அத்தியாயம் 24
அலங்காரப் பொருட்களை முடித்துவிட்டு, அவர்கள் அடுத்து நுழைந்தது பொற்பனை மாநகரின் பரபரப்பான அறுவை வீதி. இது தைக்கப்படாத துணிகள் விற்கப்படும் இடம். அங்கிருந்து ஒரு குறுகிய சந்தின் வழியாகத் திரும்பினால் தானியங்கள் விற்கும் கூல வீதியும், காருகர் வீதி எனப்படும் நெசவாளர்கள் நேரடியாகத் துணிகளை விற்கும் வீதி வரும். வீதியின் இருபுறமும் தறிகளின் ஓசை தாளலயமாகக் கேட்டுக் கொண்டிருந்தது. காற்றில் பருத்தியின் மெல்லிய துகள்களும், சாயமேற்றப்பட்ட துணிகளின் வாசனையும் கலந்திருந்தன.
ஆதிரை ஒரு பெரிய அங்காடியின் முன்னே நின்றாள். அங்கு உறையூர் மற்றும் மதுரைப் பகுதிகளில் இருந்து வந்த மெல்லிய துகில்கள் குவியல்களாக இருந்தன. “மங்கை, இதோ பார்… இந்தத் துகில்கள் பாம்பின் உரித்த தோல் போல எவ்வளவு மென்மையாக இருக்கின்றன!” என்று ஒரு வெண்துகிலை ஆதிரை தொட்டுப் பார்த்தாள்.
கடைக்காரர் அவர்களின் வரவை எதிர்நோக்கி, “அம்மையே, இது அவிர்நூல் கலிங்கம். புகழ்பெற்ற நெசவாளர்களால் நிலவொளி போல நெய்யப்பட்டது. இதன் மென்மை உங்கள் கைவிரல்களுக்கே தெரியுமே!” என்று அந்தத் துணியைப் பிரித்துக் காட்டினார்.
ஆதிரை அந்தத் துணியைத் தொட்டுப் பார்த்தபோது, அதன் குளிர்ச்சி அவளது கைவிரல்களை வருடிச் சென்றது. அங்காடியில் அவிர்நூல் கலிங்கம் மட்டுமல்லாது, பல்வேறு நிலப்பகுதிகளிலிருந்து வந்த அபூர்வமான துணி வகைகளும் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.
கடைக்காரர் அவளது ஆர்வத்தைக் கண்டு, பக்கத்திலிருந்த ஒரு பெட்டியிலிருந்து அடர் நீல நிறத்தில் ஒரு துணியை எடுத்தார். “அம்மையே, இது நீலக் கச்சை. கரும்பாம்பின் தோல் உரித்தது போன்ற மென்மை கொண்டது. இதனை மணக்கும் அகில் புகையில் வாட்டி எடுத்திருக்கிறோம். உயர்குடிப் பெண்கள் இதனை மேலாடையாக அணிவது இப்போது பெருவழக்காகிவிட்டது…” என்று அதன் சிறப்பை விவரித்தார்.
ஆதிரை அதன் இழைகளை உற்று நோக்கினாள். “வணிகரே, இது காண்பதற்கு அழகாக இருக்கிறது. ஆனால், பாம்புரியன்ன அறுவை (பாம்பின் தோல் போன்ற மெல்லிய துணி) போன்ற மிக மெல்லிய ஆடை உங்களிடம் உள்ளதா? விழாக் காலங்களில் உடுத்த அதுவே ஏற்றது…” என்று தன் தேடலை வெளிப்படுத்தினாள்.
“ஏன் இல்லை?” என்று உற்சாகமான வணிகர், ஒரு மூங்கிலால் ஆன தட்டில் மடிக்கப்பட்டிருந்த வெண்மையான துணியை எடுத்து வைத்தார். “இது ஆவி அன்ன அவிர்நூல் துகில். நெருப்பில் இட்டால் கூடக் கருகாத வலிமையும், அதே சமயம் காற்றில் வீசினால் ஆவியைப் போலப் பறக்கும் மென்மையும் கொண்டது. நுணுக்கமான நெசவு…” என்றார்.
மங்கை வியப்புடன் அந்தத் துணியைத் தடவிப் பார்த்தாள். “ஆதிரை, இதோ பார்! இந்தத் துணியின் விளிம்புகளில் சிறிய மீன் சின்னங்கள் பொன்னூலால் நெய்யப்பட்டுள்ளன. இது பாண்டிய நாட்டு நெசவாளர்களின் கைவண்ணம் அல்லவா? இதை நீ உடுத்தினால், நீலக் கடலில் மிதக்கும் வெண்மேகம் போல இருப்பாய்…” என்று வற்புறுத்தினாள்.
“உண்மைதான் மங்கை, ஆனால் பாண்டிய நாட்டுத் துகில்களை விட, நம் சேர நாட்டின் துகில்கள் அடர்த்தியான கரைகளைக் கொண்டவை. அவை மேகலை போன்ற கனமான ஆபரணங்களைத் தாங்கும் வலிமை கொண்டவை. வணிகரே, இந்த ஆவி போன்ற மெல்லிய ஆடையோடு, மேகலை அணிவதற்கு ஏதுவாகச் சற்றுத் தடித்த கரையுடைய பட்டுடை ஒன்றையும் காட்டுங்கள்…” என்று ஆதிரை தன் தேவையைத் துல்லியமாகச் சொன்னாள், பின் மங்கை புறம் திரும்பி, “உனக்கு இது பிடித்திருந்தால் அதை எடுத்துக் கொள் மங்கை…” என்று கூற, அவளும் ஆர்வமாக பார்த்துக் கொண்டிருந்தாள்.
பெண்களுக்கு துகிலென்றால் கசக்கவா செய்யும்?
அவர் அடுத்துக் காட்டியது செந்நிறப் பட்டு. அது செம்பஞ்சுக் குழம்பில் தோய்த்து எடுக்கப்பட்டது போலக் கனல் வீசியது. “இது குருதி நிறக் கலிங்கம். வீரமிக்க குலத்துப் பெண்களுக்கு இதுவே கம்பீரத்தைத் தரும். இதை இடுப்பில் சுற்றி, முன்பக்கத்தில் மடிப்புகள் வைத்துச் செருகினால், அதன் ஒய்யாரமே தனி…” என்றார் வணிகர்.
மங்கைக்கும் ஆதிரைக்குமிடையே அந்தத் துணிகள் குறித்த விவாதம் நீண்டது. “ஆதிரை, இதை எப்படி உடுத்தப் போகிறாய்? மேலாடையை இடது தோளில் சரிப்பாயா அல்லது இரு தோள்களையும் மறைத்து மார்புக் கச்சையின் மேல் போர்த்திக் கொள்வாயா?” என்று மங்கை குறும்பாகக் கேட்டாள்.
அதற்கு ஆதிரை, “மடந்தை பருவத்தில் இருக்கும் நமக்கு, இடது தோளில் மேலாடையைச் சரித்து விடுவதே மரபு மங்கை. அப்போதுதான் நாம் அணியும் தோள்வளைகளும், மகர குழைகளும் எடுப்பாகத் தெரியும். மேகலையைத் துகிலுக்கு மேலே இறுக்கிக் கட்டினால், அது மடிப்புகளைச் சிதையாமல் காக்கும்…” என்று ஆதிரை ஒரு கலை நுணுக்கத்தோடு விளக்கினாள்.
மங்கை ஒரு நீல நிறத் துணியை எடுத்து ஆதிரையின் தோளில் வைத்துப் பார்த்தாள். “ஆதிரை, உனக்கு இந்த நீல நிறம் அந்த நீலக் குவளை மலர்களுக்கு இணையாக இருக்கும். ஆனால், இந்தத் துணியின் அகலம் சற்று குறைவாகத் தெரியவில்லையா?” என்று மங்கை ஐயத்தை எழுப்பினாள்.
அதற்கு அந்த வணிகர், “இல்லை பெண்ணே, இது அறுவை. இதன் அகலம் நிலையானது. இதை நீங்கள் இடுப்பில் மூன்று சுற்றுகள் சுற்றி, முன்பக்கத்தில் நேர்த்தியான மடிப்புகள் வைத்துச் செருக வேண்டும். அப்படிச் செய்யும்போதுதான் அதன் பொலிவு கூடும்” என்று விளக்கமளித்தார்.
ஆதிரை அந்தத் துணியின் இழைநயத்தைப் பரிசோதித்தாள். “வணிகரே, இது பருத்தித் துணிதான், ஆனால் பட்டுப் போன்ற மெருகு இருக்கிறதே? இதில் சேர்த்துள்ள சாயம் துவைத்தால் போகாது அல்லவா?” என்று அவள் வணிகக் கூர்மையுடன் கேட்டாள்.
“இது நீலச் சாயத்தில் பலமுறை நனைத்து எடுக்கப்பட்டது. இதன் மெருகு குலையாது” என்று அவர் உறுதியளித்ததைக் கேட்டு, ஆதிரை தனக்கும் மங்கைக்கும் அந்த மெல்லிய ஆவி அன்ன துகிலையும், அடர் நீலக் கச்சையையும், செந்நிறப் பட்டையும் தேர்ந்தெடுத்தாள். அந்தத் துணிகளின் வாசனையே அள்ளியது.
அடுத்து அவர்கள் சென்றது துன்னக்காரர்கள் எனப்படும் தையல்காரர்கள் இருக்கும் பகுதிக்கு. ஆடைகள் பெரும்பாலும் தைக்கப்படாதவை என்றாலும், பெண்களின் மார்பை மறைக்கும் கச்சை மற்றும் மேலாடைகள் தைக்கப்பட்டே பயன்படுத்தப்பட்டன.
ஒரு முதிய தையல் கலைஞரின் கடைக்குள் நுழைந்தனர். அவர் மெல்லிய ஊசியையும் நூலையும் கொண்டு ஒரு பட்டுத் துணியின் ஓரங்களைத் தார்ச்சியாகத் தைத்துக் கொண்டிருந்தார். ஆதிரை தான் வாங்கிய செந்நிறப் பட்டுத் துணியை அவரிடம் நீட்டினாள்.
“பெரியவரே, எங்களுக்கு கச்சை தைக்க வேண்டும். அது எம் மேனிக்குக் கச்சிதமாகப் பொருந்த வேண்டும். இதன் ஓரங்களில் பொன் நூலால் சிறு வேலைப்பாடுகள் செய்ய முடியுமா?” என்று கேட்டாள்.
அந்தப் பெரியவர் அவளை ஏறிட்டுப் பார்த்தார். “மங்கையரே, உங்கள் அளவுக்கு ஏற்ப மார்புக் கச்சை தைப்பது எம் கைக்கு மிக எளிய வேலை. ஆனால், பொன் நூல் வேலைப்பாடு செய்ய இன்னும் இரண்டு நாட்கள் ஆகுமே?” என்றார்.
மங்கை இடைமறித்து, “ஐயா, இந்திர விழா இன்னும் ஏழு நாட்களில் தொடங்குகிறது. அதற்குள் இந்த மேலாடையையும், கச்சையையும் முடித்துக் கொடுக்க வேண்டும். கச்சையின் பின்புறம் இறுக்கிக் கட்டிக் கொள்ள வசதியாக மெல்லிய சரடுகளையும் சேர்த்துத் தைத்து விடுங்கள்” என்று அறிவுறுத்தினாள்.
“கவலைப்படாதீர்கள் பெண்ணே. பெண்ணின் அழகையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதுதான் இந்தக் கச்சையின் வேலை.” என்று அந்தத் தையல்காரர் நம்பிக்கையுடன் சொன்னார்.
ஆதிரை அவரிடம் அளவுகளைக் கொடுத்துவிட்டு வெளியே வந்தாள். வீதி மணலில் நடந்து கொண்டிருந்தபோது மங்கை அவளிடம் கேட்டாள், “ஆதிரை, நீ இத்தனை அழகான ஆடைகளைத் தேர்ந்தெடுக்கிறாய்… இது யாருக்காக? பெருஞ்சேரலுக்காகவா?” மங்கை கிண்டலாக சிரித்தாள்.
ஆதிரை மெலிதாகச் சிரித்தாள். “மங்கை, ஆடையும் அலங்காரமும் பெண்ணின் தற்காப்பு அரண்கள் போன்றது. நான் எனக்காகவே அலங்கரித்துக் கொள்கிறேன். காதலுக்கும் இதற்கும் தொடர்பில்லை.” என்றாள்.
பேசிக் கொண்டே அவர்கள் பூங்காடியைக் கடந்தபோது, காற்றில் ஒரு திடீர் மாற்றம் தெரிந்தது. குதிரைகளின் குளம்பொலி தூரத்தில் கேட்டது. அது சாதாரண வணிகக் குதிரைகள் அல்ல, போர்க்குதிரைகளின் வேகம் கொண்டது என்பதை ஆதிரை உணர்ந்தாள். அவள் சட்டெனத் திரும்பிப் பார்த்தாள்.
அங்கே பெருஞ்சேரல், தன் அதிகாரமும் ஏக்கமும் கலந்த பார்வையுடன் அவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தான், மாறுவேடத்தில், உடன் மாறன்!
குதிரைகளின் குளம்பொலி அடங்கிய அந்த நிழல் படர்ந்த சோலையின் நுழைவாயிலில், பெருஞ்சேரல் தன் கரிய குதிரையிலிருந்து இறங்கினான். மாறன் பின்னே நிற்க, சேரல் தன் மேலாடையைச் சரிசெய்து கொண்டு ஆதிரையின் முன் வந்து நின்றான்.
“மடந்தை பருவத்தின் எல்லையில் நிற்கும் மங்கை, இத்தனைப் புனைவுகளுடன் (அலங்காரம்) எங்கே உலா வருகிறாள்?” என்று சேரல் தன் இதழோரம் ஒரு குறும்புடன் வினவினான். மூன்று வருடங்களாக அவனும் தான் ஏதேதோ செய்து பார்க்கிறான். எதுவும் படிந்தபாடில்லையே!
ஆதிரை அவனை ஏறிட்டுப் பார்க்கவில்லை. “புனைவுகள் என்பது அகத்தின் நிறைவிற்கே என்று யான் ஏற்கனவே மங்கையிடம் கூறினேன். அரசர்கள் அங்காடி வீதியில் அலைவதைக் காட்டிலும், அறக்கோட்டங்களில் இருப்பதே சிறந்தது…” என்று கணீர் என்று பதிலளித்தாள்.
சேரல் சிரித்தான். மங்கையும் மாறனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு மெல்லப் பின்வாங்க, ஆதிரையும் சேரலும் அந்த அடர்ந்த சோலைக்குள் நுழைந்தனர்.
“ஆதிரை, உன் சொற்களில் இருப்பது கல்வியின் முதிர்ச்சியா அல்லது எம் மீதான வெறுப்பா?” என்று கேட்டபடி அவளுக்கு இணையாக நடந்தான்.
ஆதிரை நிதானமாகத் தொடர்ந்தாள். “வெறுப்பு என்பது ஒரு உணர்வு. எனக்கு உம்மிடம் அப்படி எதுவும் இல்லை. சமணப் பள்ளியில் யான் பயின்றது புலனடக்கம் மட்டுமே.”
“சமணப் பள்ளி… அதைப்பற்றி யான் அறிய விழைகிறேன். எந்த வயதில் அங்குப் புகுந்தாய்?” என்று சேரல் ஆழமாக அவளை நோக்கினான். அவளது மனதில் என்னதான் இருக்கிறது என்று தெரிந்து கொள்ள வேண்டியே அவன் கேட்டது.
“ஏழு வயதுப் பேதையாக இருந்தபோதே தந்தை என்னைச் சமணப் பள்ளியில் சேர்த்தார். அங்கு மொழியறிவு, எண்சுவடி (கணக்கு), மற்றும் நாலடி அறங்களைப் பயின்றேன். புலால் மறுத்தலும், உயிர்களிடத்தில் அன்பும், வணிகத்தில் நேர்மையும் அங்குத்தான் எம் வேர்களாகின. ஆசைகளே துன்பத்திற்குக் காரணம் என்பதையும் அங்கு பயின்றேன்…” என்றாள் ஆதிரை.
சேரல் அவளை வழிமறித்து நின்றான். “ஆசைகளே துன்பம் என்றால், இந்த நிலவுலகின் இயக்கமே நின்றுவிடுமே? ஆதிரை, உன் தந்தையின் அங்காடியில் இல்லாத அரிய அணிகலன் எம் அரண்மனையில் உள்ளது. அது உன்னை அலங்கரிக்கக் காத்திருக்கிறது. நீ ஏன் இன்னும் பிடிவாதம் பிடிக்கிறாய்?”
“அரசே, தங்கம் சுமப்பது அழகல்ல; சுதந்திரமாகப் பறப்பதே அழகு. எம் சமணக் கல்வி எனக்குச் சுயமாகச் சிந்திக்கக் கற்றுத் தந்தது. ஒரு வணிகத் தலைவியாக யான் பெறும் மனநிறைவை, ஒரு அரசியாக அந்தப்புரத்தில் நான் பெற முடியாது.” என்று சற்றே நிறுத்தி மௌனமானவள்,
“ஐந்து வயதுச் சிறுமியாக நான் நுழைந்தபோது, இவ்வுலகில் யாவும் நிலையில்லாதவை என்ற தத்துவமே எனக்கு முதல் பாடமானது. கனிவான சொற்கள், உயிர்களிடத்தில் அன்பு, மற்றும் எச் சூழலிலும் கலங்காத மன உறுதி… இவற்றைத்தான் எம் குருநாதர் எனக்குப் புகட்டினார். அங்கே அரச போதனைகள் இல்லை, அறப் போதனைகளே இருந்தன.”
“ஏன் உனக்கு போர்கலைகள் கற்றுத்தரப்படவிலை? உன்னைப் போன்ற ஒரு வீரமிக்க பெண்ணிற்கு அதுவல்லவா தற்காப்பு?” என்று சேரல் வியப்புடன் கேட்டான்.
“தற்காப்பு என்பது ஆயுதங்களில் இல்லை வேந்தே, அது ஒருவரின் ஆளுமையில் இருக்கிறது. கொல்லாமை என்ற பேரறத்தைப் பயின்ற எனக்கு, வாள் என்பது வெறும் இரும்புத் துண்டுதான். சினம் தணிப்பதே பெரும் போர் என்பதை அங்கு உணர்ந்தேன்…” என்றாள் ஆதிரை உறுதியுடன்.
“சரி என்ன செய்தால் நீ என்னிடம் வருவாய்? அதை சொல் தேவீ…” பழைய காதலனாக, அவன் கேட்ட கேள்வி அவளை உண்மையிலேயே உருக்கியது.
“எனது வேண்டுகோள் எல்லாம் ஒன்று தான் வேந்தே… அதை உம்மிடம் யாண்டுகளுக்கு முன்பே கூறியுள்ளேன்…” என்று கூறியவளை கோபமாக பார்த்தான் சேரல்!
“கல்நெஞ்சக்காரியடி நீ…” என்றவனை புன்னகையோடு பார்த்தாள் ஆதிரை!
அந்த புன்னகை முகத்தை பார்த்தவனுக்கு, பெருஞ்சேரலின் பொறுமை கானல் நீராய் மறைந்தது. ஒரு சாம்ராஜ்யத்தையே தன் ஒற்றை விரல் அசைவில் ஆட்டிப்படைக்கும் அந்தப் பேரரசன், ஒரு வணிக மகளின் புன்னகைக்கு முன்னால் மண்டியிட்டுக் கிடப்பதை அவனது மறப்பண்பு ஏற்க மறுத்தது. அவளது மறுப்பும், அந்தப் புன்னகையும் அவனது இரத்தத்தில் ஒருவிதக் கிளர்ச்சியை ஏற்படுத்தின.
அடுத்த நொடி, ஆதிரை சற்றும் எதிர்பாராத விதமாக அவளது மென்மையான மணிக்கட்டைத் தன் வலிமையான கரத்தால் பற்றினான் சேரல். அவனது விரல்களில் இருந்த அந்த வீரனுக்குரிய வன்மை அவளை நிலைகுலையச் செய்தது.
சுற்றிலும் பார்த்தவள், “வேந்தே… என்ன செய்கிறீர்கள்? கையை விடுங்கள்!” என்று அவள் பதறினாள்.
கேட்பானா அவன். கேட்கும் நிலையிலும் இல்லையே. எத்தனை நாள் தான் உப்பு சப்பில்லாத காரணங்களை கூறி மறுத்துக் கொண்டிருப்பாள். அவளை வற்புறுத்தி அங்கிருந்த ஒரு பெரிய கற்தூணின் மறைவிற்கு இழுத்துச் சென்றான். அங்கே படர்ந்திருந்த புன்னை மரத்தின் நிழலும், தூணின் இருட்டும் வெளிச்சத்தை ஊடுருவ விடாமல் தடுத்திருந்தன. அந்த மறைவிடத்தில், அவளைத் தூணோடு சேர்த்து அணைத்தாற்போலத் தன் இரு கரங்களையும் தூணின் மீது ஊன்றி, அவளது வழியை மறித்து நின்றான்.
ஆதிரையின் இதயம் போர்க்களத்து முரசினைப் போலத் துடித்தது. அவனது அகன்ற மார்பு அவளுக்கு மிக அருகில் இருந்தது. அவனது மேனியிலிருந்து வீசிய அந்தச் சந்தன வாசனையும், ஆண் வாசனையும் அவளது நிதானத்தைச் சிதைத்தன. அவள் தப்பிக்க முயன்று இடப்பக்கம் திரும்ப, அவன் தன் தோளால் அவளைத் தடுத்தான்.
“வாளால் ஒரு நாட்டை வெல்வதை விட, உன் ஒருத்தியின் அன்பைப் பெறுவது கடினமாக இருக்கிறதே ஆதிரை! என் வீரம் உனக்குப் பிழை, ஆனால் காதலில் வன்மை தான் உனக்கு பிடித்திருக்கிறதா?” என்று அவளது விழிகளை நேராக நோக்கி, மிகத் தாழ்ந்த ஆனால் ஆழமானக் குரலில் கேட்டான்.
அவனது மூச்சுக் காற்று அவளது நெற்றியில் பட்டபோது ஆதிரை கண்கள் செருகத் தலைகுனிந்தாள். அவளது மேலாடையான அந்த மெல்லிய ஈர்ணி விலகி அவளது வெற்றுத் தோள்களைக் காட்ட, சேரலின் கண்கள் ஒரு கணம் நிலைதவறின. அவனது நெஞ்சம் தவற துடித்தது. அவளை தன்னவளாக்கிக் கொள்ள தவித்தது. அவன் மெல்லத் தன் விரல்களால் அவளது முகவாயைத் தூக்கி, தன் பக்கம் திருப்பினான்.
“நீ வெறும் வணிக மகள் அல்ல ஆதிரை… நீ என் உயிரின் பாதியைச் சுமந்து நிற்கும் பேரரசி. உன் மௌனம் என்னை கொல்கிறது.” என்று உருக்கமாகக் கூறி, சட்டென்று குனிந்து அவளது கன்னத்தில் ஒரு அழுத்தமான முத்தத்தைப் பதித்தான்.
அது வெறும் முத்தமல்ல; ஒரு பேரரசனின் உரிமைக் கோரல். ஆதிரை ஒரு கணம் அப்படியே உறைந்து போனாள். அவளது உடலுக்குள் ஒரு மின்சாரம் பாய்ந்து மறைந்தது. அடுத்த நொடி, சுதாரித்துக் கொண்டவள் தன் முழு பலத்தையும் திரட்டி அவனைப் பின்னுக்குத் தள்ள முயன்றாள். அவளால் முடியவில்லை.
இதுவொரு பொது இடமென்பதும், இவன் தான் மாறு வேடமிட்டிருக்கிறான், தன்னை யாவரும் அறிவார்கள் என்ற எண்ணமே அவளுக்குள் நடுக்கத்தை ஏற்படுத்தின. அதோடு அவளுக்காக காத்திருக்கும் அவளது மணித் தேர். அதை அடையாளம் அறியாதவர் யாரேனும் உளறா?
“வேந்தே இதென்ன பித்து? அங்காடி வீதியில் எம் தந்தை ஏவிய காவலர்கள் சூழ நின்றிருக்க, நீர் எம்மை இச்சிறு மறைவினில் சிறைப்படுத்துவது முறையோ? எம் மணித் தேர் காத்திருக்கிறது! கையை விடுங்கள்!” என்று அவள் படபடப்புடன் கிசுகிசுத்தாள்.
அவளது நடுக்கம் அவனது கைகளில் அதிர்வுகளாய் இறங்கியது. ஆனால் பெருஞ்சேரல் அவளை விடுவிக்கவில்லை. மாறாக, அவளது காதோரம் குனிந்து, “உலகமே திரண்டு வந்து பார்த்தாலும் எனக்குக் கவலையில்லை ஆதிரை. ஒருவன் தன் காதலியைச் சிறைப்பிடிப்பதா குற்றம்?” என்றான் பிடிவாதமாக.
அவனது அருகாமை அவளைத் தத்தளிக்கச் செய்தது. அவனது மார்பின் வெப்பம் அவளது மேலாடையைத் தாண்டி அவளுள் ஊடுருவியது. தப்பித்து ஓட வேண்டும் என்ற மூளை விடுத்த கட்டளையை, அவனது இதழ்கள் பதித்த அந்த ஒரு முத்தத்தின் ஈர்ப்பு முறியடித்துக் கொண்டிருந்தது. அவனது கரம் அவளது மணிக்கட்டைச் சுற்றி ஒரு விலங்கினைப் போல இறுக்கமாக இருந்தாலும், அதில் ஒரு பாதுகாப்பான உணர்வு இருப்பதை அவளது உள்மனம் ரகசியமாக ரசித்தது.
“வேந்தே! இதுவா உம் வீரம்? ஒரு பெண்ணின் விருப்பமின்றி அவளை வலுக்கட்டாயமாகப் பற்றுவதுதான் ஒரு மறவனுக்கு…” என்று சிவந்த முகத்தோடு கேட்டுக் கொண்டிருக்கும் போதே, அவளது முகத்தை பற்றியவன், சிவந்த அந்த இதழ்களை கொய்தான்.
தடுமாறினாள் பேதை. அவனை தள்ளவும் முடியவில்லை, தள்ளாமல் இருக்கவும் முடியவில்லை.
கொய்தவன், மென்று சுவைத்து உண்ணவாரம்பித்து இருந்தான். பித்தம் தலைக்கேறி, சித்தம் தடுமாறி, குருதி சூடேறி அவளை விழுங்கிவிட துணிந்தான்.
இறுக்கமாக இடையை பற்றி தன்னோடு சேர்த்து அணைத்தவன், “மூன்று யாண்டுகள் தேவீ… இன்னும் எத்தனை நாட்கள் எம்மை நீ காக்க வைப்பாய்?” என்று கேட்டவன், “என்னிடம் வந்துவிடு தேவீ…” காதல் தீ பற்றி எரிய, அவன் வைத்த வேண்டுகோள் அவளை சுட்டது.
அவனது வன்மையான காதலை அவளால் தாள முடியவில்லை. கண்களில் நீர் திரை!
“தயவு செய்து தீண்டாதீர்கள்…” சீற்றமாக அவள் கூற, பெருஞ்சேரல் ஒரு கணம் திகைத்து நின்றான். அவளது சொற்கள் அவனது அகந்தையைச் சுட்டாலும், அவளது அந்த கோபமே அவனுக்கு இன்னும் அழகாகத் தெரிந்தது.
“உமது பிடிவாதம் ஒரு பெரும் தேயத்தையே அடிபணிய வைக்கலாம் வேந்தே, ஆனால் ஓர் அபேதகப் பெண்ணின் உள்ளத்தை அல்ல. எம்மை விடுவியுங்கள்…!” என்று அவள் புறத்தே காட்டிய சீற்றத்துடன் அவனை ஏறிட்டாள்.
அவளது விழிகளில் கசிந்த அந்த நீர்மமை, அவளது நெஞ்சின் நடுக்கத்தைப் பறைசாற்றியது. பெருஞ்சேரல் அவளது அந்தத் தடுமாற்றத்தைக் கண்டு மெல்ல முறுவலித்தான். அந்த முறுவலில் ஒரு தலைவனுக்கே உரிய வெற்றிக் களிப்பும், கரைகாணாதக் காதலும் இழையோடின. அவன் மெல்ல அவளது மணிக்கட்டைச் சுற்றியிருந்த தன் பிடியைத் தளர்த்தினான்.
“போ ஆதிரை… உன் மணித் தேர் உனக்காகக் காத்திருக்கிறது. ஆனால் ஒன்று நினைவிருக்கட்டும், நீ எங்கே சென்றாலும், நான் பதித்த இந்த முத்திரையை உன்னால் அழிக்க முடியாது!” என்றான் கம்பீரமாக, கள்ளச்சிரிப்போடு!
அந்திச் சோலையின் ஈரம் கசிந்த மணலில், ஆதிரையும் சேரலும் சொல்லம்புகளால் மோதிக்கொண்டிருக்க, இங்கே மாறன் தன் இதயத்தின் பாரத்தை மங்கையிடம் இறக்கி வைத்தான்.
“மங்கை, உன் தோழி பேசும் அந்தத் தத்துவப் பேச்சுகள் எம் காதுகளில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றுவது போல இருக்கிறது. நம் அரசர் எப்படியாவது அவளைச் சமாதானப்படுத்தி விடுவார் என்று பார்த்தால், விவாதம் அல்லவா முற்றிப் போகிறது! இப்படியே போனால் என்று நாம் மணநாள் காண்பது?” என்று மாறன் தன் தாடியைத் தடவியபடி பெருமூச்சு விட்டான்.
மங்கை மெல்லச் சிரித்துக்கொண்டே, “உங்கள் அரசருக்கு வீரம் உண்டு, ஆனால் பெண்ணின் உள்ளத்தைக் கவரும் விவேகம் தெரியவில்லை. ஆதிரையை வாதத்தால் வெல்ல முடியாது, அன்பால் மட்டுமே மென்மையாக்க முடியும்…” என்றாள்.
மாறன் அவளை நெருங்கி நின்று, “நம் காதல் தொடங்கி மூன்றாண்டு நிறைவடையப் போகிறது மங்கை. பெருஞ்சேரல் ஆதிரையின் பின்னால் அலைகிறான், நான் உன் பின்னால் அலைகிறேன். தலைவனும் தலைவியும் ஒரு கரையைச் சேராமல் இழுபறியாய் இருப்பதால், நம் காதலும் அந்தரத்தில் அலைப்புறுவதைக் காண உனக்குத் துயராக இல்லையா? எம் வீரக் கழல்கள் கூட உன் சிலம்பு ஒலியைக் கேட்கவே ஏங்குகின்றன…” என்று தன் ஏக்கத்தை வெளிப்படுத்தினான்.
பேசி முடித்தவன், மெல்ல அவளை நெருங்கி நின்றான். மாறனின் மேனியில் படிந்திருந்த கானகத்து வாசமும், வீரர்களுக்குரிய அந்தச் சந்தன மணமும் மங்கையின் நாசியைத் துளைத்தன. அவன் ஒரு போர் வீரன்; அவனது கைகள் போர்க்களத்தில் வாளேந்தி கரடுதட்டியிருந்தன. ஆனால், இப்போது அவன் மங்கையின் மெல்லியக் கரத்தைப் பற்றியபோது, அந்த விரல்களில் ஒரு பூவின் மென்மை கூடியிருந்தது.
மங்கை சற்றே திடுக்கிட்டுப் பின்வாங்க முயல, மாறன் அவளது பிடியை விடவில்லை. அவனது விழிகளில் தெரிந்த அந்தத் தீவிரம், மங்கையின் நெஞ்சுக்குள் ஒரு இனம்புரியாத நடுக்கத்தை ஏற்படுத்தியது. அவள் நாணத்தால் தலைகுனிய, அவளது கூந்தலில் சூடியிருந்த பிச்சிப் பூக்கள் மெல்ல உதிர்ந்து மாறனின் தோள்களில் விழுந்தன.
“மங்கை… பகைவனின் அம்புகளுக்கு அஞ்சாத இந்த மாறன், உன் விழி முனையில் திகைத்து நிற்கிறான். போர்க்களத்தில் சிந்தும் குருதியை விட, உன் மௌனம் என் நெஞ்சை அதிகமாகக் காயப்படுத்துகிறது. இதோ… இந்தக் கைகள் உன் கரங்களைப் பற்றவே ஒவ்வொரு போரிலும் உயிர் தப்பி வருகின்றன…” என்று குனிந்து அவளது செவிகளுக்கு அருகில் கிசுகிசுத்தான்.
அவனது மூச்சுக் காற்று அவளது கன்னங்களில் பட்டபோது, மங்கையின் பிடிவாதம் ஒரு கணம் உருகி வழிந்தது. அவள் மெல்ல நிமிர்ந்து அவனது விழிகளை நோக்கினாள். அந்தப் பார்வையில் அதிகாரமில்லை, மாறாக ஒரு பெரும் அர்ப்பணிப்பு இருந்தது.
மங்கை பதில் சொல்லத் தொடங்கும் முன், மாறன் சட்டென்று அவளது இடைப்பற்றிக் கவர்ந்து இழுத்தான். எதிர்பாராத இந்த நெருக்கத்தால் மங்கை திகைத்து அவனது மார்போடு சாய்ந்தாள். அவனது இதயத் துடிப்பு ஒரு போர் முரசின் வேகத்தில் அவளது மேனியில் அதிர்ந்தது. சுற்றிலும் யாராவது இருக்கிறார்களா என்று அவள் கண்கள் சுழல, மாறன் அவளது கன்னத்தைச் மென்மையாகத் திருப்பி, அவளது இதழ்களில் ஒரு அழுத்தமான முத்தத்தைப் பதித்தான்.
அந்த ஒரு கணம், அங்காடி வீதியின் இரைச்சலும், ஆதிரையின் பிடிவாதமும், உலகத்தின் சூழ்ச்சிகளும் மறைந்து போயின. மங்கையின் இதழ்கள் முதலில் மறுத்துத் துடித்தாலும், அடுத்த நொடி மாறனின் தாகத்திற்குப் பலியாகின. அவளது கைகள் அவனது அகன்றத் தோள்களைத் தழுவிக் கொண்டன. அந்தச் சோலையின் காற்றில் பிச்சிப் பூக்களின் வாசம் இன்னும் அடர்த்தியானது.
சற்று நேரம் கழித்து, மூச்சிரைக்க மங்கை அவனை விட்டு விலகினாள். அவளது முகம் இப்போது செந்தாமரையாய் சிவந்திருந்தது. கலைந்திருந்த தன் மேலாடையைச் சரி செய்துகொண்டே, நாணத்தால் கண்கள் தாழ அவனைப் பார்த்தாள்.
“ஏன் இத்தனை அவசரம்?” என்று அவள் கேட்டபோது, அவளது குரலில் இருந்த அந்த மென்மை மாறனை இன்னும் உருக்கமாக்கியது.
“அவசரம் இல்லை மங்கை, இது ஓர் ஆவல். உனது சிலம்பு கழி நோன்பு எப்போது நடக்கும் என்று எம் கண்கள் பூக்கக் காத்திருக்கிறேன். உன் கால்களில் சிறுவயதில் அணிவிக்கப்பட்ட அந்தச் சிலம்புகளைக் கழற்றிவிட்டு, மணமகனாக நான் தரும் புதிய சிலம்புகளை நீ அணியும் அந்தத் தருணத்திற்காகத் தான் நான் போர்க்களங்களிலும் உயிர் பிழைத்து வருகிறேன். அந்தச் சடங்கு நடந்தால் தானே நீ எம் இல்லத்து அரசியாவாய்?”
மங்கை ஒரு கணம் அமைதியானாள். மாறனின் கைகளில் இருந்த அந்தச் சூடு, அவள் தன் பிறந்த வீட்டின் பாதுகாப்பைத் தாண்டி அவனது புகுந்த வீட்டிற்குச் செல்ல வேண்டிய அவசியத்தை அவளுக்குள் மெல்ல உணர்த்தியது. இருப்பினும், ஆதிரையின் நினைவு வந்ததும் அவள் தன் நெஞ்சை மீண்டும் உறுதிப்படுத்திக் கொண்டாள். அவனது கரங்களில் இருந்து மெல்லத் தன் கையை விடுவித்துக் கொண்டு, சற்றுத் தள்ளி நின்றாள்.
“மாறா, சிலம்பு கழி நோன்பு என்பது வெறும் சடங்கல்ல. அது எம் தோழி ஆதிரையின் சம்மதத்தோடு நிகழ வேண்டிய ஒன்று. அவள் எப்போது அந்த நோன்பை அணைக்கிறாளோ, அன்றுதான் எனக்கும் அந்நோன்பு நிகழும். அவளை விட்டுவிட்டு நான் மட்டும் எப்படி மணப்பந்தலுக்கு வர முடியும்?” என்று மங்கை தன் தோழமையின் உறுதியைச் சொன்னாள்.
“இதென்ன முறைமை மங்கை? ஆதிரை சமணப் பள்ளியில் கற்ற துறவு பாடத்தை உன் மீதும் திணித்துக் கொள்ள போகிறாயா? அவள் எப்போது மணம் முடிப்பாள் என்று யாருக்குத் தெரியும்? அதுவரை நம் காதல் இப்படிச் சோலைகளிலும் அங்காடி வீதிகளிலும் மறைந்துதான் வாழ வேண்டுமா? உன் தந்தை உனக்குச் சிலம்பு கழி நோன்பு நடத்தத் தயாராக இருந்தாலும், நீ ஆதிரைக்காக மறுக்கிறாய். இது எனக்கும் நம் அரசருக்கும் செய்யும் அநீதி அல்லவா?” என்று மாறன் சலிப்புடன் புலம்பினான்.
மங்கை குறும்புடன் அவனைப் பார்த்து, “அப்படியென்றால் உங்கள் அரசரிடம் சொல்லுங்கள், ஆதிரையின் பிடிவாதத்தை உடைக்க வழி தேடச் சொல்லுங்கள். அவள் கழுத்தில் மங்கல அணியை எப்போது சுமக்கிறாளோ அதே நொடியில், எம் கால்களில் இருக்கும் கன்னிச் சிலம்புகள் கழற்றப்படும். அதுவரை பொறுமை காப்பதே ஒரு மறவனுக்கு அழகு!” என்றாள்.
மாறன் வானத்தைப் பார்த்துப் பெருமூச்சு விட்டான். “அருகன் அருளால் ஆதிரை சீக்கிரம் மனம் மாற வேண்டும். இல்லையெனில், இந்த இந்திர விழா முடியும் முன் எம் பொறுமை முடிந்துவிடும் போலிருக்கிறது. நம் காதல் அந்தரத்தில் அலைவதை நிறுத்தி, இல்லறத்து நங்கூரம் பாய்ச்சும் நாள் வெகுதொலைவில் இல்லை என்றே நம்புகிறேன்…” என்றான்.
அவன் பேசி முடிக்கும் முன்பே, புதர்களுக்குப் பின்னால் இருந்த நிழல்கள் அசையத் தொடங்கின. மாறனின் காதலும் கவலையும் ஒரு நொடியில் மறைந்து, ஒரு போர் வீரனின் கூர்மை அவன் உடலில் மின்னலாகப் பாய்ந்தது.
பேசிக்கொண்டே ஆதிரையும் பெருஞ்சேரலும் சோலையின் ஒரு நீர்ச்சுனை அருகே வந்தனர். அமைதியான அந்தச் சூழலில், சட்டென ஒரு மரக்கிளை ஒடியும் சத்தம் கேட்டது. சேரலின் கரம் அனிச்சையாகத் தன் இடையில் இருந்த வாள் பிடியில் படிந்தது.
“யாரங்கே?” என்று சேரல் கர்ஜிக்கும் போதே, புதர்களிலிருந்து முகத்தை மூடியபடி இருவர் பாய்ந்தனர். அவர்கள் கைகளில் விற்கள் இருந்தன.
“ஆதிரை, விலகு!” என்று கத்திய சேரல், அடுத்த நொடி மின்னல் வேகத்தில் தன் வாளை உருவினான். ஒரு அம்பைத் தன் மேலாடையைச் சுழற்றித் தட்டிவிட்டவன், புலி போலத் தாக்கியவர்கள் மீது பாய்ந்தான்.
வாள்கள் மோதும் ஓசை அந்தச் சோலையை அதிர வைத்தது. ஒருவன் ஆதிரையை நோக்கிக் கைவாளை வீச, சேரல் அவனை அந்தரத்தில் எட்டி உதைத்தான். அவனது வாள் அந்தத் தாக்குதல்தாரியின் நெஞ்சைப் பிளந்தது. மற்றவனையும் சில நொடிகளில் தன் வாள் வலிமையால் வீழ்த்திக் கொன்றான்.
சோலை மண் குருதியால் சிவந்தது. சேரல் தன் வாளில் இருந்த குருதியைத் துடைத்து உறையிலிட்டான்.
ஆதிரை அதிர்ச்சியில் உறைந்து நின்றாள். அவளது விழிகளில் கண்ணீர் திரண்டது. “சேரரே… இதுவா வீரம்? வன்முறைக்கும் வீரத்துக்கும் வேறுபாடு தெரியுமா உங்களுக்கு?”
சேரல் வியப்புடன் பார்த்தான். “ஆதிரை, உன்னைக் காக்கவே நான் வாள் ஏந்தினேன். நான் இல்லையெனில் உன் நிலை என்னவாகியிருக்கும்? எதிரிகளை வீழ்த்துவது ஒரு மறவனின் கடமை…”
“கடமை கடமை என்று கூறிக்கொண்டு பெரும் பாவமூட்டையை சேர்த்து வைத்துக் கொண்டிருக்கிறீர்…” என்று சீற்றத்துடன் கூறியவளின் கண்களில் கண்ணீர் குளம்.
சோலைவனத்தின் அமைதியைச் சிதைத்த அந்த மரண ஓலங்கள் அடங்கின. சேரலின் வாள் நுனியிலிருந்து சொட்டிய குருதி, பசுமையான புற்களின் மேல் கரும் புள்ளிகளாக விழுந்தன. இருவருக்குமிடையே கனத்த மௌனம் நிலவியபோது, தொலைவிலிருந்து வேகமான காலடிச் சத்தங்கள் கேட்டன.
மாறன் மூச்சிரைக்க ஓடிவந்தான். அவனது கையில் உருவிய வாள் மின்னியது. அங்கே தரையில் கிடந்த பிணங்களையும், வாளுடன் நின்றிருந்த சேரலையும் கண்டதும் அவனது விழிகள் அதிர்ச்சியில் விரிந்தன. அவன் ஆதிரையை ஒருமுறை நோட்டமிட்டு, அவள் காயமின்றி இருப்பதை உறுதி செய்து கொண்டு சேரலை நெருங்கினான்.
“அரசே! என்ன நடந்தது? சில நிழல் மனிதர்கள் உங்களைப் பின்தொடர்வதைக் கண்டு விரைந்து வந்தேன். எங்கே அந்தத் தாக்குதல்தாரிகள்?” என்று பதற்றத்துடன் வினவினான் மாறன்.
சேரன் தன் வாளை ஒரு துகிலால் துடைத்துக்கொண்டே, தரையில் கிடந்த பிணங்களைச் சுட்டிக்காட்டினான். “நிழல்கள் இப்போது நிரந்தர இருளில் உறங்குகின்றன மாறா. வஞ்சகம் நம்மைச் சூழ்ந்திருப்பதை இந்தச் சோலையின் காற்று உணர்த்தியது. இதோ, இவர்கள் இருவரும் எம் வாளுக்குப் பலியாகிவிட்டனர்…” என்றான் கரகரப்பான குரலில்.
மாறன் குனிந்து அந்தப் பிணங்களை உற்று நோக்கினான். அவனது முகம் சட்டெனத் தெளிவடைந்தது. ஒரு பெரும் பாரம் அவன் நெஞ்சிலிருந்து இறங்கியது போல ஒரு அமைதிப் பெருமூச்சு விட்டான்.
“நல்லது செய்தீர் அரசே. இவர்கள் சாதாரணக் கொள்ளையர்கள் அல்ல, பயிற்சியும் வஞ்சகமும் கொண்ட கொலையாளிகள்…” என்றான் மாறன்.
ஆனால் ஆதிரையோ அவனைத் திரும்பியும் பார்க்காமல் சோலையை விட்டு வெளியேறினாள். உடன் மங்கையும்!
அவளது காலடிச் சிலம்புகள் வழக்கத்தை விட வேகமாக ஒலித்தன. மணித்தேரினருகே நின்றிருந்த ஏவலர்கள் அவர்களது முகத்தில் இருந்த பதற்றத்தைக் கண்டு ஏதோ கேட்க முயல, அவள் யாவரையும் கடந்து தவிசின் உள்ளே பாய்ந்து பட்டுத் திரைகளை இறக்கிக் கொண்டாள்.
சேரல் அங்கேயே சிலையாக நின்றான். தன்னுடைய வீரம் அவளுக்குப் பாவமாகத் தெரிகிறதே என்று அவன் மனம் தவித்தது. அவளைப் புரிந்து கொள்ள முடியாத வேதனையில், அவன் கைவாள் உறையை இறுக்கிப் பிடித்தான்.


👍
இருவரும் சந்திக்கும் போது எல்லாம் அவன் வாளுக்கு வேலை வந்து விடுதே,
இதனால் தான் அவளுக்கு அரசர் மேல மனக்கசப்பு.
அழகு
Nice intresting ud sis ❤️