அத்தியாயம் 22
அன்றைய விடியல் ஆதிராவிற்கு ஒருவித மிரட்சியையே தந்தது. முந்தைய இரவு அந்தத் தற்காலிகக் கூடாரத்தில் நடந்த அமானுஷ்ய ரத்தாபிஷேகமும், கொற்றவையின் பீடத்தில் விக்ரம் கண்ணில் கசிந்த அந்தக் கண்ணீரும் அவளது நினைவுகளில் ஒரு பயங்கரமான கனவைப் போல கூத்தாடிக் கொண்டிருந்தன. ஆனால், காலையில் அகழாய்வுத் தளத்திற்கு வந்தபோது விக்ரம் முற்றிலும் வேறொரு மனிதனாக நின்றிருந்தான்.
நேர்த்தியாகச் ஷேவ் செய்யப்பட்ட முகம், கச்சிதமான லினன் ஷர்ட், கண்களில் ரேபன் கூலிங் கிளாஸ் என அவன் ஒரு சீரியஸ் சிங்காரமாக கையில் இருந்த ஐபேடில் கிரிட் வரைபடங்களை வேகமாகப் புரட்டியபடி அவன் கொடுத்த கட்டளைகள் அந்தத் தளத்தையே இராணுவக் கட்டுக்கோப்புக்கு மாற்றியிருந்தது. அவனது உதவியாளர் கணேஷ் வந்த பிறகு வேலைகளின் வேகம் பல மடங்கு அதிகரித்தது. கணேஷ் ஒரு நிழலைப் போல விக்ரமைப் பின்தொடர்ந்தான்.
ஊடகங்களின் நெரிசலைக் கட்டுப்படுத்த விக்ரம் தளத்தைச் சுற்றி நூறு மீட்டர் சுற்றளவுக்கு மஞ்சள் நாடா (Caution tape) கட்டி, அத்துமீறி நுழைபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தான்.
மீடியாவும் மக்களும் குவிந்திருந்தார்கள். அங்கிருந்த மக்களிடம் மாற்றி மாற்றி பேட்டி எடுத்துக் கொண்டிருந்த மீடியா, இவர்களிடமும் பேட்டி எடுக்க பிரம்மப் பிரயத்தனப் பட்டார்கள். ஆனால் விக்ரமும் ஆதிரையும் கேமராக்களின் கண்களில் படாமல் தற்காலிகக் கூடாரத்திற்குள்ளேயே முடங்கினர்.
ஆனால் இடைவிடாத அழுத்தத்தால், விக்ரம் இறுதியாக மதியையும் கதிரையும் மட்டும் பேட்டி கொடுக்க அனுமதித்தான்.
மதி கேமராக்களுக்கு முன்னால் நிதானமாக நின்று விளக்கினாள். “நாங்க இங்கே சிஸ்டமேடிக் கிரிட் எக்ஸ்கவேஷன் (Systematic Grid Excavation) முறையைப் பின்பற்றுறோம். ஒவ்வொரு கிரிட்டையும் அஞ்சு மீட்டருக்கு அஞ்சு மீட்டர்னு பிரிச்சு, அதுல வெர்டிகல் எக்ஸ்கவேஷன் பண்றோம். இதன் மூலமா மண்ணோட காலவரிசையை (Stratigraphy) துல்லியமா கணிக்க முடியும்…” என்றாள்.
கதிரும் அவன் பங்குக்கு சொல்ல வேண்டியதை சொன்னாலும், யாரையும் சைட்டுக்குள் விடவில்லை. விடவும் மாட்டார்கள்.
மீடியா மக்களை அனுப்பி வைத்த பின், “மதி… இப்படியே போனா நம்ம டீம் நேஷனல் ஜியோகிராஃபிக்ல கூட வருவோம் போலயே!” என்று கதிர் மணலை மென்மையாகப் பிரஷ் செய்தபடி கிண்டலாகக் கூறினான்.
மதி சிரித்தாள்.
“ஆனா ஒன்னு, இன்னைக்கு விக்ரம் ப்ரோ ஆஸ்பத்திரியில இருந்து வந்த மாதிரியே தெரியல. சரியான ஃபார்ம்ல இருக்கார்!” என்று வியந்தான் கதிர்.
மண்ணடுக்கின் மாதிரிகளைச் சேகரித்தபடி, “ஆமான்டா தம்பி, அந்தப் பழைய பங்களாவோட எனர்ஜியா இல்ல அந்தச் சிலையோட எனர்ஜியான்னு தெரியல, மனுஷன் ரொம்பவே சார்ஜ் ஆகி இருக்கார்…” என்றாள் மதி.
“ஆனா ஒரு விஷயம் கவனிச்சியா? இன்னைக்கு யாரையும் அவர் மதிக்கவே மாட்டேங்குறார், கணேஷ் வந்ததும் இன்னும் அதிகாரமா நடந்துக்குறாரோன்னு தோணுது…” என்று கதிர் முணுமுணுத்தான்.
“எப்படி இருந்தாலும் அவர் நம்மளோட ஹையர் அபிஷியல். நீ வேலையில மட்டும் கவனம் வை கதிர், பதினாலாவது கிரிட்ல நாம ரொம்ப நுணுக்கமா இருக்கணும்னு சொல்லிருக்கார்…” கவனமாகக் கூறினாள் மதி.
“முன்னாடி நாம ஏதாவது கண்டுபிடிச்சா அவர் முகத்துல ஒரு சந்தோசம் வரும், இப்ப என்னடான்னா எல்லாம் ஆப்போசிட்!” என்று அலுத்துக்கொண்டான் கதிர். அவன் கவலை அவனுக்கு!
“அதுதான் எக்ஸ்பீரியன்ஸ். ஆனா, ஆதிரா கிட்ட கூட இன்னைக்கு அவர் சரியா பேசலையே…” என்று சந்தேகத்துடன் சொன்னாள் மதி.
“நிஜமாவே அவங்க ரெண்டு பேருக்குள்ள என்னதான் நடக்குதுன்னு தெரியல மதி, ஆதிரா ஏன் இவ்வளவு சைலண்டா இருக்காங்க?” என்று தாழ்ந்த குரலில் கேட்டான் கதிர்.
“அவளுக்கு இது பெரிய ஷாக்டா. இன்னமும் நம்ம கூட அவ உட்கார்ந்துட்டு இருக்கறதே பெரிய விஷயம். அவளோட பிஎச்டி க்காக தான் இவ்வளவு பொறுமையா இங்க உட்கார்த்துட்டு இருக்கா. அவ மனநிலை இன்னும் அந்த நிலவறைலிருந்து மீளல, நீ பேசாம இந்த லிடார் ரீடிங்ஸை மட்டும் செக் பண்ணு…” என அவனை அவசரப்படுத்தினாள் மதி.
“பண்ணிட்டேன், ஆனா மண்ணோட டென்சிட்டி (Density) இப்ப ஸ்ட்ரேஞ்சா இருக்கு, நேத்து வரைக்கும் இப்படி இல்ல…” சந்தேகமாக கூறினான் கதிர்.
தரைக்கடியில் ஊடுருவும் ரேடார் (ஜிபிஆர்) அலைகள் வழக்கத்திற்கு மாறாகச் சிதறுவதை அவன் கவனித்தான்.
“எதுக்கும் பதினாலாவது கிரிட்’டோட வெர்டிகல் எக்ஸ்கவேஷனை ஆரம்பிப்போம், விக்ரம் ப்ரோ வர்றதுக்குள்ள பேஸ் லேயரை க்ளியர் பண்ணிடு…” என்று வேலையைத் துரிதப்படுத்தினாள் மதி.
அப்போது அங்கே வந்த கணேஷ், கதிரின் கையில் இருந்த டேப்லெட்டை எட்டிப்பார்த்து, “என்ன கதிர் தம்பி… ரீடிங்ஸ் எல்லாம் சரியா இருக்கா?” என்று நக்கலாகக் கேட்டான்.
அவனது குரலில் ஏதோவொன்று இருவருக்குமே பிடிக்கவில்லை.
“நாங்க எப்போதும் அவர்கிட்ட கன்சல்ட் பண்ணிட்டு தான் பண்றோம் கணேஷ், புதுசா வேற எதுவும் ரூல்ஸ் இருக்கா?” என்று இடைமறித்துக் கேட்டாள் மதி.
“அவர் சொல்றதை நான் உங்க கிட்ட சொல்றேன். அவ்வளவுதான்…”
“சரி சார்… நீங்க சொன்ன மாதிரியே பண்றோம், ஆனா நீங்க ஏன் அந்த மேப்ல சில இடங்களை மட்டும் ரெட் கலர்ல மார்க் பண்ணி வச்சிருக்கீங்க?” எனக் கதிர் கேட்க, கணேஷ் எள்ளல் புன்னகையுடன் நகர்ந்து சென்றான்.
ஆதிரா மட்டும் தள்ளி நின்றபடி அவர்களை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளது கண்கள் விக்ரமின் கைகளைப் பார்த்தன. நேற்று இரவு அவன் கிழித்துக் கொண்ட அந்த வடு, இன்று ஒரு மெல்லிய பிளாஸ்திரி மூலம் மறைக்கப்பட்டிருந்தது. அவ்வப்போது விக்ரம் ஆதிராவைத் திரும்பிப் பார்த்தான். அந்தப் பார்வையில் அதிகாரமும், நீ எனக்குத்தான் என்கிற உறுதியும் மின்னியது.
ஆதிராவுக்குக் கிலி பிடித்தது.
விக்ரம் குழியின் விளிம்பில் நின்று பதினான்காவது கிரிட்டை மேய்ந்தான்.
“கதிர்… பதினாலாவது கிரிட்ல வெர்டிகல் எக்ஸ்கவேஷன் ஆரம்பிங்க. மண்ணோட ஒவ்வொரு லேயரையும் ரொம்ப நுணுக்கமா நோட் பண்ணுங்க. முன்ன மாதிரி நாம எந்த ரிஸ்க்கும் எடுக்கக் கூடாது…” என்றான் விக்ரம். அதில் மீற முடியாத ஒரு கட்டளை இருந்தது.

கதிர் அவனை ஒரு நிமிடம் இமைக்காமல் உற்றுப் பார்த்தான். “ஓகே ப்ரோ…” என்று தலையசைத்தாலும், கதிரின் மனம் கணக்கிடத் தொடங்கியது. பொதுவாக விக்ரம் அகலமாகத் தோண்டி ஒரு முழு நாகரிகத்தையும் தேடும் ஹரிசாண்டல் முறையைத் தான் மற்றவர்களுக்குப் பரிந்துரைப்பான். ஆனால் இப்போது, ஒரு குறிப்பிட்ட புள்ளியில் மட்டும் செங்குத்தாக ஆழத்தை நோக்கிப் பாய்வது, அவனுக்கு அடியில் ஏதோ ஒன்று இருப்பது முன்பே தெரியும் என்பது போல் இருந்தது. அது ஒரு பரந்த ஆய்வு அல்ல; இலக்கை நோக்கிய துல்லியமான தாக்குதல்.
கதிர் குழியில் இறங்கி, தனது கரண்டியால் (Trowel) மெதுவாக மண்ணைச் சுரண்டினான். உடன் மதியும் அவளது வேலையை பார்த்தாள்.
மேலே நின்று கொண்டிருந்த விக்ரம், அவர்களின் ஒவ்வொரு அசைவையும் கவனித்துக் கொண்டிருந்தான். அவனது ஐபேடில் லிடார் தரவுகள் ஓடிக்கொண்டிருந்தன. தரைக்கடியில் சுமார் ஆறு அடி ஆழத்தில் ஒரு சதுர வடிவ கட்டுமானம் இருப்பதை அந்த அலைகள் உறுதி செய்தன. அவனது உடலில் ஒருவிதமான அதிர்வு ஏற்படுவதை ஆதிரா கவனித்தாள். அது பலிபீடத்தை நோக்கி நகரும் வேட்டைக்காரனின் உக்கிரம்.
கணேஷ் ஓரத்தில் நின்றபடி, யாரிடமும் பேசாமல் விக்ரமின் செய்கைகளை மட்டும் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தான்.
ஆறாம் நாள் மதியம். வெயில் தாளமுடியாத உக்கிரத்தில் இருந்தது. பதினான்காவது கிரிட்டின் அந்தச் செவ்வக வடிவக் கட்டுமானம் முழுமையாகத் தெரிந்தபோது, அங்கிருந்த அனைவரின் மூச்சும் ஒரு நொடி நின்றது. அது ஒரு நிலவறையின் மேல் பகுதி.
“கதிர், பிரஷைக் கொடு…” என்று விக்ரம் நேரடியாகக் குழியில் குதித்தான். வேட்டையை முடிக்கும் வேகம் அவனிடம் இருந்தது.
மண்ணைச் சுத்தப்படுத்தியபோது, அந்த நிலவறையின் கல்லால் ஆன கதவில் ஒரு முத்திரை தெரிந்தது. கதவின் மேல் படிந்திருந்த ஈர மண்ணை விக்ரம் தன் விரல்களால் சுரண்டினான். உள்ளே தெரிந்த கல்லின் நிறம் கரும் நீலமும், ஊதா நிறமும் கலந்த ஒரு விசித்திரமான ஜொலிப்பைக் கொண்டிருந்தது.
“இது ப்ளூ ஸ்கிஸ்ட் (Blue Schist) வகைக் கல்!” என்று விக்ரம் முணுமுணுத்தபோது, கதிர் வியப்புடன் அருகில் குனிந்தான்.
“ப்ளூ ஸ்கிஸ்ட்டா? அப்படின்னா என்ன ப்ரோ? இதைப் பார்த்தவுடனேயே எப்படிச் சொல்றீங்க?” எனக் கேட்டான் கதிர்.
விக்ரம் அந்தக் கல்லின் கரடுமுரடான மேற்பரப்பைத் தடவியபடி விளக்கினான். “கதிர், இந்தப் பொற்பனைப் பகுதி முழுக்கவே சார்னோகைட் (Charnockite) மற்றும் நைஸ் (Gneiss) பாறைகள் நிறைந்தது. அது பெரும்பாலும் சாம்பல் அல்லது இளஞ்சிவப்பு நிறத்துல தான் இருக்கும். ஆனா இந்தக் கல்லோட நீல நிறத்துக்குக் காரணம் இதுல இருக்குற கிளாக்கோபேன் (Glaucophane) என்கிற கெமிக்கல்.”
விக்ரம் தொடர்ந்தான். “நிலவியல் படி, இந்தப் பாறைகள் உருவாகணும்னா மிக அதிகமான அழுத்தமும், குறைவான வெப்பநிலையும் தேவை. இது பெரும்பாலும் கண்டத் தட்டுகள் மோதிக்கிற சப்டக்ஷன் ஜோன் (Subduction Zone) பகுதிகள்ல தான் கிடைக்கும். தமிழ்நாட்டோட இந்தச் சமவெளிப் பகுதியில இயற்கையா இந்தக் கல் கிடைக்கவே வாய்ப்பு இல்லை. இது இமயமலைத் தொடர்கள்லயோ அல்லது கடல் கடந்த நாடுகளோட மலைப் பகுதிகள்லயோ இருந்துதான் கொண்டு வரப்பட்டிருக்கணும்!”
கதிர் அந்தக் கல்லை உற்றுப் பார்த்தான். “அப்படின்னா, இரண்டாயிரம் வருஷத்துக்கு முன்னாடியே இவ்வளவு தூரத்துல இருந்து இந்தக் கல்லை இங்க எதுக்காகக் கொண்டு வந்திருக்கணும்?”
“பாதுகாப்புக்காகத்தான்!” என்றான் விக்ரம், ஒரு மர்மமான புன்னகையுடன். “இந்தக் கல் சாதாரணக் கற்களை விட ரொம்பவே வலிமையானது. அவ்வளவு சீக்கிரம் சிதையாது. அதனாலதான் இந்தக் கல்லைத் தேர்ந்தெடுத்திருக்காங்க. இதுவே ஒரு பெரிய ஜியோலாஜிக்கல் சிக்னேச்சர் (Geological Signature).”
“அன்பிலீவபில்!”
அவன் சொன்ன அந்தத் தொழில்நுட்பத் தகவல் கதிரை மலைக்க வைத்தது. விக்ரமின் கண்கள் இப்போது அந்த நீல நிறக் கல்லின் மேல் படர்ந்திருந்த பழங்காலத் தழும்புகளை ஆராய்ந்தன. அந்தக் கல்லுக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் ஏதோ ஒரு ரகசியம் அவனுக்கு மட்டுமே புரிந்தது போலத் தெரிந்தது.
“சரி இனி ஹரிசாண்டல் எக்ஸ்கவேஷன் பண்ணலாம். இதோட முழு ஸ்ட்ரக்சரையும் வெளிய கொண்டு வரணும். அப்புறமா உள்ள என்ன இருக்குன்னு பார்க்கலாம்…” என்று முடித்துவிட, மற்றவர்களால் தலையாட்ட மட்டுமே முடிந்தது.
அடுத்த பத்து நாட்கள் கடந்தன.
அந்த கல் படுகை வித்தியாசமாக இருந்தது. ஒரு சிறு வீட்டின் அமைப்போடு அமைந்திருந்தது. இந்த அமைப்பில் கல்லை கொண்டு வீட்டை கட்டுவார்களா என்ற கேள்வி அனைவரிடமும், அதுவும் ப்ளு ஸ்கிஸ்ட் கொண்டு! ஆனால் விக்ரமுக்கு அந்த சந்தேகம் இருக்கவில்லை.
நுணுக்கமாக ஒவ்வொரு இடத்தையும் சுத்தப்படுத்திக் கொண்டே தான் முழு வடிவத்தையும் மீட்டெடுத்தார்கள்!
முழுமையாக மீட்ட பின், ஒரு இடம் மட்டும் அதன் வாயிலை போல அமைந்திருந்தது. அதை எப்படி திறப்பது என்று அங்குலம் அங்குலமாக கதிரும், கணேஷும் ஆராய்ந்தனர். அவர்களுக்கு வழியொன்றும் புலப்படவில்லை, அதோடு கொஞ்சம் பயமாகவும் இருந்தது.
மதி சற்று தள்ளியே தான் நின்றாள், உடன் ஆதிராவும்!
விக்ரம் தனது சட்டைப் பையிலிருந்து ஒரு சிறிய இரும்புக் கம்பி போன்ற கருவியை எடுத்து, அந்தக் கல்லின் இடுக்கில் கொடுத்து ஒரு குறிப்பிட்ட திசையில் சுழற்றினான். அது ஒரு பழங்காலத்து மெக்கானிக்கல் லாக் (Mechanical Lock). க்ரக்… என்ற சத்தத்துடன் அந்த நிலவறைக்கதவு மெல்ல நகர்ந்தது.
சுற்றி இருந்தவர்களின் கைத்தட்டல் காதை பிளந்தது.
அனைவரின் முகத்திலும் மகிழ்ச்சி!
இப்படியொரு கண்டுபிடிப்பை அவர்களில் யாரும் கற்பனை கூட செய்து பார்த்ததில்லை.
விக்ரமுக்கும் மகிழ்ச்சி தான் என்றாலும் அதை காட்டிலும் ஏதோவொரு மர்மான புன்னகை அவனது முகத்தில் மின்னியது!
“ஆதிரா… உள்ளே வா…” என்றான் விக்ரம். அவனது குரலில் இப்போது அதிகாரம் இல்லை, ஒருவிதமான அழைப்பு இருந்தது.
அவள் பின்வாங்கினாள்.
“இல்ல… எனக்கு… எனக்கு பயமா இருக்கு விக்ரம்…” என்று அவள் திக்கினாள். இரண்டாயிரத்து முன்னூறு வருஷத்துப் பேயுடன் எப்படி உள்ளே போவது?
“அவ இன்னும் நார்மல் ஆகல ப்ரோ…” மதி ஆதிராவுக்காக வந்தாள்.
“இதுல என்ன அப்னார்மாலிட்டி இருக்கு மதி. இந்த மாதிரி சின்ன சின்ன ஆக்சிடென்ட்ஸ் சகஜம். இதை சாதாரணமா எடுத்துக்காட்டி, இந்த வேலைக்கே வரக் கூடாது…” என்று கறாராக கூறியவன், “இதுல பிஎச்டி வேற முடிக்கனுமாம்…” பல்லைக் கடித்துக் கொண்டு பேச,
இவன் பழைய விக்ரம் அல்லவா என்ற முடிவுக்கு வந்தாள் ஆதிரா!
அப்படியென்றால் வற்பனைச் சேரல் என்னவானான்?
அவன் இல்லையென்றால் போதும் என்று பெருமூச்செறிந்தாள்.
“வேலைக்கு வரணுமா வேண்டாமான்னு நீங்க டிஸைட் பண்ண வேண்டாம் விக்ரம் சர்…” அவளும் அவனைப் போலவே கூற,
“நல்லா வாய் கிழிய பேசினா மட்டும் பத்தாது ஆதிரா… பன்னெண்டாவது கிரிட்ல நான் உள்ள போறேன்னு சொன்னப்ப என்ன சொன்னீங்க?” அவன் கேட்க, அவனை முறைத்தபடி எதுவும் பேசாமல் பார்த்தாள் ஆதிரா. விக்ரம் மரியாதையாக பேசுகிறான் என்றால், அவன் அவ்வளவு கோபமாக இருக்கிறான் என்பது பொருள். எல்லாருக்கும் கோபம் வரும் போது மரியாதை போகுமென்றால், இவன் நேரெதிர்! அப்போதுதான் மரியாதையாக பேசுவான்.
“சொல்லுங்க…” என்றவன், மதி புறம் திரும்பி, “கிரெடிட் ஸ்டீலர்ன்னு சொன்னாங்களா இல்லையா?” என்று கேட்க, அவளும் மெளனமாக தலையசைத்தாள்.
இதுவும் உண்மைதானே? அவள் அன்று பிடிவாதம் பிடித்து போகாமல் இருந்திருந்தால் பிரச்சனையே இல்லையே!
“இப்ப நான் மட்டும் போனா, நாளைன்னைக்கு அதே வார்த்தைய தான திரும்ப சொல்வாங்க?” என்று கேட்க, மதி வேறு வழியில்லாமல் ஆதிராவை பார்த்தபடியே தலையை ஆட்டியும் ஆட்டாதது போலவே இருந்தாள்.
ஆனாலும் ஆதிராவுக்கு பயமின்னும் போகவில்லை.
‘ஆண்டவா… இரண்டாயிரத்து முன்னூறு வயசு… ம்ஹூம்… எனக்கு அந்த பேய் வேண்டாம்…’ மனம் குழந்தையாக அடம் பிடித்தாலும், பிஎச்டி என்ற அந்த மூன்று வார்த்தை அவள் முன் நின்று தாண்டவமாடியது!
விக்ரம் அவளது கையைப் பற்றித் தன்னோடு இழுத்துச் சென்றான். உள்ளே கும்மிருட்டு. கையில் இருந்த எல்.இ.டி விளக்கைத் திருகினான். அந்த ஒளியில், அந்த அறைக்குள் இருந்த பொருட்கள் மின்னின.
அறையின் மையத்தில் ஒரு பீடம் இருந்தது. அதன் மேல் ஒரு பழமையான செப்புப் பெட்டி. விக்ரம் அந்தப் பெட்டியைத் திறந்தான். உள்ளே சிதைந்த நிலையில் சில ஓலைச்சுவடிகளும், வாள் போன்ற வடிவம் கொண்ட ஒரு நீளமான செப்புப் பட்டயங்களும் இருந்தன. கூடவே இருந்த பொருட்களை பார்த்து ஆதிரா வாயடைத்துப் போனாள்.
“ஓ மை காட்…” வாய் மேல் கையை வைத்துக் கொண்டாள்.
அதுவொரு கல் புத்தகம்.
ஸ்டீடைட் எனப்படும் சோப்ஸ்டோனில் எழுத்துக்கள் செதுக்கப்பட்ட கல் புத்தகம்.
கீழடி மற்றும் கொடுமணல் அகழ்வாய்வுகளில் சோப்ஸ்டோன் எனப்படும் மாவுக்கல்லால் ஆன சிறிய வட்டச் சில்லுகள் மற்றும் முத்திரைகள் கிடைத்துள்ளன. இவற்றில் குறியீடுகள் பொறிக்கப்பட்டுள்ளன. இவை பெரும்பாலும் வணிக முத்திரைகளாகவோ அல்லது கணக்கு வைக்கும் கருவிகளாகவோ பயன்படுத்தப்பட்டுள்ளன ஆனால் இங்கு கிடைத்திருப்பதோ புத்தகம். மாவுகல்லில் எழுத்துக்களை செதுக்கி அதை சூளையில் சுட்டுவிட்டால் அது ஈராயிரம் ஆண்டுகள் ஆனாலும் அழியாது. இதை சிந்து சமவெளி நாகரிக எச்சங்களில் கண்டிருக்கிறார்கள். ஆனால் புத்தகமாக?

ஆச்சரியத்தின் உச்சியிலிருந்தாள் ஆதிரா!
விக்ரமின் முகம் ஆச்சரியத்தை கொண்டிருக்கவில்லை, ஆனால், சொல்லவொண்ணா மகிழ்ச்சியையும், தொலைத்த தன்னுடைய பொருளை கண்டெடுத்த குழந்தையின் உவகையும் மிளிர்ந்தது.
விக்ரம் அந்தப் கல் புத்தகத்தை மெல்லத் தொட்டான். அவனது விரல்கள் அதன் மேல் இருந்த அந்தப் பழைய தமிழ் எழுத்துக்களை வருடின.
“இது… என்னன்னு தெரியுமா ஆதிரா?” என்றான் அவன். அவனது முகம் பல உணர்வுகளை பிரதிபலித்தது!
“எ… என்ன?” அவனது முகத்தை பார்க்கவே அவளுக்கு அச்சமாக இருந்தது. அதற்கு அவன் பதில் கூறவில்லை. அவளையே ஆழமாக பார்த்தான்!
அவளது உயிரை உலுக்கி, ஏழ்கடலை புகுத்தி, அதை குடிக்கப் பார்க்கும் ஆழம்!
உள்ளே வரும் வரை இருந்தவனல்ல இவன் என்பது புரிந்தது! பார்வையும் வேறு! ஆளும் வேறு!
அது புரிந்தவுடன், சட்டென பின்னடைந்தாள்!
“எங்க ஓடற?”
“இ… இல்ல…”
“இல்லைன்னா? என்ன இல்ல?”
“ஒண்ணுமில்ல…” என்றவள், “எல்லாத்தையும் எடுத்துகிட்டு வெளிய போலாம் விக்ரம்…” கண்களில் மருட்சியோடு கூறியவளை பார்த்து புன்னகைத்தவனின் முகம் அமானுஷ்யமாக இருந்தது.
அவன் கையிலிருந்த எல்ஈடி விளக்கு மட்டும் தான் வெளிச்சத்துக்கு!
அதை வாசிக்கத் தொடங்கினான். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஒரு வீரன், தன் காதலியின் பிரிவைத் தாங்க முடியாமல் வடித்த கண்ணீர் கவிதைகள் அவை.
விக்ரம் அந்த மாவுக்கல் புத்தகத்திலிருந்த இருந்த வரிகளை, ஒருவிதப் பித்த நிலையில் வாசிக்கத் தொடங்கினான்:
“வாடூஉம் என்மேனி வன்பிரிவு தாளாது
நாடூஉம் நின்னையே நள்ளிருள் கூடூஉம்
அணையா எரிதழல் ஆகின்றேன் ஆதிரை
நினையா விடின்மாய்வேன் யான்”
(பொருள்: உன்னைப் பிரிந்ததால் என் உடல் வாடுகிறது. நள்ளிரவில் உன் நினைவே என்னைக் கூட்டுகிறது. அணையாத நெருப்பாக எரிகிறேன் ஆதிரை, நீ என்னை நினையாவிட்டால் நான் மாய்ந்து போவேன்.)
“உங்களுக்கு இந்த கடுந்தமிழ் வாசிக்க தெரியுமா?” கொஞ்சம் ஆச்சரியமாக கேட்டாள் ஆதிரை!
விக்ரம், “யான் வரைந்தது யானறியாதொ ழியுமோ?” என்றதும் ஆதிராவுக்கு தூக்கி வாரிப் போட்டது.
“வாட் த… வி… விக்ரம்?” அதிர்ந்து அழைக்க அவனோ,
“கானகத் தீயெனக் காமம் சுடுகின்றே
மேனி தணிக்க மென்கரம் நானுற
வேண்டித் தவித்தேன் விழிநீர் பெருகிட
ஈண்டே அணைப்பாய் இனி”
(பொருள்: காட்டுத் தீயைப் போல காமம் என்னைச் சுடுகிறது. என் உடல் வெப்பம் தணிய உன் மென்மையான கரம் என் மேல் பட வேண்டும் எனத் தவித்தேன். கண்ணீர் பெருகுகிறது, உடனே வந்து அணைத்துக் கொள்.)
கூறியபடி அவளை நோக்கி ஒவ்வொரு அடியாக வைக்க, உச்சபட்ச அதிர்ச்சி ஆதிராவுக்கு.
“நோ… நோ… விக்ரம்…” பற்கள் தந்தியடித்தது. உடல் நடுங்க துவங்கியது. அடிவயிற்றில் அச்சம் பிரட்டியது. மெல்ல பின்னடைந்தாள்!
“நறவம் எனநின் நறுவிதழ் நண்ணி
உறவம் தாகம் உலைக்க பெறவே
விரும்பி நின்றேன் விழிதுயில் இன்றி
அரும்பிட முத்தம் அளி.”
(பொருள்: தேன் போன்ற உன் இதழ்களை எண்ணி என் தாகம் என்னை அலைக்கழிக்கிறது. உறக்கமில்லாமல் தவிக்கிறேன், அரும்பும் ஒரு முத்தத்தை எனக்கு அளிப்பாயாக.)
“ப… ப… பயமா இருக்கு விக்ரம்…” விட்டால் அழுதுவிடுவாள் போல, அவன் முன்னேறிக் கொண்டே வர, இவள் பின்னோக்கி போனாள்.
“முழுமகிழ் கொள்ளும் முலைமுகம் தழுவிக்
கழுமி நின்ற காலமினி எழவே
கனவாய்க் கசக்கும் கடும்புரிவு எனைக்கொல்லும்
புனலாய்ப் புகுவாய் புகல்.
(பொருள்: நாம் மகிழ்வோடு தழுவி நின்ற காலம் இனி கனவாகி என்னைக் கொல்லுகிறது. இந்தப் பிரிவின் துயரம் நீங்க, நீ மழையாக என்னுள் புகுந்து தஞ்சம் அளி.)
அவனது சொற்கள் ஒவ்வொன்றும் அவளது அடிநெஞ்சை நடுங்க செய்தன. அதோடு கொஞ்சமும் மாறாத பார்வை, அவளை புரட்டிப் போட்டன. ஆழ்ந்து மூச்சை இழுத்து விட்டாள்! இதை எதிர்கொண்டு தான் ஆக வேண்டும், வேறு வழியில்லை!
நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்!
“வற்பனை சேரல்…”
“ஆம்… நினக்காய் இரண்டாயிரத்து முன்னூறு யாண்டுகளாய் காத்திருக்கும் நின் வற்பனைச் சேரல்…” என்றவன், ஒரே எட்டில் அவளை இழுத்து சுருட்டி தனக்குள் அடக்கிக் கொண்டான், அணைத்துக் கொண்டான்!
வேனில் வெம்மை விரிகதிர் காய்ந்திட
வானம் வருடும் வன்புனல் தானென
வருவாய் ஆதிரை வதங்கும் என்மேனி
உருவாய் அருவாய் உனக்கு.
(பொருள்: கோடை வெயிலில் வாடும் நிலத்திற்கு வான் மழை எப்படியோ, அப்படி எனக்கு வருவாய் ஆதிரை. என் உடல் வதங்குகிறது, உருவமாகவும் அருவமாகவும் நான் உனக்கே உரியவன்.)
அவளது காதில் கிசுகிசுப்பாய் அவன் கூற, “விக்ரம்…” வார்த்தைகள் வெளியே வர சண்டித்தனம் செய்தன. அவளுக்கு மூச்சடைத்தது. அவனது இறுக்கம் அவளை மென்று தின்னப் பார்த்தது!
“நினது வற்பனைச் சேரல்…”
“அது உங்க கற்பனை…”
அவள் அப்படி சொல்லவும் அவளது முகத்தை கையிலேந்திக் கொண்டான்.
“நாணம் துறந்து நறும்பனை மடலேறி
ஊணுறக்கம் இன்றி ஊரறிய மாணொளிச்
சேரன் சிதைந்தான் எனக்கூவத் துணிந்தேன்
ஆதிரை வாராயோ அணைக்க!” என்று கிசுகிசுப்பாக கூறியவன், தேனில் ஊறிய சுளையென இருந்த அவளது செவ்விதழ்களை மென்மையாக இதழ் ஒற்றினான், அதன் பின் சற்று வன்மையாக முத்தமிட்டான், பின்பு அவளது இதழ்களை ஆவேசமாக கொய்து சுவைக்கத் துவங்கினான்.
இரண்டாயித்து முன்னூறு வருடமாக காத்திருந்த காதலனவன், அவனது தாகம் நிமிடங்களில் தீருமா என்ன?
ஆதிரா, மீண்டும் மயக்கத்தில் ஆழ்ந்தாள், ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பொற்பனையில் வீழ்ந்தாள்!


கவிதை....👍👍👍👍👍👏👏👏👏
நன்றி ம்மா :)
அழகு
நன்றி ம்மா
Excellent 👌
நன்றி மா
அழகு தமிழ் வெண்பா க்கள்
☕️👏🍬
இத்தனை வருடமா காத்திருந்தவன் அவளை விட்டுவிடுவானா.?
சூப்பர் ஆத்தர் ஜி❤️
Wow.... nice intresting ud sis ❤️
Epo padichalum ❤️🔥 irukunga