arrow_back
வற்பனை சேரல் அத்தியாயம் 21
வற்பனை சேரல் chevron_right பகுதி 21 / 28

அத்தியாயம் 21

visibility 537
star படைப்பை ரேட் செய்யுங்கள்
சராசரி 4.6/5 (8 மதிப்பீடுகள்)
பகிர்

மருத்துவமனையிலிருந்து திரும்பிய இரண்டாம் நாளே, விக்ரம் ஓய்வெடுக்க மறுத்துக் களத்தில் இறங்கிவிட்டான். தமிழக அரசு ஒதுக்கிய ஐம்பது லட்ச ரூபாய் நிதியின் பலனாக, தளம் முழுவதும் அதிநவீனக் கருவிகள் வந்து குவிந்திருந்தன. குறிப்பாக, வான்வழியாகவும் நிலவழியாகவும் தரைப் பரப்பிற்கு அடியில் இருப்பவற்றைத் துல்லியமாகக் காட்டும் LiDAR (Light Detection and Ranging) கருவிகள் வரவழைக்கப்பட்டன.

அகழாய்வுத் தளத்தின் மையப்பகுதியில் ஒரு பெரிய குடை அமைக்கப்பட்டிருந்தது. அங்கிருந்த மேஜையில் பல லேப்டாப்கள் இணைக்கப்பட்டு, திரையில் கிரிட் வரைபடங்கள் மின்னிக் கொண்டிருந்தன. விக்ரம் அமைதியாக நின்று அந்தத் தளத்தை ஒருமுறை மேய்ந்தான். அவனது கண்களில் ஒருவிதத் தீர்க்கம் இருந்தது. அது ஏதோ ஒன்றைத் தேடுவது போலன்றி, ஏற்கனவே தெரிந்த ஒன்றை உறுதிப்படுத்துவது போலத் தெரிந்தது.

விக்ரம் மெல்ல நடந்து சென்று, தளத்தின் வடகிழக்கு மூலையில் நின்றிருந்த ஒரு முதிர்ந்த வேப்பமரத்தின் அருகே நின்றான். அங்கிருந்து சுமார் பத்து அடி தள்ளி ஒரு இடத்தை மிதித்தபடி பின்னால் திரும்பினான்.

“கதிர்! இங்கே வா…” விக்ரமின் குரல் அதிகாரமாக ஒலித்தது.

கதிர் தனது கையில் இருந்த உயர்தரத் டேப்லெட்டுடன் ஓடி வந்தான். “சொல்லுங்க ப்ரோ…”

“என்ன பண்ணிட்டு இருக்க?”

“ஜிபிஆர் ரீடிங்ஸ் எடுத்துட்டு இருக்கேன் ப்ரோ.”

“இந்த வேப்பமரத்தோட வேர்கள் பரவியிருக்கிற திசையை கவனி. அங்கிருந்து தெற்குப் பக்கமா ஒரு ஆர்க் மாதிரி ஒரு பகுதியை ஸ்கேன் ரிப்போர்ட்ல செக் பண்ணு. பன்னெண்டுலருந்து பதினாலு வரைக்கும் இருக்கிற கிரிட்ல கவனம் செலுத்து…” என்றான் விக்ரம்.

கதிர் தனது டேப்லெட்டில் சப் சர்பேஸ் அனாமலி (நிலத்தடி மாறுபாடுகள்) வரைபடத்தைத் தட்டினான். நிலத்தடிக்குள் ஊடுருவும் ரேடார் (ஜிபிஆர்) மற்றும் லிடார் தரவுகள் ஒன்றிணைந்து ஒரு முப்பரிமாண வரைபடத்தை உருவாக்கத் தொடங்கின.

“ஒரு நிமிஷம் ப்ரோ… டேட்டா ரெண்டர் ஆயிட்டு இருக்கு…” என்ற கதிர், திரையைச் சுருக்கி விரித்துப் பார்த்தான். “வாட் த… ப்ரோ! நீங்க சொன்ன அதே இடத்துல ஒரு பெரிய அனாமலி தெரியுது! சாதாரண மண்ணடுக்கா இருந்தா சிக்னல் சீரா இருக்கும். ஆனா இங்கே பாருங்க, சிக்னல் அப்படியே பிளாக் ஆகி ஒரு செவ்வக வடிவத்துல ரிஃப்ளெக்ட் ஆகுது!”

விக்ரம் குனிந்து அந்தத் திரையைப் பார்த்தான். திரையில் நீலம் மற்றும் சிவப்பு நிறக் கோடுகள் நிலத்தடியில் ஒரு கட்டுமானத்தின் இருப்பை உறுதி செய்தன.

“ப்ரோ, இது வெறும் பாறை இல்லை. இதோட டென்சிட்டி ரொம்ப அதிகமா இருக்கு. சுமார் இரண்டு மீட்டர் ஆழத்துல ஏதோ ஒரு பெரிய ஆப்ஜெக்ட் இருக்கு. இதோட சிக்னேச்சர் பார்த்தா ஒரு ஸ்கல்ப்சர் அல்லது ஒரு பெரிய பலிபீடம் மாதிரி தெரியுது!” என்று கதிர் உற்சாகத்தின் உச்சத்துக்கே சென்றான்.

மதியும் ஆதிராவும் அங்கே வந்து சேர்ந்தனர்.

“என்ன கதிர், ஏதாவது கிடைச்சதா?” மதி ஆவலுடன் கேட்டாள்.

“கிடைச்சதா? இதோ பாருங்க! ப்ரோ சொன்ன அதே ஸ்பாட்ல லிடார் ஒரு பெரிய பிம்பத்தைக் காட்டுது. இதோ இந்த தெர்மல் இமேஜிங் லேயரை ஆட் பண்ணா, அந்த இடத்துல மண்ணோட ஈரப்பதம் மத்த இடங்களை விட வித்தியாசமா இருக்கு. அப்படின்னா அடியில் ஏதோ ஒரு கட்டுமானம் காற்றோட்டத்தோட இருக்குன்னு அர்த்தம்!” என்று விளக்கினான் கதிர்.

ஆதிரா விக்ரமைப் பார்த்தாள். அவன் அந்த வேப்பமரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான். அவனது முகம் ஒரு கல்லினைப் போல இறுகியிருந்தது.

“எப்படி விக்ரம்? இன்னும் பிசிக்கல் எக்ஸாவேஷன் கூட ஆரம்பிக்கல. அதுக்குள்ள இந்த இடத்துல தான் அனோமலி இருக்கும்னு எப்படி உங்களுக்குத் தோணுச்சு?” ஆதிராவின் கேள்வி அவனது ஆழ்மனதைத் துளைக்க முயன்றது.

விக்ரம் நிதானமாகத் திரும்பினான். “இது வெறும் புள்ளிவிவரம் தான் ஆதிரா. இந்தத் தளத்தோட சரிவு மற்றும் மண்ணோட அமைப்பை வைச்சு ஒரு ஜியோலாஜிக்கல் கால்குலேஷன் பண்ணினேன். அது வொர்க் அவுட் ஆயிருக்கு. கதிர், இந்த இடத்தை உடனே மார்க் பண்ணு. பதிமூன்றாவது கிரிட்ல இருந்து தோண்டுதலை ஆரம்பிப்போம்…” என்று ஆங்கிலத்தில் கூறிவிட்டு நகர்ந்தான்.

விக்ரம் அங்கிருந்து விலகிச் சென்றாலும், அவன் மிதித்த அந்த இடத்தில் ஏதோ ஒரு ரகசியம் புதைந்து கிடப்பதை ஆதிரா உணர்ந்தாள். அவன் சொன்னது ஜியோலாஜிக்கல் கால்குலேஷன் அல்ல; அது காலங்களைக் கடந்த அவனது ஆன்மாவின் வரைபடம்!

***

அகழாய்வுத் தளத்தின் பதிமூன்றாவது கிரிட்டில் நான்கு நாட்களாக Excavation நடந்து கொண்டிருந்தது. விக்ரம் குறித்த அந்தப் புள்ளியில், ஒவ்வொரு அங்குல மண்ணையும் அகற்றுவது என்பது மிக நுணுக்கமாகத் திட்டமிடப்பட்டது. அகழ்வாய்வில் பயன்படுத்தப்படும் ஸ்ட்ரேடிகிராபி முறைப்படி, மண்ணின் ஒவ்வொரு அடுக்கையும் அதன் நிறம் மற்றும் தன்மையைக் கொண்டு தரம் பிரித்து ஆவணப்படுத்தினர்.

“ப்ரோ, டாப் சாயில் தாண்டி இப்ப ஹியூமஸ் (Humus) லேயர்ல இருக்கோம். இன்னும் ஒரு அடி தோண்டினா நாம நாலாவது லெவலுக்கு போயிடலாம்…” என்று கதிர் கையில் இருந்த டிராவல் எனப்படும் சிறிய கரண்டியால் மண்ணைச் சுரண்டியபடி சொன்னான்.

விக்ரம் குழியின் விளிம்பில் நின்றிருந்தான். அவனது கண்கள் அலைபாய்ந்து கொண்டிருந்தன. அது ஒரு ஆய்வாளரின் தேடல் அல்ல; ஒரு தொலைந்த பொக்கிஷத்திற்காக ஏங்கும் ஒருவனின் தவிப்பு. ஒவ்வொரு முறை மண்வெட்டி உள்ளே இறங்கும்போதும், அவனது உடல் லேசாக அதிர்வதை ஆதிரா கவனித்தாள்.

“விக்ரம், நீங்க ஏன் இவ்வளவு டென்ஷனா இருக்கீங்க? ஒருவேளை உள்ள ஒண்ணுமே இல்லாமப் போனா என்ன பண்ணுவீங்க?” என்று ஆதிரா மெல்லக் கேட்டாள்.

விக்ரம் அவளைத் திரும்பிப் பார்க்கவில்லை. “இருக்கும் ஆதிரா… அங்கே அவள் இருப்பாள். இரண்டாயிரத்து முன்னூறு வருடங்களாகத் தன் மைந்தனுக்காகக் காத்திருக்கிறாள்…” என்றான் மிகத் தாழ்வான குரலில். அவனது அந்தப் பதில் ஆதிராவை ஒரு நொடி நடுங்க வைத்தது.

நான்காம் நாள் மதியம். வெயில் தாளமுடியாத உக்கிரத்தில் இருந்தது. கதிர் சுமார் ஏழு அடி ஆழத்தில் நின்றிருந்தபோது, அவனது மண்வெட்டியின் முனையில் ஏதோ கல் தட்டும் சத்தம் கேட்டது. கூடவே சில வேலையாட்களும் மண்ணை அகற்றிக் கொண்டிருந்தனர். டொக்… என்ற அந்த மெல்லிய சத்தம், அங்கிருந்த அனைவரின் இதயத் துடிப்பையும் எகிற வைத்தது.

“ப்ரோ! ஏதோ ஹார்டு ஆப்ஜெக்ட் தட்டுப்படுது! பாறை மாதிரி தெரியல!” கதிர் உற்சாகமாகக் கத்தினான்.

“இனிமேல் மண்வெட்டி வேண்டாம். கதிர், பிரஷ் எடு. மெதுவாக… மிகவும் மெதுவாக மணலை அகற்று.” விக்ரமின் குரல் இடியென ஒலித்தது.

கதிர் மற்றும் மதி இருவரும் குழியில் இறங்கி, மிக மென்மையான பிரஷால் அந்தக் கல்லைப் போர்த்தியிருந்த மணலை அகற்றத் தொடங்கினர். ஒவ்வொரு தூசியும் விலக விலக, ஒரு கருப்பு நிறச் சிலையின் வடிவங்கள் தெரியத் தொடங்கின. முதலில் ஒரு கிரீடம், பின் உக்கிரமான கண்கள், அதன் பின் கம்பீரமான கரங்கள்…

கடைசியாகச் சிலையின் அடிப்பகுதியைச் சுத்தப்படுத்தியபோது, கதிர் அப்படியே உறைந்து நின்றான். “மை காட்… இது… இது கொற்றவை!”

அங்கே கம்பீரமாக வெளிப்பட்டாள் அவள்… கொற்றவை!

எருமைத் தலையின் (மகிஷன்) மேல் நின்றிருந்த அந்தப் போர் தெய்வம், இரண்டாயிரத்து முன்னூறு ஆண்டுகால இருண்ட உறக்கம் களைந்து, நவீன காலத்தின் சூரிய ஒளியைச் சந்தித்தாள். அந்தச் சிலையின் நேர்த்தி, செதுக்கப்பட்ட விதம் யாவும் அன்றைய தமிழரின் கலைத்திறனுக்குச் சான்றாக நின்றன.

ஆதிரா அப்படியே அந்த இடத்திலேயே அமர்ந்துவிட்டாள். அவளது கண்கள் கலங்கின. “பழையோள்…” என்று அவளது இதழ்கள் மௌனமாக முணுமுணுத்தன. சங்க இலக்கியங்களில் அவள் வாசித்த அதே கொற்றவை, தன் கண் முன்னே உயிரோடு நிற்பது போன்ற ஒரு பிரமை அவளுக்குள் ஏற்பட்டது.

விக்ரமின் முகத்தைப் பார்த்த ஆதிரா ஸ்தம்பித்தாள். அவனது முகத்தில் இப்போது ஒரு விசித்திரமான, வரையறுக்க முடியாத அமைதி நிலவியது. அது ஒரு கண்டுபிடிப்பைக் கண்டு வியக்கும் ஆய்வாளரின் முகமல்ல.

இரண்டாயிரத்து முன்னூறு ஆண்டுகளுக்குப் பின், தன் குலதெய்வம் மீண்டும் மண்ணுக்கு மேலே வந்திருப்பதை உணர்ந்த ஒரு பேரரசனின் முகம்! அவனது கண்கள் நீர் கோர்த்து நின்றன. அதிகாரத்தின் கனலைக் கக்கும் அவனது கண்கள், இப்போது அந்தத் தெய்வத்தின் காலடியில் ஒரு சிறு குழந்தையைப் போலச் சரணடைந்திருந்தன.

சுற்றிலும் இருந்தவர்கள் “கிரேட் டிஸ்கவரி!” என்று கத்திப் பாராட்டிக் கொண்டிருந்தபோது, விக்ரம் மட்டும் அந்தச் சிலையையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். அவனுள் இருக்கும் பெருஞ்சேரலின் ஆன்மா மட்டுமே அந்தத் தருணத்தின் உக்கிரத்தையும், இரண்டு யுகங்களுக்குப் பின்னான அந்தத் தெய்வீகச் சந்திப்பையும் ஆழமாக உணர்ந்தது.

***

அகழாய்வுத் தளத்திற்கு அருகிலிருந்த அந்தப் பழைய பங்களா, இரவு நேரங்களில் அமானுஷ்யமாக இருக்கும். ஆனால் அன்று, அந்த ஹாலில் பரவியிருந்த லேப்டாப் வெளிச்சமும், எரியும் விளக்குகளும் அந்த வீட்டை ஒரு ஆய்வகமாக மாற்றியிருந்தன.

கதிரும் மதியும் ஹாலில் அமர்ந்து அன்று கிடைத்த கொற்றவை சிலையைப் பற்றிய தரவுகளை லேப்டாப்பில் பதிவேற்றிக் கொண்டிருந்தனர். ஆதிரா ஒரு சோபாவில் அமர்ந்து அவர்கள் பேசுவதை மௌனமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளது உடல்நிலை தேறியிருந்தாலும், மனநிலை இன்னும் அந்த நிலவறை நினைவுகளிலிருந்து முழுமையாக மீளவில்லை.

“இன்னைக்குக் கிடைச்ச அந்தச் சிலையோட அமைப்பு, செதுக்கப்பட்ட விதம் எல்லாம் பார்த்தா இது சங்க காலத்துத் தொடக்கமா இருக்கும்னு தோணுது. சாம்பிள்ஸை பீட்டா அனாலிட்டிக்ஸுக்கோ இல்ல அகமதாபாத் ஆய்வகத்துக்கோ அனுப்பணும். ரிப்போர்ட் வர எப்படியும் ரெண்டு மாசமாகும்.” மதி வியப்புடன் கூறினாள்.

கதிர் திரையை உற்றுப் பார்த்தபடி, “மதி, அந்தச் சிலையோட தோள் பட்டையில இருக்கற அந்தச் சின்ன செதுக்கல்களை கவனிச்சியா? அது மெகாலித்திக் (Megalithic) காலத்தோட குறியீடுகள் மாதிரி இருக்கு. ஆனா கையில் இருக்கற ஆயுதங்கள் பிற்காலத்துச் சோழர் காலத்துத் தாக்கத்தை வச்சிருக்கு. இது ஒரு மர்மமான கலவை மாதிரித் தெரியுது.

“எஸ் நீ சொல்றது கரெக்ட்டா தம்பி…” மதி சிரிக்க, கதிர் முறைத்தான்.

லேப்டாப் திரையை இன்னும் பெரிதாக்கிப் பார்த்த கதிர் தலையைச் சொரிந்து கொண்டான்.

“மதி, நீயே பாரேன்… இந்தச் சிலையில இருக்கற நேர்த்தியான வேலைப்பாடுகள் பிற்காலத்துச் சோழர் காலத்துச் சிலைகளுக்கே சவால் விடுற மாதிரி இருக்கு. ஆனா, நாம இதை எடுத்ததோ இரண்டாயிரம் வருஷம் பழைய அடுக்கில் இருந்து! இது எப்படிச் சாத்தியம்? ஒண்ணு, நாம நினைச்சதை விட அந்தப் பழைய சேரர்கள் அறிவியல்ல ரொம்ப அட்வான்ஸ்டா இருந்திருக்கணும். இல்லன்னா, காலத்தையே குழப்புற மாதிரி நாம ஏதோ ஒரு பெரிய மர்மத்தை மிஸ் பண்றோம்!”

மதி யோசனையுடன் சொன்னாள், “ஒருவேளை இந்தச் சிலையில இருக்கற டெக்னிக்கைப் பார்த்துதான் பிற்காலச் சோழர்கள் இன்ஸ்பைர் ஆகி இருப்பாங்களோ? நாம கண்டுபிடிச்சிருக்கிறது அந்த நாகரிகத்தோட ஒரிஜினல் டிசைனா கூட இருக்கலாம்ல? ஆதி, நீ என்ன நினைக்கிற?” என்று ஆதிராவிடம் கேட்டாள்.

ஆதிரா மெல்ல நிமிர்ந்து அமர்ந்தாள். “அந்தச் சிலையோட கண்கள்…” என்று அவள் தொடங்கும்போது குரல் லேசாக நடுங்கியது. “அதோட கண்கள்ல ஒருவிதமான உக்கிரம் இருக்கு. அது சாதாரணக் கொற்றவைச் சிலை மாதிரித் தெரியல. ஏதோ ஒரு பெரும் போரோட வெற்றிக்காகப் பலி கொடுத்து வணங்கப்பட்ட சிலையா இருக்கணும். அந்தச் சிலையோட பீடத்துல இருக்கற அந்தச் சின்ன ஓட்டை… அது வழியாத்தான் ரத்தம் உள்ள போயிருக்கணும்.” என்று அவள் டெக்னிக்கலாகவும் அதே சமயம் உணர்வுப்பூர்வமாகவும் சொன்னாள்.

மதி லேப்டாப்பில் அந்தச் சிலையைப் பெரிதுபடுத்திப் பார்த்தாள். “ஆதி சொல்றது லாஜிக்கலா தெரியுது. அதோட டிரைனேஜ் சிஸ்டம் அப்படித் தான் டிசைன் பண்ணப்பட்டிருக்கு. ஆனா இதைப் பத்தித் தெரிஞ்சுக்க கார்பன் டேட்டிங் தான் ஒரே வழி…” என்றாள்.

சிறிது நேர மௌனத்திற்குப் பிறகு, மதியின் குரல் மெல்லத் தாழ்ந்தது. கதிரைப் பார்த்து தயக்கத்துடன் கேட்டாள், “கதிர்… விக்ரம் ப்ரோ பத்தி நீ என்ன நினைக்கிற? ஆஸ்பத்திரியில இருந்து வந்ததுல இருந்தே அவரோட பாடி லேங்குவேஜ் ரொம்ப மாறிடுச்சு. முன்னாடி அவர் ஒரு டீம் பிளேயரா இருந்தார். ஆனா இப்போ, அத்தாரிடேடிவா நடந்துகிறார்.”

கதிர் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு, “ஆமா மதி, எனக்கும் அந்தத் தயக்கம் இருக்கு. அவரோட பேச்சில் ஒருவித அதிகாரத் தோரணை தெரியுது. அந்த நிலவறையில அப்படி என்னதான் நடந்துச்சுன்னு தெரியலையே!” என்றவன், ஆதிரா பக்கம் திரும்பி, “அங்க அப்படி என்னதான் ஆச்சுங்க ஆதிரா?” என்று கேட்டான்.

அவள் பதில் கூறாமல் யோசனையிலேயே இருந்தாள்!

மதி யோசனையுடன் லேப்டாப்பில் இருந்த கொற்றவையின் புகைப்படத்தை உற்றுப் பார்த்தாள். “முன்னாடி எதுவா இருந்தாலும் ஆதிராகிட்டயும் நம்மகிட்டயும் டிஸ்கஸ் பண்ணிட்டுத்தான் முடிவு எடுப்பார். ஆனா இப்போ, இதை இப்படித்தான் பண்ணணும்னு ரொம்பக் கறாரா இருக்கார். ஆதி, உனக்கு அங்க என்ன நடந்துச்சுன்னு உண்மையாவே ஞாபகம் இல்லையா?” என்று கேட்டாள்.

ஆதிரா இதைக் கேட்டு எவ்வித எதிர்வினையும் காட்டவில்லை. அவளது மௌனம் இன்னும் ஆழமானது. விக்ரம் மற்றவர்கள் முன்னிலையில் ஆதிராவிடம் இதுவரை எந்த ஒரு தனிப்பட்ட நெருக்கத்தையோ அல்லது உரிமையையோ காட்டியதில்லை. அவன் காட்டியதெல்லாம் ஒரு கல் போன்ற இறுக்கமான அதிகாரத்தை மட்டுமே. ஆனால், அந்த மௌனத்திற்குப் பின்னால் ஏதோ ஒன்று ஒளிந்திருப்பதை ஆதிரா உணர்ந்தாள்.

அந்த நிலவறையில் அவன் வற்பனைச் சேரலாக மாறியிருந்த அந்த நொடியும், இப்போது நவீன உடையில் இருக்கும் அவனது இந்த அதிரடி மாற்றமும் அவளுக்குள் ஒரு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தது. அவன் யாரிடமும் பேசாமல் இருக்கும் அந்த அமைதி, ஒரு புயலுக்கு முன்னால் இருக்கும் மௌனத்தைப் போலவே அவளுக்குத் தோன்றியது.

அதிலும் அவனது முத்தம்… அது உண்மையா? அல்லது அதுவும் தனது கற்பனையா என்ற கேள்வி அவளுக்குள் வியாபித்து நின்றது.

ஆதிரா மெல்ல எழுந்து ஜன்னல் அருகே சென்றாள். இருளில் மூழ்கிக்கிடந்த அந்தத் தளத்தைப் பார்த்தபோது, விக்ரமின் மாற்றமும் அங்கிருந்த கொற்றவை சிலையின் உக்கிரமும் ஏதோ ஒரு புள்ளியில் இணைவது போல அவளுக்குத் தோன்றியது. மதியும் கதிரும் அவன் மேல் வைத்திருக்கும் அந்தச் சந்தேகம், வெறும் ஆரம்பம்தான் என்பதை அவள் உணர்ந்தாள்.

கதிர் கொட்டாவி விட்டபடி எழுந்தான். “ஆனா அவர் ஒரு ஜீனியஸ் மதி. சரி, தூக்கம் வருது, குட் நைட்.” மதியும் கதிரும் தத்தமது அறைகளுக்குச் சென்றனர்.

இரவின் நிசப்தம் அந்த அகழாய்வுத் தளத்தை இன்னும் பயங்கரமானதாக மாற்றியிருந்தது. தூக்கம் கண்களைத் தழுவாமல் தவிக்க, ஆதிரா மெல்லத் தனது அறையை விட்டு வெளியே வந்தாள். சில்லிடும் காற்றும், மண்ணின் மணமும் அவளை ஏதோ ஒரு திசையை நோக்கி ஈர்க்க, அவள் அறியாமலேயே அந்தத் தற்காலிகக் கூடாரத்தை நோக்கி நடந்தாள்.

தூரத்திலிருந்தே அந்த ஒற்றை எல்.இ.டி விளக்கின் வெளிச்சம் தெரிந்தது. அந்த மெல்லிய ஒளியில், ஒரு கற்சிலையைப் போல அசையாமல் நின்று கொண்டிருந்தான் விக்ரம். அவன் கொற்றவைச் சிலையையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த விதம், பார்ப்பதற்கே அமானுஷ்யமாக இருந்தது.

ஆதிரா ஒரு மரத்தின் மறைவில் நின்று அவனைப் பார்த்தாள்.

விக்ரமின் அந்த அந்தரங்கமான வேண்டுதல், அந்த அகழாய்வுக் கூடாரத்தின் மௌனத்தைச் சுட்டெரித்தது. எல்.இ.டி விளக்கின் நீலநிற ஒளியில் அவன் முகம் பாறைச் சிற்பத்தைப் போலக் கடினமாகவும், அதே சமயம் ஏதோ தீராத தாகத்துடனும் காணப்பட்டது.

அவன் கொற்றவையின் பீடத்தை நெருங்கினான். அவனது கையில் இருந்த கத்தி, அந்த ஒளியில் ஒரு மின்னலைப் போல மின்னி மறைந்தது.

“ஈராயிரம் யாண்டுகள்… எண்ணற்ற ஊழிக்காலங்கள்… இப்பழையோள் நீ எமக்காகவேவா இத்துணை மௌனம் பூண்டாய்? பொற்பனையின் வீதிகள் இன்று சிதைந்து மண்ணோடு மண்ணாகலாம், ஆனால் எம் குருதி இன்னும் அடங்கவில்லை! யாம் எமது கடனாற்றுவோம்.”

அவனது குரல் கரகரப்பாக, ஒரு கட்டளை போல ஒலித்தது. ஆனால் அடுத்த கணமே அதில் ஒரு ஏக்கம் குடியேறியது.

“இஃது எமது அயில்வாள்! ஈன்றவள் நீயே! அவள் எம் ஆதிரை! யான் வேறொன்றும் வேண்டிலேன்; அவள் ஒருத்தியே வேண்டும்! எம் ஆதிரை எமக்கு மீண்டும் வேண்டும்! அவளோடு யான் வேட்கை தீரக் கூடி வாழ வேண்டும்! எம் குருதி வழித் தோன்றல்கள் பெருக வேண்டும்!

எமக்கும் அவட்கும் நரைமூத்துப் பழமையெய்தும் காலத்தும், இம்மியளவும் குறையாத காதலோடு யான் நிலவ வேண்டும்! ஆம், அவளது காதலே எமக்கு வேண்டும்! அதற்கு யான் செய்யும் கைம்மாறு யாதென மொழிக தாயே…”

நிசப்தமான அந்த இரவில், விக்ரம் தனது வலது கையைச் சட்டெனக் கீறினான். பிளந்த சதையிலிருந்து ரத்தம் குபீரெனப் பீறிட்டது. அவன் முகத்தில் வலியின் சுவடு கூட இல்லை; மாறாக, ஒரு கடமையைச் செய்து முடித்த திருப்தி இருந்தது.

வழிந்த இரத்தத்தை அந்தக் கொற்றவையின் பாதங்களில் அவன் அர்ப்பணிக்க, பீடத்தின் துளை வழியே அது தாகத்துடன் உள்ளிழுக்கப்பட்டது. அந்த அமானுஷ்ய வெளிச்சத்தில், கொற்றவையின் கல் இதழ்கள் லேசாக விரிந்து சிரிப்பது போல ஆதிராவுக்கு தோன்றியது.

ஆதிரா அதிர்ச்சியில் உறைந்து போனாள். தன் கண்களையே அவளால் நம்ப முடியவில்லை. “விக்ரம்…?” என்று அலறத் துடித்த அவளது குரல் தொண்டையிலேயே அடைத்துக் கொண்டது.

விக்ரமா? வற்பனை சேரலா?

யாரென்று சொல்வது? சொன்னால் யாராவது நம்புவார்களா?

அதிலும் வற்பனை சேரல் இப்போது மனிதனில்லையே!

அவன் கேட்பது அரியணை அல்ல, அதிகாரம் அல்ல… தன்னை! ஆதிரையை! அந்த இரத்தப் பலி அவளுக்காகவே கொடுக்கப்படுகிறது என்பதை உணர்ந்தபோது, அவளது முதுகுத்தண்டில் குளிர் பரவியது. அது பழங்காலப் போர்க்குடி மன்னன் தனது வெற்றிக்காகச் செய்யும் இரத்தப் பலி!

விக்ரம் இப்போது இரத்தக் கறை படிந்த கையுடன் மெல்லத் திரும்பினான். அவனது கண்கள் இருட்டில் ஜொலித்தன. ஆதிரா மூச்சடக்கி மரத்தின் பின்னே ஒண்டிக்கொண்டாள். அவள் இதயம் துடிக்கும் சத்தம் அவளுக்கே இடி முழக்கமாய்க் கேட்டது. இரு கைகளாலும் வாய் பொத்திக் கொண்டாள், எங்கே தன் மூச்சு காற்று வெளியே கேட்டு விடுமோ என!

விக்ரம் அந்த இடத்தை விட்டு நகரவில்லை. மாறாக, ஆதிரா மறைந்திருந்த அந்தத் திசையை நோக்கித் தன் பார்வையைத் திருப்பினான். அவனது உதடுகளில் ஒரு மெல்லிய, பயங்கரமான புன்னகை அரும்பியது.

குருதியைக் கொடுத்த பின் விக்ரம் அந்தச் சிலையருகே இன்னும் நெருங்கிச் சென்று ஏதோ ஒரு ரகசியத்தை முணுமுணுத்தான்.

அந்தத் தளத்தில் அப்போது வீசிய காற்று, அமானுஷ்யத்தை சுமந்து வந்தது.

ஆதிராவின் உடல் நடுங்கியது. இவன் விக்ரமில்லை… ஆதிரையைத் தவிக்கவிட்ட அதே வற்பனைச் சேரல்!

அதிர்ச்சியில் உறைந்து போயிருந்த ஆதிரா, பின்வாங்க முயன்றபோது காய்ந்த சருகுகள் காலடியில் நசுங்கின. விக்ரம் சட்டெனத் திரும்பினான். எல்.இ.டி விளக்கின் ஒளியில் அவனது கண்கள் தழலாக மின்னின. தனது வலது கையில் கசிந்து கொண்டிருந்த ரத்தத்தை அவன் துடைக்கக்கூட இல்லை.

அவன் மெல்ல அவளை நோக்கி வந்தான். அச்சத்துடன் அவள் பின்வாங்கினாள்!

அவனது ஒவ்வொரு அடியும் ஆதிராவின் இதயத் துடிப்பை எகிற வைத்தது. அவளுக்குப் பேசத் தோன்றியது, ஆனால் வார்த்தைகள் தொண்டையிலேயே சிக்கிக் கொண்டன. நாக்கு வறண்டு குழறியது.

“ஆதிரா… இந்த நேரத்துல இங்க என்ன பண்ற?” விக்ரமின் குரலில் ஒருவிதமான குளிர்ந்த அமைதி இருந்தது.

ஆதிரா அவனது குருதி தோய்ந்த கையையும், அந்த உக்கிரமான கொற்றவைச் சிலையையும் மாறி மாறிப் பார்த்தாள். அவளது உடல் நடுங்கியது. எதையோ கேட்க முயன்றாள், ஆனால் உதடுகள் மட்டும் அதிர்ந்தன.

“என்ன… எதுக்கு… விக்ரம்… நீங்க…” அவளால் வாக்கியத்தை முழுமை செய்ய முடியவில்லை. கண்கள் அச்சத்தில் பிதுங்கின.

விக்ரம் அவளை இன்னும் நெருங்கி வந்தான். அவனது உடலின் வெப்பமும், ரத்தத்தின் வாசனையும் அவளைச் சூழ்ந்தன.

“ஏன் பயப்படுற?”என்றான் மிக மென்மையாக, அவளது முகத்திற்கு மிக அருகில் குனிந்து.

“இல்ல… பய… பயப்படல…”

ஆதிரா பின்வாங்கி ஒரு தூணில் மோதி நின்றாள். தப்பிக்க வழியில்லை.

அவனது அந்தப் பார்வை… அது விக்ரமின் பார்வை இல்லை. அந்தப் பார்வையில் பல நூற்றாண்டுகளின் அதிகாரமும், வேட்கையும், ஆசையும் கூடவே பெருங்காதலும் கொழுந்துவிட்டெரிந்தன!

“அப்புறம் ஏன் இப்படி நடுங்கற?” என்றவன், மிகவும் சாதாரணமாக அவளது நெற்றியை தொட்டுப் பார்த்து, “காய்ச்சலா?” என்று கேட்க,

அவளுக்கு பயத்தில் தூக்கிவாரிப்போட்டது!

“இ.. இல்ல…”

“அப்புறம் என்ன? பேய பார்த்தியா?” என்று கிண்டலாக சிரித்தவன், அவளை பார்த்து புருவத்தை ஏற்றி இறக்கி கேட்க, அவளது மூச்சே நின்றது!

ஆமாம் தானே? இது இரண்டாயிரத்து முன்னூறு ஆண்டுகள் வயதான பேய்தானே?

தயக்க்க்க்கமாக இல்லையென தலையாட்டினாள்!

“அப்புறம்? சாப்பிட்டியா?” என்று கேட்டவன், அவளது கையை பற்றிக் கொண்டான்.

அவனது முகத்தையும் கையையும் மாற்றி மாற்றிப் பார்த்தவன், “என்ன ஆதிரா?” என்று புன்னகைக்க,

“ஒ… ஒ… ஒண்ணுமில்ல…”

“நான் கேட்ட கேள்விக்கு நீ பதிலே சொல்லல…” என்று கையை விடாமல் பிடித்துக்கொண்டு அவர்கள் தங்கியிருந்த பழைய பங்களாவை நோக்கிப் போனபடியே கேட்டான்.

இருவரும் அந்தப் பழைய வீட்டை நோக்கி இருட்டில் நடந்தனர். அகழாய்வுத் தளத்திலிருந்து அந்தப் பங்களாவிற்குச் செல்லும் பாதை மரங்கள் அடர்ந்த பகுதி. நடக்கும்போது ஆதிரா கவனித்தாள்… அந்தப் பாதையில் எங்கும் பூச்சிகளின் ரீங்காரமே இல்லை. வழக்கமாக ஒலிக்கும் அந்த நள்ளிரவுச் சத்தங்கள் அனைத்தும் உறைந்து போயிருந்தன.

அவன் இழுத்த இழுப்புக்கு எதுவும் பேச முடியாமல் போனாள் ஆதிரா.

இரண்டாயிரத்து முன்னூறு ஆண்டுகால பேயிடம் என்ன பேசுவது?

ஆனால் அவன் பற்றியிருந்த கை வலித்தது!

“கை… கைய விடுங்க…” வலி தாங்க முடியாமல், அவனது கையை விலக்கிவிட பார்க்க, அவளது கண்களை நேருக்கு நேராக பார்த்தான்.

“ஏன் என்னை விட்டுட்டு போறதுக்கா?” என்று அவன் கேட்ட அந்தத் தொனி… அதில் ஒரு நூற்றாண்டுகால ஏக்கம் இருந்தது. அந்தப் பார்வை அவளது முதுகுத் தண்டில் குளிரைப் பரப்பிச் சென்றது.

“இ… இல்ல… வலிக்குது…” பரிதாபமாக அவள் கூற,

“எனக்கும் தான் ஆதிரா… ரொம்ப வலிக்குது…” அவன் கூற, அவள் விழித்தாள். இவன் என்ன சொல்கிறான்?

“எ… என்… என்ன சொல்றீங்க?” திக்கித் தடுமாறினாள்.

“எங்க கைய கிழிச்சேன்னு தெரியல. ரத்தம் வருது. வலிக்குது…” சிறு பிள்ளையாக அவன் கூற, என்ன சொல்வது என்று தெரியாமல் வாயடைத்துப் போனாள் ஆதிரா!

வலி அவன் கையில் இல்லை.

அவனது கண்களில் கண்ணீர் மின்னியது…!

அந்தக் கண்ணீர் விக்ரமுடையதா?

அல்லது இரண்டாயிரத்து முன்னூறு ஆண்டுகளாக காத்திருந்த வற்பனைச் சேரலின் தவிப்பா?

அவளால் பிரித்தறிய முடியவில்லை.

அடுத்த அத்தியாயம்

அத்தியாயம் 22

அன்றைய விடியல் ஆதிராவிற்கு ஒருவித மிரட்சியையே தந்தது. முந்தைய இரவு அந்தத் தற்காலிகக் கூடாரத்தில் நடந்த அமானுஷ்ய ரத்தாபிஷேகமும், கொற்றவையின் பீடத்தில் விக்ரம் கண்ணில் கசிந்த அந்தக் கண்ணீரும் அவளது நினைவுகளில் ஒரு பயங்கரமான கனவைப் போல கூத்தாடிக் கொண்டிருந்தன. ஆனால்,…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

இந்தக் கதையைப் பற்றி விவாதிக்கவும் 10

  1. Karthika1987பொதுக் கருத்துKarthika1987

    மெய் சிலிர்க்கிறது உமது உரைநடை

  2. Thaniபொதுக் கருத்துThani

    ஆதிரை ரொம்ப குழப்பத்தில் இருக்காள்,அதையும் விட பயந்து விட்டாள்.

உங்கள் கருத்தைப் பகிருங்கள்