arrow_back
வற்பனை சேரல் அத்தியாயம் 23
வற்பனை சேரல் chevron_right பகுதி 23 / 28

அத்தியாயம் 23

visibility 530
star படைப்பை ரேட் செய்யுங்கள்
சராசரி 4.6/5 (5 மதிப்பீடுகள்)
பகிர்

பொற்பனை மாநகரம் அந்திப் பொழுதின் ஒளியில் கனல் வீசும் தங்கமாக ஜொலித்துக் கொண்டிருந்தது. சமணப் பள்ளியில் கல்வியை முடித்துவிட்டு, இப்போது தனது தந்தையின் பெருவணிக அங்காடியை நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்றிருந்தாள் ஆதிரை. அவளது அறிவுத்திறனும், கணக்கு வழக்குகளில் இருந்த நேர்த்தியும் அந்த அங்காடித் தெருவிலேயே அவளுக்கு ஒரு தனி மரியாதையைப் பெற்றுத் தந்திருந்தது.

அன்று புதிய சரக்குகள் வந்திறங்கும் நாள். கோட்டை வாசலில் முரசு அதிர, அங்காடித் தெருக்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

ஆதிரையின் தந்தை தற்போது ஊரிலிருப்பதால் அவர்களது அங்காடியை கவனித்துக் கொள்ளும் பொறுப்பு சற்று தளர்ந்திருந்தது. எனினும் அங்காடியை அவள் தான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதில்லை. அதற்கான ஆட்கள் இருந்தார்கள். ஆனாலும் உடையவர்கள் என்று இவர்கள் இருந்தால் தானே வேலைகள் ஒழுங்காக நடக்கும்! அதனால் அவள் அங்காடியை விட்டு அகல்வேனா என்று இருந்தாள்.

“மங்கை! இந்திரனின் வில்விழா (இந்திர விழா) தொடங்க இன்னும் ஏழு நாட்களே எஞ்சியுள்ளன. அதற்குள் நம் அங்காடியில் புகுந்துள்ள பண்டங்களை முறைப்படி நிரைப்படுத்த வேண்டும். இம்முறை யவன தேசத்து மெருகேற்றிய ஒண்ணிற வெண்கலக் கண்ணாடிகளுக்கே பெரும் விழைவு (மவுசு) இருக்கும் போல் தோன்றுகிறது!” என்று ஆதிரை தன் கணக்குப் புத்தகத்தில் குறிப்பெடுக்க,

பார்த்துப் பார்த்து கண்கள் பூத்த மங்கை, ஒரு கட்டத்திற்கும் மேல் பொறுமை இழக்கத் துவங்கினாள்.

அவள், “விழாவிற்குப் புதிய கலிங்கத் துகிலை (ஆடை) நாம் வாங்க வேண்டாமா? நம் பொழுதினை இவ் அங்காடியிலேயே கழித்துக் கொண்டிருத்தல் முறையோ?” என்று அவளை வற்புறுத்தி அங்காடித் தெருவின் மற்ற வீதிகளுக்கு இழுத்து சென்றாள்.

மங்கையின் பிடிவாதத்திற்கு முன்னால் ஆதிரையின் கணக்கு வழக்குகளால் ஈடுகொடுக்க முடியவில்லை. “சரி மங்கை, உன்னோடு வருகிறேன். ஆனால் அந்தச் சீன தேசத்துப் பட்டுத் துகில்களைக் கண்டதும் அங்காடியை மறந்து அங்கேயே தங்கிவிடாதே!” என்று சிரித்துக்கொண்டே எழுந்தாள் ஆதிரை.

அவர்கள் இருவரும் அங்காடியின் வெளியே காத்திருந்த அந்த மணித் தேரை நோக்கி நடந்தனர்.

அந்திச் சூரியனின் செவ்வொளி பட்டு அந்த நெடுந்தேர் தகதகவென மின்னியது. இரண்டு வெண்ணிறப் புரவிகள் அதன் நுகத்தடியில் பூட்டப்பட்டிருந்தன. அந்தத் தேரின் முன்புறம், செதுக்கப்பட்டத் தாமரை மொட்டினைப் போலத் தலைநிமிர்ந்து நின்ற கொடுஞ்சி (கைப்பிடி அமைப்பு), அந்தத் தேரின் கம்பீரத்தைப் பறைசாற்றியது. தேர்ப்பாகன் குதிரைகளின் கடிவாளத்தைச் சுண்டி இழுக்க, புரவிகள் தங்களின் கால்களால் மண்ணைக் கிளறி, போருக்குச் செல்லும் வீரர்களைப் போலச் சினகித்தன.

ஆதிரையும் மங்கையும் தேரின் உட்புறம் ஏறினர். தேரின் இருபுறமும் தொங்கவிடப்பட்டிருந்த மெல்லிய திரைகள் (பட்டுத் திரைச்சீலைகள்), வெளியிலிருந்து யாரும் அவர்களைப் பார்க்க முடியாதபடி மறைத்தன.

“தேரை மெல்லச் செலுத்து. அங்காடி வீதியின் கூட்டம் குறையட்டும்…” என்று ஆதிரை பாகனுக்குக் கட்டளையிட்டாள்.

நெடுந்தேர் நகரத் தொடங்கியது. அந்தச் சிறிய மரச்சக்கரங்கள் (ஆழி) அங்காடி வீதியின் கற்கள் பதித்தப் பாதையில் உருண்டபோது ஏற்பட்ட அந்தத் தாளமானச் சத்தம், அங்காடியின் இரைச்சலையும் மீறித் தனித்துக் கேட்டது. குதிரைகளின் கழுத்திலிருந்த கிண்கிணி மணிகள் மெல்ல ஒலித்தன.

திரையின் ஒரு சிறிய இடைவெளி வழியாக ஆதிரை வெளியே பார்த்தாள். அங்கே யவன தேசத்து மெருகேற்றிய வெண்கலக் கண்ணாடிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. மக்கள் கூட்டம் அந்தப் புதுமையானப் பொருட்களை வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தது.

“பார் மங்கை, இந்தக் கண்ணாடிகளுக்காகத்தான் மக்கள் இத்தனை விழைவு கொள்கிறார்கள். ஆனால், அவர்கள் பார்ப்பது தங்கள் முகத்தையல்ல, யவனர்களின் திறமையை!” என்று ஆதிரை சொல்ல,

மங்கை அவளது தோளைத் தட்டி, “இப்போது உன் வணிக மூளையைச் சற்று ஓய்வெடுக்கச் சொல் ஆதிரை. இதோ, அந்த நெடுவீதியில் இருக்கும் ஆடை அங்காடியைப் பார்! அந்தப் பட்டுகளின் நிறம் இந்தக் கண்ணாடியை விடவும் மேலானது…” என்று கை காட்டினாள்.

அந்த மணித் தேர் மெல்ல அங்காடித் தெருவின் சந்தடி நிறைந்தப் பகுதிகளுக்குள் நுழைந்தது. அந்தத் தேரின் உன்னதமானத் தோற்றமும், ஆதிரையின் வருகையும் அந்த வீதியிலிருந்த மற்ற வணிகர்களின் கவனத்தை ஈர்த்தன.

பொதுவாக பெண்கள் மங்கை பருவமெய்தியவுடன் (பன்னிரண்டு வயது முதல் பதினான்கு வயதுக்குள்) திருமணம் முடித்துவிடுவதுதான் வழக்கம். பெண்களுக்கு மங்கைப் பருவம் என்றால், ஆண்களுக்கு மறவோன் (பதினைந்து வயது முதல் இருபது வயது வரை) பருவம்.

ஒரு ஆண், வாள் வீச்சு, மற்போர் மற்றும் வேட்டை ஆகியவற்றில் தனது வீரத்தை நிரூபித்தவுடனே அவன் மணமகனாகும் தகுதியைப் பெற்றுவிடுகிறான். பதினெட்டு வயதிற்குள் ஒரு வீரன் போர்க்களம் கண்டுவிட்டால், அவனுக்குத் திருமணம் செய்து வைப்பது கௌரவமாகக் கருதப்பட்டது.

அப்படிப்பட்ட நாளில் மங்கை பருவம் தாண்டி மடந்தை பருவத்தின் முடிவிலும் ஆதிரை நிற்கிறாள் என்றால் அதற்கு காரணம் அவளது தந்தையும், அவளது கல்வியும் தான். சமணப் பள்ளியில் படித்து, இப்போது அவர்களது பொற்பனையின் மாசாத்துவானின் பேரங்காடியை மொத்தமாக நிர்வகிப்பது என்பது சாதாரணமல்ல! ஒற்றை மகளாய் இருப்பதால் ஆதிரை நிரம்ப கற்று, வணிகத்திலும் தேர்ச்சியுற்ற பின் திருமணம் செய்துவிக்க வேண்டும் என்பது அவரது விருப்பம். முதலில் ஆதிரையும் சமணப் பள்ளியில் படித்ததால், மணம் செய்வதில் பெரு விழைவு அவளுக்கு இருந்ததில்லை.

அதோடு இப்போது பெருஞ்சேரலை பிரிந்து மூன்று வருடமாகி இருந்தது. ஆனாலும் அவ்வப்போது அவனை பார்ப்பது தவிர்க்க முடியாதது தான். பெரும் வணிகர் என்ற முறையில் தந்தையுடன் அரண்மனைக்கும் சென்றிருக்கிறாள். அப்போதெல்லாம் பெருஞ்சேரலின் ஏக்கப் பார்வை அவளையே வட்டமிடும். ஆனாலும் அவனை பாராதது போலவே தவிர்த்து விடுவாள்.

ஆதிரையும் அவளது தோழி மங்கையும் அந்த வர்ணஜாலங்கள் நிறைந்த அந்த அங்காடி தெருவுக்குள் நுழைந்தனர். தேரிலிருந்து இறங்கி நடக்கத் துவங்கினர். மணித் தேர் பின்னாலேயே வந்தது. தரை எங்கும் ஆற்று மணல் பரப்பப்பட்டிருந்தது, அது காலடியில் மென்மையாக அமுங்கியது.

தைக்கப்படாத அல்லது வெட்டப்பட்ட துணி விற்கப்படும் அறுவை வீதி, நெய்பவர்கள் நேரடியாக துணிகளை விற்கும் காருகர் வீதி, விலைமதிக்க முடியாத நவரத்தினங்கள், பவளம், மற்றும் முத்துக்களை விற்கும் மணி வீதி, கம்மியரின் பொன்னாபரணங்களையும் வெள்ளி ஆபரணங்களையும் விற்கும் பொற்கடை வீதி என்று ஒவ்வொன்றுக்கும் தனித்தனி வீதிகள்.

அவர்கள் போனது முதலில் மணி வீதி!

“என்ன அழகாக இருக்கிறது…” என்று வியந்தாள் மங்கை. பெண்களுக்கு ரத்னாபரணங்களை ரசிப்பதா குறை?

“ஆதிரை, இதோ நோக்கு! தென்பாண்டி நாட்டுத் தண்பொருநை (தாமிரபரணி) ஆற்று முகத்துவாரத்தில் குளித்தெடுத்த முத்தாரங்கள் இவை! ஒரு மரக்கால் (படி) முத்திற்கு இரண்டு பொற்காசுகள் என இவ்வணிகன் விலை பகர்கின்றான்!” என்று மங்கை வியந்து சொல்ல, ஆதிரை அந்த முத்துக்களைக் கையில் எடுத்துப் பார்க்கிறாள்.

“நினக்கு வேண்டுமா?” என்று கேட்க, மங்கை தலையாட்டினாள்.

“மங்கை! இம்மரக்காலில் (படியில்) உள்ள முத்துக்கள் சில செந்நிறச் சாயல் கொண்டுள்ளன; இவை தரம் குன்றியவை. உயரிய ஆணி முத்துக்கள் எப்பொழுதும் தண்நிலவின் ஒளியெனத் தூய வெண்மை கொண்டிருக்க வேண்டும். எம் அங்காடியில் முத்துக்களை இங்ஙனம் படியால் அளந்து மதிப்பிடுவதில்லை; ஒவ்வொன்றின் ஒளியையும் சுடரையும் கொண்டே அவற்றின் விழுமியத்தை (மதிப்பை) உறுதி செய்வோம்…” என்று ஒரு தேர்ந்த வணிகப் பெண்ணாக ஆதிரை அவளது காதில் கிசுகிசுத்தாள்.

ஆதிரையின் வணிகக் கூர்மையைக் கண்டு மங்கை வியக்க, அந்த வணிகரோ தனது முத்துக்களின் தரத்தைப் புகழ்ந்து பேசத் தொடங்கினார்.

“மங்கையே! எம்மிடமுள்ள இம்முத்துக்கள் தென்னவன் (பாண்டியன்) திறையாகப் பெற்ற உயர்தர மணிகள்! ஒரு மரக்காலுக்கு இரண்டு பொற்காசுகள் என்பது இப்புவி எங்கும் நீர் பெற்றிடவியலாத அரிய விலை…” என்று அவர் தன் மரக்காலால் முத்துக்களை முகந்து காட்டிப் பேரம் பேசினார்.

ஆதிரை அந்த முத்துக்களில் ஒன்றை எடுத்துத் தன் கைவிரல்களுக்கு நடுவே வைத்து ஒளியில் காட்டினாள்.

ஆதிரை, “வணிகரே! தென்பாண்டி நாட்டுத் திரைமுத்துக்கள் மேன்மை மிக்கவை என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. எனினும், நீர் காட்டும் இம்முரம்பில் (படியில்) பாதிக்கும் மேற்பட்டவை சிறுவயறு என்னும் தரம் குறைந்த மணிகளே! இவற்றில் ஆணி முத்துக்களுக்கே உரிய உருட்சியோ, தண்நிலவின் ஒளியோ இல்லையே! இவற்றுக்கு இரண்டு பொற்காசுகள் கோருதல் முறையுடைத்தோ?”

அவரோ, “அம்மையே! நுண்திறன் மிக்க நும் கண்கள் இம்முத்துக்களின் குறைபாட்டைச் செவ்வனே கண்டறிந்தன! எனினும், இவை ஆழ்கடல் புகுந்து அரும்பாடுபட்டு எடுத்த திரைமணிகள் என்பதை மறவாதீர். இதோ நோக்குமின்! இவற்றின் வெண்மை நும் இதழோரம் அரும்பும் புன்னகைக்கு நிகரானதன்றோ? ஒரு பொற்காசும், பத்து வெள்ளிக் காசுகளும் ஈடாகத் தருக! இம்மரக்கால் (படி) முத்துக்களை அப்படியே உமக்கு அளிக்கிறேன்!”

ஆதிரை, “வணிகரே! மின்னுவதெல்லாம் விழுமிய (உயர்ந்த) முத்துக்கள் ஆகா! இம்முரம்பில் (படியில்) காணப்படும் செந்நிறச் சாயல், சிப்பிகள் நோய்மையுற்றதை (வியாதிப்பட்டதை) மெய்ப்பிக்கின்றன. பொற்பனை மாநகரின் பெருவணிகர் மகளிடமே இத்தகு தரம் குறைந்த மணிகளைக் காட்டிப் பெரும்பொன் ஈட்ட விழைவது (ஆசைப்படுவது) முறையோ? ஒரு பொற்காசு மட்டுமே இதற்குத் தகுதியான விலை; அதற்கு மேலாக ஒரு காகினியும் (அரைப் பணம்) ஈடாக நல்கிட இயலா…”

அதை கேட்டவருக்கு மலைப்பாக இருந்தது. “ஒரு பொற்காசா? எம் உழைப்பிற்கு இது பெரும் இழப்பாயிற்றே! சரி… நுணுக்கம் அறிந்த வணிகப் பெண்ணாயிற்றே நீர், உமக்காக ஒரு பொற்காசும் ஐந்து வெள்ளிக் காசுகளுமாக முடிக்கலாமா? இதை விடக் குறைந்த விலைக்கு இந்தப் படி முத்துக்களைக் காஞ்சியிலும் வஞ்சியிலும் கூடப் பெற முடியாது!”

ஆதிரை, “நீர் சொல்லும் வஞ்சியும் காஞ்சியும் எம் தந்தை வணிகம் செய்யும் களங்கள் தான் வணிகரே! இதோ ஒரு பொற்காசு… சம்மதமெனில் இப் படியை எம் தோழிக்குக் கொடும். இல்லையேல், எம் அங்காடியிலேயே இதை விடச் சிறந்த ஆணி முத்துக்களை அவளுக்கு நான் தருகிறேன்!”

அவளது உறுதியான பேச்சைக் கேட்ட வணிகர், வேறு வழியின்றி ஒரு பொற்காசுக்கு அந்தப் படி முத்துக்களைத் தரச் சம்மதித்தார்.

முத்துக்களை வாங்கிக் கொண்டு, அவர்கள் பொற்கடை வீதிக்குள் நுழைந்தனர். அங்காடி வீதியின் இப்பகுதி தங்கம் மற்றும் வெள்ளியின் மினுமினுப்பால் கண்ணைப் பறித்தது. சிறு சிறு உலைக்களங்களில் பொற்கொல்லர்கள் மெல்லிய ஊசிகளால் பொன் கம்பிகளை வளைத்து ஆபரணங்களைச் செய்து கொண்டிருந்தனர். கடையின் முகப்பில் வெண்கலக் கிண்ணங்களில் நீர் வைக்கப்பட்டு, அதில் நறுமண மலர்கள் மிதந்து கொண்டிருந்தன.

“ஆதிரை, இதோ பார்! இந்தப் பொற்கடை மற்றவற்றை விடக் கம்பீரமாக இருக்கிறது…” என்று மங்கை ஒரு கடையைச் சுட்டிக்காட்டினாள். அங்கே தேக்கு மரச் சட்டங்களில் பொன்னால் ஆன காதணிகளும், மேகலைகளும் வரிசையாக அடுக்கப்பட்டிருந்தன. ஆதிரை அந்தக் கடைக்குள் நுழைந்து, ஒரு நுணுக்கமான வேலைப்பாடு கொண்ட மகர குழையணியை கையில் எடுத்தாள்.

அதன் மாற்றை ஆராய்ந்தவள், “வணிகரே, இந்த மகர குழையின் வேலைப்பாடு நேர்த்தியாக இருக்கிறது. ஆனால் இதன் ஆணிப்பொன் மாற்று எவ்வளவு? பார்ப்பதற்குச் சற்றுச் சிவந்த சாயல் தெரிகிறதே?” என்று சந்தேகத்தை எழுப்பினாள்.

அதற்கு அந்தப் பொற்கொல்லர், அவளது வணிகப் பின்னணியை அறிந்தவராக, “வணிக மங்கை நீவீர்! உமக்குத் தெரியாதது ஒன்றுமில்லை. இது செம்பு கலவாத பசும்பொன். இந்தச் சிவப்புச் சாயல், அனலில் இட்டு மெருகேற்றியதால் வந்தது. கரும்பொன்னைக் காய்ச்சி எடுத்த தூய தங்கம் இது!” என்று விளக்கமளித்தார்.

அங்கிருந்த முத்துக்களின் வெண்மையைக் கண்ட மங்கை வியப்புடன், “ஆதிரை, இதன் கீழே தொங்கும் இந்த முத்துக்களின் வரிசையைப் பார்… நாம் இப்போது வாங்கிய முத்துக்களை விட இவை இன்னும் வெண்மையாக இருக்கின்றனவே!” என்றாள்.

“ஆமாம் மங்கை, இவை கொற்கைத் துறைமுகத்தின் ஆணி முத்துக்கள்” என்று ஆதிரை ஆமோதித்தாள். பிறகு வணிகரைப் பார்த்து, “வணிகரே, இந்தக் குழையணிக்கு இணையான வேலைப்பாட்டில் ஒரு மேகலை இருக்கிறதா? முத்துக்கள் கோர்க்கப்பட்டு எட்டுச் சரங்கள் கொண்டதாக இருக்க வேண்டும்” என்று கேட்டாள்.

அவர் உடனே ஒரு ஆபரணத்தை எடுத்துக் காட்டி, “ஐயமின்றிக் காண்பீராக! இஃது எண்கோண மேகலை. இதன் ஒவ்வொரு வளையமும் கம்மியரின் (பொற்கொல்லர்) கைத்திறத்தால் தனித்தனியே வளைத்து உருவானது. உயர்குடிப் பிறந்த குலமங்கையர் மட்டுமே அணியும் சீர்மை மிக்க (சிறப்பு மிக்க) தனித்துவமான அணிகலன் இஃது!” என்றார்.

அதை உற்று நோக்கிய ஆதிரை, “வனப்புடன் (அழகாக) தான் இலங்குகின்றது! எனினும், இம்மேகலையின் பூண் (கொக்கி) சுமந்துள்ள மாணிக்கமணி சற்று ஒளியற்றுத் (மங்கலாக) தோன்றுகிறதே? இஃது இமயத்தின் சாரலில் விளைந்ததா அல்லது கடல் கடந்த சாவக நாட்டு (மலேசியா) மணிகளா?” என்று வினவினாள்.

“அம்மையே! இஃது தென்பாண்டி நாட்டு மலைக்குன்றுகளில் அகழ்ந்தெடுக்கப்பட்ட அசல் மாணிக்கமணி! நும் மேனி எழிலுக்கு (நிறத்திற்கு) இது கூடுதல் பொலிவை (அழகை) நல்கும் என்பதில் ஐயமில்லை. இத்தகு உயர்வான மணியினை நிலவுலகின் வேறெந்த இடத்திலும் காண்பது அரிது!” என்று அவர் உறுதியளித்தார்.

மங்கை உற்சாக மிகுதியில், “ஆதிரை! மறுமொழி ஏதும் கூறாது இதனை விழைந்து ஏற்றுக்கொள்! வரும் இந்திர விழாவின் போது, நீ இப்புனைவுகளுடன் வீதி உலா வருகையில், இப் பொற்பனை மாநகரே உன் பின்னால் அலைகடலெனத் திரண்டு வருமே!” என்று அவளைத் தூண்டினாள்.

ஆதிரை புன்னகைத்தபடி, “புனைதல் (அலங்காரம்) என்பது பிறர் கண்கள் வியப்பதற்கன்று; அது நம் அகத்தின் நிறைவிற்கே உரியது!” என்றவள், வணிகரிடம் திரும்பி, “வணிகரே! இம்மகரக் குழைகளுக்கும் இம்மேகலைக்கும் நீர் வேண்டுவது எத்துணைப் பொற்காசுகள்? வணிகக் குலத்து மங்கையிடம் யான் இதற்கான நேர்மையான (முறையான) விலையினை எதிர்நோக்குகிறேன்!” என்றாள்.

“நுந்தை எம்மோடு பலமுறை பசும்பொன் துகள்களைக் கொண்டு பெருவணிகம் புரிந்தவர். அத்தொடர்பின் நிமித்தம், யான் ஊதியம் (லாபம்) ஏதும் கருதாது, இருபது பொற்காசுகளுக்கு இதனை உமக்களிக்கிறேன். இஃது இம்மேகலையின் பொன் எடைக்கு நிகரான விலையே அன்றி வேறில்லை!” என்று அவர் கூற, ஆதிரை அந்த ஆபரணங்களைத் தடவிப் பார்த்தாள். அதன் வேலைப்பாட்டில் இருந்த நேர்த்தி அவளுக்குப் பிடித்திருந்தது.

“நன்று வணிகரே! நீர் குறித்த இப்பொன் விலைக்கு யான் உடன்படுகிறேன். எனினும், இம்மேகலையின் பூண் (கொக்கி) சற்று நலிவுற்றதாகத் தோன்றுகிறது. இதனை இன்னும் திண்மையாக (வலுவாக) மாற்றியமைத்துத் தருக!” என்று கூறித் தன் மடியிலிருந்த பொற்காசுகளை எண்ணத் தொடங்கினாள். கூடவே மங்கைக்கு என்று சிலவற்றை தேர்ந்தெடுத்தும் வாங்கினாள்.

ஆபரணங்களைச் சிறு துகில் பைகளில் பத்திரப்படுத்தி தேரில் வைத்துவிட்டு, அவர்கள் அங்கிருந்து நகர்ந்து அலங்காரப் பொருட்கள் விற்கும் வீதிக்குள் நுழைந்தனர். இந்தப் பகுதி மற்ற வீதிகளை விடவும் அதிக நறுமணம் மிக்கதாக இருந்தது. சாலையின் இருபுறமும் அகில் புகையும், சந்தன வாசனையும் காற்றில் மிதந்து வந்து மனதை மயக்கியது. கடைகளின் முன்னால் மெருகேற்றப்பட்ட வெண்கலக் கண்ணாடிகள் வரிசையாக வைக்கப்பட்டிருந்தன. மாலை நேரத்துச் சூரிய ஒளி அந்தக் கண்ணாடிகளில் பட்டுத் தெறித்து, அந்த வீதியையே ஒரு மாயாஜால உலகம் போலக் காட்டியது.

“ஆதிரை, இதோ நோக்கு! யவன தேசத்து வினைஞர்களால் ஒண்ணிறம் ஊட்டப்பட்ட வெண்கலக் கண்ணாடிகள்! நம் அங்காடியில் உள்ளவற்றை விடவும் இவை பேரளவினவாய், வியப்புறு வனப்புடன் (அழகுடன்) இலங்குகின்றனவே!” என்று மங்கை ஒரு கடையைச் சுட்டிக்காட்டினாள்.

ஆதிரை அந்தக் கடையின் முன்னே நின்றபோது, அங்கிருந்த மேசை மீது அடுக்கப்பட்டிருந்த வட்ட வடிவ வெண்கலக் கண்ணாடிகள் அந்திச் சூரியனின் ஒளியைப் பன்மடங்காகப் பிரதிபலித்தன. செப்புச் சட்டங்களில் நுணுக்கமாகச் செதுக்கப்பட்டிருந்த வேலைப்பாடுகள் அந்தக் கண்ணாடிகளுக்கு ஒரு ராஜ தோரணையை அளித்திருந்தன. அவள் ஒரு சிறிய கண்ணாடியைக் கையில் எடுத்துத் தன் முகத்திற்கு நேராகப் பிடித்தாள். ஐம்பால் முறையில் நேர்த்தியாகக் கட்டப்பட்டு, நீலக் குவளை மலர்கள் சூடப்பட்ட அவளது கூந்தல், மெருகேற்றப்பட்ட அந்த உலோகப் பரப்பில் ஒரு ஓவியம் போலத் தெரிந்தது.

“ஐம்பால் கூந்தல் புனையும் பக்குவம் எய்தின், அதுவே மங்கையர்க்கு மணப்பருவம், ஆதிரை எப்போதுன் மணவினை? என்று மங்கை கேள்வி கேட்பது அவளது நினைவில் வந்து போனது. உடன் எப்போதும் போல சேரல்.

சேரலின் நினைவு வந்ததும் ஆதிரை தன் தலையை ஓங்கி உலுக்கிக் கொண்டாள். வேண்டாமென முடிவு செய்தபின் எதற்கு அவன் நினைவு? என்று அவள் மூளை எச்சரித்தாலும், அவனை நினையாமல் நீ ஒருநாளும் கடந்ததில்லையே என்று அவளது அடிமனம் அவளை இடித்துரைத்தது.

அவளது எண்ண ஓட்டத்தைத் தடுத்தது, அந்த அலங்கார வீதியின் கடைக்கோடியில் இருந்த ஒரு மாளிகையிலிருந்து எழுந்த முரசின் அதிரொலி. அது வெறும் இசைக்கருவியின் சத்தம் அல்ல; வேலன் வெறியாட்டு முழக்கம்.

அலங்கார வீதியை ஒட்டி, அந்தச் செழுமையான நெடுமாடம் (மாடி வீடு) நிலைகொண்டிருந்தது. சுட்ட செங்கற்களும், வெண்மையான சுதை பூசப்பட்ட சுவர்களும் அந்த மாளிகையை ஒரு வெண்மேகம் போலக் காட்டின. மாளிகையின் உப்பரிகையில் தேக்கு மரத் தூண்கள் தாங்கி நிற்க, அதன் கைப்பிடிச் சுவர்கள் நுணுக்கமான சித்திர வேலைப்பாடுகளுடன் இருந்தன. அந்த மாளிகையின் மாடம், நிலவொளியையும், சூரிய ஒளியையும் ஒருசேர உள்வாங்கும் வகையில் அகன்று விரிந்திருந்தது.

அந்த மாளிகையின் கீழ்த்தளத்தில் உள்ள முற்றத்தில் வெறியாட்டுத் களம் அமைக்கப்பட்டிருந்தது. அங்கே செந்நிற மலர்களும், மணல் பரப்பப்பட்ட நிலமும் அழகாக இருந்தன.

மையத்தில் வேலன், கையில் கூர்மையான வேலேந்தி ஆடிக்கொண்டிருந்தான். அவனது உடலெங்கும் திருநீறும், சந்தனமும் பூசப்பட்டிருக்க, முருகக் கடவுளின் ஆவேசம் தன்னுள் இறங்கியது போல அவன் சுழன்று சுழன்று ஆடினான். தப்புக்களின் வேகத்திற்கு ஏற்ப அவனது கால்கள் நிலத்தைத் தாளகதியில் மிதித்தன. வெறியாட்டத்தின் உச்சமாக, ஒரு பலிச் சடங்கு நிகழ்த்தப்பட்டது; செந்தினையோடு கலக்கப்பட்ட குருதி நிலத்தில் தெளிக்கப்பட, அந்த உதிர வாடை காற்றின் நறுமணத்தை மெல்லக் கிழித்தது.

அந்த மாளிகையின் உயரமான மாடத்தில் நின்றபடி, ஒரு பெண் அந்த வெறியாட்டைச் சலனமற்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். அவள்தான் அந்தச் சடங்கை முன்னின்று நடத்தும் தலைவி.

கட்டுக்கடங்காத காதல் நோயால் (அணங்கு) வாடும் தன் மகளின் துயரம் தீர வேண்டும் என்பதற்காகவே அவள் அந்த வேலனை அழைத்திருந்தாள். அந்தத் தலைவியின் முகம் ஒருவிதத் தீவிரத்தோடு இருந்தது; அவளது பார்வையில் தன் குலத்தின் மீதான அக்கறையும், அதே சமயம் அந்தத் தெய்விகச் சடங்கின் மீதான அசைக்க முடியாத நம்பிக்கையும் தெரிந்தன.

ஆதிரை இப்போது தன்னையே அந்த இடத்தில் பொருத்திப் பார்த்தாள். ஒருவேளை, தன் மகளாகிய ஆதிரையின் சேரல் மீதான தீராக் காதலை நீக்க தன் தந்தை இளவேட்டனாரும் இப்படி ஒரு வெறியாட்டை நடத்தப் போகிறாரா?

காதல் என்பது நோயெனில், அதற்கு மருந்து வெறியாட்டமா? இல்லை, காதலனின் நினைவா? என்ற கேள்வி அவளைத் துளைத்தது. வேலன் சுழன்று ஆடும் ஆட்டமும், முரசின் அதிரடியும் அவளை ஏதோ செய்தன.

சட்டென்று மங்கையின் கை அவளது தோளைத் தீண்ட, “ஆதிரை, என்ன யோசனை?” என்றாள்.

ஆதிரை திடுக்கிட்டுச் சுயநினைவுக்கு வந்தாள். அவள் கையிலிருந்த வெண்கலக் கண்ணாடி நடுங்கியது.

“ஒன்றுமில்லை மங்கை… வெறியாட்டுச் சத்தம் சற்று அதிகமாக இருக்கிறது…” என்றவள், வெண்கல கண்ணாடியில் பார்வையை பதித்தாள்.

அவளது வணிகக் கண்கள் அந்தக் கண்ணாடியின் விளிம்புகளைச் சுழன்று வந்தன. யவன தேசத்துத் தொழில்நுட்பத்தில் செய்த கண்ணாடி என்று வணிகர் சொன்னாலும், அதன் பின்புறம் இருக்கும் செப்புச் சட்டம் இன்னும் சற்று கனமாக இருந்திருக்க வேண்டும் என்று அவளுக்குத் தோன்றியது. “பிடிக்கும்போது ஒரு சமநிலை இல்லையே?” என்று அவள் மெல்லிய குரலில் வினவியபோது, அந்த வணிகர் அவளது நுணுக்கமான அறிவைக் கண்டு வியந்தார்.

“இதன் விளிம்புகள் மெல்லியதாக இருந்தால்தான் பெண்களின் கரங்களுக்கு ஏதுவாக இருக்கும் என்று அவ்வாறு வடிவமைக்கப்பட்டது. இதன் மெருகு வாழ்நாள் முழுவதும் மங்காது, வேண்டுமானால் பாருங்கள்!” என்று அவர் நயம்பட விளக்கினார்.

அங்கிருந்த பெரிய கண்ணாடியைப் பார்த்த மங்கை, “ஆதிரை, இந்தப் பெரிய கண்ணாடியில் உன் முகம் எவ்வளவு தெளிவாகத் தெரிகிறது பார்! நம் அங்காடியில் இருக்கும் கண்ணாடிகளில் உருவம் சற்றுத் தடித்தல்லவா தெரியும்? இதில் உன் விழிகளின் கருமை அப்படியே தெரிகிறது” என்று ஆச்சரியப்பட்டாள்.

உண்மைதான் என்பது போல ஆதிரை தலையசைத்தாலும், அவளது கண்கள் குறையைத் தேடுவதில் குறியாக இருந்தன. “உண்மைதான் மங்கை. ஆனால் வணிகரே, இந்தக் கண்ணாடியின் மையத்தில் ஒரு சிறிய மேடுபள்ளம் தெரிகிறதே? முகத்தின் ஒரு பக்கம் சற்று இழுபட்டுத் தெரிவதைக் கவனிக்கவில்லையா?” என்று அவள் சுட்டிக்காட்டினாள்.

வணிகர் இப்போது சற்றுத் திகைத்தார். “அம்மா, அது உலோகத்தைக் காய்ச்சி வார்ப்பது அல்லவா? ஆற்று மணலில் வைத்து மெருகேற்றும்போது சில இடங்களில் அப்படித் தோன்றுவது இயற்கைதான். நுணுக்கம் தெரிந்த உமக்கே இப்படித் தெரிந்தால், மற்றவர்களுக்கு இது ஒரு குறையாகவே தெரியாது!” என்று சமாளித்தார்.

சுற்றிலும் கண்களை சுழற்றினாள்.

அங்கே களிமண்ணால் ஆன அழகிய சிமிழ்களில் செந்நிறமான சாந்து வைக்கப்பட்டிருந்தது. சந்தனம், அகில், மற்றும் மலர்களை அரைத்துச் செய்யப்பட்ட அந்தச் சாந்துகள் பெண்களின் மேனிக்கு நறுமணம் ஊட்டப் பயன்படுபவை. மற்றொரு பக்கம், கண்களுக்குத் தீட்டும் அஞ்சனம் (Kajal) கருப்பு நிறக் குழம்பாகச் சிறிய தந்தத்தினால் ஆன குப்பிகளில் வைக்கப்பட்டிருந்தது.

“வணிகரே, இந்த அஞ்சனம் எதைக் கொண்டு செய்யப்பட்டது? மூலிகைகளின் வாசம் குறைவாக இருக்கிறதே?” என்று ஆதிரை அந்தக் கடைக்காரரிடம் வினவினாள்.

“அம்மையே, இது கார்த்திகை மாதத்துக் கருநீல மலர்களையும், பசுநெய்யையும் கொண்டு பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்டது. கண்களுக்குக் குளிர்ச்சியையும், தீர்க்கமான கருமையையும் தரும்…” என்றார் அந்த வணிகர்.

ஆதிரை அந்த அஞ்சனக் குப்பியைத் திறந்து மோந்து பார்த்தாள். அவளது கூர்மையான நாசி அதன் தரத்தைச் சட்டெனக் கண்டறிந்தது.

மங்கை அங்கிருந்த வண்ணப் பொடிகளைப் (சுண்ணம்) பார்த்துக் கொண்டிருந்தாள். “ஆதிரை, இந்தத் தங்கம் கலந்த பொடியைப் பார். இதைத் தோள்களில் பூசிக் கொண்டால், இந்திர விழாவின் விளக்கொளியில் நாம் மின்னப்போகிறோம்!” என்று சொல்லி ஒரு பிடிப் பொடியை எடுத்துத் தன் கையில் தேய்த்துக் காட்டினாள்.

“அலங்காரப் பொருட்கள் என்பது நம்மை வெளிக்காட்டிக் கொள்வதற்கு மட்டுமல்ல மங்கை, அவை நம் உடலைப் பேணுவதற்கும் உரியவை…” என்று புன்னகைத்த ஆதிரை, வணிகரிடம் விலை பேசி அந்தப் பொருட்களை வாங்கினாள்.

மங்கை அங்கிருந்த தந்தத்தினால் ஆன அஞ்சனக் குப்பியைக் கண்டு மயங்கினாள். “இதோ இந்தத் தந்தத்தினால் ஆன அஞ்சனக் குப்பியைப் பார். இதன் மூடியில் ஒரு சிறிய மயில் செதுக்கப்பட்டிருக்கிறது! இதையும் அந்தக் கண்ணாடியையும் சேர்த்து வாங்கிவிடலாமே?” என்று ஆதிரையை வற்புறுத்தினாள்.

ஆனால் ஆதிரை எதற்கும் மசியவில்லை. மயில் அழகாக இருக்கிறது என்பதற்காகத் தரம் குறைந்த கண்ணாடியை வாங்க முடியாது என்பதில் அவள் உறுதியாக இருந்தாள். “வணிகரே, இந்த அஞ்சனக் குப்பிக்கும், தரம் பிரித்த இந்த மூன்று சிறிய கண்ணாடிகளுக்கும் எவ்வளவு விலை? நேர்மையான விலையைச் சொன்னால் மறுபேச்சின்றி வாங்கிக் கொள்கிறேன்” என்று நேரடியாக விஷயத்திற்கு வந்தாள், மங்கைக்கும் சேர்த்தே பேசினாள்.

அவளது தந்தையின் பெயருக்காகவும், அவளது நுணுக்கமான அறிவுக்காகவும் மூன்றிற்கும் சேர்த்து ஏழு வெள்ளிக் காசுகள் தருமாறு வணிகர் கேட்டார். லாபம் குறைவுதான் என்றாலும், ஒரு சிறந்த வணிகக் குடும்பத்திற்கு இது போய்ச் சேருவது அவருக்குப் பெருமையாக இருந்தது.

ஆதிரை அந்த விலையை மனதிற்குள் கணக்கிட்டுப் பார்த்தாள். அந்தத் தரத்திற்கு அது முறையான விலையே என்று தோன்றியது. “சரி வணிகரே, அப்படியே ஆகட்டும். இதனுடன் தோளில் பூசிக்கொள்ளும் அந்த நறுமணச் சந்தனச் சாந்தையும் சேர்த்து எடுத்து வையுங்கள்…” என்று கூறித் தன் பையைத் திறந்தாள்.

அடுத்த அத்தியாயம்

அத்தியாயம் 24

அலங்காரப் பொருட்களை முடித்துவிட்டு, அவர்கள் அடுத்து நுழைந்தது பொற்பனை மாநகரின் பரபரப்பான அறுவை வீதி. இது தைக்கப்படாத துணிகள் விற்கப்படும் இடம். அங்கிருந்து ஒரு குறுகிய சந்தின் வழியாகத் திரும்பினால் தானியங்கள் விற்கும் கூல வீதியும், காருகர் வீதி எனப்படும் நெசவாளர்கள்…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

இந்தக் கதையைப் பற்றி விவாதிக்கவும் 4

உங்கள் கருத்தைப் பகிருங்கள்