“அய்யா… வணக்கம்!” அவரது வழக்கமான வணக்கம் இதுதான்!
“செல்வம், அந்த ரெண்டு ஆர்க்கியாலஜிஸ்ட் நிலைமை என்ன? மீட்புப் பணிகள் எந்த அளவில் இருக்கு?” முதல்வர் கேட்க, செல்வம் பரபரத்தார்.
“என்டிஆர்எப் டீம் உள்ள இறங்கிட்டாங்க. ஆனா மழை பெய்யுது. செங்குத்தான குழிங்கிறதால மண் சரிவு ஏற்படுது. ஷோரிங் கொடுத்து பலப்படுத்திட்டு இருக்கோம். இன்னும் இருபது நிமிஷத்துல அவங்களை மீட்டிருவோம்னு நம்புறோங்க ஐயா.”
“அந்தத் தளம் மிக முக்கியமானது செல்வம். நம்ம தமிழர் வரலாற்றை ரொம்ப பலமா பதிவு செய்ய போற தளம்ன்னு நான் நம்பறேன். அவங்க உயிரைக் காப்பாற்ற என்ன தேவையோ அதை உடனே செய்யுங்க. நிதி பத்தி யோசிக்காதீங்க. நான் இங்கயே இருக்கேன், தகவலை சொல்லிட்டே இருங்க.”
“கண்டிப்பாங்கய்யா…” என்றவர் பேசியை வைத்தார். நெற்றியில் முத்து முத்தாக வியர்வை துளிகள்!
ஆட்சியர் போனை அணைத்தபடி எஸ்பியைப் பார்த்தார், “சிஎம் சர் ரொம்ப சீரியஸா இருக்கார். சீக்கிரம் ஆகட்டும்!”
கதிர் மழையில் நனைந்தபடி, “சார்… சீக்கிரம் சார்! உள்ளே ஆக்சிஜன் அளவு ரொம்ப குறைவா இருக்குன்னு சென்சார் காட்டுது!” என்று மீட்பு படையிடம் கேட்டுக்கொண்டிருந்தான்.
ஊடகங்கள் தங்களின் ஒளிபரப்பு வாகனங்களுடன் (OB Vans) தளம் முழுவதையும் ஆக்கிரமித்திருந்தன. “பொற்பனைகோட்டை அகழ்வாய்வில் திடுக்கிடும் திருப்பம்: நிலவறைக்குள் சிக்கிய ஆய்வாளர்கள்!” என்ற தலைப்புச் செய்திகள் நேரலையில் ஓடிக்கொண்டிருந்தன. அனைத்தும் நேரலையில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தன.
கல் மேடை ஒருபுறம் முழுமையாக விலக்கப்பட்டதும், மீட்புக் குழுவினர் தன்னாட்சி சுவாசக் கருவிகள் மற்றும் ஆக்சிஜன் உருளைகளுடன் உள்ளே குதித்தனர். அவர்களது தலைக்கவசத்தில் இருந்த அதிநவீன எல்இடி விளக்குகள் அந்த இருண்ட நிலவறையைப் பகலாக்கின.
டார்ச் ஒளியில் அவர்கள் கண்ட காட்சி, அங்கே நின்றிருந்த அனுபவம் வாய்ந்த வீரர்களையும் ஒரு கணம் உறைய வைத்தது.
நிலவறையின் ஒரு மூலையில் ஆதிரா அசைவற்றுப் படுத்துக் கிடந்தாள். அவளது சுவாசப் பைகள் ஆக்சிஜன் பற்றாக்குறையால் கடுமையாகப் போராடிக் கொண்டிருந்தன.
ஆனால் விக்ரம்… அவன் அங்கே சாதாரணமாகக் கிடக்கவில்லை. ஒரு கருங்கல் தூணில் சாய்ந்தபடி, கையில் அந்தப் பழங்காலத்து வாளை மார்போடு அணைத்து, போர்க்களத்தில் வீரமரணம் அடைந்த ஒரு மன்னனைப் போல அமர்ந்த நிலையிலேயே மயங்கிக் கிடந்தான். அவன் கைகளில் இருந்த அந்த வாள், டார்ச் ஒளியில் ஒரு நீல நிற ஒளியை உமிழ்வது போலத் தோன்றியது.
***
“விக்டிம் 1 (ஆதிரா) நாடித் துடிப்பு கம்மியா இருக்கு. ஆனா ஸ்டேபிள்!” என்று முதல் வீரர் கூற, மேலே இருந்தவர்கள் கைகளை தட்டினார்கள். ஒவ்வொருவரின் முகத்திலும் மகிழ்ச்சி வெள்ளம்!
“சார், விக்டிம் 2 (விக்ரம்) வாளை விடமாட்டேங்குறாரு! கை விரல்கள் neurogenic grasp reflex மாதிரி இறுகியிருக்கு.” இன்னொரு வீரர் கூற,
டீம் லீடர், “கட்டாயப்படுத்திப் பறிக்க வேண்டாம், அப்படியே லிப்ட் பண்ணுங்க!” என்று கூறினார்.
அவர்களை உடனடியாக ஸ்கூப் ஸ்ட்ரெச்சரில் ஏற்றி, குழியின் மேல்பகுதிக்குக் கொண்டு வந்தனர்.
“ஸ்ட்ரெச்சர் கொண்டு வாங்க! கார்டியாக் மானிட்டரைச் செக் பண்ணுங்க! சீக்கிரம்! வழி விடுங்க!” மருத்துவக் குழுவினர் ஆம்புலன்ஸைத் தயார் நிலையில் வைத்திருந்தனர்.
ஆட்சியர் மீண்டும் முதல்வரிடம் பேசினார். “ஐயா, அவங்களை மீட்டுட்டோம். ரெண்டு பேரும் மயக்கத்துல இருக்காங்க. ஆனா அவங்க கண்டுபிடிச்ச அந்த வாள்… கண்டிப்பா அது ஒரு வரலாற்று பொக்கிஷமா இருக்கும்னு தோணுது.” என்று கூற,
“ரொம்ப சந்தோசம் செல்வம்… அப்புறம் அவங்களுக்கு தேவையான உதவியெல்லாம் பண்ணுங்க. மேல என்ன பண்ணலாம்ன்னு அவங்க குணமாகி வந்தப்புறம் பார்க்கலாம்… அந்த சைட்டை இப்போதைக்கு சீல் பண்ணுங்க. சின்னதா கூட லாஸ் இருக்கக் கூடாது. எதிர்காலத்துல அங்க ஒரு ஆய்வகமும், அருங்காட்சியகமும் கட்டனும்…” என்றவரின் குரலில் உண்மையிலேயே சந்தோசம் நிரம்பி வழிந்தது.
இது அவர்களின் ஆட்சிக்கே ஒரு மைல்கல்லாக இருக்குமென்று அவருக்கு தோன்றியது. அதை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைத்தார். என்ன இருந்தாலும் அவரும் ஒரு அரசியல்வாதி!
மருத்துவக் குழுவினர் முதலுதவி அளிக்கத் தொடங்கியபோது, விக்ரமின் நாடித் துடிப்பு ஒரு சாதாரண மனிதனை விட விசித்திரமான வேகத்தில் இருந்தது. அந்த ஆம்புலன்ஸ் சைரன் ஒலியுடன் புதுக்கோட்டை மாவட்டத் தலைமை மருத்துவமனைக்கு விரைந்தது.
இனி பொற்பனைகோட்டை, இன்னொரு கீழடி!


Nice
thanks ma
அழகு
thanks ma
மயக்க நிலையிலையும் வாளை விடவில்லை விக்ரம் (அரசர்).
இவங்களுக்கு பின்னாடி ஆபத்து ஏதாவது வர வாய்ப்பு இருக்கோ.
Nice intresting ud sis ❤️