அத்தியாயம் 25
அந்த அரண்மனைத் தரைத்தளம் இருளில் மூழ்கியிருந்தது. கருங்கற்களால் ஆன அந்த நிலவறை இருண்ட கானகத்தைப் போல காட்சி அளித்தது. காற்றில் அகில் புகையின் அடர்த்தியான வாசனையும், சுவர்களில் எரியும் தீவட்டிகளின் நெய் நெடியும் கலந்து மூச்சடைக்கச் செய்தன. நிலவறையின் ஈரப்பதம் அந்த இடத்திற்கு ஒருவித மரண அமைதியைத் தந்திருந்தது.
அங்கே, ஒரு பிரம்மாண்டமான தேக்கு மர மேசையைச் சுற்றி அந்தச் சதிகாரர்கள் அமர்ந்திருந்தனர். நடுநாயகமாக, பெருஞ்சேரலின் சிற்றப்பன் உதியஞ்சேரல் அமர்ந்திருந்தார்.
அவரது கண்கள் அனல் கக்கும் உலைக்களமாகத் தெரிந்தன. அவருக்கு வலதுபுறம், நரைத்த மீசையை வருடிக்கொண்டு, நரியின் தந்திரம் கொண்ட தலைமை அமைச்சர் குலசேகரர் அமர்ந்திருந்தார்.
அவர்களைச் சுற்றி குறுநில மன்னர்களான கொல்லிவெற்பன், எயினன், நன்னன், மற்றும் வேளிர் குலத்தைச் சேர்ந்த அகுதை ஆகியோர் நிழல்களாகக் குழுமியிருந்தனர்.
உதியஞ்சேரல் தன் கரத்திலிருந்த வெண்கல மதுக்கிண்ணத்தை மேசையின் மீது ஓங்கி அடித்தார். அந்த உலோக ஓசை நிலவறையின் நான்கு சுவர்களிலும் முட்டி மோதி, ஒரு போர்க்கால எச்சரிக்கையைப் போல எதிரொலித்தது. கிண்ணத்திலிருந்து சிதறிய மது, மேசையில் விரிக்கப்பட்டிருந்த தோல் வரைபடத்தில் குருதியைப் போலப் பரவியது.
“குலசேகரரே! பொற்பனை மாநகரமே இந்திர விழாவின் இசையில் திளைத்துக் கொண்டிருக்கிறது. ஆனால் எம் செவிகளிலோ, பெருஞ்சேரல் வாழ்க என்ற அந்த வெற்றுக் கோஷங்கள் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றுவது போல ஒலிக்கின்றன! இன்னும் எத்தனை காலத்திற்கு அந்தப் பாலகனின் நிழலில் நான் ஒரு சிற்றப்பனாக மட்டும் ஒண்டிக்கொண்டிருப்பது? எம் நரம்புகளில் ஓடுவதும் அதே சேரப் பேரரசின் செங்குருதிதான் என்பதை இந்த உலகம் மறக்க வேண்டுமா?” என்று உதியஞ்சேரல் கர்ஜித்தார்.
அடர்ந்த அந்த நிலவறையின் கருங்கற் சுவர்களில் தீவட்டிகளின் சுவாலைகள் தாளலயமாக ஆடின. அந்த ஒளியும் நிழலும் சதிகாரர்களின் முகங்களில் ஒருவித விகாரமான தோற்றத்தை ஏற்படுத்தியிருந்தது. மேசையின் மீது சிதறிக் கிடந்த மதுத்துளிகள், செந்நிறக் குருதியைப் போல நெய்விளக்கின் வெளிச்சத்தில் மினுமினுத்தன. உதியஞ்சேரல் ஒரு பெரும் பெருமூச்சுடன் தன் இருக்கையில் சாய்ந்தார். அவரது விழிகளில் அரியணை மீதான தாகம் கனன்று கொண்டிருந்தது.
நன்னன், அந்த அறையில் நிலவிய கனத்த மௌனத்தை உடைத்தான். அவனது குரலில் நான்கு ஆண்டுகளுக்கு முந்தைய அந்தப் போர்க்களத்தின் அச்சம் இன்னும் எஞ்சியிருந்தது.
“அமைச்சர் குலசேகரர் சொல்வதில் எள்ளளவும் மிகையில்லை உதியஞ்சேரலாரே! நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த அந்த வாடாப்பொழில் போர்க்களக் காட்சியை என்னால் இப்போதும் மறக்க இயலவில்லை. அது எம் தூக்கத்தைக் கலைக்கும் ஒரு தீராக்கனவு” என்றான்.
குலசேகரர் தன் நரைத்த புருவங்களை உயர்த்தி, நன்னனின் முகத்தையே கூர்ந்து நோக்கினார்.
“நன்னரே! உங்கள் குரலில் ஏன் இந்த நடுக்கம்? போர் என்பது ஒரு மறவனுக்கு விளையாட்டு அல்லவா? அந்தப் போர்க்களம் உமது நெஞ்சில் இன்னும் ஆறாத வடுவாக இருக்கிறதா?” என்று நயவஞ்சகமாக வினவினார்.
நன்னன் தன் கைகளை இறுக்கப் பற்றிக்கொண்டான்.
“அது போர்க்களமல்ல அமைச்சரே, அது மரணத்தின் கோரத் தாண்டவம்! ஒருபுறம் பாண்டியர்கள், மறுபுறம் வேளிர்கள் என அனைவரும் ஓரணியில் திரண்டு நம் எல்லையைச் சூழ்ந்திருந்தனர். அவர்களின் ஈட்டி முனைகள் வானை மறைக்கும் காடு போலத் தெரிந்தன…” என்று விவரிக்கும்போதே அவனது கண்கள் நிலைகுத்தின.
உதியஞ்சேரல் இடைமறித்தார். “அப்போது பெருஞ்சேரலுக்கு வயது பதினெட்டு தானே? மீசை கூட அரும்பாத அந்தப் பாலகன், அத்தனைப் பெரிய படையைக் கண்டு அஞ்சித் நடுங்கியிருக்க வேண்டுமே?” என்று ஏளனமாகச் சிரித்தார்.
“அஞ்சவில்லை உதியஞ்சேரலாரே!” என்று நன்னன் ஆவேசமாகக் கூறினான். “பாண்டியன் நெடுஞ்செழியனின் பெரும் படை மதயானைகளைப் போல நிலத்தை அதிரச் செய்து முன்னேறிய போது, நம் மூத்த தளபதிகளே அச்சத்தில் உறைந்து நின்றனர். ஆனால் பெருஞ்சேரல் மட்டும் தன் குதிரையின் கடிவாளத்தைச் சுண்டி இழுத்துக் கொண்டு, ஒரு காட்டாற்று வெள்ளமெனத் தனியாக அந்தப் படைக்குள் பாய்ந்தான்.”
எயினனும் அந்த நினைவுகளில் மூழ்கியிருந்தான். “உண்மைதான்! படை வீரர்களின் கைகளில் இருந்த வேல்கள் நடுங்கிக் கீழே விழுந்தன. ஆனால் பெருஞ்சேரலின் வாள் காற்றில் மின்னலைப் போலச் சுழன்றது…” என்றான் வியப்புடன்.
குலசேகரர் இப்போது நிமிர்ந்து அமர்ந்தார். “விவரியுங்கள் நன்னரே! அவன் வீரம் நம் சதிக்குத் தடையாக இருக்குமெனில், அந்தத் தடையின் வலிமையை நாம் முழுமையாக உணர வேண்டும். பகைவனைப் பற்றித் தெரியாமல் போர் தொடுப்பது மூடத்தனம்!” என்றார்.
நன்னன் தொடர்ந்தான், “அவனது வாள் காற்றில் சுழன்றபோது, அது ஆயுதம் போலத் தெரியவில்லை; அது காலனின் நீண்டு துடிக்கும் நாக்கு போலச் சுழன்றது. பாண்டியனின் யானைகள் துதிக்கை அறுந்து மண்ணில் வீழ்ந்து அலறிய அந்த ஓசை இன்னும் எம் காதுகளில் ரீங்காரமிடுகிறது. ஒரு யானையின் மேல் ஏறி அதன் பாகனை வீழ்த்தி, அந்த யானையையே தனது கவசமாக மாற்றிக்கொண்டான் அவன்.”
எயினன் வியப்புடன் சேர்த்துக் கொண்டான், “பாண்டியத் தளபதி அகுதை, தன் வீரத்திற்காகப் புகழ்பெற்றவன். ஆனால் பெருஞ்சேரல் அவனது வாளைச் சிதறடித்து, அவனது மார்பிலேயே தன் வாள் முனையால் காயப்படுத்திச் சேரலின் முத்திரையைப் பதித்தான். அந்தப் பராக்கிரமத்தைக் கண்ட எதிரிப் படைகள், பேயைக் கண்டதைப் போலப் புறமுதுகிட்டு ஓடின. அன்று அவன் தனியாக நின்று ஈட்டிய அந்த வெற்றி இன்றும் நம் வீரர்களால் காவியமாகப் பேசப்படுகிறது.”
உதியஞ்சேரல் தன் மீசையை முறுக்கினார். “தனி ஒரு மனிதனால் ஒரு பெரும் படையைச் சிதறடிக்க முடியுமா? நீங்கள் அவனது புகழை மிகைப்படுத்துகிறீர்கள் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது” என்றார் அவநம்பிக்கையுடன்.
“இல்லை உதியஞ்சேரலாரே!” என்று எயினன் உறுதியாகச் சொன்னான். “அதற்கடுத்த வாரம் நடந்த குறுநிலப் போரில், வேளிர் குலத் தலைவர்கள் எழுவர் அவனை வளைத்துக் கொண்டனர். இன்று பெருஞ்சேரல் முடிந்து விடுவான் என்று நாங்கள் எண்ணினோம்.”
கொல்லிவெற்பன் ஆர்வத்துடன் கேட்டான், “எழுவரா? அவர்கள் யாவரும் போர்க்களத்தில் தேர்ந்த வீரர்கள் அல்லவா? அவர்களை அவன் எப்படித் தனியாளாக எதிர்கொண்டான்?”
“ஏழு வேல்களும் அவனை நோக்கி ஒரே நேரத்தில் பாய்ந்தன. அவனது கவசங்கள் பிளந்து, மேனியெங்கும் செங்குருதி ஆறாக ஓடியது. எவனும் அன்றே மாண்டிருப்பான். ஆனால் பெருஞ்சேரல், காயம்பட்ட வேங்கையாக மாறி கர்ஜித்தான். தன் வலிமை முழுவதையும் திரட்டி அந்த ஏழு பேரையும் சிதறடித்தான். அவர்கள் உயிருக்கு அஞ்சி ஓடிய ஓட்டம் இன்றும் எம் நினைவில் பசுமையாக இருக்கிறது. அப்படிப்பட்டவனை வாள் முனையில் வெல்வது என்பது பகற்கனவு!” என்று எயினன் முடித்தான்.
குலசேகரர் இப்போது ஒரு வஞ்சகப் புன்னகையை உதிர்த்தார். “அப்படிப்பட்டவனை வாள் முனையில் வெல்வது கடினம் என்பதை இப்போது உணர்கிறீர்களா உதியஞ்சேரலாரே? அதனால்தான் சொல்கிறேன், போர் புரியத் தகுந்த ஆயுதம் வாள் அல்ல, தந்திரம்!” என்றார்.
உதியஞ்சேரல் எரிச்சலுடன், “அப்படியென்றால், அவனைக் கொல்லவே முடியாதா? எம் கைகளில் இந்தச் சேர தேசத்தின் செங்கோல் ஒருபோதும் ஏறாதா?” என்று வினவினார்.
“எத்தனை முறை அவன் மேல் கொலை முயற்சி தாக்குதல்களை ஏவி விட்டாயிற்று… ஆனாலும் முடிந்ததா?” எயினன் கேட்டான்.
“முடியும்… வாளால் வெல்ல முடியாதவனை வஞ்சகத்தால் வீழ்த்தலாம். ஆனால், அவனது நிழலாக இருக்கும் அந்த மாறன் இருக்கும் வரை நாம் அவனது அருகிலேயே நெருங்க முடியாது. மாறன் என்பவன் பெருஞ்சேரலின் காவல் தெய்வத்தைப் போன்றவன்…” என்றார் குலசேகரர்.
கொல்லிவெற்பன் ஆமோதித்தான், “மாறன்! அவன் பெருஞ்சேரலின் வாள் மட்டுமல்ல, அவனது விழி! மாறனை வீழ்த்தாமல் பெருஞ்சேரலை தீண்ட முடியாது என்பதுதான் நிதர்சனம்.”
உதியஞ்சேரல் சிந்தித்தார். “மாறனா? அவன் சேரனுக்குத் தன் உயிரையே தருவானே? ஒரு உயிரைக் கொடுத்து உயிரைக் காப்பவனை எப்படி நம் பக்கம் திருப்புவது?” என்றார்.
குலசேகரர் குரலைத் தாழ்த்திச் சொன்னார், “உயிரைத் தருவது எளிது கொல்லிவெற்பரே! ஆனால் ஒருவன் உயிருக்கு உயிராக நேசிக்கும் மற்றோர் உயிரைக் காக்க வேண்டுமானால், அவன் வஞ்சகம் செய்யவும் துணிவான். அதுதான் மனித இயல்பு.”
“மாறனுக்கு அப்படி ஒரு பலவீனம் இருக்கிறதா? வீரர்களுக்குப் பலவீனம் இருக்கக்கூடாது என்றுதான் யான் கேள்விப்பட்டிருக்கிறேன்…” என்றார் உதியஞ்சேரல்.
“வீரர்களுக்கும் இதயம் உண்டு உதியஞ்சேரலாரே! மாறனின் பலவீனத்தை நான் அறிந்துவிட்டேன். அது ஆதிரையின் தோழி மங்கை! அவளது ஒரு புன்னகைக்காக அவன் எதையும் செய்வான்…” என்று குலசேகரர் சொன்னபோது, நிலவறையின் தீவட்டிகள் ஒரு கணம் அதிர்ந்து எரிந்தன.
எயினன் ஆச்சரியப்பட்டான், “மங்கையா? அந்தச் சாதாரண பெண்ணுக்காக மாறன் தன் அரசனுக்குத் வஞ்சகம் செய்வானா? இது எனக்குச் சாத்தியமற்றதாகத் தோன்றுகிறதே?”
“காதல் என்பது மதியைக் கெடுக்கும் நச்சு மருந்து. மங்கையின் உயிருக்கு ஆபத்து என்றால், மாறன் எமனிடமும் கையேந்துவான். அதுதான் நமது துருப்புச் சீட்டு…” என்றார் குலசேகரர் உறுதியுடன்.
உதியஞ்சேரல் இப்போது எழுந்து நின்றார். “நல்லது! அப்படியென்றால் மாறனைத் தனிமையில் ஒரு ரகசிய இடத்திற்கு வரவழையுங்கள். அவனிடம் இந்தத் தேசத்தின் பாதியைத் தருவதாகச் சொல்லுங்கள். அதிகாரத்தால் அவனைக் கவருவோம்.”
குலசேகரர் மறுத்தார். “அதிகாரத்தை விடப் பயமே சிறந்த ஆயுதம். அவன் மறுத்தால் மங்கையைச் சிறைபிடிப்போம் என்று அச்சுறுத்துவோம். பயம் அவனைப் பணிய வைக்கும்.”
நன்னன் பதற்றத்துடன், “இது ஆபத்தான விளையாட்டு. மாறன் சேரலிடம் இந்தச் சதியைப் பற்றிச் சொல்லிவிட்டால் நம் அனைவர் தலையும் நாளைக் கோட்டை வாசலில் தொங்கும்!” என்றான்.
உதியஞ்சேரல் குரூரமாகச் சிரித்தார். “சொல்ல மாட்டான். சொன்னால், அவன் மங்கையை இழக்க நேரிடும் என்பதை நாம் உறுதி செய்வோம்.”
குலசேகரர் தன் கையில் இருந்த வரைபடத்தைச் சுருட்டினார். “வரும் இந்திர விழா முடியும் நாளில், பெருஞ்சேரலின் அத்தியாயம் முடிய வேண்டும். மாறன் தான் அவனது அந்தப்புரக் கதவைத் திறந்துவிடப் போகிறான். பெருஞ்சேரல் உறக்கத்திலேயே மீளாவுறக்கம் கொள்ள போகிறான்.”
உதியஞ்சேரல் மதுக்கிண்ணத்தை மீண்டும் ஓங்கி அடித்தார். “திட்டமிட்டபடி எல்லாம் நடக்கும். பெருஞ்சேரலின் குருதி எம் செங்கோலுக்காக பலியாகட்டும்!” என்று அவர் கர்ஜித்தபோது, அந்த நிலவறையின் இருளில் ஒரு பெரும் பேரழிவிற்கான விதை ஊன்றப்பட்டது.
***
பொற்பனை மாநகரமே ஒரு இந்திரலோகமாக மாறியிருந்தது. இந்திர விழா தொடங்கி ஐந்து நாட்கள் கடந்துவிட்ட நிலையில், நகரின் ஒவ்வொரு வீதியும் வண்ணத் தோரணங்களாலும், பூமாலைகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மொத்தம் இருபத்தெட்டு நாட்கள் நடைபெறும் இந்த விழாவானது, மருத நிலத்து மக்கள் தங்கள் பசிப்பிணி நீங்கி, வளம் பெருக வேண்டி விண்ணவர் தலைவனான இந்திரனைப் போற்றும் பெரும் கொண்டாட்டமாகும்.
விழாவின் முதல் நாள், விடியற்காலையிலேயே பொற்பனை நகரின் உறக்கம் கலைந்தது. வச்சிரக் கோட்டத்தின் முன்னால் திரண்டிருந்த மக்கள் கூட்டத்தின் ஆரவாரம் கடலொலியை விஞ்சியது. யானைப் பாகர்கள் ஐராவதக் கொடியைத் தாங்கிய அந்தப் பிரம்மாண்டமான யானையைத் தயார் செய்து கொண்டிருந்தனர்.
ஆதிரை தனது மாளிகையின் உயர்ந்த மாடத்தில் நின்றபடி, வீதியில் திரண்டிருந்த அந்தப் பெருங்கடலைப் பார்த்துக் கொண்டிருந்தாள். முரசு அறைவோன் தனது யானையின் மீது அமர்ந்து, “பசிப்பிணி நீங்குக! வளம் பெருகுக!” என்று முழக்கமிட, வச்சிரக் கோட்டத்தின் உச்சியில் இந்திரனின் ஐராவதக் கொடி கம்பீரமாக ஏறியது.
விழாவின் ஐந்தாம் நாள் அந்திப் பொழுது. பொற்பனையின் ஐவகை மன்றங்களும் களைகட்டியிருந்தன. பூத சதுக்கம், வெள்ளிடை மன்றம் என ஒவ்வொன்றும் பலிப் புகையாலும், மந்திர முழக்கங்களாலும் நிறைந்திருந்தன. குறிப்பாகப் பூத சதுக்கத்தில், நகரின் காவல் தெய்வங்களுக்குப் படையலிட்டுச் சாந்தி செய்யும் சடங்கு உக்கிரமாகத் தொடங்கியது.
“பழையோள் காக்க! பூதங்கள் அருள்க!” எனப் பூசாரிகள் ஆவேசமாக முழங்கினர். பெரிய மண்பாண்டங்களில் எரிக்கப்பட்ட அகில் புகையும், பலிபீடத்திலிருந்து எழுந்த நெய் புகையும் சேர்ந்து அந்த இடத்தையே ஒரு விண்புல காட்டை போல மாற்றியிருந்தது. கண்பார்வைக்கு எட்டிய தூரம் வரை வெறும் வெண் புகை மூட்டம் மட்டுமே நிலவியது.
ஆதிரை மங்கையர்க்கரசியின் கையைப் பிடித்தபடி அந்தப் புகை மண்டலத்திற்குள் நுழைந்தாள். மக்கள் கூட்டம் முண்டியடிக்க, புகையின் அடர்த்தி அவளைத் தனிமைப்படுத்தியது.
சுற்றியிருந்த மக்கள் இந்திரனே போற்றி என முழக்கமிடட்டார்கள்.
புகார் நகரம் போலவே இங்கும் காவிரிப் பூம்பட்டினத்தின் அலைகளின் ஓசைக்கு நிகராக மக்களின் ஆரவாரம் எழுந்தது. வீதிதோறும் நடப்பட்டிருந்த தோரணக் கம்பங்களில் வெற்றிக் கொடிகள் அசைந்தாடின. சமய வாதிகள் தத்தம் கொள்கைகளை விளக்க, ஒருபுறம் பட்டிமன்றங்கள் நடந்து கொண்டிருந்தன. மறுபுறம், மறவர்கள் மற்போரிட்டுத் தங்கள் உடல் வலிமையை ஊர்மக்களுக்குக் காட்டினர்.
இந்திர விழாவின் ஆறாம் நாள் விடியல், பொற்பனை மாநகரமே வெள்ளாற்றின் கரையில் திரண்டிருந்தது. விழாவின் மிக முக்கியமானச் சடங்கான நன்னீராட்டு விழா அன்று. அந்தப் புனித நதி, வானத்து இந்திரன் மண்ணுலகிற்கு வழங்கிய கொடை எனப் போற்றப்பட்டது.
கரையில் இருந்த முரசு அதிர, மங்கல இசை விண்ணைத் தொட்டது. அப்போது, அரச ஊர்வலம் ஆற்றுப் படித்துறையை வந்தடைந்தது. யானை மீது அமர்ந்திருந்த பெருஞ்சேரல், தனது கம்பீரமானத் தோற்றத்துடன் அரியாசனத்திலிருந்து இறங்கி மெல்லப் படித்துறையை நோக்கி நடந்தான். அவனது மார்பில் அணிந்திருந்த சந்தனக் கலவை அதிகாலைப் பனியில் குளிர்ந்து கிடக்க, கைகளில் இருந்த அரச முத்திரைகள் கதிரவனின் இளவெயிலில் மின்னின.
படித்துறையின் விளிம்பில் நின்ற பெருஞ்சேரல், கைகளை உயர்த்தித் திசைத் தெய்வங்களை வணங்கினான். அந்தப் பெரும் மக்கள் கூட்டம் மூச்சடக்கிப் பார்த்துக் கொண்டிருக்க, அவன் வெள்ளாற்றின் குளிர்ந்த நீரில் மெல்ல இறங்கினான். மார்பளவு நீரில் நின்று, சூரியனை நோக்கித் தன் இரு கரங்களால் நீரை அள்ளிப் படைத்தான்.
“வளர்க வெள்ளாறு!” பூசாரிகள் முழங்க, பெருஞ்சேரல் நன்னீரில் மூழ்கித் தன் நன்னீராட்டைத் தொடங்கி வைத்தான். மன்னன் நீராடி முடித்ததும், கரையில் நின்றிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் இந்திரனே போற்றி! என ஆர்ப்பரித்தபடி ஆற்றில் குதித்தனர்.
ஆதிரை, சற்றுத் தள்ளியிருந்த பெண்களுக்கானப் படித்துறையில் நின்றபடி பார்த்துக் கொண்டிருந்தாள். ஆற்று நீரில் நனைந்த செந்நிற மேலாடையுடன், ஒரு போர்க்கடவுளைப் போலப் நீரிலிருந்து வெளிப்பட்டு வரும் பெருஞ்சேரலையே அவளது கண்கள் மொய்த்தன. அவன் தலைமுடியிலிருந்து வழிந்த நீர் துளிகள் அவனது அகன்ற மார்பில் உருண்டோட, அந்தப் பனிப்பொழுதிலும் அவன் அனலெனத் தகிப்பதாக அவளுக்குத் தோன்றியது.
கரையேறிய பெருஞ்சேரல், ஈரம் சொட்டச் சொட்ட ஆதிரை நின்றிருந்த திசையை ஏறிட்டான். அவனது விழிகளில் அந்த நதியின் குளிர்ச்சி இல்லை; மாறாக, அணைக்க முடியாத காதல் தீயின் உக்கிரம் மின்னியது.
அவள் ஒப்புக்கொடுத்து இருந்தால், இந்நேரம் தனது அரசியாக இருவருமாக சேர்ந்து நீராட வேண்டியது. இவளது பிடிவாதத்தால், தனியாக நன்னீராட வேண்டியிருக்கிறதே என்ற கோபம் வேறு அவனை வாட்டியது.
அதை பார்த்துக் கொண்டிருந்த ஆதிரையும் அதை உணர்ந்தாள்! மெல்ல தலைகுனிந்தாள்! கண்களோரம் மெல்லிய கண்ணீர் படலம்! அவளும் தானே அவனை விரும்புகிறாள்! ஆனால் அவனை நெருங்கும் போதெல்லாம் நடக்கும் குருதி பலிகளை ஏற்றுக் கொள்ளமுடியவில்லையே!
அவளுக்கு காலம் காலமாக போதிக்கப்பட்ட இன்னா செய்யாமை அவளைப் பார்த்து கேலி செய்வது போல தோன்றியது. என்னதான் இது அரச அறம் என்று வழக்குரைத்தாலும், அந்த பலிகளை பார்க்கையில் உள்ளம் நடுங்குவதை அவளால் கட்டுப்படுத்த முடியவில்லையே!
நான் ஏன் உன்னை பார்த்தேன் என்று அவனைப் பார்த்து கண்களால் கேட்டாள்.
ஆனால் அவன் தன் வற்பனை சேரல் தான் என்று எண்ணும்போது மனதுக்குள் அத்தனை உவகை பொங்கியது. உறுதி, பிடிவாதம், திண்மை என அவளை மயங்க வைக்க அவனிடம் ஏராளம் இருக்க, அவளுக்குள்ளிருந்த உறுதி கொஞ்சம் கொஞ்சமாக உடைவது போலிருந்தது.
மங்கல இசை எங்கும் நிறைந்திருந்தது. மக்கள் கவலைகளை மறந்து வீதிகளில் குழுமியிருந்தனர்.
அந்தப் பொழுதில், நகரின் சதுக்கங்களில் குரவை ஆடும் மங்கையரின் சிலம்பொலி விண்ணைத் தொட்டது. முதியவர்கள் அமர்ந்து தாயம் விளையாடிக் கொண்டிருந்தனர்.
இந்திர விழாவின் ஏழாம் நாள் அந்திப் பொழுது. பொற்பனை மாநகரின் மையத்தில் அமைக்கப்பட்டிருந்த பிரம்மாண்டமான ஆடல் அரங்கில், கலை மரபின் உச்சமான பதினோரு வகை ஆடல்கள் அரங்கேறிக் கொண்டிருந்தன.
அரங்கின் மையத்தில் விறலியர் கூட்டம் குழுமியிருந்தது. யாழ், குழல், முழவு ஆகிய இசைக்கருவிகளின் நாதம் காற்றைக் கிழித்துச் செல்ல, விறலியர் தங்கள் மெல்லிய உடலை வில்லாக வளைத்து ஆடத் தொடங்கினர்.
அவர்கள் முதலில் ஆடியது கொடுகொட்டி. திரிபுரத்தை எரித்த சிவபெருமான், வெற்றி வெறியில் கைகொட்டி ஆடிய அந்த உக்கிரமான ஆடல், விறலியரின் காலடிகளில் உயிர் பெற்றது. அவர்களின் ஒவ்வொரு அசைவிலும் ஒரு போர் முழக்கம் கேட்டது. அதனைத் தொடர்ந்து, வெண்ணீறு பூசித் திருமால் ஆடிய பாண்டரங்கம் ஆடல் நிகழ்ந்தது. விறலியரின் கைகள் முத்திரைகளைப் பிடிக்க, அவர்களின் கண்கள் நவரசங்களையும் ஒரு நொடியில் காட்டி மறைத்தன. பாவை, அல்லியம், மற்போர் எனப் பதினோரு வகை ஆடல்களும் ஒன்றன்பின் ஒன்றாக அரங்கேற, அந்த இடமே ஒரு தேவலோகமாக மாறியிருந்தது.
உயர்ந்த பீடத்தில் அமர்ந்து, ஒரு சிற்பத்தைப் போல அசையாமல் அந்த ஆடல்களைப் ரசித்துக் கொண்டிருந்தான் பெருஞ்சேரல். அவனது விழிகள் கலை நயத்தை ஊடுருவிப் பார்த்தாலும், அவனது கைகள் அவ்வப்போது தனது வாள் பிடியில் இறுக்கியது.
சற்றுத் தள்ளி, மக்கள் கூட்டத்திற்கு நடுவே தனது மணித் தேரில் அமர்ந்திருந்தாள் ஆதிரை. தேரின் திரைகள் (எழினி) பாதியளவு விலக்கப்பட்டிருக்க, உள்ளே ஒரு ஓவியம் போல அவள் அமர்ந்திருந்தாள். விறலியரின் கால் சிலம்புகள் எழுப்பிய ஓசை, ஆதிரையின் தேரில் கட்டப்பட்டிருந்த வெண்கல மணிகளின் கிண்கிணி நாதத்தோடு போட்டி போட்டன.
விறலியர் ஆடிய பாவை ஆட்டத்தின் மென்மை ஆதிரையை மிகவும் கவர்ந்தது. அவர்கள் ஒரு பொம்மையைப் போலத் தங்கள் உடலை நிலைகுலையாமல் ஆட்டிய விதம், அவளை வியப்பில் ஆழ்த்தியது. “மங்கை, பாரேன்! ஒரு பெண்ணின் உடல் இத்தனை வளைவுகளுக்கு உட்படுமா?” என்று வியப்புடன் கேட்டாள். ஆதிரையின் கண்கள் அந்த ஆடலில் மூழ்கியிருந்தாலும், அவளது மனம் அவ்வப்போது அரியாசனத்தில் அமர்ந்திருந்த பெருஞ்சேரலையே நோக்கியது.
ஆடல் அரங்கின் ஒளி அவளது வெண்கலக் கண்ணாடியில் பட்டுத் தெறிக்க, அந்த ஒளிப் பிரதிபலிப்பு ஒரு வினாடி பெருஞ்சேரலின் முகத்தில் விழுந்து மறைந்தது. அவன் சட்டெனத் திரும்பி ஆதிரையின் தேரைப் பார்த்தான். அந்த ஒரு நொடிப் பார்வையில், விறலியரின் ஆடலை விடவும் வலிமையான ஒரு காதல் நாடகம் அவர்களுக்குள் அரங்கேறியது.
அவனது இதழ்கடையில் புன்சிரிப்பு அரும்பியது.


Super
அழகு
Nice
Nice intresting ud sis ❤️
Super