arrow_back
வற்பனை சேரல் அத்தியாயம் 3
வற்பனை சேரல் chevron_right பகுதி 3 / 28

அத்தியாயம் 3

visibility 757
star படைப்பை ரேட் செய்யுங்கள்
சராசரி 4.8/5 (29 மதிப்பீடுகள்)
பகிர்

அகழ்வாராய்ச்சிக் குழிக்குள் நின்றிருந்த ஆதிராவுக்கு, வியர்வை துளிகள் அவளது முதுகில் வழிந்தாலும், டென்டல் பிக் கொண்டு மண்ணை மிக மென்மையாக அப்புறப்படுத்திக் கொண்டிருந்தாள்.

ஆனால், அவளது கவனம் முழுவதும் இப்போது கையில் இருந்த அந்தச் சிறிய கருப்பு நிற மட்பாண்டத்தின் மேலேயே இருந்தது. அது ஏதோவொரு அதிசயம் போலத் தோன்றியது. மனம் உணர்ச்சி வெள்ளத்தில் சற்று தடுமாறிக் கொண்டிருந்தது. அது கண்டிப்பாக சிறந்த கண்டுபிடிப்பாகத்தான் இருக்க முடியும். ஆனால் என்ன? அகழ்வாராய்ச்சி அரசியலில் அது இன்னுமொரு காணாமல் போகப் போகிற ஒரு துரும்பாகக் கூட இருக்கலாம்.

அவர்கள் எதிர்கொள்ளும் அகழ்வாராய்ச்சி அரசியல்களை பார்த்து அவள் கொஞ்சம் வெறுத்த நிலைக்கே போயிருக்கிறாள். வடக்குக்கும் தெற்குமான அரசியல்கள் அப்படி!

இங்கு இவர்கள் உலக அதிசயத்தையே கண்டுபிடித்தாலும், அதற்கும் கார்பன் டேட்டிங் கேட்பார்கள். அப்படி கேட்டாலும் பரவாயில்லை. அதை அனுப்ப ஆயிரம் சடங்கு! ஒன்றியம் அனைத்தையும் ஒப்புக் கொண்டு கார்பன் டேட்டிங்க்கு அனுப்பும் முன்பே, அதில் உள்ள கரிம அளவீடுகள் மாறத் துவங்கியிருக்கும்.

கிமு ஆறாம் நூற்றாண்டு என்று ஆரம்பத்தில் கணித்தது பொய்த்து கிபி ஆறாம் நூற்றாண்டு என்று வரும். அதையும் மாற்ற சொல்லும் பிரகஸ்பதிகள் தான் அதிகம். கீழடியில் நடந்தவை எல்லாம் இவையும், இவை தவிர இன்னும் பலவும் தான்!

இந்த கண்டுபிடிப்பு எந்தளவு எடுத்து செல்லப்படும் என்பதை கூற முடியாது. ஆனால் சரியாக செயல்படுத்தபட்டால், இது தனது வாழ்நாள் முழுமைக்குமாக பெயர் சொல்லக் கூடிய கண்டுபிடிப்பாக இருக்கக் கூடும்.

திடீரென அந்த அமைதியைக் கிழித்துக்கொண்டு, ராயல் என்பீல்டு புல்லட்டின் சத்தம் கேட்டது. வண்டி நெருங்க நெருங்க எழுந்த புழுதிப் படலம், ஆதிராவின் குழியைச் சூழ்ந்தது. விக்ரம் வந்திருப்பதை அந்தச் சத்தமே உறுதிப்படுத்தியது. அவளது முகத்தில் எரிச்சல் வெளிப்படையாக தெரிந்தது.

அவள் கிழக்கு என்றால் அவன் மேற்கு என்பான். அவள் மேலே என்றால் அவன் கீழே என்பான். எப்போதும் எட்டாம் பொருத்தம் தான்! ஆனால் அவளுடைய பிஎச்டி க்காக பொறுத்துப் போக வேண்டி இருக்கிறது. அவன் ஒன்றும் கைடு இல்லையென்றாலும், அவளது தீசிஸ் முழுமை பெற அவன் முக்கியம்.

அதிலும் ஆதிரா இப்போது மேற்கொண்டிருக்கும் இந்தத் திட்டத்தின் அடுத்தகட்ட நகர்வுகளுக்கு விக்ரமின் அனுமதி மிக அவசியம். அகழாய்வுப் பகுதியில் கண்டெடுக்கப்படும் அரிய பொருட்களைத் தொடர் பரிசோதனைக்கு அனுப்பவோ அல்லது குறிப்பிட்ட இடத்தில் ஆழமாகத் தோண்டவோ அவனது ஒப்புதல் இல்லாமல் முடியாது. இது அவளது பிஎச்டி ஆய்வறிக்கைக்கும் மிக முக்கியம் என்பதால் தான் அவனை பல்லைக் கடித்துக் கொண்டு பொறுத்துப் போகிறாள்.

“விக்ரம் வந்துட்டார்…” கதிர் தன் கையில் இருந்த டோட்டல் ஸ்டேஷன் கருவியைத் துடைத்தபடி சொன்னான்.

கறுப்பு நிற காட்டன் சட்டை, அழுக்கு படிந்த ஜீன்ஸ், கண்களில் ரேபான் கூலிங்கிளாஸ். வண்டியை ஸ்டாண்ட் போட்டுவிட்டு, மிக அலட்சியமாக இறங்கினான். அவனது நடையில் கம்பீரம், ஒரு அரசனைப் போல!

“என்ன ஆதிரா? இந்த வெயில்ல டெர்ராகோட்டா பீஸ் மாதிரி இருக்க? அந்த ஆஸ்திரேலியன் மாப்பிள்ளையோட போட்டோ அந்தப் பானை ஓட்டுல ஏதும் தெரியுதா என்ன?” இறங்கிய வேகத்திலேயே அவளை வம்பிழுத்தான்.

அவளது அந்த ஆஸ்திரேலியா மாப்பிள்ளை சமாச்சாரம் அவன் வரை பரவியிருந்தது தான் விசேஷம்.

ஆதிரா குழிக்குள் இருந்தபடியே நிமிர்ந்து பார்த்தாள். அவளது முகம் கோபத்திலும் வெயிலிலும் சிவந்திருந்தது. “விக்ரம், நாங்க இங்க சீரியஸான கன்ஃபியூஷன்ல இருக்கோம். நீங்க வந்தவுடனே கடுப்படிக்காதீங்க. முதல்ல இங்க வந்து இதைப் பாருங்க.”

விக்ரம் சிரித்துக் கொண்டே குழிக்குள் இறங்கினான். அவன் ஒவ்வொரு அடியும் எடுத்து வைக்கும்போது அந்த மண்ணின் மணம் மாறுவது போல ஆதிராவுக்குத் தோன்றியது. “சரி… சரி… கோபப்படாதீங்க மேடம். என் கிட்ட உதவி கேக்கணும்னா கொஞ்சம் பணிவா கேக்கணும். எங்க திரும்ப கேளுங்க…” சிரிக்காமல் அவன் கூற, அவனைப் பார்த்து முறைத்தவள்,

“சார் விக்ரம் சர்… தயவு பண்ணி இதை பாருங்க சார்.” என்று என்றவள், “என்ன்ன இது ஓக்க்க்கேவா?” என்று பல்லைக் கடித்துக் கொண்டு கேட்க,

அவன் சிரித்தபடி, “ம்ம்ம்… ஓக்க்க்க்கே! சொல்லு, என்ன புதையலைக் கண்டுபிடிச்ச?”

இவனை… என்று மனதுக்குள் வைதவள், அந்த ஓட்டை அவனிடம் நீட்டினாள்.

“இது நார்தர்ன் பிளாக் பாலிஷ்டு வேர். இத்தனை காலம் கழிச்சும் இதோட பளபளப்பு குறையல. ஆனா இது பதினெட்டாம் நூற்றாண்டு அடுக்குல கிடைச்சிருக்கு.”

“சோ வாட்?” என்று அவன் கிண்டலாகவே கேட்டாலும், அவள் காட்டியவற்றை அவனது கண்கள் எக்ஸ்ரே படமெடுத்துக் கொண்டிருந்தன.

“இந்த மாதிரியான ஸ்பெஸிமனோட காலம் கிமு ஏழாம் நூற்றாண்டுலருந்து கிமு இரண்டாம் நூற்றாண்டு வரை தான். அதெப்படி பதினெட்டாம் நூற்றாண்டு லேயர்ல கிடைக்கும்?”

“சோ வாட்?” அவளது கோபத்தை தூண்டுவதற்காகவே கேட்டுக் கொண்டிருந்தான்.

“ஆனா இதோட டெக்னாலஜி இரண்டாயிர வருஷ பழசு. கங்கைச் சமவெளியில கிடைக்க வேண்டியது இங்க புதுக்கோட்டைக்குள்ள இந்த லேயர்ல எப்படி வந்துச்சு?”

லேசாக புன்னகைத்தவன், “ஒரு ரூக்கி ஆர்க்கியாலாஜிகல் ஸ்டுடன்ட் இப்படி கேட்டா பரவால்லை ஆதிரா. பிஎச்டி பண்ற ஒரு ஸ்காலர் இப்படி கேட்க கூடாது. கங்கை சமவெளில மட்டும் தான் பிளாக் பாலிஷ்டு வேர் கிடைச்சுருக்கா? இங்க அரிக்கமேட்டுல கூடத்தான் கிடைச்சுருக்கு. இதுல என்ன புதுமையை கண்டுட்ட?”

“விக்ரம், அரிக்கமேடுல கிடைச்ச ஓடுகள் ப்ரீரோமன் அடுக்கில. அதுவும் இம்போர்ட்டட் தான். ஆனா, இங்கே பொற்பனைக்கோட்டையில கிடைச்சிருக்கிறது முதல் லேயர்ல. இரண்டாயிரத்து முன்னூறு வருஷத்துப் பழமையான இந்த ஓடு, எப்படி முன்னூறு வருஷத்து லேயர்ல வர முடியும்? அதைத்தான் நான் கேக்கறேன்.”

விக்ரம் அந்த ஓட்டைத் தன் கையால் வாங்கி, விரல்களால் அதன் மெருகைத் தடவிப் பார்த்தான். அந்த நொடி… அவன் உடம்பிற்குள் ஒரு மின்சாரம் பாய்ந்தது போன்ற உணர்வு. காற்றில் ஒரு வினாடிக்கு மட்டும் பழைய சந்தன வாசனை வீசி மறைந்தது. ஆனால், விக்ரம் உணர்ச்சிகளுக்கு அடிமையாகக் கூடியவன் அல்ல. அவனுக்கு விஞ்ஞான ரீதியான ஆதாரம் முக்கியம், லாஜிக் மிக முக்கியம்!

“ஆதிரா… லுக்… இது ஒன்னும் அதிசயம் இல்ல. இதுக்கு பேரு ஃபிசிக்கல் டிஸ்டர்பன்ஸ். எவனாவது பதினெட்டாம் நூற்றாண்டுல குழி தோண்டிப் புதைக்கும்போது, அடியில இருந்த இரண்டாயிர வருஷப் பழசை மேல கொண்டு வந்து போட்டுருப்பான். இல்லன்னா, யாராவது டிராவலர் அதை இங்க கொண்டு வந்து போட்டுட்டுப் போயிருப்பான். இதுக்குப்போய் ஏதோ மர்மம்னு ரிப்போர்ட் எழுதி…” என்று மீண்டும் நக்கலாகச் சிரித்தான்.

அவனுக்கே தெரியும், அது வலுவில்லா வாதமென்று. என்ன தான் கூறுகிறாள் பார்க்கலாம் என்ற அல்பத்தனம் கூட என்று சொல்லலாம்!

ஆதிராவின் பொறுமை எல்லை மீறியது. “விக்ரம் இந்த மண்ணோட ஸ்ட்ராடிகிராஃபியை பார்த்திருக்கேன். யாராவது குழி தோண்டிப் போட்டிருந்தா, அந்த இடத்தில மண்ணோட நிறமும் தன்மையும் மாறியிருக்கும். ஆனா அங்கே எந்த டிஸ்டர்பன்ஸும் இல்லை. அந்த லேயர் ரொம்ப சீரா இருக்கு. சீல்ட்…”

“அப்படீன்னா என்ன சொல்ல வர்ற?”

“இரண்டாயிரத்து முன்னூறு வருஷத்துக்கு முன்னாடி இருந்த ஒரு பொருளை, முன்னூறு வருஷத்துக்கு முன்னாடி வாழ்ந்த ஒருத்தன் பத்திரமா இதே இடத்துல ஏதோ ஒரு காரணத்துக்காக வச்சிருக்கான். அது ஏன்?”

விக்ரம் லேசாக நகர்ந்து குழியின் ஓரத்தைப் பார்த்தான். “ஆதிரா, நீ சொல்ற சீல்ட் லேயர் தியரியை நான் ஏத்துக்கிறேன். ஆனா, பதினெட்டாம் நூற்றாண்டுல வாழ்ந்த ஒருத்தனுக்கு இரண்டாயிரத்து முன்னூறு வருஷத்துக்கு முன்னாடி இருந்த மட்பாண்டத்தோட மதிப்பு எப்படித் தெரிஞ்சிருக்கும்?” மீண்டும் அவன் கேட்க,

“மே பி ஆன்டிகுவாரியன் கலெக்ஷன்…” என்று தோளை குலுக்கினாள் ஆதிரா.

முன்னூறு வருடங்களுக்கு முன்பே பழைய பொருட்களைச் சேகரிக்கும் பழக்கம் இருந்திருக்கலாம் என்று ஆதிரா கூறியதை அவனால் ஏற்க முடியவில்லை.

“அதுக்கு வரலாற்று தரவுகள் ஏதுமில்லையே!”

“அதனாலதான் நான் இதைப் புதுமையான அசோசியேஷன்ன்னு சொல்றேன் விக்ரம்.” என்றவளை தீர்க்கமாக பார்த்தவன்,

“அது உன்னோட ஹைப்போதீசிஸ் ஆதிரா…”

“ஒய் நாட்? இந்த ஓட்டுல இருக்கிற அந்தக் குறுவாள் முத்திரையைப் பாருங்க. இது சாதாரணப் பானையில வர்ற டிசைன் இல்லை. இது ஒரு ராயல் சீல்.”

விக்ரம் அந்த ஓட்டைத் திருப்பிப் பார்த்தான். அதில் பொறிக்கப்பட்டிருந்த அந்தக் குறுவாள் முத்திரை அவனது கவனத்தை ஈர்த்தது.

“அதுவும் இந்த டிசைன் ரொம்ப யூனிக்கா இருக்கு.” என்றவளை மறுத்துப் பேசவில்லை.

“ம்ம்ம்… சோ?”

“இதுக்கு அடியில ஏதோ ஒரு ஃபவுண்டேஷன் டெபாசிட் இருக்கணும்.” என்று முடித்தவளை ஏறிட்டு பார்த்தான்.

“என்ன, எதாவது புதையல் இருக்கும்ன்னு நினைக்கறீங்களா மேடம்?” கிண்டலான அவனது கேள்வி, அவளை கடுப்பாக்கியது. ஆனால் இவனிடம் கடுப்பாகி வார்த்தையை விட்டால், தன்னுடைய ஆராய்ச்சி அந்தரத்தில் நின்று விடுமென்று அவளுக்கு தெரியும். அவன் அனுமதித்தால் தான் அடுத்த கட்டமாக பத்தடி வரை தோண்ட முடியும்.

“ஏன் இருக்கக் கூடாதா? இப்ப கிடைச்சிருக்க ஓடே ரொம்ப பெரிய முரண்பாடு தான். இன்னும் ஆழமா, ஒரு பத்தடி தோண்டினா அதைவிடப் பெரிய முரண்பாடு கிடைக்காதா?” ஆதிராவின் குரலில் ஒரு ஏக்கம் கலந்த எதிர்பார்ப்பு தெரிந்தது.

விக்ரம் அவளைத் தீர்க்கமாகப் பார்த்தான்.

“ஆதிரா… ஒரு கிரிட்குள்ள பத்தடி தோண்ட அனுமதி வாங்குறது எவ்ளோ கஷ்டம்னு உனக்கும் தெரியும். அதுவும் இப்ப இருக்கிற பொலிட்டிக்கல் சிச்சுவேஷன்ல, நாம எக்ஸ்ட்ரா தோண்டி அடியில ஒன்னும் கிடைக்கலைன்னா, பணம் வேஸ்ட்னு ஆடிட் வரும். ஆனா…”

அவன் இழுத்தான். என்னவென்று அவனை ஆர்வமாக நிமிர்ந்து பார்த்தவள்,

“ஆனா என்ன விக்ரம்?” என்று கேட்க,

“ஆனா, நீ சொல்ற அந்த ராயல் சீல் எனக்குள்ளயும் ஒரு சின்னக் குடைச்சலை உண்டாக்குது. பத்தடிக்கு இப்போதைக்கு அனுமதி தர முடியாது. ஆனா, இந்த இடத்துல ஒரு வெர்டிகல் எக்ஸ்கவேஷன் பண்ணிப் பார்க்க நான் ஓகே சொல்றேன். அதுக்கு முன்னாடி, ஜிபிஆர் ஸ்கேன் பண்ணி பார்த்துடலாம். அதுல ஏதும் வாய்டு (Void) தெரிஞ்சா, நீ கேக்குற அந்தப் பத்தடிக்கு நான் பர்மிஷன் தரேன். என்ன ஓகேவா?”

அவன் கொடுத்த இந்த அனுமதியே அவளுக்கு பூரிப்பை தந்தது. வாழ்நாள் முழுக்க தன் பெயரை சொல்லும் விதமாக ஏதேனும் சாதிக்க வேண்டும் என்பதுதான் அவளது ஆசையே. அந்த ஆசையை பூர்த்தி செய்ய முதலடி வைப்பது போன்ற பிரமை அவளுக்குள்!

சிறு புன்னகையோடு, “தேங்க்ஸ் விக்ரம். ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்…” என்று அவள் மனதார கூற, அவனது அந்த புன்னகை முகத்தைப் பார்த்தவனுக்குள்ளும் இனம் புரியாத சந்தோசம்.

அடுத்த அத்தியாயம்

அத்தியாயம் 4

ஒரு வாரம்... ஆதிராவிற்கு அந்த ஏழு நாட்களும் ஏழு யுகங்களாகக் கழிந்தன. விக்ரம் சொன்னது போலத் துறை ரீதியான அனுமதிகளைப் பெற்று, ஜிபிஆர் கருவியுடன் வர ஒரு வாரமாகியிருந்தது. வழக்கமான வேலையாட்கள் தவிர, ஜிபிஆர் ஆபரேட்டர்கள் இருவரும், விக்ரமின் உதவியாளர் கணேஷும்…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

இந்தக் கதையைப் பற்றி விவாதிக்கவும் 5

  1. Jeyalakshmigomathiபொதுக் கருத்துJeyalakshmigomathi

    Informative narration nice... உள்ளயே இழுக்குது... சூப்பர் க்கா

  2. Thaniபொதுக் கருத்துThani

    இரண்டு பேரும் கிழக்கும் மேற்குமா இல்லை இருக்காங்க ,

  3. Swathiபொதுக் கருத்துSwathi

    எதிர் எதிர் துருவங்கள் தானே ஈர்க்கும்..... பாப்போம் பகலவன் உறைவானா இல்லை பாறை உருகுமான்னு....

உங்கள் கருத்தைப் பகிருங்கள்