arrow_back
வற்பனை சேரல் அத்தியாயம் 19
வற்பனை சேரல் chevron_right பகுதி 19 / 28

அத்தியாயம் 19

visibility 533
star படைப்பை ரேட் செய்யுங்கள்
சராசரி 4.6/5 (5 மதிப்பீடுகள்)
பகிர்

புதுக்கோட்டை அரசு மருத்துவமனையின் அந்தத் தனி வார்டில் நிலவிய நிசப்தம், ஆதிராவின் பெற்றோரின் அழுகுரலால் அவ்வப்போது கலைந்து கொண்டிருந்தது. நிலவறையின் இருளிலும் ஆக்சிஜன் பற்றாக்குறையிலும் சிக்கி மீட்கப்பட்ட ஆதிரா, இன்னும் ஆழ்ந்த மயக்கத்திலேயே இருந்தாள். அவளது தந்தை, தன் மகளின் நிலையை எண்ணிச் சுவரோரம் அப்படியே உடைந்து அமர்ந்திருந்தார்.

“எல்லாமே என் தப்புப்பா… இவளுக்கு எதுக்கு இந்த ஆர்க்கியாலஜி, ஆராய்ச்சி எல்லாம்? பேசாம வீட்டுலயே இருந்திருக்கலாம். அங்க என்ன நடந்துச்சுன்னே தெரியலையே?” என்று ஆதிராவின் தந்தை மிகுந்த வேதனையுடன் கதிரிடம் வினவினார்.

கதிர் அவரருகே சென்று, அவரது கைகளைப் பற்றியபடி ஆறுதல் கூறினான். “அப்பா, நீங்க அப்படி நினைக்காதீங்க. ஆதிராக்கா இன்னைக்கு ஒரு பெரிய விஷயத்தை உலகத்துக்குக் கண்டுபிடிச்சு கொடுத்திருக்காங்க. இந்த நிலவறை கிடைச்சது சாதாரண விஷயம் இல்ல. அங்க கொஞ்ச நேரம் பயமா இருந்திருக்கலாம், ஆனா இப்ப அவ சேஃபா இருக்காங்க. இதோ விக்ரம் ப்ரோ கூட அங்க தான் இருந்தார். அவரும் இப்பதான் கொஞ்சம் தேறி வர்றார். நீங்க தைரியமா இருந்தா தான் ஆதிரா முழிச்சதும் அவளுக்குத் தெம்பா இருக்கும்…” என்று நிதானமாகச் சமாதானம் செய்தான்.

மதி ஆதிராவின் தாயின் அருகே அமர்ந்து, அவருக்குத் தண்ணீர் கொடுத்துத் தேற்றிக் கொண்டிருந்தாள். “அம்மா, ஆக்சிடென்ட் ஆனப்போ உண்டான ஷாக்ல அவ இப்படி உளறிட்டு இருக்கா. டாக்டர்ஸ் சீக்கிரம் சரியாயிடும்னு சொல்லிட்டாங்க. நீங்க அழுதுட்டே இருந்தா அவ முழிச்சுப் பார்க்கும்போது பயந்துடுவா. கொஞ்சம் மனசைத் தேத்திக்கோங்க…” என்று கனிவாகக் கூறினாள்.

அந்த நேரத்தில் விக்ரம் வார்டிற்குள் நுழைந்தான். நிலவறையிலிருந்து வெளிவந்த பிறகு அவனது உடல்மொழியில் ஒரு வியக்கத்தக்க மாற்றம் தெரிந்திருந்தது. அவனிடம் எதிர்பார்க்கப்பட்ட பதற்றமோ, தயக்கமோ அவனிடம் இப்போது இல்லை. எவரிடமும் எதுவும் பேசாமல், ஒரு மௌனமாக அவன் அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தான். அதீத அதிர்ச்சியாக இருக்குமென்று மதியும் கதிரும் நினைத்துக் கொண்டார்கள்.

அவனது கண்கள் ஆதிராவையே உற்று நோக்கிக் கொண்டிருந்தன. அந்தப் பார்வையில் ஒரு தோழமை இருப்பதை விட, ஏதோ ஒன்றைச் சாதித்துவிட்ட நிமிர்வு தெரிந்தது.

ஆதிராவின் பெற்றோர் விக்ரமை ஒருவித அச்சம் கலந்த மரியாதையுடன் அவனைப் பார்த்தனர். விக்ரம் எதைக் குறித்தோ தீர்க்கமாகச் சிந்தித்துக் கொண்டிருப்பது போலத் தோன்றியது.

ஜன்னல் வழியாக அதிகாலைச் சூரியனின் கதிர்கள் ஆதிராவின் முகத்தில் பட்டபோது, அவள் கண்மணிகள் இங்குமங்கும் அலைபாய்ந்தன.

அவளது நினைவுகள் இன்னும் அந்தப் பொற்பனை மாநகரின் மழையிலும், செங்கோல் ஏந்திய அந்த வற்பனைச் சேரலிடமுமே தங்கியிருந்தன.

“வற்பனைச் சேரா… யான் நுமக்கு பெரிதில்லையோ? ஏன் எம்மை மறுத்தீர்?” என்று அவளது இதழ்கள் அவளையும் அறியாமல் முணுமுணுத்தன, கண்ணீர் வழிந்தது!

“ஆதிரா…” மதி அவளை உலுக்கினாள்.

“ஆதி…” மகாலட்சுமியும் தன் பெண்ணை உலுக்கிப் பார்த்தார். ஒரு மணி நேரமாக இதே போராட்டமாகத்தான் இருந்தது.

“நும் செங்கோல் காக்கும் கடமைக்கு முன்னே, எம் காதல் சிறுத்துப் போனதோ? மொழிக அரசே…” கண்களை திறவாமல் கண்ணீர் வழிய பிதற்றிக் கொண்டிருந்தவளை பார்த்து பயந்து போனாள் மதி.

ஆதிராவின் பெற்றோர் இருவரின் கண்களிலும் கண்ணீர், அவளின் நிலையைப் பார்த்து!

அருகில் அமர்ந்திருந்த விக்ரம், அவளை பார்த்த பார்வையில் என்ன இருந்தது? கதிருக்கு புரியவில்லை.

“ஆதிரா… ஆர் யூ ஓகே?” விக்ரம் அவளை எழுப்பினான்! அப்போதுதான் வாய் திறந்தான்!

அந்தக் குரல் கேட்டதும் அவள் திடுக்கிட்டு விழித்தாள்.

வெகு அருகில் விக்ரமின் முகம்!

தூக்கி வாரிப் போட்டது அவளுக்கு. உடல் வலி பின்னி எடுத்தது.

“வற்பனை சேரல்…” என்றவளின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது.

“ஆதிரா…” அருகிலிருந்த மதியும் மகாலட்சுமியும் அவளை உலுக்க, கொடுங்கனவிலிருந்து விழித்தவளை போல பேந்த பேந்த விழித்தாள் ஆதி!

அருகில் இருந்த நாற்காலியில் விக்ரம் அமர்ந்து கொண்டான். அவன் கையில் ஒரு ஆங்கில நாளிதழ். சவரம் செய்யப்பட்ட முகம், நேர்த்தியாக வாரப்பட்ட தலைமுடி என அவன் ஒரு நவீன ஆய்வாளராகவே காட்சியளித்தான்.

“பெருஞ்சேரல்… ச்சே ச்சே… இல்ல… நீங்க… நீங்க… விக்ரம் எப்போ எழுந்தீங்க? அந்த நிலவறை… அந்த வாள்… அந்த ஒற்றன் செத்து விழுந்தானே… ஞாபகம் இருக்கா?” ஆதிராவின் குரலில் நடுக்கம் இருந்தது.

விக்ரம் நாளிதழை மடித்து வைத்துவிட்டு அவளருகே வந்தான். அவனது அசைவுகளில் ஒரு புதிய மிடுக்கு இருந்தது.

“ரிலாக்ஸ் ஆதிரா! உனக்கு என்னாச்சு?” வெகு சாதாரண குரலில் கேட்டவனை உறுத்து விழித்தாள் பெண். சுற்றிலும் பார்த்தாள். இது பொற்பனை இல்லை. தான் ஆதிரை இல்லை. இவன் வற்பனை சேரலில்லை.

மதி, கதிர், விக்ரம், தான் தொல்பொருள் ஆய்வாளர், தன்னுடைய தாய், தந்தை என அனைத்தும் நினைவுக்கு வந்தது.

தான் கண்டதெல்லாம் கனவா?

புரியவில்லை!

“என.. எனக்கா? எனக்கென்ன?” அவளது குரலில் நடுக்கம் இன்னும் போனபாடில்லை.

“வற்பனை சேரல்ன்னு சொல்ற? ஒற்றன்… ஏன் போனான்னு கேக்கற? என்னாச்சு?” மதி கேட்க,

“என்னென்னமோ உளறிட்டு இருக்கடி. இதுக்குத்தான் சொல்றது, பொண்ணா அடக்கசடக்கமா இருக்கணும். அதை விட்டுட்டு நேரங்கெட்ட நேரத்துல எங்கயாவது போய் எதையாவது தோண்ட வேண்டியது. கேட்டா ஆராய்ச்சியாம்! போதும்மா தாயே… நீ பொட்டிய கட்டிக்கிட்டு வீட்டுக்கு கிளம்பி வா…” மகாலட்சுமி பொரிந்தார்.

ஆதிராவின் மயக்கம் தெளிந்து அவள் பேசிய சொற்கள், மகாலட்சுமிக்கும் சந்திரசேகருக்கும் பெரும் திகைப்பை ஏற்படுத்தியது. தன் மகள் ஏதோ ஒரு மனரீதியான பாதிப்புக்கு உள்ளாகிவிட்டாளோ என்ற அச்சம் அவர்களை வாட்டியது.

மகாலட்சுமி ஆதிராவை வீட்டுக்கு அழைத்துக் கிளம்பத் தயாரானபோது, மதி குறுக்கிட்டு அவர்களைச் சமாதானப்படுத்தினாள்.

“அம்மா… கொஞ்சம் பொறுங்க. இப்ப அவளைக் கோபப்பட்டுப் பயமுறுத்தாதீங்க…” என்று மதியின் குரலில் ஒரு நிதானம் இருந்தது.

ஆதிராவின் கைகளைப் பற்றியபடி அவளது அம்மாவிடம் திரும்பினாள் மதி. “அம்மா, அவ உளறலை. அந்த நிலவறையில சிக்கினப்போ ஆக்சிஜன் ரொம்பக் குறைவு. அந்த நேரத்துல மூளைக்கு ஆக்சிஜன் சரியா போகலைன்னா, நாம எதைப் பத்தி அதிகமா நினைக்கிறோமோ அது அப்படியே ஒரு விழிப்புக் கனவு மாதிரி வந்துட்டுப் போகும்னு டாக்டர் சொன்னார். ஆதிரா அந்த இடத்தை பத்தி ரொம்ப தீவிரமா ஆராய்ச்சி பண்ணிட்டு இருந்தா இல்லையா? அந்த நினைப்புதான் இப்ப இப்படி வெளிப்படுது…” என்று அறிவியல் ரீதியாக விளக்கினாள்.

சந்திரசேகர் தலையைப் பிடித்துக்கொண்டு அமர, கதிர் அவர் அருகில் அமர்ந்து தோளைத் தட்டினான். “அப்பா, நீங்க அம்மாவைத் தேத்துங்க. ஆதிராக்கா ஒண்ணும் தெரியாத பொண்ணா அங்க போகலை. அவங்க ஒரு எக்ஸ்பர்ட். ஒருவேளை அங்க இவங்க கண்டுபிடிச்ச அந்த வாள்ல ஏதோ கெமிக்கல் இருந்திருக்கலாம். அது கூட ஒருவிதமான பிரமையைத் தந்திருக்க வாய்ப்பிருக்கு. ஆதிராவுக்கு இப்ப தேவை ரெஸ்ட் தான். நீங்க கிளம்பி வரச் சொன்னா அவங்க இன்னும் டென்ஷன் ஆயிடுவாங்க. இப்போதைக்கு அவங்க இங்கேயே இருக்கட்டும், நாங்க பார்த்துக்கிறோம்…” என்று சமாதானமாகப் பேசினான்.

சந்திரசேகர் பெருமூச்சு விட்டுக்கொண்டு, “இல்லப்பா… எனக்குப் பயமா இருக்கு. அவ பேசறதெல்லாம் பார்த்தா பயமா இருக்கே. ஏதோ ஒற்றன் செத்து விழுந்தான்னு சொல்றா? வற்பனை சேரல்ன்னு சொல்றா. இதெல்லாம் அவளுக்கு எப்படித் தெரியும்?” என்று குறையாத அச்சத்துடன் கேட்டார் சேகர்.

“அப்பா, அதான் சொல்றேன்ல… அவங்க படிச்ச வரலாற்றுச் செய்திகள் அந்த இக்கட்டான நேரத்துல அவங்க முன்னாடி காட்சியா வந்துட்டுப் போயிருக்கு. விக்ரம் ப்ரோவும் அங்கதானே இருந்தார்? அவர் இப்ப நார்மலாதானே இருக்கார்? நீங்க கவலைப்படாதீங்க. இன்னும் கொஞ்ச நேரத்துல ஆதிராவே சிரிச்சுக்கிட்டு இதெல்லாம் எனக்கு ஒரு எக்ஸ்பீரியன்ஸ்னு சொல்லுவாங்க பாருங்க…” என்று கதிர் நம்பிக்கையூட்டினான்.

மகாலட்சுமி இன்னமும் தன் மகளை ஒருவிதமான சந்தேகத்துடனும் பயத்துடனும் பார்த்துக்கொண்டிருந்தார். ஆனால் மதியின் பிடிவாதமான சமாதானம் அவர்களைச் சற்று அமைதிப்படுத்தியது.

விக்ரம் இதையெல்லாம் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தான். அவனது கையில் இருந்த நாளிதழின் ஓரத்தைச் சுருட்டியபடி, ஆதிராவை நோக்கி ஒரு புரியாத புன்னகையை உதிர்த்தான்.

“ஆமா. ஏதோ சம் குழப்பம் போல…” என்று தலையைப் பிடித்துக் கொண்டாள் ஆதிரா.

செல்பேசி அழைக்க அதை எடுத்துக் கொண்டு கதிர் வெளியே போனான்.

“ஆதிரா…” அழுத்தமாக அழைத்தான் விக்ரம்.

நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.

“உள்ள ஆக்சிஜன் கம்மியா இருந்ததால உனக்கு ஹாலுசினேஷன். நாம அந்த பன்னிரெண்டாவது கிரிட்ல மாட்டிக்கிட்டோம், அவ்வளவுதான். மத்தபடி நீ சொல்ற வற்பனை சேரல், ஒற்றன் இதெல்லாம் உன்னோட சப்கான்ஷியஸ் மைண்ட் உருவாக்குன ஒரு ட்ரீம். ஐ தின்க் யூ ஆர் அப்சஸ்ட் வித் திஸ் ரிசர்ச்…”

அவன் மிக இயல்பான ஆங்கிலத்தில் பேசினான். அந்த மழையில் அவளிடம் கடுந்தமிழில் உருகிய அதே மனிதனா இது? ஆதிராவுக்குத் தன் காதுகளையே நம்ப முடியவில்லை.

“இல்லை விக்ரம்! அது கனவு இல்ல. அந்தப் பழைய மண்டபம், அங்க அம்பு பாய்ந்தது… எல்லாமே நிஜம்! நீங்க கூட யான் நினது வற்பனைச் சேரலடின்னு சொன்னீங்களே… ஞாபகப்படுத்திப் பாருங்க!”

தன்னையும் மீறி அவள் கூறிவிட, விக்ரம் லேசாகச் சிரித்தான். அந்தச் சிரிப்பில் ஒரு விதமான கேலியும் இருந்தது.

“வற்பனைச் சேரலா? இன்ட்ரஸ்டிங் நேம்! யார் வெச்சா? நீயா?” என்று சிரித்தவன், “அந்தப் பழைய வாளை நான் விடாமப் பிடிச்சிருந்தேன்னு கதிர் சொன்னான். அது மட்டும்தான் உண்மை. இப்ப நாம ஹாஸ்பிட்டலை விட்டு டிஸ்சார்ஜ் ஆகணும். வெளிய மீடியா வெயிட் பண்ணிட்டு இருக்கு.”

அவன் பேசும்போது அவனது குரலில் ஒரு புதிய அதிகாரம் இருந்தது. அது கோரிக்கை அல்ல, கட்டளை! வற்பனை சேரலின் ஆளுமையான பேச்சு அது. அதன் ஆளுமையில் ஒரு யுகம் வாழ்ந்த நினைவு அவளுக்கு!

ஆதிராவுக்குத் தன் முன்னே இருப்பது விக்ரமா அல்லது வற்பனைச் சேரலா என்ற சந்தேகம் வலுத்தது.

“விக்ரம், நீங்க ஏன் இவ்வளவு நார்மலா இருக்கீங்க? நாம சாகக் கிடந்தோம்!”

விக்ரம் குரலைத் தாழ்த்தி, ஜன்னல் பக்கம் திரும்பி நின்றபடி பேசினான். “நாம சாகலை ஆதிரா… நாம மீண்டு வந்திருக்கோம். திஸ் இஸ் எ நியூ பிகினிங். நாம தேடுன அந்தத் தமிழர் வரலாறு நம்ம கையில கிடைக்கப் போகுது. ஜஸ்ட் கெட் ரெடி!”

அவன் கெட் ரெடி என்று சொல்லும்போது, அவனது முதுகு அவன் வற்பனைச் சேரலை போலவே நின்றது போன்றதொரு பிரமை.

கதிர் சிரித்தபடி உள்ளே வந்தான்.

“ப்ரோ! கலெக்டர் வர்றார்! அப்புறம் டெல்லியில இருந்து ஆர்க்கியாலஜிக்கல் சர்வே ஆஃப் இந்தியா டைரக்டர் கால் பண்ணாரு. பொற்பனைகோட்டை தான் இப்ப நேஷனல் நியூஸ் ப்ரோ!” உற்சாகமாகக் கத்தினான் கதிர்.

விக்ரம் நிதானமாக எழுந்து நின்றான். “குட்! கதிர், மதியிடம் சொல்லி அடுத்த நாலு க்ரிட்களுக்கு (Grids) லேஅவுட் போடச் சொல்லு. ஐ நோ எக்ஸாக்ட்லி வேர் டு டிக்…”

கதிர் திகைத்தான். “ப்ரோ… இன்னும் நாம ஸ்கேன் கூட பண்ணலையே? அதுக்குள்ளே எங்கே தோண்டணும்னு எப்படிச் சொல்றீங்க?”

விக்ரம் அவனை ஊடுருவிப் பார்த்தான். அந்தப் பார்வையில் இருந்த தீட்சண்யம் கதிரைப் பேச விடாமல் தடுத்தது.

“எனக்குத் தெரியும் கதிர்… வேலையை ஆரம்பி!”

விக்ரம் வெளியே செல்ல, ஆதிரா மட்டும் அப்படியே உறைந்து போனாள். அவன் கடுந்தமிழ் பேசவில்லை, பழைய நினைவுகள் இல்லை.

ஆனால், நிலவறையில் எங்கே என்ன இருக்கிறது என்பது அவனுக்குத் துல்லியமாகத் தெரிந்திருக்கிறது. அவன் வற்பனைச் சேரலாகத் தன்னை மற்றவர்கள் முன் காட்டிக்கொள்ள விரும்பவில்லை, ஆனால் அவனுள்ளே அந்த அரசன் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருப்பதை ஆதிரா மட்டும் உணர்ந்தாள்.

அடுத்த அத்தியாயம்

அத்தியாயம் 20

ஆதிரையின் பெற்றோரை மதியும் கதிரும் ஒருவழியாகத் தேற்றி அமர வைத்தனர். ஆனால், மருத்துவமனைக்கு வெளியே நிலைமை தலைகீழாக மாறத் தொடங்கியது.ஆதிராவும் விக்ரமும் நிலவறையிலிருந்து மீட்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே, அந்தச் செய்தி ஊடகங்களில் காட்டுத்தீயாய் பரவியது. “புதுக்கோட்டை அருகே இரண்டாயிரம் ஆண்டு…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

இந்தக் கதையைப் பற்றி விவாதிக்கவும் 4

  1. Thaniபொதுக் கருத்துThani

    விக்ரம் மனதில் உள்ளதை வெளியே காட்டவில்லை ,அதனால் தான் இவள் குழப்பம் அடைகிறாள்,
    சிலதுகளை ரகசியமா தானே வைத்து இருக்கணும் ,
    அப்போ சேரலையின் சித்தப்பாவும் இங்கு இருப்பாரோ..?
    அதாவது இந்தப்பிறவியில் ..?

உங்கள் கருத்தைப் பகிருங்கள்